VVP-7A

அத்தியாயம்-7(1)

காழ்ப்பின் கருமை(5):

சக்தியைப் பார்த்து வெற்றுப்புன்னகையை உதிர்த்தவள் “என் மூஞ்சி இன்னமும் நல்லா தானே இருக்கு சக்தி?

ஆமா… கோவத்துல ஆசிட் வாங்கினேன். இந்த அழகு எனக்கு ஆபத்துன்னு தோணுச்சு… ஆனா பாரேன் அதுக்கெல்லாம் தைரியம் வேணும் சக்தி…

ஆசிட் கைல எடுத்தேன். ஆனா ஒரே பயம். கையெல்லாம் நடுக்கம்… கண்முன்னாடி பசங்க விளையாடிட்டு இருந்துச்சு. எனக்கொன்னுனா என்ன பண்ணுங்கன்னு ஒரு பயம்”

“அந்த பயத்துல, கை நடுக்கத்துல ஆசிட் தவறி கால்ல விழுந்துடுச்சு” என்றவள் தன் கருகிப்போன கால்களை அவனிடம் காட்டாமல் மறைக்க நினைக்க, அதற்குள் பார்த்துவிட்டான் சக்தி…

அதை பார்த்தவன் கண்கள் தானாக கலங்க, கருகிப்போயிருந்த பாதத்தை, பதற்றத்துடன், கை நடுங்க வருடினான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவள் பாதத்தில் பட, அதை உணர்ந்தவள், வெடுக்கென கால்களை அவனிடம் இருந்து பிரித்துக்கொண்டாள்.

விளையாடிட்டு இருந்த குழந்தைங்க பக்கத்துல வந்துட்டா என்ன செய்யன்னு, அவசரமா செருப்பு கூட போடாம, ரெண்டையும் இழுத்துட்டு ஹாஸ்பிடல் போனேன்”

நடக்கவே முடில. புடவை பட்டு இன்னமும் எரிச்சல். என்னய நானே நொந்துக்கிட்டேன். தனியா இருந்திருந்தா, வாழ்ந்தென்ன பயன்னு உயிரை விட்டுடலாம். ஆனா என்ன நம்பி அக்கா விட்டுட்டுப்போன குழந்தைகளின் நிலைமை யோசிக்கவெச்சது”

அப்போ யோசிச்சேன் சக்தி எனக்கு ஏன் யாருமே இல்லன்னு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்போ திடீரென ஒரு யோசனை. ஒருநாள் நைட் குழந்தைகள கூட்டிட்டு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துட்டு, பெங்களூருல இருந்து புறப்பட்டேன்.

அவள் எங்கு புறப்பட்டாள் என்ன செய்தாள் என்று பார்ப்போம்.

———————

அவள் பெங்களூருவில் இருந்து வந்திறங்கியது பாண்டிச்சேரிக்கு. தான் மட்டும் என்றிருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாள். ஆனால் குழந்தைகளின் நிலைமை அவளை யோசிக்கவைத்தது. தாய் தந்தையைப் பார்க்க வந்திறங்கினாள்.

ஆனால் முதலில் சென்றது, அவள் பாட்டி தாத்தா நிர்வகித்த NGO’விற்கு. அங்கே உள்ளே செல்லும்போது, பழைய நினைவுகள் தான் சிறுவயதில் அங்கே செய்த அலப்பறைகளெல்லாம் நினைவிற்கு வந்தது.

அவளின் தற்போதய நிலைமை யாரேனும் தன்னைக் கண்டுகொண்டால் என்ன செய்வது என்ற சின்ன பதற்றம் வேறு ஒரு பக்கம்.

அங்கிருந்த ஒருவரை பார்த்தாள். முன்பு பார்த்திடாத முகம். புதிதாக சேர்ந்திருப்பார் என யோசித்தவள், அவர் அருகே சென்றாள். தனது தாத்தா பாட்டியின் பெயரை சொல்லி விசாரிக்க ஆரம்பித்தாள்.

“இங்க ஜோசப் ஸார், இல்ல கேத்தரின் மேடம் பாக்க முடியுமா?”

அந்த மனிதரோ “நீங்க யாரு?” என கேட்க, மிதுலா அதற்கு “அவங்களுக்கு தூரத்து சொந்தம்” என்றாள்.

ஓ. ஜோசப் ஸார் போன வருஷம் இறந்துட்டாரு. கேத்தி மேடம் அவங்க மகள் மருமகன் இறந்த கொஞ்ச நாள்லயே இறந்துட்டாங்க” என்ற இடியை இறங்கினார்.

என்ன அம்மா அப்பாவும் உயிரோடில்லையா?’ மனம் அழுத்தியது. கண்டிப்பாக தன்னை நினைத்துத்தான் இப்படி ஆகியிருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

கண்கள் கலங்கியது. ஆனால் எதிரில் இருப்பவருக்கு தெரியக்கூடாது என்று மூச்சை இழுத்து விட்டுவிட்டு, தான் கிளம்புவதாக சொல்லி சென்றுவிட்டாள்.

இன்னும் கொஞ்சம் அதிகம் விசாரித்திருந்தால், சக்திவேல் என்பவர் தான் தற்போதய செயலாளர் என்று தெரிந்திருக்குமோ? விதியின் மற்றொரு விளையாட்டு.

அடுத்து என்ன. கையில் பணம் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய. ஒன்றுமே புரியவில்லை மிதுலாவிற்கு. ஏனோ அவர்களுடைய NGOவில் உதவி கேட்க கூச்சமாக இருந்தது.

தன்னைப் பற்றி சொல்ல நேரிடுமோ? தாய் தந்தை பாட்டி தாத்தா என்று யாரும் இல்லாதபோது எப்படி எதிர்கொள்வது என்று யோசனையாக இருந்தது.

சாப்பிட குழந்தைகளை கூட்டிச்சென்றாள். அவர்களுக்கும் ஐந்து வயதாகப்போகிறது.

ஒருவேளை யாரிடமாவது உதவிகேட்டு பிள்ளைகளை ஹாஸ்டலில் படிக்கவைத்தால், தான் எப்படியாவது வேலைக்கு சென்று உதவிவிடலாம் என்றெண்ணினாள்.

சாப்பிட்டு முடித்து வெளியே வர, பாட்டியுடன் செல்லும் சர்ச்சை பார்த்ததும், அவள் அறியாமல் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கே பாதிரியாரை பார்த்தாள். உதவி கேட்கலாமா என யோசிக்க, அவள் தயங்குவதை அவரே பார்த்து, அவளிடம் ஏதாவது தேவையா என்று கேட்டார்.

அவரைப் பார்த்ததும், கண்கள் கலங்கியது. பாட்டியுடன் செல்லும்போது அவரை பார்த்திருக்கிறாள்.

தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க யாரை அணுகவேண்டும் என கேட்க, அவர் புரிந்துகொண்டு அவளை ஒரு டிரஸ்ட்டின்  பெயரைச்சொல்லி அவர்கள் உதவுவார்கள் என்று அனுப்பிவைத்தார்.

அவளும் அங்கே செல்ல, அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த டிரஸ்ட்டின் தலைவரை சந்திக்க உடனடியாக சென்றாள் மிதுலா. அவரை பார்க்க அனுமதி கிடைக்க, உள்ளே சென்றாள். அவர் சமூக ஆர்வலரும் கூட. வயதில் முதியவர். ஏனோ பார்ப்பதற்கு ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவர் போல் தெரிந்தார் அவளுக்கு.

அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “ஸார், எனக்கு கொஞ்சம் கஷ்டம். பசங்கள ஹாஸ்டல்ல தங்கவெச்சு படிக்க வைக்கணும். எவளோ செலவானாலும் நான் கஷ்டப்பட்டு பணம் தந்துடறேன்” அவரிடம் கோரிக்கை வைத்தாள்.

அவர் “பண்ணிடலாம்மா. என்ன வயசாகுது பசங்களுக்கு” என கேட்க

அஞ்சு வயசு இருக்கும் ஸார்” என்றாள் எதார்த்தமாக. ஏதோ அவருக்கு பொறிதட்ட “இருக்கும்னா என்ன அர்த்தம்? பர்த் சர்டிஃபிகேட் தா பாப்போம்” கேட்டார் அவளிடம். அவள் ‘என்ன சொல்வது’ என்று தெரியாமல் யோசித்தாள்.

எங்கு படிக்க வைக்கவேண்டுமானாலும் பிறப்பு சான்றிதழ் வேண்டும். உண்மையை சொல்லிவிடுவோமா என யோசிக்க “உன் பசங்க தான இவங்க. இல்ல கடத்திட்டு வந்துருக்கயா?” அவளின் யோசனையை பார்த்து நேரடியாக கேட்டார்.

‘இனி மறைத்துப்பயனில்லை’ என்று அனைத்தையும் மும்பையில் இருந்து, பெங்களூருக்கு வந்து, பின் இப்போது பாண்டிச்சேரி வரை நடந்ததை மறைக்காமல் சொன்னாள் மிதுலா.

சிறிதுநேரம் மௌனம் காத்தவர், பின் மெதுவான குரலில் பேச ஆரம்பித்த்தார்.

இங்கபாரு மா. பிள்ளைங்க பர்த் சர்டிஃபிகேட் இல்லனா எங்கயும் சேர்க்க முடியாது. மீறி நீ ஏதாச்சும் சொன்ன, இது உன் பிள்ளைங்க இல்லனு கண்டுபிடிச்சுடுவாங்க. ஆனா நான் உனக்கு உதவுறேன். அதுக்கு நீ எனக்கு என்ன செய்வ?” நாற்காலியில் நன்றாக சாய்ந்த வண்ணம் கேட்க, மிதுலாவிற்கு புரியவில்லை.

இருப்பினும் “செலவு எல்லாம் நான் பாத்துக்கறேன் ஸார். சீட்டு மட்டும் வாங்கிக்கொடுத்தா போதும்” என்றாள் அப்பாவியாக.

ஹாஹாஹா. நான் கேக்கறது புரியாத மாதிரியே நடிக்கறயே” அவர் பார்வை எங்கெங்கோ தொட்டு மீண்டது. புரிந்துவிட்டது மிதுலாவிற்கு. அந்த கிழவனை அருவருப்பாக பார்த்தாள்.

இத்தனை வருஷம் அந்த தொழில் பண்ணவதானே நீ? என்னமோ கண்ணகி மாதிரி பாக்கற? தொழில்ல எத்தனை பேத்த பாத்துருப்ப. என்ன மாதிரி வயசானவங்களையும். ஹ்ம்ம்… எகத்தாளமாக கேட்க, வெட்கிப்போனாள் மிதுலா.

பதிலேதும் சொல்லாமல் அவள் எழுந்து நடக்க, “ஒன்னும் அவசரமில்லை. நாளைக்கு கூட வந்து பாரு… ஒரு நைட் போதும்… உனக்கு சம்மதம்ன்னா… நாளை மறுநாளே பசங்கள நான் நல்ல போர்டிங் ஸ்கூல்ல சேர்க்க ஏற்பாடு செய்வேன் என்றார் விடாமல்.

காதில் விழுந்தும் கேட்காததுபோல் வெளியேறினாள் மிதுலா.

தன் வாழ்க்கையின் அந்தரங்கத்தை தெரியாத ஒருவரிடம் பகிர்ந்து கொள்வது எவ்வளவு முட்டாள்தனம் என்பது புரிந்தது மிதுலாவிற்கு. ஆனால் சற்று தாமதமான புரிதல்… ஆண்கள் இனத்தையே மொத்தமாக வெறுத்தாள்.

எங்கு செல்வது என்று தெரியவில்லை. தனக்கு ஏன் இந்த சோதனை என்று எண்ணினாள். கண்கள் கலங்கியது. அங்கிருந்த ஒரு பூங்காவில் குழந்தைகளை விளையாட சொல்லிவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள்.

எங்கு படிக்கவைக்க வேண்டுமானாலும் சான்றிதழ் வேண்டும். எல்லோரிடமும் இனி தன் கதையை சொல்ல முடியாது. மண்டையே வெடித்தது மிதுலாவிற்கு.

இன்னமும் யோசித்தாள் வேறு வழி இருக்கிறதா என்று. என்ன யோசித்தும் என்னசெய்வது என புலப்படவில்லை அந்த இருபது வயதே முடிந்த பெண்ணிற்கு. அறிவுரை கேட்க யாருமில்லை.

பாவம் சிறுவயதில் அடைப்பட்டவள், வெளியுலகம் பார்த்து சில மாதங்களே ஆன நிலையில், எதுவும் விளங்காமல் மூளை குழம்பியது.

தனக்கு விருப்பமில்லாமல், எவனோ ஒருவன் சம்பாதிக்க தன் உடலை இத்தனை நாட்கள் அடகு வைத்தோம். ஏன் ஒரே ஒரு முறை செய்யக்கூடாது? அதுவும் அக்காவிற்காக? கெட்டுப்போனது கெட்டுப்போனதுதானேஎன்ற எண்ணமும் வந்து சென்றது.

பிள்ளைகளைப் பார்க்கும்போது அக்கா ஞாபகம் மட்டுமே வந்தது. தன்னை நம்பி விட்டு சென்றிருக்கிறார். நல்ல வாழ்க்கை தந்தாகவேண்டும். இப்போதிருக்கும் ஒரே வழி.. தனக்கு தெரிந்த வழி இதுதான். இதுவே கடைசிமுறை... முடிவெடுத்துவிட்டாள்.

இருந்தாலும் ஒரு யோசனை. தன்னை பற்றி அந்த கிழவன் தெரிந்துகொண்டான். பிள்ளைகளை வைத்து மறுபடியும் மறுபடியும் அழைக்க நேர்ந்தால்? எப்படி அவனை தடுப்பது?

அப்போது நியாபகம் வந்தது. வருண் அவர்களுக்கு வாங்கித்தந்திருந்த போன் மூலம் போட்டோ எடுக்கலாம் என்று.

இருவரும் சேர்ந்திருப்பதுபோல் ஒரு போட்டோ மட்டும் இருந்தால் போதும். அந்த கிழவன் ஒருவேளை மறுபடியும் கேட்டால் அதை காண்பிக்கலாம் என்று முடிவெடுத்து, வருண் தந்ததிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அன்றே ஒரு போன் வாங்கிக்கொண்டாள்.

எப்படி உபயோகிப்பது என்பதை கையேட்டைப்பார்த்து கற்றுக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை முதல் வேலையாக, அந்த கிழவனை பார்க்க சென்றாள்.

நீ வருவன்னு தெரியும்” குரூரமாக சிரித்தான் அந்த கிழவன்.

நாளைக்கி என் பசங்கள ஸ்கூல்ல சேர்த்துவிடுவயா?” மரியாதையெல்லாம் பறந்தது. இவனுக்கு எதற்கு என்று.

கண்டிப்பா… முன் பணம் கூட நானே கட்டிடறேன். அடுத்த வருஷத்துலயிருந்து நீ கட்டிக்கோ. என்ன பெரிய ஸ்கூல்ல போடணும்னா அதிகம் செலவாகும். இருந்தாலும் உன்கிட்ட தான் கைவசம் தொழில் இருக்கே. நீ பாத்துப்ப” நக்கலாக சிரிக்க, உடல் முழுதும் தகித்தது மிதுலாவிற்கு.

ஒருவேளை தனக்கு தேவை இல்லாமல் இருந்திருந்தால், அவனை குத்தி கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. இருந்தும் அமைதியாக இருந்தாள்.

சாயங்காலம் அவன் சொன்ன இடத்திற்கு மிதுலா வந்தடைய, அவளை அழைத்துக்கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றான்.

குழந்தைகளுடன் சென்றவள், அவர்களை தூங்கவைத்துவிட்டு, அந்த கிழவன் இருக்கும் அறைக்கு சென்றாள்.

அவனும் அவன் உடையும்… அருவருப்பாக இருந்தாலும், இதுவே கடைசி முறை என்று தனக்கு தானே பலமுறை சமாதானம் செய்துகொண்டு, கிழவன் செய்யும் அட்டூழியங்களுக்கு இணங்கிப்போனாள்.

அவன் தன்னையே மறந்திருக்கும் நேரம் பார்த்து ஓரிரு போட்டோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டாள் மிதுலா.

———————

நான் செஞ்சது தப்புதானே சக்தி? முன்னாடி வேற வழி இல்லாம அத செஞ்சேன். ஆனா இந்த தடவ தெரிஞ்சே செய்தேனே” அவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து கேட்டாள்.

கலங்கிய கண்களுடன் சக்தி, அவள் முகத்தை தூக்கி தன்னை பார்க்க வைத்தவன், இல்லை என்பது போல் தலையசைத்தான்.