Veenaiyadi nee enakku 9

Veenaiyadi nee enakku 9

9

“இது?!” இந்தக் குரல், ‘மிர்ச்சி’ என்றழைக்கும் இந்தக் குரல், தனக்கு மிகவும் பரிச்சயமானது அல்லவா!

இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போல இருக்க, சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

‘அவன்’

அவன் அமர்ந்திருந்தான். அன்று நிகழ்ச்சியில் கண்டதைப் போல, அமர்த்தலாக, கம்பீரமாக, கால்மேல் காலிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். நைட் பேன்ட் மற்றும் டிஷர்ட்டில்!

இடது கையில் அன்றைய ஆங்கிலத் தினசரி!

வலது கையில் காப்பிக் கப்!

நிதானமாகக் காபியை ஒவ்வொரு மிடறாக விழுங்கிக் கொண்டு, பார்வையைத் தினசரியில் பதித்து இருந்தான்.

மருந்துக்கும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் அவன் சொன்ன ‘குட்மார்னிங்’ உண்மை!

மனம் அதீதமாக அதிர்ந்தது. இவன் எப்படி இங்கு? இவன் தன்னைக் கடத்தக் கூடுமா? ஏன்? எப்படி? எதற்காக?

அப்படியென்றால் இவன்?

மனம் ஒரே நொடியில் நூறாயிரம் கேள்விகளை எழுப்பி, அதற்குப் பதில் காண முடியாமல், பல நூறு கற்பனைகளைக் கண்டு, அதிலும் போக முடியாமல் தடுமாறி நின்றது.

அவளையும் அறியாமல் உடலில் ஒருவிதமான நடுக்க ரேகை பரவியது. அந்த ரேகை, அடிவயிற்றைத் தொட்டு, மேல்நோக்கி நகர்ந்து, தொண்டைக் குழியை அடைத்தது. கையிலிருந்த காப்பிக் கப்பை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“உட்காருங்க மிர்ச்சி…” செய்தித்தாளிலிருந்து கண்களை எடுக்காமல் அவன் கூற, அவனை உறுத்து விழித்தாள். விட்டால் அவனை எரித்து விடும் ஆத்திரம் கிளம்பியது.

சுற்றுப்புறம் குறித்தான லேசான, குட்டி, மினி ஈர்ப்பெல்லாம் அப்போது அவளது நினைவுக்கு வரவில்லை. தன்னை இந்த நிலையில் நிறுத்தியிருப்பது அவன் என்ற கோபம் மட்டும் தான்!

“சோ… யூ ஆர் ஷ்யாம்?” காப்பிக் கப்பை அங்கிருந்த டீபாயில் வைத்தவள், நிமிர்ந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.

“ம்ம்ம்… ஸ்மார்ட்…” நிமிர்ந்து அவளைப் பார்த்தவாறு அவனது காபியை ஒரு மடக்கு விழுங்கியவன், புருவத்தை உயர்த்திக் கொண்டு, லேசான புன்னகையோடு கூற, அவளது அவளது மனதுக்குள் தீப்பற்றியது. அவனது அந்தத் திமிரைக் கண்ட கோபத்தீ.

“ஏன்?”

“நீங்கத் தான் ரொம்ப ஸ்மார்ட்டாச்சே மிர்ச்சி…” என்றவன், அவளது காபியை அவளை நோக்கித் தள்ளி வைக்க, அதையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தவள், எரிச்சலாக,

“பணத்தை வசூலிக்க எவ்வளவோ மெத்தட்ஸ் இருக்கு…” சொல்லும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.

“ம்ம்ம்… ஸ்மார்ட்டர்… பட் என்னைப் பற்றி எல்லோருக்குமே நல்லா தெரியும்… இட் இஸ் நாட் மை மிஸ்டேக்…” நிமிர்ந்து அமர்ந்து அவளைப் அவன் பார்த்த பார்வையில் லேசான மெச்சுதல் தெரிந்தது.

ஆக இவளுக்கும் அத்தனையும் தெரிந்து இருக்கிறது. தான் வலிந்து எதையும் புரிய வைக்கத் தேவையில்லை என்ற நிம்மதி அவனது மனதுக்குள் படர்ந்தாலும், அவள் புத்திசாலி என்ற எண்ணம் சற்று நெருடியது. அவளது புத்திசாலித்தனம் எதுவரை நீளும்?

மஹாவால் அவனது அந்தப் பதிலை ஜீரணிக்க முடியவில்லை. தன்னை நினைத்துத் தனது குடும்பத்தினர் எவ்வளவு தவிப்பார்கள். அதைக் காட்டிலும், பெண்ணான தன்னை இவன் இப்படிக் கடத்தியிருப்பது தன்னுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதா?

பார்வையைச் சுற்றிலும் படர விட்டாள். இப்போது அவளது கண்கள், சுற்றுப்புறத்தின் அழகைக் காணவில்லை. இங்கிருந்து தப்பிக்க முடியுமா என்று ஸ்கான் செய்து கொண்டிருந்தது.

அவளது பார்வையைக் கவனித்தவன்,

“யூ ஆர் ஃப்ரீ மிர்ச்சி… பட் யூ கான்ட் மூவ் அவுட் ஆப் மை சைட்…” என்று மெல்லிய புன்னகையோடு கூற, அவனைச் சற்று அலட்சியமாகப் பார்க்கத் தோன்றியது அவளுக்கு.

“என்ன? சம்வேர் இன் கர்நாடகா… அவ்வளவுதானே… மோஸ்ட் ப்ராபப்லி கூர்க்… ரைட்?” என்று அதே அலட்சியத்தோடு அவள் கேட்டுவிட, அவனது புன்னகை விரிந்தது.

“ஸ்மார்ட்டஸ்ட்…” கண்களை விரித்து அவளைப் பாராட்டுதலாகப் பார்த்தபடி கூறியவன், “ஐ அப்ரிஷியேட் மிர்ச்சி… பட் யுவார் ராங்…” என்று, எழுந்து அவளை நோக்கி வர, அவள் சற்றும் பயம் இல்லாமல் அதே இடத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு நகரத் தோன்றவில்லை.

அப்படியென்றால் இது என்ன இடமென்று மனம் வேகமாகக் கணக்குப் போட்டது… ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. இருக்கின்ற கோபத்துக்குச் சட்டையைப் பிடித்து உலுக்கும் ஆத்திரம் வந்தது.

“கொடுத்த பணத்துக்காகப் பொண்ணுங்களைக் கடத்தறதுதான் உங்க பிசினஸா?” கூர்மையான பார்வையோடு அவள் கேட்க,

“ஃபர்ஸ்ட் கரெக்ஷன்… நான் கடத்தலை… இதுக்குப் பேர் கஸ்டடி… செக்கன்ட் கரெக்ஷன்… இதுவரைக்கும் பொண்ணுங்களை கஸ்டடி எடுத்ததில்லை…” என்று இடைவெளி விட்டவன், “நீங்க என்ன நினைக்கறீங்க மிரப்பக்கா? கார்த்திக்காக மஹாவேங்கடலக்ஷ்மியை கஸ்டடி எடுத்து இருக்கேன்னா?” என்று அவன் சப்தம் இல்லாமல் சிரிக்க, அவளது மனம் லேசாகத் திகிலடைந்தது.

“பின்ன?”

ஒரெட்டு பின்னே வைத்தாள். அவன் ஓரடி முன்னே வந்தான்.

“மஹாவேங்கடலக்ஷ்மிக்காக கார்த்தியை கஸ்டடி எடுத்து இருக்கேன் மிர்ச்சி…” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவன், “இன் ஷார்ட்… மிரப்பக்காயை ஊறுகா போடணும்…” என்று கிண்டலாகச் சிரிக்க,

அவனது அந்தச் சிரிப்பு, உண்மையில் அவளுக்குள் கிலியை ஏற்படுத்தியது. இவனென்ன ராட்சசனா? சற்றும் மனிதத் தன்மையே இல்லாதது போலல்லவா பேசுகிறான்.

“லூசு மாதிரி பேசாத… போலீஸ் கிட்ட நீ மாட்டினா கம்பிதான் எண்ணனும்…” என்று தைரியத்தைக் கூட்டிக்கொண்டு அவள் எச்சரிக்க,

“ஓ போலீஸ்… யார் ம்மா போலீஸ்? இந்தத் திருடன் போலீஸ் விளையாடுவாங்களே… அவங்களா? போக முடிஞ்சா போய்த்தான் பாரேன்…” குரலில் அவ்வளவு எள்ளல். அத்தனை திமிர்.

அப்படித்தான் அவள் நினைத்தாள். ஆனால் அவனது இயல்பே அது தானென்பது அவள் அறியவில்லை. அறிந்தாலும் உபயோகம் இல்லை.

“திஸ் இஸ் டூ மச்… ஏன் இப்படிப் பண்றே?”

“சிம்பிள்…” என்றவன், “ஒரு பொண்ணு கொஞ்ச நாள் முன்னாடி என்னைப் பொறுக்கின்னு சொன்னா…” என்று அவன் நிறுத்தி, “அதே பொண்ணு என் மேல செருப்பை விட்டெறிஞ்சா…” என்று அழுத்தமாக அவன் நிறுத்த, அவளுக்குப் பகீரென்றது. அவள் எறிந்தது செருப்பா என்பதைக் கூட அப்போது அவள் கவனிக்கவில்லை. அவன்மேல் எறிவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது. அதனால் கைக்குக் கிடைத்ததை அப்போது எடுத்து எறிந்தாள்.

அது இந்தளவுக்கு விளைவை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லையே. அவள் அப்போது செய்தது தவறுதான் ஆனால் அதை எந்தக் காரணத்தின் முன்னிட்டும் நியாயப்படுத்தமாட்டாள். ஆனால் அதை இவ்வளவு நாளாக மனதில் வைத்துப் பழி தீர்க்க ஒருவன் காத்திருப்பான் என்பதை அவள் நினைக்கவே இல்லையே!

“அதனால…” வார்த்தை வெளிவரத் தயங்கியது.

“ம்ம்ம்… அதனால… எனக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?”

“நஷ்டமா?” அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“ம்ம்ம்… எந்தப் பொண்ணைத் தொட்டாலும் நீ சொன்ன அந்தப் பொறுக்கித் தான் காதுல கேக்குது மிர்ச்சி…” என்று வெகு இயல்பாக, காலையில் நான் இட்லி சாப்பிட்டேன் என்பதைப் போல அவன் கூற, அவள் தான் உள்ளுக்குள் மிரண்டு போனாள்.

ஆனால் அதைக் காட்டிக்கொண்டால் அவள் மஹா அல்லவே!

அவன் வாயாலேயே எவ்வளவு சாதாரணமாகப் பெண்களுடனான தொடர்பைப் பற்றிப் பேசுகிறான்? அவளுக்கு உள்ளுக்குள் அருவருப்பாக இருந்தது, அவனைப் பார்க்கும் போதே. ஆனால் அன்று ஆடிட்டோரியத்தில் அவனது பார்வை அவளுக்குச் சொன்ன செய்தி வேறாயிற்றே!

அது உண்மையா? இது உண்மையா?

எதுவாக இருந்தாலும் இவன் ராட்சசன். பார்வை சொன்ன செய்தியை மொழிபெயர்க்கும் ஆசை அதோடு விட்டுப்போயிற்று. அவனைப் பார்க்கையில் வெறுப்புதான் மிஞ்சியது.

“லுக்… அன்னைக்கு நான் எறிஞ்சது செருப்புன்னு கூடத் தெரியலை… அந்தக் கோபத்துல உன் மேல தூக்கிப் போட்டேன்… இட் வாஸ் நாட் இன்டன்ஷனல்…” அவனது வார்த்தைகளையே அவளும் திருப்பிக் கூற,

“இதையே தானே நானும் ஃபர்ஸ்ட் டைம் சொன்னேன்…”

“இல்ல… நீ தப்பு பண்ணின… அதனால தான் நான் அப்படிப் பண்ணேன்… பண்றதை நீ பண்ணிட்டு என்னைச் சொல்வியா?” சற்று இறங்கிய குரலில் தான் கேட்டாள். அதைக் கேட்டவன் சிரித்தான்.

“இப்பவும் உனக்கு அந்தத் திமிர் குறையலை…” கேலிக்குரலில் அவன் கூற, அவளது இறங்கிய குரல் மீண்டும் ஏறியது.

“எனக்குத் தப்பை தப்புன்னு தான் சொல்லத் தெரியும்… ரைட்டுன்னு சொல்லத் தெரியாது ஷ்யாம்… அது உனக்குத் திமிரா தெரிஞ்சா நான் என்ன பண்ண?” நிமிர்ந்து அவள் கேட்க,

“இந்தத் திமிர்க்காகத் தானே உன்னோட விளையாடிப் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு…” என்று ஒரு மாதிரியான குரலில் அவன் கூற, அவளுடைய மனதுக்குள் அபாய ஒலி!

“தப்பு செய்ற ஷ்யாம்…”

“தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பே இல்ல தெரியுமா உனக்கு? அப்படித் தப்பில்லாம எனக்குத் தப்பு செய்யவும் தெரியும்… அந்தத் தப்பை சரின்னு சொல்ல வைக்கவும் தெரியும்…”

“இது ஆணவம்… அகம்பாவம்…”

“சோ வாட்?” அலட்சியமாக அவன் கேட்ட தொனி அவளது அடிவயிற்றில் அமிலத்தைக் கரைத்தது.

“இப்ப என்னதான் முடிவா சொல்ற?” அதே வெறுத்த தொனியோடு கேட்க,

“ம்ம்ம்ம்… முடிவா?” என்று சிரித்தவன், “காம்பன்ஷேஷனா அந்தப் பொண்ணையே தொட்டுப் பார்க்கலாம் தான்…” என்று நிறுத்திவிட்டு, கிண்டலாக அவளைப் பார்க்க, அவசரமாக அவள் பின்னடைந்தாள். உண்மையிலேயே இப்போது அவளுக்குப் பயமாக இருந்தது. முகம் வேர்த்து விட்டது. ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டவள்,

“உனக்கே இது வெட்கமா இல்லையா?” எரிச்சலாக அவள் கேட்க,

“ஹலோ… வெய்ட்…” என்று அவளைக் கைகாட்டி நிறுத்தியவன், “அந்தப் பிகர் ஒன்னும் பெரிய கிரேட் பிகர் கிடையாது மிர்ச்சி… சரியான மொக்கை…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கூற, அந்தச் சூழ்நிலையிலும் அவளுக்கு உள்ளுக்குள் சுறுசுறுவெனக் கோபம் கிளம்பியது. தனது உருவம் எப்படியாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதை விமர்சனம் செய்ய இவன் யார்?

“ஹலோ…” என்று அவனைக் கைக்காட்டி அவனை நிறுத்தச் சொல்ல,

“ஏன் மிர்ச்சி? உன்னை மொக்கை பிகர்ன்னு சொன்னதால கோபம் வந்துடுச்சா?”

“திஸ் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்… அதைப் பத்தியெல்லாம் என் புருஷன் தான் கவலைப்படனும்… உனக்கெதுக்கு அந்தக் கவலை?”

“நான் கவலைப்பட்டேயாகனும்… நீ நல்ல பிகரா இருந்திருந்தா, எனக்கு நீ கம்பெனி கொடுன்னு சொல்லிருப்பேன்… இப்ப நான் என்ன பண்ணறது?” பாவம்போலக் கேலிக்குரலில் அவன் கேட்க, அவளது கோபம் தலைக்கேறியது.

“ச்சீ… நீயெல்லாம் மனுஷனா?”

அவளது குரலிலிருந்த வெறுப்பு மேலும் அவனை உசுப்பேற்றியது.

“நான் மனுஷனா இருக்கறதால தான் இன்னமும் என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க மிர்ச்சி…” புன்னகை மாறாமல் அவன் கேலியாக அவன் கூற,

“இல்லைன்னா மட்டும் உன்னால என்ன செய்ய முடியும்? யூ ஆர் ஜஸ்ட் எ ஷிட்…” என்று வெறுப்பாக வார்த்தையை விட்டு விட்டு, அவள் திரும்ப எத்தனிக்க, அவளது கையை இறுக்கமாக, வலுவாகப் பற்றித் திருப்பினான் ஷ்யாம்.

“மறுபடியும் என்கிட்டே தப்பா வார்த்தையை விடற மிர்ச்சி… இது உனக்கு நல்லதில்ல…”

“நீ பண்றது மட்டும் சரியா? இது எவ்வளவு அநியாயம், கேவலம்ன்னு உனக்கே தெரியலையா?”

“ம்ஹூம்… தெரியல… தெரியாது…” என்றவன், அவளது கையை முறுக்கித் தன்னருகே கொண்டு வந்து, “இது எனக்கு டபுள் ஷாட்… என் பணமும் திரும்பி என் கைக்கு வரணும்… உனக்கும் ஒரு லெசன் கத்துக் கொடுக்கணும்… அதுதான் என்னுடைய குறிக்கோள்… மற்றபடி யூ ஆர் நத்திங்… உன் மேல எனக்குச் சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல மிர்ச்சி… உலக அழகிங்க கூட என் காலடில இருக்காங்க… நீ எம்மாத்திரம்?” வெகு அழுத்தமாகக் கூறியவன் அவளது கையை இன்னமும் முறுக்க, அவளுக்கு வலித்தது, கைகள் மட்டுமல்ல… அவனது வார்த்தைகளால் அவளது மனமும்.

அவனது முழு ஆணவமும், திமிரும் வெளிப்பட்ட அந்தப் பேச்சு அவளுக்கு மிகுந்த வெறுப்பைத் தர, ‘ச்சீ’ என்று வெறுப்பாக அவனைப் பார்த்து அவனை விட்டு விலக முயல,

“நீ இப்படிப் பார்க்கும்போது தான் உன்னை இன்னமும் ஹர்ட் பண்ணிப் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு… நான் உன்னை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னா இப்படிப் பார்க்காதே…” என்று அவளைத் தன்னோடு இன்னமும் நெருக்கமாக்கி கையை மேலும் இறுக்க, அவளால் வலி தாள முடியவில்லை. முகம் கசங்கியது.

அதோடு அவனோடு அத்தனை நெருக்கமாக நிற்பதில் உள்ள அவமானம் வேறு!

“விடு என்னை…” என்று அவனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள அவள் முயல, அவனுக்கு அது சுவாரசியமான விளையாட்டாகப் பட்டது.

“வலிக்குதா மிர்ச்சி?”

கிசுகிசுப்பாக அவன் கேட்க, சட்டென நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அதில் விரவியிருந்த கேலி அவளை ஏதோ ஒரு வகையில் நிமிரச் செய்தது.

“நீ எவ்வளவு வேண்ணா என்னை ஹர்ட் பண்ண பார்க்கலாம்… ஆனா அது என்னைப் பாதிக்காது… பிகாஸ் யூ ஆர் எ பர்வர்ட். ரொம்பக் கேவலமான ஜந்து… எனக்கு நீ வலியைக் கொடுக்கணும்னு நினைக்க நினைக்க, நான் இன்னமும் ஸ்ட்ராங்கா தான் ஆவேன்… நெவர் எக்ஸ்பெக்ட் மீ டூ ப்ரேக்… ஐ ஆம் நாட் எ வீக்கர் சப்ஜெக்ட்… நான் எப்பவும் நான் தான்… வெரி ஸ்ட்ராங்… வெரி வெரி வெரி ஸ்ட்ராங்…”

அழுத்தமான, மிக அழுத்தமான, ஆழமான குரலில் அவள் கூறிய வார்த்தைகள், அவனுள் மிகுந்த சுவாரசியத்தை விதைத்தது.

“நோ… நாட் அட் ஆல்… யூ வில் ப்ரேக்… நீ உடைஞ்சு போய் அழறதை நான் பார்ப்பேன்… திஸ் இஸ் எ சேலஞ்ச்…” அதே கிசுகிசுப்பான குரலில் அவன் கூற, அவளது சுயமரியாதையை அது தூண்டி விட்டது.

“நெவர்…” வெகு அழுத்தமான குரலில் கூறியவள், “ஆனா நீ அப்படி அழறதை நான் பார்க்கனும்ன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்…”

அவளது உறுதியைப் பார்த்துச் சிரித்தவன்,

“நெவர்…”

“நோ… இட் வில் ஹேப்பன்…”

“கண்டிப்பா கிடையாது…” அவ்வளவு உறுதியாக அவன் கூற,

“கர்மா இஸ் எ பூமராங் ஷ்யாம்…” என்று மெல்லிதாகச் சிரித்தவள், அவனைப் பேச விடாமல்,

“ஒரு நாள் நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ… இன்னைக்கு நீ ஆணவத்தோட, உன்னோட பணபலத்தால உலகமே உன்னோட காலடில இருக்கறதா நினைக்கலாம்… அப்படியும் இருக்கலாம்… ஆனா ஒரு நாள்… ஒரு நாள்… ஃபீல் பண்ணுவ… அன்னைக்கு இந்த உலகமே உனக்கு வெறுத்துப் போகும்… ஏன் நாம உயிரோட இருக்கறோம்ன்னு உன்னை நீயே வெறுக்கற சூழ்நிலை வரும்… பொண்ணுங்களை இவ்வளவு கேவலமா நினைக்கற நீயே உன்னோட குப்பையான கொள்கைகளை மாத்திக்குவ… உண்மையான அன்புக்காகவும் பாசத்துக்காகவும் ஏங்குவ… அப்ப உன்னை விட்டு எல்லாமே போயிருக்கும்…”

“சாபம் கொடுக்கறியா மிர்ச்சி!” அவனுக்கு அவளது உறுதியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது.

“இல்ல… இது என்னோட பிரார்த்தனை…”

“ம்ம்ம்… ஆல் தி பெஸ்ட்…” என்றவன், “உனக்கும் எனக்கும் இந்த ஒரு விஷயத்துல ஒத்துப் போகுது…” என்றவனைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தாள். இன்னமும் தன்னுடைய கை அவனுடையதில் இருந்தாலும், சற்றுத் தள்ளிதான் நின்றுகொண்டிருந்தான்.

“சவால்களைச் சந்திக்கறதுல…” என்றவன், “என்னோட ஆசை ஒன்னே ஒண்ணுதான்… உன்னோட கண்ணீர்… அன்ட் ஐ நெவர் கிவ் அப்…”

அப்போதே முடிவு செய்து கொண்டாள், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், இவன் முன் மட்டுமல்ல… எந்த இடத்திலும் தான் அழவே கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். தன்னுடைய அழுகையைப் பார்ப்பதும், தான் உடைவதைப் பார்ப்பதும் தான் ஒருவனுக்கு வெற்றி என்றால், அது தான் இறக்கும் வரை நடக்காது என்று மனதுக்குள் சங்கல்பம் செய்து கொண்டவளை பார்த்து விதி சிரித்தது.

அவளது கண்ணீர் இவனுக்காக மட்டுமே!

இவனது கண்ணீர் அவளுக்காக மட்டுமே!

இதை அறியாத இருவரும் எதிர் எதிராக நின்றாலும், ஒரே நேர் கோட்டில் வரும்போது?

இவளது சாபம் அவனுக்குப் பலிக்க, அவனது ஆசை இவளிடம் பலிக்க, காலமாடும் கண்ணாமூச்சிக்குப் பெயர் விதியன்றி வேறேது!

error: Content is protected !!