YALOVIYAM 1.2

YALOVIYAM 1.2

யாழோவியம்

அத்தியாயம் – 1.2

லிங்கம் வீடு

பதினைந்து நாட்கள் கழித்து…

லிங்கத்தின் ஆதரவாளர்கள் வீட்டின் வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். நடந்த நிகழ்வு, கட்சியின் நிலை, தேர்தல் நிலவரம் என எல்லவாற்றைப் பற்றியும் பேச்சுக்கள் இருந்தது.

கட்சியில் லிங்கத்தின் செல்வாக்கு அதிகம் என்பதால், அவரின் வீடு எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும். அன்றைய விபத்திற்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டும் கட்சி அலுவலகத்திற்குச் சென்று வந்தார். அதன் பிறகு போகவேயில்லை.

ஆனால் அந்த ‘ஒருமுறை’ கூட ராஜா செல்லவில்லை. இந்த பதினைந்து நாட்களில் கட்சித் தலைவர், அமைச்சர் பெருமக்கள், அவனது தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர்கள்… இப்படி யார் வந்து ஆறுதலாகப் பேசினாலோ, விசாரித்தாலோ ‘வாய் திறப்பேனா?’ என்றிருந்தான்.

இப்பொழுதுகூட லிங்கத்தையும் ராஜாவையும் பார்த்துப் பேசி தேர்தல் பணிகளில் ஈடுபடச் சொல்ல, கட்சித் தலைவர் அமைச்சர் ராகவனை அனுப்பியிருக்கிறார். இவர் கட்சியில் லிங்கத்திற்கு அடுத்தபடியாக செல்வாக்கு நிறைந்தவர்.

அவர், வீட்டின் வரவேற்பறையில் இருந்து லிங்கத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். தலைவர் சொல்லி அனுப்பியதால், ராகவன் பேச்சு தேர்தலைச் சுற்றியே இருந்தது. ஆனால் அவர் என்ன பேசினாலும், லிங்கத்திடமிருந்து பெரிதாக எதிர்பேச்சுக்கள் வரவில்லை.

ஜெகதீஷ் பற்றி ராகவன் பேசினதும், விரக்தியின் விளிம்பில் நிற்பது போன்ற உடல்மொழியுடன், “என்ன செஞ்சாலும் ஜெகா திரும்பி வரமாட்டானே!?” என வருத்தத்துடன் லிங்கம் பேசினார்.

“நீங்களே இப்படி இருந்தா எப்படி லிங்கம்? நீங்க இப்படி இருக்கிறது கட்சிக்கு நல்லதில்லை-ன்னு தலைவர் நினைக்கிறாரு” என ராகவன் வந்த வேலையில் குறியாக இருந்தார்.

கலங்கியிருந்த கண்களைத் துடைத்து, “புரியுது. நாளையிலிருந்து என்னோட எலெக்ஷன் ஒர்க்-க கன்டினியூ பண்றேன்” என்றார் லிங்கம்.

“நல்லது லிங்கம்” என்ற ராகவன் குரலில், தலைவர் சொன்ன வேலையைச் செய்தாயிற்று என்று நிம்மதி தெரிந்தது.

அடுத்ததாக வரவேற்பறையின் மற்றொரு பகுதியில் இருந்த சாய்வு இருக்கையில் கண்மூடிப் படுத்திருந்த ராஜாவைப் பார்த்தார். பின், தன் அருகில் நின்று கொண்டிருந்த கட்சி ஆட்களைப் பார்த்தார்.

அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து… லேசாகக் குனிந்து, “இன்னும் அண்ணே யாரையும் பக்கத்தில சேர்க்கவும் மாட்டிக்கு. பேசவும் மாட்டிக்குது” என்று சொல்லப்பட்டது.

‘என்ன செய்ய இவன் சரியாக?’ என கட்சிக்காக யோசிக்கையில், “ராஜாண்ணா” என அழைத்தபடியே, அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கிச் சுடர் சென்றாள்.

அவள் அழைப்பைக் கேட்டு கண்கள் திறந்து பார்த்தவன், “என்ன சுடர்?” என்று சோர்வாகக் கேட்டதும், “முதல எந்திரி ராஜாண்ணா!” என்றாள்.

ஒரு சலிப்புடன் அவன் எழுந்து அமர்ந்ததும், “ஷர்ட் கசங்கியிருக்கு. மாத்திக்கோ” என ஒரு சட்டையைக் கொடுத்தாள்.

குனிந்து பார்த்தான். படுத்தே கிடப்பதால் சட்டையில் சுருக்கங்கள் அதிகமாகத்தான் தெரிந்தன. இருந்தும், ‘இப்படியே இருக்கேனே’ என்பது போன்று சுடரைப் பார்த்தான்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக வலம் வருபவன் இப்படிச் சோம்பிப் கிடப்பதைப் பொறுக்க முடியாத லதா, “மாத்திக்கோ ராஜா” என்று சாய்வு இருக்கையின் பின்னே நின்று கொண்டு சொன்னார்.

அப்பொழுதும் சட்டையை வாங்காமல் இருந்தவனிடம், “ராஜாண்ணா” என்று அன்பின் குரலில் சுடர் அதட்டியதும், சட்டையை வாங்கி அங்கேயே மாற்றிக் கொண்டான்.

அதன்பின் சற்றுத் தள்ளி நின்ற வேலைக்காரப் பெண்மணியைப் பார்த்து, ‘வாங்க’ என்பது போல் சுடர் தலையசைத்தாள். அவர் வந்ததும், அவரிடமிருந்த காஃபி கோப்பையை வாங்கி, ராஜாவிடம் நீட்டினாள்.

எதையும் செய்ய மனமில்லாதவன், “வேண்டாம் சுடர். பசிக்கலை” என்று சொன்ன போதிலும், வற்புறுத்தி கோப்பையை அவன் கைகளில் திணித்தாள்.

மறுத்திருந்தாலும்… கோப்பையைக் கீழே வைக்காமல் அவன் குடிக்க ஆரம்பித்ததும், “குடிச்சிக்கிட்டே இரு. வந்திடுறேன்” என்று சொல்லி, புத்தக அறைக்குச் சென்றாள்.

அங்கே இருந்த புத்தக அலமாரியிலிருந்து, அவனுக்குப் பிடித்தமான ‘அரசியல்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தை எடுத்து வந்து, ” கொஞ்சம் நேரம் படி ராஜாண்ணா. படுத்தே இருக்காத” என்று கொடுத்தாள்.

பலமுறை படித்திருந்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். முதல் இரண்டு நிமிடங்கள் ஏனோதானோவென புத்தகத்தைப் புரட்டியவன், மூன்றாவது நிமிடத்திலிருந்து புத்தகத்திற்குள் மூழ்கினான்.

முன்னே நின்று பார்த்துக் கொண்டிருந்த சுடருக்கும், பின்னே இருந்த லதாவிற்கும்… அப்படியொரு நிம்மதி முகமெங்கும் பரவியது.

இதையெல்லாம், வரவேற்பறையின் மற்றொரு பகுதியில் இருந்த ராகவன் கவனித்துக் கொண்டே இருந்தார். 

யாரையும் நெருங்க விடவில்லை. யார்கூடவும் பேசவில்லை. ஆனால், இந்தப் பெண் சொன்னதும் கேட்பதைப் பார்த்தவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அவனை எப்படிச் சரி செய்ய?’ என்று தெரியாமல் இருந்தவருக்கு வழி கிடைத்திருந்தது. உடனே, “லிங்கம் உங்ககிட்ட ஒன்னு பேசணும்” என்றார்.

“சொல்லுங்க ராகவன்”

“ராஜா நிலைமை எனக்குப் புரியுது. ஆனா ஒரு ஐடி விங் செக்கரட்டரி எலெக்ஷன் நேரத்தில இப்படி இருந்தா எப்படி?” என ராஜா நிலைமை புரிந்தும், அதைப் பொருட்படுத்தாமல் கட்சிக்காகப் பேசினார்.

லிங்கத்திற்குக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், “அசிஸ்டன்ட் செக்ரெட்டரி இருக்கிறாங்கள?! அவங்களை வச்சி மேனேஜ் பண்ண முடியாதா?” என்று மாற்று வழிகளைக் காட்டினார்.

“அவங்க செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா ஐடி விங் பசங்கெல்லாம் இவனைத்தான தேடுறாங்க” என்று ராஜாவைக் கை காட்டினார்.

ஒரு தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராய் இருப்பவனுக்கு தேர்தல் நேரப் பணிகள் பற்றித் தெரிந்ததால், அவனது அணி உறுப்பினர்களிடம் ராஜா பழகும் விதம் தெரியும் என்பதால், “சரி இப்போ என்ன பண்ண?” என்று லிங்கம் கேட்டார்.

“அது… ராஜா… உங்க பொண்ணுகூட மட்டும்தான் பேசறான். அவங்க சொன்னதை அப்படியே கேட்கிறான். அதனாலத்தான் இப்படிக் கேட்கிறேன்!” என்று பீடிகையோடு ஆரம்பித்து, “எலெக்ஷன் வேலையெல்லாம் அவனைப் பார்க்கச் சொல்லி, உங்க பொண்ண சொல்லச் சொல்லுங்களேன்” என ஒரு கோரிக்கையுடன் முடித்தார்.

அவர் அப்படிக் கேட்டும் லிங்கம் அமைதியாக இருந்ததும், “ஏதாவது சொல்லுங்க?” என்றார் ராகவன்.

“இதுவரைக்கும் அவ கட்சி விஷயத்தில இன்வால்வ் ஆனதே கிடையாது ராகவன்” என்று நாசுக்காக மறுத்தார்.

“அவங்க எங்கே இன்வால்வ் ஆகப் போறாங்க. ராஜாவை இன்வால்வ் ஆக சொல்லப் போறாங்க” என்று விடமால் பேசினார்.

சுடரே மறுத்தால்தான் இவர் பேசமாட்டார் என்று நினைத்து, “இதுல நீங்களோ நானோ எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா அவ சுயமா முடிவெடுக்கிற பொண்ணு. அவகிட்டதான் கேட்கணும்” என்றார்.

“அப்போ கூப்பிடுங்க. நான் கேட்டுப் பார்க்கிறேன்” என்றதும், அடுத்த ஐந்து நிமிடங்களில் சுடரும் லதாவும் அங்கே வந்து நின்றார்கள்.

லிங்கத்திடம் கேட்டதை மீண்டுமொரு முறை ராகவன் சொன்னதும், லதாவிற்கு இது நல்ல யோசனையாகத்தான் தோன்றியது. ஆனால் சுடருக்கு தன் காதலனின் நிபந்தனைதான் நியாபகத்திற்கு வந்தது.

மகள் பேசாமல் இருப்பதைக் கண்டு, “என்ன சுடர் ஒன்னுமே சொல்ல மாட்டிக்கிற?” என லதா கேட்டார். அதேபோல் ராகவனும் ‘என்ன பதில் சொல்லுவாள்?’ என்று சுடர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் யோசித்தாள். பின், “இல்லை, என்னால முடியாது. படிச்சிக்கிட்டு இருக்கேன். ஸோ டைம் கிடைக்காது” என்று நேரடியாக மறுத்தாள்.

“இதுக்கு என்ன டைம் ஆகும்? இப்போ சொன்னீங்கள ‘சட்டை போடு, படி’ அப்படின்னு! அதேமாதிரி அப்பப்போ அவனை வேலை செய்யச் சொல்லணும். அவ்வளவுதான்” என்று ராகவன் எளிதாகச் சொன்னார்.

“கட்சி வேலை நான் பார்க்க மாட்டேன்” என்று கறாரான குரலில் மறுத்தாள்.

காரியம் ஆகவேண்டும் நோக்கில் சிரித்தபடி, “உங்களை எப்படிக் கட்சி வேலை செய்யச் சொல்லுவேன்? ராஜாவைத் தேர்தல் வேலை செய்யச் சொல்லுங்கன்னு சொல்றேன்” என்றார்.

சுடர் யோசித்து நிற்பதைப் பார்த்த லதா, “அவனுக்காக இதுகூட செய்ய மாட்டியா? சரின்னு சொல்லு சுடர்” என ராஜாவிற்காகப் பேசியதும், “லதா நீ பேசாம இரு” என்று லிங்கம் கண்டித்தார்.

“அவன் இப்படி இருக்கிறது உங்களுக்கு ஓகேவா?” என ராகவன் கேட்டதும், ‘இல்லை’ என்று சுடர் தலையசைத்தாள்.

“அப்புறமென்ன? கட்சி வேலை பார்த்தா, மனசு கொஞ்சம் மாறுமில்லையா? அதுக்காகத்தான் கேட்கிறேன்” என்று சுடரின் மனதை மாற்றப் பார்த்தார்.

ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் அழுத்தமாக இருப்பவனைப் பார்த்து லதாவிற்கு மனம் பதைபதைத்தது. எனவே “ஒத்துக்கோ சுடர்! என் பையன் இப்படி இருக்கிறதைப் பார்க்கவே முடியலை. அவனை எந்திரிச்சி நடமாட வச்சிடு” என கண்ணீர் சிந்தினார்.

“நீங்க அழாதீங்க. அவங்களே யோசிச்சி முடிவெடுக்கட்டும்” என்று ராகவன் சொன்னதும், சுடர் தன் அப்பாவைப் பார்த்தாள்.

“யார் என்ன சொன்னாலும் உனக்கென்ன தோணுதோ அதை மட்டும் செய். ‘இதை செய்! அதை செய்’-ன்னு நான் சொல்ல மாட்டேன்” என லிங்கம் சொன்னதும், ராகவனுக்கு ஒருமாதிரி போயிற்று.

ராஜாவின் மீதிருக்கும் பாசத்தால், ‘இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்?’ என்று லதாவிற்கு லிங்கத்தின் மேல் கோபம் வந்தது.

அப்பா சொன்னதைக் கேட்டவள், ராஜாவைப் பார்த்தாள். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மீண்டும் படுத்திருந்தான். அவனின் தோற்றம் மனதை ஏதோ செய்ததால், “சரி சொல்றேன்” என்று சுடர் ஒத்துக் கொண்டதும், “அவ்வளவுதான்” என்று ராகவன் எழுந்து கொண்டார்.

வந்த வேலை ஓரளவிற்கு முடிந்து, தலைவரிடம் சொல்வதற்கு பதில் இருக்கிறது என்ற திருப்பதியில், ” படிக்கிறேன்னு சொன்னீங்கள!? என்ன படிக்கிறீங்க?” என்று சுடரிடம் கேட்டார்.

“ஜர்னலிசம் முடிச்சிட்டு, நியூஸ் எடிட்டிங் ரிலேட்ட் கோர்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். இங்கே சென்னையிலதான்” என சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் படிப்பைப் பற்றிச் சொன்னதும், ‘ஜர்னலிசமா?’ என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மறைத்து, “அப்ப நான் கிளம்புறேன் லிங்கம். நீங்க, நாளைக்கு கட்சி ஆபிஸ் வரணும்” என்று ராகவன் சொல்லிச் சென்றார்.

அவர் கிளம்பியதும், கட்சி ஆட்களும் சென்றார்கள். அனைவரும் சென்றதும், கணவர் அருகில் வந்தமர்ந்து, “ராஜா-க்கு ஹெல்ப் பண்ண வேண்டாம்-னு ஏன் சொன்னீங்க?” என்று லதா கேட்டார்.

“எது ஹெல்ப் லதா? படிக்கிற பொண்ண, இந்த மாதிரி வேலை செய்யச் சொல்லுவாங்களா?” என்று இன்னும் தனக்கு இதில் உடன்பாடில்லை என்பது போல் கேட்டார்.

“கொஞ்ச நாளாவே ராஜா ஒருமாதிரி இருக்கான். இப்ப இது வேற. அவன் இப்படியே இருந்தான்-னா எப்படிங்க? அவன் மனசு மாறதுக்காக ஏதாவது செய்யணும்-ல?”

“நானும் கவனிச்சேன் லதா. நீ நினைக்கிறது-ல தப்பில்லை! ஆனா ராகவன் அப்படி நினைச்சி சொல்லலை. அவங்களுக்கு எலெக்க்ஷன் நேரத்தில இறங்கி வேலை செய்ய ராஜா தேவைப்படறான். சுடர் சொன்னா, அவன் வேலை செய்வான்னு நினைக்கிறாரு.

கொஞ்சம் கூட அவனைப் பத்தி யோசிக்காம, கட்சிக்காக மட்டும் யோசிச்சுப் பேசிட்டுப் போறாரு. அவன் மேல இருக்கிற அக்கறை-ல அவர் பேசலை” என்று ராகவனைப் புரிந்து பேசினார்.

உடனே பதட்டமான லதா, “அப்ப சுடர் தெரியாம ஒத்துக்கிட்டாளோ?” என்று பயத்துடன் கேட்டார்.

“நிச்சயம் இருக்காது. ராகவன் கேட்டதுக்காக சரின்னு சொல்லியிருக்க மாட்டா. ராஜாக்காக மட்டும் யோசிச்சி சொல்லயிருப்பா” என்று மகளைப் புரிந்து கொண்டு பேசினார்.

பின்னரும் கவலையுடன் தெரிந்த மனைவி முகத்தைப் பார்த்தவர், “லதா இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ சாப்பிட்டியா?” என அக்கறையாகக் கேட்டதும், “எனக்கு ராஜாவை நினைச்சா கஷ்டமாயிருக்குங்க” என்றார்.

“சரியாயிடுவான். அவன் சரியாகிறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்” என்று ஆறுதலாகச் சொன்னார்.

“வாயைத் திறந்து எதுவும் பேச மாட்டிக்கிறான். அழக் கூட மாட்டிக்கிறான். எனக்கு பயமா இருக்குங்க” என்று மீண்டும் கண்ணீர் வடித்தார்.

“லதா நீயே இப்படி கவலைப்பட்டா, அவனை யாரு சமாதானப்படுத்துவா? தைரியமா இரு” என்று மனைவிக்கு நம்பிக்கை ஊட்டினார்.

பின், “சரி! வெளியிலே கட்சி ஆளுங்க வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் போய் பார்த்திட்டு வர்றேன்” என்று சொல்லி, வீட்டு வளாகத்திற்குச் செல்லத் தயாரானார்.

இதே நேரத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு படுத்திருந்தவன் முன்னே போய் நின்ற சுடர், “ராஜாண்ணா எழுந்திரி” என்று சொன்னதும், அவன் எழுந்து அமர்ந்தான்.

அவன் அருகில் அமர்ந்துகொண்டு, தோளில் சாய்ந்து கொண்டாள். “என்ன சுடர்? என்னாச்சு?” என்று கேட்டதற்கு, நிமிர்ந்து ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்து, மீண்டும் சாய்ந்து கொண்டாள்.

இது கட்சி வேலை இல்லை என்று தெரியும். ராஜாவை தேர்தல் வேலைகள் செய்யச் சொல்லப் போகிறோம் என்று தெரியும். இதையெல்லாம் அப்பாவும் பார்த்துக் கொள்வார் என்றும் தெரியும்.

இவ்வளவு தெரிந்தும் பின்பும், ஏனென்றே தெரியாமல், ‘கட்சி ரிலேடட் ஆக்ட்டிவிட்டிஸ்-ல இன்வால்வ் ஆகக் கூடாது’ என்று காதலன் சொன்னது சுடரின் நியாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது.

அடுத்து வரப்போவது காதல் ஓவியத்தின் முதல் அத்தியாயமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!