VNE51(2)
VNE51(2)
மனம் மென்மையானது… அந்த நாளின் தாக்கத்தில் ஆழ்ந்து போனது. உலகம் தலகுப்பாவோடு முடிந்து இருக்கக் கூடாதா என்று ஏங்கியது!
அவன் மெளனமாக அவளை பார்க்க, “அந்த மியுசிக் கான்சர்ட்க்கு அப்புறம் தான் உங்களுக்கும் என்னை தெரிஞ்சு இருக்கனும்… ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க இப்படிப்பட்ட துரோகம் பண்ணிருக்கீங்க…” நிதானமாக, அமைதியாக அவள் கூறியதை அவனும் அமைதியாகவே அங்கீகரித்தான்.
“இப்ப என்னோட பேரை யூஸ் பண்ணிக்கறீங்க…” என்றவளுக்கு என்ன பதில் கூறுவது.
அவள் மேல் அவன் கொண்ட காதல் உண்மை. அது கொடுக்கும் வலியும் உண்மை. ஆனால் ஆரம்பம் முதலே தனக்கு தைரியமும் இல்லாமல், சந்தர்ப்பவாதியாக இருந்து விட்டதால் மட்டுமே அவளிடம் காதலை உரைக்க முடியவில்லை என்பதும் உண்மை.
“பணத்துல கை வெச்சப்ப, பாஸ் கண்டுபிடிச்சுட்டா யூஸ் பண்ண இந்த மாதிரி கொஞ்சம் கலெக்ட் பண்ணி வெச்சுருந்தேன்… அதை உங்க விஷயம் வந்தப்ப யூஸ் பண்ணினேன்…” தெளிவாக கூறிய விஜியை புழுவைப் பார்ப்பது போல பார்த்தாள்.
“உங்களுக்கே அசிங்கமா இல்லையா? பணத்துல கை வெச்சதே பெரிய துரோகம்… அதோட அவரோட பர்சனல்ல மூக்கை நுழைச்சு இப்படியொரு கேவலமான காரியத்தை செய்தேன்னு சொல்ல எப்படிங்க உங்களுக்கெல்லாம் மனசு வருது?”
“உங்களுக்கு இன்னும் பாஸ் பற்றி முழுசா தெரியல மேம்…” என்றவனை இன்னமுமே கேவலமாக பார்த்தாள்.
“என்ன தெரியனும் விஜி…” நிமிர்ந்து நின்று அவள் கேட்க,
“அவரால ஒரு இடத்துல நிற்க முடியாது…” அவனுமே கைகளைக் கட்டிக்கொண்டு தெளிவாக கூற,
“அது என்னோட கவலை… அதைப் பத்தி கவலைப்பட வேண்டியது நான் மட்டும் தான்… உங்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” அவனை கூர்மையாக பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு கேட்க,
“ஆரம்பத்துல பாஸ் என்கிட்டே உனக்கு மஹா மேல இன்ட்ரஸ்ட் இருக்கான்னு கேட்டார்… அப்ப ஆமான்னு சொல்லிருந்தா அவர் கண்டிப்பா உங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணியிருக்க மாட்டார்… நான் அப்ப கொஞ்சம் பயந்துட்டேன்… இல்லைன்னு சொல்லிட்டேன்…” என்றவனை உறுத்து விழித்தாள். இவனுக்கு என்ன தைர்யம் இருந்தால் இப்படியொரு வார்த்தையை கூறுவான். தான் என்ன அவ்வளவு சுலபமா?!
“அதெப்படி? அவங்க இல்லைன்னா நீங்கன்னு நான் ஒத்துட்டு இருந்து இருப்பேனா? உங்களுக்கு நான்னா என்ன அவ்வளவு ஈசியா போச்சா?” என்றவள்,
“நான் மஹாவேங்கடலக்ஷ்மி… மைன்ட் இட்…” என்று எச்சரிக்கும் குரலில் கூறியவள்,
“அவங்களே என்கிட்ட பார்த்து தான் பேசுவாங்க… வார்த்தையை விட யோசிப்பாங்க… அவரை பத்தி நீங்க என்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்… யாரும் சொல்லி நான் அவங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டாம்… எனக்கு தெரியும்… அவங்க எப்படின்னு…” என்று நிறுத்தியவள்,
“உங்க மேல எனக்கு பரிதாபம் இருக்கு… ஷ்யாம் இப்படி பண்ணிட்டாரேன்னு நினைச்சு நான் பாவம் பார்க்கறேன்… ஆனா அதை யூஸ் பண்ணிக்கணும்ன்னு நினைக்காதீங்க… ஐ ம் நாட் தி கேம்…” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே பிசியோதெரபிஸ்ட் உள்ளே வர பேச்சு தடைப்பட்டது.
“ஹாய் விஜய்… என்ன ரெடியா? ஒரு ரவுன்ட் போயிட்டு வரலாமா?” என்று அவர் அருகில் வர, இவன் மெதுவாக எழ முயற்சிக்க, சட்டென அருகில் வந்த மஹா, அவனது தோளைப் பிடித்தாள்.
“மேம்… நான் பார்த்துக்கறேன்…” பிசியோதெரபிஸ்ட் அவசரமாக அருகில் வர, “இட்ஸ் ஓகே….” என்று தானே பிடித்துக் கொண்டாள். அவள் எப்போதும் செய்வதுதான். இத்தனை நாட்களில் விஜியும் கவனித்து இருக்கிறான். அத்தனை பொறுமையாக, நிதானமாக ஒவ்வொரு சிகிச்சையின் போதும் கூடவே இருந்த மஹாவை முன்னெப்போதை காட்டிலும் அவனுக்கு இன்னும் மிக பிடித்தது.
அவள் தனக்கு இல்லை என்று ஆகி விட்டாள் என்பதை அவனால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அந்த ஆற்றாமையிலும், ஷ்யாம் மேலிருந்த கோபம் குறையாமலும் தான் அவன் அப்படியெல்லாம் பேசியதும். ஆனால் அவள் மஹா அல்ல… திருமதி ஷ்யாம் ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டதை அவள் பேசும் போது தான் உணர்ந்தான்.
அந்த தொனி அப்படியே ஷ்யாமை பிரதிபலித்தது. அவள் பேசும் போது விஜிக்கு மஹா தெரியவில்லை. ஷ்யாம் தான் தெரிந்தான்.
இப்போது மருத்துவம் பார்க்கும் மஹா தான் உண்மை! அது ஷ்யாம்!
சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவன், இடுப்பில் அணிய வேண்டிய பெல்ட்டை எடுக்க கையை நீட்டினான். மஹா எடுத்து அவனிடம் நீட்ட, இடுப்பை சுற்றி அணிந்தவன், பெல்ட்டை கொஞ்சம் இறுக்கமுடியாமல் திணற, மஹா அவன் புறம் குனிந்து பெல்ட்டை இறுக்கமாக அணிவித்தாள்.
அவனிடம் கோபமாக பேசினாளே தவிர, அவனுக்கு உதவி செய்யாமல் போக நினைக்கவில்லை. பிசியோதெரபிஸ்ட் பயிற்சிகளை கொடுத்துவிட்டு போகும் வரை கூடவே இருந்து உதவி செய்தவள், அவர் சென்றவுடன்,
“நான் உங்க கிட்ட தப்பா பேசிருந்தா சாரி விஜி… என்னால ஷ்யாமை எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கவே முடியாது. அதே மாதிரி அவங்க உங்களை ஹர்ட் பண்ணிருந்தா அதுக்கும் சாரி… இதைத்தான் நான் சொல்லனும்ன்னு ரொம்ப வெய்ட் பண்ணேன்…” என்று முடிக்க, அவளது முகத்தை ஆச்சரியமாக பார்த்தான்.
அத்தனை பிழைகளையும், அத்தனை பாவங்களையும், அத்தனை வேதனைகளையும் இப்படி நிர்விகல்ப மனதோடு ஏற்று கொள்ள முடியுமா? இவளை போன்றவளை மீண்டும் சந்திக்க முடியுமா? இவள் ஏன் தன் மேல் காதல் வயப்படவில்லை என்று யோசித்தான். யோசிக்க யோசிக்க இழப்பு பூதாகரமாக தெரிந்தது.
இவளுக்காக தானே… இவளை இழக்க முடியாமல் தானே ஷ்யாம் தன்னை நிர்வாணமாக ஓட விட்டு அடித்தது. அதை நினைக்கும் போது கோபம் கொந்தளித்தது. செயல்பட முடியாமல் இருக்கும் தன் நிலையை வெறுத்தான்.
கண்ணை மூடினாலும், கண்கள் திறந்து இருந்தாலும் அவனது நினைவிலிருந்து அந்த சம்பவம் மறைய மாட்டேன் என்கிறதே.
எத்தனையோ மருந்துகளும் மாத்திரைகளும் கொடுத்து இருந்தாலும், மனதில் பதிந்த காதலை அழிக்கவும் முடியாமல், பழி வாங்கிய ஷ்யாமின் செயலை மறக்கவும் முடியாமல் சோர்வாக கண்களை மூடிக் கொண்டான்.
“சாரி… ம்ம்ம்ம்…” என்று கசப்பாக புன்னகைத்தான். “நான் அப்லோட் பண்ண போட்டோஸ அழிக்கலாம்… ஆனா பாஸ் செய்ததை அழிக்க முடியாதுங்க…” என்று கசப்பாகவே கூற, மெளனமாக பார்த்தாள்.
அதுவும் உண்மைதானே!
“நான் பண்ணதெல்லாம் தப்புத்தான்… ஸ்பை கேமரா வெச்சு ஷூட் பண்ணது… அதை டாக்குமென்ட் பண்ணது… உங்களை மறக்க முடியாம அதை யூஸ் பண்ண நினைச்சது… சொத்தையெல்லாம் எழுதி வாங்கின அவரை பழிவாங்க இந்த மெத்தடை யூஸ் பண்ண நினைச்சது… எல்லாமே தப்புதான்… ஆனா அதுக்கெல்லாம் இப்படியொரு ரிவீட் அடிச்சாரு பாருங்க… இப்ப இன்னுமே என்னோட பழியுணர்ச்சி தாண்டவமாடுது… கண்டிப்பா நான் எழுந்து வந்தா ரொம்ப மோசமான எதிரியை பார்ப்பார் அவர்…” என்றவன், அவள் மறுத்து பேச முயல, அவளை கை காட்டி நிறுத்தி,
“உங்க மேல இன்னும் எனக்கு நல்ல அபிப்ராயம் இருக்குங்க… உங்களை என்னால் மறக்க முடியாது… அவரை நீங்க லவ் பண்றதை விட என்னை வேற எந்த பொண்ணாச்சும் லவ் பண்ணா இந்த நினைப்பு மாறலாம்… ஆனா பர்ஸ்ட் லவ் இஸ் ஆல்வேஸ் எ ஸ்பெஷல் ஒன்… கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் மாறாது… நான் கொஞ்சம் உண்மையா இருந்து இருக்கலாம்… தைரியமா, சந்தர்ப்பவாதியா இல்லாம இருந்து இருக்கலாம்… ஆனா ஒரு அட்டெம்ப்ட்ல பண்ண தப்பை எல்லாம் சரி பண்ணிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்லையே… வாழ்க்கை… ஒன்ஸ் போனது… போனதுதான்…” என்றவன், தொண்டையடைக்க மௌனமானான்.
“வெரி சாரி விஜி… நீங்க அவர் மேல இவ்வளவு பழியுணர்ச்சியோட இருக்கீங்க… ஆனா இன்னமும் அவர் உங்களை அவரோட விஜியாத்தான் பார்க்கறாங்க… நீங்க டிஸ்ஓரியன்ட்டட் ஸ்டேட்ல இருந்தப்ப தான் அப்படியொரு ஷ்யாமை நான் பாத்தேன்… முழுசா உடைஞ்சு போய்… யார்கிட்டவும் பேசாம, அதை வெளிக்காட்டிக்கவும் முடியாம, உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு உங்களையே பார்த்துட்டு இருப்பாங்க… வேற யார் அவருக்கு துரோகம் பண்ணியிருந்தாலும் அதை அவங்களால தாங்கியிருக்க முடியும்… ஆனா நீங்க பண்ணதை அவங்களால தாங்கவே முடியல… நான் ரொம்ப நம்பறவங்க தான் எனக்கு துரோகம் பண்ணிட்டு போறாங்கன்னு அவங்க சொன்னப்ப என்னாலேயே தாங்க முடியல…” என்ற மஹாவை ஆழமாக பார்த்தான்.
உண்மைதான் அல்லவா!
ஷ்யாம் தன்னை எந்தளவு நம்பினான் என்பதை அவனும் அறிவானே!
அப்படிப்பட்டவனுக்கு தான் கொடுத்தது என்ன?
துரோகத்தை தவிர!
முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டவன், “நம்பிக்கைங்கறது கண்ணாடி பாத்திரம் மாதிரி தாங்க… நானும் உடைச்சுட்டேன், அவரும் உடைச்சுட்டார்… இனிமே அதை ஒட்ட வைக்க முடியாதுங்க…” என்றவன், சிறிது இடைவெளி விட்டு, “ஆல் தி பெஸ்ட் மேம்… நீங்க கிளம்புங்க… இனிமே வர வேண்டாம்…” என்று தீர்மானமாக கூறினான்.
“ஏன்?” அவனை அழுத்தமாக பார்த்தவள் கேட்க,
“எங்க ரெண்டு பேர் நடுவுல வராதீங்க மேம்… இது எங்க சச்சரவு… நடுவுல நீங்க வந்து, உங்க லைப்ல பிரச்சனை வர வேண்டாம்…” என்றவனின் குரலில் அத்தனை நிதானமிருந்தது.
“மறுபடியும் இன்னொரு தடவை ரெண்டு பேருமே அசிங்கமா அடிச்சுக்க போறீங்களா?” வெறுப்பாக அவள் கேட்க,
“உங்க மேல ப்ராமிஸ் பண்றேன் மேம்… இனிமே அந்த டாக்குமெண்ட்ஸ் யூஸ் பண்ண மாட்டேன்… எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் தான்…” தீர்மானமாக கூறியவனை கூர்மையாகப் பார்த்தாள்.
அவனது வார்த்தைகளில் உண்மையை உணர்ந்தாள். ஆனால் எத்தனை நாளைக்கு?
“நம்ப முடியல…”
“நம்புவீங்க…”
அவள் பேச்சற்றுதான் போனாள்.
“ஆனா பாஸ் கூட என்னால சமரசமா போகவே முடியாது… அவரை பார்க்கும் போதெல்லாம் என்னால என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல… என்னைக்காவது எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், அவர் செய்ததை நானும் அவருக்கு செய்வேன்…” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது? அவளுக்கு புரியவில்லை.
“நேருக்கு நேரா அவங்களோட போட்டி போட்டு உங்களால வின் பண்ண முடிஞ்சா பண்ணுங்க விஜி… கோழை மாதிரி பின்னாடி இருந்து குத்த வேண்டாம்…” என்றவள், “நீங்க என்னை வரவேண்டம்ன்னு சொல்ல வேண்டாம்… நான் வருவேன்… கண்டிப்பா வருவேன்… அதை நீங்களும் சரி, அவங்களும் சரி தடுக்க முடியாது…” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.
மௌனித்தான்!
வேறெதுவும் பேசாமல் விடைபெற்று வந்தவளை திருமண கேளிக்கைகள் சூழ்ந்து கொண்டது. அவள் தனியாக சென்று விஜியை பார்த்தாள் என்பதை அறிந்திருந்த ஷ்யாம், கேள்வி எதையும் கேட்கவில்லை. அதற்கான பதில்கள் தான் அவன் அறிந்ததாயிற்றே!
அதிலும் இந்த நேரத்தில் எந்த பிரச்னையும் வேண்டாமென்று பொறுமை காத்தான்!
அதிலும் ஒவ்வொருவரும் திருவிழாவை எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த திருமணத்தில் எந்தவிதமான கசப்பும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
திருமண ஏற்பாடுகளை கவனிக்கவென்றே ஒரு பெரிய குழுவையே இறக்கி விட்டிருந்தார் ஆத்மநாதன், அவருக்கு உதவியாக தன்னுடைய படையை இறக்கி விட்டிருந்தான் ஷ்யாம். நாதனை பொறுத்தவரை இந்த திருமணம் அவரது ஆளுமையை பறைசாற்றவும் வேண்டும், பாக்கியவதி பைனான்ஸின் ஆளுமையை கட்டியம் கூறவும் வேண்டும். கார்த்திக்கை பொறுத்தவரை லக்ஷ்மி மூவீஸ் மற்றும் லக்ஷ்மி ஜெம்ஸ் இனி அவ்வளவுதான் என்று பேசியவர்களின் முகத்தில் கரியை பூச வேண்டும். தான் மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பதை காட்ட வேண்டும். அதிலும் விநாயகமூர்த்தி போன்றோர் முன்னிலையில்!
வடஇந்திய திருமணங்களை போல, ஹல்டியில் ஆரம்பித்து மெஹந்தி, சங்கீத் என்று ஒரு பக்கம் இளையவர்கள் கொண்டாட, மாப்பிள்ளை அழைப்பு, நிச்சய தாம்பூலம், பெண்ணுக்கு சடங்கு சுற்றுதல், திருமணம் என்று பெரியவர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
அத்தனை கோலாகலமாக பட்டாசான கொண்டாட்டமாக இருந்தது ஷ்யாம், மஹாவின் திருமணம்.
ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த கார்த்திக்கை தான் அவ்வப்போது பிருந்தா பிடித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. மெளனமாக, ரொம்பவும் பேசாமல் இருந்த மகாவின் மாற்றத்தை பிருந்தாவின் காதல் கண் மறைத்து இருந்தது.
திருமணத்திற்கு பர்சேஸ் செய்ய வேண்டும் என்று வம்படியாக கார்த்திக்கை உடன் அழைத்து சென்று அவ்வப்போது அவனை டென்ஷனாக்கி கொண்டிருந்தாள் பிருந்தா.
“நாம எப்பங்க இப்படி கல்யாணம் பண்ணிக்கறது?” ஹல்டியின் தீம் உடையான மஞ்சள் காட்டன் லெஹான்காவில் இருந்தவள், கார்த்திக்கை மறித்து அருகிலிருந்த அறைக்கு இழுத்துக் கொண்டு போய் கொஞ்சலாக கேட்க, அவனுக்கு புரையேறியது.