YALOVIYAM 4.2


யாழோவியம்


அத்தியாயம் – 4

சென்னை-பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில்…

கார் ஓட்டிக் கொண்டே, “என்ன திடிர்னு பாண்டிச்சேரி?” என்று ராஜா கேட்டான்.

“என்னவோ மாறா-வ பார்க்கணும்னு போல இருக்கு ராஜாண்ணா”

“அதுக்கு எதுக்கு பாண்டிச்சேரி? பையன் இங்கே-ல இருக்கான்”

“பையனா? இது மட்டும் அவனுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!?”

“சரி! டிசி” என்று திருத்திக் கொண்டவன், “அவன் இங்க இருக்கிறப்ப, நீயேன் பாண்டிச்சேரி போகணும்?!” என்று கேட்டான்.

“அப்போ செங்கல்பட்டு கலெக்டர் ஆஃபீஸ் போகலாமா?” என்று ஆர்வத்துடன் கேட்டதற்கு, ” ஏன் அவன்கிட்ட திட்டு வாங்கவா?” என்று சிரித்தான்.

அவளும் சிரித்துக் கொண்டே, “தெரியிதுல! அதான் பாண்டிச்சேரி” என்று சொல்லி, இருக்கையின் பின்னே சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.

அவள் ‘ஏதோ சரியில்லை?’ எனத் தெரிந்ததால், அதன்பின் ராஜா எதுவும் பேசவில்லை. கண்கள் மூடிக் கொண்டாலும், அடுத்ததாகத் தனக்கும் மாறனுக்கும் இடையே நடந்த சந்திப்பு காட்சிகளாக விரிந்தது.

காதல் ஓவியம், அத்தியாயம் – 3

கல்லூரி நூலகம்.

சீராக நிறுத்தப்பட்டிருந்த அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில அலமாரிகளுக்கு இடையே, படிப்பதற்காக மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

சில மாணவர்கள் புத்தகம் தேடியபடி… சிலர் எடுத்தப் புத்தகத்தைப் பதிவு செய்தபடி… ஒரு சிலர் அங்கேயே அமர்ந்து படித்தபடி… இப்படி ஒரு சூழல்தான் நூலகத்திற்குள் நிரம்பியிருந்தது.  

சுடரும், அவள் வகுப்புத் தோழியும் வெகுநேரமாக ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ அடங்கிய புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

தேடின பின்பும் புத்தகம் கிடைக்காததால், இருவரும் உதவி கேட்டு நூலகர் முன்பு வந்து நின்றார்கள்.

“சார்! கல்ச்சுரல் ப்ரோக்ராம்-க்காக போஃக் [FOLK] சாங் கலெக்ஷன் இருக்கிற புக் வேணும். அந்த ரெண்டு ரேக்-லயும் தேடிப் பார்த்தோம். கிடைக்கலை” என்று சுடரின் தோழி கேட்டுக் கொண்டிருக்கையில், சுடர் கண்கள் நூலகத்தைச் சுற்றி வந்தன.

“அதை போர்த் இயர் ஸ்டுடென்ட்ஸ் இப்போதான் எடுத்திட்டுப் போனாங்க” என்றவர், “அதோ அங்கே இருக்காங்களே” என்று இருவரைக் கை காட்டினார்.

அவர் கை காட்டிய திசையில் இருந்த மாறனையும், அவன் தோழனையும் பார்த்த சுடர் சிரித்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்ற சுடரின் தோழி, “வா, அவங்ககிட்ட கேட்டுப் பார்க்கலாம்” என அவளை அழைத்துச் சென்றாள்.

‘கேட்கலாமே?’ என்பது போல் புருவச் சிரிப்புச் சிரித்து, சுடர் தோழியுடன் சென்றாள்.

மேசையின் அருகே சென்று, “அண்ணா” என சுடரின் தோழி அழைத்ததைக் கேட்டு, மாறனின் தோழன் ஆஷிக் நிமிர்ந்து பார்த்தான்.

ஆனால் மாறனோ புத்தகத்திற்குள் தலையைப் புதைத்திருந்தான். நிமிர்ந்து பார்க்கவில்லை. ‘இவன் ஏன் எப்பவும் இப்படிப் படிக்கிறான்?’ என்று சுடர் எரிச்சல் அடைந்தாள்.

“என்ன வேணும்?” என்று ஆஷிக் கேட்டான்.

மேசையிலிருந்த புத்தகத்தைச் சுட்டிக் காட்டி, “கல்ச்சுரல் ப்ரோக்ராம்-க்காக, இந்த போஃக் சாங் புக் வேணும்” என்றாள் சுடரின் தோழி.

“எங்களுக்கும் வேணும். நீங்க நெட்-ல செர்ச் பண்ணிக்கோங்க” என ஆஷிக் மறுக்கும் போதே… நியாபகம் வந்தவனாய், “ஏய்! அன்னைக்கு இவன் மேல ஐடி கார்டு எறிஞ்சது நீதானா?” என்று சுடரைப் பார்த்துக் கொஞ்சம் சத்தமாகக் கேட்டான்.

அந்தச் சத்தத்தில் மாறன் நிமிர்ந்தான். பின், நூலகத்தில் கத்திப் பேசும் நண்பனை முறைத்தான். அதன்பின்னரே, அங்கே நின்று கொண்டிருந்த சுடரைப் பார்த்தான்.

“அன்னைக்கு சாரி கேட்கச் சொன்னதுக்கு கேட்கலை. இன்னைக்கு புக் மட்டும் கேட்பாங்களாம்?” என ஆஷிக் நக்கலாகச் சொன்னதும், “ப்ளீஸ் அண்ணா கல்ச்சுரல்ஸ்-க்கு நேம் கொடுத்துட்டோம்” என்று சுடர் தோழி கெஞ்சினாள்.

இதற்கிடையே சுடர், ‘நிமிர்ந்து பார்க்கவேயில்லை’ என்ற கோபத்தில் மாறனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம், ‘புக் வேணுமா?’ என்பது போல் மாறன் கண்களால் கேட்டான்.

‘வேண்டும்/வேண்டாம்’ என்ற பதில்களில் எதை ஒன்றையும் தராமல், மேசையில் இருந்த புத்தகத்தை சுடர் எடுத்துக் கொண்டாள்.

“ஏய்! ஏன் புக்-அ எடுக்க?” – ஆஷிக் கேள்வி.

“அவங்ககிட்ட கேட்காம ஏன் புக் எடுக்க?” – – சுடர் தோழியின் கேள்வி.

இருவரின் கேள்வியையும் சுடர் கண்டு கொள்ளாமல், ‘ஏன் முதலிலே பார்க்கவில்லை?’ என்று கேட்பது போல், கையில் வைத்திருந்த புத்தகத்தால் மாறனின் தோளில் லேசாகத் தட்டினாள்.

சுடரின் செய்கையை எதிர்பார்த்திராத மாறன், ‘ஏய்!’ என்ற தேக மொழியுடன் எழுந்து நிற்கையில், ஒரே ஒரு பார்வை பார்த்தாள்.

ஒரு பார்வைதான்! ஆனால், ‘நான் இப்படிச் செய்யக் கூடாதா?’ ‘எனக்கு அந்த உரிமையில்லையா?’ இப்படிப்பட்ட அர்த்தங்கள் கொண்ட பார்வை அது!!

அதிகப்படியேதான்! அதுவும் மூன்றாவது சந்திப்பில் இத்தகைய பார்வை அதிகப்படியேதான்!! ஆனாலும், ‘உரிமையிருக்கு’ என்பது போல் அப்படியே அமர்ந்து… குனிந்து… அளந்து… அளவாய்… அழகாய் மாறன் சிரித்துவிட்டானே! அப்புறம் எப்படி அதிகப்படியாகும்?!

அவனின் சிரிப்பை கண்டு… சுடரும் சிரித்தபடியே தோழியின் தோளில் கைபோட்டு, ‘வா போகலாம்’ என்பது போல் நடந்தாள்.

“என்னாச்சு-டா உனக்கு?” என ஆஷிக் கேள்வி கேட்டதற்கு, பதிலெழுத முடியாமல் யாழ்மாறன் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பம்பரம் விளையாட ஆரம்பித்தன.

அதேபோல், “என்னாச்சு-டி உனக்கு?” என்ற தோழியின் வினாவிற்கு, விடையெழுத முடியாமல் ஓவியச்சுடர் இதயச் சுவர்களில் தட்டான் பூச்சுகள் தடதடத்தன.

அந்தச் சந்திப்பின் முடிவில், இருவரும் தங்களுக்கு ‘ஏதோ ஆயிற்று!’ என்று உணர்ந்தனர்.

யாழோவியம் அத்தியாயம் – 4 தொடர்கிறது

மூன்று மணி நேரம் கழித்து, பாண்டிச்சேரி கடற்கரையில்…

நேரம் 8:45-யைக் கடந்திருந்தது. கடற்கரையை ஒட்டியுள்ள சாலைக்கு வந்திருந்தனர். வாரநாட்கள் என்பதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக இல்லை.

விசாலமான நடைபாதையின் ஒருபுறம் நீளவாக்கில் ஒரேமாதிரி சிமெண்ட் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மற்றொரு புறம் சீரான இடைவெளியில் மரங்கள் இருந்தன.

அதில் ஒன்றில் சுடரும் ராஜாவும் அமர்ந்திருந்தார்கள். கால்களை மடித்து இருக்கை மேல் வைத்து அமர்ந்திருந்தாள். அவர்கள் அருகில் யாருமில்லை. எப்போதாவது இரவு நேர நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சிலர் கடந்து சென்றார்கள்.

பின்புறம் அலையடிக்கும் இரவு நேர கடல். அந்தக் கடலின் காரிருளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் காதலனை நினைத்து ஒரு ஏக்கம் தெரிந்தது.

முதலில் இருவரின் படிப்பு முடியட்டும் என காத்திருந்தது… இப்பொழுது ‘ராஜா சரியாகட்டும்’ என்று காத்திருப்பது… நினைத்துப் பார்த்ததால் ஒரு கலக்கம் வந்தது.

அதைப் புரிந்த ராஜா, “சுடர்! நான் ஒன்னு சொன்னா கேட்பியா?” என்று கேட்டதும், கடலிலிருந்து கண்பார்வையை விலக்காமலே, “ம்ம்ம்” என்றாள்.

“வீட்ல உன்னோட லவ் பத்திச் சொல்லி, டிசி-யை மேரேஜ் பண்ணிக்கோ”

உடனே, “ம்ம் சரி” என்று அவனைப் பார்த்தவள், “ஆனா அதுக்கு முன்னாடி நீ சரியாகணும். அம்மாகிட்ட முன்னமாதிரி பேசணும். கட்சி வேலை ஒழுங்கா செய்யணும்” என்று அடுக்கினாள்.

“ப்ச்! என்னைப் பத்தி யோசிக்காத சுடர்”

“அதெப்படி ராஜாண்ணா? எனக்கு ஏதாவது ஒரு கஷ்டம்னா, நீ என்னை அப்படியே விட்டுட்டுப் போவியா?”

‘கண்டிப்பாக போகமாட்டேன்’ என்ற அர்த்தத்தில் தலையாட்டினதும், “அப்ப நானும் அப்படித்தான்” என்றாள்.

“சொல்றதைக் கேட்கறதேயில்லை” என்று முணுமுணுத்தவன், மணிகட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்து, “கிளம்பலாமா?” என்று கேட்டான்.

“மாறா-க்கு மெசேஜ் பண்ணேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசறேன்னு ரிப்ளே பண்ணியிருக்கான்” என்கின்ற போதே கைப்பேசி அழைப்பு வந்தது.

திரையைப் பார்த்து சுடர் சிரிக்கையில், “டிசி-யா?” என ராஜா கேட்டதற்கு, ‘ஆம்’ என்று தலையாட்டினதும், “சரி பேசிட்டு வா! வெயிட் பண்றேன்” என்று சொல்லி, சென்றுவிட்டான்.

ராஜா நகர்ந்ததும்… அழைப்பை ஏற்று, “உன்கூட பேச ரொம்ப நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று சுடர் ஆரம்பித்தாள்.

‘என்ன இன்னைக்கு இப்படி ஸ்டார்ட் பண்றா? ரொம்ப தேடறாளோ?’ என மாறன் நினைக்கும் போதே, “என்னமோ மாறா, இன்னைக்கு உன் நியாபகம் ரொம்ப வருது” என்று, காதலனை ஒரு வழியாக்கிவிடும் குரலில் சொன்னாள்.

சொற்ப நொடிகள் அந்தக் குரலின் பிடியில் சிற்பமாக நின்றவன், “ஓகே! நீ உங்க வீட்ல சொல்லு. நானும் எங்க வீட்ல சொல்றேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்” என காதலையும் காதலியையும் வழி நடத்தும் குரலில் சொன்னான்.

“இப்போ வேண்டாம் மாறா! ராஜாண்ணா இன்னும் கொஞ்சம் சரியாகி, எங்க வீட்டுக்கு வந்துகிடட்டும்”

“அட போ சுடர்!” என வேகமாகச் சொன்னவன், “என் மச்சான்தான் எனக்கு வில்லன் போல” என்று விளையாட்டு போல பேசினான்.

“ப்ச்! வாயைக் கழுவு! இப்படிப் பேசாத மாறா!!” என்று சிடுசிடுத்தாள்.

“சாரிம்மா! உன் அண்ணனைப் பத்தி பேசலை” என்றதும், “சரி! சரி!” என விட்டவள், “நான் எங்கே இருக்கேன்-ன்னு சொல்லு” என்று கேட்டாள்.

“இது என்ன கேள்வி? வீட்லதான் இருப்ப”

“இல்லையே! கரெக்ட்டா சொல்லு”

“இட்ஸ் பெட் டைம் சுடர். வீட்லதான் இருப்ப. அப்படி இல்லைன்னா எங்கன்னு தெரியலை. நீயே சொல்லு?”

“பாண்டிச்சேரி பீச் ரோடு”

‘எழுந்து செல்! கடற்கரையில் காதலி கைப்பிடித்து அமர்ந்து கொள்ள’ என உந்திய மனதை அழுத்தி, அமுக்கி, அடக்கி “மேடம்-க்கு என் நியாபகம் ரொம்ப வந்துடுச்சு போல?” என அசட்டையாகக் கேட்டான்.

“ஆமா!” என்று ஒற்றை வார்த்தைக்குள் ஒளிந்து கொண்டாள். அதுவே சொல்லியது அவனுக்கான அவள் காதலின் ஆழத்தை!

அந்தக் காதல் ஆழத்திற்குள் காலத்திற்கும் விழுந்து கிடக்க வேண்டுமென மனம் நினைத்தாலும், “சில்லி கேர்ள்! அதுக்கு எதுக்கு பாண்டிச்சேரி போகணும்?” என்று கேலியாகக் கேட்டான்.

அவன் நினைவு அதிகமாக இருந்ததால், மௌனமாக இருந்தாள்.

“அப்புறம் சுடர்! ஸெல்ப் டிரைவ்-வா? இல்லை, டிரைவர்-கூட வந்தியா?” என்று அவளைச் சரிசெய்யும் கேள்வி கேட்டான்.

“ரெண்டும் இல்லை! ராஜாண்ணா கூட்டிட்டு வந்தாங்க”

“அப்போ நான் சொன்னதுதான்”

“என்ன நீ சொன்னது?” என்று புரியாமல் கேட்டாள்.

“அதான் டிரைவர் கூட வந்திருக்க” என்று அவளைச் சீண்டினான்.

“ஓவரா பேசாத மாறா!” என சீறியவள், “கலெக்டர்-ன்னு பார்க்கிறேன். என்னைப் பேச வைக்காத” என்று சினத்துடன் சொன்னாள்.

“இல்லைனாலும் நீ என்னைப் பேசவே மாட்டியா? உன் அண்ணனைப் பத்திச் சொன்னதும்தான் வாய்ஸ் வெளிய வருது”

“ஆமா! அப்படித்தான்!! ராஜாண்ணா பத்தி யாரும், எதுவும் சொல்லக் கூடாது” என்றவள், “கட்சில அவருக்கு எவ்வளவு…” என்று தொடங்கும் போதே, “கட்சி பத்தி பேசாத” என்று கத்தரித்தான்.

“சாரி! ரியலி சாரி!! நான் சொல்ல வந்தது என்னென்னா? நல்ல நாலெட்ஜபில் பெர்சன். நிறைய புக்ஸ் படிப்பாங்க. எப்பவும் அப்டேட்டா இருப்பாங்க …” என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

“போதும் போதும்! உன் அண்ணன் புராணம்” என சலித்துக் கொண்டவன், “அப்புறம், அந்த நாலெட்ஜபில் பெர்சன்… அதான் என் மச்சான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்று கேட்டான்.

கார் நிற்கும் இடத்தில் ராஜாவைப் பார்த்தவள், “பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்காங்க” என்றாள்.

“ஏன் சுடர்? காலை-ல வந்த பேப்பரையே இப்போதான் படிக்கிறான். அவன் உனக்கு அப்டேட்-டடா இருக்கானா?” என்று ராஜாவை வம்பிழுத்தான்.

“ஏன் அது ஈவினிங் பேப்பரா கூட இருக்கலாமே?” என்று வாதம் செய்யும் போதே, “சுடர்! செகண்ட் லைன்-ல அப்பா” என்றதும், “ஓகே பை! நாங்க கிளம்புறோம் மாறா” என்றாள்.

“வேண்டாம்! எனக்கு உன்கூட நிறைய பேசணும்” என்று அடம்பிடித்தான்.

“சரி! கார்-ல போறப்போ பேசறேன்”

“நோ! நீ பாண்டிச்சேரி-ல இருக்கிறப்பதான் பேசணும்” என்று சிறுபையனைப் போல சொன்னான்.

“என்னை சில்லி கேர்ள்-ன்னு சொல்லிட்டு, நீ சில்லி பாய் மாதிரி பிஹேவ் பண்ற”

“வாவ்! சில்லி கேர்ள்… சில்லி பாய்… லவ்லி காம்போ” என மாறன் உளறியதும், ‘இவனோட’ என்று சுடர் உரக்க சிரித்துவிட்டாள்.

“அப்படியே சிரிச்சிக்கிட்டு இரு! அப்பா-கிட்ட பேசிட்டு கால் பண்றேன்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.

அதுவரை இருந்த ஏக்கம், கலக்கம் இரண்டும் அக்கம் பக்கம் கூட நில்லாமல், தூரதேசம் போய்விட்டது போல உணர்ந்தாள்! இல்லை, அவன் அப்படி உணர வைத்திருந்தான்!!

அன்று இதே இடத்தில் மாறன் பேசிய பேச்சுக்கள் எல்லாம், இன்னும் கடற்கரை காற்றில் மிதந்து கொண்டிருப்பதை வாசித்தாள். பின் அதையே சுவாசித்தாள். அதில் கலந்திருந்த காதலன் பேச்சின் வாசத்தை நுகர்ந்தவளது முகம் மெல்ல மெல்ல விகசித்தது.

இதே நேரத்தில்…

காரின் என்ஜின் பகுதிக்கு மேல் செய்தித்தாட்களை விரித்து வைத்து ராஜா படித்துக் கொண்டிருந்தான்.

அரியலூர் மாவட்டத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் பற்றிக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பார்த்ததும், தன் சட்டைப் பையிலிருந்து பேணா எடுத்து, அந்தச் செய்தியை வட்டமிட்டான்.

ஈரோடு மாவட்டத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வில் இரண்டு மாணவர்களுக்குப் பார்த்து எழுத உதவிய மாணவன் பிடிபட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டான்.

இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு மாணவன் பார்த்து எழுத உதவியதாகப் பிடிபட்டுள்ளான். ஆனால் அந்தத் துன்பம் தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அந்த இரு செய்திகளையும் வட்டமிட்டான்!


next update on monday.