YALOVIYAM 6
YALOVIYAM 6
யாழோவியம்
அத்தியாயம் – 6
லிங்கம் வீடு, சுடர் அறை…
தீர்க்கமாக மற்றொரு முறை தான் எழுதியதை வாசித்து முடித்தாள். அந்த நேரத்தில் ராஜாவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்க மட்டும் செய்து பேசாமல் இருந்தவளிடம், “கோபமா சுடர்?” என்று கேட்டதும், ‘கோபம்தான்’ என்பது போல, ” என்னென்னு சொல்லு ராஜாண்ணா?” என்று கேட்டாள்.
“நேத்து கொஞ்சம் கட்சி வேலை. அதான் ஃபோன் அட்டன் பண்ண முடியலை”
“ஓ! அப்படியா? சரி” என்று கடகடவென சொன்னவள், “நீ கட்சி வேலை சரியா செய்றதில்லைனு சொல்றாங்க. ஆனா என்கிட்ட வேலைன்னு பொய் சொல்ற. நேத்து எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்று கேட்டு, கோபத்தில் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தாள்.
அடுத்த நொடியே ராஜா திரும்ப அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும், “எதுக்காக ஃபோன் பண்ண? இப்ப சொல்லு!” என்று கேட்டான்
“நான் எனக்காக ஃபோன் பண்ணலை. அம்மா கால் பண்ணப்போ நீ அட்டன் பண்ணலை. அதான் நான் கால் பண்ணேன்” என்று சொன்னதற்கு, ராஜா எதுவும் சொல்லவில்லை.
அவன் பேசாமல் இருப்பது கண்டு, “இப்போ பேசு ராஜாண்ணா! அம்மா-ன்னு சொன்னதும் ஏன் சைலன்ட் ஆகிட்ட? என்கிட்ட பேசறவன், ஏன் மத்தவங்க கூட சரியா பேச மாட்டிக்கிற??” என்று அழுத்தமாகவே கேட்டாள்.
அவள் கேள்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, “இப்ப வீட்டுக்குச் சாப்பிட வர்றேன். வீட்ல சொல்லிடு” என்று அமைதியாகச் சொன்னான்.
இப்படிச் சொல்கிறவனிடம், ’எப்படிக் கோபப்பட?’ என்று தயங்கியவள், “சரி” என்று சொல்லி, கைப்பேசியை வைத்துவிட்டாள்.
‘இதை அம்மாகிட்டயே சொல்லயிருக்கலாமே?!’ என்று நினைத்தாலும், தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், மாடி வளைவைப் பிடித்துக் கொண்டு, “ம்மா! ம்மா!” என கத்தினாள்.
வேலைக்கார பெண் ஒருவர் வந்து, “அம்மா குளிச்சிக்கிட்டு இருக்காங்க” என்றார்.
“சரி-க்கா! ராஜாண்ணா சாப்பிட வர்றாங்க. அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சமைச்சிடுங்க” என சொல்லும் பொழுதே, குளித்து முடித்து வந்த லதா, “ராஜா சாப்பிட வர்றானா? உன்கிட்ட சொன்னானா?” என்று பரபரப்பனார்.
“ஆமா-ம்மா”
“எத்தனை மணிக்கு வர்றேன்னு சொன்னானா?”
“இப்போ வந்திடுவாங்க” என்றதும், லதா வேக வேகமாகச் சமயலறைக்குள் சென்றுவிட்டார். சுடரும் தன் அறைக்குள் வந்து வேலையைத் தொடர்ந்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து ராஜா வந்தான். உள்ளே வந்தவனைப் பார்த்த ஒரு வேலையாள், “வாங்க அண்ணே” என்றதும், “சுடர் எங்கே?” என்று கேட்டான்.
அவன் சத்தம் கேட்டு வெளியே வந்த லதா, “சுடர் மேலே இருக்கா ராஜா! நீ போ” என்றதும், ‘சரியென’ லேசாகத் தலை அசைத்தபடியே மாடிப்படிகளில் ஏறினான்.
ஏறுகின்றவனைப் பார்த்துக் கொண்டிருந்த லதா, “ஜூஸ் குடிக்கிறியா?” என்று கேட்டதும், மாடிப்படி கைப்பிடியைப் பிடித்து நின்று யோசித்தான். பின், “ம்ம்ம்” என்றான்.
“சரி நீ போ! மேல கொடுத்துவிடறேன்” என்று சொன்னதற்கு, “கொடுங்க. நானே எடுத்திட்டுப் போறேன்” என்றான்.
‘நாலு வார்த்தை சேர்ந்தார் போல பேசிட்டான்’ என்ற சந்தோஷத்தில், சமையலறை சென்று இரண்டு தம்ளர்களில் ஜூஸ் எடுத்து வந்து, ராஜாவிடம் நீட்டினார்.
அதை வாங்கும் போது, ‘ஏதாவது பேசுவானா? தன்னைப் பார்ப்பானா? அம்மா என அழைப்பானா?’ இப்படி ஏக்கங்களுடன் பார்த்தார். அவனோ எந்த உணர்வுகளும் இல்லாமல் ஜூஸ் ட்ரேயை வாங்கிக் கொண்டு, மாடிப் படி ஏறிச் சென்றான்.
ஓவியச்சுடரின் அறை…
கதவு தட்டும் சத்தம் கேட்டதுமே, “வா ராஜாண்ணா” என்றாள். உள்ளே நுழைந்தவன், அவளது கணினி மேசை அருகே இருந்த டீபாயில் ட்ரேயை வைத்தான்.
உம்மென்று இருந்தவளிடம், ஒரு டம்பளரை எடுத்து நீட்டி, “சாரி. இனிமே ஃபோன் அட்டன் பண்ணாம இருக்க மாட்டேன். ஜூஸ் குடி” என்று சமாதானமாகப் பேசினான்.
வாங்கிக் கொண்டவள், “என் ஃபோனா? அம்மா ஃபோனா? எதைச் சொல்ற ராஜாண்ணா? ” என்று கேட்டு, அவனைப் பார்த்தாள்.
பதில் சொல்லாமல், மேசையில் பரப்பியிருந்த புகைப்படங்களைப் பார்த்து, “இதென்ன? நம்ம ரெண்டு பேரோட போட்டோவ எடுத்து வச்சிருக்க?” என்று அவள் கவனத்தை மாற்றினான்.
உடனே அவளும், “எல்லாம் அவனை வெறுப்பேத்தத்தான்” என்றதும், பேச்சின் திசை மாறியது.
“இந்த ‘அவன்’ நம்ம டிசி-தான?”
“ஆமா! அந்த நல்லவன்தான்” என்று வெடுக்கென்று சொன்னதும், “எதுக்கு இவ்வளவு கோபம்?” என ஜுஸைக் குடித்தபடியே கேட்டான்.
“நேத்து, ‘விமன்ஸ் காலேஜ் சீஃப் கெஸ்ட்டா போறேன், ‘என்ன டிரஸ் போட? பேஸ் டல்லா இருக்கக் கூடாது’ அப்படி இப்படின்னு பேசி என்னைய வெறுப்பேத்தினான்”
“அதுக்கு எதுக்கு நம்ம சின்ன வயசு போட்டோ எடுத்து வச்சிருக்கிற?”
“இதுல இருக்கிற போட்டோஸ் அவனுக்கு வாட்ஸ்அப் பண்ணா, நம்ம ரெண்டு பேரையும் பார்த்து பொறாமை படுவான்-ல? அதுக்குத்தான்”
“இப்போவா?”
“ம்ம்ம்”
ஜுஸை குடித்து டம்பளரை வைத்துவிட்டு, “டூயூட்டி-ல இருக்கிறப்ப நீ கால் பண்ணாலே எடுக்க மாட்டான். இதுல வாட்ஸ்ஆப் மெசேஜ்?! பார்க்கவே மாட்டான்” என்று சொல்லி, ‘ரெக்லைனர்’-ல் அமர்ந்து கால்களை நீட்டினான்.
ராஜா சொல்வது போல்தான் மாறன் என்று சுடருக்கும் தெரியும். இருந்தும், புகைப்படங்களை கைப்பேசி கொண்டு படம் பிடித்து, மாறனுக்கு அனுப்பினாள். பின், கணினியில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் மும்முரமாக வேலை செய்வதைக் கண்டு, “என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டான்.
“மதி-ன்னு ஒரு ஜூனியர் பையன் சொல்லுவேன்-ல ராஜாண்ணா. அவனோட யூடூயுப் நியூஸ் சேனல்-க்காக நியூஸ் எடிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
“என்ன நியூஸ்?”
“என்ஜினீரியங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் பத்தின நியூஸ்”
கேட்டதுமே ராஜாவிற்கு பக்கென்று இருந்தது! பதற்றம் வந்தது!! இருந்தும் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் தனக்குள் மறைத்துக் கொண்டான்.
‘எந்தளவு விவரங்கள் தொகுத்திருப்பாள்?’ என்ற கேள்வி ராஜா மண்டைக்குள் சலசலத்துக் கொண்டே இருந்தது. உடனே, “எவ்வளவு இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணியிருக்க?” எனக் கேட்டான்.
“சேனல்-ல மதி அப்லோடு பண்ணதும் லிங்க் ஷேர் பண்றேன். அப்ப பார்த்துக்கோ” என்றவள், “இதை முடிச்சிட்டு சாப்பிடப் போகலாம்” என்று சொன்னதும், ராஜா கண்மூடிக் கொண்டான்.
இந்தச் செய்தியை சுடர் கையிலெடுப்பாள் என்று கொஞ்சமும் ராஜா எதிர்பார்க்கவில்லை என்பதை மூடிய இமைகளுக்குள் ‘அங்கே இங்கே’ என அசையும் அவன் கருவிழிகள் சொல்லிக் காட்டின.
சற்று நேரத்திற்குப் பின், “சுடர்” என்று கீழிருந்து லதாவின் குரல் வந்ததும், “ராஜாண்ணா, அம்மா கூப்பிடறாங்க. கீழே போயிட்டு வர்றேன்” என்று சொல்லி, வெளியே சென்றாள்.
சுடர் சென்றதும், ராஜா வேகமாக எழுந்து வந்தான். கணினித் திரையில் அவள் தட்டச்சு செய்திருந்ததை ஒவ்வொரு பக்கமாக வாசித்தான். வழக்கின் வரலாறையே எடுத்து வைத்திருந்தாள்.
உடனே, ‘இதை எப்படித் தடுக்க?’ என யோசித்தான். பின், தடுத்தால் சுடருக்கு சந்தேகம் வரும் என்று எண்ணினான். அதனால் எதுவுமே நடக்காதது போல், மீண்டும் ரெக்லைனரில் வந்தமர்ந்து கண்மூடிக் கொண்டான்.
சில நொடிகள் கழித்து வந்து கணினியைப் பார்க்க ஆரம்பித்த சுடருக்கு, ‘இந்த பேஜ்-லயா ஸ்டாப் பண்ணிட்டு போனோம். இல்லையே?’ என்று தோன்றியது.
‘ராஜாண்ணா பார்த்திருப்பாங்களோ?’ என்ற கேள்வி வந்ததும், சட்டென திரும்பிப் பார்த்தாள். அதே ரெக்லைனரில்… அதே நிலையில்… அப்படியே கண்மூடி ராஜா இருந்தான்.
மீண்டும் கணினித் திரையைப் பார்த்தவள், ‘ச்சே! ச்சே இப்படியெல்லாம் நினைக்க கூடாது’ என்று மனதில் உருபோட்டுக் கொண்டாலும், மூளையில் ராஜாவின் நடவடிக்கை மீது ஒரு உறுத்தல் வர ஆரம்பித்தது.
அந்த உறுத்தலுடனே தட்டச்சு செய்ததை மதிக்கு மினனஞ்சல் செய்துவிட்டு, ‘இன்னைக்கே பேசி. வீடியோ அப்லோட் பண்ணிடு’ என்று புலனச் செய்தி அனுப்பி, தன் வேலையை முடித்தாள்.
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்
பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்து ஆட்சியர் அலுவலகம் வந்தவனுக்கு, உதவி ஆட்சியர்களுடன் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இருந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் சென்ற கூட்டம் முடிந்த பின், தனது அலுவலக அறைக்கு வந்து அமர்ந்தான். அக்கணம் அலுவலக கைப்பேசி எண்ணிற்கு ஓர் அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றதும், “சார் வணக்கம்! நம்ம டிஸ்ட்ரிக்ட் கவர்ன்மென்ட் ஸ்கூல்-ல வர்ற இருபதாம் தேதி ஒரு ப்ரோகிராம் நடத்தறோம். நீங்க கண்டிப்பா கலந்துக்கணும்” என்று ஒருவன் பேசினான்.
‘யாரது? ஃபோன்ல இன்வைட் பண்ணிக்கிட்டு’ என்ற எரிச்சலில், “எதுனாலும் கலெக்டர் ஆபீஸ் வந்து ப்ராப்பரா பேசுங்க” என்றான்.
“சரி சார். சரி சார்” என்று பணிந்தவன், “சார்! இன்னொரு விஷயம். இந்த இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் கேஸ விட்டுடுங்க” என்று பக்குவமாக எடுத்துச் சொன்னான்.
அதைக் கேட்டதும், ‘ஓ! ஃபர்ஸ்ட் சசி. இப்ப நானா?’ என்று கோபம் வந்தாலும், மாறன் அழைப்பில் கவனத்தைச் செலுத்தினான்.
“எதுக்கு சார் தேவையில்லாத வேலை? இதெல்லாம் வேண்டாம” என்று இலகுவாகத் தொடங்கியவன், “உங்க நல்லதுக்காகத்தான் சொல்றோம். ஒதுங்கிடுங்க” என்று எச்சரிக்கும் குரலில் முடித்தான்.
‘எதற்காக அழைப்பு?’ என்று புரிந்ததும், “என்ன, மிரட்ட சொன்னாங்களா?” என்று, கோபம் வெளிப்படும் குரலில் கேட்டான்.
பின், “உன்னை ஃபோன் பண்ண சொன்னவங்கிட்ட ‘நான் இதுக்கெல்லாம் பயப்பிடற ஆளில்லை-ன்னு’ சொல்லிடு” என கடுமையாகச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.
அதன்பின்னர், பாதுகாவலர் ஒருவரை வரச் சொல்லி, “இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க. இதுலருந்து த்ரெட்டனிங் கால் வந்தது. என்னன்னு விசாரிங்க” என்று உத்தரவிட்டான்.
மேலும், “நம்ம டிஸ்ட்ரிக்ட்-ல இருபதாம் தேதி ஏதாவது கவர்ன்மென்ட் ஸ்கூல் பங்ஷன் இருக்கா-ன்னு செக் பண்ணுங்க” என்று சொல்லி, அவரை அனுப்பினான்.
அதற்கடுத்து வேலைகளில் மூழ்கினாலும், ‘அப்படி என்னதான் பண்றீங்க? கேஸ் பக்கம் கூட போக விட மாட்டிக்கிறீங்க?!’ என்ற கேள்வி மூளைக்குள் வந்து கொண்டே இருந்தது.
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா
வீட்டிற்கு வந்த மாறன், திலோ-தியாகு இருவரும் வெளியே சென்றிருந்ததால், தனியாகவே உண்டு முடித்து அறைக்குள் வந்தான்.
சசிக்கும் தனக்கும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை நினைத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. உடனே, ‘சுடருக்கு ஃபோன் பண்ணலாம்?’ என்று கைப்பேசியை எடுத்தவன், ‘ப்ச்! இன்னைக்கு வேண்டாம்’ என்று விட்டுவிட்டான்.
அதன்பின்தான் அவள் அனுப்பியிருந்த புகைப்படங்களைப் பார்த்தான். அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்க்கையில், காலையிலே அனுப்பியிருப்பது தெரிந்தது.
மெல்ல புன்னகைத்தபடியே, ‘ஜெலஸ் ஆவேன்-னு நினைச்சி சென்ட் பண்ணியிருப்பா. பொசசிவ்நெஸ் ஜாஸ்தி’ என முணுமுணுத்தவன், அவளின் இந்தக் குணத்தை முதன் முதலில் வெளிப்படுத்திய தருணத்தை நினைத்துப் பார்த்தான்.
காதல் ஓவியம், அத்தியாயம்-5
பாண்டிச்சேரி
வேகமாகச் சுடர் வந்து நின்றதும்… மாறனும், அவன் தோழன் ஆஷிக்-கும் ஒரு மாதிரி பார்த்தனர். இலகுவாகத் தூணில் சாய்ந்து நின்ற மாறன், நிமிர்ந்து நேராக நின்றான்.
ஏதும் சொல்லமால், ‘காலேஜ் பேக்கை’ திறந்து கொண்டிருந்த சுடரை, ‘என்ன செய்யப் போகிறாள்?’ என இருவரும் பார்த்தனர். பைக்குள் துழாவி ஒரு புத்தகத்தை எடுத்தவள், அதை மாறன் கையில் திணித்தாள்.
இதை எதிர்பாராதவன், முதலில் புத்தகத்தைத் தவறவிடப் பார்த்தான். பின், சரிசெய்து பிடித்துக் கொண்டான்.
“ஹலோ! என்ன வேணும்?” என ஆஷிக் கேட்டதைப் பொருட்படுத்தாமல், புத்தகத்தின் பக்கங்களைப் படபடவென சுடர் திருப்பினாள்.
“என்னாச்சுடா இந்தப் பொண்ணுக்கு?” என்று ஆஷிக் கேட்க, ‘தெரியலையே’ என்பதைப் போல் மாறன் தோளைக் குலுக்கினான்.
அப்போது புத்தகத்தின் ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு, ‘இதை… இப்போ… நீ எனக்கு சொல்லிக்கொடு!’ என்பது போல் சுடர் நின்றாள்.
அதன்பின்தான், ‘தான் மற்ற மாணவிகளுக்குச் சொல்லிக் கொடுத்ததால், இவள் இப்படிச் செய்கிறாள்’ என்று மாறனுக்குப் புரிந்தது. ஆஷிக்கிற்கும் புரிந்தது. இருவருக்குமே சிரிப்பும் வந்தது.
சிரித்தவாறே ஆஷிக், “ஹே! நீ என்ன மேஜர்? அவன் என்ன மேஜர்? கொஞ்சம் கூட யோசிக்காம புக் கொடுக்கிற?” என கிண்டலாகக் கேட்டதும், மாறன் வெடுக்கென்று ஆஷிக்கைத் திரும்பிப் பார்த்தான்.
“ஏன்-டா இப்படிப் பார்க்கிற? நீ சொல்லிக் கொடுக்கப் போறியா?” என ஆஷிக் எடக்காகக் கேட்டதும், சுடருக்கு ஒருமாதிரி இருந்தது. உடனே மாறன் கையிலிருந்த புத்தகத்தை உருவிக் கொண்டு, அந்த நடைகூடத்தில் ஓடினாள்.
“சுடர்! போகாத! உன்கிட்ட பேச…” என்று கத்திய மாறனின் வாயை, ஆஷிக் கைகளால் மூடினான். ‘ஏன் இப்படி?’ என மாறன் பார்த்ததும், “காலேஜ்-டா! இப்படிக் கத்துற?” என்று ஆஷிக் திட்டுகையில், கை தட்டும் ஓசை கேட்டது.
ஓசை வந்த திசை நோக்கி மாறன் பார்த்தான். ஒரு பார்வை பார்த்து நின்றாள். அந்தப் பார்வையில், ‘நீ எனக்கானவன்!’ என்ற உரிமையை எடுக்கும் ஆசை அதிகமாக வெளிப்பட்டது.
அந்த விழிமொழியை வாசித்து, அவள் ஆசைப் புரிந்ததும், ஒரு மென்முறுவல் தந்து நின்றான். அவனின் அந்தச் செய்கையில், ‘நான் உனக்கானவன்தான்’ என்ற உரிமையைக் கொடுக்கும் ஆசை எக்கச்சக்கமாக வெளிப்பட்டது.
அவன் உடல்மொழியை வாசித்து, அவனது ஆசையைப் புரிந்து கொண்டதும், அவர்கள் ஆசையின் நீளத்திற்கு சிரித்துவிட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
‘போகாதே’ என்றெல்லாம் மாறன் சொல்லவில்லை. ஆனால், போகின்றவள் தன்னை அவளிடம் தொலையச் செய்திருப்பதை உணர்ந்து விட்டான்.
காதல் ஒரு விசித்திர திருவிழா!
தொலைவதிலும், தொலைய வைப்பதிலுமே திருவிழா கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிப்பதால்… காதல் ஒரு விசித்திர திருவிழா!!
இந்த நிகழ்விற்குப் பின், மாறன்-சுடர் இரண்டு பேருமே காதல் திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள தயராகிவிட்டனர்.
யாழோவியம் அத்தியாயம்-6 தொடர்கிறது…
நினைவிலிருந்து மீண்டு வந்தவனுக்கு, அன்றைய நாளின் இறுக்கங்கள் எல்லாம் தளர்ந்திருந்ததால், இமைகள் இயல்பாய் மூடிக் கொண்டன.
இதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ராகவன் இல்லம்…
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர் ஒரு அரசியல்வாதி. அது தரும் ஒரு அதிகாரத் தோரணை, அவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிடிலும் அவரிடம் வெளிப்பட்டது.
தன் அலுவலக அறையில் இருந்த சூழல் நாற்காலியில் சுற்றிக் கொண்டே டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாலை நேரத்திற்குப் பின் வந்து… முக்கியச் செய்தி, பிரேக்கிங் நியூஸ் பிரிவுகளில் இடம்பெற்ற செங்கல்பட்டு மாவட்டச் செய்தியை, செய்தி வாசிப்பாளர் வாசித்துக் கொண்டிருந்தார்.
பொறியியல் நுழைவுத் தேர்வில் பார்த்து எழுத உதவியதாகக் கைது செய்யப்பட்ட மாணவன் மரணத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும் அவர்கள் இருவரின் மீது கொலை, தடயங்களை அழித்தல் உட்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மாவட்டத்தின் ஆட்சியர் யாழ்மாறன், மாணவன் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்து கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் இந்தச் செய்தியை வாசித்து முடித்ததும், விளம்பர இடைவேளை வந்தது.
இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே பின்தொடர்ந்து வருபவர் என்ற முறையில், இன்றும் இது சம்பந்தமான செய்தியைப் பார்த்து முடித்ததும், ராகவன் டிவியை ஆஃப் செய்தார்.
தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் ராகினி வீடு
அலுவலக அறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்து அன்றைய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகம் கலக்கத்துடன் இருந்தது. அக்கணம், அவர் பிரத்யேக கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்ற உடனே, “பார்த்தீங்களா? அவன் பயப்படலை. இதோ பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஆர்டர் இஸ்யூ பண்ணிட்டான்” என்று, அந்த ஆண்குரலிடம் புலம்ப ஆரம்பித்தார்.
“இப்போதான் பார்த்தேன். சரி விடுங்க” என்று ஆண்குரல் அமைதியாகச் சொன்னது.
“என்ன விடுங்க? இதுக்குத்தான் சொன்னேன். அவன் டிஎம் போஸ்ட்-ட ஏதாவது செய்யலாம்னு! நீங்கதான் கேட்கலை” என்று அந்த ஆண்குரலிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அழுத்தமாக, “இங்க பாருங்க” என்று ஆரம்பித்த ஆண்குரல், “அந்த டிஎஸ்பி, கலெக்டர் ரெண்டு பேருக்கும் டீசென்ட்டா ஒரு வார்னிங் கொடுத்தோம். பயந்து ஒதுங்கிப் போனாங்களா?” என்று கேள்வி எழுப்பியது.
‘இல்லை’ என்பது போல் ராகினி அமைதியாக இருந்தார்.
“இதுலருந்து என்ன தெரியுது? ரெண்டு பேரும் சேர்ந்து கேஸை கையில எடுத்திட்டாங்க. நீங்க ஒருத்தனை கோபப்படுத்தினா, இன்னொருத்தன் வேகமாக விசாரிக்க ஆரம்பிப்பான். அது நமக்கு நல்லதில்லை” என்று ஆண்குரல் தெளிவாகப் பேசியது.
அந்தப் பேச்சு ‘சரியென’ தெரிந்ததால், ராகினி எதுவும் பேசவில்லை.
“ரெண்டு பேருமே விசாரிக்க முடியாம போகணும்” என்று அப்படியொரு ஆத்திரத்துடன் சொன்ன ஆண்குரல், “நான் சொன்னதை நீங்க செஞ்சாச்சா?” என்று கேட்டது.
“ம்ம்ம்”
“அப்புறமென்ன? ‘என்ன நடக்குமோ?’-ன்னு நாம டென்ஷனா இருந்த மாதிரி, அவனும் ‘என்ன செய்ய?’-ன்னு தெரியாம நிப்பான்” என்று செல்லும் போது, அந்த ஆண்குரலில் ஒருவித திருப்தி இருந்தது.
கலக்கம் குறைந்து, “அந்த கலெக்டர் அப்படி நிக்கணும். அதுதான் எனக்கு வேணும்” என்று குரூர புன்னகையுடன் கூறி, ராகினி அழைப்பைத் துண்டித்தார்.