VVO8

VVO8

வெல்லும் வரை ஓயாதே!

வெல்! ஓயாதே – 8

 

அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிற்குத் திரும்பியவன், பூட்டு தொங்கிய நிலையில் இருந்த கதவைக் கண்டு திகைத்திருந்தான் நந்தா.

 

மனைவியைக் காண எண்ணி ஆவலோடு வந்தவனுக்கு மிகுந்த ஏமாற்றம் என்பதைவிட, இந்நேரத்தில் அவளை காண இயலாது என்கிற உண்மை உயிரை வற்றச் செய்தது.

 

உள்ளமெங்கும் பதைபதைக்க, உடலின் ஒவ்வொரு அணுவும் பெண்ணைக் காணாமல் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

 

அதிதீ எங்கு சென்றிருப்பாள் என்று யூகிக்க இயலாமல் அப்படியே வாயிலில் ஓய்ந்திருந்த மனதோடு போய் தலையில் கைவைத்தபடியே அமர்ந்துவிட்டான்.

 

தனது தைரியம், சந்தோசம், ஊக்கம், எதிர்காலம், உயிர் என அனைத்துமாக இருந்தவளைத் தனித்து விட்டுப்போன தனது முட்டாள்தனம் தற்போது உரைத்தது.

 

தன்னோடே செங்கல்பட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாமோ! இப்போது அவளை எங்கு சென்று தேடுவேன் என தன்னையே நொந்து கொண்டு அமர்ந்திருந்தான் நந்தா.

 

ஆனாலும் நடந்ததைப்பற்றி எண்ணி ஓய்ந்திருக்க இயலாது என்பதையும், நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தையும் எண்ணி மனம் அதை நோக்கி உந்தியது.

 

அருகில் உள்ளவர்களை கேட்கலாம் என்றால், அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது எவ்வாறு தொந்திரவு செய்ய எனத் தயங்கி, அமர்ந்த நிலையிலேயே சிந்தனை ஓடியது.

 

களைப்பு இருந்தாலும் உறக்கம் நெருங்கவில்லை. 

 

அதிதீயை விட்டுச் சென்ற மூன்று நாள்கள் மூன்று யுகமாகக் கழிந்திட, நேரமானாலும் பரவாயில்லை என பின்னேரமானாலும் பெண்ணைக் காணும் ஆவலில் அடுத்தடுத்து பஸ் பிடித்து ஓடி வந்திருந்தான் நந்தா.

 

அதிதீ கொடுத்த தைரியத்தில் பெண்ணை இங்கு விட்டுச் சென்றது தவறே என மனம் வாதிட, எழுந்த அழுகையை அடக்க சிரமப்பட்டான்.

 

அதிதீ இல்லாத வாழ்வை அவனால் ஒரு கனமும் சிந்திக்க இயலாமல் தடுமாறினான்.

 

ஒருவேளை அவளின் தந்தை வந்து அழைத்துச் சென்று விட்டாரோ எனத் தோன்றியது.

 

தந்தை அழைத்தாலும் பெண் செல்லமாட்டாள் என்பதை கடந்திருந்த தினங்களில் கணித்திருந்தான்.

 

ஆனால் வற்புறுத்தியோ, பலவந்தமாகவோ அழைத்துச் செல்ல வாய்ப்பிருப்பதையும் எண்ணி வருந்தினான்.

 

அதைத்தவிர வேறு என்ன பிரச்சனை என்பது அவனது யூகத்திற்கு எட்டாதபோதும், ஏதோ பிரச்சனை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தான்.

 

விசயம் என்னவென்று தெரியாமல் தன்னைக் குழப்புவதால், தனது சக்தி வடிந்துபோகுமே தவிர, தனக்கு அதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்து அருகில் உள்ளவர்களில் யாரேனும் எழுந்தால் சென்று கேக்கலாம் எனக் காத்திருந்தான்.

 

ஒவ்வொரு நொடியும் சித்ரவதையாக உணர்ந்தான்.

 

நேரம் செல்லவே மறுத்தது.

 

காரிருருள் அவனது இருளடைந்த நிலையைக் காட்டிப் பயமுறுத்தியது.

 

அதிதீயே தனக்கு எல்லாம் என நிறைவாய் உணர்ந்த தருணம் நினைவில் வந்து தனது தற்போதைய நிலையை எள்ளி நகையாடியது.

 

அதிகாலை நான்கு மணிக்கு அருகில் இருந்த வீடுகளில் கேட்ட அரவத்தில் எழுந்து சென்று கேட்டான்.

 

விசயத்தைக் கூறக் கேட்டவன், அப்போதே  பெண்ணை அழைத்து வர எண்ணினான்.

 

விடியட்டும் என்று அங்குள்ளவர்கள் சொல்லியும், பொறுமையிழந்திருந்தவன் வம்படியாக இருளாயுடன் கிளம்பினான்.

 

கவுன்சிலர் வீட்டில் அதிதீ இருக்கிறாள் என்பதைக் கூறக் கேட்டவன், “இங்க எப்டி கவுன்சிலர்?”, என யோசனையுடன் கேட்க

 

“அதுவா… அங்க புதுக்கோட்டையிலதான் அவங்க இருக்காவ.  இதான் அவங்க பூர்வீகம். இருவது வருசத்துக்கு முன்னயே புதுக்கோட்டைக்கு குடும்பத்தோட போயிட்டாவ.  ஊருல எதாவது விசேசங்களுக்கு வந்து போவாவ. ஆனாலும் பிறந்த ஊருல யாருக்கும் ஒரு கஷ்டம்னா பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டாவ. இந்தச் சனங்களுக்கு ஒன்னுன்னா முன்ன வந்து நின்னு எல்லாம் பாப்பாவ.  அதுனாலதான் நேத்து உன் சம்சாரத்தை பத்திரமா இருக்கும்னு அங்க கொண்டுபோயி விட்டுட்டு வந்தோம்”, தங்களது செயலை தானே மெச்சிக் கொள்ளும் குரலில் கூறியவாறே வந்தார் இருளாயி.

 

பேசியவாறே வீட்டை அடைந்திருந்தனர்.

 

பூட்டிய கதவிற்கு வெளியே இருவரைக் கண்டு இருளாயே சற்று மிரண்டு விழிக்க, அவர்களை அணுகி நந்தா விசயத்தைக் கூறிக் கேட்டான்.

 

“நம்ம ஐயா இங்க வந்தபின்ன, நேருல பாத்து பேசிட்டு கூட்டிட்டுப் போங்க தம்பி.  இப்ப அனுப்ப முடியாது”, என்றிருந்தனர்.

 

இருளாயி, “நாந்தான் கொண்டு வந்து விட்டுட்டுப்போனேன் நேத்து.  இது அவ வீட்டுக்காரந்தான்.  ஊருல இருந்து இப்பத்தான் வந்தாவ.  புள்ளைய விட்டா கூட்டிட்டுப் போயிருவோம்ல”, பேச்சைக் கேட்டு அசையவில்லை இருவரும்.

 

நந்தா, இருளாயி இருவரும் எவ்வளவோ மாறி, மாறிக் கூறியும் அவ்விருவரும் கொண்ட முடிவில் மாறவில்லை.

 

கவுன்சிலரின் போன் நம்பரைக் கேட்டான். அது தங்களுக்கு தெரியாது என்றிருந்தனர்.

 

எப்போது இங்கு வருவார் என்று கேட்டால் தெரியாது என்றனர்.

 

கோபம் வந்தாலும், அதைக் காண்பிக்க சரியான தருணமல்ல என்பது புரிய, அமைதியாகவே இருக்க பிரயத்தனப்பட்டான் நந்தா.

 

பொருளாதாரத்தில் பின்னடைந்திருந்ததைவிட, எந்த ஒத்துழைப்பும் இன்றி வளர்ந்தபோது எதிர்கொண்டிருந்த பல பிரச்சனைகள், சூழல் கருதி நிதானமாக இருக்கச் சொன்னது.

 

கோபம் வந்தாலும், அதை எங்கு காட்டினால் தனது நோக்கம் நிறைவேறும் என்பதை உணர்ந்திருந்தவனாதலால், அமைதி காத்தான்.

 

ஒன்றரை மணி நேரம் அவர்களோடு, கெஞ்சி, புலம்பி, போராடிவிட்டு, வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, நொந்துபோன மனநிலையில் நந்தா அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

 

அங்கிருந்த நேரத்தில் அந்தத் தெருவையே அலசியிருந்தான்.

 

கட்டிட நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம், அத்தோடு தானும் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடப் பணியை மேற்கொண்டிருந்தது அனைத்தும் கைகொடுக்க, அதிதீயை தங்க வைத்துள்ள வீட்டில் தனக்கு சாதகமான விசயங்களை மனதில் குறித்துக் கொண்டான்.

 

தனியொருவனாக வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை மீட்க நினைத்தான். தன்னால் நிச்சயமாக இயலும் என்றபோதும் யாருடைய தயவில் தற்போது பெண் இருக்கிறாள் என்பது தெரியாமல் பெண்ணை மீட்பது எதிர்பாரா பாதகங்களைத் தரலாம் என அமைதி காத்தான்.

 

தனக்கு உதவ முன்வந்தவர்களாக இருந்தால், தான் செய்வது ஆதரிக்கக்கூடிய செயலாக இருக்காது. அதனால் தனது முடிவை தற்சமயம் ஒத்தி வைத்தான்.

 

இதுவே, தனக்கு எதிரானவனாக இருந்து கணிக்கத் தவறினால், காலத்திலும் எழும் பிரச்சனைகளைப் பற்றிய தயக்கம், அதனால் எழும் மன உளைச்சல்கள் தன்னை நிரந்தரக் கோழையாக்கிவிடும் என்பதால், கவுன்சிலரை நேரில் சந்திக்க முடிவெடுத்தான் நந்தா.

 

கிளம்பும்முன், கவுன்சிலரைப் பற்றிய விசயங்களை இருளாயிடம் கேட்டறிந்தவன், புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்குச் செல்ல எண்ணிக் கிளம்பினான்.

 

நந்தா, “கவுன்சிலர் வீடு அங்க எந்த இடத்தில இருக்குன்னு தெரியுமா ஆயா?”

 

“அது நம்ம காம்பவுண்டுல இருக்கற ஆம்பிளைங்ககிட்ட கேளுய்யா”, என்றிருந்தார் இருளாயி.

 

கவுன்சிலர் பற்றிய விசயங்களை சேகரித்துக் கொண்டு கிளம்பியவன், பத்துமணிக்கு புதுக்கோட்டையில் உள்ள அவர்களின் வீட்டை அடைந்திருந்தான்.

 

வந்தவன் காத்திருந்து, பன்னிரெண்டு மணிக்குப் பிறகே நேரில் சந்திக்க முடிந்தது.

 

வீட்டை ஒட்டியே அமைந்திருந்தது அலுவலகம்.

 

கையில் மனுக்களோடு மக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்ததைப் பார்த்து அமைதியாக நண்பர்களோடு காத்திருந்தான்.

 

வார்டு சம்பந்தப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதோடு, கட்சி மேலிடம் வரை நட்பாகச் சென்றுவரும் நிலையில் இருந்த நாகேந்திரனை, வேலைவாய்ப்பு மற்றும் இதர தொழில்சார்ந்த பயனுக்காகவும் மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் அணுகினர்.  அதனால்தான் அத்தகைய கூட்டம்.

 

கவுன்சிலர் நாகேந்திரனை சற்று வயதானவராக எதிர்பார்த்து வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

 

முப்பத்தைந்து வயதில் அத்தனை வசீகரமான தோற்றத்தோடு வெள்ளை வேட்டி, சட்டையில், தலை நிறைய சிகையோடு அழகனாக இருந்தான்(ர்).

 

நந்தாவிற்கே அவனது தோற்றம் சிலிர்ப்பைத் தந்தது.

 

சிரித்த முகத்தோடு காண்பவரை வசீகரிக்கும்படியாக தன்னை வரவேற்றது நம்பிக்கை கொள்ளச் செய்திருந்தது.

 

////////////

 

அதிதீ, புதிய இடத்திற்கு வர பிரியமில்லாதபோதும், அருகில் இருந்தவர்களின் வற்புறுத்தலால் வீட்டை அப்படியே போட்டுவிட்டு கிளம்பி வந்திருந்தாள்.

 

இருளாயியை உடன் இருக்குமாறு அதிதீ கேட்டும், “இங்க உனக்கு ஒரு பயமும் தேவையில்லை.  அங்கதான் உனக்கு எப்ப என்னாகும்னு தெரியாத நிலை.   அதனால உம்புருசன் ஊருல இருந்து வரவரை இங்ஙனயே இரு”, என்றுவிட்டு விட வந்த இருவரும் கிளம்பிச் சென்றிருந்தனர்.

 

வந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டது.

 

அந்த வீட்டிற்குள் எங்கும் சென்று வர முடிந்தவளால், வீட்டை விட்டு வெளியே செல்ல இயலவில்லை.

 

ஆம், மலை போன்ற சரீரத்தோடு இருவர் வாயிலில் இருந்தனர்.

 

வந்த மறுநாள் காலையில் வெளியே செல்லக் கிளம்பியவளை உடல்மொழியாலேயே வீட்டிற்குள் அனுப்பியிருந்தனர்.

 

அதிதீ சற்று தைரியமானவள்தான்.

 

ஆனாலும் அவர்களை மீறிச் செல்ல ஏதோ ஒன்று தடுத்தது.

 

நந்தா இரவில் கண்டிப்பாக ஊருக்கு வந்திருப்பான்.  தான் இங்கிருப்பது அவனுக்குத் தெரியுமா என்பதே பெண்ணுக்குத் தெரியவில்லை.

 

அருகில் இருந்தவர்களின் பேச்சைக் கேட்டுக் கிளம்பி வந்தது பிசகோ என மனம் அடித்துக் கொண்டது.

 

நந்தாவை எண்ணி வருத்தமும் வந்தது.

 

தன்னைத்தேடி எங்கெல்லாம் திரிகிறானோ.  இருளாயி உண்மையில் தனக்கு நன்மை கருதி இங்கு விட்டுச் சென்றாற்போலில்லை.

 

யாருக்கோ உடந்தையானது போன்ற எண்ணம் வந்தது.

 

இனி யாரையும் நொந்து பிரயோசனமில்லை.

 

விடியல்வரை உறக்கமின்றி இருந்தவள், பொழுது புலர்ந்ததுமே கிளம்பி வெளியில் வந்து, மீண்டும் வீட்டிற்குள் முடங்கியதுதான்.

 

வேளைக்கு தனது இருப்பிடம் தேடி வந்த உணவின்மீது நாட்டமில்லை.  மறுத்தாலும் அவர்கள் வற்புறுத்தவில்லை.

 

இரு பெண்கள் இருந்தனர்.  இருவரும் நன்றாக பேசிக் கொண்டனர்.  ஆனால் அதிதீயிடம் அத்தியாவசியமான பேச்சுகள் மட்டுமே.

 

இரண்டு முழுநாள்கள் கடந்திருந்தது.

 

பொழுதுகள் நீண்டது போன்றிருந்தது.  யோசித்து, யோசித்து சோர்ந்து போனாள்.

 

அழத் தோன்றவில்லை.

 

இதில் தனது தந்தையின் பங்கென்ன என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

தந்தையின் வளர்ப்பால் தான் எடுத்த முடிவு. தன்னை வருத்துவதோடு நந்தாவையும் நோகச் செய்கிறதே என உள்ளம் வருந்தியது.

 

தன்னை கால முழுமைக்கும் தான் செய்த செயல் விரட்டுமோ என்று தோன்ற, விரக்தியாக உணர்ந்தாள்.

/////////////

தனது பணியைப் பற்றி யோசிக்க இயலாமல் அதிதீயைத் தேடி அலைந்தான் நந்தா.

 

தனக்கு இரண்டு நாள்கள் விடுப்பு கூறியிருந்தவன், அது முடிந்தும் பணிக்குத் திரும்பவும் முடியாமல், அதிதீ என்ன நிலையிலிருக்கிறாள் என்பதும் புரியாமல் நண்பர்களின் உதவியோடு அங்கும், இங்கும் அலைந்து திரிந்தான்.

 

நண்பர்களிடம் செங்கல்பட்டிலிருந்து வந்த அன்று காலையிலேயே விசயத்தைக் கூறியிருந்தான்.

 

நாகேந்திரனை நேரில் சந்திக்கச் சென்றபோது, அதிதீயைப் பற்றிப் பேசத் துவங்கியதும், அங்கிருந்த அனைவரையும் வெளியே அனுப்பியவன், நந்தாவிடம் விசயத்தைக் கூறுமாறு கேட்டான்.

 

நந்தா கூறும்வரை அமைதியாக கேட்டிருந்தவன், பொண்ணு போட்டோ இருக்கா எனக்கேட்க, தன்னுடைய கம்பெனி மொபைலில் செங்கல்பட்டு செல்லுமுன் சேகரித்திருந்த படத்தை எடுத்துக் காண்பித்தான்.

 

சற்றுநேரம் யோசித்து அமைதியாக இருந்த கவுன்சிலர், “ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ண பொண்ண இழுத்துட்டுப்போயி நீங்க கல்யாணம் பண்ணிக்குவீங்க.  மாப்பிள்ளை கையச் சூம்பிகிட்டு சிவனேனு இருப்பான்னு நினைச்சியா?”, எனக் கோபத்தோடு கேட்க

 

கவுன்சிலரின் பேச்சைக் கேட்டதும், மனதில் திக்கெனப் பதற்றம் சூழ்ந்து கொண்டது நந்தாவிற்கு.

 

சரியான இடத்திற்கு வருவதாக எண்ணி, தவறான இடத்திற்கு வந்ததை எண்ணி நொந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “ரொம்ப நாளா லவ் பண்ணோம் சார்.  வீட்டுல ஒத்துக்கல! அதான் இப்டி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாப் போச்சு!”, என நந்தா தகைந்து பதில் கூறினான்.

 

“உங்க தகுதிய மறந்துட்டுத் தெரியறீங்க! அளவோட ஆசைப்படவே தெரியாதாடா உங்களுக்கு!”, எகத்தாளமாகக் கேட்டா(ன்)ர்.

 

“….”

 

“காதலுங்கற பேருல எல்லா கோமாளித்தனமும் பண்ணி, நல்ல வசதியான வீட்டுப் புள்ளைங்களை நைசா பேசி செட்டில் ஆகீறீங்க”, என்ற நாகேந்திரனின் இடக்கான பேச்சில் உள்ளம் துடிக்க

 

“நாங்க யாரையும் ஏமாத்தனும்னு அப்டிப் பண்ணல!  எங்க லைஃப்ல நாங்க ஏமாந்திரக்கூடாதுன்னுதான் அப்டிப் பண்ணிட்டோம்.  இதனால பாதிக்கப்பட்டவங்க நிலை உண்மையிலேயே கஷ்டந்தான்.  ஆனா அதுக்கு முன்னயே எங்க விசயத்தை வீட்டுல சொல்லியும் பிடிவாதமா பெரியவங்க பண்ணதுக்கு அந்தப் பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்லையே சார்.  அவங்கப்பா கமுக்கமா கல்யாண ஏற்பாடு பண்ணது தெரிஞ்சதால, அவசரமா இப்டி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாப் போச்சு!”, பணிவாகவே கூறினான்.

 

“எல்லாந் தெரிஞ்சேதான் கை வச்சிருக்க!  அப்ப உனக்கு எவ்வளவு தைரியம்?”

 

“சார்.  அதிதீயை யாருக்குப் பாத்திருக்காங்கனு அவளுக்கே இன்னும் சரியாத் தெரியாது.  அப்டியிருக்க தெரிஞ்சே பண்ணுனேனு அபாண்டமாச் சொல்றீங்க!”

 

“நீங்க எல்லாம் சரியா பண்றீங்க!  நாங்க எல்லாம் தப்புங்கறீயா?”

 

“ஐய்யோ அப்டிச் சொல்லலை சார். நாங்க பண்ணதுதான் பெரிய தப்பு.  பெரிய மனசு பண்ணி மன்னிச்சுருங்க!  தெரியாம நடந்துபோச்சு.  பொண்ணுக்கு வேற பையனப் புடிச்சிருக்குனு தெரிஞ்சே மாப்பிள்ளை பேசின அவங்கப்பாகிட்ட கேக்க வேண்டியதை, ஒன்னுந்தெரியாத எங்கிட்ட கேக்கறீங்க சார்.  நான் அந்தளவு வர்த் இல்ல சார்”

 

“அதுதான் தெரியுமே.  அந்தப் பொண்ணை கட்டிக்கறளவு நீ வர்த் இல்லைனு.  அதனாலதான் உங்கூட பொண்ணை விட முடியாது”, திடமாய் வந்தது.

 

“சார்! கல்யாணம் பண்ணி ஒரு மாசங் குடித்தனம் பண்ணவனோட வயிஃப் சார் அவ!”

 

“அதனால என்ன?”

 

“…”, இதற்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் அமைதியாக நின்றவனின் உள்ளம் கொதித்தது.

 

“மறந்துட்டு… வேற கல்யாணம் பண்ணிட்டுப் போற வழியப் பாரு”, சாதாரணமாகக் கூறினான் நாகேந்திரன்.

 

“சார்.. அவளுக்கும் என்னைப் புடிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா!  அப்டியிருக்க ரெண்டு பேரையும் பிரிச்சிராதீங்க சார்”

 

“பிரிச்சாச்சு, என்ன செய்யப் போற?”

 

“சார் புரிஞ்சிக்கங்க”

 

“என்னத்தைப் புரிஞ்சிக்க?”

 

“எங்க வலி உங்களுக்குப் புரியலை!”, நந்தா

 

“எங்களுக்கும் வலிச்சது!”

 

“அதுக்குத்தான் மன்னிப்பு கேட்கறேனே சார்”

 

“போயி வேற வழியப் பாரு!”, என வாயிலைக் காட்டினா(ன்)ர்.

 

“சார், இது ரொம்பப் அநியாயம் சார்”

 

“போயி வேலையப் பாருடா!”

 

“உங்களுக்கு சொசைட்டில நல்ல மரியாதை இருக்கு சார்.  நம்பி வந்தவங்கிட்ட இப்டிச் சொன்னா என்ன சார் பண்ணுவேன்”

 

“உன்னை யாருடா நம்பச் சொன்னா?”

 

“சார், அவ இல்லாம நானில்லை சார்”

 

“என்ன அவ இல்லைனாஆஆஅஅ! செத்துருவீயாஆஆஅஅஅ?”

 

“சார்.. கொஞ்சம் மனசு வைங்க.  உங்க வழிக்கே வராம, நாங்க வேற எங்கிட்டாவது போயி வாழ்ந்திக்கிறோம்.  என்னோட அதியை மட்டும் எங்கிட்ட திருப்பிக் கொடுத்திருங்க சார்”

 

“முடிவை முடிவாச் சொல்லிட்டேன்!”, என்றவன் அதற்குமேல் ஒன்றும்பேசாமல் ரவி என அழைக்க, உள்ளே வந்தவன் நந்தாவை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டிருந்தான்.

 

நந்தாவைவிட மூன்று மடங்கு உருவத்திலும், எடையிலும் மிகுந்திருந்தவன் குழந்தையைத் தூக்குவதுபோலத் தூக்கியிருந்தான் ரவி என அழைக்கப்பட்டவன்.

 

ஐந்தடி, பத்தங்குல ஒடிசலான தேகத்தில் இருந்த நந்தாவைப் பார்த்து, “அதான் சொல்லிட்டாருல்லஅஅ… போயி வேற வழியப் பாரு”, என்றிட

 

கோபம் உச்சிக்கு ஏறிட, “டேய்…! என்னோட அதிய எங்க போயி மறச்சி வச்சாலும் அவ எனக்குத்தான்!  என்னைப் பத்தி நான் சொல்லமாட்டேன்.  நான் யாரு, எப்படிப்பட்டவன்னு என்னோட செயல்ல காமிக்கிறேன்!”, என சத்தமாகக் கூறியவனை வெளியே காத்திருந்த நண்பர்கள் சூழ்ந்து கொண்டு வெளியே அவசரமாக இழுத்துச் சென்றனர்.

 

நந்தாவை மேற்கொண்டு பேசவிடாமல் அழைத்துக் கொண்டு டூவீலரில் கிளம்பியிருந்தனர் அவனது தோழர்கள்.

 

அரசியல்வாதியின் முகத்தைக் கொண்டு தவறாக எடைபோட்ட தனது மனதை எண்ணி வெட்கினான்.

 

வரும்வழியில் இருந்த ஆலமர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு, மெதுவாக நந்தாவிடம் பேச்சுக் கொடுக்க, பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.

 

நீண்ட நேரம் அமைதியாக இருந்தவனைக் கண்டு பயந்த நண்பர்கள், “டேய்.. நந்தா உனக்கு அந்தப் பொண்ணு அங்கதான் இருக்குனு கன்ஃபார்மா தெரியும்னா வேற எதாவது வழில வெளிய கொண்டு வருவோம்”, என

 

தலையை அசைத்து ஆமோதித்தவன், யோசித்தபடியே இருந்தான்.

 

தான் பணிபுரியும் கன்ஸ்ட்ரக்சன் அலுவலத்தில் உண்டாகும் எதிர்பாரா நெருக்கடிகளின்போது சமாளிக்க அவ்வப்போது காவல்துறையை நாடுவது வழக்கம்.

 

அந்த அடிப்படையில் பழக்கமான ஏசிபி செந்தில்நாதனை நேரில் சென்று சந்திக்க முடிவு செய்தான்.

 

முகத்தில் சற்றுத் தெளிவோடு கிளம்பியவனை அழைத்துக் கொண்டு, அவன் கூறிய இடத்தில் விட்டனர் நண்பர்கள்.

///////////////

 

வந்த இடத்தில் ஏசிபியை சந்திக்க இயலவில்லை.  விடுப்பில் சென்றிருப்பதாகத் தகவல் வந்தது.

 

வேறு சொந்த அலுவலில் இருந்தவரை மொபைலில் அழைத்துப் பேச, “நான் நாளைக்கு புதுக்கோட்டை வந்துருவேன்.  ஈவினிங் ஆஃபீஸ்… என்று இழுத்தவர், வேணாம். வெளிய பாக்கலாம்”, என்று விட்டு வைத்திருந்தார் செந்தில்நாதன்.

 

அன்று முழுவதும் காத்திருந்தான்.

 

வேறு வழியில்லை.  பெண் எந்நிலையில் இருக்கிறாளோ என்று மனம் முழுக்க வேதனை அப்பிக் கொண்டது.

 

தன்னால் அவளை காபந்து செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருந்து கொண்டு, அவளை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறோம் என்று நினைத்தபோது அவன்மீதே கோபம் வந்தது.

 

அடுத்த நாள் விசயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஏசிபி, “கோவில்ல குடுத்த மேரேஜ் அக்னாலெட்ஜ்டு ரிசிப்ட் கையில இருக்கா?”, எனக் கேட்க

 

“இருக்கு சார்”

 

அதை வாங்கிப் பார்த்ததோடு, நேரில் சென்று கோவில் ரெஜிஸ்டரிலும் ஊர்ஜிதம் செய்து கொண்டதோடு சில தகவல்களை நந்தாவிடம் கேட்டறிந்து கொண்டார்.

 

“பொலிட்டீசியன்கிட்ட தேவையில்லாம பகைச்சிக்கிட்டா, தேவையில்லாத ட்ரான்ஸ்ஃபர், சிலர் பழிவாங்கல்கள்னு நம்ம காலத்துக்கும் போராடனும்.  நடந்ததை இனி மாத்த முடியாது.  ஆனா மேற்கொண்டு யாரையும் சங்கடப்படுத்தாம பிரச்சனையிலிருந்து உங்களை வெளிய கொண்டு வரணும்”, என்றவர்,

 

“நீங்க இப்ப போலீஸ் ஸ்டேசன் போயி ஒரு கம்ப்ளைண்ட் ஒன்னு எழுதிக் குடுங்க”, என்றவர், நந்தா குடியிருந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்திற்கு செல்லப் பணித்தார்.

 

“மேற்கொண்டு நடக்க வேண்டியதை நான் பாக்கறேன்.  இன்னொன்னு நீங்க நான் எப்பக் கூப்பிட்டாலும் வரத் தயாரா இருங்க”, என்றுவிட்டு கிளம்பியிருந்தார்.

 

நந்தாவும் அவரின் பேச்சைக் கேட்டு, அதன்படி செய்து முடித்து, அவரின் அழைப்பிற்காகக் காத்திருந்தான்.

 

அதிதீயை நந்தா மீட்டானா?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

error: Content is protected !!