YALOVIYAM 14.2


யாழோவியம்


அத்தியாயம் – 14

லிங்கம் வீடு

அவர் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். காவலர்கள் சிலரும் வீடு இருந்த சாலையில் நின்றனர். காவலர்கள் இருப்பதால் மற்ற இடங்களில் போல பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லையென்றாலும், கோஷங்கள் இருந்தன.

அந்தக் கூட்டத்தைக் கடந்து சென்று, சுடர் காரிலிருந்து இறங்கியதும், அவள் வீட்டிற்குள் செல்ல ஏதுவாக ஆட்களை ஒதுங்கச் சொல்லி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

வீட்டினுள் நுழைந்த பின்பு, ‘என்ன நடக்கிறது?’ என்று புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கும் வேலையாட்களைக் கவனிக்காமல், சுடர் கடகடவென மாடிப்படிகளில் ஏறிப் போய், தன் அறைக் கதவைத் திறந்தாள்.

லதா அழுது கொண்டிருந்தார். அவரது கைப்பேசி கீழே நொறுங்கிக் கிடந்தது. “என்னம்மா?” என்று கேட்டு ஆதரவாக அவர் அருகில் வந்து நின்றாள்.

“ராஜா-க்கு ஃபோன் பண்ண நினைச்சேன். ஃபோன பிடிங்கி உடைச்சிட்டாரு. ரொம்ப அடிக்கிறாரு” என்று மகளிடம் முறையிட்டார்

கண்கள் சிவக்க லிங்கத்தைப் பார்த்த சுடர், “அம்மா-வ எதுக்கு அடிக்கிறீங்க? வெளியில இருக்கிற கோபத்தெல்லாம் வீட்ல வந்து காட்டாதீங்க!?” என்று ஆத்திரத்துடன் சொன்னாள்.

இத்தனை நாள் கழித்து மகள் பேசுகிறாள் என்ற நிம்மதி வந்திருந்தாலும், “அவ ஏன் ராஜா-க்கு ஃபோன் பண்றா?” என்று கோபத்துடன் கேட்டார்.

“ராஜாண்ணா-க்கு அவங்க ஃபோன் பண்ணா, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று எகிறிக் கொண்டு அவர் எதிரே வந்து கேட்டாள்.

“அவன்தான் பிரச்சனை! ராஜாதான் பிரச்சனை!!” என கோபத்தின் உச்சியில் கத்தினார்.

சுடர், லதா இருவருமே அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

“இவனைக் கட்சிக்குள்ள கொண்டு வந்து, ஒரு போஸ்ட்டும் கொடுத்தா, இவன் என் போஸ்ட்-அ காலி பண்ற வேலை செஞ்சான்” என்று முணுமுணுத்தார்.

“ராஜா அப்படிச் செஞ்சிருக்க மாட்டான்” என லதா பேசும் பொழுதே, “ம்மா! பேசாம இருங்க” என்ற சுடர், உண்மை தெரிய வேண்டுமென, “ராஜாண்ணா என்ன பண்ணாங்க?” என்று பொறுமையாகக் கேட்டாள்.

“அவன் ஐடி விங் செக்ரட்டரிதான?! அவன் வேலை என்ன சுடர்? அதைப் பார்க்காம தேவையில்லாத வேலை பார்த்தான்” என்று ராஜாவின் மீது குற்றம் சுமத்தும் தொனியில் பேசினார்.

“என்ன செஞ்சாங்க-ன்னு சொல்லுங்க?”

“டூவல்த் முடிச்சி… படிக்காம இருந்த பசங்கள வச்சி… பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸெல் சீட்-ன்னு ஐடி விங்-காக ஏதோ செஞ்சிக்கிட்டு இருந்தான். அவனைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? நல்லா பேசுவான்-ல? அப்படித்தான் அந்தப் பசங்ககிட்டயும் பேசியிருக்கான்”

“இதுல என்ன இருக்கு?” என்று இடையில் புகுந்து கேட்டாள்.

“சொல்றதைக் கேளு. அந்தப் பசங்களும் இவன்கிட்ட பேசுவாங்க. பேச்சு வாக்கில சும்மா இருக்காம, ‘இதை விட அதிக பணம் கிடைக்கிற வேலை இருக்கு. அதுவும் கம்மியான நேரத்தில’-ன்னு அந்தப் பசங்க உளறிட்டாங்க”

அவரின் பேச்சிலிருந்து, ‘ஓ! இந்த ஸ்கேம் பத்தி ஃபர்ஸ்ட்டே தெரிஞ்சவங்க ராஜாண்ணா-வா?’ என்று தனக்குள் கேள்வி கேட்டு, ‘அப்படித்தான் இருக்கும்’ என்று பதிலும் சொல்லிக் கொண்டாள்.

“உடனே இவன், ‘என்னடா? என்ன விஷயம் ஒழுங்கா சொல்லு?’-ன்னு மிரட்டிக் கேட்டதும், அந்தப் பசங்களும் தெரிஞ்ச வரைக்கும் சொல்லியிருக்காங்க. அவ்வளவுதான்?!! அப்போ நம்ம கட்சி வேற ஆட்சியில இருந்ததா?” என்றதும், “என்னை ஏன் சேர்க்கிறீங்க? உங்க கட்சி!” என்று திருத்திக் கொள்ளச் சொன்னாள்.

“சரி” என்று எரிந்து விழுந்தவர், “அதை வச்சிக்கிட்டு… வேற பசங்க… எஜூகேஷனல் செக்ரட்டரி… எஜுகேஷ்னல் டேரைக்டர்… போர்டு ஆளுங்க, அங்கே இங்கே-ன்னு விசாரிச்சு… கைல ஆதாரத்தை எடுத்துக்கிட்டு… என் முன்னாடி வந்து நின்னு… என்னையே கேள்வி கேட்கிறான்?” என்று மூச்சு விடாமல் பேசினார்.

சுடருக்கு, அன்று ராஜாவின் வீட்டிலிருந்து எடுத்து வந்த இந்த வருடத்திற்கான ஆதாரம்தான் நியாபகத்திற்கு வந்தன. இதற்கு முந்தய வருட ஆதரங்களும் ராஜாண்ணா-விடம் இருந்திருக்கும் போல என நினைத்துக் கொண்டாள்

அதற்குள் லிங்கம், “எனக்கு எப்படி இருந்திருக்கும்? நினைச்சிப்பாரு??” என அறையே அசையும் வண்ணம் கோபத்தில் கத்திக் கேட்டார்.

“நீங்க தப்பு பண்ணீங்க. அவங்க தட்டிக் கேட்டாங்க. அவ்வளவுதான! இதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்? இவ்வளவு சத்தம்?” என்று சுடர் படபடவென பேசித் தள்ளினாள்.

அந்தப் பேச்சில் எழுந்த கோபத்தில், “பெத்த பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன்” என்று எச்சரித்துவிட்டு, தன் கோபத்தை அடக்கிக் கொண்டார்.

அதிகமாகக் கோபப்பட்டதாலும், கத்தியதாலும், அழுததாலும் மூன்று பேருமே தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வது போல் அமைதியாக நின்றனர்.

முகத்தின் வியர்வைத் துளிகளைத் துடைத்த லிங்கம், “இதே மாதிரிதான் அன்னைக்கு! வளர்த்த பையனாச்சே-ன்னு ‘வேண்டாம் ராஜா! இதை இப்படியே விட்ரு’-ன்னு சொல்லிப் பார்த்தேன். ம்கூம் அவன் கேட்கவே இல்லை.

கடைசியில ‘உன் அப்பாவும் இதுல சம்பந்தப்பட்டிருக்காரு பேசாம விடு’-ன்னு சொன்னேன். அப்பவும் அடங்கலை” என்று சுடரைப் பார்த்துச் சொன்னார்.

“எதுக்குக் கேட்கணும்? இல்லை எதுக்கு கேட்கணும்?” என்று கத்தியவளை, லிங்கத்தின் கோப முகத்தைக் கண்டு, “சும்மா இரு சுடர். நீ எதுவும் பேசாத” என லதா அமைதி படுத்தினார்.

உடனே, “என் பொண்ணு என்கிட்ட கேள்வி கேட்கிறா, நான் பதில் சொல்றேன். நீ ஏன் நடுவில வர்ற?” என்று மனைவியிடம் கோபப்பட்டார்.

“ம்மா! இருங்க. அவருக்கு ராஜாண்ணா மேலதான் கோபம். என் மேல இல்லை. அவர் முழுசா சொல்லி முடிக்கட்டும்” என்று ஆறுதலாய் சொன்னவள், “மேல சொல்லுங்க” என்று லிங்கத்தைப் பார்த்தாள்.

“எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கோர்ட்க்கு போவேன். சும்மா விட மாட்டேன்-ன்னு ஒரே பிரச்சனை பண்ணி, என் நிம்மதியவே கெடுத்துக்கிட்டு இருந்தான்.

இதுல ஜெகா வேற!? ‘ராஜாக்கு தெரிஞ்சிடுச்சி. என்ன பண்ண? ஏது பண்ண? அவன் முகத்தைப் பார்த்து பேசவே முடியலை’-ன்னு ஒரே புலம்பல்” என்று அலுத்துக் கொண்டார்.

“அதான் ராஜாண்ணா பண்ண தப்பு. நானா இருந்தா நேர கோர்ட்க்குத்தான் போயிருப்பேன். இல்லை, மீடியா-ல நியூஸா போட்ருப்பேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசினாள்.

மீண்டும் அவர் கோபப்படுவாரோ என்று லதா நினைத்தார். ஆனால் அவர் கோபப்படவில்லை. எதையோ யோசித்தபடி சாந்தமாக இருந்தார்.

அவர் அமைதியைக் கண்ட லதா, “அதுக்கப்புறம்… அந்த… ஆக்சிடென்ட்…” என்று முழுதாகக் கேட்க பயந்து போய் வார்த்தைகளை மென்று முழுங்கிக் கொண்டிருந்தார்.

உடனே லிங்கம் முகத்தில் ஒரு சீற்றம் வந்து, “ம்ம்” என்று தலையாட்டியவர், “ராஜா கோபத்தில வெளியே சொல்லுவான். ஜெகா பயத்தில உளறுவான். ரெண்டு பேருமே எனக்குப் பிரச்சனை-ன்னு தெரிஞ்சி, அந்த ஆக்சிடென்ட் பிளான் பண்ணேன்” என்று சினத்துடன் சொன்னார்.

அவர் பேச்சுக்களைக் கேட்கக் கேட்க லதாவிற்கு, ‘இப்படி ஒரு மனிதருடனா வாழ்ந்திருக்கிறோம்’ என்று வெறுப்பாய் இருந்தது. நெடுநாள் நண்பன், வளர்த்த மகன் எப்படி இவர்கள் உயிரை எடுக்க மனம் வந்தது??

அப்படி ஒருவருக்கு தன் நலன் முக்கியமா? லதாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. லிங்கத்தின் அருகே நிற்கக் கூட பிடிக்கவில்லை. நகர்ந்து நின்று கொண்டார்.

மனைவி, மகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், “ஆனாலும் எனக்குச் சந்தோசம்தான்” என சட்டென்று சிரித்தபடி பேசியதும், இருவரும் ‘இதில் என்ன சந்தோசம்?’ என்றபடி குழம்பி நின்றனர்.

“ஏன்னு தெரியனுமா?” என்று கேட்டவர், “அங்க சொல்லவா, இங்க சொல்லவா-ன்னு துள்ளிக்கிட்டு வந்தவனை அடக்கி ஒடுக்கி கட்சி வேலை கூட செய்ய விடாம வீட்ல உட்காரவைச்சிட்டேன்-ல?… அதுக்காக!!” என்று பெருமையாகச் சொன்னார்.

ராஜாவிற்கு அவர் செய்த அநியாயங்களை நினைத்து, ” ச்சே!? என்ன மாதிரியான எண்ணம் இதெல்லாம்?” என்று லதா பொருமினார்.

அதையெல்லாம் லிங்கம் கண்டுகொள்ளவில்லை. அந்த வார்த்தைகளில் எதுவும் அவரைப் பாதித்தது போல் தெரியவில்லை.

அப்படி நின்றவரிடம், “அண்ணி, அணும்மா பத்தி யோசிக்கவே இல்லையா? அவங்க என்ன பாவம் பண்ணாங்க?” என்று சுடர் அமைதியாகக் கேட்டாள்.

“யோசிக்கலை! ஏன்னா… இதைப்பத்தி அணுகிட்ட ஜெகா சொன்னானா, இல்லையா-ன்னு எனக்குத் தெரியாது. கவிகிட்ட ராஜா என்ன சொல்லி வெச்சிருக்கானோ? என்னை வேற என்ன செய்யச் சொல்ற?” என துளியும் குற்றவுணர்வு இல்லாமல் பதில் சொன்னார்.

இப்பொழுதும் சுடரும், ‘ச்சே’ என முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். மேலும், ” நல்லது செஞ்சிருக்கலாமே? இந்தமாதிரி தப்பு செய்யப் போய்தான, இவ்வளவு கேவலமான காரியமெல்லாம் செஞ்சிருக்கீங்க?” என்று முகத்தை அசூயையாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“கட்சியில என்னோட செல்வாக்கு உயரணும். அதுக்கு ஆள்பலமும் முக்கியம்! பணபலம் இருந்தா, ஆள்பலம் தன்னால வந்திடும்!” என அவரது அரசியல் சூத்திரத்தைச் சொன்னார்.

“நல்லது செஞ்சா, நீங்க சொல்ற செல்வாக்கு வராதா?”

“உனக்கு அரசியல் புரியலை. சரி உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். அனு நல்லதுதான செஞ்சா? அவளுக்கு மினிஸ்டர் போஸ்ட் கிடைச்சதா சொல்லு? இல்லையே?!! எனக்கும் ஜெகா-க்கும்தான கிடைச்சது” என்று மகளுக்குப் புரிய வைக்கப் பார்த்தார்.

அதன்பின் சுடருக்கு என்ன கேட்கவென்று தெரியவில்லை. ஏற்கனவே இருந்த தலைவலி கூடுவது போல் தெரிந்தது. அமைதியாக நின்றாள்.

அக்கணம், “அதுக்கப்புறம் நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கிறப்ப, அடுத்து பிரச்சனை கொடுக்க ஒருத்தன் வந்தான்” என லிங்கம் ஆத்திரத்துடன் சொன்னதும், ‘யாரைச் சொல்கிறார்?’ என்ற கேள்வியுடன் சுடர் நிமிர்ந்து பார்த்தாள்.

“யாருன்னு பார்க்கிறியா? கலெக்டர் யாழ்மாறன். வேண்டாம் விட்டுடுன்னு சொல்லியும் கேட்காம, தோண்டித் துருவி இன்னைக்கு இப்படி ஒரு நிலையில நிக்க வச்சிட்டான்” என்று தலையைப் பிடித்துக் கொண்டு புலம்பினார்.

அவரின் நிலைமை கண்டு சுடர் மெல்ல சிரித்ததும், ” ஏன் சிரிக்கிற? அவன் ஜெயிச்சிட்டான்-ன்னு நினைச்சா?” என்று கேட்டதும், “அதான் அரெஸ்ட் ஆகப் போறீங்கள?” என அப்பா என்ற எண்ணம் இல்லாமல் பேசினாள்.

“ஓ!” என்று புருவத்தை உயர்த்திக் கொண்டவர், மகளின் அருகில் சென்று, “அன்னைக்கு ஹாஸ்பிட்டல்-ல நான் சொன்னது நியாபகமிருக்கா சுடர்? என்று அன்பாய் கேட்டார்.

‘என்ன சொன்னார்?’ என யோசிப்பதை விட, ‘இந்தத் தொனி எதற்காக?’ என்ற கேள்வியில் அவளுக்குள் ஒரு பயம் வந்தது

“உங்களைப் பத்தி முடிவெடுக்கிற மனநிலையில இல்லைன்னு சொன்னேன்-ல. இன்னைக்கு முடிவெடுத்திட்டேன். என்ன முடிவுன்னு சொல்லவா?”

அதுவரை இருந்த பேச்செல்லாம் மறைந்து, ‘என்ன முடிவெடுத்திருப்பார்?’ என அப்பா முகத்தையே பார்த்தவளிடம், “நீ உடனே அவனை கல்யாணம் பண்ணிக்கோ” என்று சிரித்த முகமாகச் சொன்னார்.

‘ ஏன் இப்படிச் சொல்கிறார்?’ என்று புரியாமல் விழிவிரித்துப் பார்த்தவளிடம், “இதை எதிர்பார்க்கலையா?” என மீண்டும் ஒரு கேள்வி கேட்டுச் சிரித்தார்.

‘இதில் ஏதோ இருக்கு?’ என மனம் கிடந்து அடித்துக் கொண்டாலும், ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.

சிரிப்பைக் குறைத்துக் கொண்டே, “அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா, மீடியா முன்னாடி என் பேரைச் சொல்லி, இவன்தான் குற்றவாளி-ன்னு சொல்வான். அவன் மேல பயங்கற கோபத்தில இருக்கேன்.

நான் மட்டுமில்ல. ரூலிங் பார்ட்டி-லயும் நிறைய பேர் அவன் மேல கோபமா இருக்காங்க. எப்போ சான்ஸ் கிடைக்கும், அவனை மாட்டிவிடலாம்னு காத்துக்கிட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிற மாதிரிதான் உங்க மேரேஜ் இருக்கும்.

‘ஊழல் மாமனார்! கலெக்டர் மருமகன்!’ ஹெட்லைன்ஸ் நல்லா இருக்குல்ல?” என்று நக்கலாகக் கேள்வி கேட்டார்.

அவர் பேச்சை முழுதும் கிரகித்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தவளுக்கு தலை கிறுகிறுத்தது. ஏற்கனவே திலோவின் பேச்சால் தடுமாறிப் போயிருந்தவளை, இது மேலும் தளர்ந்து போகச் செய்தது.

இருந்தும், “மாறா-தான இந்த ஸ்கேம் வெளியே கொண்டு வந்தது. அப்புறம் எப்படி?” என்று காற்றாகிப் போன குரலில் கேட்டாள்.

“அவனை முழுசா தப்பு சொல்றாங்களோ இல்லையோ?! அவன் பேருக்கு ஒரு களங்கம் வருமில்லையா? மக்களுக்கு அவன் மேல இருக்கிற நம்பிக்கை போகுமில்லையா? அதுதான் வேணும். அதுக்கப்புறம் என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும்” என்றார்.

திலோ நயமாகச் சொன்ன விடயத்தை, இவர் பயங்கொள்ளும் படிச் சொன்னார். அவ்வளவுதான் வித்தியாசம். இருவரின் முடிவையும் கேட்டவள், ஒரேநாளில் ஒட்டுமொத்தமாக உடைந்து போகுமளவிற்கு வந்திருந்தாள்.

முதலிலே ‘ நமக்குள்ள இது சரிவராது’ என மாறன் சொன்னது வாஸ்தவமான வார்த்தை என்று புரிந்தது. அப்படியே அமைதியாக திரும்பி நடந்து, அறையின் ஓரத்தில் உட்கார்ந்துவிட்டாள்.

நொந்து போயிருக்கும் மகளின் நிலையைக் கண்ட லதா, “இப்படி பையன், பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்திட்டு, எப்படி உங்களால நிம்மதியா இருக்க முடியும்?” என்று லதா கேட்டார்.

“நான் எப்படி ஏன் பொண்ணு வாழ்க்கையைக் கெடுப்பேன்? இப்பவும் அவ நினைக்கிற மாதிரி சேனல் ஆரம்பிச்சி கொடுப்பேன். அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்று மகளின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் குரலில் சொன்னார்.

பின், “ஆனா அவன் வேண்டாம். வேண்டவே வேண்டாம். அவன் மட்டும் என் பொண்ண கல்யாணம் பண்ணட்டும், அவன் அப்பா-க்கு நடந்ததுதான் அவனுக்கும்” என்று யாழ்மாறன் மீதிருந்த கோபத்தை வெளிப்படுத்தும் குரலில் கத்தினார்.

“அப்போ??? உங்க பொண்ணு உயிர் மட்டும்தான் உங்களுக்கு முக்கியம். மத்தவங்க உயிர் ஒரு பொருட்டே இல்லை. அப்படித்தானா?”

“ஆமா, எனக்கு என் பொண்ணுதான் முக்கியம். வேற யாரைப் பத்தியும் கவலை இல்லை” என குரலை உயர்த்தியவர், “உன்னைப் பத்தியும்தான். அதனால இனிமே ராஜா-க்காக என்கிட்ட கேள்வி கேட்காத” என எச்சரித்தார்.

“கேட்டா?! என்னையும் உயிரோட விட மாட்டிங்க. அதானா?” என, ‘இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை… அவ்வளவுதானா?’ என்ற குரலில் கேட்டார்.

“புரிஞ்சா சரி” என்று விட்டேற்றியாகச் சொன்னார்.

“கேட்பேன். நான் வளர்த்த பையனுக்காக நான் கேட்காம யார் கேட்பா?” என்று அழுத்தமாகச் சொல்லி, லிங்கம் முன் சென்று நின்றார்.

“உனக்குத்தான் அவன் மேல பாசம். அவனுக்கு உன் மேல துளிகூட பாசம் இல்லை”

அந்த ‘பாசம் இல்லை’ என்ற வார்த்தையைக் கேட்டதும், “அதெல்லாம் இருக்கும்” என்று சிறுபிள்ளை போல் சொன்னார்.

“ரெண்டு வயசிலருந்து நீதான வளர்த்த?… கட்சி வேலையில இருக்கிறவன், ‘சாப்பிடறானா? இல்லையான்னு’ பார்க்கிறது… அவனுக்குப் பிடிச்சது என்னென்னு பார்த்து சமைக்கிறது… அவனுக்கு ஏதாவது ஒன்னுன்னா பக்கத்தில இருந்து கவனிச்சிக்கிறது… கடைசியில அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி, அந்தப் பொண்ணையும் கையில வச்சுத் தாங்கினது… இப்படி ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்து நீதான செஞ்ச? அப்புறம் ஏன் உன்கிட்ட பேசாம இருக்கான்??” என்று கேட்டார்.

விழி அகலாமல் கணவரையே லதா பார்த்துக் கொண்டு நின்றார்.

பின், “நான் சொல்லவா?? அந்த ஆக்சிடென்ட்டுக்கு காரணம் நான்தான்-னு, அன்னைக்கே அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அதான் உன்கூட பேசாம இருக்கான். அம்மா-ன்னு கூட கூப்பிட மாட்டிக்கிறான் அவ்வளவுதான் அவன் பாசம். புரிஞ்சிக்கோ” என்று சொல்லி, ஒதுங்கிக் கொண்டார்.

விழியிரண்டிலும் கண்ணீர் வழிய, ‘ஏன் ராஜா, நீ பேசாம இருக்கிறதுக்கு இவர் சொல்றதுதான் காரணமா?’ என்ற கேள்வியுடன் நின்றார். அவரின் பேரன்பின் ஏக்ககங்கள் எல்லாம் அறையின் பேரமைதியாக மாறியிருந்தது.

அக்கணம்… அந்த அமைதியைக் குலைக்கும் வண்ணம்… படாரென்று அறைக் கதவு திறக்கப்பட்டு… ராஜா உள்ளே நுழைந்தான். அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்காததால் மூன்று பேரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

அதிர்ச்சி, அழுகை, அலைப்புற்ற தோற்றத்துடன் ஆதரவு தேடி ராஜா அருகில் வந்த லதா… லிங்கம் அவனுக்குச் செய்த அநியாயங்களை நினைத்து, மனம் கேட்காமல் பேச முடியாமல் திரும்பினார்.

அந்த நொடியில்… அத்தனை நாட்கள் கழித்து… “ம்மா! ஏன் போறீங்க? இங்கே வாங்க” என்று கண்கள் லேசாகக் கலங்க, கமறிய குரலில் ராஜா பேசினான்.