VVO-25

VVO-25

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 25 (Epilogue)

 

ரம்யாவினால் உண்டான சங்கடங்களை நந்தா ஒருவனாகவே நின்று சமாளித்திருந்தான்.  இனக்கவர்ச்சியாக அறியப்பட்டிருந்தது, தற்போது பழிவாங்கும் உணர்வாக மாறியிருந்ததையும் உணர்ந்து கொண்டான்.

தனக்குக் கிட்டாதாயின், யாருக்கும் கிட்டவே கூடாது எனும் ரம்யாவின் மனநிலை புரிந்தது.

நீண்ட நாள் கழித்து, அதையும் ஒரு நாள் இரவில் மனைவியோடு பகிர்ந்து கொண்டான்.

புரிதலோடு நம்பிக்கையும் இருப்பதால், அதிதீ தற்போது எதையும் மனதில் போட்டு உழட்டுவதில்லை.

அதற்காக சந்தோசமே வாழ்க்கை என நாட்கள் நகரவில்லை.  அவ்வப்போது, சண்டை, சச்சரவு என மேள, தாள, முரசின்றி களைகட்டி, அதன்பிறகு சமாதானமாவதும் தொடர்ந்தே இருந்தது.

ஊடலின் நிறைவாக கூடலின் தருணங்கள் அனைத்தும் வானத்தளவு இன்பங்களை வாரியிறைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

நந்தாவின் தங்கைக்கு சிறப்பாக பிள்ளைப்பேறு பார்த்து, தாயையும், சேயையும் அவர்களது ஊரில் சென்று விட்டுவந்தனர்.

அதிதீ பணி மாறுதலாகியிருந்தாள்.

எத்தனை தூரமானாலும் மனைவியை தானே அழைத்துச் சென்று விடுவது, அழைத்து வருவது இரண்டையும் யாரிடமும் பொறுப்பைக் கொடுக்காமல் நந்தாவே பார்த்துக் கொண்டான்.

சுயதொழில் காரணமாக நந்தாவின் எதிர்பார்ப்புகள் ஓரளவு சாத்தியமாகியிருந்தது.

வேலை விசயமாக வெளியூர் சென்றிருக்கும் நாட்களில், தம்பியர் இருவரிடமும் பொறுப்பைக் கொடுக்க முன்வந்தபோது, அதிதீ மறுத்திருந்தாள்.

“எனக்கு டூவிலர் வாங்கித் தானு எவ்வளவு நாளா கேக்கறேன். எப்பத்தான் வாங்கித்  தருவ?”

“இப்டியெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சந்தோசமா ஏத்துக்கணும்.  இப்ப என்ன, உனக்கு ஸ்கூட்டி வேணும். அவ்ளோதானே! அவங்களோட போகப் பிடிக்கலைனா இன்னிக்கு ஆட்டோல போ! சீக்கிரமா வண்டி வாங்கிரலாம்!”

“இப்டியே சொல்லு! ஆனா வாங்கித் தந்திராத!”, என்க

சிரித்தவாறே, “தனியா விட பயமா இருக்குடீ! என்ஹச்ஆ இருக்கு!  எந்நேரமும் வண்டி சல்லு, சல்லுனு போயி வந்திட்டு இருக்கறதால, சேஃபா நீ போனியானு நினைச்சே எனக்கு வேற எதிலயும் வேல ஓடாது.  அதுக்கு நானே உன்னைக் கொண்டு வந்து விட்டுட்டு வந்தா, நிம்மதியா இருப்பேன்ல!”

“அப்ப இனி பஸ்ல போயிட்டு வந்துக்கறேன்!”

“அந்தக் கூட்டத்துல பஸ்லயா? நான் இருக்கும்போது நான் கொண்டு வந்து விடுவேனாம்.  வேலை விசயமா எங்காது வெளியூர் போயிட்டா அன்னைக்கு மட்டும் நீ டூவீலர் யூஸ் பண்ணிக்குவியாம்!”, என்றவனிடம் அதற்குமேல் வாக்குவாதம் செய்ய முடியவில்லை.

நந்தா தனது பகுதிநேர பொறியியல் கல்வியை முடிக்கவும், ஜூனியர் முகில் பள்ளிக்குச் செல்லத் துவங்கியிருந்தான்.

தந்தையும் மகனுமாக காலையில் குளித்து, உடுத்தி, கிளம்பி என ஒரே அமர்க்களம்தான். அதிதீயைத் தொந்திரவு செய்யாமல் இருக்கப் பழகிக் கொண்டான் முகில்.

முன்பைப்போல வாய்க்கு வாய், வாடா போடா எல்லாம் அதிதீயிடம் வெகுவாகக் குறைந்திருந்தது.

தாயைப் பார்த்து முகிலும், தந்தையை, வாத்தா(வாடா), போத்தா(போடா) என மழலையில் சகட்டுமேனிக்கு ஆரம்பித்திட, அத்தோடு அதிதீ மிகவும் பாடுபட்டு தன்னை மாற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தாள்.

கௌசல்யாவும், “முன்னயே சொன்னேன்.  வாயக் குறைனு! அப்பக் கேக்கலை.  இனிமே என்ன செய்யறேனு பாக்கறேன்”, என்றிருந்தார்.

அதனால் படிப்படியாக தனது பேச்சில் வரும், ‘டா’வை குறைத்துக் கொண்டாள்.

பள்ளிக்குச் செல்லத் துவங்கிய மகனைக் கிளப்பி பள்ளியில் சென்று விட்டுவருவது அனைத்தையும் நந்தாவே பார்த்துக் கொண்டான்.

அப்போது தந்தை, மகன் இருவரது ரகசியக் குரல் கேட்கும் நேரங்களில், “டேய் ரெண்டு பேரும் குளிக்காம என்ன ரகசியம் பேசிட்டுருக்கீங்க? நேரமாகுதுடா!”, தன்னை மறந்து கூறுவாள்.

முகில் வாயைப் பொத்தி சிரிப்பதோடு, நந்தாவையும் அழைத்து, “உங்களையும் சேத்துத்தான் டேய் சொல்றாங்க!”, என எடுத்துக் கொடுப்பான்.

நந்தாவிற்கு அதிதீ அப்டி அழைக்காமல் போனதில் ஏதோ காதல் குறைந்தாற்போல இருப்பதாக தனிமையில் மனைவியிடம் புலம்பியிருந்தான்.  ஆனால் மகனிடம், “வேலை டென்சன்ல அப்டி தெரியாம சொல்லியிருப்பா!”, என சமாளித்து, பேச்சை மாற்றிடுவான்.

தந்தையின் சாயலில் இருந்த மகனைக் காணும்போதெல்லாம், ‘இப்டித்தான் இவனும் சின்ன வயசில இருந்திருப்பான்போல’, என கணவனது பாலப்பருவத்தை மகனின் மூலம் மனதிற்குள் கண்டு மகிழ்ந்து போவாள் அதிதீ.

அப்பா, மகன் இருவருமே அதிதீயைத் தாங்கினார்கள்.

அடுத்த குழந்தையைப் பற்றி அதிதீ அவ்வப்போது துவங்கினாலும், “வேலைக்குப் போயிக்கிட்டு உனக்குத்தான் கஷ்டம் பாத்துக்கோ!  எனக்கொன்னுமில்லை!”, என்பான் நந்தா.

“இல்லடா.. ரொம்ப ஏஜ் டிஃப்ரன்ஸ் வந்தா நமக்கும் கஷ்டம்!”

“பாத்துக்கலாம் விடு!”, என்றிடுவான்.

ராஜேஷிற்கு பெண் தேடும் படலம் துவங்கி, அவனுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடானது.

ரமேஷ் தற்போதுதான், டிகிரி படிக்க துவங்கியிருந்தான்.

அரியர்களை சரளமாக வைத்து, ஆசிரியர்களையே திணறச் செய்தான்.

காமாட்சி வழமைபோலவே வாழ்ந்தார்.

காமாட்சியின் இலகு மற்றும் மேம்போக்கான கவனிப்பால், ரமேஷ் பொறுப்பற்றவனாக இருந்தான்.

அவ்வப்போது அதிதீ இதனைக் கண்ணுற்று, “நீயும் உங்கம்மா மாதிரியே அவன் கேக்காம அவன் அவசியத்துக்கு மீறி எல்லாம் பண்ணா இன்னும் மோசமாயிருவான்.  உன்னைப்போல இவன் பொறுப்பா வரணும்னா ஸ்ட்ரிக்டா நடந்துக்கோ!”, என்றதை நந்தா காதில் வாங்குவதே இல்லை.

அதிதீயும், நந்தாவும் நன்கு சம்பாத்தியம் செய்து குடும்பத்தை கவனித்துக்கொள்ள, காமாட்சி மனம்போல வாழ்ந்தார்.

மகன்களை குறிப்பாக ரமேஷை நெறிப்படுத்திட மறந்தார்.

அதிதீயும் அவ்வப்போது எடுத்துக்கூறிப் பார்த்துவிட்டு, விட்டுவிட்டாள்.

ராஜேஷ் ஓரளவு பொறுப்போடு நடந்து கொண்டான்.

அதிதீ, “நல்லா படிச்சி வேலைக்குப் போற பொண்ணா பாருங்க.  அப்பத்தான் இந்தக் காலத்தில சமாளிக்க முடியும்”, என கொழுந்தனுக்கு ஏற்ற பெண்ணைத் தேட வழி கூறினாள்.

காமாட்சியினது பேச்சுகள் எதுவும் மாறவில்லை.  ஆனால் முகிலை நன்றாக அரவணைத்துக் கொண்டார்.

அவ்வப்போது நந்தாவிடம், “இவனுக்குத் துணைக்குத் துணையா இன்னொரு புள்ளைய சீக்கிரமா பெத்துக்கிட்டா, ஒரே சோலியா ரெண்டையும் வளர்த்திரலாம்ல”, என்க

நந்தா, தான் தற்போது வேண்டாம் என்றதை எப்படி தாயிடம் சொல்ல என எண்ணியவன், “அது கடவுள் குடுத்தா யாரு வேணானு சொன்னா!”, எனக்கூறிட

“அப்ப டாக்டருக்கிட்ட கூட்டிப்போயி பாக்கறது?”

“ம்மா.. அது பிறக்கும்போது பிறக்கட்டும்! சும்மா வீட்ல உக்காந்துட்டு எதையாவது சொல்லலனா உனக்குத் தூக்கமே வராதா?”, என தாயின் வாயை மூடியிருந்தான்.

முனியாண்டி ஒற்றையாகவே தனது தேவைகளைக் கவனித்துக் கொண்டு, அவ்வப்போது பேரனை வந்து பார்த்துக் கொண்டும் தனது வாழ்வை தனியனாகவே சமாளித்தார்.

முனியாண்டி எவ்வளவு செய்தாலும், அதை வெளிப்படுத்திடாமல், அனைத்தையும் தனது தமையனே கவனித்துக் கொள்வதாக இதுவரைக் காட்டியதை, தற்போது மகன் செய்வதாகக் காட்டிக் கொண்டார் காமாட்சி.

அனைத்தையும் அனைவரும் அறிந்திருந்தபோதும், இனியும் காமாட்சி மாறுவார் என்கிற நம்பிக்கையில்லாததால், அவரவர்போக்கில் வாழப் பழகினர்.

கௌசல்யா நிறைவோடு இருக்கிறார்.

தன்னைப்போல தனது பெண்களுக்கு துயரம் இல்லா வாழ்க்கையை அருளிய இறைவனுக்கு தினசரி நன்றி சொல்லவே கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

ப்ரீத்தியும் அவளது கணவனும் தொடர்ச்சியான விடுமுறை தினங்களில், அதிதீயின் வீட்டாரோடு வந்து தங்கிச் செல்வதும், சில நேரங்களில் அதிதீ அங்கு சென்று வருவதுமாக தங்களுக்கு கிடைத்திடாத உறவுகளின் அருமையை பிள்ளைகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

நந்தா தனது கட்டிட நிறுவனத்தை முறையாகப் பதிந்து, பணிகளை எடுத்துப் பார்த்து வந்தான்.

நல்ல வருமானம், நிறைவான வாழ்க்கை என்று இருந்தாலும், எதிர்பாரா நிகழ்வுகளினால் அவ்வப்போது தொய்வும், மனஅழுத்தமும் வந்து சேருகிறது.

ஆனாலும் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று, மற்றவரின் தொய்வைச் சரிசெய்திடும்வரை ஓய்வதில்லை.

வெல்லுவதையே குறிக்கோளாகக் கொண்டு நந்தா, அதிதீயின் வாழ்வு பொறுப்போடு செல்கிறது.

இருவரையும், ஒவ்வொருவருடைய சகிப்புத்தன்மை, தியாகம், விட்டுக் கொடுத்தல் எனும் இயல்புகள் உத்வேகப்படுத்தி, சாந்தமாகவும், சந்தோசமாகவும் வாழும் வழியினைத் தருகிறது.

////////////////

மூன்று ஆண்டுகளுக்குப் பின்…

அதிதீ புதுக்கோட்டையில் உள்ள வேறு கிளைக்கு மாற்றலாகியிருந்தாள்.

ராஜேஷிற்கு திருமணம் செய்ததோடு, தனிக்குடித்தனம் வைத்திருந்தார்கள்.

ரமேஷ் டிகிரி முடித்துவிட்டு, வேலைக்காக அலைந்து கொண்டிருந்தான்.

நந்தா தனது நிறுவனத்தை, பிரைவேட் லிமிட்டடாக மாற்றும் பணியில் மும்முரமாக இருந்தான்.

மனைவிக்கு பெயருக்கு ஒரு ஸ்கூட்டியை வாங்கிக் கொடுத்திருந்தான்.  மற்றபடி சாரதியாக அவனே இருந்து சகலத்தையும் பார்த்துக் கொண்டான்.

அவ்வப்போது, நாகேந்திரனால் எழுந்த பிரச்சனைகளை இலகுவாக சமாளிக்கும் வழியினைக் கண்டு கொண்டதோடு, செயலாற்றி, தீர்வு காண்பதை வழக்கமாக்கியிருந்தான் நந்தா.

நிறைமாத கர்ப்பிணியான அதிதீயை எந்த மாற்றமும் இன்றி, அன்றுபோல் இன்றும் தாங்குகிறான் நந்தா.

கௌசல்யாவிற்கு மனம் நிறைந்த வாழ்க்கையில் மகிழ்வோடு வலம் வருகிறார்.

காமாட்சிக்கு இன்னும் ரமேஷின் நிலை புரிந்தாலும், பெற்ற மனம் பித்து என்பதுபோல நடந்து நிலையை மேலும் சிக்கலாக்குகிறார்.

முகிலுக்கு, தாயின் வயிற்றில் இருந்து தம்பி பாப்பா வருமா? தங்கச்சி பாப்பா வருமா? என்கிற குழப்பத்தோடு பள்ளிக்குச் சென்று வருகிறான்.

பள்ளியிலிருந்து வந்த முகில் தாயிடம், “ம்மா கேர்ள் பேபினா அக்ஷயானு வைப்போமா!”

“ஏண்டா!”

“என் கேர்ள் ஃப்ரண்ட் அந்த நேம்தான் சஜஸ்ட் பண்றா!”

“என்னாடா சொல்ற?”, என அதிர்ந்தவளை சமாதானம் செய்யும் வகையில் அணைக்க முயன்று முடியாமல், தனதிருகை கொண்டு அதிதீயின் கையைப் பிடித்துக் கொண்டவன், “ப்ளீஸ்மா!”, எனக் கெஞ்ச

“உங்கப்பா வரட்டும். வந்ததும் கேப்போம்!”

“நேத்தே ஓகே சொல்லிட்டாரும்மா!”

அதிர்ந்து போனவள், “என்னடா சொல்ற? இதெல்லாம் எப்பப் பேசுனீங்க…!”

“குளிக்கும்போது..!”, அசால்டாகக் கூறினான்.

“அப்ப குளிக்கும்போது இதுதான் தினமும் நடக்குதா?”, என இடுப்பில் கை வைத்தபடியே கேட்டவளை அணைத்துக் கொண்டவன், “சேச்சே… பேச எங்களுக்கு விசயமா இல்ல!”

“என்னடா அப்டித் தினமும் பேசுவீங்க!”

“அதல்லாம் பெர்சனல்!”, என்றவனது காதை செல்லமாகத் திருகி, “எனக்குத் தெரியாம அது என்னடா உனக்கும்,  உங்கப்பனுக்கும் பெர்சனல்! ம்ஹ்ம்…! அதுதான் குளிச்சிட்டு வர டெய்லி லேட்டாகுது!”, என

“இருக்குல்ல!”, என சிரித்தவன், “அப்பத்தானம்மா ஃப்ரீயா பேச நேரங்கிடைக்குது!”, என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு உரைத்தவனிடம்

“இனிமே உன்னை நானே குளிக்க வைக்கிறேன்!”

“ச்சேச்சே.. ஒரு பாய(Boy) நீ எப்டிம்மா வந்து குளிப்பாட்டுவ?” என்று கேட்டான் முகில்.

“டேய்! நான் உன் அம்மாடா!”

“அதுக்காக…! நீ பாப்பாவை மட்டும் குளிக்க வையி!  நான் என்னைப் பாத்துப்பேன்!”, என்ற மகனை அணைத்துக் கொண்டாள்.

பெரிய நபரைப்போல முதிர்வாய் பேசும் மகனை எண்ணி மனம் பூரித்துப் போனது அதிதீக்கு.

விரைவில் பிறக்கப் போகும் குழந்தையோடு, முகில், அதிதீ, நந்தா அனைவரும் சிறப்பாக வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.

 

நிறைவு…!

 

எனதுரை

மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கிடையே காதல் மலரும்போது, திருமணம், குடும்ப வாழ்க்கை என அடுத்தடுத்த நிகழ்வுகளில் சுமூகநிலை காலந்தோறும் கிட்டும் என்பதை எப்போதும் எதிர்பார்க்க இயலாது.

காதல் திருமணம் கைகூடுவது அத்தனை எளிதான காரியமுமல்ல!  திருமணம் கைகூடினாலும் ஒருவருக்கொருவர் எல்லா நிலையிலும் தாங்கிக் கொள்வதும், அனுசரித்துச் செல்வதும் என்பதையும் நூறுசதவீதம் எதிர்பார்த்திடவும் இயலாது.

எங்கு சறுக்கினாலும் அது உறவுகளுக்கும், சமூகத்திற்கும் அவலாகிப் போகும்.  அதனால் அத்தகைய திருமணம் செய்தவர்களின் வாழ்வில் தங்களது வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ற குறிக்கோளை அவ்வப்போது தங்கள் தேவைகளின் நிமித்தம் நிர்ணயிப்பதும், வெல்லும்வரை ஓயாமல் அதனை அடைய பயணிப்பதும் என்றே இறுதிவரை வாழ்வு செல்லும்.

அதுபோல நமது கதையின் நாயகன், நாயகி இருவரும் எத்தனை தடங்கல், சறுக்கல் நேர்ந்தாலும், அதனை ஏணிப்படிகளாக்கி ஓயாது, மென்மேலும் தங்களது ஒருமித்த குணத்தால் வெற்றி பெறுவார்கள் என்கிற வகையில் எழுதப்பட்டுள்ளது.

காதல் திருமணத்தில் காதலித்த நாளினைப்போல எப்போதும் சந்தோசங்கள் கொட்டிக்கிடக்கும் என எண்ணி, அதற்குள் அடியெடுத்து வைப்பவர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் பொருட்டு எழுதப்பட்டது.

அதனால் சில இடங்களில் நிறைய தொய்வான காட்சிகள் கையாளப்பட்டிருந்தது. அதனையும் பொறுமையோடு படித்து, ஆரம்பம் முதல் நிறைவு வரை என்னோடு பயணித்த அனைத்து உள்ளங்களுக்கும், கருத்துகளை தந்து என்னை ஊக்கமும், ஆக்கமும் பெறச் செய்திட்டவர்களுக்கும், லைக்ஸ் இட்டவர்கள் மற்றும் சைலண்ட் ரீடர்ஸ் அனைவருக்கும் நன்றிகளும், மகிழ்ச்சியும்!

காதலின் சுவை அறிந்து, திருமணம் கைகூடி எதிர்கொண்ட இன்ப, துன்பங்களில் எனக்கும் பரிச்சயம் உண்டென்பதால் துணிந்து எழுதியிருக்கிறேன்.

படித்துவிட்டு தங்களது விமர்சனங்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.  அது என்னை மேலும் மெருகேற்றும்.

வணக்கம்.

Leave a Reply

error: Content is protected !!