13
அடுத்த நாள் விழித்தபோதே தலை கனக்க ஆரம்பித்து இருந்தது. இடைவிடாத முந்தைய தினத்தின் வாக்குவாதங்கள், மன அழுத்தங்கள் என்று அனைத்துமாக அவளது தலைவலியை ஆரம்பித்து வைத்து இருந்தது. அவசரமாக அவளது கைப்பையைத் தேடினாள். நல்ல வேலையாக அதை அவன் ஒளித்து வைக்கவில்லை.
வயிற்றுக்கு எதையாவது ஈந்து விட்டு மாத்திரையைப் போட்டுக் கொள்ளலாம் என்று கைகளை ஊன்றி எழுந்து கொள்ள முயன்றாள். வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது.
வாயைக் கையால் மூடிக் கொண்டே ரெஸ்ட் ரூம் சென்றவளுக்கு இன்னமும் அதிகமாகப் பிரட்டியது. சற்று நேரத்துக்கெல்லாம் வயிற்றில் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று எண்ணுமளவு அத்தனையும் காலியாகத் துவங்க, அவளது சப்தத்தில் மேலே அவசரமாக வந்தான் ஷ்யாம்.
அப்போதுதான் அவனும் விழித்திருந்தான்.
காலை ஜாகிங்க்காக ரெடியாகிக் கொண்டிருந்தவன், அவளது ஓங்காரிக்கும் சப்தத்தில் அத்தனையையும் விட்டு விட்டு ஓடினான்.
குளியலறையில் வயிற்றையும் தலையையும் பிடித்துக் கொண்டு அவள் இருந்த நிலையைப் பார்த்து அவனுக்குப் பதட்டமானது.
இது போன்ற சூழ்நிலைகள் அவனுக்குப் புதிது.
அவளை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லையென்றாலும், அவள் சிரமப்படுவதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை.
சட்டெனத் தலையை ஆதரவாகப் பிடிக்க, அந்த ஆதரவு அவளுக்கும் தேவையாக இருந்தது. ஆனாலும் அவன் அருகில் நின்று கொண்டு அவளைத் தொட்டுக் கொண்டிருப்பது அவளுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. ஆனால் அப்போது அவளுக்கு வேறு வழியில்லை. உடம்பில் உள்ள தெம்பெல்லாம் வற்றுமளவு வாமிட் செய்திருந்தாள்.
ஓங்கரித்து முடிக்கும் வரை இதமாக அழுத்தியபடி இருந்தவன், சுடுநீர் குழாயைத் திறந்து அளவான சூட்டில் அவளுக்கு நீரைக் கொடுத்தான். முகத்தையும் கழுவி கொள்ள!
“தேங்க்ஸ்…” மெலிதான குரலில் அவள் கூறிய நன்றியை அவன் கவனித்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. மௌனமாகவே அவளைப் படுக்கைவரை அழைத்துக் கொண்டு வந்தவன், அவள் அமரும் வரை பொறுமையாகவே இருந்து,
“என்னாச்சு?” ஒற்றை வார்த்தையில் அவன் கேட்க,
“தலைவலி…” என்றவள், “மைக்ரேன்…” என்று கூற,
“அது இவ்வளவு சிரமமா இருக்குமா?” அவளைப் பார்க்காமல், அவளது கைப்பையில் உள்ள மாத்திரைகளை ஆராய்ந்தான்.
“ம்ம்ம்ம்… இன்னும் மோசமா கூட இருக்கும்…” என்றவள், “அந்த மாத்திரைல ட்ரெமடால் இருக்கும்… அதை எடுங்க ப்ளீஸ்…” என்று கேட்க,
“இன்னும் எதுவும் சாப்பிடலையே…”
“பரவால்ல… ஆனா மாத்திரை சாப்பிடலைன்னா இன்னும் சிரமமா இருக்கும்…” என்று அவள் கூற, அவளைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.
“நான் கீழ போய் அந்தப் பொண்ணு கிட்ட காபி கொடுத்து அனுப்பறேன்… அதைக் குடிச்சுட்டு அப்புறமா மாத்திரையைப் போடு…” என்று கூறிவிட்டு அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கீழே விரைந்தான்.
அவளுக்கு ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றியது. அவனது பேச்சும் சிரிப்பும் காணாமல் போயிருந்ததைச் சற்றுத் தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டாள்.
ஆனால் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள அவளுக்குத் தோன்றவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் தவறானவன்… அதை நன்றாக உருவேற்றிக் கொண்டவள், வேறெதையும் நினைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டாள். அவன் இப்போது உதவினான் என்றாலும், அவனது இயல்புகளை எந்தக் காலத்திலும் மாற்றிக் கொள்ள முடியாதே!
அந்தப் பெண் கொண்டு வந்த காபி அதன் வேலையைப் பார்த்தது. காபி மணத்தை முகரும் போதே பாதித் தலைவலி குறைந்தது போல இருந்தது.
“ம்ம்ம்ம்…” கப்பை நாசிக்கு அருகில் வைத்தபடி ஆழ்ந்து முகர்ந்தவளை வித்தியாசமாகப் பார்த்தாள் அந்தப் பெண்.
“ஒன்டர்புல் காபி…” என்றவள், மெல்லக் கண் திறந்து, “இது எந்த ஊர்…” என்று அவளிடம் கேட்க, அதற்கு அவள் சொன்ன பதில் அவளுக்காவது புரிந்திருக்குமா என்று இவளுக்குப் புரியவில்லை.
ஆனால் சத்தியமாக அது கன்னடம் இல்லை.
கன்னடமென்றால் அவளுக்கு ஓரிரு வார்த்தைகளாவது புரியும். அதைக் கொண்டு அவளால் தாக்குப் பிடித்துவிட முடியும். ஆனால் இது அப்படியல்ல… அதாவது துளு இல்லையென்றால் வேறேதாவது இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அன்று அவளிடம் கன்னடத்தில் தான் பதில் கூறினாள்?
ஒரு வேளை இவளது அடையாளத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று அந்த மரியாதைக்குரிய ஷ்யாம் அவர்கள் உத்தரவிட்டு இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம்! யார் அறிய முடியும்? அவனைத் தவிர?
“சரி உன் பேர் என்ன?” என்று அவளது முகத்தை எதிர்பார்ப்போடு பார்த்தாள் மகா. அவளது முகத்தில் செம்மை படர,
“நாகம்மா…” என்று கூற, ‘இது மட்டும் புரிகிறதாமா?’ என்று நினைத்துக் கொண்டவள், மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள்.
காபியை பருகிவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொண்டவளுக்குச் சற்று தலைவலி குறைந்தார் போலத் தோன்றியது.
“நான் உன்னை நாக்ஸ்ன்னு தான் கூப்பிடுவேன்…” என்று மஹா சிரிக்க, அவள் வெட்கமாகப் புன்னகைத்தாள். பதிலுக்கு எதோ அவள் கூற, மகாவுக்கு அது என்னவென்று புரியவில்லை.
இருவருக்குமே தாங்கள் பேசுவது என்னவெனப் புரியாமலேயே தங்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டிருந்ததை யாரேனும் பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றும்.
“சரி நான் குளிக்கனுமே…” என்று சற்றுப் பாவமாக அவளைப் பார்த்தபடி மஹா கேட்க, நாகம்மா அவளைப் புரியாத பார்வை பார்த்தாள்.
“குளிக்கறது… நாக்ஸ்… குளிக்கணும்…” அவளுக்குத் தெரிந்த அளவு செய்கையில் அவள் உணர்த்த முயல, நாகுவுக்குப் புரியவே இல்லை. ஒரு வழிப் பாதையாக டம்ப்ஷரட்ஸ் ப்ரோக்ராமை நடத்துவது போலத் தோன்றியது மகாவுக்கு.
ஏதோ புரிந்து விட்டது போல நாகம்மாவுக்கு! பாத்ரூமை கைகாட்டி விட்டு அவள் கீழே போக முயன்றாள்.
“நாகு… பாத்ரூம் தெரியும்… போட்டுக்க ட்ரெஸ் வேண்டாமா?” என்று சைகையும் மொழியும் பாதிப் பாதியாக அவளுக்கு விளக்க முற்பட, நாகம்மா கீழே ஓடினாள்.
இவள் என்ன செய்யப் போகிறாள் என்று மஹா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் தன்னுடைய கைகளில் துணியை ஏந்தியவாறு வர, மஹாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஹேய்… இதென்ன ட்ரெஸ்?” என்று அதே வியப்போடு இவள் கேட்க, அவள் சைகையில் அவனது என்று கூறினாள். அப்போதுதான் கவனித்தாள், அது பைஜாமா குர்தா வகை உடையென்று!
ஆனாலும் அவன் அணிந்ததை, தான் அணிவதா?
அட ச்சை என்றிருந்தது. ஆனால் கஸ்டடி எடுப்பவன், துணிமணிகளை எடுத்துக் கொண்டு வா என்று சொல்வானா? அல்லது துணிமணிகளை வாங்கி வைத்திருப்பானா? இருப்பதை வைத்து அட்ஜஸ் செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள். அதனால் அவனது துணி தேவையில்லை. தன்னுடையதையே அலசிக் காயப்போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாலும், அதுவரை?
ஒரு வழியாக அவனுடையதைத் தவிர்த்து விட்டு அவளுடையதையே அணிந்து கொண்டு கீழே வரும்போது டிபன் ரெடியாக இருந்தது. அவளைச் சாப்பிட அழைத்த நாகம்மா, அவனை அழைக்கக் காணோம்!
அவனது இருப்பு அங்கே இருப்பது போலவே தெரியவில்லை.
சரி எங்கேயோ தொலையட்டும் என்று நினைத்துக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் சிறு குற்ற உணர்ச்சி மட்டும் தோன்றியது.
தான் நினைத்ததை எல்லாம் பேசிவிடுவது தவறுதான் என்று நினைத்துக் கொண்டாள். அவன் தன்னிடம் எந்த வகையிலும் தவறாக நடந்திருக்காத பட்சத்தில், அவனது வெளிப்படையாகப் பேசிய குணத்தை மட்டும் கணக்கில் கொண்டு, முந்தைய தினம் பேசிய வார்த்தைகள் மிகவும் தவறானவை என்று அவளது மனசாட்சி அவளைச் சாடியது.
அவன் தன்னிடம் ஏதாவது தவறாக நடந்திருக்கும் பட்சத்தில் அந்த வார்த்தைகள் சரி… ஆனால் எதுவும் அப்படி நடக்காதபோது ஏன் இப்படித் தானாகப் பேசி, அவனது ஈகோவை தட்டி எழுப்ப வேண்டும் என்றும் கேட்டது.
அவனைப் பார்க்கும்போது ஒரு குட்டி சாரியாவது கேட்க வேண்டும் என்று அவளது மனம் யோசித்துக் கொண்டிருக்க, இன்னொரு மனமோ, அப்படிக் கேட்டுவிட்டால் அவனிடம் சரண்டரானது போல ஆகிவிடாதா என்றும் கேள்வி கேட்க, இரண்டு மனங்களுக்கு நடுவில் இவள் சிக்கித் தவித்தாள்.
‘அப்படீன்னா சாரி கேக்கலாமா? வேண்டாமா?’ என்று இரண்டு விரல்களைக் கண்களுக்கு முன் வைத்துக் கொண்டு அவள் யோசித்தாள்… யோசித்தாள்… யோசித்துக் கொண்டே இருந்தாள்.
சரி அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்து விடுவது என்று முடிவெடுத்துக் கொண்ட பின், நாக்ஸ் செய்து வைத்திருந்த டிபனை ஒரு பிடி பிடிக்கத் துவங்கினாள்.
வாழையிலையில் அவித்து வைத்திருந்த அந்தப் பண்டத்தைக் காட்டி, “நாக்ஸ் இதென்ன ரெசிப்பீ? இவ்வளவு சூப்பரா இருக்கு?” என்று சப்புக் கொட்டிக் கொண்டே சாப்பிட,
“சௌதே காட்டிம்மா…” என்று மகாவின் சைகைகளை ஓரளவு புரிந்து கொண்டு கூற,
“ம்ம்ம்… என்ன காட்டி?”
“சௌதே காட்டி…” என்று புன்னகையோடு அவள் கூற, அந்தப் பண்டம் அவ்வளவு ருசியாக இருந்தது.
“இதைப் பைரவிகிட்ட சொல்லிச் செய்யச் சொல்லணும்… நாக்ஸ் இதை எப்படிப் பண்றதுன்னு சொல்லிக்கொடு…” என்று கேட்க, அப்போது மட்டும் பைரவி அதைப் பார்த்திருந்தால் கண்டிப்பாகத் தலையில் இரண்டு கொட்டுக்கள் வைத்திருப்பார்.
‘அடியே… உன்னை ஒருத்தன் கஸ்டடி எடுத்து வெச்சுருக்கான்… அவன் வீட்ல இப்படிச் சப்பு கொட்டிட்டுச் சாப்பிடறதும் இல்லாம, ரெசிபி வேற கேக்கறியா?’ என்று ரெண்டு வைத்திருந்தால் சற்றுச் சீரியஸ்னஸ் வந்திருக்குமோ என்னவோ?!
ஆனால் இப்போது டூர் வந்தது போலத்தான் வளைத்துக் கட்டிக் கொண்டிருந்தாள்.
சௌதே காட்டியை அடுத்து மசாலே நீர் தோசை என்று வேறொரு தோசையை அவள் காட்ட, அதையும் முடித்தவள்,
“சூப்பர் டிபன் நாக்ஸ்…” என்று நாக்ஸ்க்கு ஒரு ஷொட்டும் கொடுத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
பார்க்கத் தொலைக்காட்சியும் இல்லை, அவளது செல்பேசியும் இல்லை.
நேரத்தை நெம்பித் தள்ளுவது சிரமமாக இருந்தது.
நாகம்மா அன்றைய சமையலை முடித்து விட்டு, வீட்டைச் சுத்தம் செய்தபின் சென்றிருந்தாள். இவள் சோபாவில் அமர்ந்தபடி யோசனையிலிருக்க, நாகம்மாள் சென்று விட்டதைக் கூட அறியவில்லை.
எதுவோ தோன்ற வாசல் கதவைப் பார்த்தவளுக்குத் திக்கென்று இருந்தது. கதவு தாளிடப்பட்டு இருந்தது.
அவசரமாக எழுந்து கதவை இழுத்துப் பார்த்தவளுக்குப் புரிந்தது, பூட்டிவிட்டுச் சென்றிருந்தாள்.
‘அடிப்பாவி… அப்பாவிபோலப் பேசிக் கொண்டிருந்தாளே…’ என்று யோசித்தவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ‘முதலில் இது போன்ற அப்பாவிகளைத் தான் நம்பக் கூடாது…’ என்று தனக்குத் தானே கொட்டிக் கொண்டாள்.
கதவு திறந்திருந்தாலாவது எதையாவது பார்த்துக் கொண்டு பொழுதைப் போக்கியிருக்கலாம்… ஆனால் மூடிய கதவை இப்போது வெறித்துப் பார்க்கத்தான் முடிந்தது.
மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தாள். கதவு திறப்பேனா என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. ஆட்டோமேடிக் லாக்காக இருக்குமோ என்று அதையும் ஆராய்ந்து பார்த்தாள். அப்படி ஒன்றும் இல்லை. எப்படியும் சாவி போட்டால் தான் திறக்க முடியும் போல!
வெளியே மழை ஆரம்பித்து இருந்தது போல!
சோவென்ற சப்தம், கதவையும் தாண்டிக் கேட்டது! அதோடு மண் வாசம் வேறு! சில்லென்ற உணர்வு அவளது உடலைத் தீண்டிப் புல்லரிக்க வைத்தது!
ஜன்னலைத் திறந்து வைத்து வேடிக்கைப் பார்த்தாள்.
இப்போதுதான் உண்மையான கஸ்டடியில் இருப்பது போல இருந்தது. ஜெயில் கைதிபோல!
நேரத்திற்குச் சாப்பாடு, பூட்டிய வீட்டினுள் இருப்பு!
‘மஹா ஜெகஜ்ஜ்ஜ்ஜ்ஜோதியா இருக்கடி…’
எவ்வளவு நேரம் தான் ஜன்னலை வேடிக்கை பார்த்து நேரத்தை நெம்புவது? அமைதியாக மாடியில் இருந்த அவள் தங்கியிருந்த அறைக்குப் போனாள். படிக்கக் கூட எதுவுமே இல்லை!
சரி அதுவாவது தேறுகிறதா பார்க்கலாம் என்று அங்கிருந்த இன்னொரு அறையைத் திறக்க முயற்சி செய்தாள். முடியவில்லை. பூட்டியிருந்தது. மாடியில் இரண்டு அறைகள் மட்டும் தான் போல… அதற்கும் மேலே மொட்டை மாடி!
மாடிக்குச் செல்லும் கதவும் பூட்டியிருந்தது. அவளால் முடியுமட்டும் இழுத்துப் பார்த்தாள்… முடியவில்லை!
இதிலெல்லாம் இவன் உஷார் தான் என்று எண்ணிக் கொண்டாள். பேசாமல் மாடியிலிருந்து கீழே நடக்கத் துவங்கினாள். மழை வலுவாக அடித்துப் பெய்து கொண்டிருந்தது. குளிர் வேறு அதிகமாக இருக்க, கைகள் இரண்டையும் கோர்த்து தேய்த்து விட்டுக் கொண்டாள்.
நேரத்தைத் தள்ளினாள். மதிய உணவுக்குக் கூட அவன் வரவில்லை. வருவானா என்பதே சந்தேகமாக இருந்தது. யாரும் இல்லாமல் தான் மட்டும் உண்பதைப் போன்ற கொடுமை வேறில்லை. உணவைத் தள்ளி வைத்தாள்.
இப்படி இவன் விட்டுச் சென்றதற்கு, பேசாமல் தன்னைக் கிணற்றில் தள்ளி விட்டிருக்கலாம். அவளால் முடியவே முடியாத ஒன்றென்றால் அது தனிமையில் இருப்பதுதான்.
தனிமையில் பேச ஆள் இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் அவளுக்கு வேறொரு நரகம் இல்லை. மிகக் கொடுமையான நரகமாகத் தோன்றிவிட்டிருந்தது அவளுக்கு!
மாலையானது! மழை இன்னமும் வெளுத்து வாங்கிக்கொண்டு தானிருந்தது. மழை பிடித்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் இங்கு விட்டுவிடாது போல. அத்தனை மழை… பேய் மழை!
கீழே இரண்டு அறைகள் இருந்தது… பாதித் திறந்திருந்த அந்த அறையைத் திறந்தவளுக்குப் பக்கென்றிருந்தது.
அது ஷ்யாமின் அறை!
அறை முழுக்கப் பரவியிருத்த சிகரெட் வாடை அவளை ஏதோ செய்தது. ஆங்காங்கே சிகரெட் துண்டுகளும் கிடக்க, மஹா முகம் சுளித்தாள்.
‘இத்தனை சிகரெட் குடிச்சா என்னாகறது? கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாதவன்…’ என்று கடுப்பானவள், சுற்றிலும் பார்த்தாள். படிப்பதற்கு ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற எண்ணத்தில்!
படுக்கையின் மேல் நாலைந்து புத்தகங்கள் குவியலாக இருந்தது. அருகிலேயே உள்ளாடைகளும், இன்னபிறவும் குவியல்களுமாய் அறையே ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது.
ஒற்றைக் கையால் அவனது உடைகளை நகர்த்திவிட்டு, புத்தகத்தைப் பார்க்க, இரண்டில் ஜிலேபியை சுற்றி சுற்றிப் போட்டிருக்க, மற்ற இரண்டு மட்டும் ஆங்கிலம்!
ஒன்று ஜார்ஜ் சோரோஸ் எழுதிய ‘தி அல்கெமி ஆ பைனான்ஸ்’ மற்றொன்று டோனி ராபின்ஸ் எழுதிய ‘அன்ஷேக்கபில்’
“உவ்வே…” என்றவாறு தூக்கி அந்தப் பக்கம் வைத்தாள். அவளுக்குச் சற்றும் பிடிக்காத டாப்பிக் என்னவென்றால் பைனான்ஸ் மேனேஜ்மென்ட் பற்றிய புத்தகங்கள் தான். என்னவோ உமட்டிக் கொண்டு வருவது போலத் தோன்றும்!
படிப்பது, பார்ப்பது, கேட்பது என்று அனைத்தும் பணம் பணம் பணம் மட்டுமே போல! அவளுக்குச் சற்றும் ஒவ்வாத நிலை!
வேறு புத்தகங்களே இல்லையா என்று ஆராய்ந்தாள்!
“ம்க்கூம்…” மெலிதாகக் கனைத்த குரல் கேட்க, அவள் துள்ளி குதித்தாள், அதிர்ந்து!
“என்ன ஆராயற?” அவனது புத்தகங்களைச் சரியாக அடுக்கி வைத்தவாறு அவன் கேட்க,
“ஜஸ்ட் ஏதாவது படிக்கக் கிடைக்குதான்னு பார்த்தேன்!” என்றவளை கண்கள் இடுங்கப் பார்த்தான்.
“கிடைச்சுதா?”
“ம்ம்ம்… ரெண்டு ஜிலேபி தான் கிடைச்சுது…” என்று அந்தத் தெலுங்கு புத்தகங்களை அவள் கூற, அவனுக்குள் மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தாலும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தான்.
“அது தெலுங்கு புக்ஸ்…”
“ம்ம்ம் தெரியுது… நமக்குத்தான் அது ஜிலேபியை சுத்திப் போட்ட மாதிரி இருக்கு…” என்றவள், ஏதேனும் புத்தகம் கிடைக்கிறதா என்று கண்களால் ஆராய்ந்தாள்!
“ஏன்?”
“ம்ம்ம்…” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “என்னைத் தனியா விட்டுட்டு போய்ட்ட… எனக்குப் போரடிக்காதா?” என்று கேட்க,
“நான் இருந்தா உனக்குச் சரிப்படலை… சோ ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்…” என்று தோளைக் குலுக்கிக் கொண்டு அவன் போக,
“அதான் இப்படி இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி முகத்தை வெச்சுட்டு இருக்கியா ஷ்யாம்?” என்று அவன் பின்னே ஓடியவள், அப்பாவிபோலக் கேட்க, திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான்.
திரும்பி நேராக நின்று, அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவாறு,
“இங்க பார்… எனக்கும் உனக்கும் வேறெந்த சம்பந்தமும் இல்ல… உன் அண்ணன் பணத்தைக் கொடுத்தா உன்னை அனுப்பிடுவேன்… அவ்வளவுதான்… என்கிட்டே இந்த மாதிரி பேச்செல்லாம் வெச்சுக்காதே… ரைட்?!” என்று உணர்வில்லாத முகத்தோடு கூறியவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
ஆனால் பதில் பேசவில்லை. முன்தினம் வரை பேசிச் சிரித்தவன் இவனா என்று சந்தேகமாக இருந்தது. அப்படியொரு இறுக்கம் அந்த முகத்தில். தான் இப்போது பேசுவதால் அவனைச் சமாதானப்படுத்துவது போல ஆகிவிடக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளதால், அவள் வாய் திறக்கவில்லை. அப்படி அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவுமில்லை.
“என்ன நீ நினைச்சுட்டு இருக்க? எனக்கு வேறெந்த நினைப்புமே இருக்காதுன்னா? எப்பவும் பொண்ணுங்களைப் பற்றி மட்டுமே நினைச்சுட்டு இருப்பேன்னா? இல்லைன்னா ஒரு நாள் விடாம யாராவது ஒருத்தியோட இருக்கறதுதான் என்னோட வேலைன்னா?” அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி அவன் கேட்க, அவளுக்குத்தான் அவற்றைக் கேட்க, சங்கடமாக இருந்தது.
“ஷ்யாம்… நான் அப்படி எதுவும் மீன் பண்ணலை…” உண்மையிலேயே அப்படி அவள் நினைக்கவில்லையே. அவனது வியாபார உத்தி பிடிக்கவில்லை. அவன் அவனது வாயால் ஒப்புக்கொண்ட பெண் தொடர்புகளைப் பிடிக்கவில்லை. அவ்வளவுதானே தவிர, இந்தளவு மோசமாகவா தான் அவனை நினைத்தோம்? அவன் வம்பிழுக்கும்போது அவனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்தாக மட்டும் அல்லவா அவள் அப்படிப் பேசியது!
“வேறென்ன மீன் பண்ண?”
“நீ வம்புக்கு பேசிட்டு இருந்த… அதுக்கு ரிப்ளை தான்…” என்று அவள் கூற ஆரம்பிக்க, அவன் கையை நீட்டித் தடுத்தான்.
அவனது செல்பேசி அழைத்தது. அவளைப் பார்த்தபடி போனை ஸ்பீக்கரில் போட்டான்.
“சொல்லு இளங்கவி…”
“சர்… கார்த்திக் சர் அவரோட ஷாப்பிங் காம்ப்ளெக்சை சேல் பண்றதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கார்… இன்னைக்கு அருள்ஜோதி ரியல் எஸ்டேட்ஸ்காரங்க கிட்ட பேச்சுவார்த்தை நடந்துருக்கு…”
“ம்ம்ம்…”
“கூடவே பாலச்சந்திரன் இருக்கார்… சிபி கம்பைன்ஸ் ஆளுங்கல்ல அவரும் ஒருத்தர் சர்…”
“ம்ம்ம்… இருக்கட்டும்…”
“நம்ம விஜய் சர் தான் இந்த டீலிங்க பார்த்துத் தந்தார் போல இருக்கு சர்…” என்று அந்த இளங்கவி தயங்க… அதை எந்த உணர்வும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் மஹா.
“நல்லா பேசட்டும் இளங்கவி… ஆனா டீலிங் முடியக் கூடாது… கார்த்திக் கைக்குப் பணம் போகக் கூடாது…” மிகவும் இயல்பாக அவன் கூற, அந்தப்பக்கத்தில் அந்த இளங்கவியே சற்று அதிர்ந்து விட்டான் போல!
“சர்…”
“எஸ்… பாலச்சந்திரன் கிட்ட நம்ம கொடுக்கல் வாங்கல் ஏதாவது இருக்கா?” என்று ஷ்யாம் கேட்க,
ஒரு நிமிடம் யோசித்தவன், “இருக்கு சர்…” என்று கூற,
“அதைத் தூசிதட்டு… அந்த ஆளுக்கு ப்ரெஷர் கொடு… கார்த்திக் கூட எவனும் நிற்கக் கூடாது…”
ஒரு செக்கன்ட் தான் மறுபுறத்தில் அந்த இளங்கவி யோசித்து இருப்பான் போல, “ஓகே சர்…” என்று கூறிவிட, செல்பேசியை வைத்து விட்டு, ஷ்யாம் இயல்புபோல டைனிங் டேபிளை நோக்கிப் போனான்.
அவனையே வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் மஹா!
“லஞ் சாப்பிடவே இல்ல… ஏதாவது மிச்சம் வெச்சு இருக்கியா?” என்று புன்னகையோடு பாத்திரங்களைத் திறந்து பார்த்தபடி கேட்க, அவள் பதில் கூறவில்லை.
“ஆஹா நண்டா? சூப்பர்…” என்றபடி அவனது தட்டுக்கு இடம் மாற்றியபடி அவன் கூற, அவளது பார்வையில் சிறிதும் உயிர்ப்பில்லை!
“ஏன் இப்படிப் பண்ற ஷ்யாம்?” குரல் வெளிவரவே சண்டித்தனம் செய்தது.
“எப்படிப் பண்ணேன்?”
“நானும் கேட்கத்தானே ஸ்பீக்கர் போட்ட?”
“ம்ம்… ஆமா…”
“அதான் கேட்கறேன்… ஏன் இப்படிப் பண்ண?”
“கார்த்திக் கைக்குப் பணம் கிடைக்காது…” மிகவும் உறுதியான குரலில் அவன் கூற, அவளுக்கு உள்ளுக்குள் அதிர்ந்தது.
“அதான் ஏன்?”
“ஏன்னா… காரணம் நீ!” அலட்டாமல் அவன் கூறிய வார்த்தைகளில் உள்ளுக்குள் சிதைந்து போனாள் மகா! ஆனாலும் அவளது வெறித்த பார்வையில் மாற்றம் இல்லை.
“உனக்கு மனுஷத் தன்மையே இல்லையா?”
“ம்ம்ம்ம்… பிணத்துக்கு ஏதும்மா மனுஷத்தன்மை?” என்று அவன் சிரிக்க, அவனது சிரிப்பை, அதில் தெறித்த எள்ளலை, அவனது அந்த அலட்சியத்தை உணர்வு இல்லாமல் வெறித்துப் பார்த்தாள் மஹா!