அத்தியாயம் 11
“கவிஇஇஇஇஇ….”என்ற யாதவின் காட்டு கத்தலில் தன்னை அணைத்திருந்த மாஹிரை தள்ளி விட்டுவிட்டு குரல் வந்த திசையை நோக்கிக் கவி ஓட… “ஹே பகவான்..” என்றவாறு தலையில் அடித்துக்கொண்ட மாஹிரும் அவள் பின்னையே ஓடினான்…
யாதவிற்கென்று ஒதுக்கப்பட்ட குடில் போன்ற அமைப்பில் இருக்கும் காட்டேஜின் வரவேற்பறை பகுதியில் யாதவ் திருநள்ளாருக்கே போனாலும் என்னை பிடித்த சனி விடாது போல என்கிற செய்தியை கண்களில் ஏற்றி தனக்கு நேரெதிரே இருக்கும் ஷாவை முறைத்தவாறு நின்றுகொண்டிருக்க… ஏன்இப்படி பைல்ஸ் வந்த பன்னி மாதிரி கத்துற என்கிற நக்கல் பார்வையுடன் அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள் ஷா…
இருவரையும் பார்த்த கவிக்கு எதற்காக சண்டை என்று புரிந்துபோக…இன்னைக்கு தேரை இழுத்து தெருவுல விட்டு குத்து டான்ஸ் போட்டு கேஸ் ஆக்கமா விடமாட்டாங்க போலயே என்று மனதிற்குள் நினைத்தவள் தயக்கத்துடன் “என்ன ஆச்சு அண்ணா சார்…”என்று கேட்டுக்கொண்டிருக்க ஏற்கனவே யாதவ் ஏற்படுத்திய ஹை டெசிபல் குரலின் கைவண்ணத்தில் சாரி ஒலிவண்ணத்தில் சித்தார்த்..கனிஷ்கா…மாஹிர் அந்த இடத்தை வந்தடைந்தனர்…
இங்கே என்ன ஒரு பாக்கெட் பிரியாணி வாங்குனா ரெண்டு பாக்கெட் சால்னாவும்…தயிர்வெங்காயமும் பிரீயா தரப்படும்னா கத்துனேன்…நீங்களெல்லாம் எதுக்கு டா இப்படி வந்து நிக்குறீங்க என்று குழப்பத்துடன் பார்த்தவன் கவியிடம் “என்ன என்ன ஆகணும் கவி…இவளுக்கு இங்கே யார் ரூம் குடுத்தா…”என்று ஷாவை நோக்கி கையை நீட்டியவாறு கோவத்தில் கேட்டான் யாதவ்…
“அண்ணா சார்…இந்த ரூம் தான் இருக்கு…வேற எங்கையும் இல்லை சார்…. அதான்“என்று கவி மெதுவாக யாதவின் அருகில் போய் கூற…
“எனக்கு தெரியாது,…இவளுக்கு வேற எங்கையாவது ரூம் அலெர்ட் பண்ண சொல்லு… என்னால எல்லாம் இவகூட ஒரே காட்டேஜ்ல எல்லாம் இருக்க முடியாது…சொல்லிட்டேன்…”என்று எண்ணையில் இட்ட பட்ட வத்தலாக யாதவ் வெடிக்க…
அருகிலிருந்த சித்தார்த் “ஆமா…இருந்தா ஒரே ரூம்ல தான் இருப்பாரு… காட்டேஜ் எல்லாம் முடியாது “என்று மனதில் நினைக்கிறேன் பேர்வழி என்று சத்தமாக கூறிவிட…மீதமிருந்த ஐவரும் சித்தார்த்தை முறைத்தனர்…
அதில் அசட்டு சிரிப்பை உதிர்த்தவன்”அவ்வளவு சத்தமவா கேட்டிருச்சு..”என்று இம்முறை சரியாக மனதில் மட்டும் நினைத்துக்கொண்டான்…
“நீ வெளியே போ…”என்று இப்பொழுது நேரடியாக ஷாவை பார்த்துக் கூறினான் யாதவ்…
நீ ஏதோ பைத்தியக்காரனை போல் கத்திக்கொண்டிரு எனக்கு என்ன என்பதுபோல் அறை கதவை திறக்க ஷா கதவில் கை வைத்தாள்… அவளின் செயலில் ஆத்திரம் அடைந்தவன் கதவிலிருந்த கரத்தைப்பிடித்து ஷாவை தன்னை நோக்கி திருப்பினான்…
“சொல்லிட்டே இருக்கேன்…நீ பாட்டுக்கு உள்ளே போக போற..”என்று யாதவ் பல்லை கடித்துக்கொண்டு கோபத்துடன் கேட்க…
“மோத கையை விடு…”என்றவாறு அவனிடமிருந்து தன்னை விடுவித்தவள் “இங்கே என்ன ஷூட்டிங்காஹ் நடக்குது…ஏன் இவ்வளவு ஹீரோயிசம்…” உன் கோவமெல்லாம் நான் தின்று போடும் மாங்காய் கொட்டை என்பதுபோல் என்று நக்கலுடன் கேட்டாள் ஷா…
அவள் வார்த்தைகளில் இன்னும் கோவம் வரப்பெற்று மீண்டும் அவளிடம் நெருங்கவர இடையில் புகுந்த சித்தார்த் “யாதவ் ஸ்டாப்…”என்றவன் ஷாவை நோக்கி திரும்பி “ஷா வா…என் காட்டேஜிக்கு போவோம்…மாஹீரை இங்கே அனுப்புவோம்…”என்க…
ஷாவோ “அதெல்லாம் சரியா வராது…மாஹிர் இங்கே வேண்டாம் …”இதற்கு முன்பு இருவருக்கும் இடையில் நடந்த சண்டையை மனதில் வைத்துக்கொண்டு கூற…அதை சரியாக புரிந்து கொண்ட மாஹிர்” மே சண்டை நஹி கருங்கா…நான் இங்கேயே ரெஹெனே தீதி…”சண்டை எல்லாம் போட மாட்டேன்…இங்கேயே நான் இருக்கேன் என்றான் மாஹிர்…
அவனை ஷா ஒரு பார்வை பார்க்கவும்…யாரு பா இப்ப இங்கே கருத்தை சொன்னது…போங்க டேய் போங்க போய் பிள்ளைகுட்டியை படிக்க வைங்க என்பது போல் யாரோ எவரையோ ஷா முறைத்தது போன்று கவி புறம் திரும்பி கடலை போட ஆரம்பித்துவிட்டான்…
“அப்ப நீ என் ரூம்க்கு வா….ஷா..நாம ஷேர் பண்ணிக்குவோம்…”என்று சித் ஷாவை அழைக்க….யாதவிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது…
“என்னது ரூம்க்கு வரவா…எடு செருப்பை…” என்று மூக்கு துடிக்க…நரம்பு விடைக்க…கண்கள் சிவக்க… கோவம் வந்து மனதிற்குள் எகிறினான்…ஷாவை அவன் அழைத்தால் தனக்கு ஏன் கோவம் வரவேண்டும் என்று தெரியாமல் சித்தின் சட்டையை பிடிக்க சென்றிருந்தான் யாதவ்…யாரும் அதை கவனிக்கவில்லை…அனைவரின் கவனமும் சித் மற்றும் ஷாவின் மீது தான் இருந்தது…
யாதவ் சித்தை நெருங்குவதற்குள் ஷா பின்வரும் வார்த்தைகளை கூறியிருந்தாள்…
“சித் அவன் ஒரு சைசான லூசு….அவன் சொல்றான்னு நான் இடம் மாறணுமா…”என்று சித்தை பார்த்து கூறியவள்…யாதவை நோக்கி திரும்பி “உனக்கு பிடிக்காட்டி நீ தான் இடம் மாறிக்கனும்…நான் இல்லை புரியுதா…”
என்று கை நீட்டி கூற…யாதவோ என்னது சைசான கிறுக்கனா என்ன வார்த்தை டி இது…என்று அவளை பார்த்தவன்…அவள் பின் மறைமுகமாக கூறிய சித் ரூம்க்கு செல்லமாட்டேன் என்ற வார்த்தையில் நிம்மதி பெருமூச்சு விட்டவன்..அவளை வம்பிழுக்கும் நோக்குடன் சவால் விட்டான்
“ஏன்டா யாதவ் சொல்ல சொல்ல போகாம இங்கே இருப்பேன்னு அடம் பிடிச்சோம்னு நீ ரொம்ப வருத்தப்படுவ… படவைப்பேன்…மிஸ் ஆருஷா காசி…”என்று அண்ணாமலை ரஜினி சரத்பாபுவை பார்த்து இந்த நாளை உன் டைரியில் குறிச்சுவைச்சுக்கோ என்பதுபோல் ஒற்றை விரல் நீட்டி…முடியை சிலுப்பி எச்சரித்தான் யாதவ்…
அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு மாதிரியாக பார்த்தவள் “ஆல் தி பெஸ்ட் என் வெள்ளை பன்னி…”என்று நக்கல் சிரிப்புடன் கண்ணடித்து கூறினாள் ஷா…
சித் “ஷா…”என்று அழைத்து எதுவோ கூற வர…
விட்டால் இவர்கள் எல்லாம் சேர்ந்து முதலுக்கே மோசம் செய்து விடுவார்கள் போலே என்று நினைத்த கனிஷ்கா “ஷா நீங்க இங்கயே இருங்க…டேய் யாதவ் மூடிட்டு உள்ளே போடா…”என்று அவனை அவன் ரூமுக்குள் தள்ளி கதவை மூடினாள் கனிஷ்கா…
சித்தார்த் ஒரு நக்கலான சிரிப்பை கனிஷ்காவை நோக்கி உதிர்த்தவன் ஷாவிடம் வருகிறேன் என்பதுபோல் தலையாட்டிவிட்டு சென்றுவிட்டான்…கனிஷ்காவும் சிறிது உதட்டு சுளிப்புடன் சென்றுவிட்டாள்…
பிரச்னை நடந்து முடிந்ததுகூட தெரியாமல் அங்கு தீயும் வரை கடலை வறுத்துக்கொண்டிருந்தனர் கவியும் மாஹிரும்…
இரவு பத்து மணி…
மனைவியை குழந்தை பிறப்பதற்காக மருத்துவ அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே காத்திருக்கும் கணவன் போல் குறுக்கும் நெடுக்குமாக தனது அறைக்குள் நடந்துகொண்டிருந்தான் யாதவ்…
“என்ன பண்ணலாம்…என்ன பண்ணலாம்..ஐயோ ஏதாவது பண்ணணுமே…”
“இத்தனை நாள் என்னை கலாய்ச்சதுக்கெல்லாம் சேர்த்து இன்னைக்கு மொத்தமா வைச்சு செய்யணும்…”என்று கூறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பின்மண்டையை சொரிந்தான் யாதவ்…
“சே..ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குதே…என்ன பண்றது…”என்றவன் படுக்கையில் போய் அமர்ந்தான் …
“பேசாம போய் கதவை தட்டிட்டு ஓடிவந்துருவோமா…atleast தூக்கமாச்சும் அவளுக்கு கலையும்…”என்று அல்பத்தனமாக திட்டம் போட்ட யாதவுக்கு.. அவனது மனசாட்சியே காறித்துப்ப…”சரி சரி…கொஞ்சம் குழந்தை தனமா தான் இருக்கு …என்ன பண்ண…நானே ஒரு குழந்தை மனசு காரன் தானே…நீ கோவப்படாம நல்ல ஐடியாவை எடுத்துக்கொடு…”என்று அதை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்…
“ஏதாவது பண்ணனும்…ஆனால் என்ன பண்றது…பேசாம கூகிள் கிட்ட கேப்போம்”
எப்படி ஷாவை பயமுறுத்துறது கூகிள்…என்று search செய்ய…கூகிள் ஆண்டவரும் அவனின் கேவலமான கேள்வியில் காறித்துப்ப…சேத்துலையும் அடிவாங்கியாச்சு சோத்துலையும் அடிவாங்கியாச்சு நிகழ்வு…
“ஐயோ…கூகிள் கோவப்படாதிங்க..கொஞ்சம் பதட்டத்துல இருந்தேனா அதான்…இப்ப சரியா போடுறேன்…”
“ஹொவ் டு ஸ்கேர் girls …”என்று அவன் தட்டச்சு செய்ய அதற்கு கூகிள் படபடவென்று பல தகவல்களை கொட்டினார்…
“என்னது கரப்பான் பூச்சி வைச்சு பயமுறுத்தணுமா…கூகிள் அவள் அனகோன்டாவே அக்குள்ல மடிச்சு வைச்சுட்டு போயிருவா…அவகிட்ட போய் கரப்பான்பூச்சியை போட சொல்லுற…சில்லி கூகிள்…நெக்ஸ்ட்…”
“பேய் மாதிரி போய் பயமுறுத்தவா…அவளே ஒரு ரத்தக்காட்டேரி…நெக்ஸ்ட்…”
“என்னது கட்டிலுக்கு கீழ ஒளிஞ்சுக்கிறணுமா…அதுக்கு அவ உள்ளே விடணுமே கூகிள்…விடுவாளா…செருப்பாலே அடிப்பா… இதெல்லாம் நமக்கு தேவையா…வேணாம்…நெக்ஸ்ட்…”
“சத்தமா சிரிச்சு பயமுறுத்தணுமா…சிரிச்சு எப்படி டா பயமுறுத்துறது…”என்று ஒவ்வொரு ஐடியாவாக பார்த்துக்கொண்டு வந்தவன் தன்னை அறியாமலே படுக்கையில் படுத்திருந்தான்…இப்படி இதே மாதிரி இன்னும் சில ஐடியாக்களை நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கூறிக்கொண்டு இருந்தவன் அப்படியே தூங்கியும் விட்டான்…(அடேய் டேய்…நீயெல்லாம் ஒரு ஹீரோவா டா…)
**********************************************************************************************************
“ஹா ஹா ஹா…நீ சொன்னா சரி தான்…ரூம் வந்துருச்சு…”என்றவாறு ஒரு மணிநேரமாக நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்த சித்தார்த்திடம் இருந்து விடை பெற்றாள் ஷா…
சித்தும் சிரிப்புடன் “குட் நைட்…”கூறி விடைபெற்று அவர்கள் காட்டேஜிலிருந்து வெளியேற அங்கு பத்ரகாளி அவதாரத்தில் கடுப்புடன் நின்று கொண்டிருந்தாள் கனிஷ்கா…
அவளை அங்கு திடீரென்று இருட்டுக்குள் பார்க்கவும் அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து “அம்மா…”என்று சிறிதாக பயந்துவிட்டான் சித்…
“ஏய்ய் நான் தான்…கத்தாதே…”
“ஏன் பக்கி இப்படி வந்து பயமுறுத்துற…”என்றவன் அவள் தோளில் கைபோட்டவாறு அவளை கூட்டிக்கொண்டு நடந்தான்…
“கையை எடு…விட்டா வந்த வேலையே விட்டுட்டு என்ன என்னமோ பண்ணுவ போல…எனக்கு ஒன்னும் சரியா படல…”என்று கனிஷ்கா சித்தின் கரத்தை தனது தோள்பட்டையில் இருந்து எடுத்துவிட்டு அவனை நோக்கி விரல் நீட்டி கேட்டாள்…
“அடியே…என்ன டி…உன் தங்கத்தையே சந்தேகப்படுற…”
“நீ பண்ற வேலை எல்லாம் அப்படி தானே இருக்கு…உன்னை கொஞ்சம் ஷா கூட நெருக்கமா இருக்க மாதிரி நடி அப்படினு சொன்னா நீ என்ன என்ன வேலை பார்த்துகிட்டு இருக்க…ம்ம்…”என்று கேட்க…அதுக்கு சித் எதுவோ கூற வர அப்பொழுது அவனது கைபேசி அழைத்து அவர்களின் உரையாடலை கலைத்தது…
எடுத்து பார்த்தவன் அழைப்பை ஏற்காமல் “மாஹிர் தான்…நமக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…வா…மீதி சண்டையை அப்புறம் continue பண்ணுவோம்”என்ற சித் முதல் மாதிரியே கனிஷ்காவின் தோளில் கைபோட்டு சிரிப்புடன் அவளை கொஞ்சிக்கொண்டே அழைத்துச்சென்றான்…
அங்கு ஏற்கனவே சித் மற்றும் மாஹிர் இருக்கும் காட்டேஜின் வரவேற்பறையில் கவி மற்றும் மாஹிர் அமர்ந்திருந்தனர்…
“சாரி மாஹிர்…கொஞ்சம் லேட் ஆயிருச்சு…”என்றபடி உள்ளே நுழைந்த மாஹிர்…கனிஷ்காவுடன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்…
“இட்ஸ் ஒகே பையா…”
“சரி…சரி…எல்லாம் இருக்கட்டும்…நாமளே எதிர்பார்க்காத படி பாலு சாருக்கு உடம்பு சரி இல்லாம போய் ஷாவும் யாதவும் ஒரே காட்டேஜுல இருக்க மாதிரி வந்துருச்சு…”என்று கனிஷ்கா குதூகலமாக கூற…
“ஆமா மேடம்…இல்லாட்டி அவங்கள எப்படி பார்க்கவைக்குறதுனு நம்ம குரூப்பே மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்துருக்கணும்…அப்பறம் ரகுவரன் அப்பாகிட்ட செமயா திட்டு வாங்கிட்டு இருக்கனும்…நல்லவேளை ஆண்டவனா பார்த்து ரெண்டுபேரையும் ஒரே இடத்துல வர வைச்சுட்டான்…”என்று கவி கூற…
“ஹான் கவி…”என்று மாஹிர் பேச வந்தவனை…திரும்பி கவி ஒரு முறைமுறைக்க மாஹிர் கப் சுப் கமர்கட் ஆகிவிட்டான்…
“என்ன கவி…என்ன ஆச்சு…”என்று சித் கவியிடம் புரியாமல் கேட்க…
” இவன் ஒழுங்கா முழுக்க முழுக்க தமிழ்ல தான் பேசணும்…இல்லாட்டி வாயவே திறக்கக்கூடாதுனு சொல்லிருக்கேன்…இவன் பேசுற பாஷை எனக்கே கேட்க நாராசமா இருக்கு…”
“ஹா ஹா ஹா…அது என்னமோ சரி தான்…சரி அடுத்து என்ன பிளான்…நமக்கு இன்னும் சரியா ஆறு நாள் தான் இருக்கு…இந்த இடத்தை விட்டு ரெண்டு பேரும் போய்ட்டாங்கன்னா அப்பறம் அவங்களை பார்க்கவைச்சு…பேசவைச்சு…காதலிக்க வைக்குறது எல்லாம் ரொம்ப கஷ்டமாயிரும்…”என்று யோசனையுடன் சித் கூறினான்…
“ஆமா அண்ணா…அப்பா சார் யாதவ் அண்ணா முன்னாடி உங்களை ஷா அண்ணிகிட்ட நெருக்கமா இருக்குற மாதிரி காட்ட சொன்னார்…கனி அக்கா நீங்க ஷா அண்ணி முன்னாடி யாதவ் கிட்ட நெருக்கமா இருக்குற மாதிரி நடிக்கணுமா…யாதவ் அண்ணாக்கும்,ஷா அண்ணிக்கும் சந்தேகம் வராம இருக்க ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் நாளைக்கு காலைல போய் உங்களுக்கு ஒரு உதவி வேணும்னு கேட்பிங்களாம்…”
“என்ன ஹெல்ப்…”என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டுவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்…
“ம்ம்…சொல்றேன்…சித் அண்ணா நீங்க ஷா அண்ணிகிட்ட கனிஷ்கா தான் என் உயிர்…அவ பிரிவுல இருந்து என்னால வெளிய வரவேமுடியல…இங்கே அவளை பார்த்ததுக்கு அப்பறம் அவ கூட சேரனும் போல இருக்கு அப்படி இப்படினு அடிச்சு விட்டுட்டு அதுக்கு நீ தான் உதவி செய்யணும்னு சொல்லுவிங்களாம்..அது என்ன உதவினா கனிஷ்காக்கு jealous பீல் வரவைக்க நீ என்கூட நெருக்கமா இருக்கமாதிரி நடிக்கணும்…அதை பார்த்த கனிஷ்கா கோவப்பட்டு என்கிட்டே சண்டை போட வருவா அப்படியே அவகூட நான் சேந்துக்குவேன் அப்படினு சொல்லனுமா….இதே தான் உங்களுக்கும் கனிஷ்கா அக்கா…கொஞ்சம் வார்த்தைகள் மாத்திப்போட்டு யாதவ் அண்ணா சார் கிட்ட சொல்லுவிங்களாம்…”என்று ரகுவரன் கிருஷ்ணா தன்னிடம் கூறிய அனைத்தையும் கமா….புல்ஸ்டாப் கூட விடாமல் அப்படியே கூறினாள் கவி…
“இப்படி பண்ணா அவங்க எப்படி சேருவாங்க…”என்று முட்டாள் தனமாக கனிஷ்கா கேட்க…
“கிறுக்கி…அப்ப தான் அவங்க ரெண்டு பேரும் jealous பீல் ஆகி அவங்க காதலை உணருவாங்க…”என்று சித் கூற…
“ஆமாம்ல….ரகுவரன் அங்கிள் நிஜமாவே பிரில்லியண்ட் தான்….”
“தட்டுறோம்….தூக்குறோம்….யாஷா ஜோடியை சேக்குறோம்…”என்று ஆவேசமாக கத்தி சித் தனது கையை நீட்டமீதமிருந்த மூவரும் சிரிப்புடன் ஆமாம் என்று கத்தியவாறு அவன் கையின் மீது தங்களது கரங்களை வைத்தனர்…