YALOVIYAM 2.1


யாழோவியம்


அத்தியாயம் – 2

சுடரின் காதலன்?

காதலைப் பரிமாறிக் கொண்டதற்குப் பின், இருவரும் கைப்பேசியில் பேசிக் கொள்வதுதான் வழக்கம். எங்கேயும் சந்தித்துப் பேசுவது அரிது.

சுடரின் கல்லூரி படிப்பு முடியும் வரை… ராஜாவைத் தவிர, வீட்டில் யாருக்கும் தங்கள் காதல் தெரிய வேண்டாம் என்ற முடிவுடன் இருக்கின்றனர்.

இருவரும் அருகருகேதான் இருக்கிறார்கள். இருந்த பொழுதிலும், கைப்பேசி வழியே மட்டும்தான் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் சந்தித்துப் பேசாததிற்கு, இன்னும் சில காரணங்களும் உண்டு.

இதோ இன்று கைப்பேசி வழியே விடயத்தைச் சொல்லியதும் கன்னாபின்னாவென்று கத்தினான். ‘தான் எதுவும் செய்யப் போவதில்லை. ராஜாண்ணாவைத் தேர்தல் வேலையைச் செய்யச் சொல்லப் போகிறேன்’ என்று சொன்னதற்குப் பின்பும் கத்துவது குறையவில்லை.

ராஜாவின் இழப்பு, அவனது இறுக்கம் பற்றிச் சொல்லி, ‘இந்த நேரத்தில் ராஜாண்ணா கூட இருக்க வேண்டும். இருக்கப் போகிறேன்’ என்று சொல்லி முடித்திருந்தாள்.

அப்படிச் சொன்னதின் பின்பு காதலன் அமைதியாகிவிட்டான். ஏனென்றால், ராஜாவிற்கும் சுடருக்கும் இருக்கும் பாசப் பிணைப்புப் பற்றி அவனுக்குத் தெரியுமென்பதால்.

முழுமனதுடன் சம்மதித்தானா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் அவன் கத்தவில்லை என்றதும், அதற்குமேல் சமாதானம் செய்ய சுடர் முயற்சிக்கவில்லை.

அடுத்த நாளிலிருந்து லிங்கம் கட்சிப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். முழுமூச்சாக மக்களைச் சந்தித்தல், தேர்தல் பிரச்சாரம், சுற்றுப் பயணம் என்று ஓய்விற்கோ, எதைப் பற்றி யோசிப்பதற்கோ நேரமின்றி பறந்து கொண்டிருந்தார். 

ராஜா?

ராகவன் சொல்லிச் சென்றதலிருந்து, ‘எலெக்ஷன் ரிலேடட் ஒர்க் பார்க்கிறியா ராஜாண்ணா??’ என சிலமுறை சுடர் கேட்டுப் பார்த்தாள். பதில் சொல்லமால் இறுக்கமாகவே இருந்தான்.

அவன் நலனிற்காக, ‘சாப்பிடு, எழுந்திரி’ என வற்புறுத்திச் சொன்னவளால், கட்சி நலனிற்காக எதையும் அழுத்திச் சொல்ல முடியவில்லை. அதுவும் அவனின் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் சொல்ல மனமேயில்லை.

இருந்தும், அவனை அப்படியே விட்டுவிட்டால் யாரிடமும் பேசாமல் இறுக்கமாகவே இருந்துவிடுவானோ என்று பயந்தாள். எனவே லிங்கத்திடம் சொல்லி, அவனது அணி உறுப்பினர்களை வீட்டிற்கு வரவழைத்து அவனிடம் பேச வைக்க முயற்சித்தாள்.

‘எப்போடா ராஜாவிடம் பேசுவோம்’ என்று காத்துக் கிடந்தவர்கள், அவனிடம் ‘இது எப்படிப் பண்ண? இந்தப் பதிவிற்கு எப்படி பதிலடி கொடுக்க? இந்த புலன பகிர்வு சரியா இருக்குமா?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

கடைசியில் வேறுவழியின்றி ராஜா வாய் திறந்தான். ‘எதையெதை பகிர வேண்டும்? எந்த இடைவெளியில் பதிவுகள் இருக்க வேண்டும்?’ என அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கத் தொடங்கினான்.

அதே சமயத்தில் சிலநேரங்களில் யாரையும் அருகில் வரவிடமாட்டான். அத்தகைய தருணங்களில், சுடர் அவனைத் தேற்றி, தேர்தல் வேலைகளில் ஈடுபட வைத்தாள்.

அவள் காதலனைப் பற்றித் தெரியும் என்பதால், ‘வேண்டாம் சுடர்! நீ இதுல இன்வால்வ் ஆகாத’ என்று ராஜா சொல்லிப் பார்த்தான்.  ‘நான் அவன்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அதனால நீ இதெல்லாம் நினைக்காத!’ என பதில் சொல்லி, சமாளித்துவிடுவாள்.

இப்படியே தினசரிகளின் தினங்கள் தீர்ந்து போய் கொண்டிருந்தன. தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்திருந்தது. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது. அதில் ஒன்று ஆட்சி மாற்றம். லிங்கம், ராஜா சார்ந்திருந்த கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தது.

ஆட்சியைப் பிடித்த கட்சி வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத கட்சி, தோல்விக்கான காரணம் குறித்து அலசிக் கொண்டிருந்தார்கள்.

சுற்றுப் பயணம், பிரச்சாரம், தேர்தல், வாக்கு எண்ணிக்கை என பரபரப்பாய் இருந்தது போய், புயல் முடிந்தால் ஓர் அமைதி வருமே? அதுபோல் கட்சிகளும் ஊடகங்களும் இருந்தன.

ஜெகதீஷ் விபத்து பற்றி? இப்பொழுதும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த வேகம் இல்லாமல், விசாரணை மந்தமாகச் சென்று கொண்டிருந்தது.

லிங்கம்? இவரது கட்சி தேர்தலில் தோற்றிருந்தாலும், இவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். தொகுதிப் பணிகள், கட்சி வேலைகள் என்று இவருடைய நாட்கள் நகர்ந்தன.

லதா? அனுசியா, ஜெகதீஸ் மறைவு இவரைப் பாதித்ததை விட கவிதாவின் மறைவு மிகவும் பாதித்தது.  காரணம், திருமணம் முடிந்து வந்ததிலிருந்து இவருடன் அவள் இருந்த நேரங்கள் அதிகம் என்பதால், அவளது நினைவிலிருந்து மீள முடியாமல் தவித்தார்.

‘தானே இப்படி என்றால், ராஜா எப்படித் தவிப்பான்?’ என்ற எண்ணம் வேறு அவரை வாட்டி எடுக்கும்.  என்றைக்கு அந்தத் தவிப்பையெல்லாம் தன்னிடம் வந்து மனம்விட்டு சொல்லி அழுவான் என்று காத்திருந்தார். ஆனால் இதுவரைக்கும் அப்படி ஒரு நாள் வரவேயில்லை.

‘சரி! வேதனைகளைத் தனக்குள் வைத்துக் கொள்கிறான்… தைரியமாகத் தாங்கிக் கொள்கிறான்’ என்று மனதைச் சமாதானப்படுத்த நினைத்தவரால், அதுவும் முடியவில்லை.

காரணம், அவன் ஒதுக்கம். சுடருடன் பேசுவது போல் மற்ற யாரிடமும் அவன் பேசவில்லை. ஆனால் மற்றவர்களிடம் பேசும் அளவுகூட லதாவிடம் பேசவில்லை. அவரே பேசினாலும், ஒன்றிரண்டு வார்த்தைகளில் முடித்துக் கொள்வான்.

கவிதாவின் எதிர்பாரா மறைவு… ஏனென்றே தெரியாமல் ராஜாவின் புறக்கணிப்பு… இரண்டும் சேர்ந்து வதைத்து, வருத்தத்தைத் தருவதிலே இவருடைய நாட்கள் கழிகின்றன.

சுடர்? அனும்மா, ஜெகா-ப்பா, கவி அண்ணி என்று உறவாய் பழகியவர்களின் இழப்பு தந்த வேதனையிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை மீட்டுக் கொண்டு வந்திருந்தாள்.

மேலும் இவளின் படிப்பு முடிந்திருந்தது. ஆனாலும் எதிர்காலம் பற்றி யோசிக்க முடியாமல், அம்மாவைத் தேற்றுவதிலே இவளின் நாட்கள் செல்கின்றன.

ராஜா? இத்தனை மாதங்களில், சில நாட்கள் தினா-வுடன் சேர்ந்து கட்சி அலுவலகத்திற்குச் செல்வான். வெகு சிலநாட்கள் சுடர் வற்புறுத்தி அழைத்து வந்து விடுவாள். அவ்வளவுதான்!

முன்புபோல் ஒரு ஒழுங்கு இல்லாமல்… கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாமல்… கட்சி ஆட்களுடன் சரிவர பேசாமல்… இப்படியே இவன் நாட்கள் கடக்கின்றன.

இதுகுறித்து கட்சி மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு மூன்று முறை ராஜாவைக் கூப்பிட்டுப் பேசினார்கள். கண்டிக்கவும் செய்தார்கள். ஆனால் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதுபோல பேசத்தான் இன்றும் கட்சித் தலைவர் அழைத்திருப்பதால், கட்சி அலுவலகம் வந்திருக்கிறான். நேரம் ஒன்பதைத் தாண்டிச் சென்றதால் பெரிய அளவில் கட்சி உறுப்பினர்கள் யாருமில்லை.

கட்சி வளாகத்திற்குள் நுழைந்து… கார் நிறுத்துமிடத்திற்கு வந்ததும், “நீ காருக்குள்ள இருக்கியா? நான் போய் பார்த்திட்டு வந்திடுறேன்” என, தன்னுடன் வந்திருக்கும் சுடரைப் பார்த்துக் கேட்டான்.

“பரவாயில்லை ராஜாண்ணா! வெளியவே நிக்கிறேன்?” என்று சொல்லி, கார் கதவைத் திறந்து இறங்கினாள்.

ராஜாவும் இறங்கி, “எதுக்கும் கீ வச்சிக்கோ” என்று கார் சாவியை அவளிடம் கொடுக்கையில், “வா-ண்ணே” என்று அழைத்துக் கொண்டு தினா வந்து நின்றான்.

“தலைவர் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காறா?” – ராஜா.

“இல்ல-ண்ணே! ராகவன் சாரோட மீட்டிங் போய்க்கிட்டு இருக்கு” என்ற தினா, “நீ என்ன சுடர் இங்க வந்திருக்க?” என்று கேட்டான்.

“நீங்க ‘தலைவர் கூப்பிடறாருன்னு’ ஃபோன் போட்டப்போ, நானும் கூட இருந்தேன். வர மாட்டேன்னு இருந்தாங்க. பிடிச்சி இழுத்திட்டு வந்திருக்கேன்” என்று சுடர் சொல்லியதும், “ஏண்ணே இப்படி?” என தினா நொந்து கொண்டான்.

‘யாரைப் பற்றியோ பேசுகிறார்கள்?’ என்கின்ற ரீதியில் ராஜா நின்று கொண்டிருந்தான்.

“இப்ப-கூட உன்னை வார்ன் பண்ணத்தான் தலைவர் கூப்பிட்டிருப்பாரு. கட்சி வேலைய ஒழுங்கா பாரு-ண்ணே” என்று ராஜா மேல் அக்கறை எடுத்து தினா பேசினான்.

அதன்பின்பும், ‘எனக்கென்ன?’ என நின்றவனைப் பார்த்த சுடர், “இப்ப கூட்டிட்டுப் போங்க தினா. அப்புறமா பேசிக்கலாம்” என்றதும், அவர்கள் இருவரும் தலைவரைப் பார்க்கச் சென்றார்கள்.

அவர்கள் போனதும், காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டு, அன்றைய செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தாள். சற்று நிமிடங்களிலே சுற்றம் மறந்து செய்திகளில் மூழ்கியிருந்தாள்.

அக்கணம், தலைவருடன் சந்திப்பு முடிந்து வீட்டிற்குச் செல்ல வந்த ராகவன் கண்களில் சுடர் நிற்பது தெரிந்தது. “இந்தப் பொண்ணு?” என முணுமுணுத்து யோசித்தபடியே நின்றுவிட்டார்.

“லிங்கம் ஐயா பொண்ணுதான்” என்றார் ராகவனின் உதவியாளர். 

“எதுக்கு இங்கே வந்து நிக்குது?”

“ராஜா கூட வந்திருக்கும்”

“ராஜா கூடவா?” என்று கேட்டதும், “அப்பப்போ ராஜாவை ட்ராப் பண்ண வரும். வெளியேவே நின்னுட்டு போயிடும். இன்னைக்குதான் புதுசா உள்ளே வந்து நிக்குது” என்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.

“ஓ” என்று வெளிப்படையாகச் சொன்னவர், ‘தேர்தலுக்காகச் செய்த ஒரு விடயம் இன்னும் தொடர்கிறதா?’ என்று உள்ளுக்குள் யோசிக்க ஆரம்பித்தார்.

உடனே தன் உதவியாளரை காத்திருக்கச் சொல்லிவிட்டு, சுடரை நோக்கிச் சென்று, “என்னம்மா? படிப்பு எப்படி போய்க்கிட்டு இருக்கு?” என்று கேட்டார்.

ஏற்கனவே அவருடன் அறிமுகம் இருப்பதால், “படிப்பு முடிஞ்சது” என்று இயல்பாகச் சொன்னாள்.

“அதான் இப்ப கட்சி ஆபிஸ் வர்ற அளவுக்கு டைம் இருக்கா?” என நக்கலாகக் கேட்டதும், ‘இப்படிப் பேச என்ன அவசியம் வந்தது?’ என்பது போன்று சுடர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“லிங்கம், ஜெகதீஷை வச்சி ராஜா கட்சிக்குள்ள வந்தான். இப்போ அவன் பேரைச் சொல்லி, நீ வரப் பார்க்கிறியா?”

அவளைப் பற்றிச் சொல்லும் பொழுது கூட வராத கோபம், ராஜாவைப் பற்றிச் சொன்னதும் வந்துவிட்டது. ஆனாலும் அமைதியாக நின்றாள்.

“அப்பறம்!! கட்சி உறுப்பினர் அட்டை வாங்கியாச்சா?” என்று ஒருமாதிரி குரலில் கேட்டதும், சுடர் பிடித்துக் கொண்டாள்.

“வாங்கலை. வாங்கவும் மாட்டேன். இப்பவும் ராஜாண்ணா-காகத்தான் வந்தேன். அப்புறம் ராஜாண்ணா இதுக்காகவே படிச்சி, இஷ்டப்பட்டுக் கட்சிக்குள்ள வந்திருக்காங்க. யாரோட பேரை வச்சும் வரலை” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

அவள் பேச்சைக் கேட்டதும், கொஞ்ச நேரம் ‘என்ன பேச?’ என்று யோசித்தார். பின், ‘இவகிட்ட எதுக்குத் தேவையில்லாம பேசிக்கிட்டு?!’ என நினைத்த ராகவன், எதுவும் பேசாமல் தன் காரை நோக்கிச் சென்றுவிட்டார்.

‘எப்படி அன்னைக்கு ஒருமாதிரி, இன்னைக்கு ஒருமாதிரி பேச முடியுதோ?’ என்று முணுமுணுத்துக் கொண்டே, மீண்டும் செய்திகளில் கவனத்தைச் செலுத்தினாள்.

அந்த நேரத்தில் வீட்டுக் கிளம்பிக் கொண்டிருந்த லிங்கம், மகள் நிற்பதைப் பார்த்ததும், அவள் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அப்பா வருவதைக் கண்ட சுடர், “ப்பா! நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலையா?” என்று கேட்டாள்.

‘இல்லை’ என்று தலையசைத்தவர், “நீ என்ன இங்கே?” என்று கேட்டதும், “ராஜாண்ணா கூட வந்தேன்” என்றாள்.

“ஓ!” என்றவர், “நான் வீட்டுக்குக் கிளம்புறேன். நீ என்கூட வர்றியா? இல்லை, ராஜா ட்ராப் பண்ணுவானா?” என்று கேட்டதற்கு, “நான் ராஜாண்ணா கூட வர்றேன்-ப்பா” என்றாள்.

“சரி! பார்த்து வாங்க. நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு, லிங்கம் கிளம்பிச் சென்றதும், மீண்டும் செய்திகள் படிக்க ஆரம்பித்தாள்.

அவர் சென்ற சில நொடிகளில் கையில் கோப்புகளுடன் ராஜா வந்து, “கார் கீ கொடு” என கேட்டு, அவள் முகத்தைப் பார்த்ததும், ஏதோ சரியில்லை எனத் தெரிந்ததால், “ஏன் ஒருமாதிரி இருக்க?” என்றான்.

கார் சாவியைக் கொடுத்தபடியே, “உனக்கு என்னாச்சு ராஜாண்ணா?” என வழக்கமாகக் கேட்கும் கேள்வியைச் சுடர் கேட்டதும், கார் கதவை மூடிவிட்டு, ‘எனக்கு என்னாச்சு?’ என்ற பார்வை கேள்வியுடன் நின்றான்.

“யார்கூடவும் சரியா பேச மாட்டிக்கிற! எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டிக்கிற! உனக்கு பாலிடிக்ஸ்-ல இன்ட்ரஸ்ட் உண்டு! அதுக்காக பொலிடிக்கல் சயின்ஸ் எடுத்துப் படிச்ச!?

ஆனா, இப்போ கட்சி ஆபிஸ் வர்றதுக்கே, ஒருத்தர் பிடிச்சி தள்ள வேண்டியதா இருக்கு. அது ஏன்?” என்று, இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவனிடம் கேட்கும் கேள்விகளைக் குழப்பத்துடன் கேட்டு நின்றாள்.

எப்பொழுதும் போல் அதற்குப் பதில் சொல்லாமல், “நீ இங்க நிக்கிறதுக்கு, யாராவது ஏதும் சொன்னாங்களா?” என கேட்டான். கூடவே, “இப்ப இருந்தது… ம்ம்ம் ராகவன். அவர் ஏதும் சொன்னாரா?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

“ம்ம்! உறுப்பினர் அட்டை வாங்கிட்டியா-ன்னு கேட்டாரு” என்றவள், “பட் நான் அதுக்காகக் கேட்கலை” என்றதும், “சரி எதுக்காக?” என்று சாதாரணமாகக் கேட்டான்.

“கண்டிப்பா நடந்ததை நினைச்சி கஷ்டமா இருக்கும். ஆனா அந்தக் கஷ்டத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிக்காம, யார்கிட்டயாவது சொல்லி அழுதிடேன் ராஜாண்ணா. அது…” என்று கலக்கத்துடன் சொல்லுகையிலே, “அண்ணே ஒரு நிமிஷம்” என சற்று தூரத்திலிருந்து தினாவின் அழைப்பு வந்தது.

திரும்பி தினாவைப் பார்த்து, “என்னடா?” என சலிப்புடன் ராஜா கேட்டதற்கு, “இங்கே வா-ண்ணே. பேசணும்” என்றதும், “இரு! வந்து உன்கிட்ட பேசறேன்” என்று சுடரிடம் இலகுவாகச் சொன்னான்.

மேலும், கலக்கத்துடன் நிற்பவளைப் பார்த்து, “கட்சி உறுப்பினர் அட்டை வேணும்னு டிசி-கிட்ட சொல்லு! வாங்கிக் கொடுத்திட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான்!” என அவள் காதலன் பற்றிக் கேலி செய்ததும், சுடரின் முகம் கொஞ்சம் இலகுவானது.

கண்களில் ஒரு சிறு புன்னகையுடன் அதைக் கண்டவன், தினாவிடம் பேசச் சென்றான். அவன் சென்றதும் காரில் ஏறி அமர்ந்த சுடர், போகின்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முன்பெல்லாம் இப்படித்தான் பேசுவான். அந்த நிகழ்விற்குப் பின் வந்த இறுக்கத்தில், சாதாரண பேச்சிற்கே பஞ்சமாகிப் போயிருந்தது. இப்பொழுது மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறான். மெல்ல மெல்ல நடந்த நிகழ்விலிருந்து மீண்டு வருகிறான் என்ற விடயம் அவள் கலக்கத்தைக் குறைத்தது.

மேலும் மீண்டு வருபவனிடம் போய், நடந்ததைப் பற்றிப் பேசக் கூடாது… ‘அழுதிடு’ என்று சொல்லக் கூடாது… வேறேதும் கேள்விகள் கேட்கக் கூடாது… என்று முடிவெடுத்ததும், சுடர் முகம் தெளிவானது.

சில நொடிகள் எதையும் நினைக்காமல் அமைதியாக இருந்த சுடருக்கு, ‘கட்சி உறுப்பினர் அட்டை’ என்றதை நினைத்ததும், இதழ்களின் ஓரத்தில் ஒரு சிறு முறுவல் வந்தது.

காரணம்? அது காதலனுடனான முதல் சந்திப்பை நியாபகப்படுத்தியதால். காதலன் நியாபகம் அவளது கல்லூரி காலத்திற்கு அவளை அழைத்துச் சென்றது.