Veenaiyadi nee enakku 5

5

அன்று காலையிலிருந்தே சற்று டென்ஷனாக இருந்தான் ஷ்யாம். என்னவோ தெரியவில்லை, முன்தினம் மாலில் அந்தக் கடையில், அந்தப் பெண் செய்த காரியம் அவனைச் சற்றுக் கொதிக்கச் செய்திருந்தது.

முன்னமே ‘பொறுக்கி’ என்று கூறியவள், நேற்று அப்படியொரு காரியத்தைச் செய்கிறாள். இவளுக்கெல்லாம் அறிவென்பதே ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை என்று ஒரு மனம் சாட, இன்னொரு மனமோ, ‘நீ செய்தது மட்டும் சரியா?’ என்று கேள்வி எழுப்பியது.

யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து பப்ளிமாஸ், மிர்ச்சி, குல்பி என்றெல்லாம் கிண்டல் செய்தால் அந்தப் பெண் ரியாக்ட் செய்யாமலே இருக்குமா? என்ன ஒன்று, இவள் சற்றுக் கோபக்காரியாக இருக்கிறாள். அதிகபட்சமாக ரியாக்ட் செய்து விட்டாள் என்று அவளுக்குப் பரிந்து கொண்டு வந்தது அந்த மனம்.

ஆனாலும் அதிகம் தான் என்று நினைத்துக் கொண்டான். முன்தினம் தான் ஹைதராபாத்திலிருந்து வந்திருந்தான். லக்ஷ்மி பிலிம்ஸுக்குப் பணம் கொடுத்த வகையில் அசலோடு வட்டியும் வராதது, ஒரு விதமான எரிச்சலை உண்டு செய்திருந்தது.

அவர்கள் சரியான ஆட்கள் தான்… ஆனால் இப்போது சற்று அகலக்கால் வைத்து மாட்டிக் கொண்டனர் போல! தந்தை இருந்தவரை லக்ஷ்மியின் முருகானந்தத்துடன் நல்ல பழக்கம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறான். இவன் வந்தபிறகும் அவர்களோடு நல்ல உறவில் தான் இருந்தான். மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை எப்படியும் வருடம் ஒரு படமாவது செய்து விடுவார்கள். இப்போது அது இல்லாததால் ஒரு இடைவெளி விழுந்திருந்தது.

எவ்வளவு பழக்கம் இருந்தாலும் அது விஜய் மூலமாகத்தான். அதைத் தாண்டி யாரையும் சந்திக்க அவன் விரும்புவதில்லை. தொழிலில் உள்ளே நுழைந்த ஆரம்பத்தில் அத்தனைக்கும் இவன் தான் நேரடியாகச் சென்றிருக்கிறான். சில பேரிடம் முகத் தாட்சணியத்துக்காக என்று பல சலுகைகளைக் காட்ட வேண்டியிருந்தது.

அது அவனது தொழிலுக்கு வேட்டு வைக்கப் பார்த்தது. பார்த்தான்… இனி யாரையும் நேரில் சந்திக்கக் கூடாது, அத்தனையும் விஜய் மூலமாகத்தான் என்று முடிவு செய்து கொண்டான். விஜய்யும் கூட, ஒரு பெயருக்குத் தான். அவனுக்கு ஒற்று, அந்த ஒற்றுக்கு ஒற்று என்று அத்தனையும் உண்டு.

அத்தனை பரீட்சை வைத்து அதில் தேர்வானவன் தான் விஜய்!

அவனைப் பற்றிய முழு நம்பிக்கை வந்த பிறகுதான் முற்றுமாகப் பொறுப்பை அவனிடத்தில் விட்டதும் கூட!

ஷ்யாம் தனது இருபத்தி இரண்டாவது வயதில் வியாபாரத்தில் உள்ளே நுழைந்தான். அதற்கு முன்பே அத்தனை பரிட்சயமும் உண்டு என்றாலும், பொறியியல் முடிந்த பின் தான் முழுவதுமாக உள்ளே நுழைந்தது. அதன் பின் எட்டு ஆண்டுகள்… முழு எட்டு ஆண்டுகள், அத்தனையும் அவன்வசம்!

தந்தை போட்டு வைத்தது மென்மையான பாதை என்றாலும், இவனது அதிரடி செய்கைகள், அவனுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. அதே சமயத்தில் ‘ராட்சசன்’ என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தது.

“பாஸ்… ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல…” என்று மெல்லக் கேட்டான் விஜய், ஷ்யாம் ஊதித் தள்ளிய சிகரெட்களைப் பார்த்து. அவன் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியைச் சுற்றி அத்தனை சிகரெட் துண்டுகள்.

பொதுவாகப் போயஸ் கார்டன் வீட்டை இவர்கள் இருவரும் ஒரு அலுவலகம் போலவே நடத்துவதில்லை. கணக்கு பார்க்க ஒருவர், ஆபீஸ் அசிஸ்டன்ட் ஒருவர், கம்பியூட்டரில் கணக்குகளைப் பதிய ஒருவர் என்பதோடு அவர்களது அலுவலகம் முடிந்து விடும். அடியாட்கள் நிரந்தரமாக இருவரும், அவ்வப்போது மிரட்டுவதற்குப் பத்து அல்லது பதினைந்து பேரும் இருப்பார்கள்.

அது அலுவலகம் இல்லை! கந்து வட்டியகம்!

அதோடு பெண் என்பதே மருந்துக்கும் அங்கே இல்லை. வீட்டைச் சுத்தம் செய்யக் கூட ஆண்கள் தான்! அங்கே வேலை செய்யுமளவு அவர்களுக்கு அறிவு போதாது என்பது அவனது எண்ணம்!

இதில் விஜய் வேறு, ஷ்யாம் வேறல்ல!

இருவருமே ஒரே அச்சில் வார்த்தெடுத்தவர்கள்!

“கொஞ்சம் டென்ஷனா இருக்கு விஜய்… லக்ஷ்மில ஒழுங்கா திருப்பலைன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்… இன்னும் மூணு படத்துக்குப் பண்ட்ஸ் போய்டுச்சு… வர வேண்டிய இது இப்படி லாக் ஆகிட்டா, அடுத்து நம்ம கிட்ட பைனான்ஸ் கேட்டு இருக்க மிட்டல் க்ரூப்புக்கு நாம பண்ட்ஸ் மொபிலைஸ் பண்ணனுமே?”

அவன் கூறுவதும் சரிதான் என்று எண்ணிக் கொண்டான் விஜய். ஒரு நேரத்தில் தெலுங்கில் இரண்டு படத்துக்கும் தமிழில் இரண்டு படத்துக்கும் பைனான்ஸ் செய்வதுதான் அவர்களது வழக்கம். தெலுங்கில் பெரும்பாலும் இந்தப் பிரச்சனை இருக்காது. அங்கே படம் பார்க்க வருபவர்கள் அதிகம் என்பதால் தயாரிப்பாளர்கள் சற்று சுதாரித்து விட முடியும். ஆனால் தமிழில் பைனான்ஸ் செய்வதென்பது சற்று ரிஸ்கானது தான். இங்குப் படம் ஓட நிறையத் தடைகள் உண்டு. திருட்டு விசிடி, நெட்டில் ரிலீஸ் ஆவது என்று எத்தனையோ விஷயங்கள் தயாரிப்பாளரைப் பதம் பார்த்துவிடும்.

அதனால் கொடுத்த பைனான்ஸ் தேங்கி விடுவதும் உண்டு. அதனாலேயே தமிழுக்குப் பைனான்ஸ் பண்ணும்போது ஷ்யாம் வெகு எச்சரிக்கையாக இருப்பான். இப்போதெல்லாம் தமிழுக்குப் பைனான்ஸ் செய்வதைப் பற்றி நிறையவே யோசித்துக் கொண்டும் இருக்கிறான்.

ஆனால் அவனது தந்தையின் எண்ணமெல்லாம், நம்முடைய மொழிக்கு நாம் செய்யவில்லையென்றால் வேறு யார் செய்வார்கள் என்பதுதான்!

“தம்பி… தெலுங்குக்காரன் இன்னொரு தெலுங்குக்காரனை விட்டுக்கொடுத்துட மாட்டான், குஜராத்தி இன்னொரு குஜராத்தியை தான் வளர்த்து விடுவான், மலையாளத்துக்காரங்க கேட்கவே வேண்டாம். ஆனால் நாம தான்டா இதுல ஸ்பெஷல்… ஒரு தமிழன் மேல போனா, அவன் காலை வாரவே இன்னொருத்தன் கீழ இருப்பான்… வளர்த்து விடனும்டா… நாமளே கணக்கு பார்த்துட்டு அவாய்ட் பண்ணா குவாலிட்டியான படமெல்லாம் வெளிய வரவே வராது…” என்று அவ்வப்போது அறிவுரை என்று அவனது காதைத் தீய்த்து வைப்பார்.

“ஆமா… கொடுத்த கடனைத் திருப்பித் தரலைன்னா உங்க தமிழா வந்து தரும்? இல்ல தமிழ்த்தாய் தருவாங்களா? போங்க நானா…” என்று அவன் சலித்துக் கொள்வதும் உண்டு!

“அப்பா சொல்லு ஷ்யாம்…” என்று அவ்வப்போது திருத்துபவரை,

“சுந்தரத் தெலுங்கு நானா… தெலுங்கு அம்மா மட்டும் வேணும்… தெலுங்கு வேணாமா?” என்று வேண்டுமென்றே தெலுங்கில் கிண்டலாகக் கேட்டு விட்டுச் செல்பவனைப் பார்த்துச் சிரிப்பார் ஆத்மநாதன்.

அவன் கேட்பதும் நியாயம் தானே? அவரது சகி சுந்தரத் தெலுங்கு தானே! விரும்பிதானே திருமணம் செய்து கொண்டார். அப்படியே என்றாலும் அவரது தாய்மொழியில் அப்பாவென்று அவன் அழைக்கத் தான் அவரது மனம் விரும்பும். ஆனால் எப்போதும் அவனுடைய இஷ்டம் தெலுங்குதான். தமிழில் மிகவும் நன்றாகவே பேசுவான் என்றாலும் எழுதப் படிக்கத் தெரியாது.

எப்படியோ நன்றாக இருந்தால் போதுமென்று திருப்திப் பட்டுக்கொள்வார் அவர்.

இருவரின் இந்த முட்டல் மோதல்களை எதுவும் பேசாமல் ரசிப்பது அவரது மனைவியின் பொழுதுபோக்கு! வளர்ந்த பிள்ளை வாக்குவாதம் செய்வதைக் கூட ரசிப்பதுதான் அன்னையின் உள்ளம்!

அவரிடம் வாக்குவாதம் செய்தாலும், இப்போது வரை தமிழ் படங்களுக்குப் பைனான்ஸ் செய்வதை அவன் கைவிட்டதில்லை. பத்துப் படம் தெலுங்கு என்றால் ஐந்திலிருந்து ஆறுவரை தமிழுக்கு இருப்பது போலப் பார்த்துக் கொள்வான். ஆனால் பணத்தைத் திரும்பப் பெற மிகவும் முனைப்பாக இருப்பான் என்பது அவனை அறிந்த அத்தனை பேரும் அறிந்த உண்மை.

“கவலைப் படாதீங்க பாஸ்… அவங்களோட ட்ராக் ரெக்கார்ட் நல்லாவே இருக்கு… இதுவரைக்கும் எதுவும் டிபால்ட் ஆனதே இல்லை… எப்படியும் சரியாதான் பண்ணிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்று லக்ஷ்மிக்கு விஜய் ரொம்பவும் முட்டுக் கொடுக்கவும், அவனை விநோதமாகப் பார்த்தான் ஷ்யாம்.

அவன் இந்தளவுக்கு யாரையும் தூக்கி வைப்பவன் இல்லையே!

தன்னுடைய எண்ணத்தைத் தான் எப்போதுமே பிரதிபலித்திருக்கிறான். இப்போதென்ன என்று அவனைக் கூர்மையாகப் பார்த்தான் ஷ்யாம்.

“இல்ல பாஸ்… அவங்க ட்ராக் ரெக்கார்டை வெச்சுத்தான் சொன்னேன்…” என்றும் வேறு அவன் விளக்கம் கொடுக்க, அவனுடைய சந்தேகம் இன்னமும் அதிகமானது. ஆனால் அதற்கும் மேல் விஜய்யிடம் காட்டிக்கொள்ளவில்லை.

“அவங்க ட்ராக் ரெக்கார்டுக்கும், கரண்ட் பர்ஃபாமன்ஸுக்கும் இப்ப ஒத்துப் போகலையே…” என்று புருவம் சுளிக்க,

“பாஸ்… இந்த மந்த் போகட்டும்… மந்த் என்ட் வரைக்கும் டைம் கொடுத்து இருக்கீங்க… படம் ரிலீஸுக்கு முன்னாடி அவங்க கொடுத்துடுவாங்க…” அவ்வளவு நம்பிக்கையாக அவன் கூறவும், லக்ஷ்மியின் கார்த்திக் அந்தளவு நம்பிக்கையைக் கொடுத்திருப்பான் போல என்று நினைத்துக் கொண்டான் ஷ்யாம்.

ஆனால் விஜய்க்கு நம்பிக்கையைக் கொடுத்தது கார்த்திக் அல்ல… மகாவேங்கடலக்ஷ்மி பால் அவன் கொண்ட மயக்கம் என்று ஷ்யாம் அறிந்தால்?

“ஓகே… நீ இவ்வளவு கான்பிடன்ட்டா இருக்க… தென் இட் வில் பி பைன்…” என்று பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் அணைத்துத் தூக்கிப் போட்டான்.

“பாஸ்…” என்று அவன் இழுக்க, என்னவென்பதை போலப் பார்த்தான்.

“இல்ல…” என்று அவன் மேலும் இழுக்க, புருவத்தை நெரித்தான்.

“என்ன விஜி?”

“அது வந்து பாஸ்…” என்று அவன் இழுத்தான்.

இவன் என்ன இப்படி இழுக்கிறான் என்று யோசித்தான் ஷ்யாம். விஜி எப்போதும் இதுபோலப் பேசத் தயங்கிப் பார்த்ததில்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோலத்தான் அவன் பேசுவான். ஷ்யாமிடம் பேசும்போது மரியாதை குறையாது ஆனால் சொல்வதை நறுக்குத் தெறித்தார் போலச் சொல்வதில் மன்னன்.

அந்தத் தெளிவுக்காகவே அவனைப் பிடிக்கும் ஷ்யாமுக்கு. அவனுக்கு என்றுமே இந்த வழவழ கொழகொழ என்று பேசுபவர்களைக் கண்டால் பிடிக்காது. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் தான்!

அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். இழுத்துக் கொண்டிருக்கவும் மாட்டான்.

அதனால் லேசான எரிச்சலோடு, “சொல்ல வந்ததைச் சொல்லு விஜி…” என்றான்.

“நீங்க சிகரெட்டை கொஞ்சம் குறைச்சுக்கலாமே?” என்று மெல்லிதாகக் கூற, அவனை முறைத்தான் ஷ்யாம். அவனுக்கு இது போன்ற அறிவுரைகள் பிடிப்பதில்லை.

சரியா என்று கேட்பான்… அது சரிதான் என்று மற்றவர் கூறியே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி!

அவன் செய்வது அவனுக்குச் சரி!

தேவை இல்லாமல் விஜி இதுவரை இப்படிக் கூறியதில்லை. அவன் குடிப்பான்… ஆனால் புகைக்கமாட்டான்.

“இல்ல பாஸ்… ஆல்கஹால் உள்ள போச்சுன்னாலும் ஓரளவுதான் கெடுதல்… அதிகபட்சமா லிவர் கெட்டுப் போகும்… ஆனா ஈவன் ஒரு சிகரெட்ன்னா கூடக் கேன்சர் வாய்ப்பைத் தான் அதிகமாக்கும்… ஈவன் ஃபார் பாஸிவ் ஸ்மோக்கர்ஸ்… அதுவும் நீங்க இன்னைக்கு மட்டும் எட்டுப் பாக்கெட் சிகரெட் காலி பண்ணிருக்கீங்க…” என்று சற்று தணிந்த குரலிலேயே கூற,

“எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவங்க எல்லாம் நூறு வருஷம் இருந்துட்டு தான் போறாங்களா விஜி?” கேலியாக அவன் கேட்க, அவன் மெளனமாக இருந்தான்.

“ஓகே… நீ என்னவோ வெளிய போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தல்ல…” என்று முக்கால் கைவரை மடக்கிவிட்டிருந்த சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டவன், பின்னால் சாய்ந்தமர்ந்து கேட்க,

“ஆமா பாஸ்… ஒரு லைட் மியுசிக் ப்ரோக்ராம்…” என்றவன், ஒரு தனியார் மெடிக்கல் காலேஜை குறிப்பிட்டு, “ஸ்டுடண்ட்ஸ், கேன்சர் பேஷண்ட்ஸ்க்காக நடத்தறாங்க… நானும் டொனேட் பண்ணேன்…” என்று கூற, ஷ்யாம் அடக்க முடியாமல் சிரித்தான்.

“அதான் பல்லி என்னைக்குமில்லாம கேன்சரை பத்தி பேசுதா?” என்று கிண்டல் செய்ய, விஜியும் புன்னகைத்தான்.

அது உண்மைதானே! மஹா அவனிடம் ஒரு லெக்சரே அடித்தாளே அன்று! அவனும் அவள் பேசுகிறாள் என்று பொறுமையாகப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தானே! ஆனால் கார்த்தியின் முகத்தைப் பார்க்கத்தான் முடியவில்லை. தன்னிடம் அவனது தங்கை பேசுவதைத் தடுக்கவும் முடியாமல், தன்னை எதிர்த்தும் பேச முடியாமல் அவன் பட்ட பாட்டை இப்போது நினைத்தாலும் விஜிக்குச் சிரிப்பு வந்தது.

அப்போதுதான் அவன் அறிந்து கொண்டான் அவள் இன்டர்ன்ஷிப் செய்யும் இறுதியாண்டு மருத்துவ மாணவி என்று!

டாக்டர் மகாவேங்கடலக்ஷ்மி விஜய்!

சொல்லிப் பார்த்துக் கொண்டே இருந்தான்! புன்னகையில் விகசித்தது முகம்!

நன்றாகத்தான் இருந்தது!

ஷ்யாமால் மட்டும் எந்தப் பிரச்னையும் நடந்துவிடக் கூடாது. விஜய் எப்படியாவது இந்தப் பிரச்சனையைச் சமாளித்து விட்டானென்றால் போதும். அடுத்தடுத்து கார்த்திக்கை எச்சரிக்கை செய்து விடலாம்.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் புன்னகைத்துக் கொண்டு கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவனை வேடிக்கையாகப் பார்த்தான் ஷ்யாம்.

“விஜி…” என்று அழைக்க, அதற்கும் அவன் பதில் கூறாமல் இருக்க, சற்றுச் சப்தமாக, “டேய் விஜி…” என்று அழைக்க, விஜய் அதிர்ந்து ஷ்யாமை பார்த்தான்.

“பாஸ்…”

“டேய்… எந்தக் கண்ட்ரில, யாரோட டுயட் பாடிட்டு இருக்கே நீ?” என்று கேலியாகக் கேட்க, வெட்கத்தோடு புன்னகைத்தான்.

“பாஸ், உங்களுக்குத் தெரியாம நான் யார் கூட டுயட் பாடுவேன்?”

“எனக்குத் தெரிஞ்சு தான் டுயட் பாடனும்ன்னு அவசியமே இல்ல விஜி… அதான் உன் முகத்துல எழுதி ஒட்டியிருக்கே…” என்று மீண்டும் அவனை வார, “பாஸ்…” என்று பரிதாபமாக இழுத்தான்.

“சரி புறப்படு… நானும் வர்றேன்…” என்று அவனும் கிளம்ப,

“பாஸ்… நீங்க அந்த லைட் மியுசிக் ப்ரோக்ராமுக்கா?” ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஏன் நான் வரக்கூடாதா?”

“கண்டிப்பா பாஸ்… ஆனா இது மாதிரி ப்ரோக்ராமுக்கு எல்லாம் வர மாட்டீங்களே… அதான் கேட்டேன்…” என்று அவன் கூற,

“இல்லடா… டென்ஷனா இருக்கு… ஐ நீட் சம் சேஞ்ச்…” என்றான்.

“பாஸ்… ஏதாவது கம்பெனிக்கு அரேஜ் பண்ணட்டா?” சாதாரணமாகக் கேட்டான் விஜய்.

“ம்ம்ம்… பார்க்கலாம்… பட் ஐ திங்க், ஐ நீட் இட்…”

“ஹவ் அபௌட் சௌஜன்யா பாஸ்? அவங்களுக்குக் கால் பண்ணட்டா?”

அவளா என்று சலிப்பாக இருந்தது. வேறெதுவோ வேண்டும் என்பது போலத் தோன்றியது. எந்த நிலையிலும் திருப்தியாகாத தன் மனதுக்கு எதுதான் வேண்டும் என்பது அவனுக்கே புரியவில்லை.

“ம்ம்ம்… அவ வேண்டாம் விஜி…” என்று மறுத்துவிட, விஜய் யோசனையில் ஆழ்ந்தான். அவள் வேண்டாமென்றால், வேறு யார் என்று யோசித்தது மனது!

அன்று அவன் பார்த்த அந்த அமலா பாலை பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தான். ஒத்து வந்தால் ஷ்யாமுக்குச் சந்தோஷமாக இருக்கக்கூடும் என்றுதான் எண்ணியிருந்தான். அந்தப் பெண்ணும் பேமென்ட் கனமாக இருந்தால் பிரச்சனை எதுவும் இல்லையென்று சொல்லியிருந்தாள். அதோடு சினிமா ஆசையும் வேறு!

அவள் சொன்னது விஜிக்கு கசப்பாக இருந்தது. என்னதான் இதை சாதாரணமாக இப்படிச் செய்பவன் என்றாலும், இந்தப் பெண்களுக்குப் பணம் மட்டுமிருந்தால் போதுமா என்று எண்ணத் தோன்றியது.

பணம் வருவதாக இருந்தால் எதற்கும் சரியென்று சொல்லும் பெண்களையே இதுவரை கண்டிருந்தான். இதற்கு நடுவில் அந்த மஹா எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்ற கேள்வியும் மனதுக்குள் எழும்பியது!

அவளும் பெண் தானே?!

ஆனால் கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா என்று நியாயம் கேட்ட பத்தினிகள் வாழ்ந்த தேசமிது என்பதை விஜய் மறந்து போனான்.

நீ எரிக்க நான் ஒன்றும் கொக்கில்லை, கடமை தவறாத பத்தினி என்று கொங்கணவரிடம் உரைத்து, அவரைத் தோற்றுப் போகச் செய்த பெண்களின் வம்சம் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை ஷ்யாமும் உணரவில்லை.

“அன்னைக்கு ஏர்போர்ட்ல நீங்கப் பார்த்த பொண்ணு ஓகே வா பாஸ்?” என்று அவன் கேட்டவுடன் ஷ்யாமுக்கு தூக்கி வாரிப் போட்டது.

யார்? அந்த மிரப்பகாயா? சாத்தியமா? தன் மேல் செருப்பை எறியப் பார்த்தவளாயிற்றே! பொறுக்கி என்று கூறியவளாயிற்றே!

அவள் மட்டும் அப்படிச் சிக்கினாள் என்றால்…

பல்லைக் கடித்தான் ஷ்யாம். ஆனால் இவன் யாரை சொல்கிறான்?

“வாட்? யாரு? அந்த மிரப்பக்காயா?” என்று விவரிக்க முடியாத அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான உணர்ச்சி கலவையோடு அவன் கூறியதில் விஜய் இன்னமும் அதிகமாக அதிர்ந்தான்.

‘ஷ்யாம் குறிப்பிடுவது மஹாவை அல்லவா!’

“பாஸ்… நான் சொன்னது… ஃப்ரண்ட் டெஸ்க்ல நீங்கப் பார்த்தீங்களே… அந்தப் பொண்ணு…” என்று அவசரமாகக் கூறினான். அவன் மஹாவை அப்படித் தவறாக நினைப்பது விஜய்க்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“ப்ச்… அப்படியா?” சற்று ஏமாற்றமாக இருந்தது ஷ்யாமுக்கு.

“அந்தப் பொண்ணுக்கு ஓகே வாம் பாஸ்…” என்று விஜய் கூற, ஷ்யாமுக்கு அவளும் பிடித்தமில்லை.

“ப்ச்… பார்க்கலாம்…” என்று முடித்து விட்டான். அவன் ஆமென்றானா? இல்லை வேண்டாம் என்கிறானா? புரியவில்லை விஜய்க்கு. திரும்பவும் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது. சற்றுப் பொறுத்துதான் கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றாலும் திட்டு விழும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தான் அவனுக்கு வெறுத்துப் போகும். ‘ச்சே என்னடா பொழப்பு இது’ என்று!

ஆனால் ஷ்யாமால் எந்தப் பெண்ணுடனும் ஒன்ற முடியவில்லை என்பது விஜய்க்கு தெரியாதே! அவன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கூட அந்த மிரப்பக்காய் கூறிய, “போடாப் பொறுக்கி” தான் நினைவுக்கு வந்தது. அந்த வார்த்தை நினைவுக்கு வந்துவிட்டால் அவனது ரத்தம் அவனையும் அறியாமல் கொதித்தது.

அந்தக் கொதிப்பை அவள் அன்று இன்னமும் அதிகமாக்கி இருந்தாள், அவன்மேல் செருப்பை எறிந்து!

அவளது பேச்சு வரவில்லை என்றாலும் ஒப்புக்கொண்டு இருப்பான். ஆனால் அவள் பேச்சு வந்தபிறகு… மீண்டும் அதே கோபம்!

அவன் கையில் மஹா உண்மையில் சிக்கினால்?

*****

லைட் மியுசிக் ப்ரோக்ராமுக்காக அந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தார்கள் ஷ்யாமும் விஜய்யும். மருத்துவமனையோடு சேர்ந்த அந்த மருத்துவகல்லூரியில் ஏதோ ஃபெஸ்ட் போல… கல்லூரியே களை கட்டியிருந்தது.

கல்லூரியே வண்ணமயமாக, சந்தோஷமாகக் காட்சியளிக்க, அந்த சந்தோஷம் அவர்களையும் தொற்றிக்கொண்டது. இளம் பூக்களைப் பார்வையிடக் கசக்குமா என்ன?

வரவேற்பில் இருந்த பெண்களிடம் டிக்கெட்சை விஜய் காட்ட, அவள் அழைத்துச் சென்று விஐபிக்களுக்கான முன் வரிசையில் அமர வைத்தாள்.

சுற்றிலும் பார்த்தான். அறிந்தவர் என்று யாரும் இல்லை. கலவையாக இருந்தனர். வந்தது தவறோ என்று தோன்றியது! சரி வந்தது வந்தாயிற்று ஒரு இரண்டு மணி நேரத்தைக் கழித்து விடலாம் என்றெண்ணிக் கொண்டிருந்தபோது நிகழ்ச்சி ஆரம்பித்தது.

நிகழ்ச்சியை நடத்தியதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தான் போல! திரையிசை பாடகர்களோடு மாணவர்களும் கலந்து பாடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

“அனைவருக்கும் வணக்கம். ஒரு நல்ல காரியத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வந்துள்ள அனைவருக்கும் நன்றி…” என்று ஆரம்பித்த அந்தப் பெண் ஒவ்வொரு பாடகர்களையும் பாடல்களையும் அறிமுகப்படுத்த, சற்று சுவாரசியமாகவே போனது நிகழ்ச்சி. ஆனால் அவ்வப்போது கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

“அடுத்து பாட வருவது, எங்களின் சின்னக் குயில் சித்ரா, மஹாவேங்கடலக்ஷ்மி…” என்று அறிவித்ததும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.

அந்தப் பெண்ணுக்கு எக்கச்சக்க ரசிகர்கள்போல என்று நினைத்துக் கொண்டான் ஷ்யாம். அருகில் அமர்ந்திருந்த விஜய்யை கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் தெரிந்திருக்கும், அவனது முகத்தில் இருந்த சந்தோஷமும், விகசிப்பும்!

மகாவுக்குப் பாடவெல்லாம் தெரியுமா என்ற வியப்பில் விஜய்யின் புருவம் உயர்ந்தது!

மேடைக்கு அவள் வந்தாள்… சேலை உடுத்திய பூஞ்சோலையாக!

விஜய் கண்கொட்டாமல் பார்க்க… ஷ்யாமும் அப்படியே! என்ன உணர்வு மட்டுமே வேறுபாடு!

ஷ்யாம் அதிர்ந்தான்… அவளைக் கண்டதில்!

விஜய் அதிர்ந்தான்… அவளை அவ்வளவு அழகாக சேலையில் கண்டதில்!

ஷ்யாமுக்கு அவளைப் பார்க்கும்போது என்ன உணர்கிறான் என்பதை அவனாலேயே உணர முடியவில்லை. மூச்சை இழுத்து விட்டவன் நிமிர்ந்து கைக்கட்டிக் கொண்டு அமர்ந்தான், கால்மேல் காலிட்டு!

பார்வை மொத்தமும் அவள்மேல் மட்டுமே!

அதிலும் முதல் வரிசையில் சட்டமாக அமர்ந்திருந்த இவனைக் கண்டு அதிர்ந்த அவளது முகத்தைக் கண்டபிறகு, அவனது சுவாரசியம் இன்னமும் அதிகமானது.

ஜீன்ஸிலும் ப்லாஸோவிலும் தான் அவளைக் கடந்த இரண்டு முறையாகக் கண்டிருந்தான். சேலையில் அவன் அப்போதுதான் கண்டான். வெகுபாந்தமாக, அடக்கமாக இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதைப் போல அப்பாவி தோற்றத்துடன் அவள் நின்றிருந்த தோரணையைப் பார்த்தபோது அவனால் உண்மையில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘உலகமகா நடிப்புடா ஏடுகொன்ட்ல வாடா…’

எளிமையான காட்டன் புடவை. இடது கையில் ஒரு கருப்பு ஸ்ட்ராப் ரிஸ்ட் வாட்ச்… வலது கையில் ஒரு குட்டி ப்ரேஸ்லெட்… கழுத்தில் ஒரு குட்டியூண்டு செயின்… காதில் குட்டியூண்டு தொங்கட்டானுடன் கூடிய தோடு. உண்மையில் அப்போதுதான் அவளை ஆழ்ந்து பார்த்தான். டிபிக்கல் டாக்டரை போலத்தான் தோன்றினாள்.

‘மோசமில்லை… பார்க்கலாம்’

இசை ஆரம்பித்தது! ஒரு பக்கம் கோரஸ் ஆரம்பித்தது!

‘சலசலசலசல சோலைக் கிளியே சோடியை தேடிச் செல்

சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க’ என்று மற்றவர் ஆரம்பிக்க, இவள் என்ன பாடப் போகிறாள் என்று சற்று அலட்சியமாகத்தான் அமர்ந்திருந்தான்.

அதோடு அவளை அமர்ந்திருந்த வாக்கில் வம்பிழுக்க, அவளைப் பார்த்துக் கண்ணை வேறு சிமிட்ட, அவள் இன்னமும் அதிர்ந்து போனாள். முகம் எக்கச்சக்கமாகச் சிவந்து, அவளது கைகள் நடுங்குவதை இங்கு அவன் உணர்ந்தான். மேடையில் அவளிருக்கும்போது கண்டிப்பாக இது போன்ற செயல்கள் அவளைப் பதட்டப் படுத்தும், அவளது கவனம் சிதறும். அதைப் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருந்தது ஷ்யாமுக்கு. அவள்மேல் கோபம் இருக்கிறதுதான்… ஆனால் இப்படியெல்லாம் அவளைக் கலாய்ப்பது அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.

அவனை ஒரு கணம் தீர்க்கமாகப் பார்த்தவள், கண்களை மூடிக்கொண்டு அந்தப் பாடலின் இசையோடு உறைந்தாள்…

‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ…’ என்றபடி கண்களைத் திறந்து பார்க்க, அவளது அந்தத் தேன்குரலில் ஷ்யாம் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.

அவ்வளவு இனிமையான குரல், அவளுக்கு! இறைவனுக்குக் குடம் குடமாகத் தேனை அபிஷேகம் செய்திருந்தால் கூட, இந்தக் குரலினிமையும் ஆளுமையும், இசைபற்றிய அறிவும் இருக்குமா என்பது அவனுக்குச் சந்தேகமே!

பிசிறே இல்லாமல் அவள் பாடினாள். ஷ்யாமுக்கு நினைவு வந்தது. முதன் முதலில் அவளது குரலைக் கேட்டு ஐஸ்க்ரீம் என்று தான் நினைத்தது. இப்போது கரைந்து கொண்டிருந்தது அவன்!

அவனையும் அறியாமல் அவனது இமைகள் இரண்டும் சேர்ந்தன!

கைகட்டி கால்மேல் காலிட்டுக் கொண்டு கண்களை மூடி ரசிப்பவனைப் புரியாமல் பார்த்தபடி அவள் தொடர்ந்தாள்.

‘உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்

தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது

மூங்கில் காடென்று ஆயினள் மாது’

அவளது குரல், அவனை அவனறியாமல் ஆற்றுப்படுத்தியது. என்ன தேவை என்று அறியாமல் அலைந்து கொண்டிருந்தவனை, என்னைக் கவனி என்று கூறி அமைதிப்படுத்தியது. வேறெதுவும் வேண்டாம்… இந்தக் குரலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமென்று எண்ண வைத்தது.

வாழ்க்கையில் முதல் முறையாகக் காமம் இல்லாமல் காதலும் இல்லாமல் ஈர்ப்பும் கூட இல்லாமல் வெறுத்துக் கொண்டிருந்த பெண்ணை விரும்பிப் பார்த்தான் ஷ்யாம்!

யாரைக் கண்டால் கொதித்துக் கொட்டி விடக் காத்திருந்தானோ, அவள் அவனை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தாள், ஆண்டு கொண்டிருந்தாள், அவளது குரலால்!

அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையின் அர்த்தத்தை அவளால் சத்தியமாக உணர முடியவில்லை. ஆனால் அவனைத் தவிர வேறு யாரையும் அவளால் பார்க்க முடியவில்லை. அவனது பார்வை கருந்துளையாக அவளை அவனுக்குள்ளே ஈர்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

அவள் அதை விரும்பவில்லை. அவனை அவளுக்கு நிச்சயமாகப் பிடிக்கவில்லை. அவன்மேல் நல்ல எண்ணம் கூட இல்லை. அவனோடு இரண்டு நிமிடம் நிற்கக் கூட முடியாது என்பதில் அவள் மிகவும் உறுதியாகத்தான் இருந்தாள். ஆனால் அவளது பார்வையை அவனது கண்களை விடுத்து வேறெங்கும் கடத்தவே முடியவில்லை!

‘ஒரு மின்சாரப் பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டுகொண்டேன்

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்

என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நனவா

என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்’

இப்போது தாய்மொழியை மறந்து விட்டு அமர்ந்திருந்தது ஷ்யாம்!

சந்தேகமே இல்லாமல் முழுவதுமாக அவனது ஆத்மாவை கடத்தி போயிருந்தது அவளது குரல்!