VVP-4B

அத்தியாயம்-4(2)

மந்தகாச மஞ்சள்(4):

பேசிமுடித்து வந்தவள், உட்கார “மேடம் உங்க பாஸ்ட் தான் உங்கள அந்த நிலமைக்கு கொண்டு போய்டுச்சா?” மங்கை கேட்க “ஹ்ம்ம். எனக்கே தெரில. நான் எந்த மனநிலைல இருந்தேன்னு. அப்பறம் தான் எதுனாலன்னு தெரிஞ்சது” என்று மறுபடியும் சொல்ல ஆரம்பித்தாள் விட்ட இடத்தில் இருந்து.

———————

ஒருவழியாக டியூட்டி டாக்டர் அவளுக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்கவைத்தார்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் செய்வதறியாமல், சோபாவில் தலை கவிழ்த்து கைகளால் முட்டுக்கொடுத்து உட்கார்ந்துவிட்டான்.

‘நேத்தும் இதே மாதிரி தான் சத்தம் வந்துச்சு. இன்னைக்கும். ஒரு வேல என்னாலயா? இல்ல அடிக்கடி இப்படி வருமா? இவகிட்ட கேட்ட கண்டிப்பா சொல்லமாட்டா… யார்கிட்ட கேக்கறது?’ யோசித்து யோசித்து தலையே பாரமானது.    

காலை விடிந்தது. உறக்கத்தை நாடவேயில்லை அவன் கண்கள். அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

விடிந்ததும் சிறிதுநேரத்தில் அவனைப் பார்க்க கவுதம் வந்திருந்தான்.

“அண்ணா… என்ன கோலம் இது… நீங்க எதுக்காக இப்படி பண்றீங்கனே தெரில. யாரு இவ? இவளுக்காக எதுக்கு இதெல்லாம்?” இரண்டு நாள் குளிக்காத தோற்றத்துடன் இருந்த சக்தியை கேட்க

“எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு கவுதம். டிரஸ் எடுத்துட்டு வந்தயா? குடு” என்று அவனிடம் வாங்கிக்கொண்டு குளித்து முடித்து வந்தான் வெளியே. மிதுலா இன்னமும் மயக்கத்திலேயே இருந்தாள்.

“இங்க பாரு கவுதம் நான் அரை மணிநேரத்துல வந்துடுவேன். அவ மோஸ்ட்லி எந்திருக்க மாட்ட. ஒரு வேல எந்திருச்சா, சிஸ்டர கூப்பிடு அவங்க பாத்துப்பாங்க”

அவன் பதில் பேசுமுன் சக்தி கிளம்பியிருந்தான்.

அவன் சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆக, அவள் மயக்கம் கொஞ்சமாய் தெளிந்தது. சிரமப்பட்டு கண் திறந்து பார்க்க, தான் எங்கே இருக்கிறோம் என்று பார்வையை சுழலவிட்டாள்.

‘எப்படி இங்கு வந்தோம்’ என்று யோசிக்கும்போது அவள் கண்களில் கவுதம் மொபைல் நோண்டிக்கொண்டிருந்தது தென்பட்டது. 

சக்தி கூட தானே பேசிட்டு இருந்தேன் இப்போ இவன் இருக்கான். அப்போ அவன் எங்க போனான்?’ என்று யோசிக்க, அதே நேரம் கவுதமுக்கு அழைத்தான் சக்தி.

மொபைல் பார்த்துக்கொண்டே அவளை பார்க்க, அவள் முழித்திருக்கிறாள் என்று தெரிந்ததும், சக்தியிடம் பேசும்போது அதை சொன்னான். மறுமுனையில் இருந்தவன் என்ன சொன்னானோ, இவனுக்கு கோவம் தலைக்கேறியது.

போனை வைத்துவிட்டு அவள் அருகில் வந்தவன்

“அதெப்படி… எல்லா ஆம்பளைங்களையும் மயங்கவெச்சுடுவயா? மொதல்ல நான்… இப்போ சத்தியண்ணா… ” அவன் வார்தைகளை விட, அவள் புருவங்கள் சுருங்கின. அவனே தொடர்ந்தான்.

“நான் தப்பிச்சிட்டேன். அவர் எவளோ பெரிய வேலைல இருக்காரு? இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்கால போய் செட்டில் ஆகப்போறாரு. ஆனா பாரு இப்போ உன்பின்னாடி சுத்திட்டு இருக்காரு அதுவும் குளிக்காம, சாப்பிடாம”

“நான் உன்னப்பத்தி அவளோ சொல்லியும், ஏன் உன்பின்னால சுத்தறாருன்னு தெரில… என்கிட்ட பேசினமாதிரி அவர்கிட்டயும் பேசவேண்டியது தானே. ஓ… என்ன விட அவரு…” என்று அவன் ஏளனமாக சொல்லி சிரிக்க, அவள் கை காட்டி அவனை பேசவேண்டாம் என்பது போல் தடுத்தாள்.

“வாய மூடிட்டு போய்டு. என் கண்ணு முன்னாடி நிக்காத. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அவன் முகம் பாராமல் அவள் சொல்ல…

“ஓ கோவம் வருதா. அப்போ அவரை விட்டுடு. உன்னமாதிரி ஒரு பொண்ண பாக்க கூட கூசுது” என்று அவன் சொல்லும்போது, சக்தி உள்ளே வந்தான்.

“மிது” என்றழைத்துக்கொண்டே அவன் வர, அவள் முகத்தில் அவ்வளவு கடுமை. அவன் கவுதமை பார்க்க, “நான் கிளம்பறேன்ண்ணா” என்று அவன் திரும்பி நடக்க எத்தனிக்க,

“ஹலோ மிஸ்டர் கவுதம். நீங்க மட்டும் ஏன் தனியா போறீங்க? உங்கண்ணனையும் கூட்டிட்டு போங்க” என்று சக்தியை சுட்டெரிக்கும் பார்வையில் பார்த்துக்கொண்டே சொன்னாள். சக்திக்கு ஒன்றும் புரியவில்லை.

கவுதம் அவள் புறம் திரும்ப, அவனைப்பார்த்து “என்ன பாக்கறீங்க? நீங்க சொன்னமாதிரி அவரை மயக்கம் தெளியவெச்சு கூட்டிட்டு போங்க. யாரும் அவரை இங்க இருக்க சொல்லல. ரெண்டுபேரும் போங்க மொதல்ல” என்றாள் ‘வெளியே செல்’ என்பதுபோல் செய்கையுடன்.

கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம். மனதில் அவ்வளவு வலி ‘அவன் பேசியதை கேட்டு’.

சக்தி கவுதமை பார்க்க, கவுதம் வெளியேறினான். அவசரமாக அவன் பின்னே சென்றவன் “என்னடா அவகிட்ட சொன்ன?” என்று கோவமும் விரக்தியுடனும் கேட்டான்.

அனைத்தையும் சொன்னவன் “உன் நல்லதுக்குத்தான் பேசினேன்ண்ணா. இந்த மாதிரி பொண்ணெல்லாம் உனக்கு வேணாம். கிளம்பு போலாம்” என்றான் சக்தியின் கைகளை பற்றிக்கொண்டு.

அவகிட்ட பேசுன்னு நான் கேட்டேனா? இப்போதான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு அவளை வழிக்குக்கொண்டுவந்துடலாம்ன்னு. அதுக்குள்ள” என்று தலையில் அடித்துக்கொண்டவன்

“எனக்காக ஒன்னும் நீ பேசவேண்டாம். அவ கண்ல படாத இனிமே. நானே உன்கிட்ட பேசறேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அவள் அறைக்குள் சென்றான். இப்போது உள்ளே டாக்டர் மற்றும் சிஸ்டர் இருந்தனர்.

அவள் இன்னமும் கோவமாக இருக்க, டாக்டர் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அவளுக்கு மறுபடியும் ட்ரிப்ஸ் போடச்சொல்லி, ஒரு ஊசியை போட்டுவிட்டு, சக்தியிடம் தன்னை பார்க்க வருமாறு சொல்லிவிட்டு சென்றார்.

அவர் சென்றவுடன் “ஐம் சாரி மிது… அவன் இப்படிலாம் பேசுவானு நான் நினைக்கல. தெரிது நீ கோவமா தான் இருக்கன்னு… பட் நீ ரொம்ப வீக்கா இருக்க. நான் சொல்றத நீ கேட்டனா நான் சீக்கரம் போய்டறேன். என்ன சொல்ற?” என்றான் இலகுவாக புருவத்தை ஏற்றி இறக்கி இதழோரம் புன்னகையுடன்.

அவளுக்கு அவன் முகம் புதிதாக இருந்ததது. தன்னை வருத்தத்துடனோ, சோகத்துடனோ பார்க்காமல், சாதாரணமாக பார்ப்பது மனதை இலகுவாக்க, அவளின் இதழோரத்தில் புன்னகை.

“அப்போ டீல் ஒகே” என்றான் அவள் புன்னகையை பார்த்து. “எனக்கு தூக்கம் வரமாதிரி இருக்கு” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் அமைதியாக.

ஆனால் மனது அமைதியாகவில்லை. ‘எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டேன் என்கிறானே. தன் உடம்புக்கு என்ன ஆனது? இதுபோல் இதற்கு முன் ஆனதில்லையே என்று எண்ணிக்கொன்டே உறங்கிப்போனாள்.

அவள் உறங்கியது தெரிந்தவுடன், மருத்துவரை சந்திக்கச்சென்றான். அவரிடம் சிறிது நேரம் அவளை பற்றி பேசிவிட்டு வந்தான். 

வெளியில் இருந்த சில வேலைகளை முடித்தவன், சாயங்காலம் போல் வந்தான். அவள் எழும் வரை காத்திருந்தவன், அவள் எழுந்தவுடன், ஹாஸ்பிடலில் இருந்து புறப்பட்டனர்.

அவள் எதுவும் பேசவில்லை. அவனும் எதுவும் பேச முற்படவில்லை. அவளை வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.

வீட்டினுள் நுழைந்தவுடன் “சரி.. என்ன டீல் அது எப்போ கிளம்பற சக்தி?” என்றவுடன் “இதோ இப்போவே கிளம்பறேன் ” என்றவன் எதிர் வீட்டின் பூட்டை திறந்து, பின் இவள் புறம் திரும்பி கண்சிமிட்டிவிட்டு உள்ளே சென்றான்.

அதை “ஆஹ்” என்று ஆச்சரியத்துடனும் குழப்பத்துடனும் பார்த்தாள்!!

———————

“மேடம் சக்தி ஸார் எதுக்கு எதிர் வீட்டுக்குள்ள போனாரு?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் மங்கை. மங்கையின் இந்த ஆர்வம் புன்னகையைத்தான் வரவழைத்தது மிதுலாவிற்கு.