Veenaiyadi nee enakku 16

Veenaiyadi nee enakku 16

16

“பார்த்து வா… இன்னும் கொஞ்ச தூரம் பாதை கொஞ்சம் செங்குத்தா தான் போகும்…” என்றவன், கையில் ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு மேலே ஏறிக்கொண்டிருந்தான்.

அது ஒன்றும் தெளிவான பாதை எல்லாம் இல்லை. அவ்வப்போது யாராவது நடந்து போகும் பாதையாக இருக்கலாம். ஒற்றையடிப் பாதை. இரு புறமும் கனமாக மரங்கள் சூழ்ந்து இருந்தாலும் வலது புறம் செங்குத்தாகக் கீழே இறங்கியது.

அதாவது அது ஓரம்போல… மலையேறும்போது பாதை சற்று சரிவாகத்தானே இருக்கும்.

ஆனால் பச்சை பசேர் என்றிருந்தது. ஆங்காங்கே தென்பட்ட சின்னச் சின்ன ஓடைகள். சலசலவென நீரின் ஓசை…

உண்மையாகவே சொர்க்கம் தான்!

ஆனால் ஒரு விதமான சிறு அச்சம் சூழ்ந்தும் இருந்தது. நடக்க ஆரம்பித்துக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகியிருந்தது. ஆனாலும் இன்னமும் ஒரு மனித முகத்தையும் பார்க்க முடியவில்லை.

வீட்டிலிருந்து நடைப் பயணமாகத்தான் துவங்கியதே. நாகம்மா வேலையை முடித்துவிட்டுப் போக, சாப்பிட்டால் நடக்க முடியாது என்பதற்காகக் காலை டிபன் என்று இருவருமே சாப்பிடவில்லை. நாகம்மாவை சாப்பத்திகளை அலுமினியம் ஃபாயிலில் கட்டச் சொன்னவன், அதை எடுத்துக் கொண்டான்.

“தண்ணி எல்லாம் ரொம்பத் தூக்காத… அங்கங்க ஃபிரெஷ்ஷா பிடிச்சுக்கலாம்… நல்லாருக்கும்…” என்று அதைத் தடை செய்தவன், துணியையும் ஒரு செட்டுக்கு மேல் எடுக்க விடவில்லை.

“மினிமம் லக்கேஜ் போதும்… நிறைய இருந்தா நாம தூக்கிட்டு நடக்க முடியாது…” எனவும் அதற்கு ஒப்புக்கொள்ள, ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டில் எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்தான்.

“ஸ்டிச்சஸ் போடக் கூட வெச்சுருக்க… பரவால்லையே…” என்று பாராட்டுதலாகக் கூற, “ம்ம்ம்… எப்பவுமே இருக்கறதுதான்… ஏதாவது ஒண்ணுன்னா எல்லாம் கையோட இருக்கணும் இல்லையா… ஆனா இதுவரைக்கும் அதுக்கான தேவை வந்ததில்லை…” என்று புன்னகையோடு கூறினான்.

அவன் முதலிலேயே தயாராகத்தான் இருந்தான். இவள் தான் இப்போது புதிதாகக் கிளம்புவதால், எதையும் விட்டுவிடக் கூடாதே என்ற பதட்டம் உள்ளுக்குள்.

அவள் கிளம்பும் வரை சற்று பொறுமையாகவே என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்லிக் கிளப்பியவன், வானத்தையும் பார்த்துக் கொண்டான். மழை வந்தால் மொத்தமும் பாழ்! உள்ளுக்குள் சிறு பயமும் இருந்தது… இரண்டு நாள் முன் வரை மழை வெளுத்து வாங்கியிருந்தது. பாதையெல்லாம் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது.

மண் வேறு செம்மண்ணும் களிமண்ணும் கலந்த பூமி… வழுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக ட்ரெக்கிங் செய்ய யாரும் இந்தச் சீசனை தேர்ந்தெடுப்பதில்லை. வெயில் காலம் ஆரம்பிக்கும் முன் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தான் பெரும்பாலானவர்கள் ட்ரெக் செய்வது.

அதுதான் உகந்த காலமும் கூட, மழையும் குளிரும் முடிந்து, வெயில் ஆரம்பிக்கும் முன், அந்த இதமான அந்த வசந்த காலம், மலை ஏறுபவர்களுக்கு மிகப் பிரியமான காலம்.

ஆனால் இந்த மழைக் காலம் என்பது மிகவும் ஆபத்தானது. நிலச்சரிவுகள் ஏற்படலாம். பாறைகள் உருண்டு விழலாம். திடீர் மழையில் மாட்டிக் கொள்ளலாம். ஆபத்தான பூச்சி வகைகள் மழை நேரத்தில் தான் வெளியே வருவதும் கூட, அது போன்ற பூச்சி வகைகளிடம் மாட்டிக் கொள்ளலாம். எத்தனையோ ‘லாம்’ கள்.

ஆனால் இது போன்ற ‘லாம்கள்’ மட்டுமே ஷ்யாமை ஈர்ப்பவை என்பதால் அவனுக்கு அதை நினைத்தெல்லாம் தயக்கமில்லை. ஆனால் மஹாவுக்காகப் பார்க்க வேண்டி இருந்தது. இப்படிப் பார்க்க வேண்டி இருக்கும் போதெல்லாம் அவனுக்குச் சற்று எரிச்சலாக இருந்தது தான் உண்மை.

இதுவரை யாருக்காகவும் பார்த்ததில்லை… எதற்காகவும் யோசித்ததில்லை. அதிலும் ஒரு பெண்ணுக்காக என்று நின்றதில்லை. அவனது தேவைக்காக வந்தார்கள்… தீர்த்தார்கள்… போனார்கள்.

அது ஒரு வகை லக்ஸுரி.

தேவை என்பதற்கும், ஆடம்பரம் என்பதற்குமான வித்தியாசம் தான் அது!

தேவை என்பது கண்டிப்பாக வேண்டும் என்பது… ஆனால் ஆடம்பரம் என்பது அப்படி அல்ல! அதிகப்படியான ஒன்று… ஈகோவை திருப்திப் படுத்த, உடல் திமிருக்காக, யாரையாவது காயப்படுத்த என்று எத்தனையோ ஆடம்பரங்கள்!

ஒரு சிலருக்கு பணமும், பகட்டும், பதவியும் ஆடம்பரம். அதை நோக்கி ஓடுவது நடக்கும். அதற்காக உழைப்பதும், ஏங்குவதும் ஒரு விதமென்றால், ஒரு சிலருக்கு உயிர் வாழ்வதே ஆடம்பரம். அவர்கள் பாவப்பட்ட பிறவிகள்… அவர்களுக்கு வேறெந்த ஆடம்பரமும் தேவையில்லை. உயிர்மூச்சு… அதுவே ஆடம்பரமாகிப் போய்விடுவதும் உண்டு! அதற்கான ஏக்கமும், உயிர் வாதையும், கனவுகளோடும் கற்பனைகளோடும் மீளாப் பயணத்தில் ஆட்பட்டு விடுவதும் வேதனை… அந்த வேதனையை எதனைக் கொண்டு மரிக்க வைக்க?அது பிழைத்தலின் ஆடம்பரம்!

பிழைத்தல் என்பது வேறு, வாழ்தல் என்பது வேறு… இரண்டும் ஒன்றல்ல… ஒரு புழு பிழைத்திருக்கலாம், ஆனால் ஒரு மனிதனின் இயல்பு வாழ்தல்! உணர்வுப் பூர்வமாக, உளப்பூர்வமாக வாழ்தலுக்காக ஏங்குவதும் ஒருவித ஆடம்பரம்.

ஆனால் அந்த லக்ஸுரி, ஆடம்பரம் என்ற விஷயத்தைத் தாண்டி, இதுவரை இவன் யோசிக்காத ஒரு கோணத்தில் மஹா அவனது வட்டத்திற்குள் வந்திருந்தாள்.

அது அவளதிகாரம்…

அவளுக்காக யோசிக்க வைத்தாள். அவனை வலுக்கட்டாயமாக ஒரு வட்டத்திலிருந்து இன்னொரு வட்டத்திற்குப் புலம் பெயர்க்கத் துவங்கியிருந்தாள்… அவளையும் அறியாமல்!

காலை எட்டு மணிக்கெல்லாம் துவங்கிய பயணம்… அவர்கள் இருந்த வீட்டுக்கு அருகிலிருந்த அந்த ஓடை வழியிலான பயணம்… அந்தச் சிறு ஒற்றையடிப் பாதையில் துவக்கியபோது அவளுடைய மனதுக்குள் பயங்களைத் தாண்டிய ஒரு படபடப்பு!

சற்று தூரத்திலிருந்து பார்த்தபோது முதல் குன்று சிறு குன்று போலத்தான் தோன்றியது… ஆனால் ஏற ஏற அப்படியொரு செங்குத்தாக வளர்ந்து கொண்டே போவது போலத் தோன்றியது.

ஒரு வலிய மரத்தின் சிறு கிளையை உடைத்தவன், அதை ஊன்றிக் கொள்ள ஏற்றவாறு செதுக்கத் துவங்கினான். வேகமாகச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது… லாவகம் இருந்தது… பழக்கம் இருந்தது போல!

சரசரவென இன்னொரு கிளையையும் வெட்டியவன் அதையும் சீராகச் செதுக்கினான். இரண்டையும் எடுத்தவன், தான் ஒன்றை வைத்துக் கொண்டு, இவளிடம் ஒன்றைக் கொடுக்க, என்னவென்பதைப் போலப் பார்த்தாள்.

“ஊணி ஏர்றதுக்குக் கழி வேணும்… இல்லன்னா முடியாது…” என்றவன், தான் முன்னே ஏற, அவனைப் பின்பற்றி மூச்சு வாங்கியபடியே மஹாவும் கையில் கம்பூன்றியபடி ஏறினாள். அவளது பூசிய மாதிரியான தேகத்திற்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் ஷ்யாம் அப்படியெல்லாம் சிரமப்படுவது போலத் தோன்றவில்லை. அனாயாசமாக அவன் ஏறிய விதத்திலிருந்தே அவன் இது போன்ற பயணங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டவன் என்று தோன்றியது.

அவள் மூச்சு வாங்கியபடி ஏறுவதைப் பார்த்தவன்,

“இதுக்குத் தான் சொன்னேன்… ஒழுங்கா அங்கேயே இருன்னு…” கிண்டலாகக் கூறியவனை உதட்டைச் சுளித்தபடி முறைத்தாள்.

“ஹலோ… ஏன்? என்ன? இப்ப நான் ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணேனா?”

“ஓவரா மூச்சு வாங்கற… அதான் சொன்னேன்…” அலட்டிக் கொள்ளாமல் அவன் கூற,

தன்னைத் தானே ஒரு நிமிடம் நின்று பார்வையிட்டுக் கொண்டாள். ஆம்… சற்று அதிகமாகத்தான் மூச்சு வாங்கியது. வியர்வையில் மொத்தமும் குளித்து இருந்தாள்.

“படிப்ஸா இருந்தா பிட்னெஸ்ல கவனம் போகக் கூடாதுன்னு என்ன சட்டமா? இதுல என்சிசில இருந்தாங்களாமாம்…” என்று அவன் சிரிக்க,

“ஹலோ… நான் ட்வெல்த் வரைக்கும் தான் என்சிசில இருந்தேன்… எங்க காலேஜ்ல அதுக்கெல்லாம் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுக்கமாட்டாங்க… அதை வெச்செல்லாம் கேலி பண்ண…” என்று பல்லைக் கடிக்க,

“ஆமா… கேலி பண்றாங்க…” என்று சிரித்தவன், “இன்னும் அஞ்சு பர்சன்ட் தூரத்தைக் கூட க்ராஸ் பண்ணலை… அதுக்குள்ளே இப்படி மூச்சு வாங்குது… வேர்த்துக் கொட்டுது… இப்படி இருந்தா அம்பது கிலோமீட்டர்… எப்படி ட்ரெக் பண்ணுவ?” என்று கேட்க,

“வாட் அம்பதா????” அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பள்ளி இறுதியில் ட்ரெக்கிங் போனபோது கூட அவள் ஐம்பது கிலோமீட்டர் எல்லாம் போனதில்லை. மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு. அதுவே அவர்களது குழுவைப் பொறுத்தவரை சாதனைதான். இப்போது ஐம்பதா?

தலை சுற்றியது.

“ம்ம்ம்… ஆமா…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறியவனின் கண்களில் கள்ளப் புன்னகை! உண்மையில் ஐம்பதெல்லாம் இல்லை வெறும் பதினான்கு கிலோமீட்டர் என்பதால் அவனது முகத்தில் அந்தக் கள்ளப் புன்னகை பரவியிருந்தது.

“பேசாம வீட்டுக்குப் போகலாமா? ஜஸ்ட் டூ அவர்ஸ் தான் ஆகிருக்கு…” எனவும், வேகமாகத் தலையாட்டினாள்.

“நோ… நான் சமாளிச்சுக்குவேன்…”

“எப்படிச் சமாளிப்ப? பார் எவ்வளவு ஸ்வெட்டாகற!”

அவன் என்னவோ அக்கறையாகத்தான் கூறினான். அதைத் தாண்டி அவனது யோசனையில் வேறு எண்ணங்கள் இல்லை. ஆனால் அவனைப் பற்றி அறிந்திருந்தவளுக்கோ அவனது இந்த வார்த்தைகள் உள்ளுக்குள் உறுத்தின. எரிச்சலாகவும் இருந்தது.

அவ்வப்போது அவனது பார்வை போகும் திக்கையும் பார்த்துக் கொண்டாள். அதில் கள்ளம் இல்லை. நிம்மதியாக உணர்ந்தாள் மகா.

“எனக்கொன்னும் பிரச்சனையில்லை…”

மீண்டும் தன்னைப் பார்த்துக் கொண்டாள். சற்று லூசாக இருந்த டிஷர்ட் உடலோடு ஒட்டிக் கொண்டு, அவளை இப்போது சற்றுச் சங்கடப்படுத்தியது.

இவனுக்கு முன் இப்படித்தான் காட்சி தர வேண்டுமா என்று தோன்ற, டி ஷர்ட்டை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள். என்னதான் இழுத்து விட்டுக் கொண்டாலும் அதன் வடிவை மாற்றிவிட முடியுமா என்ன?

என்ன செய்தாலும் ஒட்டிக் கொண்டது ஒட்டிக்கொண்டது தானே!

“ச்சே… பேசாம சுடிதார் போட்டுட்டு வந்திருக்கலாம்… தனக்குள்ளாக முனகுவதாக நினைத்துச் சற்றுச் சத்தமாகக் கூறிவிட, கேட்டவனுக்குச் சிரிப்புப் பொங்கியது.

“ஏன் இன்னும் புடவைய விட்டுட்ட? அன்னைக்கு ஸ்டேஜ்ல பாடும் கட்டிட்டு இருந்த மாதிரி புடவையைக் கட்டிட்டு வாயேன்… ரொம்ப நல்லா ட்ரெக்கிங் பண்ணலாம்… லூசு… ட்ரெக்கிங் போக இதுதான் பெஸ்ட்…” என்று தலையில் நங்கென்று கொட்டாத குறையாக அவன் கூற,

“எனக்கும் தெரியும்…உன் வேலைய பார்…” என்று முகத்தைத் திருப்பியவளை பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

ட்ரெக்கிங் ஷூஸ் வேறு அவள் அணியவில்லை. அவளுக்கென்று ப்ளான் செய்யாததால் அவள் அணிந்திருந்த செருப்பை மட்டுமே அணிந்து வந்தாள்.

சமவெளியில் நடக்க வேண்டுமானால் அது உபயோகப் படுமே தவிர, மலையேற்றத்தின்போது எந்தளவு உபயோகமாகும் என்பது தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டாலும், அவளை வம்பிழுக்கவென்றே,

“நல்ல வேளை… அந்த அரையடி ஸ்டூலை நீ போட்டுட்டு இல்ல… இல்லைன்னா சீனாகி இருக்கும்…” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு அவன் கூற, இவள் பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்க முயன்றாள். ஆனாலும் முடியவில்லை.

வேகமாக அவனருகில் வந்தவள், “நான் அந்த ஸ்டூல் தான் போடுவேன்னு உன்கிட்ட சொன்னேனா? சொன்னேனா?” என்று கடுப்பாகக் கேட்க,

“பார்க்கும் போதெல்லாம் அந்த ஸ்டூலோட தானே கீழ விழுந்து வெச்ச? இப்ப மட்டும் திருந்தவா போறன்னு… நான் இல்லம்மா… இந்தச் சமூகம் உன்னைக் கேள்வி கேட்கும்…” என்று அப்பாவி போன்ற பார்வையோடு தள்ளி நின்று கொண்டு கூறியவனைக் கைகளை இடையில் வைத்துக் கொண்டு, நறநறவெனப் பற்களைக் கடித்துக் கொண்டு பார்த்தாள்.

“நான் திருந்தினா என்ன? திருந்தலைன்னா உனக்கென்ன?”

“திருந்தினா வீட்டுக்கும் நாட்டுக்கும் சேதாரம் இல்லாம தப்பிக்கும்… இல்லைன்னா…” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன், “நீ விழற இடமெல்லாம் குண்டும் குழியுமா ஆகி…” என்று முடிப்பதற்குள்ளாக, அவனது கழுத்தை நெறிக்க வந்தாள் மஹா.

“டேய்… வேண்டாம்… என்னை ரொம்பக் கலாய்க்கற… உனக்கிது நல்லதில்லை சொல்லிட்டேன்…” கோபத்தில் முகம் சிவக்க கூறியவளை,

“ஓம் ஷாந்தி… ஓம் ஷாந்தி… டாக்டர் மேடமுக்கு ப்ரெஷர் ஜாஸ்தியாகிடுச்சு போல இருக்கே…” சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற,

“எனக்கு என்னவோ அதிகமாகுது… உனக்கு என்ன? முன்னாடி கண்ண வெச்சு நட…” என்றவள், முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“சரியான தொட்டா சிணுங்கி…” என்று கேலியாகக் கூறியவன், அவளுக்கு முன் நடக்க,

“ம்ம்ம்… அப்படித்தான்…”

“ஸ்போர்டிவா எடுத்துக்க மிர்ச்சி… எல்லாத்தையுமே சீரியஸா பார்த்தே என்ன பண்ண போற? கண்டிப்பா ப்ரெஷர் தான் ஜாஸ்தியாகும்…”

“நான் எப்பவும் ஸ்போர்டிவ் தான்… நீ தான் என்னைக் கடுப்பாக்கிட்டே இருக்க ஷ்யாம்…”

இப்போது ஷ்யாம் திரும்பி நின்று முறைத்தான்.

“நீ ஸ்போர்டிவா??”

“ம்ம்ம் இல்லையா பின்ன?… என்னோட ப்ரெண்ட்ஸ கேட்டுப்பாரு…” சிறுபிள்ளை போலக் கூறியவளை, சிரித்தவாறே முறைப்பது போலப் பார்க்க, என்னவென்று இவள் பார்வையால் கேட்டாள்.

“முதல் தடவை ஏர்போர்ட்ல பார்த்தப்ப, நான் உன்னை வேணுன்னே இடிக்கலைன்னு அத்தனை தடவை சொல்லியும் தேவையில்லாம வார்த்தைய விட்டது யாரும்மா?” இப்போது இடுப்பில் கைவைத்தபடி கேட்பது அவனது முறையாயிற்று!

“நீ இடிச்ச, நான் திட்டினேன்…” இதில் ஒன்றுமே இல்லை என்பதைப் போலக் கூறி, “அவ்வளவுதான்…” என்றபடி தோளைக் குலுக்கியவளை,

“ஏய் உன்னையெல்லாம் பொக்லைன் வெச்சு இடிக்கனும்டி…” என்று கடுப்பாகக் கூறுவது போலத் தோன்றினாலும் கண்களில் தெறித்த சிரிப்பில், ஒரு கணம் இவள் ஃப்ரீஸ் ஆகியதென்னவோ செம உண்மைதான்!

“போடாப் போடா…” ஜெயம் சதாவை போல இவள் கூற,

“ஒய் கத்திரிக்கா… டா போட்ட… இங்கயே உன்னை விட்டுட்டு நான் எஸ்கேப் ஆகிடுவேன்…” என்று மிரட்டியவனை,

“நீ மட்டும் டி போடுவ, நான் டா போடக் கூடாதா? அப்படித்தான் போடுவேன்டா… என்னடா பண்ணுவடா?”

“இரு இரு… நீ ஊருக்குப் போறதுக்குள்ள இதுக்கு நீ வாங்கிக் கட்டத்தான் போற…”

“போடாப் போடா புண்ணாக்கு… போடாத தப்புக் கணக்கு…” பாட ஆரம்பித்தவளை, சுவாரசியமாகப் பார்த்தவன்,

“வேண்டாம் வக்காயி (கத்தரிக்காய்)… தனியா என்கிட்ட இங்க சிக்கியிருக்க… நானும் பார்த்துட்டே இருக்கேன்… ரொம்ப என்னை டீஸ் பண்ற… ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேன்… ஜாக்கிரதை… ஒழுங்கா உன் வீடு போய்ச் சேரணும்னா ஒழுங்கா வாயை மூடிகிட்டு வா…”

முகத்தைச் சீரியசாக வைப்பது போல வைத்துக் கொண்டு, இவன் மிரட்ட, மஹா சட்டென வாயை மூடிக் கொண்டாள்.

தான் சற்று அதிகமாகத்தான் பேசிவிட்டோம் என்பது போல.

ஆனால் அவளாலும் வாய்ப் பேசாமல் இருக்க முடியாது என்பதும், அவனாலும் அவளது வாயைப் பிடுங்கி வம்பிழுக்காமல் இருக்க முடியாது என்பதும் அடுத்த நூற்றி இருபதாவது நொடியே நிரூபணமாகியது.

ஒரு சிறிய குன்றைக் கடந்து செடிகொடிகள் சூழ்ந்த சமமான பகுதியை அடைந்து இருந்தனர் இருவரும். அது சமவெளிப்பகுதி போன்ற பகுதிதான் என்றாலும் அதுவும் மேடுபள்ளமாகத்தான் இருந்தது.

ஆனால் முழுக்கவே அடர்த்தியாகச் செடிகள் சூழ்ந்து இருக்க, நடுவே சிறு ஒற்றையடிப் பாதை.

“ரொம்ப ஜாக்கிரதையா வா மிர்ச்சி… இந்தப் பக்கம் அட்டைப் பூச்சி அதிகம்…” என்று முன்னே அவன் செல்ல, இவள் சற்று பயத்தோடு கீழே பார்த்தபடி நடந்தாள்.

“உன்னைப் பார்த்துதான் வரச் சொன்னேன்… கீழேயே பார்த்து நடக்கச் சொல்லலை… அப்படியே பார்த்துட்டு போ… மொட்டை மரம் ஏதாவதுல முட்டிட்டு நிப்ப…” கிண்டலாக அவன் கூற, கடுப்பாக நிமிர்ந்தாள் மஹா.

“எப்படி நடக்கறதுன்னு நடந்து காட்டுங்க குருஜி… கத்துக்கறேன்…” அவனுக்கு ஈடாகக் கூறியவளை, முகத்தில் மிளிர்ந்த புன்னகையோடு பார்த்தவன்,

“ச்சே… இப்படியொரு சிஷ்யை கிடைக்க நான் எவ்வளவு தவம் பண்ணிருக்கணும்… பேசாம இங்கயே ஒரு ஆஷ்ரமம் ஓபன் பண்ணிடலாமா, நித்தி ஸ்டைல்ல?” என்று சத்தமாக யோசித்தவன் மண்டையில் ஒன்று போட்டால் என்னவென்று இவளுக்குத் தோன்றியது.

இதுவே ஒரு அவதாரம்… அதிலும் கிருஷ்ணாவதாரம்… இதில் நித்தியானந்தா பாணியில் ஒரு ஆசிரமாம்! விளங்குமா?

“உங்களுக்குச் சிஷ்யைகள் கூட்டம் அதிகமாச்சே சுவாமிஜி…”

“ஹரஹர மஹாதேவகி… அதுதானே வேண்டும் குழந்தாய்… கண்ணுக்குக் குளிர்ச்சியாக, பசுமையாக, மப்பும் மந்தாரமும் கொப்பும் குலையுமாக, ஒரு பத்து பன்னிரண்டு சிஷ்ய பெண்களோடு… அடடா அடடா… நினைக்கும் போதே சுவாமிஜி பரவச நிலையை அடைந்து விடுவார் குழந்தாய்…”

“பத்து போதுமா சுவாமிஜி…?”

“ஹரஹர மஹாதேவகி… போதும் குழந்தாய்… இதற்கே சுவாமிஜி ஓவர்டைம் பார்க்க வேண்டும்…” என்று ஷ்யாம் கண்ணடிக்க, மஹா எந்த வேறுபாடும் இல்லாமல் நண்பனைக் கலாய்ப்பதை போலக் கலாய்த்துக் கொண்டிருந்தாள். இவளுக்குப் பதில் கொடுக்கப் பிருந்தா திணறியதுண்டு. ஆனால் ஷ்யாம் பதிலுக்குப் பதில் கலாய்க்கவும் ஒரு கட்டத்திற்கும் மேல் இருவருமே பாலின பேதத்தையும், தங்களது பிரச்சனைகளையும் மறந்து வழக்கடித்துக் கொண்டிருந்தனர்.

“ரொம்பவும் ஓவர்டைம் உடம்புக்கு ஆகாது சுவாமிஜி…”

“ஹரஹர மஹாதேவகி… இந்த உடம்பு எந்த ஓவர்டைமையும் தாங்கும் குழந்தாய்…”

“தாங்கும் தாங்கும்…” என்று கிண்டலாகச் சிரித்தவள், “சுவாமிஜி… சிஷ்யைகள் மெய்ன்டைனன்ஸ் காஸ்ட் அதிகமாகுமே…”

“ஹரஹர மஹாதேவகி… அதைப் பற்றிய கவலை உனக்கெதற்குக் குழந்தாய்… அனைத்தும் அவன் செயல்…” கொஞ்சம் கூடத் தயங்காமல், மறைக்க முயலாமல் இயல்பாகக் கிண்டலடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அப்ப உங்க செயல்ன்னு ஒன்னும் இல்லல சுவாமிஜி?” மீண்டும் அதே நக்கல் வழிந்தது மகாவிடம்.

“அவன் செயலே நம் செயல் குழந்தாய்…”

“அதென்ன நம்? என்னை உங்க கூடக் கூட்டு சேர்க்காதீங்க சுவாமிஜி…”

“ஹரஹர மஹாதேவகி… உன்னைப் போய்க் கூட்டுச் சேர்ப்பேனா குழந்தாய்? நீ ஒரு வெத்து பீஸ் என்பதை நாம் அறிவோம்…”

‘அடப்பாவி… நான் வெத்து பீஸா?’ என்று பல்லைக் கடித்தவள், “போலீஸ் வந்து விசாரணை என்று பிதுக்கி… ச்சீ பிடுங்கி விடுவார்கள் சுவாமிஜி…” கள்ளச் சிரிப்போடு கூற,

“உனக்கேன் இவ்வளவு எரிச்சல் குழந்தாய்… வேண்டுமானால் பத்தோடு பதினொன்றாக நீயும் சிஷ்யையாகு… அவ்வப்போது சுவாமிஜி உனக்கும் காட்சி தருகிறேன்… நீயும் பரவச நிலையை அடைவாய்…” என்று அருள்பாலித்தவாறு கூறியவனைக் கடுப்பிலும் கடுப்பாகப் பார்த்தவள், முன்னே நின்று கொண்டிருந்தவனின் அருகில் சென்று,

“பத்தோட பதினொன்னா…??” என்று அருகில் வந்தவள், “உனக்கு எவ்வளவு லொள்ளு இருக்கணும்…” என்று நங்கென்று ஒரு கொட்டு வைக்க, “ஸ்ஸ்ஸ்… அட பிசாசே…” என்று தலையைத் தடவி கொண்டே கேட்டான்.

“ஹரஹர மஹாதேவகியா? லொள்ளு பேசாம வரணும்… இல்லைன்னா இப்படித் தான்…” என்று பழிப்பு காட்டிக் கூற, சிரித்துக் கொண்டவனுக்கோ அவளிடம் அடுத்து என்ன வம்பிழுக்கலாம் என்று யோசிக்கத் தோன்றியது.

இந்த விளையாட்டு வெகுசுவாரசியமாக இருந்தது.

சிறு வயது முதலே ஒற்றையாய் வளர்ந்தவன்… அதிலும் ஹாஸ்டல் வாசம். இவனது ஹாஸ்டல் வெகுகறார். பெற்றோர் இருவரும் காதல் திருமணம், அதிலும் மொழி மாறிய திருமணம் என்பதால் இரு பக்கமும் போக்குவரத்துக் குறைவு.

போவான்… வருவான்… ஆனால் உரிமையாய் யாரிடமும் பேச முயன்றதில்லை. வாய்ப்புகள் குறைவு என்பதோடு ஒரு கட்டத்திற்கு மேல் ‘நான் ஷ்யாம்’ என்ற ஈகோ வேறு!

தெரிந்தெல்லாம் பணம்… பண்ணுவதெல்லாம் பணம்… அதைத் தாண்டி அனுபவிக்க அத்தனையும்!

இதுதான் அவனது வாழ்க்கை!

“ஏய் குண்டு பூசணிக்கா…” முன்னே சென்று கொண்டிருந்தவன், திரும்பி இவளை அழைக்க,

“வாட்… குண்ண்ண்டு ப்ப்பூசணிக்க்காவா?” சாதாரணமாக, “பூசினாப்ல ஆய்ட்டடி… தீனிய குறை…” என்று பைரவி கூறினாலே சாமியாடுபவள், இப்போது இவன் இப்படிச் சொன்னால் சும்மா விட்டு விடவா போகிறாள்?

பல்லைக் கடித்துக் கொண்டு, “வேண்டாம் ஷ்யாம்… என்னோட இன்னொரு ரூபத்தைக் காட்ட வெச்சுடாதே…” என்று கையை நீட்டி மிரட்ட, அந்த மிரட்டலைச் சில்மிஷ சிரிப்போடு வேடிக்கைப் பார்த்தவன்,

“இன்னொரு ரூபமா? அதுவும் உன்னை மாதிரி பப்ளிமாஸ் மாதிரியே இருக்குமா? இல்ல… அதாவது நல்ல ஃபிகரா இருக்குமா?” வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தவனைக் கொல்லும் கோபம் வந்தது அவளுக்கு.

“வேண்டாம்ம்ம்ம்ம்…”

“சரி அதை விடு பூசணிக்கா… அப்புறம் பார்த்துக்கலாம்… கொஞ்சம் இந்தப் பக்கம் வந்துடு…” என்று அவன் புறம் அழைக்க, உறுத்து விழித்தாள்.

“எதுக்கு இவன் கூப்பிடறான்?” என்று யோசனையாய் அவனைப் பார்க்க,

“ஏய் கொஞ்சம் சீக்கிரமா இந்தப் பக்கம் வா…” என்றவன், அதற்கும் மேல் அவளை யோசிக்க விடாமல், கையைப் பிடித்து இழுத்துத் தனக்கருகில் நிற்க வைத்தான்.

இரண்டு நாள் முன் பெய்த மழையில் நிலம் சற்று ஈரமாகவே இருக்க, இழுத்த வேகத்தில் ஒரு ஆட்டமாடி, தன்னைச் சமாளித்து நின்றாள்.

“இப்ப எதுக்காக இப்படி இழுத்த?” கையைத் தேய்த்து விட்டபடி அவனை முறைக்க,

“உஷ்ஷ்ஷ்… பேசாத…” என்றபடி அவன் கண்ணால் சைகை காட்ட, அவர்களுக்குச் சில அடி தூரத்தில் ஒரு பெரிய பாம்பு… நாகப்பாம்பு அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தது.

“ஐயோ ஷ்யாம்ம்ம்ம்…” என்று அதிர்ந்தவள், உடல் நடுங்க அவனது தோளை இறுக்கமாகப் பற்றித் தன்னை மறைத்து நின்றாள்.

“சத்தம் போடாத…” என்று கிசுகிசுத்தவன், “கொஞ்சம் கூட அசையாத மஹா… அதோட கவனத்தை அட்ராக்ட் பண்ணாத…” என்றபடி அசையாமல் அவனும் நின்றான்.

வேகமாக ஊர்ந்து கொண்டிருந்த நாகம், மனித வாடை பட்டதாலோ அல்லது ஏதோ இரையைக் கண்டதாலோ சற்று வேகம் குறைந்து இருபுறமும் அந்த இரையைத் தேடத் துவங்கியது.

சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அவனது தோளை இறுக்கமாகப் பற்றி முகத்தை அவனது தோளில் புதைத்துக் கொண்டாள். அவளது கைகள் நடுங்கியதை உணர்ந்தாலும் அவன் அசையவில்லை. சிறு அசைவும் அந்த நாகத்தை ஈர்த்துவிடுமே!

அந்த நாகம் தேடிய இரை அதன் வாயில் சிக்கியது. அது ஒரு எலி. சற்று பெரிய அளவிலான அந்த எலியை வேகமாக வாயில் கவ்விய நாகம், மெல்ல விழுங்கத் துவங்க, அதை ஓரக்கண்ணில் கண்டவள், இன்னமுமே இறுக்கமாக அவனோடு ஒண்டிக் கொண்டாள்.

உடல் அவளையும் அறியாமல் கிடுகிடுவென நடுங்கியது.

“உஷ்ஷ்… மஹா…” கிசுகிசுப்பாக அவளை அதட்ட, அவனது நெஞ்சுப் பகுதியில் முழுமையாக ஒண்டிக் கொண்டாள். அத்தனை பெரிய நாகப் பாம்பை அதுவரை அவள் கண்டதில்லை. அத்தனை நீளம், அத்தனை பருமன். அவனுக்குப் பயமிருக்கிறதா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அசையாமல் நின்றிருந்தான்.

சுமார் பத்து நிமிடங்களில் மெல்ல மெல்ல இரையை விழுங்கிய நாகம், உண்ட மயக்கத்தில் அங்கேயே தனது படுக்கையைச் சாய்த்து விட்டது.

“உஷ்ஷ்… ஒரு நிமிஷம்…” என்றபடி மஹாவை சற்று தள்ளி நிறுத்திய ஷ்யாம், பாம்பைப் பார்த்தபடி தனது கையில் கழியை எடுத்துக் கொண்டான்.

“ஹய்யோ… என்ன பண்ற?” பயத்தில் அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அவள் கேட்க, அவளைப் பிரித்து நிறுத்தியவன், “ஷ்ஷ்ஷ்… சத்தம் போடாத…” என்றபடி அந்த நாகத்திற்கு அருகில் செல்ல, “ஐயோ அடிச்சுடாத ஷ்யாம்…” என்றவளுக்குப் பயத்தில் மேலும் நடுங்கியது, நாவண்ணம் ஒட்டிக் கொண்டது.

அவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், அந்த நாகத்தைக் கழியால் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரம் நடந்தவன், ஒரு ஆழமான பள்ளத்தில் இறக்கி விட்டு வந்தான். அந்தப் பாம்பும் சமர்த்தாக அந்தக் குழியில் போய்ச் சுருண்டு கொண்டது.

அவனது செய்கையை வைத்த கண்ணை எடுக்காமல் கண்டவளுக்கு இன்னமும் உடல் தடதட தான்!

பாம்பை விட்டவன், புருவத்தை ஏற்றி இறக்கி எப்படியெனக் கேட்டவாறே அவளருகில் வர, பிடித்து வைத்ததிருந்த மூச்சை வெளியே விட்டாள் மஹா.

“என்ன ஜோன் ஆப் ஆர்க்… இப்படிப் பேஸ்த்தடிச்சு நிக்கற?” கிண்டலாக அவன் கேட்க, அவளோ இன்னமும் அந்த ஷாக் போகாமல்,

“உனக்குப் பயமே இல்லையா?” என்று ஒரு மார்க்கமாகவே கேட்டு வைத்தாள்.

“பயமா… எனக்கா?” என்று சிரித்தவன், “அந்தப் பயத்துக்கே இந்த ஷ்யாமை கண்டா பயம் வரும்…” என்று ரஜினியின் பாணியில் பன்ச் டையலாக் அடிக்க, சகிக்காத அவனது அந்த டையலாகை கேட்டவள், “ஐயோ ஐயோ… இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே…” வெனத் தலையிலடித்துக் கொள்ள, “ச்சே ஒரு பன்ச் பேச விட மாட்டேங்கறாப்பா…” என்று குறைபட்டுக் கொண்டான்.

“அட நிஜமா தான் கேக்கறேன்… அவ்வ்வ்வ்வளவு பெரிய பாம்பு ஷ்யாம்ம்ம்ம்… திடீர்ன்னு உன்னைக் கொத்தியிருந்தா என்ன பண்ணுவ?”

“அட லூசே… அதுவே சாப்ட்டுட்டு மயங்கிப் படுத்திருக்கு… மயக்கத்துல இருக்கும்போது இதைவிட விஷமான பாம்பு கூட ஒன்னும் பண்ணாது… அதுக்குன்னு நாம அதைச் சீண்ட கூடாது… சத்தம் போடாம கொண்டு போய் வேற பக்கம் விட்டுடனும்… நாம அதை அட்ராக்ட் பண்ணாதான் நமக்கு டேஞ்சர்… இல்லைன்னா அது பாட்டுக்குப் போய்டும்… என்ன இருந்தாலும் இது அதோட வீடில்லையா?! நாம தான் விசிட்டர்ஸ்… அப்படி இருக்கும்போது நாம அவங்களை ஓவர்டேக் பண்ணலாமா?” என்று புன்னகையோடு கேட்டவனைச் சற்று நிமிர்ந்துதான் பார்த்தாள்.

“என்னைக் கேட்டா மட்டுன்னு உன்னை அது ஒரு கொத்து கொத்தியிருக்கனும்…” என்று சிரித்தபடி இவள் கூற,

“என்ன ஒரு ஆசை டாக்டரம்மாவுக்கு… ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணத்தான் நீங்க இருக்கீங்களே டாக்டரம்மா…” என்று அவன் சிரிக்க, சிரிக்காமல் நேராக அவனது கண்களைப் பார்த்தவள், சற்றும் இலகுத் தன்மையில்லாத குரலில்,

“யோசிப்பேன்… உன்னைக் காப்பாத்தறதா வேண்டாமான்னு… மனுஷத் தன்மையே இல்லாத உன்னை எதுக்குக் காப்பத்தனும்ன்னு யோசிப்பேன்… ஊரை அடிச்சு உலைல போடற உன்னைக் காப்பாத்தியே ஆகணுமான்னு கண்டிப்பா யோசிப்பேன்… நீ இல்லைன்னா எத்தனையோ பேர் நிம்மதியா இருப்பாங்க, அதனால நிச்சயமா உன்னைக் காப்பாத்தனுமான்னு யோசிச்சு பார்ப்பேன்…” மிகவும் இயல்பான ஆனால் அழுத்தமான குரலில் அவள் கூற, இத்தனை நேரம் அவனுடன் விளையாட்டாகப் பேசியதெல்லாம், கலாய்த்ததெல்லாம், வம்பிழுத்ததெல்லாம் பொய்யோ என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது!

அவளை உணர்வில்லாத பார்வை பார்த்தவன், திரும்பி நடக்கத் துவங்கினான்.

அவளுடன் வார்த்தையாடல் உண்மையிலேயே தடிக்கும் போதெல்லாம் அவன் பார்த்த பார்வை அதுவென அவள் உணர்ந்து கொண்டாள்.

அவன் அது போன்ற பார்வை பார்க்க நேரிடும் போதெல்லாம் விளைவுகள் மோசமாகவே இருந்திருக்கின்றன. அதை இப்போது எண்ணிப் பார்த்தவளுக்கு உடல் அன்னிச்சையாக நடுங்கியது!

தேவையற்ற வார்த்தைகளோ இல்லையோ… இயற்கையின் விதி என்பது வேறு…

இயக்க மெதற்கும் நிகரா யெதிரோர்

இயக்க முளதெனக் கொள்.

நியுட்டனின் மூன்றாம் விதி!

****

“சிவமுருகன் பைனான்ஸ் பின்வாங்கிட்டாங்க விஜய்…” இருள் சூழ காத்திருக்கும் அந்த வேளையில் தன் முன் அமர்ந்திருந்த விஜய்யிடம் தலையில் கைவைத்தபடி கூறிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

சிவமுருகன் பைனான்சில் கார்த்திப் பணம் கேட்டிருந்த விஷயம் விஜிக்கும் தெரியும் ஆனால் முந்தைய தினமே இளங்கவி அங்குச் சென்ற விஷயம் சற்று முன்னர்த் தான் அவனுக்குத் தெரிய வந்திருந்தது.

மஹாவின் மீதான தனது விருப்பத்தை அறிந்தும் ஷ்யாம் செய்யும் இந்தச் சதிராடல்கள் விஜய்யை கிட்டத்தட்ட அதிரச் செய்து கொண்டிருந்தது.

அவள்மீதான தனது விருப்பம் தெரியும் பட்சத்தில் ஷ்யாம் அவளை விட்டு விடுவான் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் அதையும் மீறித் தானே களத்தில் இறங்குவான் என்பது விஜய் சிறிதும் நினைத்துப் பாராதது.

இப்போது அவளை எங்கோ அடைத்து வைத்து விட்டு ஷ்யாம் ஹைதராபாத் சென்று விட்ட விஷயத்தைக் கேட்டவுடன், அவனது நம்பிக்கை முழுவதுமாகக் கலைந்து போய்விட்டது… காற்றில் கட்டிய கட்டிடமாகும் அவனது முதல் காதல் என்று அவன் நினைக்கவே இல்லையே.

ஆனால் அவனது இன்னொரு மனமோ அப்படி எளிதாக மஹாவை விட்டுக் கொடுத்துவிட முடியாது என்று அடம் பிடித்தது.

பார்த்த நாள் முதல் தன் மனதில் கொலுவிருக்கும் அவள் தான் தன்னுடைய எதிர்காலம் என்று பிடிவாதம் பிடித்தது. அதற்காக எதையும் செய்யச் சொன்னது.

இத்தனைக்கும் அவனே கேட்டதுதானே?

மகாவை விரும்புகிறாயா என்று!

தன் மனம் அறிந்திருந்தும் ஏன் இப்படியொரு திட்டமிடல்?

இதுவரை குடும்பப் பெண்களின் மேல் கை வைக்காதவன் ஷ்யாம். ஆனால் எதற்கும் முதன் முறை என்றிருக்கிறதோ? அவனது எண்ணங்களை இதுவரை நினைவேற்றி வைத்த தன்னுடைய ஆசைக்குச் சமாதி கட்ட துணிவானா?

மனம் விதவிதமாகக் கேள்விகளை எழுப்பினாலும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது.

உள்ளுக்குள் கோபம் கொதித்தது. கார்த்திக்கு எவ்வளவு கொதித்துக் கொண்டிருந்ததோ அதே அளவு விஜய்க்கும் கொதித்துக் கொண்டிருந்தது.

விட்டால் ஷ்யாமை எரித்து விடும் ஆத்திரத்தில் இருந்தான் கார்த்திக். அவனது தந்தையும் தாயும் எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தனர், மகாவை பற்றி.

மதியம் தான் பைரவியின் அழுத்தமான கேள்விகளைச் சமாளிக்க முடியாமல் உண்மையைக் கூறியிருந்தான். அதைக் கேட்டது முதல் எந்த உணர்வையும் காட்டாமல் அமர்ந்தவர்தான். யாராலும் அவரைப் பேசவைக்க முடியவில்லை.

ஒற்றை மகள்… தேவதை!

அவளை முழுவதுமாக இழந்து விட்டது போன்ற அந்தத் தோற்றத்தில் மிகவும் அதிர்ந்து போனார் பைரவி.

எப்படியெல்லாமோ சமாதானப்படுத்திப் பார்த்து இருந்தான். ஆனால் முடியவில்லை.

அதுவரை யாருமறியாமல் சமாளிக்க முடிந்தவனால் அதற்கும் மேல் இயலவில்லை. நடுவே அந்தப் பிருந்தாவின் பிடுங்கல் வேறு… மஹா எங்கே என்று கேட்டு!

ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல முடியாமலும், எங்கும் பணத்தைப் புரட்ட முடியாமலும் படுபயங்கரமாகச் சோர்ந்திருந்தான். இடையில் தங்கையைப் பற்றிய அச்சமூட்டும் கனவுகள் வேறு… விதவிதமாய்ப் பயமுறுத்த!

எல்லாப் பாதையும் அடைபட்டுக் கொண்டே வந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம். அந்தக் காட்சிப் பிழையில் தள்ளாடினான் கார்த்திக்.

நடுவே சிறு ஆறுதல் என்றால் அது விஜய் உடன் நின்றதுதான். ஷ்யாமுடைய ஆள் எப்படித் தனக்காக நிற்க முடியும் என்று நிறைய முறை யோசித்து இருந்தான். ஆனால் அவனையும் தன் விஷயத்தில் விஜய் எதிர்த்துக் கொண்டிருப்பது புரிந்தது. தனக்காக ஷ்யாமிடத்தில் வாதாடிய விஜய்யை மிகவும் பிடித்தது.

இவன் மனிதன் போல என்று எண்ணிக் கொண்டான்.

சிவமுருகன் பைனான்ஸ் கைவிரித்தபோது உலகமே இருண்டு விட்டது போலத் தோன்றி விட்டிருந்தது. எப்படியாவது, யாராவது தங்கையை அழைத்து வந்து கண் முன் காட்டி விடமாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. இப்போதைக்கு அந்த ராட்சசன் மனது வைத்தால் மட்டுமே அவளைக் காண முடியும். எப்படியோ ஏதோ ஒரு பெண்ணின் பாதுகாப்பில் அவளை விட்டானே… அதுவரை பரவாயில்லை.

கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து யோசித்துக் கொண்டிருந்தவனை இடையிட்டான் விஜய்.

“கார்த்திக், பாலாஜி ப்ரதர்சை கேட்டுப் பார்க்கலாமே…” என்று விஜி கேட்க,

“அதுக்கு முன்னாடி உங்க பாஸ் அதையும் முடிச்சுடுவார் விஜய்…அவனையெல்லாம் நிக்க வெச்சு…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆரம்பித்தவன், விஜய்யின் பார்வையில் சற்று அடங்கினான்.

குரலில் அவ்வளவு கோபம். இந்தளவு தன்னைப் பந்தாடுகிறானே அந்த ஷ்யாம்… அவனுக்கு என்னதான் வேண்டுமாம் என்ற கோபம்.

“அவர் என்னோட பாஸ் கார்த்திக்… அவரைப் பற்றி என்கிட்டே தப்பா எதுவும் பேச வேண்டாம்… எப்பவும் இப்படிப் பண்ணக் கூடியவரும் இல்ல… எங்களுக்கும் சில லிமிட்ஸ் உண்டு… அன்டூவர்ட் சிச்சுவேஷன்ஸ்… என்ன பண்ண? கொடுத்த பணத்தை வசூல் பண்ணலைன்னா, பாஸ் சொல்ற மாதிரி நாங்க நடுத்தெருவுக்குத்தான் வரணும் கார்த்திக்… ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கங்க…”

விஜய்க்குக் கோபம் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாலும், அவனால் ஷ்யாமை விட்டுக் கொடுத்துவிட முடியாது.

“நாளைக்குக் கல்யாணமாக வேண்டிய பொண்ணு… உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்து, இப்படியாகி இருந்தா இதையேத்தான் சொல்வீங்களா விஜய்?”

“கண்டிப்பா மாட்டேன்… நீங்கச் சொல்றது புரியுது… ஆனா தங்கச்சி இருந்துதான் புரியணும்னு இல்லை கார்த்திக்…” என்றவன், முகத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டுக் கொண்டான்.

‘இதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்து ஷ்யாமுக்குத் திருப்பித் தருவேன் கார்த்திக்… இது நிச்சயம்…’ என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டான் விஜய்.

எதிர்த்து நின்று போராடுவதை விட, உடனிருந்து குழி பறிப்பது சுலபமாயிற்றே…

‘மகாவை மீட்டதுக்கு அப்புறமா உனக்கு இருக்குடா ஷ்யாம்… என்னை என்ன நினைச்ச நீ? உனக்கு என் கையால தான் அழிவே…’ என்று நினைத்துக் கொண்ட கார்த்திக், தன் முன் இருந்த கண்ணாடி மேஜையைத் தன்னையும் மறந்து கையால் குத்த, அது உடைந்து, கையைக் கிழித்தது.

கையிலிருந்து சொட்டிய ரத்தத்தை வெறித்துப் பார்த்தான்.

அவனது மனதில் வெறியேறிக் கொண்டிருந்தது.

error: Content is protected !!