vkv 19

vkv 19

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 19

குந்தவியை அன்றைக்கு முழுவதும் ‘ICU’ வில் வைத்திருந்தார்கள். பிரபாகரன் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தார் மனைவியை. ஆரம்பத்தில் லேசாக மூச்சுத் திணறல் இருந்தபோதும், பின்னர் நிலைமை சீரானது.

மாறனும், தமிழும் ‘ICU’ விற்கு வெளியே அமர்ந்திருக்க, சுதாகரனும், மகேஷும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். லேசாக கண் விழித்தார் குந்தவி. அவர் கைகளைப் பற்றிக் கொண்ட பிரபாகரன்,

டாலி, ஒன்னுமில்லைடா. பல்ஸ் நார்மலா இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு ‘ECG’ எடுத்து பாத்துட்டு ரூமுக்கு ஷிஃப்ட் ஆகிரலாம், கே.” என்றார். அந்த ஒரு பொழுதுக்குள் பத்து வருட மூப்புத் தெரிந்தது பிரபாகரன் முகத்தில். மென்மையாகச் சிரித்தார் குந்தவி.

எனக்கு ஒன்னும் ஆகாது ப்ரபா, நான் மென்டலி ஃபிட் ஆத்தான் இருக்கேன். நீங்க ரொம்பவே வொர்ரி பண்ணிக்காதீங்க.” சொல்லி முடித்தவரின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார் பிரபாகரன்.

ப்ரபா, சுதா எங்க? நான் பாக்கனும். வரச்சொல்லுங்க.” குந்தவி சொன்னதும், ட்யூட்டியில் இருந்த நர்ஸிடம் தகவல் சொல்ல, உள்ளே நுழைந்தான் சுதாகரன்.

சுதா, ஸாரிப்பா. உன்னோட லைஃப்லயே ரொம்ப சந்தோஷமான, மறக்க முடியாத ஒரு நாள். அதை அம்மா ஸ்பொயில் பண்ணிட்டேன்.” குந்தவியின் கைகளை தன் கைகளுக்குள் அழுத்திப் பிடித்தவன் அதில் முகம் புதைத்துக் கொண்டான். சற்று நேரத்தில் சுதாகரனின் உடல் அழுகையில் குலுங்கியது.

சுதா! ஏன் கண்ணா அழுற? என்னாச்சுப்பா?” குந்தவி சற்றே பதற,

சுதா!” என்றார் பிரபாகரன் அழுத்தமான குரலில்.

இது ‘ICU’, அம்மா இப்போ டென்ஷன் ஆகுறது அவ்வளவு நல்லதில்லை. நீயே இப்பிடி பிஹேவ் பண்ணலாமா?” உணர்ச்சிகளைக் கொட்ட இது நேரமல்ல, என்ற செய்தி அந்தக் குரலில் மறைமுகமாக இருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சுதாகரன்.

அம்மா, மகேஷ் உங்களுக்கு ஒரு நல்ல மகனா இருக்கிற அளவு, நான் ஒரு நல்ல மகனா நடந்துக்கலையோன்னு எனக்கு கில்ட்டியா இருக்கும்மா. உங்களுக்காக நான் எப்பவுமே பேசினதில்லை எங்கிறதால, உங்க மேலே எனக்கு பாசம் இல்லைன்னு அர்த்தமில்லைம்மா.”

என்ன சுதா பேசுற நீ? அம்மா எப்போ அப்பிடிச் சொல்லி இருக்கேன்?”

நீங்க என்னைக்குமே அப்பிடிச் சொல்ல மாட்டீங்கம்மா. இது என்னோட உறுத்தல். நான் உங்க கூட இருந்ததை விட, பாட்டி கூட இருந்தது தான் அதிகம். அதனாலேயோ என்னவோ, அவங்களுக்கு எதிரா என்னால பேச முடியலை. ஆனா அவங்க பண்ணுறதெல்லாம் தப்புன்னு எனக்கு நல்லாவே புரியுது. ஆனா மகேஷ் மாதிரி என்னால அவங்களை சட்டுன்னு எதிர்க்க முடியலைம்மா.” கோர்வையாக சுதாகரன் சொல்லி முடிக்க, அவன் கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தார் குந்தவி.

எம் பையனை எனக்குத் தெரியும் சுதா. இதெல்லாம் நீ சொல்லித்தான் நான் புரிஞ்சுக்கனுமா? உமா எங்கப்பா? வரச்சொல்லு, நான் அவளைப் பாக்கணும்.”

மது வீட்டுக்கு போயிட்டாம்மா. அத்தைக்கு ஃபோன் பண்ணி அனுப்பச் சொல்லுறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. மது வந்ததும் நான் கூட்டிக்கிட்டு வர்றேன்.” சொல்லிவிட்டு சுதா வெளியேற லேசாகக் கண்ணயர்ந்தார் குந்தவி. வெளியே வந்த சுதாகரன் நேராக தமிழிடம் சென்றான்.

அம்மா எப்பிடி இருக்காங்க சுதா?” தமிழின் பக்கத்தில் அமர்ந்திருந்த இளமாறன் அவசரமாகக் கேட்க,

பேசினாங்க மாமா, இனி அவ்வளவு பிரச்சினை இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். மதுவைப் பாக்கனும்னு சொன்னாங்க.” சொன்னவன், தமிழைப் பார்க்க,

வரச் சொல்லுறேன்பா.” என்றார் தமிழ். ஃபோனை எடுத்து வீட்டுக்கு அழைத்தவர்,

ஆரா, உமாவை ஹாஸ்பிடல் வரைக்கும் கொஞ்சம் வரச் சொல்லும்மா. குந்தவி பாக்கனும்னு சொல்லுறா.” அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, பதட்டத்தில் தமிழ் எழுந்து விட்டார்.

என்னம்மா சொல்லுற? உமா இங்க இல்லையே. நல்லா பாரு ஆரா, மொட்டை மாடியில இருக்கப் போறா. எல்லா இடத்திலேயும் நல்லா பாரும்மா.” சொன்னவர் பதட்டமாக நிற்க,

என்னாச்சு தமிழ்?” என்றார் இளமாறன்.

உமா வீட்டுல இல்லையாம், ஹாஸ்பிடல்ல இருக்கான்னு ஆரா நினைச்சுக்கிட்டு இருந்தாப்பலயாம். அதான், நல்லா எல்லா இடத்திலையும் தேடிப் பாக்கச் சொன்னேன்.” தமிழின் குரலில் பதட்டம் இருந்தது.

வீட்டுல தான் எங்கேயாவது இருக்கும். தோட்டத்தில பாக்கச் சொல்லு. அங்கேதான் எங்கேயாவது மரத்துமேல உக்காந்து பாட்டு கேட்டுக்கிட்டு  இருப்பா.” சமாதானம் சொன்னார் இளமாறன். பேசிக் கொண்டிருக்கும் போதே தமிழின் ஃபோன் சிணுங்கியது. எடுத்துப் பேசியவர் பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தார்.

என்ன சொல்லுற ஆரா, நல்லா எல்லா இடத்திலயும் பாத்தியா?” தமிழின் பதிலில் அங்கு இருந்த அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. சட்டென்று இன்னொரு நம்பருக்கு தொடர்பு கொண்டவர் அங்கேயும் விசாரித்தார். அது உமாவின் ஹாஸ்டல் நம்பர். சுதாகரன் உமாவின் நம்பருக்கு தொடர்பு கொள்ள, அது ஸ்விச்ட் ஆஃப் என்றது

இந்த விஷயம் குந்தவி காதுக்கு போக வேணாம் தமிழ். நம்ம முதல்ல கொஞ்சம் அக்கம் பக்கம் தேடிப் பாப்போம். இன்னைக்கு நடந்த சம்பவங்கள் நம்மையே புரட்டிப் போட்டப்போ, பாவம் அவ சின்னப் பொண்ணு, என்ன பண்ணுவா? கோபத்துல எங்கேயாவது போய் உக்காந்திருப்பா. கண்டுபிடிச்சிரலாம். கவலைப்படாதே.” மாறன் சொல்லி முடிக்க, சுதாவோடு தமிழ் சேர்ந்து கொள்ள, மகேஷோடு இணைந்து கொண்டார் இளமாறன்.

அன்றைய மாலைப் பொழுது முழுவதும் தேடலிலேயே கழிய, எல்லோருக்கும் இப்போது லேசாக பயம் கிளம்பியது. ஆராதனாவும், தமிழரசியும் மாறி மாறி ஃபோன் பண்ணிய படி இருக்க, தமிழ்ச்செல்வன் முற்றாக உடைந்து போனார். போலீசுக்கு போகவும் தமிழ் விரும்பவில்லை. நிச்சயதார்த்தத்தில் இத்தனை பிரச்சினைகள் என்றால், விரும்பத்தகாத கேள்விகள் முளைக்கும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டிருந்தார் தமிழ்.

இளமாறன் விசாலாட்சியை தொடர்பு கொண்டு நிலைமையை விபரித்திருக்க, அவருக்கு தெரிந்த நம்பிக்கையான தனியார் நிறுவனத்தின் மூலம் தேடுதலை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் மாயமாக மறைந்து போயிருந்தாள் உமா. எந்தத் தடயமும் கிடைக்கவில்லை

பசி, தாகம் மறந்து எல்லோரும் அலைந்து கொண்டிருந்தார்கள். நேரம் இரவு பத்தைத் தொட்டுக் கொண்டிருக்க தமிழ்ச்செல்வன் பைத்தியம் பிடித்தது போல ஆகிப்போனார். காரோட்டிக் கொண்டிருந்த சுதாகரனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. நிலைகுலைந்து அமர்ந்திருந்தான். ஆனாலும் அவன் காரை கடைசியாக நிறுத்திய இடத்தைப் பார்த்தபோது, தமிழ்ச்செல்வனுக்குஅத்தனை நல்லதாகப் படவில்லை.

தமிழ் இறங்குவதற்கு முன்பாக காரை விட்டிறங்கியவன், கடகடவென அபியின் வீட்டிற்குள் நுழைந்தான். தமிழுக்கு மூச்சு முட்டியது. உடனடியாக இளமாறனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி விட்டு,

சீக்கிரமா வா மாறா. சுதா இங்க என்ன ஏழரையைக் கூட்டப் போறான்னு எனக்குத் தெரியலைப்பா.” என்றவர், அவரும் இறங்கி வீட்டுகுள் ஓடினார். நடுவீட்டில் நின்று கொண்டு,

அபீஈஈஈ!” என்று குரல் கொடுத்தான் சுதாகரன். அடுத்த நிமிடமே நாராயணனும், ரஞ்சனியும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

என்னப்பா? யாரு நீ? எதுக்கு அபியை இத்தனை சத்தமாக் கூப்பிடுறே?” நாராயணன் வினவிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே நுழைந்த தமிழ்ச்செல்வன்,

சுதா! என்ன பண்ணுற நீ? எதுக்கு இப்போ இங்க வந்து சத்தம் போடுறே?” என்றார். குரலில் சொல்லவொண்ணாத வேதனை இருந்தது.

மாமா, உங்களுக்கு தெரியாது மாமா. இந்த அபி தான் மதுவை ஏதோ பண்ணி இருக்கான். இவனுக்கு மது மேலே ஒரு கண் இருந்துது. அதனால இவன் தான் ஏதோ பண்ணி இருக்கான்.” சுதாகரனின் குரலில் ஆவேசம் இருந்தது. அபி அவன் கையில் கிடைத்தால் என்ன ஆகுமோ என்ற பதட்டம் தமிழ்ச்செல்வனை பிடித்துக் கொண்டது.

தமிழ்ச்செல்வன், என்ன நடக்குது இங்கே? இந்தப் பையன் யாரு? எதுக்கு தேவையில்லாம என்னென்னவோ பேசுறாரு?” நாராயணனின் கேள்வி ரொம்பவே சூடாக வந்தது.

அதெல்லாம் ஒன்னும் இல்லை நாராயணன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. எங்க வீட்டுல ஒரு சின்னப் பிரச்சினை. அதுல சுதாகரன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு.” 

அதுக்கு எதுக்கு இங்க வந்து சத்தம் போடுறாரு? தேவையில்லாம அபியை எதுக்கு இழுக்கனும்?” நாராயணனின் குரல் கொஞ்சம் கடுப்பாகவே வந்தது.

அங்கிள், என்னாச்சு? எதுக்கு சுதாண்ணா இப்பிடி பிஹேவ் பண்ணுறாங்க?” ரஞ்சனி கேட்டதுதான் தாமதம், தமிழ்ச்செல்வன் முழுவதுமாக உடைந்து போனார். கண்கள் குளமாக,

அம்மா ரஞ்சனி, உமாவைக் காணலைம்மா. எம் பொண்ணைக் காணலைம்மா.” சொன்னவர் குலுங்கி அழ, ரஞ்சனி ஓடிவந்து தமிழின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். நிலைமையின் வீரியம் புரிந்த நாராயணன், தமிழின் மறுபக்கம் வந்து,

தமிழ்ச்செல்வன், முதல்ல உக்காருங்க. அழுறதை நிறுத்திட்டு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. நீங்க சொல்லுறதைப் பாத்தா ஏதோ விபரீதமா தெரியுது. உணர்ச்சிவசப் படாதீங்க. உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது. கடவுள் அவகூட துணையா இருப்பார். அமைதியா இருங்க.” ஒரு தகப்பனாக ஆறுதல் சொன்னாலும், நாராயணனுக்கு வயிற்றைப் பிசைந்தது

அப்போது சட்டென்று அந்த பென்ஸ் வாசலில் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினான் அபிமன்யு. அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு ருத்ர தாண்டவமே ஆடித் தீர்த்தான் சுதாகரன். பாய்ந்து வாசலுக்கு வந்தவன், அபியின் ஷேர்ட்டை கொத்தாகப் பிடித்திருந்தான். அவனை உலுக்கி எடுத்தவன்,

மது எங்கடா? எம் மது எங்கே? என்ன பண்ணின அவளை?” ஒவ்வொரு கேள்விக்கும் அபியை கசக்கிப் பிழிந்தான் சுதாகரன். தமிழ்ச்செல்வனால் சுதாகரனை அபியிடமிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை. நல்லவேளையாக மகேஷின் காரும் அப்போது வந்துவிட, மூவருமாக சேர்ந்து சுதாகரனை இழுத்துப் பிடித்தார்கள்.

இத்தனை நடந்த போதும், அபி எதுவும் வாய் திறந்து பேசவில்லை. ஒரு அதிர்ச்சியோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ பயணப்பட்டு அப்போதுதான் வீடு வந்து சேர்ந்த தோற்றம் அவனில் காணப்பட்டது.

என்னப்பா நடக்குது இங்கே? இவங்க எதுக்கு இந்நேரத்துக்கு இங்க வந்து சத்தம் போடுறாங்க?” 

அது ஒன்னுமில்லை அபி. இவங்க வீட்டுப் பொண்ணை காணலையாம். அதனால இந்தத் தம்பி இங்க வந்து…” நாராயணன் சொல்லி முடிப்பதற்குள் சுதாகரனின் குரல் பாய்ந்து வந்தது.

யோவ், நான் என்ன சொல்லுறேன், நீ என்ன உம் பையன் கிட்ட விளக்கம் குடுத்துக்கிட்டு இருக்கிறே. செவிட்டுல நாலு அப்பு அப்பினா எம் மது எங்கன்னு சொல்லிட்டுப் போறான். அதை விட்டுவிட்டு என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கே?” மரியாதை காற்றில் பறந்தது.

சுதா! என்ன பேசுறே நீ? பெரியவங்க கிட்ட இப்பிடித்தான் மரியாதை இல்லாம நடந்துக்குவேயா?” இளமாறன் சுதாவை உலுக்க,

இங்கப் பாருங்க தமிழ்ச்செல்வன். நான் உங்க முகத்துக்காகத் தான் பாக்குறேன். இல்லைன்னா இந்தப் பையன் நடந்துக்கிற மாதிரிக்கு இங்கே நடக்கிறதே வேற.” என்றார் நாராயணன்.

என்னைய்யா பண்ணி கிழிச்சிடுவே? நிக்கிறது எங்க ஊருக்குள்ள, பெரிய இவனாட்டம் சவுண்டு குடுக்கிறே.” சுதா எகிற, அவனை காரை நோக்கி இழுத்துச் சென்றான் மகேஷ்.

அபி, நீ உள்ளே போ.” நாராயணன் சொல்ல, அபியை வீட்டுக்குள் இழுத்துப் போனாள் ரஞ்சனி. திரும்பிப் பார்த்துக் கொண்டே போன நான்கு கண்களும் வாளென உரசிக் கொண்டன.

இங்கப்பாருங்க தமிழ்ச்செல்வன், மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினதாலே டை ஃபாக்டரியோட அப்ரூவலை மீள் பரிசீலனை செய்யச் சொல்லி கலெக்டருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு. அபி இந்த நேரத்தில இங்க இருந்தா ஏதாவது பிரச்சினை வரும்னு நான் தான் அவனை டெல்லிக்கு ரெண்டு நாள் முன்னாடி அனுப்பி வெச்சேன். சொல்லப் போனா இது நான் போக வேண்டிய பயணம். உங்களுக்கு நல்லது பண்ணனும்கிற எண்ணத்தில தான் இதை நான் பண்ணினேன். புரிஞ்சுக்கோங்க. அபி ரெண்டு நாளா ஊரிலேயே இல்லை. இப்போதான் வீட்டுக்கே வர்றான்.”

புரியுது நாராயணன். நடந்ததுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. சுதா, உமாவைக் காணலை எங்கிற பதட்டத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசுறான். அவன் இப்பிடியெல்லாம் பேசுற பையன் கிடையாது. இன்னைக்கு என்னெல்லாமோ நடக்குது.” தமிழ்ச்செல்வன் குரல் கலங்கி ஓய்ந்தது.

வருத்தப்படாதீங்க தமிழ். உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது, சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுவா. என்ன உதவி, எந்த நேரம் தேவைப்பட்டாலும் நீங்க என்னை தயங்காம கேக்கலாம் தமிழ்.” தமிழ்ச்செல்வனின் கைகளைப் பிடித்து ஆறுதல் வார்த்தைகள் சொன்ன நாராயணனுக்கு, பதில் சொல்ல வார்த்தைகள் வராமல் ஒரு தலையசைப்போடு விடை பெற்றுக் கொண்டார் தமிழ்ச்செல்வன்.

நாலா புறமும் எல்லோரும் தேடியும் உமா போன இடம் தெரியவில்லை. உமா எங்கே என்று கேட்ட குந்தவிக்கு, அவள் ஒரு அவசர வேலையாக கோயம்புத்தூர் வரை போயிருப்பதாக சொல்லப்பட்டது. சிதம்பரம் ஐயாவும், தமிழரசியும் கொதிநிலையில் இருந்தார்கள். பிரபாகரனும், குந்தவியும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதால், அவர்கள் கோபம் அத்தனையும் தமிழ் மேலேயே இருந்தது.

அன்று இரவு அத்தனை பேரும் தமிழ்ச்செல்வன் வீட்டிலேயே தங்கி விட்டார்கள். காந்திமதி வீட்டில் தனியே இருப்பது பற்றி சுதாகரன் எந்தக் கவலையும் படவில்லை. மகேஷ்தான் மனசு கேட்காமல், வீட்டில் பணி புரிபவர்களை அழைத்து பாட்டியை கவனித்துக் கொள்ளும் படி பணித்தான். பொழுது நகர்ந்து கொண்டே இருந்தது. ஆனால், எந்தத் தகவலும் வந்தபாடில்லை. நேரங் கரையக் கரைய, ஆராதனாவின் நிலைமை கவலைக்கிடமாகிப் போனது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவர், சுதாகரனுக்கு பக்கத்தில் வந்து நின்றார்.

சுதா, எம் பொண்ணு எங்க சுதா?” கத்தவில்லை, ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. நலிந்த குரலில் ஆராதனா கேட்டது, சுதாகரனை அப்படியே சுருட்டிப் போட்டது.

அத்தை…!” எல்லோரோடும் சோஃபாவில் அமர்ந்திருந்த சுதாகரன் எழும்பி நின்றே விட்டான்.

சொல்லு சுதா! எம் பொண்ணு எங்கே?” பித்துப் பிடித்தது போல நின்றிருந்தார் ஆராதனா.

அத்தை!”

நான் அன்னைக்கே சொன்னனே சுதா. இது வேணாம், எம் பொண்ணு உங்க வீட்டுல நிம்மதியா வாழமாட்டா, விட்டுருங்கன்னு சொன்னனே சுதா. நீங்க யாரும் கேக்கலையேப்பா. இப்போ பாரு, வாழ வர்றதுக்கு முன்னாடியே துரத்தி விட்டுட்டீங்களே. எம் பொண்ணு எங்க சுதா?” கண்களில் கண்ணீரோடு ஆராதனா கேட்க, சுதாகரனின் கண்களும் கலங்கியது.

எனக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்னு தெரியும் சுதா. அதனால தான், உங்க மாமாக்கு இப்பிடி ஒரு எண்ணம் இருந்தப்போ கூட அதை நான் ஆதரிக்கலை. ஆனா கடைசியில எல்லாருமா சேந்து எம் பொண்ணை தொலைச்சிட்டீங்களே…!” நிதானமாக பேசிக் கொண்டிருந்த ஆராதனா, பேசி முடித்துவிட்டு பெருங் குரலெடுத்து அழுதார். அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் கண்கலங்க, ஆராதனாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சுதாகரன்.

தப்பு எம் மேலதான் அத்தை. நான் தான் அவங்க அவங்களை, அந்தந்த இடத்துல வைக்காம ஆட விட்டுட்டேன். தப்பு எம் மேலதான் அத்தை.” ஆராதனாவோடு சேர்ந்து கதறித் தீர்த்தான் சுதாகரன். உட்கார்ந்திருந்த தமிழ்ச்செல்வன் எழுந்து வந்தவர்,

சுதா, எம் பொண்ணுக்கு எதுவும் ஆகியிருக்காது. நான் அந்த அளவு அவளை கோழையாவும் வளர்க்கலை. அவளைப் பாதுகாத்துக்க அவளுக்குத் தெரியும். நீங்க யாரும் கவலைப்பட வேணாம்.” என்றார். தன்னை தேற்றிக் கொண்ட சுதாகரன்

அத்தை, மதுக்கு எம் மேலே கோபம். எல்லாரையும் பேச விட்டுட்டு நான் வேடிக்கை பாத்துட்டனேங்கிற கோபம். வேற ஒன்னுமில்லை. அதுதான் இப்பிடி எங்கேயோ போய் உக்காந்திருக்கா. அவ எங்க இருக்கா, அவளுக்கு யாரு ஹெல்ப் பண்ணி இருக்காங்க எல்லாம் எனக்குத் தெரியும். அவ…” சுதாகரன் முடிக்கு முன்னால் குறுக்கிட்டார் தமிழ்ச்செல்வன்.

சுதா, நீ தேவையில்லாம அந்த அபியை சந்தேகப் படுற…” இப்போது தமிழ் முடிக்குமுன் சுதாகரன் குறுக்கிட்டான்.

மாமா, ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு சொல்ல, போலீசோ, டிடெக்டிவ் ஏஜென்சியோ தேவையில்லை. நான் கண்டு பிடிக்கிறேன். எம் மது எங்கன்னு நான் கண்டுபிடிக்கிறேன்.” சுதா சூளுரைக்க, தமிழ்ச்செல்வனும், இளமாறனும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

 

error: Content is protected !!