VVO18

VVO18

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 18

 

நீரு பூத்த நெருப்பாக மனைவியின் மீது அதிருப்தி இருந்தபோதும், அதிதீயின் வீட்டில் வைத்து எதையும் பேச விரும்பவில்லை நந்தா.

 

இரண்டொரு நாள் கழித்து இதைப்பற்றிப் பேசலாம் என எண்ணியவன், “கொஞ்ச நாள் இங்க இரு!  அப்புறம் நிதானமா பேசி முடிவுக்கு வரலாம்!”, என்று கூறிவிட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பிவிட்டான் நந்தா.

 

அதிதீ தங்குமாறு கூறியதை ஆட்சேபித்து கிளம்பியிருந்தான்.

 

பெண்ணது வீட்டில் சென்று தங்குவதை தாய் காமாட்சி நந்தாவிடம் ஆட்சேபித்த வண்ணமிருந்தார்.  ஆகையினால் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க எண்ணிக் கூறிவிட்டு கிளம்பினான்.

 

“மாமியா வீட்டோட போயி மருமகன் இருந்தா.. அந்த வீட்டுல இருக்கற நண்டு, சிண்டுக மண்டைக்கு மேல இருக்கற ம..று கூட மரியாதை குடுக்காது”, என கூறியதிலிருந்தே காமாட்சியின் எதிர்ப்பை உணர்ந்து கொண்டிருந்தான் நந்தா.

 

இரவில் சென்றாலும் உறங்க தங்களது வீட்டிற்கு வந்துவிடுவான்.

 

மாதம் ஒன்று கடந்திருந்தது.

 

காமாட்சிக்குத்தான் உடல் வளையாமல் சிரமப்பட்டார்.  இதுவரை அதிதீ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க, உண்ணுவதும், சீரியல் பார்ப்பதுமாக பொழுதைக் கழித்தவருக்கு, அனைத்தையும் தானே செய்யும் நிலை வந்திடவே சிடுசிடுப்போடு வலம் வந்தார்.

 

நந்தாவிடமும், “போனா போன இடம்னு வீட்டுப் பொம்பிளை இருந்தா நல்லாவா இருக்கு!  எல்லாம் அப்டியப்டியே கிடக்கு!  ஒரு மாசமாச்சு.  இன்னும் வீட்டுக்கு வராம இருந்தா கிடக்கிற வேலையெல்லாம் யாரு பாப்பா!”, என நந்தாவிடம் கேட்க

 

“வீட்டுல நீதானம்மா இருக்க.  அப்ப நீதான பாக்கணும்”, என நந்தா கூறிவிட

 

பிலுவிலுவென சண்டைக்கு வந்துவிட்டார் காமாட்சி.

 

நந்தாவிற்கு தப்பாக எதுவும் பேசியதுபோல தோன்றவில்லை.  ‘என்ன கூறிவிட்டேன் என காலில் சலங்கை கட்டாமல் தாய் ஆடுகிறார்’, என மனதிற்குள் நினைத்தாலும், சலிப்பாக உணர்ந்தான் நந்தா.

 

அதுவரை எதையும்பற்றி அதிதீயிடம் பேசாதவன், அடுத்த முறை பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்வது பற்றிப் பேசினான்.

 

“இல்ல நந்தா.  எனக்கு இங்க இருந்து பேங்க் போக வர வசதியா இருக்கு.  நம்ம முகிலையும் எங்கம்மாவே பாத்துப்பாங்க!”, என இழுவையோடு நிறுத்த

 

“… ஏன் நிறுத்திட்ட… சொல்ல வந்ததை முழுசாச் சொல்லு”, நந்தா

 

“….”, பெண் அமைதி காத்திடவே

 

“அங்க இருந்தும் அதே தூரம்தானடீ. எங்கம்மாவும் நம்ம முகிலைப் பாத்துக்க தானே செஞ்சது!”, வீட்டினுள் நடக்கும் கீழ்மட்ட அரசியலை அறியாதவன் அவ்வாறு கேட்டான்.

 

“எங்கம்மா மட்டும் தனியா இருப்பாங்க.  ஒருத்தவங்களுக்காக எதையும் செய்ய நினைக்க மாட்டாங்க.  அதுனால அம்மாகூட கொஞ்ச நாள் இருந்தா அவங்களும் கொஞ்சம் டைவர்ட் ஆவாங்க.  அதனாலதான் இங்க இருக்கேன்னு சொன்னேன்”, என தாயின் மீது பழியைப் போட

 

“அதுக்காக இங்கேயே இருந்தா நல்லா இருக்காதுடீ!”, அதிதீ இங்கேயே தங்கிவிடுவாளோ என்கிற பதைபதைப்போடு பேச

 

“ஏன் நல்லா இருக்காது நந்தா?”

 

“யாராவது எதாவது சொல்லுவாங்க”

 

“அந்த யாருக்காகவோ நாம எதுக்கு நம்ம வாழ்க்கைய குழப்பிக்கணும்.  இங்க காலையில முகிலை கிளப்பி, நானும் கிளம்பினாப் போதும். எங்கம்மாவே சமையல் எல்லாம் பாத்துப்பாங்க.  அதேபோல ஈவினிங் வந்ததும் ரெக்கையக் கட்டிக்கிட்டு வேலை பாக்க வேண்டியதில்லை.

 

இங்க எனக்கு ரிலாக்ஸ் பண்ண நேரமிருக்கு.  முடிஞ்சா நைட் சமையல் பாப்பேன்.  இல்லைனா அதையும் எங்கம்மாவே பாத்துப்பாங்க.  அங்க இருந்தா என்னால அப்டி இருக்க முடியாது.  விடிஞ்சதுல இருந்து எல்லா வேலையும் பாத்து வச்சிட்டு பேங்க்கு போனாலும் உங்கம்மாவுக்கு திருப்தி இருக்க மாட்டிங்குது.  அதனால இங்க இருந்தே இனி நான் வேலைக்குப் போயிக்கறேன்”, என தீர்மானமாக தனது முடிவைக் கூறியிருந்தாள் அதிதீ.

 

“இதுதான் உன் முடிவா?”

 

“வீட்டையும் பாத்திட்டு, வேலைக்கும் போயிட்டு, குழந்தையும் பாத்துக்கறது எவ்வளவு சிரமம்னு உனக்குப் புரிய மாட்டிங்குது நந்தா.  திடுதிப்புனு யாருகிட்டயும் தன்னோட பிளான டிஸ்கஸ் பண்ணிக்காம காலையில கிளம்பி ஊருக்குப் போயிறாங்க உங்கம்மா.  நினைச்ச நேரத்தில எனக்கு லீவு எடுக்க முடியறதில்லை.  அப்டி சில நாள் உங்கம்மா ஊருக்குப் போனப்ப, எங்கம்மாகிட்டதான் முகிலை கொண்டு வந்து விடற மாதிரி இருக்கு.  அதுக்கு எங்கம்மாகிட்டயே தம்பிய விட்டுட்டா எனக்கு எந்த டென்சனும் இருக்காது”, என தனக்கான விளக்கம் கூற

 

“ம்ஹ்ம்…”, என பெருமூச்சுவிட்டவன், “நீயே எல்லாம் பாக்கறதால அங்க வரமுடியாதுங்கற… அப்டித்தான.. ம்..”, என சற்று குரல் மாறிய தினுசில் கேள்வியை கேலியாக கேட்டுவிட்டு கிளம்பிவிட்டான் நந்தா.

 

தனக்கு முன்பைப்போல வருமானமின்றி அதிதீயைச் சார்ந்து இருப்பதால் அவ்வாறு பெண் பேசுகிறாள் என்கிற எண்ணம் நந்தாவிற்கு முன்பே வந்திருக்க, இன்றையப் பேச்சில் வலுத்திருந்தது. அதே மனநிலையோடு கிளம்பியிருந்தான்.

 

முன்பானால் தனக்காக யோசிப்பவள், தற்போது தனக்கென யோசிக்காதது கோபத்தை உண்டு செய்திருந்தது.

 

எல்லாம் அவ்ளோதானா?

 

இதுக்குத்தான் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணேனா?

 

நான் அவளுக்கு இனி தேவையில்லையா?

 

நான் சம்பாத்தியம் பண்ணாம சும்மா இருக்கறதால என்னோட பேச்சைக் கேட்க மாட்டிங்கறாளா? என்பதான ஏராளமான கேள்விகள் மனதிற்குள்.

 

அதன்பின் அதிதீயின் வீட்டுப் பக்கம் வந்து மகனைப் பார்ப்பதோடு கிளம்பிவிடுவான். முன்பைப்போல பெண் வீட்டில் இருக்கும்போது வருவதை முற்றிலும் தவிர்த்திருந்தான் நந்தா.

 

மீண்டும் புதிய கட்டிடப் பணிகளை எடுத்துப் பார்க்க மனம் உந்தியது.

 

ஆனாலும் பகுதிநேர பொறியியல் கல்வியை இன்னும் ஓராண்டில் முடித்துவிட்டு தொடங்கலாம் என்கிற எண்ணம் வந்தது. 

 

நாகேந்திரன் போன்றோர் தனது வேலைகளில் குற்றம் கூறவும், குறை சொல்லி தனக்குக் கிடைப்பதை தட்டிப் பறிக்கும்படியாக எதையும் தற்போது செய்யக்கூடாது என்கிற முடிவினை யோசித்து பின்வாங்கியிருந்தான்.

 

அதற்கிடையில் தான் பார்க்கும் அலுவலகம் சார்ந்த பணியிலிருந்து வரும் சொற்ப வருமானத்தைப் பெருக்க யோசித்தான்.

 

மராமத்துப் பணிக்கு என வந்த கட்டிடங்களைப் பார்க்க முடிவு செய்தான்.  எத்தகைய மராமத்துப் பணிகளையும் நிராகரிக்காமல், எடுத்துப் பார்க்கத் துவங்கியிருந்தான்.

 

காமாட்சி முன்பைக் காட்டிலும் செலவிற்கு பணம் அதிகமாகக் கேட்டார்.

 

என்ன? எதற்கு? எனக் கேட்ட நந்தாவிடம், கீதாவிற்கு குழந்தைபேறு சிகிச்சையை தொடர்வதாகக் காரணம் கூறினார். அத்தோடு மகளையும் புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் காமாட்சி.

 

“நாமதான தலைப் பிரசவம் பாக்கணும்.  அதுக்கு நீ செலவளிக்காம யாரு செலவளிப்பா”, என்றிருந்தார் நந்தாவிடம்.

 

கீதா வந்த ஒன்றிரண்டு நாளில் அவளது கணவரும் இங்கேயே வந்து தங்குவதை வாடிக்கையாக்கியிருந்தார்.

 

வந்த மாப்பிள்ளையை கவனிக்க வேண்டும் என அதற்கும் செலவை இழுத்துவிட்டார்.

 

இரண்டு நாள்கள் அமைதியாக இருந்தவன், மூன்றாம் நாளும் அதேபோல வந்துநின்ற தாயிடம், “இருக்கறதை வச்சு எதனா செய்யும்மா.  டெய்லி ஆயிர ரூபா செலவளிக்கற அளவுக்கு இன்னும் நான் சம்பாதிக்க ஆரம்பிக்கலை.”

 

“அதுக்காக.. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு ஏனோதானோன்னு எப்டிப்பா செய்யறது?”

 

“ரொம்பப் பண்ணாதம்மா. நான் காலேஜ் போக ஆரம்பிச்ச பின்ன பில்டிங் வேலை பாக்கறதை விட்டுட்டேன்னு உனக்கும் தெரியும்.   வீட்டுச் செலவுக்கே நான் அவகிட்ட வாங்கித்தான் எல்லாம் செய்யறேன்.  இதுல நீ பண்ணறது அநியாயமாப்படலை!.  ராஜேஷ் வேலைக்குப் போயிட்டு வந்து காசை உங்கிட்டத்தானே குடுக்கறான்.  அது வச்சிருப்பல்ல.. அதை வச்சிப் பாரு.  இப்ப என்னை விடு”, என விடுவிடுவென கிளம்பிச் சென்றிருந்தான்.

 

நந்தா, அதிதீ தங்கியிருந்த அறையை அவர்களுக்கு ஒதுக்குமாறு காமாட்சி அதிகாரமாகக் கூற நந்தா அனைத்தையும் அமைதியாகவே தாயின் பேச்சைக் கேட்டு செய்துவிட்டுக் கடந்திருந்தான்.

 

அதேபோல மகன் தற்போதும் அமைதி காப்பான் என நினைத்துப் பேச, இன்று வழமையை விடக் கத்தியது அதுவும் மருமகன் வீட்டில் இருக்கும்போதே தன்னைப் பேசியது மனதில் வருத்தத்தைத் தந்திருந்தது காமாட்சிக்கு.

 

ஆனாலும் புலம்பியவாறே அன்றைக்கும் கையில் வைத்திருந்த பணத்தைக் கொண்டு நல்ல விருந்து உபச்சாரம் மருமகனுக்கு நடைபெற்றது.

///////////////

 

அதிதீ ஒரு வாரம் நந்தாவைக் காணாமல் குழம்பினாள்.

 

நந்தாவிற்கு அழைத்தாலும் அழைப்பை ஏற்பதில்லை.

 

அதுவரை தனது முடிவில் திடமாக இருந்தவள், நந்தாவின் திடீர் பாராமுகம், நிராகரித்தலில் சோர்ந்து போனாள் அதிதீ.

 

ஏதோ ஒன்று தன்னை அழுத்துவதாக உணர்ந்தாள்.

 

அதே வாரத்தில், தங்களது வங்கிக்கு வருகை தந்திருந்த அதிதீ பணிபுரிந்த பள்ளியின் முதல்வரைக் கண்டதும் பெண்ணுக்கு மனமெங்கும் மகிழ்ச்சி.

 

“ரொம்ப ரேர்ராதான் இங்க வரீங்க மேம்”

 

“ஆமாண்டா.  இங்க நான் நேருல வந்துதான் ஃபர்தரா புரசீட் பண்ணணும்னு சொன்னா மட்டும் வருவேன்.  இல்லைனா ஆபீஸ்லயே பாத்துப்பாங்க”, என்றிருந்தார்.

 

அதிதீயைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்.

 

வந்தவருக்கு வேண்டிய உதவியைச் செய்தவள், அவரை இன்முகமாக அனுப்பி வைக்க வெளியே வந்தாள்.

 

“நாம் போயிக்குவேன் அதிதீ”, என்றவர் சற்று தயங்கி, “இப்போ தன்னம்பிக்கையோட அளவு உனக்கு கூடியிருக்கும்.  ஆனாலும் வர்க் டென்சன் வந்திருச்சு போலயே”, என அதிதீயின் முகத்தைக் கண்டு வினவ

 

“அது இருக்கத்தான் மேம் செய்யுது.  எயிட் ஹார்ஸ் டியூட்டி டைம்னாலும், டென் டூ ட்வெல்வ் ஹார்ஸ் இங்கேயே ஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கு சில நாள்கள்ல. அப்டியொரு வேலை இழுக்குது”

 

“எல்லாம் அப்டித்தான்.  வர்க்னு வந்துட்டா மல்டி ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் வந்திரும். அதும் பொண்ணுங்க ஓயாம ஓடிட்டே இருக்க வேண்டிய நிலை.  வயிஃபா, மதரா, இன்லாவா, தென் பாட்டியானு பொறுப்புகள் கூடிட்டேதான் போகும்.  அதுல ஓஞ்சுபோயிட்டா நமக்குனு எதுவுமே இல்லாமப் போயிரும்.  கடைசிவரை இந்த ஓட்டம் பொண்ணுங்களுக்கு ஓயாது.  ஆனாலும் அத்தனையையும் இழுத்துப்போட்டு செஞ்சாலும், நாம சந்தோசமாத்தான் இருப்போம்”, என்றவர்,

 

“நம்மலாள கண்டிப்பா முடியும்னு தன்னம்பிக்கையோட, இடையில் வரக்கூடிய பிரச்சனைகளை மண்டையில ஏத்திக்காம ஓட வேண்டியதுதான்.  இதுல ரொம்ப முக்கியம் நம்ம கன்வீனியன்ட்.  அதுல காம்ப்ரமைஸ் பண்ணா நம்ம ஃபியூச்சர் பெயிலியர்தான்.  யாருக்கும் பாதிப்பு வராம நம்ம வேலையப் பாத்துட்டு இருந்தாலும் அன்எக்ஸ்பெக்டட்டா பல இஸ்யூஸ் வரும்.  அதை மனசுல ஏத்திக்கக்கூடாது.  அப்பதான் நம்மால பீஸ்புல்லா ட்ராவல் பண்ண முடியும்.  உடம்பை பாத்துக்க.. ரொம்ப மெலிஞ்சு திரியற”, என விடைபெற்றிருந்தார்.

 

நீண்ட நாளுக்குப்பின் மனம்விட்டுப் பேசியதில் சற்றே இதமாக உணர்ந்தாள் அதிதீ.

 

தாயும் நந்தாவின் மாறுபாட்டைக் கவனித்து அதிதீயிடம் கேட்டிருக்க, இன்று முதல்வரின் பேச்சிற்குப்பின் ஒரு முடிவோடு வீடு திரும்பினாள் அதிதீ.

…………….

 

தனக்குள் வைத்து மனைவியை எண்ணிப் புழுங்கிக் கொண்டிருந்தவன் அதன்பின் மனைவியைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தான்.

 

அப்படியே பார்க்கத் தூண்டினாலும், அவள் வழமையாக பணிக்குச் செல்லும் பாதையில் வழிப்போக்கன்போல சென்று அவளிற்கு தெரியாமல் பார்ப்பானே அன்றி, பெண்ணுக்குத் தெரியும்படியாக செல்வதைத் தவிர்த்திருந்தான்.

 

ஆனால் சமீபத்திய தாயின் பேச்சு வேறு நந்தாவை யோசிக்க வைத்தது.

 

வழமைபோல பணிக்குக் கிளம்பியவள், வங்கிக்கு செல்லாமல் நந்தாவைக் காண அலுவலகத்திற்கு சென்றாள் அதிதீ.

 

ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, கட்டிடப் பணிக்கான ஆட்களை நியமித்துவிட்டு, அதிதீ வங்கிக்கு செல்லும் வழியில் வேலையிருப்பதுபோல எங்காவது நின்றிருப்பான்.

 

முந்தைய தினம்தான் மனைவியைப் பார்த்திருந்தமையால், அன்று ஒன்பது மணியளவில் அலுவலகம் சென்றுவிட்டான்.

 

அலுவலகத்தில் இருப்பானோ இல்லை வெளிவேலையாகத் திரிகிறானோ என எண்ணியவாறே வந்தவள் கணினியில் கண்பதித்திருந்தவனைக் கண்டு, “என்ன சார்.  ரொம்ப பிஸி போல”, என நக்கலாகவே கேட்க

 

“…”, எதுவும் பேசாமல் நிமிர்ந்து பார்த்துவிட்டு, கணினியில் கண்ணைத் திருப்பிவிட்டான்.

 

‘இன்னிக்குத்தான் இவளுக்கு என்னைப் பாக்கணும்னு தோணிருக்கு’, என நினைத்தவாறே வேலை பார்ப்பதுபோல கணினியின் திரையில் பார்த்திருந்தான்.

 

அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தவள், “என்ன உன் பிரச்சனை?”

 

“…” ‘ஏன் உனக்குத் தெரியாதோ?  எங்கூடவே இருக்கணும்’, தனக்குள் உள்ளதை வெளியில் சொல்லாமல் அமைதி காத்தான்.

 

“என்னடா?  ரொம்பப் பண்ற?”

 

“…” ‘யாரு? நீயா? இல்லை நானா?’ என எண்ணியபடியே அமர்ந்திருந்தான். ஆனால் பெண்ணைத் திரும்பிப் பார்க்கவில்லை.

 

“அப்ப இனி எங்கூட பேசமாட்ட…”, வந்தது முதல் மனதில் அழுத்தமிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், சிரித்த முகமாகவே கணவனிடம் கேட்டாள் அதிதீ.

 

திருமணத்திற்கு முன்புவரை பெண்ணைத் தேடித் திரியும் ஆண்கள், அதன்பின் பெண் தன் வசமானபின் முற்றிலுமாக மாறிவிடுவதுதான் ஆச்சர்யம்.

 

அதன்பின்புதான், தொழில், பணி, எதிர்காலம் என முக்காலத்தையும் அவனால் சிந்திக்க இயலும்போலும்.

 

ஆண் பிறவியின் இயல்பு அத்தகையதுதான்.

 

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக பெண்.  திருமணத்திற்கு முன்பு ஒருவனைக் கண்டு கொள்ளவே யோசிப்பாள். 

 

அதன்பின் அவன் கண்டு கொள்ளவில்லையெனில் துயரத்தைத் தனக்குள் போட்டுக்கொண்டும், அவனது தவிர்ப்பைத் தவிர்த்துவிடத் தவிப்பதுமாக.. குழம்பினாலும், அதை நீட்டித்து, அதனுள் மூழ்கி, மறத்துப்போக விரும்பாத மனம். 

 

ஏனெனில் அவளை நம்பி இன்னும் பிற ஜீவன்கள் இருக்கின்றனவே.

 

குழந்தை, வீடு, சிக்கனம், எதிர்கால சேமிப்பு  எனத் தனது குறிக்கோளையே திரும்பி, அதில் ஆசுவாசம் கொள்வதுமாக, இடையில் எதிர்கொண்ட தடைகளை, படிகளாக்கி முடிவில் வென்றிடுவதையுமே தனக்கான குறிக்கோளை அடைந்திடுவாள்.

 

“…” ‘நாம் பேச வேண்டியதை பேசிட்டேன்.  ஆனா நீதான் எம்பேச்சைக் கேக்கலை’

 

“பர்மிசன் போட்டுட்டு வந்தேன்.  உனக்கு எங்கூடப் பேச நேரமில்லையா? மனசில்லையானு தெரியலை.  எம்பின்னாடி சுத்தின நந்தாதானா நீனு இருக்கு?  ஈகோ வந்துருச்சு.  உன்னைக் காயப்படுத்த நான் விரும்பல.  என்னைக்கும் உனக்காகவே வாழ்ந்தாலும், என்னோட சுயமரியாதையை விட்டுட்டு உங்கம்மாகூட ஒரே வீட்ல என்னால வாழமுடியும்னு தோணலை.

 

பிடிக்காத மருமகதான் நான்.  அதனால அவங்க அப்டித்தான் நடந்துப்பாங்க.  அது உனக்கும் தெரியும்”, என நிறுத்தியவள் எதையும் கேட்டதுபோல காட்டிக் கொள்ளாமல் இருப்பவனைப் பார்த்தவள் 

 

“பேச யோசிக்கிற உங்கிட்ட நாம்பாட்டுக்கு வந்து புலம்பரதுகூட வேஸ்ட்.  இப்பவும் எங்கம்மாவை பகடையா வச்சு அந்த வீட்டுல நான் சுகமா வாழப் பாக்கறேனே தவிர, எங்கம்மாவுக்காக அந்த வீட்ல இருக்கலை. அதுதான் உண்மை.  எனக்கும், என்புள்ளைக்கும் எது நல்லதுனு மட்டுந்தான் யோசிக்கறேன். சுயநலந்தான் அது.  வேற வழியில்லை.  அது உனக்குப் புரியவரும்போது நீயே என்னைத் தேடி வந்திருவ.  பாக்கலாம்”, என கிளம்பிவிட்டாள்.

 

‘என்னடீ.. வந்து பேச ஆரம்பிச்ச உடனே பொசுக்குனு கிளம்பிட்ட..! கொஞ்ச நேரம் கெத்து மெயிண்டெயின் பண்ணலாம்னு நினைச்சா, வெத்தா என்னை உக்கார வச்சிட்டுப் போறாளோ’, எனும் புலம்பலோடு, குழப்பமும் சேர்ந்து கொண்டிருக்க, கண்ணாடிக் கதவிற்கு மறுபக்கம் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்தபடியே தலையைப் பிடித்தவாறே அமர்ந்திருந்தான் நந்தா.

………………

அன்று இரவு சற்று தாமதமாகவே வீடு திரும்பினான் நந்தா.

 

கல்லூரியில் இருந்து திரும்பிய பிறகு, கட்டிடத்திற்கு சென்றுவிட்டு வந்த மகனின் தாமதத்திற்கான காரணத்தை அறிய விரும்பாமல், நேரம் தவறிய வருகையை உணர்ந்து, “இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்”, எனத் துவங்க

 

பாதியிலேயே உணவிலிருந்து எழுந்தவன், வெளியேற

 

“எனக்கென்ன வயசா திரும்புது.  ஏதோ முடியாமப்போன ஆத்தாமையில ஒரு சொல்லு அவளை நான் சொல்லக்கூட உரிமையில்லையா?”, என கண்ணீரோடு காமாட்சி ஆரம்பிக்க

 

“நீ பாத்திட்டுருந்த வேலையதானம்மா, எப்பவும் போல இப்பவும் பாக்கற.  அதுக்கு எதுக்கு அவளை இங்க வரச் சொல்லிட்டு இருக்க.  வேலைக்கும் போயிட்டு, வீட்டு வேலையும் பாத்துட்டு, புள்ளயவும் பாத்துட்டு அவளும் எத்தனை நாளுக்குத்தான் ஓடுவா.  அவளுக்கும் ரெஸ்ட் வேணுமில்ல.. கொஞ்ச நாள் அவங்கம்மா வீட்லயே இருந்துட்டு வரட்டும்”, என பொறுமையோடு கூறவே

 

கீதாவும், மாப்பிள்ளையும் அறைக்குள் இருப்பதை உணர்ந்து சற்றே இயல்பாக இருப்பதுபோல காட்ட முயன்றான் நந்தா.

 

“ஓடியாடி திரிஞ்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சு”, காமாட்சி

 

“உன்னால முடிஞ்சதைப் பாரு.  இல்லைனா ஊரு சுத்திட்டு நேரத்துக்கு சாப்பிட வரான்ல ரமேஷூ, அவங்கிட்ட வேல வாங்கு.  அதவிட்டுட்டு அவளோட எதுக்கு போட்டி போடுற?”

 

“ம்ஹ்ம்… ஊருக்கில்லாத பொண்ணு அவ.  ரொம்பத்தான் தாங்கற”

 

“என்னத்தைத் தாங்குனேன்.  யாரு தாங்கறானு வந்து இப்ப சொல்லு. இங்க வா”, என தாயை அருகே அழைத்து அமரச் செய்தவன், அதிதீ வங்கிப் பணிக்குச் சென்றது முதல், இன்றுவரை இந்த வீட்டிற்காக எவ்வளவு செய்திருக்கிறாள் என்பதையும், தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையும் விளக்க

 

“அதுக்கு.. ஊருல இவ மட்டுந்தான் வேலைக்குப் போற மாதிரி பேசற”, புரிந்தாலும், அதை ஒப்புக் கொள்ளாமல் காமாட்சி

 

“சரி.. அதை விடு.  இப்ப உன்னை எடுத்துக்குவோம்”, என்றவன், “நிலம் வேணுனு வாங்கினியே?  அது இப்ப என்ன நிலையில இருக்கு”

 

இதை காமாட்சி எதிர்பார்க்கவில்லை.  “ம்ஹ்ம்.. அது உங்கப்பாவுக்கு முடியாதப்ப வித்துட்டேன்”

 

“என்னது..! நான் வாங்கிக் குடுத்ததை எங்கிட்ட கேக்காம எப்டிமா விக்க மனசு வந்தது?”

 

“வேற வழி தெரியலை. உங்கப்பாவை ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் கூட்டிகிட்டுத் தெரிஞ்சப்ப,  காசுமுடைனு(பணப்பற்றாக்குறை) வேற சொன்ன.  அப்ப நம்ம கீதாவுக்கும் ஆஸ்பத்திரில பாக்க வேண்டி இருந்தது.  அதுக்குத்தான் வித்துட்டேன்”

 

“சரி யாருக்கிட்ட வித்த?”

 

“ஏன்”

 

“இல்ல சொல்லு”

 

“எங்க அண்ணங்கிட்டதான்…”, என காமாட்சி கூற

 

தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான் நந்தா.  தாயின் செயலில் உண்டான கோபம் எதையாவது பேசி வைத்தால் பிறகு சிரமம் என்றெண்ணியவன், வெளியே கிளம்பிவிட்டான்.

 

‘யாரோ ஒருவர் உதிரமும், சதுரமும் நோக சம்பாதிக்க… தன் மனம்போன போக்கில் யாருடைய துயரமும் தெரியாமல் அவர்களது எண்ணம்போல வாழ்கிறார்கள்.  இவர்களுக்காக அவளைத் தள்ளி நிறுத்திய தன் மடமைத்தனத்தை என்ன செய்ய?’, எனும் புலம்பலோடு அலுவலகத்திலேயே இரவில் படுத்துவிட்டான்.

 

அடுத்தநாள் காலையில்தான் வீட்டிற்குத் திரும்பினான்.

 

வீட்டிற்கு வந்த மகனிடம், “அப்ப அது இனி இங்க வராதா?”

 

மனைவியைத்தான் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டாலும் “எது?”, என கோபமாகக் கேட்க

 

“வேற யாரை நான் கேக்கப் போறேன்”, என இழுக்க

 

“முகில் பெரியவனாகறவரை அங்கேயே இருக்கட்டும்னு நாந்தான் சொன்னேன்”, என தன்மீதே பழியை போட்டுக் கொண்டான் நந்தா.

 

“நல்லா குடும்பம் நடத்துறீகடா… இந்தக் காலத்து புள்ளைங்க!  ஒத்த வார்த்தை எங்கிட்ட கேக்கணும்னு தோணலைல!”, என மகனைப் பார்த்து கோபமுகமாகக் கேட்க

 

“நீ எல்லாத்தையும் அப்பத்தாகிட்ட கேட்டுகிட்டா பண்ண! கல்யாணம் பண்ணவுடனே அப்பாவோட தனிக்குடித்தனம் வந்துட்டேனு நீதான எங்கிட்ட அடிக்கடி சொல்லிருக்க!”, என சரியான நேரம் பார்த்து பழையதை உள்ளபடியே உரைக்க

 

அதற்குமேல் காமாட்சி வாயைத் திறக்கவில்லை.

 

இதுவரை தெரியாமல் நின்று பார்ப்பவன், பெண்ணை நேரில் சந்தித்திட எண்ணிக் கிளம்பிவிட்டான்.

///////////

 

தாயின் மீதிருந்த மனவருத்தம், அதிதீயின் பால் இரக்கத்தை உண்டு செய்திருந்தது.

 

நீண்ட நாள்களுக்குப்பிறகு அப்போதே மனைவி வீட்டில் இருக்கும்போது மாமியாரின் வீட்டிற்குச் சென்றான் நந்தா.

 

முன்பைக் காட்டிலும் மகன் சற்றே தெளிந்தும், அதிதீ மெலிந்தும் காணப்பட்டதை கண்டவனுக்கு, ஏதோ புரிந்தும் புரியாததுபோல இருந்தது.

 

ஆனாலும் மகனைத் தூக்கி வைத்திருந்தவன், பெண் தாயிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியதும், டூவிலரில் அழைத்துச் செல்ல எண்ணி மகனை  மாமியாரிடம் கொடுத்துவிட்டு வெளிவருவதற்குள் நந்தாவை எதிர்பார்க்காமல் கிளம்பியிருந்தாள் அதிதீ.

 

அதிதீக்கோ, ‘பயபுள்ளை இன்னைக்கு தன்னை மறந்து வந்திருக்குபோல!   ஏதோ ஞாபகத்தில நான் இருக்கும்போதே வீட்டுக்கு மகனைப் பாக்க வந்திருக்கு.  இந்த வாண்டெல்லாம் பெரிசுன்னு பாக்க வரான்.   வாண்டடா இவனுக்காக எல்லாத்தையும் பகைச்சிக்கிட்டு, இவனையே நினைச்சிட்டு உருகிற நானு தரிசு மாதிரியாகிட்டேன்’, எனும் கழிவிரக்கம் உண்டாக வங்கியை நோக்கிக் கிளம்பியிருந்தாள்.

 

தன்னைக் கண்டு கொள்ளாது கிளம்பிய மனைவியை ஏமாற்றத்தோடு பார்த்திருந்தான்.

 

நந்தாவின் வாடிப்போன முகத்தைப் பார்த்த கௌசல்யாவிற்கு, ‘வெண்ணைய் திரண்டு வரும்போது, தாழிய உடைச்ச மாதிரி பண்றாளே இவ’, என மனதிற்குள் மகளைத் திட்டியவாறே கண்டு கொள்ளாததுபோல அவ்விடத்தைவிட்டு பேரனோடு நகர்ந்திருந்தார்.

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

error: Content is protected !!