YALOVIYAM 16.1


யாழோவியம்


அத்தியாயம் -16

ராஜா வீடு

மூவரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். லதா-சுடர் இருவரையும் வற்புறுத்திச் சாப்பிட வைத்திருந்தான். அதன்பின் கட்சி ஆட்கள் வந்ததால், அவர்களிடம் பேச சென்றிருந்தான்.

அவன் சென்றதும், சுடரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு லதா தூங்கச் சென்றிருந்தார். அதன்பின் வரவேற்பறையில் சுடர் மட்டும்தான் இருந்தாள்.

அங்கிருந்த டிவியில் லிங்கம் கைது செய்யப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க… பார்க்க ஒருமாதிரி இருந்தது. உடனே டிவியை ஆஃப் செய்துவிட்டாள்.

மாறன் வேறு அடிக்கடி அழைத்துக் கொண்டிருந்தால்… அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, சோஃபாவில் படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பங்களா

வீட்டின் வாசற்படியில் அமர்ந்திருந்தான். சுடரிடமிருந்து வந்த ‘கொஞ்ச நேரம் கழிச்சி பேசறேன்’ என்ற குறுஞ்செய்தியை மீண்டுமொருமுறை பார்த்தான்.

அவளிடம் பேசாமல் தூங்கவே முடியாது என்ற மனநிலையில் இருந்தவனுக்கு, இன்று எப்படியும் பேசிவிடுவாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

ஆனால் இத்தனை நாட்கள் பேசாமலிருந்துவிட்டு, இன்று பேசலாம் என்று   சொல்பவள், ‘என்ன பேசப் போகிறாளோ?’ என்று ஒருவித அழுத்தமான மனநிலையில் இருந்தான்.

அந்த மனநிலை… முன்னொரு நாளில் அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலுடனும்… பார்த்தாலும் பேசுவாளா? என்ற அச்சத்துடனும்… காத்திருந்த நாளிற்கு அவனை அழைத்துச் சென்றது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 15

ஜார்கண்ட்

ப்ரீலிம்ஸ் முடித்திருந்தான். அந்தச் சமயத்தில்தான், ‘நெக்ஸ்ட் வீக் நம்ம கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ் மீட் இருக்கு. ரீசன் எதுவும் சொல்லாம வந்திடு’ என்று ஆஷிக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

தமிழ்நாடு செல்வதற்கு காரணம் தேடிக் கொண்டிருந்தவன்… இதையே காரணம் காட்டி, ‘நெக்ஸ்ட் வீக் தமிழ்நாடு போறேன்’ என்று பெற்றோரிடம் சொல்லியிருந்தான்.

நண்பர்கள் சந்திப்பு வாரநாட்களில் என்பதால் நிச்சயம் சுடரைப் பார்த்துவிடலாம் என்று நம்பினான்.

ஆனால், பார்த்தால் பேசுவாளா?… என்ன பேசுவாள்?… முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது வேண்டுமென சொன்னால் எப்படி எதிர்வினை புரிவாள்?… என்றெல்லாம் எண்ணி, அவளைப் பார்க்கும் நாளிற்காகக் காத்துக் கிடந்தான்.

யாழோவியம் அத்தியாயம் – 16 தொடர்கிறது…

இதோ இன்றும்… கையிலிருந்த கைப்பேசியைக் கீழே வைக்காமல், அவளுடன் பேசும் நாழிகைக்காக காத்துக் கிடக்கிறான்.

ராஜா வீடு

ராஜா திரும்ப வரும் பொழுது, சுடர் சோஃபாவில் படுத்திருந்தாள். ‘தூங்கிவிட்டாள்’ என நினைத்தவன், லதா தூங்கிவிட்டாரா? என்று பார்க்க அறைக்குள் வருகையில், தூங்காமல் லதா திவானில் அமர்ந்திருந்தார். அவர் பார்வை டிவியிலே நிலைத்திருந்தது.

அந்த நாளின் முக்கிய செய்தி லிங்கம் கைது செய்யப்பட்டது என்பதால், அனைத்து ஊடகங்களிலும் லிங்கத்தின் முகம்தான் தெரிந்தது. மேலும் அவர் குற்றத்தைப் பற்றியத் தொகுப்புகள் வேறு!

கணவரின் பேச்சுகளும், செயல்களும், எத்தனை உயிரைப் பறித்திருக்கிறார் என்ற உண்மையும் அவரை வெகுவாகத் தாக்கியது. 

வாழ்க்கை இப்படியாகும் என கற்பனைகூட செய்து பார்த்ததில்லை என்பதை அவர் முகத்தின் வேதனை பறைசாற்றியது. கணவர் கைது செய்யப்படும் காட்சிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உள்ளே வந்த ராஜா டிவியை பார்த்தான். பின், ‘இதை ஏன் பார்க்கிறீங்க?’ என்பது போல் டிவியை ஆஃப் செய்துவிட்டு, அவர் அருகில் வந்தமர்ந்தான்.

பின் மெல்ல, “தூக்கம் வரலையா-ம்மா?” என்று கேட்டதும், ‘வரவில்லை’ என்பது போல் தலையசைத்தார்.

அதன்பின் ஓர் அமைதி நிலவியதில்…

சுடரை வீட்டில் விட வருகையில், தனக்காக சமைத்து வைத்திருந்தது… வேலையாட்களை மறுத்துவிட்டு, தனக்காக காஃபி போட்டது… ஜூஸை கையில் கொடுத்துவிட்டு, தன் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றது… கையிலிருந்த சிறு காயங்களுக்கு மருந்திட்டது…

இப்படி தன்னால் அவர் மனம் காயப்பட்டிருக்கும் தருணங்களை நினைத்துப் பார்த்தான். என்ன காரணம் சொன்னாலும் பேசாமல் இருந்ததற்கு வருந்தியிருப்பார் என்று தெரியும்.

ஏதாவது கேட்பார்… அப்படிக் கேட்டால், ‘இது இதுனால், இது இப்படி’ என்று ஆறுதலாகப் பதில்கள் சொல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவ்வளவு நேரம் ஆகிய பின்னும் லதா எதுவும் கேட்கவில்லை. மேலும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன்… அவர் எதுவும் தன்னைக் கேட்கப் போவதில்லை என்று புரிந்ததும், நடந்தவைகளைப் பற்றிய பேச்சை அவனே ஆரம்பித்தான்.

மெதுவாக, “ம்மா! ஏற்கனவே சொன்னதுதான். பேசினா எல்லாத்தையும் சொல்வேன். அது உங்களுக்குத்தான் ஆபத்து. அதான் அப்படி இருந்தேன்” என்றான்.

மேலும், “இன்னொன்னு உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதா, நான் பலவீனம் ஆயிடுவேன். அப்புறம் என்னால யோசிச்சி எதையும் செய்ய முடியாது” என, வழக்கிற்காக அவனின் திட்டமிடலைச் சொன்னான்.

லதாவும் அவன் முகத்தைப் பார்த்து, “உனக்கெதுக்கு ராஜா இந்த வேலை. இதெல்லாம் யார் பார்க்கணுமோ அவங்க பார்க்கட்டும். நீ கட்சி வேலை மட்டும் பாரேன்” என்று கோரிக்கை வைத்தார்.

கூடவே, “சுடர் அப்பா-க்கு உன்மேல இருக்கிற கோபத்தை நினைச்சா, பயமா இருக்கு ராஜா. அதான் இப்படிக் கேட்கிறேன்” என்று வெளிப்படையாகவே சொன்னார்.

அவரின் பாசம்… பாசத்தினால் வந்த பயம்… இரண்டும் புரிந்தது. பின், “கண்ணு முன்னாடி தப்பு நடக்கிறப்போ எப்படி விட்டிட்டுப் போக முடியும்? தட்டிக் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு, அவன் குணத்தைக் காட்டினான்.

இந்த முறைகேடு வழக்குப் பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும், இதற்காக செயல்பட்டவர்களின் பங்களிப்பை பாராட்டி வரும் செய்திகளை, லதா பார்க்கத்தான் செய்கிறார்.

ராஜா சொன்னதை வைத்து, இதில் அவன் பங்களிப்பும் இருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் அது வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. பாராட்டும் கிடைக்கப் போவதில்லை.

அதை அறிந்தும் இவ்வளவு தூரம் செயல்பட்டிருக்கிறான் என்ற அவன் குணம், அவர் வேதனையைக் குறைத்தது. அது அவர் முகத்திலும் தெரிந்தது.

அதைக் கண்டவன், “என்ன-ம்மா?” என்று கேட்டான். முதலில், “ஒன்னுமில்லை” என்றார். பின், “கவனமா இருக்கணும்” என்றார்.

‘சரி’ என்று தலையாட்டியவன், “சுடருக்கு என்னாச்சு? வீட்லயே ஒருமாதிரி இருந்தா?” என்று கேட்கையில், சகஜமாக இருவருக்கும் இடையே பேச்சு தொடங்கியது.

அவன் வருவதற்கு முன் லிங்கம் நடந்து கொண்டது… பேசியது… என அனைத்தையும் லதா கொட்டித் தீர்த்தார். கூடவே மாறன் குடும்பம் பற்றி ராஜாவிடம் கேட்டறிந்தார்.

பின், “சுடர் விஷயமா, அவ அப்பா அவர் முடிவை சொல்லிட்டாரு. நானும் யோசிச்சுப் பார்த்தேன். எனக்கென்னமோ இது சரியா வராதுன்னு தோணுது” என்று, தன் முடிவைச் சொன்னார்.

“ஏன்-ம்மா இப்படிச் சொல்றீங்க?”

“அந்தப் பையனோட அப்பா இல்லாததுக்கு காரணம்… சுடர் அப்பாதான்! அப்படி இருக்கிறப்ப, அந்த வீட்ல போய் இவ வாழ முடியுமா?”

“ம்மா! அந்தப் பையன் இப்படி யோசிக்கிறவன் இல்லை…” என்று ராஜா தொடங்கும் போதே, “நான் அந்தப் பையனை சொல்லலை. பொதுவா சொல்றேன்” என்றார்.

மேலும், “கல்யாணம் முடிஞ்சப்புறம்…. சொந்தக்காரங்களோ, அந்தப் பையனோட வேலை பார்க்கிறவங்களோ… இதைப்பத்தி பேசினா… இப்படி யோசிச்சா…… நம்ம சுடர் தாங்குவாளா? அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த வலி அவளுக்கு வேண்டாமே?!” என ஒரு அம்மவாக யோசித்துப் பேசினார்.

ராஜா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தான்.

லதாவே, “அதோட இன்னொரு பயமும் இருக்கு” என்றதும், “என்ன பயம்?” என்று கேட்டான்.

“இந்தக் கல்யாணம் நடந்தா, ‘அந்தப் பையனோட அப்பாக்கு நடந்ததுதான் அவனுக்கும்’-ன்னு சுடர் அப்பா சொல்றாரு. அப்புறம் எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?

சரி… இவர்தான் வெளியே இல்லையேன்னு கல்யாணத்தை நடத்தினாலும்… விஷயம் தெரிஞ்சி… கோபத்தில அந்தப் பையனை ஏதாவது செஞ்சிட்டா?

வேற இடத்திலருந்து வந்திருக்காங்கனு சொல்ற. அங்கருந்து இங்க வந்து… வீட்டுக்காரரை இழந்திட்டு அந்தம்மா நிக்கிறாங்க. பையனுக்கும் ஏதாவது ஆச்சுன்னா, அவங்க தனியா-ல நிக்கணும்? அது பாவமில்லையா?

உன்மேல… அந்தப் பையன் மேல இருக்கிற கோபம், இந்த ஜென்மத்தில போகாதுன்னு சொல்றாரு… அதுக்கப்புறமும் நாம சுடருக்காக மட்டும் யோசிக்க கூடாது. அந்தப் பையனுக்காகவும் யோசிக்கணுமில்லையா?

உனக்கு ஏதாவது ஒன்னுன்னா… எனக்கு எப்படிக் கஷ்டமாயிருக்கும்??! அதேமாதிரிதான அந்த பையனோட அம்மாக்கும் இருக்கும்…

அதான் ராஜா, இது வேண்டாம்-னு சொல்றேன். சுடர்கிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவோம்” என ஒரு சக மனுஷியாகவும் முடிவெடுத்தார்.

லிங்கத்தின் எச்சரிக்கைகள்… அவர் மீதிருக்கும் கொலை குற்றச் சாற்றுக்கள்… அவரது கோபங்கள்… எல்லாம் சேர்ந்து லதாவை இப்படித்தான் பேச வைத்தது. இவ்வளவுதான் யோசிக்க வைத்தது.

அவர் பேசி முடிக்கும் வரை ராஜா குறுக்கிடவேயில்லை. கடைசியில், “முதல அவ வேலை பார்க்கட்டும். படிச்சிட்டு சும்மாவே இருக்கா…” என்று சொல்லி ராஜாவைப் பார்க்கும் பொழுது, அவன் கண்கள் கலங்கியிருந்தன.

பதறிப்போய், ‘ஏன்? என்னாச்சு?’ என்ற கேள்வி லதாவிற்கு வந்தது. அதைக் கேட்க நினைக்கையில், அவனின் கலக்கம் எதற்கு என்று புரிந்துவிட்டது.

அதெப்படி புரியாமல் போகும்? அவன் பேசாமல் இருந்த பொழுது, ‘எதையோ மறைக்கிறான்?’ என்று புரிந்த லதாவிற்கு… இது எப்படி புரியாமல் போகும்?

ஆம் புரிந்துவிட்டது. தன் பேச்சிலிருந்த சில வார்த்தைகள்… அவனுக்கு, அவனது இழப்புகளை நினைவு படுத்தியிருக்கும் என தெளிவாகப் புரிந்துவிட்டது.

அந்த விபத்திற்குப் பின், அவன் அழவேயில்லை. அப்படிச் சொல்ல முடியாது. அவன் அழுதிற்கலாம். ஆனால் அவன் அழுது அவர் பார்த்ததில்லை.

இப்பொழுது ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரின் அளவு கூடிக் கொண்டே போனது.

அவனது இழப்பிற்காக வருந்தப் போகிறான் என்று தெரிந்தது. உடனே, அவன் அழுதால் தன்னால் தாங்க முடியுமா? என்ற கேள்வி வந்தது. நிச்சயம் தாங்க முடியாதுதான்.

ஆனால் அடுத்த நொடியே அந்தக் கேள்வியைத் தூக்கிப் போட்டுவிட்டார். காரணம்? தன்னைத் தவிர வேறு யாரிடமும் அவன் மன வேதனைகளைச் சொல்லமாட்டான். சொல்லி அழமாட்டான்.

தன்னிடம் மட்டும்தான் அதையெல்லாம் பகிர்ந்து கொள்வான்!

ஆதலால் தன் துயரங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘திடமாக இருந்து, அவனுக்கு தைரியம் சொல்’ என்று மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவனை, ‘எப்படித் தேற்ற?’ என்று ஆறுதல் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கையில், “ம்மா” என்று குரலில் நடுக்கத்துடன் அழைத்தான்.

“என்ன ராஜா?” என்று அவனைப் பார்த்தார்.

கண்கலங்க, “ம்மா” என்று மீண்டும் அழைத்து, லாதவைப் பார்த்தான். அவன் முகம்முழுதும் வேதனையின் சாயல் மட்டுமே இருந்தது.

லதாவிற்கு, என்ன பேசி அவனைச் சமாதானம் செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை. இருந்தும், “சொல்லு ராஜா” என்றார்.

“ம்மா கஷ்டமாயிருக்கு” என்ற போது அவன் குரல் உடையத் தொடங்கியது.

அவன் கைகளில் தட்டிக் கொடுத்தபடி, “ம்ம்ம்… என்ன சொல்லணுமோ சொல்லு” என்றார்.

“ம்மா….” என்றழைத்து, அத்தனை நாட்கள் உள்ளுக்குள்ளே அடைத்து வைத்திருந்த வேதனையை சொல்ல ஆரம்பித்தான்.

“இந்த கேஸ்-ல நிறைய பேர் இறந்திருக்காங்க… எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில கேஸோட தொடர்பு இருக்கும். ஆனா, அம்மா கவி மட்டும்தான்… எதுவுமே தெரியாம உயிரை விட்ருக்காங்க?” என்று புலம்பினான்.

கமறிய குரலில், “அம்மா, கவி… ரெண்டு பேருமே… ப்ச் பாவம்-ம்மா!” என்று வருந்தியவன், “என்னால முடியலை… கஷ்டமாயிருக்கு…” என்று கண்ணீர் வடித்தான்.

அவன் அழுகிறான் என்றதுமே, லதாவிற்கும் கண்களில் நீர் கோர்த்தது. ஆறுதல் வார்த்தைகளே வரவில்லை. ‘எப்படித் தேற்ற?’ என யோசித்தவர், மெல்ல அவனைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.

மேலும் விழிநீரை உள்ளிளுத்துக் கொண்டு, “நீ கவிகிட்ட எதுவும் சொல்லலையா?” என்று கேட்டார்.

“இல்லை-ம்மா! அந்த மாதிரி நேரத்தில… இதைச் சொல்லி அவளை ஏன் கஷ்டப்படுத்தணும்னு சொல்லவேயில்லை… அவ கவனிச்சிக் கேட்டப்பக்கூட, நான் எதுவும் சொல்லலை…” என்று பேச்சை நிறுத்தினான்.

அவன் வேதனை புரிந்து ஆறுதலாகத் தலை கோதி, “ம்ம்ம்… நானும் அதைக் கவனிச்சேன். ஆனா கேட்கலை” என்று மட்டும் சொன்னார்.

அன்றைய கோர காட்சிகள் நியாபகத்தில் வந்ததும், “இந்தாளுக்கு கோபம் என்மேலதான இருந்திருக்கும்… அதை என்மேல மட்டும் காட்டியிருக்கலாமே… அதைவிட்டு… இப்படி ஏன்…?”என்று நடுங்கிய குரலில் சொல்லி, அவர் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

எல்லாம் சொல்லி அழுதால் பலவீனமாவேன் என்று சொன்னானே… அந்த பலவீனத்தை அடைத்திருந்தான். இன்னும் நன்றாக அவர் மடியில் புதைந்து கொண்டு, ” கவி நியாபகமாவே இருக்கு” என்று கண்ணீரில் கரைந்தான்.

அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் அழாதே என்று சொல்லவில்லை. அவன் மனதின் பாரம் எல்லாம் சொல்லி அழட்டும் என்று விட்டுவிட்டார்.

இன்னும் இன்னும் அழுது கொண்டேதான் இருந்தான்.

வேறு என்ன சொல்லி அவனைத் தேற்ற என்று தெரியாமல், “தூங்கு” என்று தட்டிக் கொடுக்க மட்டும் செய்தார். நிரம்ப நேரம் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

மனதின் பாரத்தை பகிர்ந்து கொண்டது… கண்ணீர் விட்டு அழுதது… இதோ இத்தனை நாட்களாக வேண்டாம் என மறுத்து வந்த ஆறுதல், அரவணைப்பு… எல்லாம் சேர்ந்து, அவன் சோர்ந்திருந்த விழிகளை மூட வைத்தது.

அப்படியே கண்ணயர்ந்தான்.

லதாவும் திவானின் தலைப் பகுதியில் சாய்ந்து கண் மூடிக் கொண்டார்.

அவரும் சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார்.

வெகு நேரத்திற்குப் பின், ராஜாவிற்கு முழிப்பு தட்டியது. எழுந்து லதாவைப் பார்த்தவன், அவர் நன்றாக உறங்குகிறார் என்றததும், வெளியே வந்தான்.

அங்கே… சுடர் தூங்காமல் எழுந்து அமர்ந்திருந்தாள்.