நீயும் நானும் அன்பே…
அன்பு-20
வரா, தன் தாய் கலாராணியுடன், தங்கவேலுவின் பகுதிக்குச் சென்றாள்.
வரா, நன்முல்லை ஆச்சியோடு பேசிக் கொண்டிருந்தாலும், மனம் அங்கில்லை.
அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த தாத்தா மற்றும் தாயின் சம்பாசனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் வரா.
தாத்தாவின் வாயில் வந்த சாந்தனு என்கிற பெயரைக் கேட்டவுடன், ஆச்சியின் பேச்சினூடே இதையும் காது கொடுத்து கர்மசிரத்தையோடு கேட்டிருந்தாள்.
“இந்த சாந்தனு பயலுக்கு… ஒரு டாக்டரு புள்ளைய… அலைஞ்சி திரிஞ்சு… பேசி முடிச்சிருந்தான் அவங்கப்பன்! இப்ப இந்தப் பயலுக்கு அடிபட்டுக் கிடக்கவும்… பொண்ணு வீட்டுல மேற்கொண்டு பேச தயங்கறாங்கலாம்!”, என்று தங்கவேலு இழுக்க
“என்னப்பா சொல்றீங்க? சாந்தனுவுக்கா பேசு முடிச்சாச்சு!”, என்று ஆச்சர்யமடைந்த கலா
அடுத்த அதிர்வாக, “பொண்ணு வீட்லயேவா… அப்டிச் சொல்லி பின்வாங்குறாங்க?”, என்று ஆச்சர்யமாகக் கேட்டிருந்தார்.
“ஆமாத்தா…! பேசி முடிச்ச பின்ன இப்டி நடந்ததால… பயப்படறாக! ராசியில்லாத புள்ளைனு… புகுந்த வீட்டுக்கு வந்தபின்ன பேச்சுவாக்குல அவங்க பொண்ணை சொல்லிக் காமிச்சிருவோம்னு, வேற இடம் பாத்துக்கச் சொல்லிட்டாங்களாம்!”, என்று பெண் வீட்டார் மறுப்பதற்கான காரணத்தை மகளிடம் கூறினார் தங்கவேலு.
“எல்லாம் முடிவாகி வந்த நேரத்துல… இப்டி அவங்க சொல்லவும்… நம்ம சைடுல நாலு பெரிய ஆளுகளை கூட்டிட்டுப்போயி சமாதானமா பேசி, அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிரனும்கிறதுல… பய ரொம்ப பிடிவாதமா இருக்கான். அதான் போயிட்டு வந்திரேன்”, என்று கிளம்பியவர்…
இரண்டு எட்டிற்குப்பின் நின்று மகளை நோக்கி, “…இருந்து… உங்கம்மாவோட சாவகாசமா விட்டுப்போன ஊருக்கதையெல்லாம் நிதானமா பேசிட்டு… சாயங்காலம்போல வீட்டுக்குப் போகவேண்டியதுதான!”, என்று மகளிடம் கேட்டவாறே நின்றிருந்தார்.
சாந்தனுவின் விடயம் ஒரே ஊருக்குள் இருக்கும் தனக்குத் தெரியாமல் இவ்வளவு தூரம் வந்ததை அறிந்து யோசனையில் ஆழ்ந்திருந்த கலா, ‘சாந்தனுவுக்கு அண்ணன் பேசி முடிச்சது எங்களுக்கெல்லாம் எதுவும் தெரியலையே…! வரவர இந்த அண்ணன் எதையும் எங்கிட்டலாம் சொல்ல மாட்டிங்குது’, என்று வருத்தத்தோடு எண்ணியவாறு இருந்தவர்
தந்தையின் கிளம்பி நின்ற தோரணையைப் பார்த்து, “சரி நேரமாகப் போகுது. நீங்க கிளம்புங்கப்பா…”, என்று விடைகொடுத்தலோடு
“நான் சித்த நேரம் அம்மாகிட்ட பேசிட்டுருந்துட்டு வீட்டுக்குப் போறேன். இன்னிக்கு லீவு நாளுங்கறதால எல்லாரும் வீட்லதான் இருக்காக… ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாதுப்பா. இன்னொரு நாளைக்கு சாவகாசமா வரேன்”, என்று தந்தையின் பேச்சைக் கேட்க இயலாத வருத்தத்தோடு, காரணத்தைக் கூறி ஒருவழியாக தந்தையை வழியனுப்பியிருந்தார் கலா.
மருத்துவம் படித்த சாந்தனுவிற்கு மகளைக் கொடுக்க தான் எண்ணினாலும், அவர்கள் வீட்டில் எடுக்க இசையமாட்டார்கள் என்றே அதைப் பற்றி இதுவரை சிந்தித்தாரில்லை கலா.
இளங்கலை பட்டம் பெற, கல்லூரிக்கு தன் இளைய மகளை அனுப்பியபோதும், மருத்துவம் படித்த சாந்தனுவிற்கு, வராவை… திருமணம் முடிக்க தன் அண்ணன் இசைய மாட்டார் என்பது புரிந்திருந்தமையால், இது ஒத்துவராது என்கிற உண்மை புலப்பட அதைப்பற்றிய சிந்தனையை வளர்க்காமல், ஒதுங்கிக் கொண்டிருந்தார்.
சாந்தனு மருத்துவன் என்பதால், நவீனாவிற்கு பேசியது, பிறகு சங்கரை நவீனா திருமணம் செய்தது வரை, அனைவரும் அறிந்த விடயமே.
அதில் வந்த குழறுபடிகள் அனைத்தையும் அறிந்திருந்தவரால், வீணான ஆசையை மகள் மனதில் வளர்த்து, தாங்களும் அமைதியற்ற நிலைக்குச் செல்ல பிரியப்படவில்லை.
அதுவரை நடந்த சம்பாசனைகளைக் கேட்ட வராவிற்கோ, இது அனைத்தும் புதிய செய்தி.
வரலெட்சுமியும் நவீனாவின் திருமணம்வரை, எதைப்பற்றியும் யோசிக்காமல், தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றே இருந்திருந்தாள்.
நவீனாவின் வரவேற்பிற்குச் சென்று வந்தவளிடம், ஊருக்கு வந்திருந்த சாந்தனு, வராவை அழைத்து நவீனாவின் திருமணம் மற்றும் வரவேற்பு சார்ந்த சில விடயங்களை இயல்பாகக் கேட்பதுபோல கேட்டிருக்க, பெண்ணும், தான் அறிந்த அனைத்தையும் ஒளிவு மறைவின்றி மாமன் மகனிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
காரைக்குடியில் இருந்து மானகிரிக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வராவைச் சந்தித்துச் செல்லத் துவங்கிய சாந்தனு, பெரும்பாலும் நவீனாவின் திருமணத்திற்குப் பிறகான அவளின் தற்போதைய நிலையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியே, செய்திக் களஞ்சியமான வராவிடம் தேடிவந்து பேசத் துவங்கியிருந்தான்.
வீட்டுப் பெரியவர்கள் பேசுவது, தான் பேசும்போது அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்வதில் வராவுக்கு நிகர் யாருமில்லை.
ஆரம்ப நாள்களில் சாதாரணமாக இருந்த பேச்சின் திசைமாறி, வராவின் செழுமையில் வந்த தடுமாற்றத்திலும், தன்னையறியாமலேயே பெண்ணிடம் நெகிழ்வோடும், இருபொருட்படும்படியான சொற்களையும் பெண்ணிடம் பேசத் துவங்கியிருந்தான்.
மயக்கம், காலம் முழுவதும் தன்னவளாக்கிக் கொள்ளும் வகையினாலானது அல்ல என்பது அவனுக்குத் திண்ணம்.
சலனமற்றுக் கிடக்கும் குளத்து நீரில் கல்லை விட்டெறிந்தால் உருவாகும் அலையைப் போல, சாந்தனு… வார்த்தை எனும் கல்லால் பெண்ணின் சலனமில்லாத மனதில் விட்டெறிந்திருந்தான்.
அலையியக்கத் தத்துவப்படி, மோதுதல், எதிரொலித்தல், பிரதிபலித்தல், ஊடுருவுதல், ஊடாடிக் கொண்டிருத்தல் எனும் நியதிக்கேற்ப, சாந்தனுவின் எண்ணம் மற்றும் சொல்லிற்கேற்றார்போல வராவின் மனதில் எண்ணங்கள், செயல்கள் படிப்படியாக மாறத் துவங்கியிருந்தது.
சாந்தனுவின் தந்தை, அவனது கல்வித் தகுதிக்கேற்ப, மருத்துவம் பயின்ற பெண்ணைத் தனக்குத் திருமணத்திற்கு பார்ப்பதை அறிந்திருந்தும், வராவிடம் வார்த்தைகளோடு விளையாடத் துவங்கியிருந்தான்.
சாந்தனு வலிய வந்து இதமாக இறங்கிப் பேசியதன் உள்ளார்த்தம் உணரும் திராணியில்லாத பெண்ணாகவே இருந்தாள் வரா.
சாந்தனுவின் வசிய பேச்சுகள், காத்திருத்தல், காண இயலாத நேரத்தில் வருத்தமடைதல் போன்றவற்றை பெண் மனம் தனக்கு சாதகமாக எண்ணத் துவங்கியிருந்தது.
உண்மை நிலவரம் அறியாது, நாள்கள், மாதங்களாக மாற… சாந்தனுவின் பேச்சுக்கள் மட்டுமே வராவின் மனதில் நிலைபெறத் துவங்கியிருந்தது.
மாற்றம் ஒன்றே மாறாதது எனும் நியதிக்கேற்ப, பெண்ணின் மனதில் சாந்தனுவின் மீதான ஆசையை வளர்க்கத் துவங்கியிருந்தாள்.
குதர்க்கமும், குயுக்தியுமாக இருந்தவனை அறிந்து கொள்ளாமல், வெளுத்ததெல்லாம் பால் என எண்ணி சாந்தனு தன்னிடம் பேசிய ஒவ்வொன்றையும், மனமெனும் ஓலையில் நினைவுகளின் துணையோடு பத்திரமாகப் பதித்திருந்தாள்.
சாந்தனு தனி வீடு எடுத்து காரைக்குடியில் தங்கியிருப்பதை வராவும் அறிவாள்.
ஊருக்கு வரும்போதெல்லாம், “நேருல பாக்கும்போதுதான் மச்சான்… மச்சான்னு உருகற… டெய்லி காரைக்குடிக்குதான காலேஜ்கு வர… ஒரு நாளாவது வந்து என்னைப் பாக்க நேருல வரீயா? வர்ற தடவையெல்லாம் நாந்தான் உன்னைத் தேடி வரேன். என்னளவுக்கு என் மேல உனக்கு ஆசையில்லை!”, என்று பெண்ணிடம் கேட்டுக் கொண்டே இருந்தவன், தனக்கு பெண் பார்ப்பதைப் பற்றி மூச்சு விட்டானில்லை.
பெண்ணும், “இல்லை மச்சான். காலேஜ் விட்டதும், வாசல்ல பஸ் ஏறுனா வீட்டுக்கு வந்திருவேன். நீங்க தங்கி இருக்கற இடம் எந்தப் பக்கம் இருக்குனுகூட எனக்குத் தெரியாது. காலேஜ், அதைவிட்டா வீடு மட்டுந்தான் தெரியும். காரைக்குடில எனக்கு பெரியம்மா வீட்டுக்குக்கூட தனியா போக வழி தெரியாது”, என்று சாந்தனுவின் நோக்கம் புரியாதவளாக உண்மையான வருத்தத்தோடு பதில் சொல்லியிருந்தாள் பெண்.
பெண்ணோ சாந்தனு பேசுவதை உண்மை என்று நம்பி, மனதோடு காதல் வளர்த்து கருணையோடு பதில் கூறியிருந்தாள்.
உண்மையில் சங்கர் காலில் மூட்டு பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த வராவின் மனமோ அதைப்பற்றி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நேரில் சென்று காணவோ, சங்கரின் உடல்நிலையை எண்ணிப் பரிதாபம் கொள்ளவோ தோன்றாத நிலையில், மனமெங்கும் சாந்தனுவே நிரம்பியிருந்தான்.
இந்நிலையில் திடீரென்று சாந்தனுவிற்கு காயம் உண்டாகியதை அறிந்து, உள்ளமெங்கும் ரணமாக உணர்ந்திருந்தவள், அவனை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க இயலாமல், மனதோடு மருகிக் கொண்டிருந்தாள் வரா.
இந்நிலையில், தான் இன்று கேட்ட செய்தி, பெண்ணை நிலைகுலையச் செய்திருந்தது.
சாந்தனுவின் அலைபேசி எண் என்று குறித்துக் கொடுத்ததை, மறைத்து வைத்திருந்தாள் பெண்.
திங்களன்று கல்லூரிக்குச் செல்லும்போது, வெளியில் இருந்து சாந்தனுவைத் தொடர்பு கொண்டேயாக வேண்டும் என்ற முடிவோடு, தன் தாயோடு வீட்டிற்கு திரும்பியிருந்தாள் வரா.
////////////
பண்ணையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டு, சங்கருடனான மோதலினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரின் வீட்டுப் பெண்கள் சங்கரைக் காண வீடு தேடி வந்திருந்தனர்.
வந்தவர்கள், “ஐயா… வணக்கமுங்க…! பணத்துக்கு ஆசைப்பட்டு எங்க வூட்டு ஆளு இப்டி ஒரு தப்பை பண்ணிருச்சூங்க ஐயா. இப்ப வேலை வெட்டிக்கு போக முடியாம ஆஸூபத்திரில கிடக்குதுங்கய்யா…! போலிசுக தொந்திரவு வேற…! அதான் உங்களைப் பாத்து உண்மையச் சொல்லிறலாம்னு வந்தோம்!”, என்று இருவரும் தங்களின் நிலையைக் கூறி வருந்தியதோடு
“ஐயா… நம்ம தோட்டத்துலயோ, பண்ணையிலேயோ எதாவது வேல போட்டுக் குடுத்தா… அந்த ஆளுக ஆஸூபத்திரில இருந்து வர்ற வரை குடும்பத்தை ஓட்டுவோங்க…! புள்ளைக எல்லாம் சின்னதுக… பெரிய மனசு வச்சி எங்களை போலிசுகட்ட இருந்தும் காவந்து பண்ணி, எங்க புள்ளைக சாப்பிட ஒரு நல்ல வழி பண்ணுங்க ஐயா…! அதுக்கு சரியான உடனே உங்களைப் பாத்து மன்னிப்பு கேக்கச் சொல்றேன்!”, என்று மாறி, மாறி பேசிய இரு பெண்களின் பேச்சின் மூலம் நடந்ததை ஓரளவு அறிந்து கொண்டவன்
“வர திங்க கிழமை அப்பாதான் பண்ணையில இருப்பாரு. நான் சொல்லிறேன். போயி பாருங்க…”, என்றவன்
நவீனாவை அழைத்து கைச்செலவுக்கு பணம் எடுத்து வரச் சொன்னவன்,
பெண்கள் மறுத்தும், “வாங்கிக்கங்க… போயி புள்ளைகளுக்கு சாப்பிட எதாவது வழி பண்ணுங்க… வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் உங்களால முடியறப்பகூட திருப்பி குடுத்துருங்க”, என்ற சங்கரின் பேச்சைக் கேட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள்,
“நீங்க நல்லாயிருக்கனும் ஐயா…, உங்களுக்குப் போயி தீங்கு நினைச்சா எப்டி நல்லாயிருக்க முடியும். அதான் அவஸ்தைப்படுதுக”, என்றபடியே சொற்ப பணத்தையும் கையில் பெற்றுக் கொண்டு கிளம்பியிருந்தனர்.
பெண்கள் செல்லும்வரை அனைத்தையும் பார்த்திருந்தவள், அவர்கள் சென்றதும், “எதுங்குங்க பணம் வேற கொடுக்கச் சொன்னீங்க?”, என்று தனது சந்தேகத்தைக் கணவனிடம் கேட்க
“பத்து நாளுக்கு மேல எந்த வேலையுமில்லாம ஹாஸ்பிடல்லயே இருந்தவங்ககிட்ட இப்ப என்ன இருக்கும். அதான் கைல செலவுக்கு காசு கொடுக்கச் சொன்னேன்”, என்று காரணம் கூற
“இவங்க மண்டே வேலைக்கு வராம ஏமாத்திட்டாங்கன்னா?”
“அப்டி ஏமாத்தறவங்க நம்மளைத் தேடி வந்து இவ்வளவு பெரிய உண்மைய சொல்லனும்னு என்ன இருக்கு?”, என்றவன்
“அவங்களைத் தூண்டிவிட்டு காசு குடுக்கறேன்னு ஏமாத்துனவங்கட்ட… போகாம நம்மளைத் தேடி வராங்கன்னா என்ன அர்த்தம்?”, என்று பெண்ணை நோக்கிக் கேட்டவன்
“ஏதோ பணத்தாசையில வீட்டுல உள்ள ஆம்பளை தப்பான முடிவை எடுத்திட்டாங்கனு மனசார வருத்தப்பட்டு நம்மளைத் தேடி வந்து உண்மையச் சொல்லி உதவினு கேக்குதுக…! அதனால அப்டியெல்லாம் அதுகளுக்கு யோசிக்கத் தெரியாது”, என்றவன்
“அவனுகளுக்கு சரியான பின்ன… நம்மகிட்ட வந்து மன்னிப்பு கேக்கலைன்னா… வீட்டு வாசல்லகூட புருசங்களை ஏத்தாதுங்க…! அதனால கண்டிப்பா சரியானவுடனே அந்த ஆளுங்க வந்து இங்க பாப்பாங்க… நீ வேணா பாரு”, என்றவன்
அத்தோடு, இதற்கான பின்னனியில் இயங்கியவர்களைப் பற்றி, தான் நண்பர்களின் உதவியோடு தான் விசாரித்து அறிந்ததைப் பற்றியும் மனைவியோடு பகிர்ந்து கொண்டான் சங்கர்.
கேட்டவளுக்கு, எல்லாவற்றிற்கும் நவீனா என்கிற தான் ஒரு காரணமாக இருப்பதை எண்ணி மனதிற்குள் வருத்தம் வந்திருந்தது.
ஆனாலும் எதையும் காட்டாமல் கேட்டிருந்தாள்.
மனம் சொன்னது, ‘அவசரப்பட்டு ஒருத்தரு வாக்குக் குடுத்ததுக்கு, யார் யாரோ இப்போ கஷ்டப்படறோம்! பெத்தவங்க பண்ற நல்லது, கெட்டது எல்லாம் புள்ளைகளுக்குன்னு சொல்றது சரிதான்போல…! நல்லா யோசிச்சு… முடிவு யாரு எடுக்கலைன்னாலும் பிரச்சனை ஓயாம… இப்படி எதாவது கஷ்டம் அடுத்தடுத்து யாரு மூலமாகவேனும் வந்தே தீரும்போல!’, என்று எண்ணியவாறே பெருமூச்சோடு அகன்றிருந்தாள் நவீனா.
நவீனாவிற்கு, நடப்பவை ஒவ்வொன்றும், பெற்றோரைத் தேடச் சொல்லாமல், விலகியிருக்கச் செய்திருந்தது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, சங்கரின் குடும்பத்தோடு இன்னும் பிணைப்பைக் கூட்டியிருந்தது.
////////////////
நவீனாவிற்கு ஞாயிறன்று மாலையே ஊருக்கு கிளம்ப வேண்டிய நிர்பந்தம்.
அவளின் அலைபேசிக்கு வந்த திடீர் செய்தியால், பெண் விருப்பமேயில்லாமல் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
மனம் வருத்தமாக உணர்ந்தாலும், வேறு வழியில்லாமல், கிளம்பியவளின் முகமே சொன்னது, தற்போது மதுரைக்குச் செல்வதில் பெண்ணுக்கு விருப்பமே இல்லையென்று.
திங்களன்று காலையில் கிளம்ப எண்ணி வந்தவளின் பயண அட்டவணையை, கல்லூரியில் இருந்து வந்த அலைபேசிச் செய்தி சட்டென மாற்றியிருந்தது.
இறுதியாண்டு படிப்பில் பெண் இருப்பதால், அது சார்ந்த பணிகள் அடிக்கடி எதிர்பாரா மாறுதலுக்கு உட்பட்டிருந்தது. இந்நிலையில் அன்று தனக்கு வந்த அழைப்பை தவிர்க்க இயலாத நிலையில் இருந்தாள் நவீனா.
பெண்ணும் வேறு வழியில்லாமல் தற்போதைய நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, கிளம்பும் நேரத்தையும் தள்ளிக் கொண்டிருந்தாள்.
வார்த்தையில் சற்றே சிடுசிடுப்பும், எதிலும் நிதானமில்லாமல் கிளம்பியவளை வருத்தத்தோடு பார்த்திருந்தான் கணவன்.
அறையிலிருந்து வெளியில் வந்து அன்னம்மாளைச் சென்று கண்டவன், “ஆத்தா… நானும் மதுரைக்குக் கிளம்பலாம்னு இருக்கேன். காலேஜ்கும் ரொம்ப நாளா லீவு போட்டாச்சு… அங்க போனா.. அப்பப்போ காலேஜ்கும் போயிட்டு வந்துக்குவேன்”, என்று பேரன் இழுக்க
பேத்தியை அதுவரை கவனித்துக் கொண்டிருந்த அன்னம்மாள், பேரனின் இந்த முடிவை எதிர்பார்த்தே இருந்தார்.
எல்லாம் அதேபோல நடக்க, “சரிப்பா…! நல்லவடியா… பாத்து போயிட்டு வாங்க…! ஆத்தா சொன்னதை எதையும் மறக்காம… நினைவுல வச்சி இன்னும் பத்து பதினைஞ்சு நாளைக்கு இருந்தா… இன்னும் கொஞ்ச நாள்ல அந்த மூட்டு பலப்பட்டுரும்!”, என்று அடுத்தடுத்து பேசிக் கொண்டே செல்ல… அனைத்தையும் கேட்டு… குறித்துக் கொண்டு கிளம்பிப் போவதற்குள் அடுத்த நாளே வந்துவிடும் என்று எண்ணிய சங்கர்,
“நீங்களும் எங்களோட மதுரைக்கு வந்திருங்களேன்”, என்று பேரன் கேட்டுக் கொண்டான்.
அத்தோடு நடந்த அனைத்தையும் கவனித்த நவீனாவும் வந்து “ஆமா ஆச்சி… நீங்களும் எங்களோட மதுரைக்கு வந்திருங்க”, என்று நவீனாவும் வற்புறுத்தி அழைக்க, முடிவாக அன்னம்மாளும், பேரன், பேத்தி, அலமேலுவோடு, அந்த மாலையில் மதுரைக்கு கிளம்பியிருந்தார்.
பயணத் துவக்கத்திலேயே, பேத்தியின் மாறிய முகபாவத்தைக் கண்டு, புன்னகைத்துக் கொண்டார் அன்னம்மாள்.
கணவனுக்கோ, ‘வளர்ந்தாலும் அவள் இன்னும் சிறுபிள்ளைதான்…’ எனும் பாடல்வரிகள் மனதில் வந்து போயிருந்தது.
மதுரைக்கு வந்தவளுக்கோ, மலையையே தன் வசப்படுத்திய மகிழ்வோடு வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் நவீனா.
சங்கருக்கும், நவீனாவின் இயல்புத் தோற்றம் கண்டு, இனிமையாக உணர்ந்தான்.
தனிமையில் இருந்தவள், நேரமிகுதியால் மிகவும் நேர்த்தியாக வீட்டை பராமரித்திருந்ததைக் கண்டு, அன்னம்மாள் பேத்தியின் செயலில் மகிழ்ந்ததோடு,
“புருசன் நினைப்புல… சாப்பிடாம கொள்ளாம… வீட்டுல இருக்கும்போதெல்லாம் இதத்தான் பண்ணியா”, என்று தன் பேத்தியிடமே நேராகக் கேட்டுவிட்டார்.
அங்கு வந்த அலமேலுவோ, “ஆமாத்தா… நைட்டு கூட தூக்கம் வரலைன்னு எதாவது இப்டி இழுத்துப் போட்டுச் செய்யும். நானும் கூடமாட வந்து நின்னு செஞ்சா… ‘எனக்குத் தூக்கம் வரலைன்னு பொழுதைப் போக்க ஏதேதோ பண்றேன். பகல் முழுக்க வேலை பாத்துட்டு நீங்க எதுக்குக்கா வந்து தூக்கத்தைக் கெடுத்துட்டு எங்கூட வந்து நிக்குறீங்கனு’, என்னை விரட்டுறதுலயேதான் குறியா இருக்கும்”, என்று இந்த மாற்றங்கள் நிகழக் காரணமான பொழுதினை மறவாது அன்னம்மாளிடம் கூறியிருந்தார் அலமேலு.
நவீனாவோ, “நா எங்க பண்ணேன். ஆரம்பிப்பேன்…! அலமேலுக்கா வந்து முடிச்சிருவாங்க!”, என்று வெட்கப் புன்னகையோடு உண்மையை உரக்கக் கூறிச் சிரித்திருந்தாள் பெண்.
அன்றையே தினம், திருமணத்தன்றுகூட இல்லாத நிறைவான மகிழ்வான திருநாளாக பெண் உணர்ந்தாள்.
காரணம், கணவன் நீண்ட நாளுக்குப் பிறகு தனக்கு, இதமாகத் தோன்றும் இடத்திற்கு தன்னோடு வந்ததே!
மனமெங்கும் மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்க, இரவில் படுக்கைக்கு வந்தவள், நீண்ட நாள்களுக்குப்பிறகு. நிறைவான உறக்கத்தைத் தழுவியிருந்தாள்.
சங்கரோ, நவீனாவை தனது கைகளில் இருந்து விடாமல், தன்னோடு இறுகத் தழுவியவாறே உறங்கியிருந்தான்.
காமம்… கலவாத களிப்புமிகுந்த இரவுகள்கூட சுகமானதுதான்!
அன்பு நிறைவாக இருக்கும்போது… காமம்கூட இரண்டாம் பட்சமாகத் தோன்றக்கூடும்!
ஒருவருக்கொருவர், அருகருகே இருப்பதே பேரானந்தம் என்று உள்ளம் சந்தோசக் கூத்தாடும் தருணமது!
அணைப்புகள் தரும் ஆறுதலை, வார்த்தைகள் கூடத் தருவதில்லை!
இதழ் முத்தத்தைவிட, இதமான தொடுகை தரும்போது உண்டாகும் இதயத்தின் இதம், இமயமலையைவிடப் பெரிது!
சங்கரின் கரிய நிறம், தனது நிறத்தின் தன்மையைக் குறைத்துவிடுமோ என்று ஒரு காலத்தில் பயந்தவள், நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, காவல் தெய்வமாக தன்னவனிருக்க, தனக்கினியேது குறை என்று சலனமின்றி, கணவனது கைவளைவில் நிம்மதியாகத் துயில் கொள்கிறாள்.
உறக்கம் கலைந்தவன், உறக்கத்தில் களைந்திருந்தவளை காமமில்லாமல் கனிவோடு பார்க்கிறான்.
வருத்தம் மேலிடுகிறது… நிறைய இழப்புகள்!
தன்னால் தானே!
தனக்காக… பெற்றவர்களை விட்டுவிட்டு, தான்மட்டுமே எல்லாம் என்று நம்பி வந்தவளுக்கு, சிறு நிம்மதியை இன்று தன்னால் தர முடிந்ததை எண்ணி, சற்றே குற்றவுணர்வு நீங்கி மனநிறைவு கொள்கிறான்.
முதன் முதலில் மானாமதுரை சந்திப்பில் பெண்ணைப் பார்த்த நாள் நினைவில் வந்து போகிறது.
‘எப்பவும் எம்பொண்டாட்டி விவரந்தான்’, ஆழ்மனது சொல்கிறது.
உறக்கத்தில், தனது கைவளைவிற்குள் உறங்கும் நிலையிலும், புன்னகைத்த நிலையில் உறங்கும் பெண்ணின் அழகான புன்னகையில் மனம் உறைகிறான்.
பெண் இதழின் ஈரம் தன்னை ஈர்க்க, இதழ் தீண்டினால் முடிவு வேறாகிபோகும் என்பதை உணர்ந்தவன், நெற்றியில் இதமாக இதழ் பதிக்கிறான்.
பெண்ணின் புன்னகையின் அளவு இன்னும் விரிகிறது.
ஏதோ நல்ல கனவில் இருக்கிறாள், என்று மனம்கூற இதமான அணைப்பை இன்னும் இறுக்கத் தோன்றிய மனதை கட்டுப்படுத்தியவாறே, உறக்கம் வரும்வரை கிறக்கத்தோடு காதலாகப் பார்த்திருந்தான்.
நீண்ட நேரம் பார்த்திருந்தவனை… நடப்பிற்கு இழுத்து வந்தது, பெண்ணின் காந்தக் குரல்.
“என்ன… பார்வை…? தூங்காம…”, கண்ணைத் திறவாமலேயே தன்னவனிடம் கேட்டது பெண்மை.
முதலில் பெண் பேசியதை நம்பாமல் பார்க்க, மூடிய இமைகளுக்குள் நடமாடும் கண்மணிகள் பெண் விழித்ததைத் சொல்லாமல் சொல்ல, “கள்ளி… தூங்காம என்னைய ஏண்டி வேவு பாக்கற?”, இது சங்கர்.
“அப்ப நீங்க கள்ளனா?”, எனும் பெண்ணின் கிசுகிசுப்பான குரல் சங்கரின் சுவாதிஸ்டான சக்கரத்தைத் தூண்டியது.
“ம்… உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்ளன்!”, அனுபவம் ஸ்திர வார்த்தைகளாக விளக்கம் கூறியது.
“கவித… கொஞ்ச நாளு பொண்டாட்டி கூட இல்லைன்னவுடனே நீங்களும் கவிஞனாகிட்டீங்களா?”
“எப்போவும் எழுதறதுதான்…! அதுலலாம் உனக்கு அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி தோணாததால… இதுவரை உங்கிட்ட காமிச்சதில்லை!”, கணவனின் மெல்லிய குரலில் இடறிய வருத்தம் பெண் கவனத்திற்கு வந்ததோ என்னவோ!
கர்ம இந்திரியங்களை கட்டுக்குள் கொண்டுவரப் போராடியவாறே பெண்ணின் காதோடு, காதலாகப் பேசினான்.
“அதெல்லாம் எடுத்துப் படிச்சிட்டேன்”, என்று இன்னும் கண் திறவாமலேயே, சட்டென்று உண்மை பேசி… கணவனை தன்னோடு இன்னும் நெருங்கச் செய்ததை உணராமலேயே, மலரிதழ் விரித்து பெண் மகிழ்வோடு கூற
விரிந்த, இளஞ்சிவப்பு உதடுகளுக்கிடைய முத்துப்பல் பளிச்சென்று தெரிய… அதன் வசியத்தில், வசமிழந்தான் ஆடவன்.
இதழ்களை தனது வசமாக்கியிருந்தான்.
இதமான இளைப்பாறல், ஈடில்லா உத்வேகத்தை இருவருக்கும் தந்திட, உறக்கம் ஓடி ஒளிந்திருந்தது.
மணி அதிகாலை மூன்றரை என்றது.
வெளியிலிருந்து மண் வாசனை அவர்களின் அறைவரை வந்தது.
“மழை வருதுபோல!”, சங்கர்
“ம்… ரொம்ப நாளுக்கப்புறமா மதுரைக்கு வந்திருக்கீங்கள்ல”, என்ற பெண்ணின் பேச்சைக் கேட்டவன்
“மதுரைக்கு நான் வந்ததால மழையா? நல்லா பேசுறடீ!”, என்று மனைவியைத் தூண்ட
“மண் வாசனை செமையா இருக்கு…! போயி பிளாக் டீ போட்டு எடுத்துட்டு வரவா?”, கிறக்கம் குறையாத குரலில் பெண் கேட்க
“ம்.. வேணாம்! அப்புறம் தூக்கம் போயிரும் உனக்கு… காலேஜ் போயிட்டு ஹாஸ்பிடல் வர்க் பாத்திட்டு ரிட்டர்னாக நைட் எயிட் ஆகும். ரொம்ப டயர்டாகிருவ!”, மனைவியின் மீது கொண்ட அக்கறையோடு கணவன் கூற
கணவனின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டு, “இந்த மாதிரி எப்பவாவதுதான் சான்சு கிடைக்கும். அதை நாம மிஸ் பண்ணக் கூடாது”, என்றவள்
கணவன் தன் மீது கொண்ட அக்கறையில் பேசியதால், “மேனேஜ் பண்ணிக்குவேன், இப்ப உங்களுக்காக…”, என்றவாறே இதமாக தன் இதழ் கொண்டு, பேசும் கணவனின் வாயை மூடியிருந்தாள்.
இது ஒரு வகை மந்திரம். தனது செயலை மறுப்பவனை, தன்வசப்படுத்தச் செய்யும் தந்திரம் அது.
லீஃப் டீயில் தூக்கலாக இஞ்சியைத் தட்டிப் போட்டு நன்கு கொதித்து இரண்டின் சுவையும் நீரில் இறங்கியபின், லெமனை பிழிந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன், சரியான பக்குவத்தில் நாட்டுச் சக்கரையை கலந்து சூடான அதில் புதினா தழையை சீராகத் தூவிக் கொண்டு வந்து கணவனிடம் நீட்ட,
அதற்குள் வாயைக் கொப்பளித்துவிட்டு, திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த மண் வாசனையை நுகர்ந்தபடியே, வந்த குளிர் காற்றிற்கு இதமாக மிடறு, மிடறாக பிளாக் டீயை உறிஞ்சியவாறே…
துவர்ப்பு, காரம், புளிப்பு, இனிப்பு என்று அறுசுவையில் நான்கு சுவைகளை உள்ளடக்கி… அதனோடு, புதினாவின் புத்துணர்வூட்டும் வாசம் என்று எங்கோ அழைத்துச் சென்றது அதன் சுவை இருவரையும்.
அருகருகே இதமாக அமர்ந்தபடியே சத்தம் வெளியே வராத குரலில் அந்தரங்கம் பேசினார்கள்.
இதுவும் ஒரு வகை தனித்துவமான ஆனந்தம்.
காமம் கற்ற தம்பதியரிடையே தெளிவு இருந்தாலும், கலவியைப் பற்றி வரம்புமீறி, வெட்கமறியாது கணவன் மனைவி இருவருக்கிடையே கிசுகிசுப்புக் குரலில் பேசுவதிலும் சுகம் உண்டு!
தொடுகையில் பரபரப்பு மட்டுப்பட்டிருக்கும் நிலை! ஆனால் அருகருகே இருந்தாலே ஆன்மா திருப்தி பெறும் நிலை!
தற்காலிக பிரிவு மற்றும் கூடலுக்கான கால இடைவெளி, இருவரையும் அதைப்பற்றி ஆதி முதல் அனைத்தையும் பேசி, மனதை சாந்தப்படுத்திக் கொள்ள வழி சொல்கிறது.
கூடல் நிறைவாகக் கிட்டிய காலத்தில், மனம் அதைப்பற்றிப் பேசுவதில் இலயிக்காது. அப்போது மனமானது… எதிர்காலம் பற்றி, எஞ்சிய பலதைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டக்கூடியது.
//////////////
திங்களன்று பலமுறை சாந்தனுவின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்து சலித்திருந்தாள் வரா.
அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வரவே, மற்றுமொரு எண்ணுக்கும் அழைத்துப் பார்த்தாள்.
இரண்டு எண்களும் ஒரே நிலையில் இருந்தது.
பெண்ணுக்கு, மனம் பலவாறாக எண்ணி துயர் கொண்டது. தான் இதுவரை தங்களது திருமணத்தைப் பற்றி சாந்தனுவிடம் பேசாததை எண்ணி வருத்தமடைந்தாள் பெண்.
‘அவுக சும்மாவா அப்டியெல்லாம் வந்து எங்கிட்ட கட்டப்போற பொண்ணுகிட்ட பேசுறமாதிரி பேசுனாங்க’, என்று மனதில் கேள்வியெழ… பதில் தெரியா மனமோ இதுவரை நடந்த சந்திப்புகளையும், அதில் பேசியவற்றையும் யோசித்து, குழம்பியது.
ஏதோ இழந்த உணர்வு மனதில் கூட, நடப்பை ஏற்க மனமில்லாமல், பெரியவர்களிடம் தனது மன ஏமாற்றத்தைப் பற்றிக் கூற வழியில்லாமல், தானே ஒரு முடிவை எடுத்திருந்தாள் வரலெட்சுமி.
தானாக ஒன்று நினைத்து, யாரை நோக என்று எண்ணிய மனம் அவ்வாறு ஒரு முடிவை எடுக்கச் சொல்லியிருந்தது.
///////////
மதுரையில் இருந்தவர்களுக்கு, வராவின் தற்கொலை முயற்சி பற்றி அறிந்திருக்கவில்லை.
வயதுப்பெண் தற்கொலைக்கு முயன்றால், அடுத்து வீட்டுப் பெரியவர்களின் கண்காணிப்புகள் பலப்படும் எனும் நியதிக்கேற்ப அனைத்தும் மாறியிருந்தது.
‘என்ன ஏதென்று இதுவரை கேட்ட யாரிடமும், பெண் வாயைத் திறக்கவில்லை’, என்று சசிகலா தொலைபேசியில் அன்னம்மாளிடம் மட்டும் விடயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
‘எனக்கு வாழப் பிடிக்கலை. அதான் சாகப் போனேன்’, என்பதைத் தவிர ஒரு வார்த்தைகூட கூடுதலாகப் பெண் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.
அதற்குமேல் அன்னம்மாளும், “கத்தரிக்கா முத்தினா சந்தைக்கு வந்துதான ஆகனும். பொறுத்திருந்தா எல்லாம் தெரிஞ்சிரும்… விட்டுத்தள்ளு”, என்று மருமகளிடம் பேசியதோடு விட்டுவிட்டார்.
நவீனா, சங்கர் இருவரும் அவரவர் கல்வி மற்றும் பணியில் மூழ்கியிருந்தனர்.
சாந்தனு குணமாகி, பணிக்குச் செல்லத் துவங்கியபின், நேரமின்மையால் மானகிரிக்கு வர இயலாமல் காரைக்குடியில் தங்கிவிட்டிருந்தான்.
சாந்தனுவிற்கு பேசி திருமணத்திற்கு முடிவு செய்திருந்த பெண்ணின் வீட்டில் பிடி கொடுக்காததால், மீண்டும் வேறு பெண் பார்க்கத் துவங்கியிருந்தனர் சாந்தனுவின் வீட்டில்.
இந்நிலையில், ஊர்ப் பெரியவர்கள் எடுத்த திடீர் முடிவிற்கிணங்க, சாந்தனுவிற்கு வராவைத் திருமணம் செய்து கொடுத்த செய்தி, சங்கர், நவீனா இருவருக்கும் சற்றுத் தாமதமாகவே அலமேலு வாயிலாக அறிந்து கொள்ள நேர்ந்தது.
நவீனா அதிர்ச்சியாகியிருந்தாள்.
‘என்ன மாதிரி ஒரு கேடுகெட்டவனா இருந்திருக்கான். ஒரே நேரத்தில இந்தச் சின்னப்புள்ளை மனசில ஆசை வளத்ததோட, அண்ணன் வயிஃப்னு கூட யோசிக்காம… எங்கிட்டயும் தகாத வார்த்தைகள் பேசிட்டு… இன்னும் எத்தனை பேர… எப்டியெல்லாம் ஏமாத்துனானோ தெரியலையே’, என்று சாந்தனுவைப் பற்றி அருவெறுப்பாக உணர்ந்தாள் நவீனா.
இதைப்பற்றிக் கணவனிடம் கூற, தனது நண்பர்களிடம் நடந்ததைப் பற்றி கேட்டறிந்தவன், அறிந்ததை மனைவியிடம் பகிர்ந்திருந்தான் சங்கர்.
//////
நீண்ட நாள்களுக்குப்பிறகு ஊருக்கு வந்த சாந்தனுவை, பழையபடி இலகுவாகச் சந்திக்க பெண் தயங்கியிருந்தாள்.
பாம்பு என்று ஒதுக்கவும் முடியாமல், பழுது என்று தாண்டவும் முடியாத நிலையில் பெண், சாந்தனுவைத் தவிர்க்கத் துவங்கியிருந்தாள்.
அத்தோடு தினசரி கல்லூரி கிளம்புமுன் வீட்டில் கலாராணி, “மாப்பிள்ளை பாத்து பேசி முடிச்சாச்சு… ஊருக்குள்ளனு இல்லை… வெளியே எங்க போகும்போது, வரும்போது யாரும் தெரிஞ்சவங்க வந்து பேசுனாலும்… சின்னப்புள்ளை கணக்கா நேரங்காலந்தெரியாம நின்னு பேசிட்டுருக்காம… போற போக்குல பதிலைச் சொல்லிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி வந்திரனும்”, என்று கூறி அனுப்புவதை வாடிக்கையாக்கியிருந்தார்.
அத்தோடு, மச்சான் மற்றும் கொழுந்தன் வீட்டுப் பிள்ளைகளிடம் வராவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும், வரா அறியாமலேயே வழங்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதைப் பற்றி எதுவும் தெரியாத சாந்தனு, நவீனாவைப் பற்றி அறிந்து கொள்ள எண்ணி வராவைத் தேடி வந்திருந்தான்.
சாந்தனுவின் கேள்விகளுக்கும், தன் தாயின் உத்தரவிற்கு ஏற்ப பதிலை நிற்காமல் கூறிவிட்டு சென்றவளை, விடாமல் பின்தொடர்ந்தான் சாந்தனு. வராவையும், சாந்தனுவையும் பின்தொடர்ந்தவர்களை கவனிக்காமல் விட்டிருந்தான் சாந்தனு.
தனக்குத் தேவையான செய்தி சரியாகக் கிடைக்காததால், வராவை கல்லூரி வாசலிலே வந்து சந்திக்க வந்திருந்தான் சாந்தனு.
வராவின் தவிர்ப்பு சாந்தனுவிற்கு புதிது. ஆவலும், ஆர்வமுமாக தன்னிடம் பேசுபவள் தன்னை தவிர்ப்பதை எண்ணி, அதை உணரத் துவங்கினாலும், நவீனாவைப் பற்றிய ஆவலில் மற்றதை கவனிக்கத் தவறியிருந்தான்.
“இங்கல்லாம் வந்து இனி பாக்க வராதீங்க…”, என்று கூறியவள் தன் ஊருக்குள் வரும் பேருந்து வரவே அதில் ஏறியிருந்தாள் வரா.
சாந்தனுவிற்கு பெண்ணின் செயல் புரியாத புதிராக இருந்தது.
நடந்ததைப் பற்றி, நடப்பதைப் பற்றி யாரிடமும் இலகுவாகப் பேசி அறிந்து கொள்ள இயலாத நிலை இருவருக்குமே.
வராவின் திருமணப் பேச்சுகள் எதுவும் அறியாத சாந்தனு வழமைபோல வந்து பேசியபோதும், பெண் பேசாததால், நேரம் கிடைத்தபோது பெண்ணைக் காண கல்லூரிக்கே வந்திருந்தான்.
விடயங்கள் அனைத்தும் பெரியவர்கள் காதுகளுக்கு சென்றது. இரண்டாவது முறை சாந்தனுவின் தந்தையை ஊர்த்தலைவர்கள் மூலம் அழைத்துப் பேசி, “அப்பு… அவுக வீட்ல பொண்ணுக்கு பேசி முடிச்சிட்டாக… உங்க வீட்டுல புள்ளைய எடுக்கச் சம்மதம்னா உங்க பய எங்க வேணாலும் புள்ளைய நிறுத்திப் பேசலாம். கேக்கலாம். அப்டி ஒரு எண்ணம் இல்லைனா ஒதுங்கியிருக்கச் சொல்லிருங்க… இன்னொருவாட்டி இப்டி நடந்தா ஊரு எடுக்கற முடிவுக்கு நீங்களும் உங்க குடும்பத்துல உள்ளவுகளும் கட்டுப்படனும்”, என்று கறாராகப் பேசி அனுப்பியிருந்தார்கள்.
வராவிற்கு வேறு இடத்தில் திருமணம் பேசியிருப்பதையும், இடையில் சாந்தனுவின் நடவடிக்கையால் வராவின் திருமணத்தில் எதாவது தடைகள் நேரும் நிலையில், சாந்தனுவிற்கு வராவை திருமணம் செய்ய நேரிடும் என எச்சரித்திருந்தனர்.
சாந்தனு யாரின் பேச்சையும் கேட்காமல், மனம்போன போக்கில் நடந்து கொள்ள, ஊர்த்தலைவர்களின் முடிவாக, கட்டாயத் திருமணமாக வராவை மறுத்த சாந்தனுவிற்கே மணம் முடித்து வைத்திருக்கின்றனர், என்ற செய்தியை கணவன் வாயிலாக அறிந்து கொண்டிருந்தாள் நவீனா.
பெண்ணால் வருத்தம்கொள்ள இயன்றதே தவிர, வேறு எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலையில் பெண்ணின் கல்வி சார்ந்த பணிகள் இருந்தது.
அத்தோடு அதில் தனது மனதைச் செலுத்தி மற்றதை மறந்திருந்தாள் பெண்.
//////////////
புஷ்பா வாயிலாக அனைத்தையும் அறிந்த வெற்றி அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தார்.
ஆனாலும் தனது எண்ணம் பொய்த்ததை நம்பாமல், “என்ன சொல்ற? நம்ம சாந்தனுவா அப்டி? நிச்சயமா தெரியுமா? யாராவது கெட்ட எண்ணம் புடிஞ்சவனுக எதாவது பழிய போட்டு மாட்டி விட்ருக்கப் போறாங்க?”, என்று மனைவியிடம் கேட்க
“எனக்குத் தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். நீங்க ஊருக்கு வரும்போது விலாவாரியா வந்து விசாரிச்சு உண்மை என்னனு தெரிஞ்சுக்கோங்க”, என்று பேச்சை அத்தோடு முடித்திருந்தார் புஷ்பா.
மனைவியின் பேச்சைக் கேட்டபின்பு, ஊருக்கு வந்தவர் விசாரித்து அறிந்ததில் அனைத்தும் உண்மை என்று அறிய, யோசனையுடன் அமைதியாகியிருந்தார்.
ஆனாலும், மகளின் திருமணம் சார்ந்த செயலில் மன வருத்தம் இன்னமும் குறையாதிருக்க, நடந்த எதையும் மறக்க முடியாமல், மகளின் எதிர்கால கருதிய பயம் இன்னும் மாறாமல், சங்கரை நம்ப முடியாமல், மனம் ஏற்க இயலாமல் தவித்தது.
நடந்தை மறந்து, மன்னித்து, நவீனா, சங்கர் இருவரையும் வெற்றி ஏற்றுக் கொள்வாரா?
அடுத்த அத்தியாயத்தில்…