VVP-10B

அத்தியாயம்-10(2)

பசுமையின் புத்துணர்ச்சி(2):

தாய் தந்தையை நினைத்து அவள் கலங்குவதை பார்த்த மங்கை “மேடம்” என்று அவளை ஆசுவாசப்படுத்த, கண்களை துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

———————

அத்தனை நாள் தேக்கிவைத்த வேதனை கண்ணீராய் கொட்டியது. தாய் தந்தையை கடைசியில் பார்க்கமுடியவில்லயே என்ற வருத்தம் அதிகமாக, அழுதுகொண்டே இருந்தாள்.

மிது…” என்று ஆதரவாக அழைக்க “ஏன் சக்தி என்ன விட்டுட்டுப் போனாங்க? நான் வருவேன்னு அவளோ நம்பினாங்கஇன்னும் கொஞ்சநாள் எனக்காக காத்துட்டு இருந்துருக்கலாமே... நான் துரதிஷ்டசாலி சக்தி… எனக்கு யாருமே இல்ல. நான் ஏன் இன்னமும் இருக்கனும்?” அழுதுகொண்டே கேட்க…

ஏன் நான் இல்ல மிது உனக்கு? எனக்காக இருக்க மாட்டயா?” கேட்டான் அவளிடம் உரிமையாக. அதை சொல்லும்போது அளவிட முடியாத உரிமை அவளிடம் தனக்கு உள்ளதுபோல் உணர்வு. ஏன் எப்படி என்று அவனுக்கு புரியவில்லை.

முன்பும் அவளிடம் இப்படி பேசியுள்ளான். னால் இப்போது அது ஏனோ அவன் வேறு அர்த்தத்தில் சொல்வது போன்ற ஒரு எண்ணம்.

அவனையே கலங்கிய கண்களுடன் அவள் பார்க்க, தன் வார்த்தைகள் செல்லும் போக்கை உணர்ந்தவன் சட்டென நிறுத்தினான்.

விடுவிடுவென எழுந்து “நான் சாப்பிட ஏதாச்சும் இருக்கான்னு பாக்கறேன்” என்று அவசரமாக வெளியே சென்றுவிட்டான்.

கீழே சென்றவன் உள்ளத்தில் போராட்டம். அவளிடம் எடுக்கும் உரிமை சரியா?’ பெருமூளை கேள்விகேட்க… மனசாட்சியோ அதில் என்ன தவறு இருக்கிறது?’ என மறுகேள்வி கேட்டது.

பெருமூளை விடுவேனா என அவள் அதற்கு ஒருக்காலும் ஒத்துப்போகமாட்டாள்என்று வாதிட அதை நாம் ஏன் முடிவு செய்யவேண்டும்? என் எண்ணம் அவளுக்கு புரிந்து ஒருவேளை ஏற்றுக்கொண்டால்?’ என்று மனசாட்சி மறுவாதம் முன்வைத்தது.

சக்திக்கு மண்டையும் இதயமும் ஒருசேர வெடிப்பதுபோல் இருக்க, வேலையாள் சரியாக டீ பிளாஸ்க்குடன் வந்து நின்றார். அவசரமாக வாங்கி, அதை ஊற்றி இரண்டு மடக்கு பருக, ஓரளவிற்கு சமநிலைப்பட்டான்.

மனதில் நான் அறியாமல் அவள் வந்துவிட்டாள். அது தெளிவாக தெரிகிறது. அவளுக்கும் அது புரிந்து தன்னை ஏற்றுக்கொண்டால் தன் வாழ்க்கை அவளுடன்இல்லையேல் இப்போது இருப்பதுபோல் இருந்துவிட வேண்டியதுதான்.  

நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்து, வந்தவரிடம் சமையல் செய்யசொல்லிவிட்டு மேலே சென்றான் டீயுடன்.

அங்கே அவளும் ஏதோ முடிவெடுத்ததுபோல், அழுகையை நிறுத்திவிட்டு உட்கார்ந்திருந்தாள். அவன் புரியாமல் அவள் அருகே செல்ல, அவனை ஏறிட்டு பார்த்தவள், மறுபடியும் ஏதோ சிந்தனையில் மூழ்கினாள்.

அவன் டீ கப்பை நீட்ட, அதை வாங்கிக்கொண்டவள் “சக்தி… உன்கூட கொஞ்சம் பேசணும்”

அவள் பக்கத்தில் அவனும் உட்கார, அவள் தொடர்ந்தாள்.

நான் முடிவு பண்ணிட்டேன் சக்தி. அப்பாவோட இந்த டேகேர் ப்ராஜெக்ட் நம்ம எடுத்து நல்லப்படியா பண்ணுவோம். என்ன நினச்சுட்டே உலகத்தை விட்டுப்போன ரெண்டு பேத்துக்கும் என்னால செய்யமுடுஞ்சது…” அவள் முடிக்க அவனுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். நம்மஎன்று அவள் சொன்னதை கேட்டு.

அதுவும் அவள் தன்னுடன் இருக்க போவதாக சொன்னதை கேட்டு

அவன் முகம் புன்னகயைப் பூசிக்கொள்ள, “ஆனா சக்தி… அதப்பத்தின பேசிக் (basic) கூட எனக்குத் தெரியாது. அதுக்காக நான் என்ன அப்க்ரேட் (upgrade) பண்ணிக்கணும். ஏன்னா…” என்று அவள் இழுக்க, அவன் என்ன என்பது போல் பார்த்தான்.

அது… நான்டென்த்… பிளஸ் டூ கூட படிக்கல. அதுதான் ஒரே யோசனையா இருக்கு” கடந்தகாலம் நினைவிற்கு வந்து அவளை கலக்கத்துடன் தயங்கவைத்தது.

அதைப் புரிந்துகொண்டவன், அவளின் கலக்கத்தை போக்க, “இதெல்லாம் ஒரு விஷயமா... இப்போ படிச்சிட்டா போகுது… ஆனா” என அவன் இப்போது இழுக்க, அவள் புரியாமல் பார்த்தாள்.

அவனோ சிரிப்பை அடக்கிக்கொண்டு “சின்ன பொண்ணா இருக்கப்பவே உன்ன ஒரு இடத்துல உட்காரவெச்சு, படிக்க வைக்க ஸார் ஆண்ட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அதுதான்…” என்று கண்சிமிட்ட “ஏய்ய்ய்… வேணாம்…” என்று ஒரு விரல் காட்டி மிரட்டினாள்அவன் சத்தமாக சிரித்தான்.

மிது. மிது... நீ டைரக்ட் பிளஸ் டூ எழுது. அப்பறம் ஏர்லி சைல்ட்ஹூட் எடுகேஷன் கோர்ஸ் (Early Childhood Education course) பண்ணிட்டா, ஈசியா இத ஹாண்டில் பண்ணிடலாம்” என்றான் அவளைத் தேற்றும் விதமாக.

அவள் முகம் பிரகாசமாக, அதைப் பார்த்தவன் முகத்திற்கும் அது தொற்றிக்கொண்டது. அவள், அப்பா அம்மாவின் போட்டோவை வருடிக்கொடுக்க, அவன் கண்களோ அவளை வருடியது.

அவள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்கவேண்டும். அதற்கு என்னவேண்டுமானாலும் செய்யலாம்என்று நினைத்துக்கொண்டான்.

அன்றிரவு அவளின் அறையில் அவளை உறங்கச்சொல்ல, முதலில் தயங்கினாள். பின் முந்தையயிரவு போல், ஒரு மெல்லிய இசையை ஒலிக்கவிட, அவள் கண்கள் தூக்கத்தைத் தழுவியது.

அடுத்தநாள் இருவரும் சென்னை வந்தனர்.

அவளை டேகேரில் விட முடிவெடுத்தான். அவளும் சரி என்க, இருவரும் கீழே வந்தனர். அவள் தயங்குவாள் என்றெண்ணி ஆட்டோ அழைக்க அவன் நினைக்க, அவள் பைக்கின் பக்கத்தில் நின்றாள்.

முன்பு அவளுக்கு தயக்கம். ஆனால் இப்போது அவனுக்கு தயக்கம்.

முன்பு மனதில் எதுவுமில்லை. ஆனால் இப்போது? அவன் நினைக்கையிலே “எவளோ நாள் ஆட்டோ எடுத்துட்டு போறது. பைக்லயே போய்டலாம்” என்றாள் அவனின் தயக்கத்தைத் பார்த்து.

அவன் வண்டியை எடுக்க, அவள் பின்னே உட்கார்ந்து கொண்டாள். அவன் மனதில் படபடப்பு. இன்பப் படபடப்பு. வண்டியின் கண்ணாடியை சரிசெய்துகொண்டான். சாலையைப் பார்க்க அல்ல… அதன் வழியே அவளைப் பார்க்க…

அந்த பத்துநிமிட பயணம் அவனுக்கு புதிய பல காதல் பரிமாணங்களைக் கற்றுக்கொடுத்தது.

உள்ளே சென்றதும் ஹாசினி ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள். அதைப் பார்த்து இன்னும் சில வாண்டுகள் அவள் அருகில் ஓடிவர, அந்த பொடுசுகளிடையில் தானும் ஒரு வயது பிள்ளை போல் ஐக்கியமானாள்.

உள்ளே வந்த சக்தி அவள் குழந்தைகளுடன் கலந்துவிட்டதைப் பார்த்தவன், பொறுப்பாளர் ப்ரியாவிடம் பேசிவிட்டு மிதுலாவிடம் வந்தான்.

மிது… எனக்குக்கொஞ்சம் வேல இருக்கு. நான் முடிச்சிட்டு வந்துடறேன். வந்ததும் நாம கிளம்பலாம்” அவளிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

குழந்தைகளுடன் குழந்தையாய் கலந்த மிதுலாவிற்கு கடந்தகாலம்… ஒற்றையறை… மனிதர்கள் மீதான வெறுப்பு…. என்று எந்த ஒரு கட்டுப்பாடும் போட்டுக்கொள்ளாமல் தன் சிறுவயதிற்குப்பின் வாழ்ந்திருக்கவேண்டிய வாழ்க்கையை, தற்போது வாழவேண்டும்இந்த வாண்டுகளுடன் என்று முடிவெடுத்தாள்.

தான் சில தினங்கள் முன் எப்படி இருந்தோம்… இப்போது இந்த மாற்றம்என்று நினைத்துக்கொண்டிருக்கையில் சக்தியின் பிம்பம் வந்து சென்றது. முகத்தில் தானாக சிரிப்பு படர்ந்தது.

சில மணித்துளிகள் அந்த வாண்டுகளுடன் கழிந்ததது.

மிடு…” என்று ஹாசினி மழலை மொழியில் கொஞ்ச, பெயர் சொல்லி அழைத்த அந்த பெரிய மனுஷியை பார்த்தாள் மிதுலா. சக்தி அவளை அழைத்திருந்ததைப் பார்த்து க்ஷணத்தில் கற்றுக்கொண்டது அந்த பிஞ்சு.

என்ன ஹாசினி?” மிதுலா கேட்க “குத்ர குத்ர” என்றது குழந்தை. காப்பாளரிடம் மிதுலா என்ன சொல்கிறாள்என வினவ,

அவர் “அவங்க வீட்ல இவ சாப்பிட, குதிரை மாதிரி தூக்கிட்டு போவாங்கலாம் மா. அதுமாதிரி தூக்க சொல்றா. ரெண்டு நாள் பண்ணி உடம்பு பெண்டு நிமுந்துடுச்சு” அலுத்துக்கொண்டார் அந்த பெண்மணி.

பின் அவரே “இது மாதிரி எதையாச்சும் பழக்கி விட்டுட்டு நம்ப உயிரை எடுக்கறாங்க. இவள சாப்பிட வெக்கறதுக்குள்ள” என்று மறுபடியும் புலம்பினார்.

சரிநான் அவளுக்கு விளையாட்டு காட்டறேன். நீங்க ஊட்டிவிடுங்க” என்று சொல்லிவிட்டு, “என்ன நாலு கால்ல நடக்க வெச்சிட்டயே” ஹாசினியின் கன்னத்தை கிள்ளிவிட்டு, குதிரை போல் நாலுகால்களில் நிற்க, ஹாசினி கைதட்டிக்கொண்டே அவளின் மேல் ஏறிக்கொண்டாள்.

இதைப் பார்த்து அங்கே ஓடிவந்த ப்ரியா “மேடம்… நீங்க போய் எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு” என்று தடுக்க “இருக்கட்டும். குழந்தை ஆசைபடுதில்ல” என்று சுற்ற ஆரம்பித்தாள்.

மிதுலா அங்கும் இங்கும் ஹாசினியை வைத்துக்கொண்டு ஓட, மற்ற வாண்டுகளுக்கும் குஷி ஏறியது.

மிதுலாவை துரத்தி விளையாடிக்கொண்டிருக்க, ஹாசினியும் உண்டு முடிக்க, அதே நேரம் சக்தியும் உள்ளே வந்தான்.

மிதுலா இருந்த நிலையைப் பார்த்து சிரிப்பு தாங்காமல், சத்தமாக சிரிக்க, அதைப் பார்த்து மிதுலா முறைத்தாள்.

ஹாசினியை இறக்கிவிட்டவுடன், அடுத்து சில வாண்டுகள் நானு நானுஎன்று அவள் மேல் எற அடம்பிடித்தது.

அட போங்கய்யாஎன்னால முடில…” என்று மிதுலா உட்கார, குழந்தைகள் அவள் மேல் பாய்ந்தது. குதுர போணும் குதுர போணும்என அடம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

சக்தி இன்னமும் சிரிக்க, அதை பார்த்த மிதுலாவோ குழந்தைகளிடம் “யாருக்கு யானை போகணும்?” என்று கள்ளப்புன்னகையுடன் சக்தியை பார்த்துக்கொண்டே கேட்க, அவனுக்கு புரிந்துவிட்டது.

நான்நான்என்று குழந்தைகள் ஒன்றின்பின் ஒன்றாக சொல்ல, சக்தி அந்த இடத்தை விட்டு வெளியேற நினைத்தான், அவளின் உள்குத்தை நினைத்து.

அதற்குள் மிதுலா அங்கபாருங்க… யானை ஓடப் பாக்குது. பிடிங்க” என்று சக்தியை காட்டி சொல்ல, அனைத்தும் அவனிடம் ஓடியது.

இப்போது சிரிப்பை மிதுலா எடுத்துக்கொண்டாள். என்ன பாத்து சிரிச்சல்ல. பண்ணு பண்ணுஎன்ற பாணியில் சக்தியை பார்த்து கிண்டல் செய்ய, குழந்தைகள் அவனை விடுவதுபோல் தெரியவில்லை. அடுத்து யானை சவாரி அவன் முதுகில் நடந்தது.

அவளின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசிப்பதுபோல் இருந்தது அவனுக்கு. மொத்தமாக அவளின் அந்த முகத்தை அவன் மனதில் பதித்துக்கொண்டான்.

கள்ளம் கபடமில்லாத அவளின் சிரிப்பு. களங்கமற்ற அவளின் உள்ளம். இத்தனை நாட்கள் தன்னையே வருத்திக்கொண்டு கூட்டில் அடைபட்ட கிளிபோல் இருந்தவள், இன்று குதூகலமாய் இருப்பது அவனுக்கு அவ்வளவு நிறைவாக இருந்ததது.

உன்னை என்றுமே இப்படியே வைத்துக்கொள்வேன் மிதுஎன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டான்!!!

———————

வாவ்…மேடம்உங்களுக்கும் சக்தி ஸார் மாதிரி தோணுச்சா?” அவளிடம் மங்கை கேட்க, ஆம் என்றும் இல்லை என்றும் ஒருசேர தலையாட்டினாள் மிதுலா.