VVO16

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 16

 

அதிதீயை குழந்தையோடு வீட்டிற்கு அழைத்து வந்த இரண்டு தினங்களிலேயே, ப்ரீத்தியின் வீட்டிலிருந்து மூத்தவர்கள் வந்திருந்தார்கள்.

 

கௌசல்யா இதை எதிர்பார்த்தே இருந்தார்.

 

இதற்காகவே வளைகாப்பு வைபவத்தைக் கூட மிகவும் எளிமையாக, அதிதீயின் வீட்டருகே இருந்தவர்களை மட்டும் அழைத்துச் செய்திருந்தார் கௌசல்யா.

 

நந்தாவிடம், “தம்பி.. வளைகாப்பு ரொம்ப கிராண்டா பண்ணா தேவையில்லாத பிரச்சனையெல்லாம் கிளம்பும். அவங்கப்பா வேற முடியாம இருக்காரு.  அத்தோட ப்ரீத்தி வீட்லயும் வந்து எதாவது பேசுவாங்க. அதனாலதான் யாருக்கிட்டயும் சொல்லிச் செய்ய முடியலை.  வேணுனா உங்க அம்மா, தங்கச்சியை மட்டும் கூப்பிடுங்க”, என்று கூற

 

நந்தாவோ, “இல்லத்தை.. அம்மாகிட்டச் சொன்னா அது ஊருல எல்லாருக்கும் சொல்லணும்னு சொல்லும்.  அதனால உங்க திருப்திக்கு இங்க பக்கத்தில மட்டும் கூப்பிட்டு சிம்பிளா பண்ணிக்கலாம்”, என்று கூறியிருந்தான்.

 

அரசல்புரசலாக கௌசல்யா அதிதீயுடன் பேசிக் கொள்வது மற்றும், அவளின் வீட்டிற்கு சென்று வருவது தெரிந்தாலும், கையும் களவுமாக பிடிபட்டால் அன்றி, எதுவும் பேசக்கூடாது என சமயம் பார்த்துக் காத்திருந்தனர் ப்ரீத்தியின் வீட்டினர்.

 

அதுபோலவே அதிதீ குழந்தையோடு வந்த செய்தி அறிந்ததும், தங்களின் சார்பாக பேசுவதற்கு ஏற்ற சிலரை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்திருந்தனர்.

 

அதிதீயின் வெளியேற்றத்திற்குபின் வந்து பேசி முடிவு செய்தவாறு  கௌசல்யா நடந்து கொள்ளவில்லை எனவும், அதனால் உடனே அனைத்து சொத்துகளையும் ப்ரீத்தியின் பெயருக்கு மாற்றி வைக்கும்படியும், ப்ரீத்தியின் வீட்டினர் பிடிவாதமாக நின்றார்கள்.

 

“ரெண்டும் என் வயத்தில பிறந்து புள்ளைங்கதான். நீங்கலாம் வந்ததை வச்சு,  இப்ப சின்னவ கோர்ட்டு, கேசுன்னு போனாக்கூட ரெண்டு பாகமாத்தான் சொத்தெல்லாம் போகும்.  பெறந்ததுக ரெண்டும் அது உண்டு, அது சோலி உண்டுனுதான் இருக்குக. அவங்களுக்குள்ள துவேசம் எதுவும் இல்ல. அப்டியிருக்க உங்களுக்கு என்ன அவசரம்னு புரியலை”, என்றவர்

 

“அந்த அத்தனை சொத்தையும் சம்பாதிச்சு சேத்தவரு, இன்னும் உயிரோடத்தான் இருக்காரு. அதுக்குள்ள வந்து ப்ரீத்தி பேருல எழுதி வைங்கன்னு சொன்னா என்ன நியாயம்?  சொத்து சொத்துனு நீங்க சொல்ற எதையும் நாம கடைசில எடுத்துட்டுப் போகப் போறதுகூட இல்லை”, என்றிட

 

“அவரு சொன்ன வார்த்தைய நீங்க காப்பத்தற மாதிரி தெரியல.  அதான் இப்பவே எழுதிக் குடுக்கச் சொல்றோம்”, என வந்தவர்களில் மூத்தவரான ஒருவர் பேசிட

 

“அப்டியே பாத்தாலும் சின்னவதான் உள்ளூருக்குள்ளயே இருக்கா.  எனக்கு எதாவது ஒத்தாசைன்னாகூட அவதான் ஓடிவந்து பாக்கற மாதிரி இருக்கும்.  அப்டியிருக்க பெரியவ பேருல மட்டும் எழுதச் சொல்றீங்க?”, கௌசல்யா

 

“அப்ப அவ பேருக்கும் பிரிச்சி எழுதி வைக்கப் போறீயா”, என ப்ரீத்தியின் வீட்டில் கோபமாக வினவ

 

“என் காலம் உள்ள வரை எந்தப் புள்ளையையும் இது ஒசத்தி, இது தாழ்த்தினு தரம் பிரிச்சுப் பாக்க முடியாது.  இரண்டு பேரையும் ஒரே மாதிரிதான் பெத்து வளத்தேன்.  சின்னவ விசயம் தெரிஞ்சு வந்து நீங்க கேட்டதும், கோபத்துல அவங்கப்பா சரினு சொல்லிட்டாரு.  அதுக்காக.. இப்டி வந்து கேக்கறது உங்களுக்கே நியாயம்னு படுதா?”, எனக் கேட்க

 

“தேவையில்லாத பேச்சு இப்ப எதுக்கு?  உங்க வீட்டுக்காரவர் சொன்னதை இப்ப உங்களால செய்ய முடியுமா? இல்லையா?”, என கறாராக மற்றொருவர் கேட்டிட

 

“அவரு சொன்னது உண்மைதான்.  அது எங்க காலத்துக்குப்பின்னனு தான் சொன்னாரேயொழிய நாங்க ரெண்டு பேரும் இருக்கும்போதே யாரு பேருலயும் எழுதி வைக்கறேன்னு சொன்னதா எனக்கு நியாபகம் இல்ல”, என விடாமல் கௌசல்யாவும் கூறிட

 

“பெரியவங்களை மதிக்காம வெளிய போன சின்னப் பொண்ணை இப்ப எதுக்கு வீட்டோட சேத்துகிட்டீங்க?”, என ஒருவர் கேட்க

 

“சம்பந்த வழில வீட்டுக்கு வந்த, உங்களுக்கு வேண்டிய மரியாதை நான் தரலைன்னா… என்னனு கேளுங்க!  அதவிட்டுட்டு எங்க வீட்டுல, சாப்பிட்டதுக்கும், தூங்கறதுக்கும், வெளிய போறதுக்கும், வீட்டுக்கு விருந்தாளி வரதுக்கும் விளக்கம் கேட்டா… நல்லாயில்லை!  அதுக்கு விளக்கம் சொல்லணும்கிற அவசியமும் எனக்கில்லை!”, என்ற கௌசல்யாவின் பேச்சைக் கேட்டபடி அறைக்குள் குழந்தையோடு இருந்த அதிதீக்கே தாயின் பேச்சில் திகைப்பு உண்டாகியிருந்தது.

 

தனது தாய் இவ்வளவு பேசுவார் என்பதே இன்றுதான் அறிந்து கொண்டிருந்தாள்.

 

“அப்ப.. சின்னவ பண்ணது எதுவுமே இல்லைனு ஆகிருமா?”, வந்திருந்தவர்களில் ஒருவர்

 

“அவ பண்ணது தப்புதான்.  அதனால எங்களுக்குத்தான் மனக்கஷ்டமே தவிர.. உண்மையில உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனா அதையே சாக்கா வச்சிட்டு வந்து, சொத்தையெல்லாம் இப்பவே பெரியவ பேருக்கு மாத்திக் கேக்கறது எந்த ஊரு நியாயம். அப்படியே அவளுக்கு இப்ப எழுதிக் குடுத்தாலும் பெரியவ வந்து இங்க இருக்கப்போறதும் இல்லை.  அப்டியிருக்கும்போது இப்பவே எதுக்கு மாத்திக் கேக்கறீங்கனு புரியலை”, என கௌசல்யா தணிந்தே பேசிட

 

‘அதைப்பற்றி உங்கிட்ட எதுக்கு சொல்லணும்’, என்றார்போல பேச்சும், தாங்கள் கேட்டதைச் செய்யாவிட்டால் ப்ரீத்தியின் வாழ்வு பாதிக்கும் என்பதுபோலவும் வந்திருந்த நபர்களின் மறைமுகப் பேச்சில் அவர்களது உள்நோக்கம் புரிந்திட கௌசல்யாவும் தனது எண்ணத்தை தயங்காமல் உரைத்திருந்தார்.

 

“யாரு சொத்தை வாங்கி, யாரு சுகபோகமா இருக்க.. எல்லாரும் சேந்து வந்திருக்கீங்கனு எனக்குப் புரியாம இல்ல!  இப்ப நான் மறுத்தா ப்ரீத்திய எங்க வீட்டுக்கு அனுப்பிருவேன்னு நீங்க மறைமுகமா எச்சரிக்கிறதும் எனக்குத் தெரியும்.  ஒன்னும் பிரச்சனையில்லை.  நீங்க என்ன முடிவு எடுக்கறதா இருந்தாலும் எடுங்க.  நான் யாரு பேருலயும் இப்ப சொத்தை எழுதிக் குடுக்கற ஐடியாவுல இல்லை”, என முடிவாகக் கூறி அனுப்பிவிட்டார் கௌசல்யா.

 

அதிதீயை வெளியே வர வேண்டாம் என்று கூறிவிட்டு, தனியாகவே வந்தவர்களிடம் பேசி அனுப்பி வைத்திருந்தார் கௌசல்யா.

 

ஒருவழியாக கிளம்பியவர்கள் சென்ற மறுநாளே, ப்ரீத்தியும், மாப்பிள்ளையுமாக வந்துவிட்டார்கள்.

 

“உன் கல்யாணத்தப்ப என்ன சொல்லி கல்யாணம் பண்ணாருனு உங்க அப்பாவுக்கு மட்டுந்தான் தெரியும். ரெண்டு பேருக்கும் சமமாத்தான் சொத்துகளை பிரிச்சுக் குடுக்க முடியும் ப்ரீத்திமா.  இடையில அவ அப்படிப்பண்ணிட்டாங்கறதுக்காக உம்பேருக்கே சொத்தையெல்லாம் எழுதிக் கேட்டா உடனே எழுதிக் குடுத்தற முடியுமா?”,என தனது நியாயத்தை இருவரிடமும் முன்வைக்க

 

ப்ரீத்திக்கு அதுபோன்ற எண்ணம் இல்லாததால், “அதுக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சம்பந்தகாரவங்க முகத்தில அடிச்சமாதிரி பேசுவியாம்மா? பேச அழைச்சிட்டு வந்தவங்களை அவமாரியாதை பண்ணி அனுப்பிட்டேனு ஒரே சத்தம். இன்னும் கொஞ்சம் நீ அமைதியா பேசியிருக்கலாம்”, என்றவள்,  “இப்பப்பாரு தேவையில்லாத பிரச்சனை?”, எனக் கூறினாள் ப்ரீத்தி.

 

ப்ரீத்தியின் வீட்டில் அவளுக்கு குடுத்த குடைச்சல் அவ்வாறு கேட்கச் செய்திருந்தது பெண்ணை.

 

“பம்மிகிட்டு உங்கவீட்டு ஆளுங்ககிட்ட பேசினா பருப்பு வேகாதுன்னு தெரியும்.  அதான் அப்டிப் பேச வேண்டியதாப் போச்சு.  வேற வழியில்லை”, என்றவர் “…என் காலம் இருக்கறவரை யாருக்கும் சொத்தையெல்லாம் எழுதிக் குடுக்க மாட்டேன் ப்ரீத்திமா.  எங்க காலத்துக்குப் பின்ன சொத்துக்களை ரெண்டு பேருக்கும் வர மாதிரி ஏற்பாடு பண்ணி வச்சிருவேன்”, என தனது எண்ணத்தை கௌசல்யா தெளிவாக திடக் குரலில் மகளிடம் கூற

 

ப்ரீத்தியின் கணவனோ, “அத்தை எங்க பேருக்கு இங்க உள்ள சொத்தைக் குடுத்தாலும் நாங்க வந்து இங்க இருக்கப் போறதில்லை.  அதனால எங்க பேருக்கெல்லாம் எழுத வேணாம்.  அதிதீக்கு வாய்ப்பு இருந்தா அப்ப என்ன நிலவரமோ அதுக்கு ஏத்தமாதிரி எங்க பங்கு சொத்துக்கான பணத்தை அப்பக் கொடுத்திரச் சொல்லிருவோம்.  அது அப்ப பாத்துக்கலாம். எங்க வீட்ல நான் பேசிக்கறேன்”, என முடிவாக கூறியிருந்தார்.

 

ஒருவாராக பிரச்சனை முடிவுக்கு வந்ததாக நிம்மதி பெருமூச்சை விட்டிருந்தார் கௌசல்யா.

///////

 

அதிதீக்கு நீண்ட மாதங்களுக்குப்பின் குழந்தையோடு வந்தவளுக்கு எதிர்கொண்ட விசயங்கள் சற்று மன அழுத்தத்தைத் தந்திருந்தது.

 

நந்தா வந்தால் சற்று ஆதரவாக இருக்கும் என்கிற எண்ணத்தில் நந்தாவின் வருகையை எதிர்நோக்கியிருந்தாள் அதிதீ.

 

நந்தா தந்தையின் சிகிச்சை, கட்டிட வேலைகள் மற்றும் பகுதிநேர பொறியியல் படிப்பு என ஓடிக் கொண்டிருந்தான்.

 

அடிக்கடி வர இயலாத நிலையில் வந்தாலும், ஒரு மணி நேரம் கூட தொடர்ச்சியாக மகனோடும், மனைவியோடும் இருக்க முடியாத நிலை நந்தாவிற்கு.

 

வேற்று ஆளைப்போல வந்ததும் கிளம்புவதுமாக நந்தாவின் வருகை, அதிதீக்கு ஏமாற்றத்தையே தந்தது.

 

குழந்தையைப் பார்த்துக் கொள்ள கௌசல்யா உதவினாலும், ஏனோ மனம் நிம்மதியில்லாது இருந்தது அதிதீக்கு.

 

காமாட்சி, அதிதீ, நந்தா தங்கியிருந்த வீட்டில் இருந்தவாறு முனியாண்டியின் சிகிச்சை விசயங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை, நந்தா வாயிலாக அறிந்து கொண்டாள் அதிதீ.

 

தீனதயாளனின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது.

///////////////

 

நந்தாவின் தந்தை உடல்நலம் தேறி வீட்டிற்கு வரவே ஒரு மாதம் கடந்திருந்தது.

 

அதன்பின்னும் கிராமத்திற்குச் செல்லாமல், நந்தா, அதிதீ தங்கியிருந்த வீட்டில் காமாட்சி கணவரோடும், மகன்களோடும் தங்கியிருந்தார்.

 

அவ்வப்போது நந்தாவின் தங்கையும் தாயிக்கு உதவிக்கு வந்து சென்றிட, கிராமத்திற்கு சென்று வருவதே குறைந்திருந்தது.

 

சிறிது சிறிதாக கிராமத்திலிருந்த பொருள்களை மகன்களின் உதவியோடு எடுத்து வரச் செய்திருந்தார் காமாட்சி.

 

முனியாண்டி பிழைத்ததே பெரிய விசயமாகியிருந்தது.  அதிக இரத்த இழப்பாதலால் மருத்துவர்களின் ஒத்துழைப்போடு நீண்ட சிகிச்சைக்குப்பின் தேறி வந்திருந்தார்.

 

முனியாண்டி எப்போதும் சோம்பி இருந்தவரல்ல.  நல்ல திடகாத்திரமான உடல்வாகு.  அதனால் நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் வந்திருந்தது.

 

நந்தாவும் தான் சேமித்திருந்த பணத்திற்கும் மேல், அதிதீயின் கணக்கில் இருந்த பணத்தையெல்லாம் எடுத்து செலவளித்து தந்தையைக் காப்பாற்றியிருந்தான்.

 

பேரனைப் பார்க்க என வந்தவருக்கு, எதிர்பாரா நிகழ்வால் நடந்த விபத்திலிருந்து மீண்டிருந்தார்.

 

வீட்டிற்கு வந்ததும் நந்தாவிடம், “பேரன் பிறந்து எவ்வளவு நாள் ஆகுது”, என முனியாண்டி கேட்க

 

“ஒரு மாசம் முடியப் போகுதுப்பா”, என்ற மகனிடம், “வீட்டுல போயி பாத்திட்டு வந்திருவோமா”, எனக் கேட்க

 

காமாட்சி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

 

“அப்ப, காச்சி ஊத்திக் கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணு?”, என மகனிடம் கூற

 

“பண்ணணும்”, என்றவாறே தாயைப் பார்த்தான் நந்தா.

 

காமாட்சி எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க, “நீதான எல்லாம் பாத்துச் சொல்லியிருக்கணும்.  இப்டி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்”, என முனியாண்டி மனைவியைக் கடிய

 

“போன மகராசி அதுக்கப்புறம் இந்தப் பக்கம் கூட கண்ணுல காணோம்.  சரி வரத்தான் முடியலை… ஒரு தடவை போனுல பேசலாம்ல”, என தனது மனதில் தோன்றியதை குறையாக காமாட்சி கூறியதோடு

 

“முறையா அவுக சீமந்தம் பண்ணிக் கூப்பிட்டுப் போகல… அப்புறம் எப்டி நாம காச்சி ஊத்திக் கூப்பிட முடியும்.  அதனால சும்மா போயி கூட்டிட்டு வந்தாப் போதும்”, என முடிவாகக் கூறினார் காமாட்சி.

 

நந்தாவிற்கு வருத்தம். 

 

எத்தனையோ முறை கௌசல்யா அதிதீயை வளைகாப்பிற்கு வீட்டில் உள்ளவர்களை அழைக்கும்படி கூறியபோதும் மறுத்திருந்தான்.  அதன்பின் தங்கள் வீட்டிற்கு அதிதீயை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டும் நந்தாதான் மறுத்திருந்தான்.

 

அப்போதைய நிலையில், தன்னால் அதிதீயை விட்டு இருக்க முடியாது என்று தோன்றியதால், “ஒரு ஊருக்குள்ள தானத்தை இருக்கோம்.  அங்க நீங்க மாமாவைப் பாத்துகிட்டு, இவளையும் பாத்துக்கறது கஷ்டம்.  அதனால அதிதீ இங்கேயே எங்கூட இருக்கட்டும்”, என கூறி மறுத்திருந்தான்.

 

தற்போது எந்த உண்மையையும் யாரிடமும் கூற முடியாத நிலை. கூறினாலும் தாய் நம்ப மாட்டார்.  தன்னால்தான் அதிதீக்கு இத்தனை கஷ்டங்களும்.  அதனால் மகனும், மனைவியும் பாதிக்கப்படுவதை எண்ணி மனம் வருந்தியது.

 

அதுவே பெண்ணிடம் இயல்பாகப் பேசவோ, காணவோ செல்ல இயலாமல் தடுத்தது நந்தாவை.

 

காமாட்சியின் பேச்சைக் கேட்ட முடியாண்டி, “அவங்க செய்யலைங்கறதுக்காக, நம்ம பேரனை அப்டியே விடமுடியுமா? முறையோட வீட்டுக்குக் கூட்டிட்டு வரதுதான முறை.  அவுங்க முறை செய்யலைன்னு நீயும் எப்டி செய்யாம இருப்ப?  நம்ம, நாம செய்ய வேண்டியதை எதுவும் மாத்த வேணாம்”, என கூறினார்.

 

அதற்கு கணவனிடம் மறுத்துப் பேச இயலாத நிலையில், “மூனு மாசம் முடிஞ்சி கூப்பிட்டுக்கலாம்”, என்றவர் வாயிற்குள் முனகியபடி அங்கிருந்து அன்றிருந்தார் காமாட்சி.

 

இருவரின் பேச்சையும் அமைதியாகக் கேட்டிருந்த நத்நா, “ப்பா, உங்க உடம்பு சரியான பின்ன அவளை இங்க கூப்பிட்டுக்கலாம்பா. அதுவரை அவ குழந்தையோட அங்கேயே இருக்கட்டும்”, என முடித்திருந்தான் நந்தா.

 

//////

மருத்துவ விடுப்பில் இருந்ததால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள பிரச்சனை ஏதும் இல்லை அதிதீக்கு.

 

ஆனால் பணிக்கு செல்லத் துவங்கிவிட்டால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள வெளியாட்களை நியமிக்க மனம் ஒப்பவில்லை அதிதீக்கு.

 

தந்தையை கவனித்துக் கொள்வதோடு, மகனையும் தற்போதுபோல தாய் கௌசல்யா கவனித்துக் கொள்வார் என்றாலும், இன்னும் எவ்வளவு நாள்கள் இங்கேயே தங்குவது என்கிற தயக்கம் வேறு அதிதீக்கு வந்தது.

 

நந்தாவிடம் அதைப்பற்றி பேச எண்ணி வீட்டிற்கு அழைத்தாலும், நந்தா ஒரு மணித்தியாலம் வந்து இருக்கக்கூட இயலாத நிலையில் ஓடிக் கொண்டிருந்தான்.

 

பெரும்பாலும் அலைபேசியில் பேசினாலும், அதிதீக்கு நந்தாவை நேரில் வருமாறு கூறி அழைத்தாள்.

 

நந்தாவிற்கு அதே ஊரில் தங்க ஏதுவான இடம் இருக்க, அதிதீயின் வீட்டில் வந்து தங்க தயக்கமாக இருந்தது.

 

கௌசல்யா நந்தாவை நன்கு உபசரித்தபோதும், ஏதோ ஒட்டாத தன்மையோடு வந்து சென்ற நந்தாவை என்ன செய்து தன்னோடு தங்கச் செய்யலாம் எனப் புரியவில்லை அதிதீக்கு.

 

ஆனாலும் வீட்டிற்கு கண்டிப்பாக வருமாறு கூறி வைத்திருந்தாள் அதிதீ.

/////////////

 

வந்தவன் சற்று நேரத்தில் கிளம்ப எத்தனிக்க, “இன்னிக்கு ஞாயித்துக் கிழமைதான்டா. போயி என்ன செய்யப்போற. இன்னிக்கு இங்க தங்கிட்டுப்போ”, என அதிதீ கூற

 

இல்லையெனத் தயங்கியவனிடம், “எக்ஸாம்கு போயிட்டு வரதுக்குள்ள காணாம்னு கண்ணு பூத்துப் போற அளவுக்கு என்னைத் தேடிட்டுத் தெரிஞ்சவனாடா நீயி? என்னாச்சுடா.. ஏன் ஒரு மாதிரியாவே இருக்க.  இப்ப என்னைய கண்டுக்கவே மாட்டீங்கற.. என்னடா ஆச்சு”, என கணவனிடம் வருத்தத்தோடு அதிதீ வினவ

 

“ஒன்னுமில்லைடீ”, என நழுவினான்.

 

“இல்லை… நீ முன்ன மாதிரியில்லை. என்னடா எங்கிட்ட சொல்லக் கூடாதா?”

 

“விசயம் எதுவும் இருந்தா உங்கிட்ட சொல்லாம வேற யாருகிட்டடீ சொல்லப் போறேன்”, என்றவனை நம்பாமல் பார்த்தாள் அதிதீ.

 

பிள்ளையை தான் வைத்துக் கொண்டு நந்தாவைக் கவனிக்குமாறு அதிதீயைப் பணித்திருந்தார், கௌசல்யா.

 

நந்தா முன்பைக் காட்டிலும் மேலும் இளைத்துக் காணப்பட்டான்.

 

தனிமை கிட்டியதும் பெண்ணது மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான் நந்தா.

 

“ரொம்ப அலையறியா”, எனக் கேட்டவள் தற்போதைய தங்களின் வீட்டு நிலையை நிதானமாகவே கேட்டறிந்து கொண்டாள் அதிதீ.

 

அனைத்தையும் கேட்டவளுக்கு, காமாட்சி இனி கிராமத்திற்கு செல்லும் எண்ணத்தில் இல்லாததுபோலத் தோன்றியது.

 

அதையே நந்தாவிடம் கேட்க, ஒருவாறாக விசயத்தை ஒப்புக் கொண்டான்.

 

“தனிவீடு பாக்கறேன்னு சொன்னேன்.  எதுக்கு, எல்லாரும் இங்கேயே இருந்துக்கலாம்னு சொல்லுது.  அப்பா இப்பவே கோவிலுக்கு போறேன்னுதான் சொல்லிட்டுருக்கார்.  அவரையும் போக விட மாட்டிங்குது.  பேரனை இங்க வந்து பாக்க வரேன்னு சொன்னவரை யாரு வீட்டுப் புள்ளைய எங்க வந்து பாக்கறதுன்னு ஒரே சத்தம்”, என நடப்பு நிலையைக் கூறிட

 

அதிதீயின் மடியில் படுத்தவாறே கூறியவனின் சிகையை அளைந்தபடியே கேட்டிருந்தவள், “இதுக்குத்தான் இஞ்சித் தின்ன மாதிரியிருந்தியா?”, எனக் கேட்டாள்.

 

மனைவி நீண்ட நாளுக்குப்பின் அவனுக்காக நேரம் ஒதுக்கிட, ஒன்றுவிடாமல் மனதில் பாராமாக இருந்த அனைத்தையும் கூறி நிம்மதியாகியிருந்தான் நந்தா.

 

“ஒன்னும் பிரச்சனையில்லைடா.  அவங்க அங்கேயே இருக்கட்டும்.  தம்பிய நான் அம்மாகிட்ட விட்டுட்டு பேங்க் போயிக்கிறேன்”, என்றிட

 

“அப்ப அங்க வரமாட்டியாடீ”, என சிறுவனைப் போல கேட்டவனிடம்

 

“குழந்தைய வச்சிட்டு, வேலைக்குப் போயிட்டு வரதுக்கு எங்கம்மாகூட இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு.  அதான் சொன்னேன்.  உங்கம்மா பாத்துப்பாங்கன்னா ஒன்னும் பிராப்ளம் இல்லை”, அதிதீ

 

அதிதீ தனது நிலையை தெளிவாக உரைத்திட, மூன்றாம் மாதம் அதிதீயை குழந்தையோடு அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றான் நந்தா.

 

முறை செய்ய காமாட்சி முன்வராததால், தானே நல்ல நாள் பார்த்து, மகளையும், பேரனையும் நந்தாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றார் கௌசல்யா.

/////////////////

 

ஒரு வாரம் இருந்தவளுக்கு தாய் வீடு போல, மகனை பார்த்துக் கொள்ள இயலவில்லை.

 

வீடே அந்நியமாகத் தோன்றியது அதிதீக்கு,  தான் இருந்த வீடுதானா என்கிற சந்தேகம் அவ்வப்போது வந்து போனது.

 

வீட்டு வேலை அதிகமாக இருக்க, குழந்தையை காமாட்சி பார்த்துக் கொண்டாலும், அசதியும், அலுப்பும் அதிதீயை மிகவும் சோர்வுக்குள்ளாக்கியது.

 

காமாட்சியின் வாய் ஓயவில்லை.  அனைத்திலும் குற்றம் கண்டுபிடித்தார்.  “உப்பு, சப்பில்லாம இதென்ன சாப்பாடு..”, எனத் துவங்கி அதிதீ செய்யும் ஒவ்வொரு செயலையும் எதாவது குறை கூறியவண்ணமே இருந்தார்.

 

முனியாண்டி அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாலும், கணவன் மனைவி இருவருக்கும் இடையே எழும் சண்டை ஓய்வதற்குள், மண்டைக்குள் பேஜென்ஜர் இரயில் ஓடிய உணர்வு அதிதீக்கு.

 

நந்தா வீட்டில் இருந்தாலும், அவனிடம் ஒரு வார்த்தைகூட பேச முடியாத நிலை.

 

அனைத்தையும் உணர்ந்தாலும், தனக்காகவோ, மகனுக்காகவோ எதையும் பேச முன்வராத நந்தா.

 

நந்தாவின் தங்கை வீட்டார் வந்தால், கூடுதல் வேலைப் பளு.  அப்போதும் கீதா அதிதீக்கு ஒத்தாசைக்கு வந்தாலும், அழைத்து அமரச் செய்வதிலேயே குறியாக இருந்தார் காமாட்சி.

 

நந்தாவும், தம்பிகள், தாய், தந்தை என அனைவரும் இருக்க, அதிதீயுடன் சாதாரணமாகப் பேசுவதைக்கூட குறைத்திருந்தான்.

 

பெண்ணிடம் பணத் தேவைக்காக மட்டுமே கூடுதல் நேரம் பேசினான். மற்றபடி வேலை, வேலை என்று அலைந்தான்.

 

அனைவரும் வீட்டில் இருக்க, வீட்டு வேலைகளை அதிதீயும், வெளி வேலைகளை நந்தாவும் செய்த வண்ணமிருக்க, அதிதீக்கு வெறுமை மனதைச் சூழ்ந்திட, மிகவும் சோதனையாக உணர்ந்தாள்.

 

அடுத்த வாரத்தில் பேரனைப் பார்க்க வந்த  கௌசல்யா, மகளின் வாடிய, தோற்றம் கண்டு, முனியாண்டி, காமாட்சி இருவரிடமும் நேரிடையாகவே பேசிவிட்டார்.

 

“அங்க இவங்கப்பாவை பாத்துக்கற நேரம் போக பேரனையும் பாத்துகிட்டிருந்தேன். பேரன் இங்க வந்ததும் வீடே வெறுச்சோடிப் போனமாதிரி இருக்கு.  நீங்க நல்லாத்தான் பாத்துக்குவீங்க.  ஆனாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு பேரனை வளத்துவிட்டா வேலைக்குப் போற அதீக்கு ஒத்தாசையா இருக்கும்னு தோணுது.  பேரன் வளர்ற வரை அங்க இருந்து பேங்க்குக்கு போயிட்டு வரட்டும்.  என்னணே சொல்றீங்க”, எனக் கேட்க

 

“அது மருமக இஷ்டம்மா.  அதுக்கு எங்க இருக்கணும்னு நினைக்குதோ அங்க இருந்து போயிட்டு வரட்டும்.  இதுக்குப் போயி எங்கிட்ட எதுக்கும்மா கேட்டுக்கிட்டு”, என முனியாண்டி பேசி முடிக்க,

 

காமாட்சிக்கு அதில் உடன்பாடு இல்லை.  ஆனாலும் கணவன் பேசியதும் உடனே மறுத்துப் பேசத் தயங்கி அமைதியாகியிருந்தார்.

 

வாரம் ஒன்று கடந்திட, நந்தாவிடமும் விசயத்தைக் கூறிய அதிதீ, “இங்க உங்க வீட்டாளுங்க எல்லாரும் இருக்கட்டும்.  என்னையும் தம்பியையும் அம்மா வீட்லயே விட்ருடா”, என்றவள் “நீ மட்டும் அம்மா வீட்ல எங்ககூட வந்து இருந்துக்கோ.  அப்பப்ப இங்க வந்து பாத்துக்க”, எனக் கூற

 

“அப்ப இந்த வீட்ல நீ யாரு?  நான் யாரு?”, என இரண்டாம் முறையாக கோபமுகம் காட்டியிருந்தான் அதிதீயிடம்

 

அடுத்த அத்தியாயத்தில்…