YALOVIYAM 4.1


யாழோவியம்


அத்தியாயம் – 4

‘இங்கே நின்று பேச வேண்டாம்’ என நினைத்த மாறன், “அவங்களை உள்ளே அனுப்புங்க” என்று காசியிடம் சொல்லிவிட்டு, அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்.

அந்தப் பெண்ணிற்கு கொஞ்சம் தண்ணீர் தந்து, ‘அழாம போங்க. எல்லா விவரத்தையும் சொல்லுங்க’ என சொல்லி, மாறனிடம் பேச அனுப்பி வைத்தார்.

உள்ளே வந்தவரைப் பார்த்த மாறன், “உட்காருங்க” என்று முன்னிருந்த இருக்கையைக் காட்டினான்.

தயங்கி நின்றவர், “ஐயா இது” என அழுது கொண்டே மனுவை நீட்டினார்.

“முதல உட்காருங்க-ம்மா” என்றதும், இருக்கையில் அமர்ந்து கொண்டு மீண்டும் மனுவை அவனிடம் கொடுக்கப் பார்த்தார்.

“வச்சிருங்க!” என்று வாங்க மறுத்தவன், “எனக்குக் கொஞ்சம் விவரம் வேணும். அழாம பேசுங்க. அப்போதான் என்னால ஏதாவது உதவி பண்ண முடியும்” என்றான்.

வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “சரிங்கய்யா” என்றார்.

“இன்ஜினீரியங் படிச்ச பையன் சரியா?” என்ற பதில் தெரிந்த கேள்வியோடு ஆரம்பித்தான்.

“ஆமாங்க”

“எங்கே?”

“எங்க ஊரு தெண்ணூர்-ங்க. ஆனா, என் புள்ள படிச்சது சென்னையிலதான்”

“ஓ!” என்றவன், “வேலை ஏதாவது…?” என்று கேட்டான்.

“இல்லை-ங்க. வேல பார்க்கல”

“சரி! எதுக்காக உங்க பையன் போலீஸ் ஸ்டேஷன் போகணும்?” என்று பிரச்சனைக்குள் வந்தான்.

“போலீஸ்காரங்க-தான் கூட்டிட்டுப் போனாங்க” என்று சொல்லி, மகனின் முடிவை நினைத்து மீண்டும் அழுதார்.

“அரெஸ்ட் பண்ணாங்களா? அதைத்தான் இப்படிச் சொல்றீங்களா?” என்று விளக்கமாகக் கேட்டான்.

சேலை முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடியே, “ஆங்! அப்டித்தான் சொல்றாக” என்றார்

“எதுக்கு அரெஸ்ட் பண்ணாங்க?” என கைது செய்யப்பட்டதன் காரணம் கண்டறிய முயற்சித்தான்.

“அது தெரியலையே” என்று மீண்டும் அழுதார்.

“ப்ச்!” என கொஞ்சம் எரிச்சலடைந்தவன், “உண்மையைச் சொன்னாதான், என்னால உதவ முடியும்” என்று சொல்லிப் பார்த்தான்.

“ஐயா அவன் வீட்ல இருக்கப்ப புடிச்சிட்டுப் போகல. எனக்கு நிசமா எதுவுமே தெரியாதுங்க. நீங்கதான் உதவணும்” என்று மேலும் மேலும் அழுதார்.

“நீங்க போலீஸ் ஸ்டேஷன்-ல எதுவும் கேட்கலையா?”

அழுகையைக் கட்டுப்படுத்தியபடியே, “கொஞ்சம் சொன்னாக. எனக்குப் புரியல…” என்று வாய்பொத்தி அழுதார்.

“எதுவும் புரியலைன்னு சொல்றீங்க! மனு எழுதியிருக்கீங்க… கொடுக்க கலெக்டர் ஆபிஸ் வந்திருக்கீங்க. அது எப்படி?”

கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஆஸ்பத்திரி-ல ஒருத்தர் சொன்னாங்கய்யா” என்று மூக்கை உறிஞ்சி கொண்டவர், “இப்டி இப்டி பண்ணுங்கன்னு. அதான்” என்றார்.

‘ஓ!’ என்பது போல் தலையசைத்துக் கொண்டான்.

“ஆஸ்பத்திரி-லதான் என் புள்ளைய வச்சிருக்காக. தற்கொல பண்ணிட்டான்-னு சொல்லி, புணத்த கைநாட்டுப் போட்டு வாங்கச் சொன்னாக”

‘எதற்காக அந்தப் பையனை கைது செய்ய வேண்டும்?’ என்று மட்டுமே மாறன் மூளை யோசித்துக் கொண்டிருந்தது.

“அதெப்படிங்கய்யா… நல்லா இருந்த பையன்… திடிர்னு செத்துட்டான்னு சொன்னா, எப்டி நம்ப?”

“நீங்க தனியாவ வந்திருக்கீங்க? உங்க கூட யாரும்… உங்க வீட்டுக்காரர்?”

“அவரு இப்ப இல்லை. ஒத்தாசைக்கு அக்கா இருக்கு. எனக்காக அது இப்ப ஆஸ்பத்திரி-ல உக்காந்திருக்கு”

ஒரு முடிவுக்கு வந்தவனாய், “எந்த போலீஸ் ஸ்டேஷன்?” என்று கேட்டான்.

அவர் சொன்னதும், “நீங்க வெளியே இருங்க. கொஞ்ச நேரத்தில கூப்பிடுறேன்” என்றான்.

“ஐயா இது” என மீண்டும் மனுவை நீட்டியவரிடம், “வச்சிருங்க. பார்க்கலாம்” என்று சொல்லி, அவரை அனுப்பிவிட்டான்.

அவர் சென்றதும், மாவட்ட கண்காணிப்பு ஆய்வாளர் சசியை கைப்பேசியில் அழைத்தான். சசி மாறனின் நண்பனும் என்பதால் அழைப்பை ஏற்றதும், “சொல்லு மாறன்” என்றான்.

காவல் நிலையத்தின் விவரம் சொல்லி, “அங்கே ஒரு லாக்அப் டெத்! உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“லாக்கப் டெத்??” என ஒரு நொடி யோசித்தவன், “ம்ம் தெரியும். ஆக்சுவலா இட்ஸ் சூசைட். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சு” என விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது, “என்ன கேஸ்? கேஸ் டீடெயில்ஸ் வேணுமே சசி” என்று மாறன் குறுக்கிட்டான்.

“ஒரு டென் மினிட்ஸ் கொடு, ஆபிஸ் போய்ட்டு கால் பண்றேன்”

“சரி சசி” என்று அழைப்பைத் துண்டித்தான்.

பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தொடரலாம் என்று நினைத்தவனை… வெளியே அழுது கொண்டிருந்த பெண்ணின் குரல் கலைத்ததும், காசியை வரவழைக்க மணி அடித்தான். 

நொடி நேரத்தில், “என்ன சார்?” என்று கேட்டுக் கொண்டே, காசி உள்ளே நுழைந்தார்.

“அவங்ககிட்டருந்து அந்த மனுவை வாங்கிட்டு வாங்க” என்றதும், காசி சென்று மனுவை வாங்கி வந்து, மாறனிடம் தந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

மாறன் மனுவை வாசித்துக் கொண்டிருக்கையிலே சசியிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்று, “சொல்லு!” என்றதும், “அந்தப் பையன் இன்ஜினீயரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (பொறியியல் நுழைவுத் தேர்வு) நடக்கிறப்போ பார்த்து எழுத ஹெல்ப் பண்ணியிருக்கான்” என்று ஆரம்பித்து, வழக்கு பற்றிய விவரங்ககள் அனைத்தும் சொல்லி முடித்தான்.

“ஓகே. பட் சூசைட் எதுக்குப் பண்ணான்?”

“தப்பு பண்ணது எல்லோருக்கும் தெரிஞ்சிடும்… இனிமே லைஃப் எப்படி பேஸ் பண்ணறது… அப்படின்னு சூசைட் பண்ணியிருக்கலாம்”

அந்தப் பதிலில் திருப்தி இல்லாதது போன்ற ஓர் அமைதியில் மாறன் இருந்தான்.

“சஸ்பெக்ட் பண்ணற மாதிரி எதுவுமில்லை. போஸ்ட் மார்ட்டம்-ல கிளியரா இருக்கு. நான் ரிப்போர்ட் பார்த்திட்டேன். பட், பையனோட பேமிலி டவுட் பண்றாங்க போல. இன்னும் பாடியை வாங்கலை”

பதிலாக எதுவும் பேசாமல், மனுவையே பார்த்துக் கொண்டிருந்தான், மாறன். அதில், மறு உடற்கூறாய்வு வேண்டுமென எழுதப்பட்டிருந்தது.

“வேற டீடெயில்ஸ் வேணுமா? ஏன்னா ஸ்டேஷன்-ல சூசைட்-ன்னு கேஸ் கிளோஸ் பண்ணப் போறாங்க”

“அதெப்படி? அந்தப் பையன் மேல யார் கம்பளைன்ட் கொடுத்தாங்க-ன்னு தெரியுமா?”

“கம்பளைன்ட் வரலை. பட், ஹால் சூப்பர்வைஸ்ஸர் கண்டுபிடிச்சி, போலீஸ்-க்கு இன்பாஃர்ம் பண்ணிட்டாரு”

“சம்திங் இஸ் பிஷ்ஷி” என்றவன், “நான் ஆர்டர் இஸ்யூ பண்றேன். செகண்ட் போஸ்ட் மார்ட்டம் போகலாம்” என்றான்.

“அந்தப் பையனயோட பேமிலி கிளைம் பண்றாங்களா மாறன்?”

“அதுக்காக மட்டுமில்லை சசி. ஸ்டேஷன் இன்ப்ளூயன்ஸ் இல்லாம போஸ்ட் மார்ட்டம் நடந்தா பெட்டர்-ன்னு தோணுது”

“சரி. நீ ஆர்டர் இஸ்யூ பண்ணு. நான் பார்மாலிட்டீஸ் பார்க்கிறேன்”

“ஓகே!” என்றவன், “அப்புறம் இன்னொன்னு சசி. அந்தப் பையனோட அம்மாவை ஸ்டேஷன்-க்கு அனுப்புறேன். அவங்களைக் கொஞ்சம் கைட் பண்ணுங்க. பாவம் அவங்களுக்கு எதுவுமே தெரியலைன்னு சொல்றாங்க” என்றான்.

“ம்ம்ம்! நான் ஸ்டேஷன்-க்கு இன்பாஃர்ம் பண்றேன்” எனச் சொன்னதும், “பை சசி” என்று மாறன் அழைப்பைத் துண்டித்தான்.

உடனே, “காசி” என்று அழைத்தான். அவர் வந்ததும், “அவங்களை உள்ளே வர சொல்லுங்க” என்றான்.

காசி சென்று, அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பியதும் “நீங்க போலீஸ் ஸ்டேஷன் போங்க. என்ன செய்யணும்னு அவங்க சொல்வாங்க” என்றான்.

“ரொம்ப நன்றிங்கய்யா. என் புள்ள சாவுக்கு நியாயம் கிடைக்கணும்”

“நியாயமா? இங்க பாருங்கம்மா! உங்க பையன் தப்பு செஞ்சிருக்கான். நியாயம் அது இதுன்னு பேசாதீங்க” என்று குரல் உயர்த்திப் பேசினான்.

“என்ன தப்பு? எனக்கு எதுவும் தெரியாதே” என்று கண்கள் கலங்கப் பேசினார்.

“சரி ஸ்டேஷன் போங்க. பார்க்கலாம்” என்று சொன்னதும், அவர் கிளம்பப் போகையில், “உங்க பையன் இன்ஜினீயரிங் முடிச்ச பையனா?” என்று கேட்டதற்கு, திரும்பி நின்று தலையாட்டினார்.

“சரி போங்க” என்று அவரை அனுப்பிவிட்டான்.

அதன்பின் அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தது. அத்தனையையும் மும்முரமாகப் பார்த்தாலும், மூளைக்குள் ‘இன்ஜினீயரிங் முடிச்ச பையன் எதுக்கு திரும்பவும் என்ட்ரன்ஸ் டெஸ்ட் எழுதணும்??’ என்ற கேள்வி வந்து கொண்டே இருந்தது.

லிங்கத்தின் வீடு… ஒருநாள் கழித்து மாலை நேரம்

லதா, லிங்கம், சுடர் மூன்று பேரும் வரவேற்பறையில் இருந்தனர். கட்சி ஆட்கள் முன்னறையில் நின்றார்கள். லிங்கம் சில தாள்களைப் பார்த்தபடியே மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

லதா, அப்பா-மகள் பேசுவதைக் கேட்டபடியே வாரப் பத்திரிகைப் படித்துக் கொண்டிருந்தார்.

பேச்சின் போக்கிலே, “படிப்பு முடிஞ்சு சும்மாவே இருக்க சுடர். என்ன பண்றதா பிளான்?” என்று லிங்கம் கேட்டார்.

கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே, “சேனல் ஸ்டார்ட் பண்ண பிளான் இருக்குப்பா. பட் இப்ப மைன்ட் செட் அதுக்கேத்த மாதிரி இல்லை. இன்னும் கொஞ்ச நான் கழிச்சிப் பார்க்கணும்” என்றாள்.

கையில் இருந்த தாள்களிலே கவனத்தை வைத்தபடி “நீ எப்ப எந்த மாதிரி வேணும்னு சொல்லு, அப்பா எல்லாம் அரேஞ் பண்ணித்தரேன்” என்றார்.

“ஓகே-ப்பா” என்று சந்தோஷமாகச் சொல்லி நிமிர்ந்தவள், “நீங்க என்னப்பா பார்க்கிறீங்க?” என்றாள்.

“தொகுதி லைப்ரரி-க்கு கொஞ்சம் புக்ஸ் வாங்கிக் கொடுக்கிறேன். அந்த லிஸ்ட் சுடர். பசங்க எல்லாம் பார்த்திட்டாங்க. இருந்தாலும் என்னன்னே தெரியாம இருக்கக் கூடாதுல. அதான் பார்த்துகிட்டு இருக்கேன்”

“உட்கார்ந்து மெதுவா பார்க்கலாமே”

புத்தகப் பட்டியலில் கவனம் வைத்துக் கொண்டே, “கட்சி ஆளுங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க சுடர்” என்றவர், “இரு. நான் இதை அவங்ககிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்” என அங்கிருந்து சென்றார்.

‘சரி’ என்று தலையாட்டியவளுக்கு, நூலகம்-புத்தகம் பற்றிய பேச்சுக்களில் மாறன் நினைவு வந்துவிட்டது.

உடனே ராஜாவிற்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதும், “ராஜாண்ணா எங்கே இருக்க?” என்று கேட்டாள்.

“ஏன்? என்ன வேணும் சுடர்?”

“வீட்டுக்கு வர முடியுமா? பார்க்கணும்”

“ம்ம் வர்றேன்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.

அவள் கைப்பேசியை வைத்ததும், “அவனை ஏன் தொந்தரவு பண்ற? ஏதாவது வேலையா இருக்கப் போறான்!?” என லதா கடிந்தார்.

“ராஜாண்ணா வர்றேன்-னு சொல்லிட்டாங்க-ம்மா” என்று அவள் சொன்னதும், அவரும் அவனைக் காண ஆவலுடன் இருந்தார்.

நேரம் கடந்தது

லிங்கம் வீட்டிற்கு ராஜா வந்து சேர்ந்தான். காரை நிறுத்தும் போதே, முன்னறையில் அவரும் கட்சி ஆட்களும் நிற்பது தெரிந்தது.

காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தவனிடம், “என்ன ராஜா?” என்று லிங்கம் கேட்டார்.

“சுடர் பார்க்கணும்னு சொன்னா”

“ஓ! ஹால்-லதான் இருக்கா. போ” என அவர் சொன்னதும், ஆமோதிப்பது போல் லேசாகத் தலையசைத்தான்.

பின் அங்கே நின்றிருந்த கட்சி ஆட்கள், “நல்லா இருக்கியா-ண்ணே?” என்று கேட்டதற்கு, ‘ம்ம்ம்’ என்ற ஒரு சிறு சத்தம் மட்டும் தந்துவிட்டு கடகவென உள்ளே சென்றுவிட்டான்.

உடனே, “இப்பெல்லாம் அண்ணே முன்ன மாதிரி இல்லீங்கய்யா” என்று சிலர் குறையாகச் சொன்னதும், “நீங்க உங்க வேலையைப் பாருங்க-ப்பா” என்று லிங்கம் முடித்துவிட்டார்.

இருந்தாலும் ‘ஏன் ராஜாவிடம் இப்படி ஒரு மாற்றம்? லதாவிடமும் பேசாமல் இருக்கிறானே?’ என குழம்பிய லிங்கத்திற்கு, ‘இவன் என்ன செய்கிறான்? என கவனிக்க வேண்டுமோ?’ என்ற கேள்வி எழுந்தது. பின், கவனித்துப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தும் கொண்டார். 

வீட்டின் வரவேற்பறை…

மடித்துக் கட்டியிருந்த வேஸ்டியை இறக்கி விட்டபடியே வந்தவனைப் பார்த்ததும், “வா ராஜா” என இன்முகமாக லதா வரவேற்றார்.

“ம்ம்” என்று கவனமேயில்லாமல் சொன்னவன், “எதுக்கு சுடர் கூப்பிட்ட?” என்று கேட்டு, அவளருகில் அமர்ந்தான்.

சுடர் பதில் சொல்லும் முன்னே, “ராஜா! நீ காஃபி குடிக்கிறியா?” என்று லதா கேட்டதற்கு, சற்று யோசித்தவன், “ம்ம்” என்றதும், படபடவென லதா எழுந்து சமயலறைச் சென்றார்.

“அண்ணனுக்கு காஃபி போடவா?” என்று வேலைக்காரப் பெண் கேட்டதற்கு, “இல்லை! நானே பார்த்துப்பேன்” என விருப்பத்துடன் சொன்னார்.

அவர் அடுப்பின் முன் வந்து நின்றதும், சமையல் செய்து கொண்டிருந்த மற்றவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.

“முன்னெல்லாம் அடிக்கடி வருவான். ‘ம்மா காஃபி’-ன்னு அவனே வந்து கேட்பான்” என்று பால் எடுத்து சூடு செய்தார்.

“இப்போ அப்படியில்லையே” என்று ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டே, காஃபி-க்கு தேவையானவற்றை எடுத்து சமையல் மேடையில் வைத்தார்.

“இதோ இங்கதான் உட்கார்ந்து என்கூட பேசிக்கிட்டே இருப்பான்” என்று சமையல் மேடையைக் காண்பித்தார்.

“நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருக்கான். அதான் யார்கிட்டயும் சரியா பேசறதில்லை. நீங்க யாரும் தப்பா எடுத்துக்காதீங்க” என வேலையாட்களைப் பார்த்துச் சொன்னார்.

அவர்களுக்குச் சொன்னாரா? இல்லை, தனக்குத் தானே சொல்லிக் கொண்டாரா? என்று பிரித்தறிய முடியாததால், வேலையாட்கள் அவரைப் பரிதாபத்துடன் பார்த்தனர்.

கடைசியில் ராஜாவிற்குப் பிடித்த சுவையில் காஃபி தயாரித்து, வரவேற்பறை வந்து, அவன் கைகளில் கொடுத்து, அவன் எதிரில் அமர்ந்து கொண்டார்.

அவன் சிறுகச் சிறுகக் குடிக்கும் போது, “ம்மா! பாண்டிச்சேரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்று சுடர் கேட்டாள்.

“இப்பவா? இப்போ எதுக்கு?” என்று ஆட்சேபிக்கும் குரலில் லதா கேட்டார்.

“ம்மா! முடியாதுன்னு சொல்லாதீங்க. ப்ளீஸ்-ம்மா! போகணும்?” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

“இந்த நேரத்தில தனியா எப்படிப் போவ? அதெல்லாம் வேண்டாம்” என்று மறுத்தார்.

“தனியா இல்லை-ம்மா! ராஜாண்ணா கூடத்தான்” என்றதும், அதுவரை இருந்த தயக்கம், மறுப்பு போய், “அப்போ சரி! ஆனா, என்ன திடிர்னு?” என ‘கேட்கணுமே’ என்று கேட்டார்.

“சும்மாதான். பெரிசா ஒன்னுமில்லை” என்று சொல்லி சுடர் எழுந்து கொண்டாள்.

“உனக்கு ஏதும் வேலை இருக்கா ராஜா?” என்று லதா ராஜாவைக் கேட்டதும், ‘இல்லை’ என தலையசைத்து, காஃபி கோப்பையை டீ-பாயில் வைத்தான்.

“சரி பார்த்துப் போயிட்டு வாங்க!” என்று சம்மதம் தெரிவித்ததும், ராஜாவும் எழுந்து கொண்டான்.

லதாவும் எழுந்து, “வேறெதுவும் சாப்பிட்டுப் போறியா ராஜா?” என்று கேட்டுப் பார்த்தார்.

“வேண்டாம்” என்றவன், “சுடர் வா” என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். அவளும், “பை-ம்மா” என்று கிளம்பினாள். போகும் போதே முன்னறையில் இருந்த அப்பாவிடமும் விடயத்தைச் சொல்லி, விடைபெற்றுச் சென்றாள்.