YALOVIYAM 10.1

YALOVIYAM 10.1


யாழோவியம்


அத்தியாயம் – 10

கடிகாரத்தில் மணி 12 அடித்ததும் ராஜா, மாறன் இருவருமே ஒரே நேரத்தில் சுடரின் கைப்பேசிக்கு அழைக்க முயற்சித்தனர். ஆதலால், ‘கால் குடின்ட்(couldn’t) பி கனெக்ட்ட்’ என்ற செய்தி வந்தது.

சென்னையில் இருந்து அழைத்த ராஜா, ‘டிசி-யாத்தான் இருக்கும்’ என்று நினைத்தவாறே மீண்டும் அழைத்ததும், அந்த அழைப்பை சுடர் ஏற்றாள்.

“சுடர்” என்று ராஜா பேச்சை ஆரம்பித்ததும், “ம்ம்ம்” என்று சொன்னாள்.

“ஹேப்பி பர்த்டே” என வாழ்த்துச் சொல்லியதற்கும், “ம்ம்ம்” என்றே சொன்னாள்.

அடுத்து, “என்ன கிஃப்ட் வேணும்?” என்று சாதாரணமாகக் கேட்டதற்கு, பெரிய பெரிய குழப்பத்தில் இருந்தவள், “எதுவும் வேண்டாம்” என்றாள்.

“ஏன்? ஏதாவது வாங்கித் தர்றேனே சுடர்?” என ஆசையாகக் கேட்டுப் பார்த்ததற்கும், “வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.

அவளைப் பார்த்து வெகுநாட்கள் ஆயிற்று என்பதால், “வீட்டுக்கு வந்து பார்க்கவா சுடர்?” என மெதுவாகக் கேட்டதற்கும், “வேண்டாம்” என்று திட்டவட்டமாகச் சொன்னாள்.

கடைசியில், “வேற என்னதான் வேணும்?” என்று கேட்டுவிட்டதும், ‘எப்படா அப்படிக் கேட்பான்?’ என காத்திருந்தவள், படபடவென கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.

“அம்மா-கூட ஏன் பேச மாட்டிக்கிற? அம்மா ரொம்பக் கவலைப்படறாங்க. எனக்கும் கஷ்டமா இருக்கு. ஏன் இப்படி இருக்க-ன்னு சொல்லேன்?

அப்புறம் வீட்லருந்து ஒரு பைல் எடுத்திட்டு வந்தேன். அதைப் பத்தி எதுவுமே கேட்க மாட்டிக்கிற? அது என்னென்னு நான் பார்த்திட்டேன்! எதுக்கு அந்த எவிடென்ஸ்-ஸ மறைச்சி வைக்கணும்? உனக்கும், அந்த நியூஸ்-க்கும் என்ன சம்ப… ” என கேட்க வரும்பொழுது, ராஜா அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவள், அப்படியே ஓரிரு நொடிகள் சிலையாக இருந்தாள். கண் மூடிக் கொண்டாள். சிலபல கண்ணீர் துளிகள் வந்தன. அந்த நேரத்தில் மாறனிடமிருந்து அழைப்பு வந்தது.

‘இதைப்பற்றி, இவனிடம் அப்புறமா சொல்லிக்கலாம்’ என கடகடவென கண்ணீரைத் துடைத்துவிட்டு, “சொல்லுங்க கலெக்டரே” என்று சாதாரணமாக ஆரம்பித்தாள்.

‘என்ன சொல்லி, எப்படி ஆரம்பிக்க?’ என்று தயங்கியவன், “அது வந்து…” என்று தொடங்கியதும், “சொல்லு மாறா! சொல்லு” என சுடர் கதை கேட்கும் தொனியில் சொன்னதும், மாறன் பேச்சை நிறுத்துவிட்டான்.

“சும்மா சொல்லு! எப்பவும் சொல்லுவியே, ‘நானும் ட்ரை பண்ணேன். பட் டிஸ்டன்ஸ் பேஸிஸ்-ல ஆர் டோட்டல் நம்பர்-ல ஹையர் லோயர் பார்த்து கால் கனெக்ட் ஆகியிருக்கும்’ இதான மாறா?” என்றாள்

வேறுவழியேயில்லாமல் அமைதியாக இருந்தான்.

“வருஷ வருஷம் இதேதான். ஒரு வருஷம் கூட ஃபர்ஸ்ட் விஷ் பண்ண முடியலை” என்று அவனது அமைதியை அடித்து துவைக்கும் குரலில் சொன்னாள்.

“உன் அண்ணன் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணிட்டானா??”

“ம்ம்ம்”

“சுடர் நீ வேணா பாரு! நெக்ஸ்ட் இயர் நான்தான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவேன்”

“நீ இன்னும் இந்த வருஷமே விஷ் பண்ணலை!” என நியாபகப்படுத்தியதும், “ஓ! சாரி? பிலேடட் பர்த்டே விஷ்ஷஸ் சுடர்” என்று வாழ்த்தினான்.

“இந்த உலகத்திலே பர்த்டே அன்னைக்கு ‘பிலேடட் பர்த்டே விஷ்’-ன்னு சொல்றவன் நீயாதான் இருப்ப?!” என்று சிரித்தாள்.

“ஆமா-ல! இதுக்கு ஏதாவது வழி பண்ணேன்?” என்று பாவமாகக் கேட்டதும், “நான் என்ன பண்ண முடியும்? முதலே யோசிச்சிருக்கணும்!? அன்னைக்கு பீச் ரோடு-ல என்ன பேச்சு பேசுன தெரியுமா?” என்றாள்.

“அது நீ ரொம்ப அழுதியா? அதான் பாவமா…” என சொல்லி முடிக்கும் முன்பே, “அழ மட்டும்தான் செஞ்சேனா?” என்று குறுக்கிட்டாள்

“சரி-ம்மா! நீ அடிச்ச அடி! பேசின பேச்சு! அதுல உணர்ச்சிவசப்பட்டு தெரியாம வார்த்தையை விட்டுட்டேன் போதுமா?” என்று சலிப்புடன் சொன்னான்.

“ஏன் மாறா, நான் அப்படிப் பேசறது பிடிக்காதா?”

“ச்சே! ச்சே! நீ அப்படி உரிமையா பேசறதுதான் பிடிக்கும். இன்ஃபாக்ட் நீ அந்த மாதிரி பேசலைன்னா, எனக்கு ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருக்கும்” என்று வார்த்தைகளாலே அவளை வாரிச் சுருட்டியிருந்தான்.

அந்தக் குரலுக்குள் சுகமாய் சுருண்டு கொண்டவள், “மாறா” என உயிர் உறையும் குளிரின் குரலில் அழைத்ததும், சில்லென்ற நீரில் சிறகை நனைத்து சிலிர்த்துக் கொள்ளும் பறவை போல் உணர்ந்தான்.

அப்படிச் சிலிர்த்தவாறே சிரித்துக் கொண்டு, “ஓகே வேறென்ன? சொல்லு பர்த்டே கேர்ள்!!” என்றான்.

“சொல்றதுக்கு பெரிசா ஒன்னுமில்லை. பட் ஆல் தி பெஸ்ட்” என்றதும், “ஏன்?” என்று புரியாமல் கேட்டான்.

“அடுத்த வருஷமாவது ஹாப்பி பர்த்டே-ன்னு சொல்றதுக்கு” என்று கேலி செய்ததும், செல்களெல்லாம் கூடச் சேர்ந்து சிரிக்கும் வண்ணம் சிரித்தான்.

அவன் சிரிப்பைக் கேட்டுச் சிரித்தவள், “எப்பவும் சொல்வியே அதைச் சொல்லு மாறா” என கேட்டதும், மேலும் சிரித்தபடி, “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்றதும் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 12:25 எனக் காட்டியது.

இன்று எப்படி வாழ்த்துச் சொல்கிறான். ஆனால் அன்று கல்லூரியில் ‘என் பிறந்தநாள்’ என்று சொன்ன பின்பும், ‘ஒரு வாழ்த்துச் சொன்னானா?’ என்று நினைக்கும் பொழுது சிரிப்பு வந்தது. சிரித்தும் கொண்டாள்.

ஆனால் அன்று வலித்தது. நிரம்ப வலித்தது. முகத்தில் புன்னகையுடனே, வலித்த அந்த நாளை நோக்கி மனம் பயணித்தது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 9

பாண்டிச்சேரி

கல்லூரி நாட்களில் அன்று சுடரின் பிறந்தநாள்!

காலையிலே ராஜாவும் லதாவும் வந்து வாழ்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தனர். அதன் பிறகு தோழிகளிடமிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் இருந்தன. பின், மதிய இடைவெளியில் மாறனைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.

அவன் வகுப்பிருக்கும் நடைகூடப் பகுதிக்குள் நடந்து வரும் பொழுதே, மாறனும் அவனைச் சுற்றிச் சில மாணவியரும் நிற்பது தெரிந்தது. ஒரு மாணவி கையில் புத்தகம் திறந்திருக்க, அதைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

‘இவனுக்கு வேற வேலையே கிடையாதா?’ என்று சிறு பொறாமையுடன் எண்ணியபடியே நடந்து வந்து, ஒரு தூணின் அருகில் நின்றாள்.

‘எப்படிக் கூப்பிட?’ என்று தயங்கியவள், சட்டென யோசித்துக் கை தட்டி அழைத்தாள். சரியான திசையில் சடேலென்று திரும்பிப் பார்த்தான்.

அவன் பார்த்ததும், ‘ஹாய்’ என்பது போல் கொஞ்சம் புன்னகையுடன் கைகள் ஆட்டினாள். கூடுதல் ஒப்பனையுடன் இருந்தவளை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன்பின் கவனத்தைப் புத்தகத்தில் புகுத்திக் கொண்டு, மீண்டும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ‘இவனுக்கு என்னாச்சு?’ என்று சிடுசிடுத்தவள், திரும்பவும் கைதட்டி அழைத்தாள்.

ஆனால் இம்முறை அவன் மட்டுமல்ல, மாணவியரும் சேர்ந்து திரும்பிப் பார்த்தனர். இத்தனை பேர் பார்த்தால், ‘என்ன சொல்ல? எப்படிச் சொல்ல?’ என கூச்சம் இருந்தாலும், ‘இன்னைக்கு என் பர்த்டே’ என சுடர் வாயசைத்தாள்.

உடனே மாணவிகளிடம் ஏதோ சொல்லிவிட்டு, சுடரின் முன் வந்து நின்றான். “இன்னைக்கு என்னோட பர்த்டே” என்று அவனிடமிருந்து வாழ்த்தை வாங்கும் ஆசையில் சொன்னதற்கு, “உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.

“என்ன சொல்லணும்?”

“உங்கப்பா மினிஸ்டரா?” என்று கேட்டதும், “ம்ம்” என ‘இதில் என்ன இருக்கு?’ என்ற குரலில் சொன்னாள்.

“கலெக்டர் ஆகிறதுதான் என் கனவு. அதுக்காகத்தான் படிச்சுக்கிட்டு இருக்கேன். இது தொடர்ந்தா, பியூச்சர்ல என் போஸ்ட்டுக்கு சரிவராதுன்னு தோணுது. சிவில் சர்வன்ட்-டா இருக்கிறப்போ எந்த ஒரு கட்சியோட அடையாளம் இருக்க வேண்டாம்-ன்னு நினைக்கிறேன். இப்ப தெரியாது. பட், பிராக்டிகலா போகிறப்போ, நிறைய பிரச்சனை வரும். ஸோ, நமக்குள்ள இது சரிவராது” என்று சொல்ல வேண்டியத்தைச் சொல்லி முடித்தான்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்பவளைப் பார்த்தால் கஷ்டமாக இருந்தது. எனினும், “நான் சொல்ல வர்றது புரியுதா?” என கேட்டான்.

“நல்லாவே புரியுது” என்று மென்சிரிப்புடன் எளிதாகச் சொன்னவள், “அதான் நேத்து பவுன்டர் ஸ்டேச்சு-க்கு வரலையா? இது தெரியாம நான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதை நேத்தே சொல்லியிருக்கலாம்” என மனதின் பாதிப்பைக் குரலில் வெளிப்படுத்தாமல் பேசினாள்.

“சொல்லியிருக்கலாம். பட் எனக்கும் இப்படிச் சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு. அதான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்”

இருவருக்கும் இடையே ஒருசில நொடிகள் ஒரு அமைதி நிலவியது.

அந்த நொடி முடிந்ததும் கொஞ்சம் தயங்கியபடி, “இனிமே இந்த மாதிரி பார்க்க வர வேண்டாம்” என்று மாறன் சொன்னதும், சுடரின் மனதில் ஒரு வலி வந்தது.

அவன் சொன்னதற்கு ‘சரி’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிச் சொல்வதால் மட்டும் அவன் பக்கம் சரிந்த மனது எழுந்துவிடுமா?? பெரிய கேள்விக்குறிதான்!

இருந்தும், உள்ளத்தின் மொழி அழ… உடலின் மொழி புன்னகைக்க… ‘சரி’ என்று சொல்லும் விதமாக அழுத்தமாக தலையசைத்தாள்.

பின், “கிளாஸுக்கு டைம் ஆச்சு” என்று சொல்லி, சுடர் நடக்கப் போனாள். என்ன நினைத்தாளோ? மெல்ல திரும்பி, “மாறா” என யாரும் அவன் பெயரை அப்படி ஒரு உரிமையுடன் உச்சரித்திருக்க முடியாதவொரு குரலில் அழைத்தாள்.

‘என்ன?’ என்ற ஒற்றை அர்த்தத்துடன் பார்த்தவனிடம், ‘ஒன்னுமில்லை’ என்று ஓராயிரம் அர்த்தங்களுடன் தலையசைத்துவிட்டுப் போகின்றவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லாததைக் குறையாக நினைப்பாளா? என்று தெரியவில்லை! ஆனால் அவளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் நிற்பதை மிகப் பெரிய குறையாக உணர்ந்தான்.

நேற்று ‘வர்றேன்’ என்று சொன்னது இந்தக்கணம் வரை நியாபகத்தில் நின்று கொண்டு நிந்தித்தது.

கூடவே, தனக்காகக் காத்திருந்திருக்கிறாள் என்ற விடயம் வலியா? சுகமா? என்று பிரித்தறிய முடியாத ஒரு நிலைக்கு அவனைக் கூட்டிச் கொண்டு சென்றது.

அதிலிருந்து வெளியேற யாழ்மாறன் கண்களை மூடிக் கொண்டாலும், பள்ளத்தில் விழும் மழையாய், அவன் உள்ளத்தில் விழுந்து… நிறைந்து… நிரம்பி வழிந்து… ஓவியச்சுடர் சித்திரவதை செய்தாள். விலகிச் செல்ல நினைத்தவன் கலங்கிப் போய் நின்றான்.

காதல் ஒரு விசித்திர பாதை!

இங்கே தூரத்தை அதிகப்படுத்திக் கொண்டே போனால் போக நினைக்கும் இடம் விரைவில் வந்துவிடும் என்பதால், காதல் ஒரு விசித்திர பாதை!!

யாழோவியம், அத்தியாயம் – 10 தொடர்கிறது…

நினைத்துப் பார்த்து முடித்தவள், ‘நமக்குள்ள இது சரிவராது’ என்று மாறன் போல சொல்லி, சத்தமாகச் சிரித்துக் கொண்டாள்.

சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்து காதலனுடன் பேசிய பூரிப்பில் இருந்தவளுக்கு, ஏனென்றே தெரியாமல் சட்டென ‘இது சரிவராது’ என வேறு யாராவது சொல்ல நேர்ந்தால்?? என்று கேள்வி வந்ததும், சிரிப்பு சுத்தமாக மறைந்திருந்தது. அன்று வலித்தது போல் வலித்தது.

உடனே, ‘ச்சே! இப்படியெல்லாம் நினைக்கக் கூடாது’ என்று தலையை வேகமாக உலுக்கிக் கொண்டிருக்கையில் கதவு தட்டும் சத்தம் கேட்டதும், ‘அப்பா’ என்று கணித்து, எழுந்து சென்று கதவைத் திறந்தாள். லிங்கம் நின்று கொண்டிருந்தார்.

“ப்பா” என்று சுடர் புன்னகைத்ததும், “ஹேப்பி பர்த்ட சுடர்” என்று மனதார மகளை வாழ்த்தினார்.

“கிஃப்ட் எங்கப்பா?”

“இந்த வருஷம் கிஃப்ட் சேனல் ஆரம்பிக்கிறதுதான். எப்ப-ன்னு நீதான் சொல்லணும்?”

சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே, “சொல்றேன்-ப்பா” என்றவள், “அம்மா எங்க?” என்று கேட்டாள்.

“ராஜா உனக்கு விஷ் பண்ணிட்டானா?”

“ம்ம். ஏன்-ப்பா கேட்கிறீங்க?” என்று கேட்ட மகளிடம், “அவன் வருவான்-னு நினைச்சி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா” என்றார்.

“ஐயோ இந்த அம்மா-வோட” என்று புலம்பியவள், “இருங்கப்பா நான் போய் சொல்றேன்” என போகப்போனவளை, “வேண்டாம் சுடர்” என்று தடுத்தார்.

“ஏன்-ப்பா?”

“நீ போனா, அம்மா ராஜாவைப் பத்தி ஏதாவது பேசி வருத்தப்படுவா. அப்புறம் நீயும் கவலைப்படுவ. இன்னைக்கு உன் பிறந்தநாள். அதனால நீ சந்தோஷமா இருக்கனும்”

“ப்பா அதுக்காக?”

“நான் அம்மாகிட்ட சொல்றேன். நீ போய் தூங்கு. சரியா?” என்றதும், “சரி-ப்பா” என்று அறைக்குள் வந்துவிட்டாள்.

உள்ளே வந்தமர்ந்தவளுக்கு, மனம் மீண்டும் சுணக்கம் கொண்டது. அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டாள்.

‘ஏன் ராஜாண்ணா அப்படி கால் கட் பண்ணீங்க?’ என்ற கேள்வியில் மனம் கஷ்டப்பட்டு கண்கள் கலங்கியது. ‘ஏன் இப்படி மாறிட்டிங்க?’ என்று வருத்தியவளுக்கு மீண்டும் கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.

‘இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் கேஸுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ராஜாண்ணா?’ என்ற கேள்வியில் மனம் குழம்பிக் குழம்பித் தவித்தது.

பின் அதே மனம், விசாரணை முடிவில் எல்லாம் தெரிந்துவிடும். அதற்கு முன் ஏனிந்த குழப்பம் என்று சமாதானமும் செய்து கொண்டது.

‘ஆனால் அதுக்கப்புறம் என்னவாகும்? ராஜாண்ணா சரியாகிடுவாங்களா? இல்லை, இப்படியேதான் இருப்பாங்களா?’ என்ற கேள்வி வந்ததும், பயத்தில் எழுந்து அமர்ந்துவிட்டாள்.

தூக்கம் வரவில்லை. ‘கஷ்டமாருக்கு ராஜாண்ணா” என்று முணுமுணுக்கும் போதே, கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்தப் பார்த்தாள். முடியவில்லை. கடைசியில் நன்றாக அழுதுவிட்டாள்.

இதே நேரத்தில் லிங்கம் வீட்டின் கீழ்தளத்தில்…

முன்னறையில் கிடந்த திவானில் லதா அமர்ந்திருந்தார். லிங்கம் வந்து சொல்லிப் பார்த்த பின்பும், தூங்கச் செல்லாமல் அப்படியே இருக்கிறார்.

முதலில் அவருக்குள், ‘ஏன் பேசவே மாட்டிக்கிறான்?’ என்ற கேள்வி வந்ததும், கஷ்டமாக இருந்தது. பின், ‘முன்ன மாதிரி எப்போ பேசுவான்? என்ற கேள்வி வந்ததும், கண்கள் கலங்கியது.

அதன்பின், ‘இப்படியே பேசமால்தான் இருப்பானோ?’ என்ற கேள்வி வந்ததும், கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அம்மா-மகள் இருவருமே ராஜா நடந்து கொள்ளும் விதத்தை நினைத்து வருந்தினார்கள். ரத்த சம்பந்தமே இல்லாத உறவுதான்! இருந்தாலும், அவன் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு அளவேயில்லை.

அவர்கள் வாழ்வில் எவ்வளவு சந்தோஷங்கள் கொட்டிக் கிடந்தாலும், அவன் சரியாகப் பேசாமல் இருந்தால்… அவன் பாசம் கிடைக்காமல் போனால்… இருவரும் இப்படித்தான் சங்கடப்பட்டுப் போவார்கள்.

அவனிடம் அவ்வளவு எதிர்பார்ப்பு இருவருக்கும்! அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது ஏக்கங்களாக மாறி, எக்கச்சக்க கண்ணீர் துளியாக வெளிவந்தன.

அவர்கள் எதிர்பார்ப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. காரணம், இதற்குமுன் ராஜா, அப்படியொரு பாசத்தைக் கொட்டிக் கொடுத்திருந்தான். இனி வரும் காலங்களில்??


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!