YALOVIYAM 12.1

YALOVIYAM 12.1


யாழோவியம்


அத்தியாயம் – 12

அடுத்த நாள் காலை

சென்னை உயர்நீதிமன்றம்

‘கடைசி கட்ட அறிக்கையைச் சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று உயர்நீதிமன்றம் அனுமதி தந்தும், ‘டிலே வேண்டாம்’ என்று சொல்லி அலெக்ஸ் அறிக்கையைச் சமர்பித்திருக்கிறார். அவருடன் சில துணை ஆய்வாளர்கள் இருந்தனர்.

முதன் முதலாக நுழைவுத் தேர்வு முறைகேடு சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து நிறைய வழக்கு பதிவுகள் இருந்திருக்கின்றன. முதல் கட்ட அறிக்கையில் சொன்னது போல் மொத்தமாக 127 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.

இந்த முறைகேடு தொடர்பாக 17 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முறையாக விசாரிக்க ஆர்வம் காட்டிய 11 ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்களில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இவர்களின் மரணங்கள் இயற்கையானதாக அல்லாமல் சாலை விபத்தாக இருந்திருக்கிறது. இது குறித்து ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்’ காவலர்கள் விசாரித்ததில் 9 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவர்களைத் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

மேலும் இந்த அறிக்கையில் முறைகேட்டிற்கு காரணமான மற்றும் துணைபோனவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இடைத்தரகர்கள் மற்றும் ராக்கெட் லீடருக்கு அடுத்தபடியாக முறைகேட்டிற்குத் துணைபோன பல்கலைக்கழக அலுவலர்களின் பெயர் பட்டியல் இருந்தது.

இதில் மாணவர்களின் ஒஎம்ஆர் விடைத்தாளை மாற்றியமைத்த தேர்வு குழு அதிகாரிகளும், விடைத்தாளை வெளியிட்ட தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கணினி ஆய்வாளர்களும் அடக்கம்.

மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த உயர் கல்வித்துறை இயக்குனர்கள் இரண்டு பேரின் பெயரும் இருந்தது.

அதற்கடுத்து இந்த முறைகேட்டில் தொடர்புடைய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி அமைச்சர்களின் பெயர்கள் இருந்தன.

  1. கோபாலன் – சட்டமன்ற உறுப்பினர் (ஆளுங்கட்சி)
  2. மூர்த்தி – சட்டமன்ற உறுப்பினர் (ஆளுங்கட்சி)
  3. சாரதி – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (எதிர்க்கட்சி)
  4. ஜெகதீஷ் – முன்னாள் நிதி அமைச்சர் (எதிர்க்கட்சி)

இதில் கடந்த வருடம் ஒரு சாலை விபத்தில் ஜெகதீஷ் உயிரிழந்திருக்கிறார். அந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த முறைகேட்டிற்குக் காரணமான ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உயர் கல்வித்துறை அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இவர்களே இந்த முறைகேட்டில் முக்கிய குற்றாவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முறைகேட்டில் 700 கோடி பண மதிப்பில் ஊழல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 800 பக்கம் கொண்ட அறிக்கையை முக்கியமான ஆதாரங்களுடன் அலெக்ஸ் குழு சமர்பித்திருந்தது.

அறிக்கை சமர்ப்பித்து வெளியே வந்தவரிடம், ஊடக நபர்கள் கேள்வி கேட்க முட்டி மோதிக் கொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் அப்பகுதி காவலர்கள் விலக்கிவிட்டதும், வேகமாகத் தன் காரை நோக்கி அலெக்ஸ் சென்றார்.  

நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேன்டும் என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் விசாரணை குழுவில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர வேண்டும் என அரசிடம் கேட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அலெக்ஸின் பாதுகாப்பிற்காக தமிழகஅரசு கூடுதல் காவலர்களை நியமித்திருந்தது. காரை ஒரு காவலர் திறந்துவிட்டதும் ஏறி அமர்ந்தவர் சொன்னதின் பேரில் கார் செங்கல்பட்டு ஆட்சியர் பங்களாவை நோக்கி விரைந்தது.

ஊடங்களில் இன்றைய முக்கியச் செய்திகள்

ஊடகங்கள் முழுவதும் நுழைவுத் தேர்வு முறைகேட்டிற்குக் காரணமான அமைச்சர்களைப் பற்றிய செய்திகள் ஆக்கிரமித்திருந்தன. சிறப்பு விவாதங்கள், கல்வித்துறை தொடர்புடைய அதிகாரிகளின் நேர்காணல்கள் இருந்தன.

இடையிடையே மற்ற செய்திகளும் ஒளிபரப்பட்டன. அந்தச் செய்திகளில் விசாரணை ஆணைய அதிகாரி தியாகு மரணம் முன்னிலை பெற்றிருந்தது.

இறுதி கட்ட அறிக்கையைச் சமர்பிப்பதற்காக நேற்று செங்கல்பட்டிலிருந்து சென்னையை நோக்கிப் பயணம் செய்த தியாகு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தியாகு பயணம் செய்த காரும் கட்டுப்பாட்டை இழந்த வந்த கார் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் தியாகு பயணம் செய்த காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.

இதில் ஒரு ஆய்வாளர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஓய்வூ பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான தியாகுவின் உயிர் மருத்துவமனை செல்லும் வழியிலே பிரிந்தது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு துணைஆய்வாளரும் ஓட்டுனரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எதிரில் வந்த கார் ஓட்டுநர் படுகாயத்துடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.

விபத்து தொடர்பாக கார் ஓட்டுனரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்செய்தி காவல்துறை வட்டாரத்தில் பெரிய சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

மேலும் இதற்கும் நுழைவுத் தேர்வு முறைகேட்டின் குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.

இதுதான் அந்தச் செய்தியின் விரிவாக்கம்.

செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா

வீட்டின் முன்னே இருந்த இடத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. திலோ மற்றும் தியாகுவின் உறவுகள் வந்திருந்தனர். மூன்று மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் தியாகு இருந்ததால், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த அவரின் நண்பர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

வந்திருந்தவர்கலின் முகங்கள் சோகத்தை தாங்கியிருந்தன. தியாகுவின் நெருங்கிய உறவுக்காரப் பெண்களில் சிலர் கண்களில் கண்ணீரோடு இருந்தனர்.

வீட்டின் முன்னறையில் இருந்த சோஃபாவில் திலோவும் மாறனும் இருந்தனர். நேற்றைய உடைகள் மாற்றப்படாமல் இருந்தனர். திலோ மாறனின் தோள்களில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தார்.

இடிந்து போன தோற்றத்துடன், இறுக்கமான மனநிலையில் மாறன் இருந்தான். அடிக்கடி அப்பாவின் நினைவில் கண்கள் கலங்குவதும், அதைக் ஒற்றைவிரலால் ஒற்றி எடுப்பதுமாக இருந்தான்.

நேற்று தியாகுவைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்தே இருவருமே இப்படித்தான் இருக்கிறார்கள். சசிதான் மாறனுக்கு ஆறுதல் கூறுவதும் வருவோர்களிடம் நடந்ததைக் கூறுவதுமாக இருந்தான். அவனின் தாயாரும் வந்திருந்தார். 

சற்று நேரத்தில் அலெக்ஸும் வந்து சேர்ந்தார். அவருடன் விசாரணை குழு உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் நேராக அமர்ந்த திலோ அடக்கப்பட்ட அழுகையுடன் இருந்தார்.

மாறன் அருகில் அமர்ந்த அலெக்ஸ், ‘எப்படி ஆறுதல் சொல்ல?’ என்று தெரியாமல், “சாரி ஃபார் யுவர் லாஸ்” என்றதும், லேசாகத் தலையாட்டினான்.

தியாகு இழப்பினால் வந்த கோபத்தில், “இந்த ஸ்கேம்-ல குற்றம் சாட்டப்பட்டவங்கதான் இதைப் பண்ணியிருக்கணும்-னு எல்லோரும் டவுட் பண்றாங்க. டவுட் என்ன? நிச்சயமா அவங்கதான் செஞ்சிருக்கணும். இதை விட்றாத மாறன்” என்றார்.

அலெக்ஸ் சொன்னதை, ‘ஏன் இப்படிப் பண்ணாங்க?’ என்ற அதிர்ச்சியுடன் திலோ கேட்டிருந்தார். அப்பொழுதும் மாறன் அமைதியாக இருந்தான்.

அதன்பின்னும் நிறைய பேசி, இருவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு அலெக்ஸ் சென்றதும், “இந்த ஸ்கேம் -ல இன்வால்வ் ஆனவங்க பண்ணதா இது?” என்று மாறனிடம் திலோ கேட்டார்.

இது விபத்தல்ல என்று மாறனுக்குத் தெரியும். இருந்தும் அழுத்தமாக இருந்தான்.

“சொல்லு மாறன்! பிளான் பண்ணி அப்பாவை இப்படி …” என்றவர்க்கு, அதற்கு மேல் பேச முடியாமல் கேவல் வந்ததும், “மா! இப்போ இதைப் பத்தி பேச வேண்டாம்” என்று முடித்துவிட்டான்.

மீண்டும் அழ ஆரம்பித்தவரிடம், “ஆக்சிடென்ட் பண்ணவன் உயிரோடதான் இருக்கிறான். அவனை விசாரிச்சா போதும், உண்மையெல்லாம் வெளியே வந்திடும்” என்றவன், “இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். பட் இப்போ எதையும் யோசிக்க வேண்டாம்” என்றான்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு சற்றுநேரம் அமைதியாக இருந்தவர், “அப்பா இல்லைங்கிறதை டைஜஸ்ட் பண்ண முடியலை மாறன்” என்று மீண்டும் அழ ஆரம்பித்தார்.

“அழாதீங்க-ம்மா” என அவரைத் தன் தோளோடு சாய்த்துக் கொண்டதும், “என்னால இதை நம்பவே முடியலை” என்று கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்தார்.

“ம்மா! ம்மா! ப்ளீஸ் இப்படி அழாதீங்க” என்று மாறன் பதறியதும், திலோவின் உறவினர்களும், சசி மற்றும் அவனது அம்மாவும், அவர்களது அருகில் வந்தனர்.

“அப்பா திரும்ப வந்திட்டா நல்லா இருக்கும். இல்லையா மாறன்? எனக்கு தியாகு வேணும்” என்று மேலும் மேலும் துடித்தவரை எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.

அதிகமாக அழுததால் கண்கள் சொருகி திலோ மயங்கும் நிலைக்குச் சென்றதும், “சசி தண்ணீ எடுத்திட்டு வா” என்று மாறன் படபடத்தான்.

உடனே சசியின் தாயார், “சூடா ஏதாவது கொண்டு வர்றேன்” என்று சமயலறைக்கு சென்று காஃபி தயாரித்துக் கொண்டு வந்து திலோவைக் குடிக்க வைத்தார்.

சிறிது நேரத்திற்குப் பின்…

திலோ அமைதியாகியிருந்தார். கண்ணீர் குறைந்திருந்தது. ஆனால் கண்கள் சிவந்திருந்தது. மாறனுமே ஒருமாதிரித்தான் இருந்தான். அக்கணம் சசி வந்து, “மாறன் வா” என்று மெதுவாகச் சொன்னதும், மாறன் எழுந்தான்.

“மாறன்! தனியா விட்டுப் போகாத… ப்ளீஸ்…” என்று அவன் கைப்பிடித்து, திலோ அழுததும், “நீங்க இப்படி அழுதா அவனும் என்னதான் செய்வான்?” என்ற சசியின் தாயார், “சசி, மாறனை கூட்டிட்டுப் போ” என்றார்.

தயங்கி நின்ற மாறனிடம், “நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் போங்க” என்று அனுப்பி வைத்தார்.

மகனாக, அப்பாவிற்கு செய்யும் கடமைகளை செய்து முடித்தான். அன்றைய வாக்குவாதத்திற்குப் பின் இருவரும் சரியாகவே பேசிக் கொள்ளவில்லை.

முன்பிருக்குமே, அலுவலக சம்மந்தமான பேச்சுக்கள், விளையாட்டு எதுவுமே கிடையாது. ஆனால் இரண்டு மூன்று முறை இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்திருந்தது. திலோதான் பேசி, சமாதானப்படுத்தியிருந்தார்.

காவல்துறை வேலையில் அப்பா காண்பித்த ஈடுபாடு… தங்கள் மூவரின் ஜார்கண்ட் வாழ்க்கை… தனது பதவி, பொறுப்பை எண்ணி அப்பா பெருமைப் பட்டுக்கொள்ளும் விதம்… என அனைத்தையும் நினைத்துப் பார்த்தான்.

அடுத்த நிமிடமே அதுவரை அடக்கி வைக்கப்பட்ட கண்ணீரை எல்லாம் “சசி” என்று, நண்பனின் தோளில் மாறன் இறக்கி வைத்தான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!