வெல்லும் வரை ஓயாதே!
வெல்! ஓயாதே – 6
வழமையாக எட்டாயிரம் ரூபாய் மாதந்தோறும் தாயிக்கு தந்திருந்தான் நந்தா. அதேபோல இந்த மாதமும் தாய் கேட்பார் என்பதை நந்தாவே எதிர்பார்த்திருக்கவில்லை.
வீட்டிற்கு அவ்வப்போது செல்லும்போது, காமாட்சியே சில விசயங்களைக் கேட்டிருந்தார்.
நந்தாவும் மறைக்காமல் பதில் கூறியிருந்தான்.
வாடகை வீடு, இதர செலவினங்கள் அனைத்தையும் பற்றி விசாரித்து அறிந்திருந்தும், தாய் வழமைபோல கேட்ட தொகையை எண்ணி மனதில் வருத்தம் சூழ்ந்திருந்தது.
தம்பி கேட்டதும், தயக்கத்தோடு முகத்தைப் பார்த்தவன், “அண்ணே செங்கல்பட்டு போகவேண்டி இருக்குடா. அங்கதான் இனி வேலை. போக வர பணம் செலவுக்கு வேணும். அம்மாகிட்ட ஆறாயிரம் தந்தேன்னு இதக் குடுத்துரு”, என கையில் இருந்த ரூபாயோடு, ஆயிரம் சேர்த்து ராஜேஸின் கையில் கொடுத்தான்.
நான்காயிரத்தோடு வீட்டிற்கு வந்தவன், அதிதீயிடம் விசயத்தைக் கூறியிருந்தான்.
வாங்கிய பணத்தை கருத்தாகக் கொண்டு பத்திரப்படுத்தியவள், ஏனோ கருத்து எதுவும் கூறவில்லை.
அமைதியாக அவளது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் முழுக்க நான்காயிரம் ரூபாயில் எவ்வாறு மாதத்தை ஓட்ட வேண்டும். செலவுகளை சுருக்க என்ன செய்யலாம்? என யோசித்தவாறே பணி செய்தாள்.
விரைவில் ரேசன் கார்டிற்கு ஏற்பாடு செய்வதாக நந்தா கூறியிருந்தான்.
அதிதீயின் வீட்டில் ரேசன் கார்டு இருந்தது. ஆனால் ரேசன் பொருட்களை வாங்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது, தங்களது நிலையினை உத்தேசித்து ரேசனில் அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் வாங்கிக் கொண்டால் சற்று செலவுகளைச் சமாளிக்கலாம் என அதிதீக்கும் தோன்றியது. அதனால் விரைவில் அதற்கான பணிகளைச் செய்திடுமாறு கூறினாள்.
ரேசன் கார்டில் இருந்த பெயரை நீக்கம் செய்து புது ரேசன் கார்டு வாங்கப் போவதை அறிந்த காமாட்சி, “எங்குடும்பத்தையை கூறு போட்டுட்டாளே!”, என நந்தாவிடம் கதறியிருந்தார்.
நந்தாவிற்கு இது அதிகப்படியாகத் தோன்றினாலும் தாய் என்பதால் அமைதியாக வந்துவிட்டான்.
நீண்டநேரம் தனக்குள் சிந்தித்தபடியே பணிகளோடு ஒதுங்கி இருந்தவளை நோக்கிப் போனவன், “எம்மேல கோபமா?” எனக் கேட்டான்.
“எதுக்கு?”
“அம்மாக்கு பாதிக்குமேல பணத்தைக் கொடுத்திட்டேன்னு!”
“…”, இல்லையென மறுத்திருந்தாள்.
“அப்புறம் ஏன் உம்முனு இருக்க?”
“எப்பவும் அப்டித்தானடா இருக்கேன்!”
“இல்லை. இத்தனை நாளவிட உம்முகமே இன்னிக்கு சரியில்ல!”
“ஒன்னுமில்லை!”
“பொய் சொல்ற!”
“நிஜமா ஒன்னுமில்லடா!”, அங்கிருந்து நகரத் துவங்கினாள்.
நகர்ந்தவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன், “நீ இப்டி உம்முனு இருக்கறதே எனக்கு கஷ்டமா இருக்குடீ”, இருவரின் இதயத்தின் துடிப்பு மற்றவருக்குக் கேட்டது. அத்தனை அருகே நின்றிருந்தனர்.
நந்தாவை நிமிர்ந்து பேசாமல் பார்த்திருந்தாள்.
“நான் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்றேன்ல! நீ மட்டும் ஏண்டி இப்டி அமைதியாவே இருக்க?”, என்றபடியே தன்னோடு இன்னும் நெருக்கி அணைத்துக் கொண்டான்.
“இவ்வளவு நாளு எங்க வீட்ல அப்டியே இருந்து பழகிட்டேன்டா! வேறொன்னுமில்லை”
“எனக்காக கொஞ்சம் மாத்திக்கோ. நீயும் ஃபீரியா எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லுடீ!”, என குனிந்து பெண்ணது முகம் பார்த்துச் சொன்னான்.
“ம்…”
“என்ன ம்ம்ம்…”
“சரிடா!”, என ஆயாசமாகச் சிரித்தபடியே நந்தாவை இமைக்காது பார்த்தாள்.
“கோபமில்லைனா நீயே ஒன்னு தா”
“போக்கிரி!”, எனச் சிரித்தவள், “அங்க சுத்தி, இங்க சுத்தி கரெக்டா இதுலயே வந்து நிக்கிற. உன்னை”, என்று அணைப்பிலிருந்தவாறே நந்தாவின் கன்னத்தில் கை மடக்கிக் குத்தினாள்.
“உதட்டால தரச் சொன்னா, புறங்கையால தரஅஅஅ!”, என்றபடி குத்தலைக்கூட குதூகலமாக ஏற்றுக் கொண்டான் நந்தா.
நந்தாவின் குதூகலத்தைக் கண்டவள், “நான் இப்ப உன்னைக் குத்தினதுக்கு ஏன் இத்தனை குஜாலாகுது உம்மூஞ்சி”
“நீ இப்டியே சந்தோசமா எப்பவும் இருக்கணும் அதீ”, என்றவனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, “வேலை கெடக்கு நந்தா”, என்றவாறு அகன்றாள்.
“எப்பப்பாரு வேலை, இல்லைனா படிக்கப் போறேன்னு”, எப்டிடீ இப்டி இருக்க”, என்று தலையைக் கோதியவாறு சலித்துக் கொண்டவனின் மனமே வெறுத்துப் போனது.
பெண்ணுக்கும் இன்னும் சமைக்க பக்குவம் வரவில்லை. இன்னும் வேகமும் வராமல் தாமதமாவதால், அதிக நேரம் அதனுடன் மல்லுக்கட்டுகிறாள்.
எத்தனை ஆசைகளோடு இவளைக் காதலித்தேன். ஆனால் அந்த ஆசைகளை அவளிடம் காட்டுவதற்கும், கொட்டுவதற்கு நானும் அவளும் மட்டும் தனித்திருந்தும் எது தடையாக நிற்கிறது? என்கிற யோசனை ஒருபுறம்.
பணமில்லாதவன் காதலிக்கக் கூடாதா? பணமில்லையென்றால் எதையும் ஆசைப்படக்கூடாதா? இது மறுபுறம்.
அலைக்கழிக்கும் உணர்வு.
தனது நிலையை இன்னும் தரம் உயர்த்திக் கொண்டபிறகு திருமணம் செய்திருந்தால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்திருக்கலாம் எனத் தோன்றியது.
ஆனாலும், எதிர்பாரா நிகழ்வாக தங்களது திருமணம் நடந்ததையும் யோசித்து, நல்லவேளை இந்தளவிற்காவது பிரச்சனைகள் பெரிதாகாமல் திருமணம் நல்லபடியாக முடிந்ததே பெரிய விசயம் எனத் தோன்றாமலில்லை.
பணச்சிக்கல், தாயின் புலம்பல்கள், வெளியூர் பயணம், அதிதீயின் ஒதுக்கம் இவ்வாறு ஒவ்வொன்றையும் எதிர்கொள்ளும்போது பெண்ணின் மீதான காதல் குறைந்துவிடுமோ எனும் பயம் வந்தது.
பெண்ணிடம் முகத்தைக் காண்பித்து விடுவோமோ? என மிகவும் விழிப்போடு இருக்க பிரயத்தனப்பட்டான்.
பெண்ணது அருகாமைக்கு ஏங்கிய, வேண்டிய தினங்கள் அனைத்தும் கண்முன் வந்து கிண்டல் செய்து போனது.
அப்படி அருகிலேயே இருப்பவளை என்ன செய்கிறேன். கண்டு கொள்ளக் கூட முடியாமல் வேலை, வேலை என ஓடுகிறேன். இப்படித்தான் நந்தாவின் மனம் ஓடியது.
வீட்டு வேலையோடு, படிப்பு என வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பவளை எண்ணிப் பரிதாபமாகத்தான் இருந்தது.
வெளியில் என்றாவது அழைத்துச் சென்றால், வேலை முடிந்ததோடு உடனே வீட்டிற்குத் திரும்பிவிடுவோம் என்பாள்.
படத்திற்குப் போவோம் என்று அழைத்தால், ”நைட்ல எதுக்குடா ரிஸ்க். சன்டேல மேட்னி ஷோனா போகலாம்” என்பாள்.
சன்டே அழைத்தால், ‘சமைக்கணும், இன்னிக்கு ஒரு நாள்தான வீட்டுல இருக்க. அங்க போயி இருக்கறதுக்கு ஒருத்தரையொருத்தர் பாத்துட்டு, பேசிட்டு வீட்லயே இருக்கலாம். பேசாம ரெஸ்ட் எடு’ என்பாள்.
அதிதீக்கு வேண்டியது எதையும் தன்னிடம் கேட்பதுபோலத் தோன்றவில்லை நந்தாவிற்கு.
இருவருக்கும் வேண்டியதைக் கேட்டு வாங்குகிறாள்.
ஆனால் அவளுக்கு வேண்டியதைக் கேட்கவேயில்லை என்பதும் புரிந்தது.
இரண்டு புடவைகளை மட்டுமே மாற்றி மாற்றி உடுத்துவதும் அப்போதுதான் நினைவிற்கு வந்தது
வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு, ஒரு மணித் தியாலத்தில் கையில் பையோடு வந்து நின்றவனை யோசனையோடு பார்த்தாள்.
தங்கை கீதாவிற்கு புடவை எடுக்கும்போது தாயுடன் சென்ற அனுபவம் கைகொடுத்தது.
அருகே கொண்டு வந்து தந்ததை வாங்கிப் பார்த்தவளின் முகத்தில் சந்தோசத்தைத் தேடினான்.
ஆனால் அது முகத்தில் தேடிப்பார்த்தும் காணவே இயலாமல் ஏமாற்றத்தோடு நின்றிருந்தான்.
“எதுக்கு இப்ப காசில்லாத நேரத்தில இதைப் போயி வாங்கின? உங்கிட்ட இப்ப நான் சேலை வேணும்னு கேட்டேனா? கையில ரொம்பக் காசு வச்சிருக்கியா? எந்த நேரத்தில என்ன செய்யறதுன்னு தெரியாம ஏண்டா இப்டி காசக் கரியாக்குற”, என அதட்டினாள். இதுதான் அதீதி.
“ஏய் ரொம்பப் பேசாதடீ. மாத்தி மாத்தி இந்த ரெண்டு சேலையத்தான் கட்டுற. மாசம் ஒன்னுனு நாளு மாசம் எடுத்தாலும், மாத்தி உடுத்த உனக்கு இன்னும் வசதியா இருக்கும்னு எடுத்துக்குடுத்தா நிக்க வச்சி கேள்வி கேக்குற?”
“அப்புறம் நீ செஞ்ச வேலைக்கு வேற என்ன செய்வாங்களாம்”
“அதுக்குஉஉஉ…! ஆசையா முதத்தடவை சேலை எடுத்துட்டு வந்ததைப் பாத்து சந்தோசப்படலைன்னாலும் போகுது, அது எப்டி எம்பொண்டாட்டிக்கு ஆசையா எடுத்துட்டு வந்து குடுத்ததை காசக் கரியாக்குறேன்னு சொல்லுவ நீ. எப்டி அப்டி சொல்லலாம்!”. என உரிமையோடு அதட்டியிருந்தான் நந்தா.
“சரி சரி நடிச்சது போதும். போயி இருக்கிற வேலையப் பாரு”, என்று சன்னச் சிரிப்போடு நகர்ந்திருந்தாள் அதிதீ.
“உண்மைய உரக்கச் சொல்றேன். உனக்கு நான் பேசறது நடிக்கற மாதிரி இருக்கா. ஏய்… எங்கடி போற? நில்லு.. முதல்ல நின்னு பதில் சொல்லிட்டுப் போ”, என்றபடியே பின்னோடு சென்றான்.
நந்தாவின் சத்தத்தில் சட்டென்று நின்றிருந்தவளின் மீது வேகமாக அவளை நோக்கி வந்த நந்தா மோதிக் கொண்டான்.
அதில் பெண் விழப்போக, தன்னோடு அணைத்தபடி பிடித்துக் கொண்டவனிடம், “என்னத்தைச் சொல்லச் சொல்ற?”, என்றால் அதிதீ.
“நான் நடிக்கிறேனா?”
“எதுக்குடா இவ்ளோ சீரியசா எடுத்துக்கற! உன்னை டைவர்ட் பண்ணத்தான் அப்டிச் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ ரியாக்ட் ஆகுற! என்னைச் சொல்ற! நீதான் முன்ன மாதிரியில்லை!”, என்றபடியே மூக்கைப் பிடித்துத் திருகியிருந்தாள் அதிதீ.
அவ்வப்போது வெளிவரும் அவளின் இயல்பான பேச்சைக் கேட்ட மகிழ்ச்சி. நந்தாவின் மனதில்.இதத்தை உணர்ந்து பெண்ணது செயலில் சிரித்தான்.
கணவனின் சிரிப்பைக் கண்டவள், “திட்டுனா, கோபப்பட்டாக்கூட, உனக்கு பாராட்டுவிழா நடத்தின மாதிரி ஏண்டா சிரிக்கற”, என்றவளிடம் வம்பு வளர்க்க, அவளும் அவனுடன் பதிலுக்கு பேசினாள்.
சற்று நேரத்தில், நடந்த நிகழ்வுகளின் அதிசயத்தில் இருவரும் மனம் இதமாக உணர்ந்தனர்.
“இப்டியே நீ இருக்க நான் என்ன செய்யணும்”, எனக் கேட்ட நந்தாவைப் பார்த்து, “இப்ப என்ன குறையா இருக்கேன்”, என்றபடியே அகன்றவளைக் கண்டு, “ராட்சசி எதையும் எங்கிட்ட சொல்ல மாட்டிங்கறா!”, என்று பொய்க் கோபத்தோடு முனகியவாறு நந்தா நகர, அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்காமல் அவளது பணிகளினூடே ஈடுபட்டிருந்தாள் அதிதீ.
உண்மையில் அதிதீக்கு, தன்னால் நந்தா மிகுந்த சிரமப்படுகிறான் என்கிற வருத்தம். அத்தோடு, தன்னால் அவனுக்கு உதவியாக இருக்க முடியாத நிலை பெண்ணை வாட்டியது.
எதையோ போட்டு மனதிற்குள் மருகுகிறாளோ? வேலைக்கு நடுவிலும் பெண்ணின் ஒதுக்கம் மனதை அறுத்தது நந்தாவிற்கு.
இரண்டு நாள்கள் இரவு வேலை என்று கட்டிடத்திலேயே தங்கியிருந்தான்.
அதிதீ பயப்படுவாள் என்று தெரிந்தாலும், துணைக்கு இருளாயிடம் பேசிவிட்டுச் சென்றிருந்தான்.
இருளாயி பெண்ணை படிக்க விடாமல் நொய், நொய் என்று பேசியதாக வந்ததும் புகார் செய்திருந்தாள். நந்தாவிடம் இனி தனியாகவே இருந்து கொள்வதாகக் கூறியிருந்தாள்.
அன்றைய தின பணிகளுக்குப்பின், அதிதீயை தன்னோடு அமர்த்திக் கொண்டு, அமர்ந்தவளின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான்.
தலை முடிகளுக்குள் கையை விட்டு அளைந்தபடியே புத்தகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தவள், அதே அமைதியோடு இருக்க, “எங்கிட்ட எதுவும் சொல்ல மாட்டியா?”
“சொல்ல இருந்தா உங்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்லப் போறேன்”
“வந்ததில இருந்து வாயவே திறக்க மாட்டுற. முன்னல்லாம் வாய் ஓயாம பேசிட்டே இருப்ப. நான் பாத்துருக்கேன்”, பள்ளியில் படிக்கும்போது தன்னைப் பார்த்ததைக் கூறுகிறான் என்பது பெண்ணுக்குப் புரிந்தது.
“இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி!”
“நீ என்னோட பழைய அதீயா மாற நான் என்ன செய்யணும்டீ!”, என கரகரத்த குரலில் கேட்டான்.
“ச்சீய் லூசு. பழசு, புதுசுன்னு எதுக்கு குழப்பற. நான் எப்பவும் போலத்தான்டா இருக்கேன்”
“அப்ப நீ இப்டி இருக்க மாட்ட! இப்ப இறுகிப் போயிருக்க. என்னாலதான உன்னை சந்தோசமா வச்சிக்க முடியலையா? இந்த வீடு புடிக்கலையாடீ. வேற வீட்டுக்குன்னா போயிருவோமா?”
“இருக்கட்டும் நந்தா. இந்த வீட்டுக்கென்ன”, என வார்த்தையாக வெளி வந்தாலும் ஒவ்வொரு முறையும் பதைபதைப்போடு அங்குமிங்கும் பார்த்தபடியே வேலை பார்ப்பவளை நந்தாவும் கவனித்திருந்தான்.
“இங்க வந்ததில இருந்து ரொம்பக் கஷ்டமாயிருக்கா?”, எனக் கேட்டான் நந்தா.
“மாத்திச் சொல்ற! சரியா சொல்லுடா! என்னாலதான் இப்ப உனக்குக் கஷ்டம். நாந்தான வந்து கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டேன்”, என தன்னைமீறிக் கூறிவிட்டு நாக்கைக் கடித்து அமைதியானாள்.
“அப்ப அத நினைச்சு வருத்தப்படறீயா?”
“…”, எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தவளின் மௌனத்தில் எழுந்தமர்ந்து முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
“சொல்லுடீ”
முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
“ஏய் அதீ. என் முகத்தைப் பார்த்துச் சொல்லுடீ”, என்றான்.
“என்னத்த புதுசாச் சொல்ல! அதுதான உண்மை!”, என்றவள், “உன்னோட எல்லாக் கஷ்டத்துக்கும் இப்ப நாந்தான காரணம்!”, என்றுவிட்டு எழ முயன்றாள்.
சுய பச்சாதாபத்தில் இப்படி இருந்திருக்கிறாளோ என்று மனம் அடித்துக் கொண்டது நந்தாவிற்கு.
எழ முயன்றவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், “ஏய்… என்னடீ சொல்ற? நீ என் வாழ்க்கைல வரலன்னா நான் இன்னிக்கு இந்தளவுக்குகூட வந்திருக்க மாட்டேன். எதுல எதுலயோ ரோல் மாடல் சொல்வாங்க. எனக்கு எல்லாமே நீதான்”, என்றவனை யோசனையோடு பார்த்தாள் அதிதீ.
“என்ன நம்ப முடியலையா. நீ நம்பலைன்னாலும் நான் படிக்கக் காரணமே நீந்தான். உன்னைப் பாக்கலைன்னா படிக்காம எதாவது கட்டிடத்தில கூலிக்கு மாறடிச்சிட்டு இருந்திருக்க வேண்டியவன், நல்ல டிரெஸ் போட்டுட்டு ஏதோ ஒரு வேலைக்குன்னு போகணும்னு சூப்பர்வைசரா நான் போனதுக்குக்கூட நீந்தான்டீ காரணம். எனக்குள்ள ஒரு வேகம் வரது உன்னாலதான்”, என்றவன்
பெண்ணைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான். விடும் எண்ணமே இல்லாது அணைப்பில் பெண்ணை வைத்தபடியே, “படிக்கும்போதே வேலைக்குப் போனேன். எதுக்கு? எல்லாம் உன்னால தாண்டீ! உம்மேல என்னை அறியாமலேயே பைத்தியமாகிட்டேன். நீ வேணும்னா என்ன செய்யனு அடிக்கடி யோசிச்சேன். எங்கம்மாவுக்கு காசுதான் குறிக்கோள். அதுனால அது படிக்கப் போகாதன்னு சொல்லுச்சு. ஆனா எனக்கு நீ வேணும்னா படிக்கணும்னு முடிவு பண்ணேன். ரெண்டையும் சரிபண்ண, படிச்சிட்டே, வேலைக்குப் போனேன், இப்டி நான் எடுத்து வச்ச ஒவ்வொரு அடிக்கும் காரணம் நீதான். நானும் நாளு மனுசங்க மாதிரி வாழ்க்கைல முன்னுக்கு வரணும்னு நினைச்சதே உன்னைப் பாத்தப்பறந்தான்”, என்றவன் அணைப்பிலிருந்து பெண்ணை விலக்கினான்.
பெண்ணது முகம் பார்த்தபடியே, “எங்கிட்ட எதுனாலும் மறைக்காம சொல்லுடீ! உனக்காகவே நான் ஒருத்தன் உருகிட்டுருக்கேன்! உனக்குள்ளயே எல்லாத்தையும் மறைச்சிட்டு இப்டி உம்முனு இருக்காதடீ! என்னோட கடைசி மூச்சுவரை நீ எனக்கு வேணும்டீ!”, என்றவாறே பெண்ணை மீண்டும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.
“இனி அப்டிச் சொல்லாதடீ”, என்றான்.
நந்தாவின் காதல் பெண்ணையும் அசைத்தது.
“சரி இனி அப்டி சொல்லலை போதுமா!”, என்றாள்.
“சீக்கிரம் எதாவது வேலை கிடச்சிரும். அதுவரை இங்கதான் வேலை பாக்கணும். புதுசா பில்டிங் வர்க் ஸ்டார்ட் பண்ணிருவேன். அதுக்கான வேலை எல்லாம் பாத்திட்டுருக்கேன். எல்லாம் சரியாகும். நாம நல்லாயிருப்போம்”, என நம்பிக்கை வார்த்தை கூறினான்.
“உம்மேல எனக்கு நம்பிக்கையிருக்கு நந்தா! கண்டிப்பா நல்லா வருவோம்”, என்றபடியே முதன் முறையாக நந்தாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“தாங்ஸ்டீ”, என்றவனிடம், பெண் முறைக்க , “சாரீடீ”, என்றான். அதற்கும் இடுப்பில் கை வைத்தபடியே முறைத்தாள்.
பெண்ணைப் பார்த்து மகிழ்ச்சியோடு சிரித்தவன், “இப்பத்தான்டீ என்னோட அதிதீயா இருக்க!”, என்றபடியே “இனி நமக்குள்ள தாங்க்ஸ், சாரீ இதெல்லாம் சொல்லாம இருக்க ட்ரை பண்ணுறேன், மறந்தா நீ என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கறேன்”, என்றான்.
“போடா போங்கு…! எதாவது ஏடாகூடாம வந்து கேட்டு வைக்க ஐடியா பண்றதைப் பாரு!”, என்றாள் அதீதி.
“கேட்டாலும் என்னைப் பக்கத்திலேயே விடமாட்டிங்கற”, என அந்நேரத்திலும் தனது எதிர்பார்ப்பை ஏக்கதோடு உரைத்திட
“நாம இன்னும் சரியான ஒரு நிலைக்கு வராம, வாழ்க்கைய ஆரம்பிச்சா… இன்னும் சங்கடம் அதிகமாயிரும் நந்தா! அதனாலதான் யாராவது நல்ல ஸ்திரமான இடத்தில போயி இருந்துட்டு லைஃப ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்!”
“இப்டியே சொல்லி இன்னும் எவ்வளவு நாளக் கடத்துவ?”
“என்னிக்கு நம்ம டார்கெட்டை ரீச் பண்றோமோ அன்னிக்குத்தான் தெரியும்”, என்று சிரித்தாள்.
“சரி. அதுவரைக்கும் தாங்கறமாதிரி ஒரு உம்மாவாவது குடுடீ!”, எனக் கேட்டு அவள் கொடுக்காதபோதும், இவன் வம்படியாகக் கொடுத்துவிட்டே விட்டான்.
பெண்ணும் நெகிழ்ந்திருந்தாள்.
//////////////
இடையே தாயை நேரில் சென்று சந்தித்து வந்தான்.
“ஊருக்குப் போறன்னு சொன்னான் தம்பி. அந்தப்புள்ளை அங்க தனியாவா இருக்குது”, காமாட்சி
நந்தா ஆமாம் என தலையசைத்திட, “எதுக்கு அதுமட்டும் அங்க இருந்து கஷ்டப்படணும். பேசாம இங்க எங்ககூட வந்து விட்டுட்டுப் போகலாமில்லை”
“இல்லைமா. அவ அங்கயே இருக்கட்டும்”
“ரெண்டு செலவு என்னத்துக்குனு சொன்னேன். அதுக்குமேல உம்பிரியம். நீ குடுத்த காசு எனக்கு பத்தாது. அப்புறம் தரேன்னு சொன்னியாமே. கையில இருந்தா குடுத்துட்டுப்போ”, என்றார் காமாட்சி.
“என்னம்மா புரியாம பேசற. அங்க, வீட்டுக்கு வாடகையில ஆரம்பிச்சு, எல்லாமே காசு. இந்த நாலாயிரமே பத்தாது. எனக்கும் ஊருக்குப் போக வர செலவுக்கு காசு வேணும்”
“ஊதாரித்தனமா என்னத்தையாவது பண்ணா காசு எப்டி கைல தங்கும். அதுக்குத்தான் அதை இங்க கொண்டு வந்து விடுன்னேன்”
“கல்யாணம் பண்ணது ஊதாரித்தனமா? நீ அவளை எனக்குப் பண்ணி வைக்கமாட்டங்கறதால நானே பண்ணிட்டேன். இல்லைனா அப்டிப் பண்ற ஆளா நானு”, என்றவன்
“ஸ்கூல்ல வேலைக்குக் கூப்பிட்டா போக வர அங்க இருந்தாத்தான் அவளுக்குச் சரியா வரும். அதனால அவ அங்கேயே இருக்கட்டும்”, என்று கூறியதோடு, இதற்குமேல் அங்கிருந்தால் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும் என நினைத்து, உடனே சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் நந்தா.
“பய ரொம்ப கிறக்கம்மாத்தான் திரியறான். அப்டி என்ன சொக்குப்பொடி போட்டானு தெரியலையே. உலகத்தில இல்லாத புள்ளையக் கட்டிட்டோம்னு ரொம்பத்தான் மயங்கிக் கிடக்கறான்!”, என மகனுக்கு கேட்கும்படியாகவே முணுமுணுத்தார்.
தன்னிடமே இந்தப்போடு போடும் தாய், அதிதீ தனிமையில் கிடைத்தால் என்னவெல்லாம் செய்வார் என்பது அனுமானிக்க இயலாதபோதும், வேண்டாமெனத் திடமாக முடிவெடுத்துக் கூறியதும் நல்லதுதான் என எண்ணியவாறே கிளம்பி வந்திருந்தான்.
///////////
செலவிற்கே பணத்தட்டுப்பாடாக இருந்தமையால், புது மொபைல் வாங்குவதை ஒத்தி வைத்திருந்தார்கள்.
செங்கல்பட்டு செல்லும் நாளும் வந்தது.
இருவரின் மனமும் பதைபதைப்போடு இருந்தது.
தைரியமாக அவனிடம், “நீ கிளம்பிப் போ. நான் பத்திரமா இருந்துப்பேன்”, என்று அதிதீ கூறியிருந்தாலும், ஏதோ ஒரு பயம் அடிமனதில் பெண்ணை ஆட்டிப் படைத்தது.
அதைக் காட்டாமல் இருக்க மிகுந்த பிரயத்தனப்பட்டாள்.
நந்தாவிற்குமே, வேலை பார்க்கு இடத்திற்கும், தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கும் ஆறு மணி நேர பயணம் என்பதால் மலைத்தான்.
அடிக்கடி பெண்ணை வந்து பார்த்துச் செல்ல என்ன வழி என யோசித்து, யோசித்து மண்டை காய்ந்தது.
மனதேயில்லாமல் அரை மனதோடு கிளம்பியிருந்தான் நந்தா.
இரண்டு நாள்கள் பொழுதை மிகவும் நெட்டித் தள்ளினாள் பெண்.
வழமைபோல இருளாயி அவ்வப்போது வந்து பெண்ணிடம் சற்றுநேரம் உரையாடிவிட்டுச் செல்வார்.
அப்போது, டியூசன் படிக்க விரும்பும் பிள்ளைகளை மாலையில் வீட்டிற்கு அனுப்பி விடுமாறு கூறினாள்.
அன்று மாலையில் இரண்டு பிள்ளைகள் மட்டுமே வந்திருந்தனர்.
அரசுப் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் இருவரும். புத்தகங்களை வாங்கிப் பார்த்து, அவர்களுக்கு வேண்டியதை படிக்க, கணக்கு வீட்டுப் பாடம் செய்ய என ஒன்றரை மணி நேரத்தில் டியூசன் முடிந்திருந்தது.
மூன்றாவது நாள் வெளியே காய்கறி வாங்கச் சென்றாள் அதிதீ. உடன் இருளாயும் துணைக்கு வந்தார். எவ்வளவோ மறுத்தும் உடன் கிளம்பி வந்திருந்தார்.
காய் வாங்கிக் கொண்டு திரும்பி நடக்கத் துவங்கியபோது, எதிர்பாரா விதமாக தனது பெயரைச் சொல்லி அழைத்ததும் பதறியிருந்தாள் அதிதீ.
தனக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இங்கு யாரும் இல்லை என்பதால்தான் இந்த ஊரில் குடிவர முடிவெடுத்திருந்தான் நந்தா.
அப்டியிருக்க, இங்க தன்னை அழைப்பது யாராக இருக்கும்? ஆனால் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்றே பெண்ணுக்கும் தோன்றியது.
அந்நேரம் இருளாயி, “உன்னத்தான் யாரோ கூப்டற மாதிரியிருக்கு”, என்றதும், நின்று திரும்பி நோக்கினாள் அதிதீ.
முதல் பார்வையிலேயே ‘இவரா?’, எனத் தோன்ற
‘இவங்க எப்டி இங்க?’, என தனக்குள் கேட்டபடியே தன்னை நோக்கி வருபவரையே பார்த்திருந்தாள்.
/////////////
வந்தவரை எங்ஙனம் எதிர்கொண்டாள் அதிதீ?
அடுத்த அத்தியாயத்தில்…