Veenaiyadi nee enakku 14

14

பறவைகளின் கீச்கீச் சென்ற ஒலி காதுகளைத் தீண்ட, கண்களைச் சிரமப்பட்டுப் பிரித்தாள். விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் மெல்லிய வெளிச்சம் அறையை நிறைக்க, ஜன்னல் வழியே தெரிந்த பசுமையான மலை முகட்டைப் பார்வையிட்டவாறே கண்களைச் சுழற்றிப் பார்த்தாள்.

தான் இருப்பது ஷ்யாமின் இடமென்பது மூளைக்கு உறைத்தது.

முன்தினம் அவன் பேசிய அனைத்தும் நினைவுக்கு வந்து, அவளது தலையைக் கனக்கச் செய்தது.

‘இந்த நாளை அவனது நினைவோடு தான் துவக்க வேண்டுமா?’ என்று மனம் சோர்ந்தாலும், அவளது நிலை அதுதானே?

வேறு வழி இல்லாத நிலையில், இது அவனது இடம் என்பதையும், அவன் தன்னை அவனுக்கு வர வேண்டிய பணத்திற்காக கஸ்டடி எடுத்து வைத்துக் கொண்டு கார்த்திக்கை மிரட்டுகிறான் என்பதையும் மறந்து விடக் கூடாது என்பதற்காகத்தானே அவன் முன்தினம் அத்தகைய முகத்தைக் காட்டியது!

‘பிணத்துக்கு மனிதத் தன்மை கிடையாதாமா?’ கசப்பான முறுவலொன்று அவளது முகத்தில் படர்ந்தது.

‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் ஷ்யாம்! எத்தகைய கஷ்டத்தைக் கொடுத்தாலும் கார்த்திக் சமாளிக்கிறானோ இல்லையோ, நான் சமாளிப்பேன்… ஆனால் எந்த நேரத்திலும் உனது கால்களில் வீழ்ந்து விடமாட்டேன்… கண்டிப்பாக மாட்டேன்…’ என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டவளுக்குப் புதிய சக்தி கிடைத்தார் போல இருந்தது.

எதையும் சமாளித்து விட முடியும் என்று தோன்றியது. மீறிப் போனால் உயிர்! அவ்வளவுதானே!

இது தோன்றும் போதே, வேறொரு நினைவும் அவளது மனதை ஆக்கிரமித்தது.

உயிர் போனால் பரவாயில்லை… ஆனால் மானம்?

தந்தையைப் பொறுத்தவரையும், தமையனை பொறுத்தவரைக்கும் கூட உயிரைவிட மானம் பெரியதாயிற்றே?!

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான் என்று தந்தை அடிக்கடி கூறுபவர், இந்தப் பிரச்சனையின் முடிவை எப்படி எதிர்நோக்குவார்?

இன்னும் பல நினைவுகளும் வந்து அவளது மூளையை ஆக்கிரமிக்க, அத்தனையையும் உதறித் தள்ளிவிட்டுக் குளியலறையை நோக்கிச் சென்றாள்.

காலைக்கடன்களை முடித்தவள், உடைகளைக் களைந்து விட்டு ஷவருக்கடியில் இளம் சூடான நீருக்கடியில் நின்றபோது சொர்க்கமாக இருந்தது. வெளியே பரவியிருந்த குளிருக்கும், உள்ளே புகைந்து கொண்டிருந்த வெப்பத்திற்கும் ஏதுவாக இளம் சூடான நீர் உச்சந்தலையில் பூச்சிதறலாகத் தூவ, உடல் சிலிர்த்தது.

அத்தனை குழப்பத்தையும் விடுத்து, நீருக்கடியில் வெகுநேரம் நின்றிருந்தாள். சலனமடைந்திருந்த மனம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமன்பட்டது. தலைக்கு ஷாம்பூ போட்டு அலசியது மட்டும் பைரவிக்குத் தெரிந்தால், அவளை ஒருவழியாக்கி விட்டிருப்பார்.

அத்தனை பராமரிப்பு மகாவுக்கு!

தலைக்கு அவர் ஸ்பெஷலாக அரைக்கும் குளியல் பொடி மட்டுமே… அதோடு உடலுக்கும்! செயற்கை கெமிக்கல்ஸ் சேர்ந்த எதையும் உபயோகிக்க அவளை விட்டதில்லை.

அதோடு வெள்ளி, செவ்வாய்க்கிழமையானால் அதிகாலையிலேயே எழுப்பி விட்டுத் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து, ஸ்பெஷல் பேக் போட்டு விட்டு, உடலுக்குத் தனியாக அரைத்துப் பூசி, பின்கட்டில் அமர வைத்துத் தானே தலைக்குத் தேய்த்து விட்டு, அலசிச் சாம்பிராணி போட்டு விட்டால் தான் அவருக்குத் திருப்தியே!

அதிலும் விறகடுப்பில் பெரிய அண்டாவில் நீர் சூடாகிக் கொண்டிருக்கும் போதே, இவளுக்குத் தலை தேய்ப்பு ஆரம்பமாகி விடும். இடை தாண்டி முழங்கால்களைத் தொடும் அந்தக் கூந்தலுக்காக, இவள் மெனக்கெடுவாளோ இல்லையோ, பைரவி உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பார்.

குளித்து முடித்தபின் கஷாயம் என்ற பெரும் போர் நடக்கும் தான். ஆனால் அந்த நாள் முழுக்கவே அவ்வளவு நன்றாக இருக்கும் மகாவுக்கு.

பார்த்துப் பார்த்துப் பைரவி செய்யும் போதெல்லாம் அவரிடம் சண்டையிட்டுவிட்டு, இப்போது தாயை நினைத்து ஏக்கமாக இருந்தது மஹாவுக்கு.

தலையில் கொட்டி அவர் குளிக்க வைக்கமாட்டாரா என்று ஏங்கியது அவள் மனது! குளித்தபின் அவர் போடும் சாம்பிராணிக்காகவும் அந்தக் கஷாயத்திற்காவும் காத்துக் கொண்டிருக்கத் தோன்றியது.

ஆனால் இப்போது அவளிருப்பது ஷ்யாமின் கோட்டை!

இது எங்கிருக்கிறது என்பதைக் கூட அவள் அறிய மாட்டாள்!

எப்போது விடுதலை? தெரியாது!

விடுதலையாவாளா? தெரியாது!

இத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடை ஷ்யாம்!

அவன் இப்போதைக்கு விடை கூற மாட்டான் என்பது திண்ணம்!

அத்தனை நினைவுகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு உடலைச் சுற்றி டவலைக் கட்டியவள், தலைமுடியை உதறிக் கொண்டே படுக்கையை நோக்கினாள். முன்தினம் அவன் வாங்கிவந்த உடைகள் இருந்தது.

கஸ்டடி எடுக்கும்போது உடைகளையுமா எடுக்க முடியும் என்று கிண்டல் செய்தவன், முன்தினம் தான் மாற்றுவதற்குப் புதிய ஆடைகளை வாங்கி வந்திருந்தான் போல!

அவனே சென்று வாங்கினானா? அவள் அறியவில்லை. எப்படியோ… ஆடைகள்! அவ்வளவுதான்!

எடுத்துப் பார்த்தாள்… த்ரீ போர்த் ஜெக்கிங்க்ஸ், டிஷர்ட், உடன் இன்னும் சில ஜீன்ஸ் பேன்ட், டாப்ஸ் என்று இருந்தது. இவனுக்கு இந்தச் சுடிதார் என்ற ஒன்றே தெரியாதா என்று தோன்றினாலும், இந்த உடைகளும் தனக்கு வசதியானவை தான் என்று தோன்றியது.

இந்த உடைகளோடு உள்ளாடைகளும் சரியான அளவில் இருந்தது தான் அவளுக்கு எரிச்சலே. அவளை எப்படி ஆழ்ந்து பார்த்திருந்தால் இப்படிச் சரியான அளவுகளில் உடைகள் இருக்கும் என்ற கடுப்பில் இருந்தாள். அவள் தான் அவனது ஆட்டோமேட்டட் சிஸ்டத்தின் செயல்பாடுகளை அறிய மாட்டாளே… ஆனாலும் அவனாகக் கூறிய பெண் தொடர்புகளைக் கொண்டு அவளால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது தான்.

நீல நிற த்ரீ போர்த் ஜெக்கிங்கையும், பேபி பிங்க் நிற ஷார்ட் ஸ்லீவ் டாப்சையும் அணிந்தவள், சிறு பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு, முடி காய்வதற்காக இரண்டு புறமும் சிறு முடி எடுத்துக் கட்டிவிட்டு, மீதியை அப்படியே வழிய விட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

இடது கையில் எப்போதும் போலக் கருப்பு நிற பாஸ்ட்ட்ராக் ட்ராக்கர். வலது கையில் அவளது குட்டி பிரேஸ்லெட்… அதிலிருந்த சிறு தொங்கட்டான் மெல்லிய சப்தத்தை எழுப்ப, வெண்ணிற வாழைத்தண்டு கால்களில் அணிந்திருந்த மெல்லிய சிறு கொலுசு தன் பங்கிற்குச் சிணுங்கியது.

நாகம்மாள் அப்போதுதான் சமையலறையில் டிக்காக்ஷனை இறக்கியிருக்க வேண்டும். அதன் மணம் கும்மென்று பரவியிருந்தது.

ஆழ்ந்து ஒரு நொடி கண்களை மூடிச் சுவாசித்து அதன் மணத்தை உள்வாங்கிக் கொண்டவளை விநோதமாகப் பார்த்தான், புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ஷ்யாம்.

த்ரீ போர்த், டாப்ஸ்ஸில் ரொம்பவுமே சிறு பெண்ணைப் போலக் குட்டியாக இருந்தவளை மேலிருந்து கீழாக வருடியது அவனது பார்வை, அவனையும் அறியாமல்.

நுனியில் நீர் சொட்டிக் கொண்டு அருவியாக வழிந்த அந்தக் கூந்தலிலிருந்து அவனது கண்களை எடுக்கவே முடியவில்லை அவனால். பிறை நெற்றி… வில்லாக வளைந்த புருவங்கள்… எக்ஸ்ட்ரா லார்ஜ் கண்கள்… அதில் அலைபாயும் கண்மணிகள்… கூர்மையான மூக்கு… பனியில் நனைந்த ரோஜா இதழ்கள்… கடித்துப் பார்க்கச் சொல்லும் வளவளப்பான ஆப்பிள் கன்னங்கள்… வெண்சங்கு கழுத்து… அதைக் கடித்துப் பார்த்தால் எப்படி இருக்குமென்று மனம் கேள்வி கேட்டது… அதற்கும் கீழே என்று போக முயன்ற பார்வையை லகானிட்டு அடக்க முயன்றான்.

மனம் அடங்க மறுத்து ஸ்கான் செய்ய முயற்சிக்க, அரும்பாடு பட்டு, தன் கையிலிருந்த புத்தகத்தில் கவனத்தைப் பதிக்க முயன்றான். முன்தினம் அப்படிப் பேசிவிட்டு, இப்போது இப்படியெல்லாம் பார்ப்பது தெரிந்தால் அவள் தன்னைக் கால் தூசிக்குக் கூட மதிக்கமாட்டாளே!

மதிப்பது என்ன? இரண்டு மிதி மிதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை… விட்டால் செய்யக் கூடியவள் தான் என்று எண்ணும்போது அவனுக்கே வேடிக்கையாக இருந்தது.

கண்களைத் திறந்து அவள் பார்த்தபோது சோபாவில் அமர்ந்தவாறு கையில் இருந்த புத்தகத்தில் கண்பதித்து இருந்தவனுமே குளித்து முடித்துக் கிளம்பத் தயாராக இருந்தான் போல!

பர்முடாஸ், ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டில் வெகு அம்சமாக இருந்தான் தான். நல்ல ஜிம் பாடிதான்… அலை அலையாகக் கேசம் முன் நெற்றியில் புரள, ஆர்ம்சை காட்டியபடி அவன் அமர்ந்திருந்த தோரணை அவளை ஈர்க்கச் செய்தது தான். ஆனால் அவனையெல்லாம் சைட்டடிக்கும் மனநிலையில் அப்போது அவள் இல்லை. ஒருவேளை இதுவே கல்லூரியாக இருந்து, உடன் பிருந்தாவும் இருந்திருந்தால், அவனைச் சைட்டடிப்பது என்ன? இன்னும் என்னென்ன முடியுமோ, அத்தனையையும் செய்திருக்கலாம்.

ஆனால் இப்போது அவனைப் பார்க்கும் போதே எழுந்த வெறுப்பை அவளால் மறைக்க முடியவில்லை. அந்த வெறுப்பை மறைத்து அவனிடம் பேசவும் பிடிக்கவில்லை.

அதிலும் சுற்றிலும் சிகரெட் நாற்றம் வேறு!

எப்போது பார்த்தாலும் இன்னொரு விரல்போல அந்த வெண் குழல் வத்தி. அதோடு அவனைச் சேர்த்துப் பார்க்கும் போதே அவளுக்குப் பற்றிக் கொண்டு தான் வந்தது.

ஆனால் இதெல்லாம் திருந்தாத கேஸ் என்று தோளைக் குலுக்கிக் கொண்டு, அமர்ந்திருந்தவனைக் கண்டுகொள்ளாமல் சமையலறைக்குச் சென்றவள்,

“ஹாய் நாக்ஸ்…” என்றவாறு, சமையல்கட்டு மேடையின் மீது அமர்ந்து கொண்டாள், வெகு இயல்பாக.

நாகம்மாள் அப்போதுதான் சமையலை ஆரம்பித்து இருந்தாள் போல… மெல்லிய சிரிப்புடன் அவளை வரவேற்று, ‘காபி வேண்டுமா?’ என்று சைகையில் கேட்டாள்.

“ம்ம்ம்… கொடு… நல்லா ஸ்ட்ராங்கா… காலைல எழும் போதே தலைவலி…” என்றவள், அங்கிருந்த கேரட்டை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தாள்.

மஹாவுக்கும் ஷ்யாமுக்குமாகக் காபியை கலக்கிய நாகம்மாள், ஒன்றை இவளிடம் கொடுத்து விட்டு, இன்னொன்றை ஷ்யாமிடம் தரக் கொண்டு போக, இவளும் காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

சோபாவில் ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவள், டீபாயிலிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

படித்துக் கொண்டே காபியை கொஞ்சம் கொஞ்சமாகப் பருகியவளை அவ்வப்போது நிமிர்ந்து பார்த்தான் ஷ்யாம். முன்தினம் பேசியவற்றுக்கு எதாவது எதிரொலி தெரிகிறதா என்ற தீவிரமான ஆராய்வு!

அவனால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை என்ற எரிச்சல் அவனையும் அறியாமல் உள்ளே எழுந்தது. அவளை எப்படியாவது எரிச்சல் படுத்த வேண்டும், அவளது கண்ணீரை பார்க்க வேண்டும் என்ற அவனது தீர்மானத்தை எப்படி அவனாகப் பிசுபிசுக்க விடுவான்?

அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைத்தது!

விஜய் தான் அழைத்திருந்தான்! ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு, ஓரக்கண்ணில் மஹாவை பார்த்தான்.

“பாஸ்…” குரலில் ஒரு தயக்கம்.

“எஸ் விஜய்…” தெளிவாக அழைத்தான் இவன்.

“பாஸ்… அருள் ஜோதி ரியல் எஸ்டேட்ஸ்க்கு நாம ஏதாவது ப்ரெஷர் போடறமா?” மீண்டும் தயங்கியபடி கேட்டாலும், நேராக விஷயத்திற்கு வந்தான்.

“ஏன் கேட்கற விஜய்?” கூர்மையாக இவன் கேட்க,

“கார்த்திக் கிட்ட அவங்க முதல்ல ப்ராமிஸ் பண்ணிட்டு இப்ப பின்வாங்கறாங்க போல இருக்கு…” ஒவ்வொரு சொல்லாக யோசித்தபடி அவன் கூற,

“அதனால உனக்கு என்ன வருத்தம்?” என்று அவன் கேட்க, விஜய் பதறியது அவனது அவசரக் குரலில் தெரிந்தது.

“இல்ல பாஸ்… எர்லி மார்னிங்கே கார்த்திக் எனக்குக் கால் பண்ணி விஷயத்தைச் சொன்னார்… நான் க்ராஸ் செக் பண்ணினதுல இளங்கவி நடுவில் பேசியிருக்கார்… அதான் கேட்டேன்… எனக்கு இந்த விஷயம் தெரியலையே…” நாசூக்காக என்னைப் பைபாஸ் செய்கிறாயா என்றும் விஜய் கேட்டு விட,

“இந்த விஷயத்துல மட்டும்தான் இளங்கவியை உள்ள கொண்டு வந்தேன் விஜய்… காரணம் உனக்கே தெரியும்…” என்று முடித்துவிட,

“பாஸ்…இந்த டீலிங்கை முடிச்சு, நாம வைண்ட் அப் பண்ணிக்கலாமே… இளங்கவி கிட்ட சொல்லுங்க ப்ளீஸ்…”

“என்ன விஷயம் விஜய்?”

“கார்த்திக் ரொம்பக் கஷ்டப்படறார்… எர்லி மார்னிங்கே வந்து என் முன்னாடி உட்கார்ந்துகிட்டு விட்டா அழுதுடுவார் போல… அதுவும் இல்லாம மஹா மேரேஜ் ஆகாத பொண்ணு… அவங்க லைப்க்கு ஏதாவது ஒண்ணுன்னா அந்தப் பாவம் நமக்குத் தான் பாஸ்… ப்ளீஸ் கன்சிடர்…” தயக்கத்தோடு கூறினாலும் அழுத்தமாகக் கூறியபோது, விஜய் தனக்கெதிராக வேலை பார்க்கத் துவங்கி விட்டான் என்பது புரிந்தது.

வளர்த்து விட்ட தன்னிடமேவா என்று எள்ளலாக எண்ணியவன்,

“பாவ புண்ணியத்தைப் பற்றி நீ பேசறியா? உன்னோட இந்தச் சேஞ்ச் ஓவர் ஆச்சரியமா இருக்கு விஜி… எனக்கு முன்னாடி நீதான் ரொம்பத் தீவிரமா இருப்ப… மஹா விஷயத்துல மட்டும் இந்தளவு நீ இறங்கி போற? ஹாங்?” என்றவன், “விஜி… இந்த விஷயத்துல நீ தலையிடாதே… இதை நானா முடிவுக்குக் கொண்டு வந்தா மட்டும் தான் முடிக்க முடியும்… வேறெப்படியும் முடியாது…” ஓரக்கண்ணில் மஹாவை பார்த்தபடி அழுத்தமாக முடித்தவனை வெறித்துப் பார்த்தாள் மஹா.

அவளது கண்களில் தெரிந்த வெறுப்பும் வெறுமையும் ஷ்யாமை அசைக்கவில்லை.

மறுபுறம் விஜய் மெளனமாகி விட்டான். இந்தளவு தீவிரத்தை அவனே நினைத்துப் பார்க்காதபோது, என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை.

அருகில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த கார்த்திக் இயலாமையால் வெறுமையாக விஜய்யை பார்த்தான்.

“மஹா பாதுகாப்பா இருக்காளா விஜய்?” கம்மிய குரலில் கேட்க, சட்டென விஜய்க்கும் அது தோன்றியது. மகாவுடன் தான் ஷ்யாம் இருக்கிறானா இல்லையென்றால் வேறெங்குமா? மனம் பரபரக்க, அவசரமாக, அவளுடன் அவனிருக்கக் கூடாது என்று வேண்டியது.

“பாஸ்… இப்ப நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்க, ஒரு கணம் யோசித்த ஷ்யாம்,

“நான் ஹைதராபாத்ல இருக்கேன் விஜி…” என்று முடித்துவிட, கண்களை இடுக்கி அவனை ஆழ்ந்து பார்த்தாள் மஹா. ‘இவன் எதற்காக மாற்றிக் கூற வேண்டும்?’

இந்தக் கேள்வி அவளைக் குழப்பியது!

“ஒரு தரம் என்னோட சிஸ்டர் கிட்ட பேசணும் விஜய்… கொஞ்சம் ஷ்யாம் சார் கிட்ட சொல்லுங்க… ப்ளீஸ்…” அருகில் அமர்ந்திருந்த கார்த்திக் கெஞ்ச, அந்தக் குரலும் மஹாவை வந்தடைந்தது.

முள்மேல் அமர்ந்திருந்தது போலத் தோன்றியது.

இவன் ராட்சசன்!

கலங்க முயன்ற கண்களுக்கு முயன்று அணையிட்டாள். இவன் முன்பு அழுவதா? நெவர்…!

அவளது முக மாறுதல்களைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தவன், என்ன நினைத்தானோ,

“ஒரு டூ மினிட்ஸ்ல உனக்குப் பேஸ் டைம்ல கால் பண்ண சொல்றேன் விஜய்… கார்த்திக்கை பேசச் சொல்லு…” என்று முடித்துவிட்டு, மஹாவை ஆழ்ந்து பார்த்தான்.

அவன் எதிர்பார்த்த ரியாக்ஷன் எதுவுமே கிடைக்காததில் அவனுக்கு உள்ளுக்குள் ஏமாற்றமாக இருந்தது.

இன்னொரு போனை எடுத்து விஜியின் எண்ணிற்கு வீடியோ காலில் அழைத்து விட்டு, சற்று தள்ளிப் போனான்.

ஆவலே உருவாகக் கண்களில் கண்ணீர் மிதக்கத் திரையில் தோன்றினான் கார்த்திக். இரண்டு நாட்களாக ஷேவ் செய்யாமல், தலை சீவாமல், பரிதாப தோற்றத்துடன் இருந்தவனைப் பார்த்தபோது மனம் வலித்தது.

பணத்திற்காகப் பேயாக அலைவான் போல… அதன் அயர்ச்சி கண்களில் தெரிந்தது. இரவு உறங்கினானா இல்லையா என்பதும் தெரியவில்லை… குற்ற உணர்வு அவளை வாட்டியது.

கண்களைச் சுற்றிலும் கருவட்டம்… முகத்தில் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதன் வேதனை… அதையும் தாண்டிய வெறுமை!

“லட்டு பாப்பா…”

தங்கையை இந்த நிலையில் வைத்திருக்கும் துயரம் அவனது குரலில் தெளிவாகத் தெரிய, கண்களை இறுக்கமாக மூடித் திறந்தாள் மஹா!

“அண்ணா…” குரல் கம்ம அழைத்தாள் மஹா!

அது அவனைப் பலவீனப்படுத்த அல்ல… தனக்குத் தானே பலத்தைச் சேர்த்துக் கொள்ள!

கார்த்திக்கை அவள் அண்ணா என்றழைப்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலும் அவளுக்கு அவன் கார்த்தித் தான். அதோடு ‘எருமை, பன்றி, பேயே, பிசாசே’ என்பதெல்லாம் இன்னபிற அடைமொழிகள்!

அவள் அண்ணாவென்று அழைத்தால் கண்டிப்பாக அவன் கண்டுகொள்வான், இந்த வாண்டுக்கு ஏதோ காரியமாக வேண்டும் என்று!

அவையெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து அவளை வாட்டியது… கூடவே கார்த்திக்கையும்!

“பாப்பா… நீ சேஃப்பா இருக்கியாடா?”

“நான் ரொம்ப சேஃப்பா இருக்கேன் ண்ணா… என்னோட சேஃப்டிய எனக்குப் பார்த்துக்கத் தெரியாதா? அதோட இங்க என்னைப் பார்த்துக்க ஒரு பொண்ணு வேற இருக்கு… எதைப் பத்தியும் கவலைப்படாதண்ணா… நீ பணத்தை மட்டும் ரெடி பண்ணு…” தெளிவாக அவள் கூறியதை கேட்டபோது தான் அவனது கண்களில் மீண்டும் உயிர் வந்தது.

தங்கையின் தைரியமே அவனது தைரியம் அல்லவா!

“ரொம்ப சந்தோஷம்டா குட்டி… அண்ணன் எப்படியாவது பணத்தை ரெடி பண்ணிடுவேன்… நீ மட்டும் தைரியமா இருடா…” என்று அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்தவனுக்கே உள்ளுக்குள் அந்தத் தைரியம் குறைவாகத் தான் இருந்தது.

பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டவர்கள் எல்லாருமே சொல்லி வைத்தார் போல, மீண்டும் அழைத்து மறுப்பதும், அவனோடு துணையாக நின்ற பாலச்சந்திரனும் கூட இப்போது சற்று தயங்குவது அவனுக்குப் புரியாமலில்லை.

ஆனால் காரணம் என்னவென்று தான் புரியவில்லை.

அந்தக் காரணமும், அவன் கலங்கும் காரியமும் புரிந்தவள், அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவித்தாள்.

“அண்ணா நீ பிருந்தா அப்பா கிட்ட பேசு… அங்கிள்க்கு ரியல் எஸ்டேட்ல நல்ல பரிச்சயம் உண்டுன்னு அவ சொல்லிருக்கா… அவர் உடனே தியேட்டரை டிசால்வ் பண்ண ஹெல்ப் பண்ணுவார்…” என்று அவளுக்குத் தெரிந்த வகையில் கூற, கேட்டுக் கொண்டிருந்த ஷ்யாம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அவன் சொல்லாமல் எதுவும் நடக்காது என்பது இந்தப் பேதைப் பெண்ணுக்குப் புரியவில்லையே!

“சரிம்மா… கண்டிப்பா பேசறேன்… நீ ஜாக்கிரதையா இரு குட்டி…” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் ஃபேஸ்டைமை ஆஃப் செய்ய, கனத்த மனதோடு அவளும் செல்பேசியை வைத்தாள்.

நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ அவளைக் குறும்புப் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.

“என்ன லட்டுகுட்டி… அண்ணா கிட்ட செல்லம் கொஞ்சி முடிச்சாச்சா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி சின்னச் சிரிப்போடு பழைய ஷ்யாமாக அவன் கேட்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“கேட்டா பதில் சொல்லணும் மிர்ச்சி…” என்றவனின் குரலில் குறும்பு முழுமையாக மீண்டிருந்தது, நடுவிலிருந்த கோபங்கள் காணாமல் போய்!

அப்போதும் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டவளை முறைத்துப் பார்த்தான்.

“இந்தத் திமிர் தான்டி உன்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு…” காரமாகக் கூறியவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“இதுக்கு நீ வைக்கற பேர் திமிர்ன்னா… ஆமா எனக்குத் திமிர் தான்… அது என் கூடவே பொறந்தது… உனக்கு என்னைக்கும் நான் அடங்கிப் போகவே மாட்டேன் ஷ்யாம்… என் அண்ணன் பணத்தைச் செட்டில் பண்ணதுக்கு அப்புறம் நான் உனக்குச் செட்டில் பண்ண வேண்டியதை செட்டில் செய்வேன் பார்… அப்பச் சொல்லு… அந்தத் திமிர் எப்படிப்பட்டதுன்னு…” என்று கூறிவிட்டு வெளியே போக முயல, அவன் வழியை மறித்து நின்றான்.

“எனக்கு என்ன செட்டில் பண்ணுவ லட்டுகுட்டி?” அவள் கூறியதை கேட்டபோது கோபத்தைக் காட்டிலும் வேடிக்கையாக இருந்தது.

இந்த வாண்டு தனக்குச் செட்டில் செய்யுமாமா? என்று கூறி தனக்குள் சிரித்துக் கொண்டு தான் அவன் கேட்டதே! ஆனால் தமையனை அந்தக் கோலத்தில் பார்த்தவளுக்குக் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது. அவனை விட்டால் கிழித்துத் தொங்க விடுமளவு ஆத்திரம் பெருகியது!

அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் முடியவில்லை… அடக்கி வைக்கவும் முடியவில்லை…

“பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமான்னு கேட்டு, நிற்க வெச்சு உன்னை நல்லா நாலு அறை அறையணும்… நீயெல்லாம் ஒரு மனுஷனான்னு கேட்கணும்…” முகம் சிவக்க, கோபம் கொப்பளிக்க அவள் கூற, அவளது கையை இறுக்கமாகப் பிடித்தான்.

அவள் பதறி விலகும் முன், “ம்ம்ம்… அடி பார்க்கலாம்… ம்ம்ம்ம்… அடிடி…” வெகு தீவிர முகப் பாவத்தோடு அவன் கூற, அவள் திகைத்தாள்… விலக நினைத்து அவளது கைகளை இழுத்துக் கொள்ள முயன்றாள்.

முடியவில்லை… அவனது தீவிரமும் குறையவில்லை… இரும்புப் பிடியாக இருந்தது!

“அடிடி… ஏன் சும்மா இருக்க? இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம்… இங்கவே அடிக்க முடியாதவ, அப்புறம் பப்ளிக்கா எப்படி அடிக்கப் போற?” குரலில் தீவிரம் கூடிக்கொண்டே போக, அவள் தனது கையை விடுவித்துக் கொள்ளப் போராடினாள், மருண்டு விழித்தபடி!

பேசும் வரை பேசிவிட்டாளே தவிர, அவன் கையைப் பிடித்தவுடன் அவளது தைரியமெல்லாம் வடிந்து விட்டது.

“விடு ஷ்யாம்…கை வலிக்குது…” கோபமாகக் கூற முயன்று, ஹீனமாக முடித்தவளை ஏளனமாகப் பார்த்தவன்,

“இவ்வளவு தான் உன்னோட தைரியம்…” என்று அவளது கையை உதறிவிட்டுப் போக முயல, அவனது கையை இறுக்கமாகப் பிடித்தாள் மஹா.

ஒரு நொடி நின்றவன், திரும்பி அவளையும், பிடித்திருந்த அந்தக் கையையும் மாற்றி மாற்றிப் பார்த்தான்.

“என்ன நான் அடிக்க மாட்டேன்னு தைரியமா ஷ்யாம்?” உறுத்து விழித்தபடி, சிவந்த கண்களோடு அவள் கேட்க, அவளது அந்தப் பெரிய கருவண்டு கண்களை உற்று நோக்கினான் ஷ்யாம். அந்தக் கண்கள் கடலாகவும், இவன் மூழ்குவதும் போலத் தோன்றியது!

அவளது அந்த அசட்டுத் தைரியம் அவனைத் திகைக்க வைத்தது. பதில் பேசாமல் அவனது கையைப் பிடித்திருந்த அவளது கையை மட்டும் அவன் பார்த்தபடி நிற்க, நிதானமாகத் தனது கையை விலக்கிக் கொண்டாள் மஹா.

“என்ன பதிலே காணோம்?”

“ம்ம்ம்… நீ அடிக்கற வரைக்கும் உன்னை யார் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சியா மிர்ச்சி?” என்று வேடிக்கையாகக் கூறியவனை மீண்டும் முறைத்தாள்.

“அப்படி என்ன கிழிச்சுடுவியாம்?” என்று அசட்டையாகக் கூறியபடி அவள் திரும்ப முயல, அவளது கையைப் பிடித்துச் சுழற்றியபடி அவளது இடையைப் பிடித்துச் சுவரோடு நிறுத்தினான்.

திடீரென அவன் இடையைப் பற்றியதில், முதலில் அதிர்ந்து விழித்தவள், மிக அருகில் அவனது முகத்தைக் காணவும், பயந்து விலகப் பார்க்க, அவன் அதற்கு இடம் கொடாமல் அவளைச் சுவரோடு நெருக்கி நிறுத்தியிருந்தான்.