am27

am27

ஆசை முகம் 27

 

பங்களூர் – மாலை நேரத்து பூங்கா ஒன்றில்…!

கூட்டம் நிரம்பி வழிந்தது. வண்ணமயமான ஜோடிகள், வாலிபர்கள், வாலிபிகள், குடும்பங்கள், தனித்து வாணியைப் போல மிகச் சிலர்.

அங்கிருந்த பல வண்ண மலர்களைப்போல, பல விதமான மனிதர்கள்!

தனியொருத்தியாய் திரிந்தவளுக்கு, வேந்தனது நினைவும் வந்து வியாபித்திருந்தது.

மாமுவும் தன்னுடன் இங்கு இருந்தால்… மனதின் ஏக்கம்!

கண்களில் அந்த ஏக்கத்தின் தாக்கமாக விழிநீர் தழும்பியது. குனிந்தால் அந்நீர் பூமியில் விழுந்து அபஸ்வரமா ஏதேனும் நடந்துவிடுமோ என அஞ்சி, வானத்தை பார்த்தபடி, கண்களைச் சிமிட்டி, அந்நீரை தீர்த்தமாகச் சேமித்தாள்.

தன்னை ஏற்பதில் அப்படி என்ன சங்கடம் வேந்தனுக்கு.  வயது ஒரு பொருட்டல்ல என நான் கூறிய பிறகும், ஏன் தயக்கம். 

ஏற்றுக்கொள்ளவதால் எழக்கூடிய பிரச்சனை தான் என்ன…? தன்னாலும் இனி வேறு யாரையும் திருமணம் செய்ய இயலாது என்பதும் புரிந்திட, இந்த நிலைதான் தனக்கு இறுதிவரையா, என நினைத்தாலே நெஞ்சுக்குள் காந்தாரி மிளகாயின் காந்தலை உணர்ந்தாள். இப்படி வாணியின் சிந்தனை நீண்டிருந்தது.

ஏக்கர் கணக்கில் இருந்த இடத்தில், நீண்ட தூரம் நடந்தாள். சலிக்கவில்லை.  ஆனாலும் தனது நிலை சலிப்பைத் தந்திட, கிளம்ப எண்ணி, வந்த வழியே திரும்பினாள்.

‘அவங்களாவது என்னோட இதுபோலல்லாம் வரதாவது!’ இதுதான் சலிப்பிற்கான சாராம்சம்.

நீண்ட நேரம் இருக்க எண்ணி வந்தவளை, அங்கிருந்த சூழல், மக்கள், வாணியின் மனதில் எதிர்பார்ப்பை விதைத்து, உண்டான விரக்தியில் விரட்டியடித்திருந்தது.

வாயிலை நெருங்கும்போது, மீண்டும் வேந்தனது நினைவு… வேலியிட முனைந்த அவளது மனதை மீறி வந்திருக்க..

‘இந்நேரம் எந்த பிரான்ஞ்ல வர்க் பிஸில இருக்காங்களோ!’ பெருமூச்சுடன் அது அவள் நடையில் வெளிப்பட்டதோ!

வாயிலின் வழியே பலர் உள் நுழைவதும், சிலர் வெளியே செல்வதுமாய் இருந்தாலும், எதிரில் வந்த உருவம் வேந்தனைப் போலிருக்க, தனது எதிர்பார்ப்பினால் அவனைப்போலத் தோன்றுவதாக எண்ணி, ஆனால் பார்த்தும் பார்க்காமலும் சீரான நடையில் வந்தாள்.

உள்ளே நுழைந்தவன், ‘உள்ள இருக்காளா, கிளம்பிட்டு இருப்பாளா’ எனும் யோசனையோடு வந்திருக்க,  எதிரில் வந்து கொண்டிருந்தவளைக் கண்டு, ‘வண்டி இப்போதான் கிளம்பியிருக்கு! நல்ல வேளை! கொஞ்சம் லேட்டாயிருந்தாலும், இன்னிக்கும் வண்டி போயிட்டிருந்திருக்கும்’ என அங்கேயே வாணியை எதிர்நோக்கி நின்றிருந்தான்.

வாணியைக் கண்டதும் மனதெங்கும் எல்லையில்லா மகிழ்ச்சியின் சாரல் வேந்தனுக்கு.

இளம்பருவத்து உணர்வு குண்டுமணி அளவும் குறையாமல், மாறாமல் இருப்பதை உணர்ந்தவனுக்குள், உற்சாகம் பீறிட்டிருந்தது.

வேந்தனைப் போலிருந்தவன் தன்னைப் பார்ப்பதுபோலத் தோன்றியதை ஒதுக்கி, பார்வையை நாலாபுறமும் விரட்டி, நடையை எட்டிப் போட்டாள் வாணி.

‘மாமூ…! இவங்க இங்க எப்டி! அவங்கதானா…! இல்லை அவங்களை மாதிரியே வேற யாருமா?’ தயக்கம் வந்து தடைபோட மனம் தவிக்க வந்தாள்.

நெருங்கவே, நிற்பது சாட்சாத் வேந்தன் என்பது வாணிக்குத் தெரிந்தது.

வருத்தமும், ஏக்கமுமாய் நிறைந்திருந்த மனதில், அது போன சுவடு தெரியாமல், மகிழ்ச்சி வந்து நிறைந்திருந்தது பெண்ணுக்குள்.

அவளறியாமலேயே இதழில் மென்னகை வந்திருக்க, தவணை முறையில் வெட்கமும் வந்து எட்டிப் பார்த்தது.

நின்றிருந்தவனுக்கு வலது புறமாக நடந்து வந்தவள், அவனை நெருங்கியதும், மகிழ்ச்சி ஊற்று உள்ளமெங்கும் பன்னீராய் தெளித்திட, கால்கள் ஒன்றோடொன்று பிணைந்தாற்போல நடை தடைபட, பதற்றமும் ஒருசேர வந்திட, தன்னைச் சுதாரிக்கப் பாடுபட்டாள்.

சற்றுத் தயங்கி, வேந்தனை நிமிர்ந்து நோக்க முயன்றாள். தன்னையே பார்த்திருந்தவனை, அவளின் கடந்துபோன செயற்பாடுகளின் தாக்கம் நினைவில் வந்து, தயக்கம் மேலோங்கித் தடைபோட, நிமிர்ந்த நொடியிலேயே குனிந்து கொண்டாள்.

பெண்ணது முகத்தில் வந்துபோன பலவித உணர்வுகளை ரசித்தபடியே பார்த்து நின்றான் வேந்தன்.

வேந்தனிடம் எந்த சலனமும் இல்லாமல்போகவே, ஏமாற்றம் அலைபோல தன்னை நோக்கி வருவதை உணர்ந்து, நடையைத் துவங்க நினைக்க, அதற்குள் பெண்ணது வலக்கையை வேந்தனது வலக்கை பற்றியிருந்தது.

எதற்காகவும் தன்னை நெருங்காதவன், பொது இடத்தில் வைத்துக் கைபிடித்தது, சட்டென கிலியை மனதில் உண்டு செய்தாலும், தனது ஆழ்மனக் கலக்கம் அனைத்தும் சட்டெனக் கரைந்தாற்போல நெஞ்சில் நிம்மதி பரவியது.

ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, கேள்வியாய் தனது கையையும், வேந்தனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வேந்தனுமே வாணியை ஒன்றரை மாதங்களுக்குப்பின் இன்றுதான் நேரில் பார்க்கிறான்.

மெலிந்த வாணியின் தோற்றம் வேந்தனை சங்கடப்படுத்தியிருந்தது.

“நல்லாருக்கியா!” ஆண்மையின் அழுத்தமான குரல்

தன்னவனின் நலஉபச்சாரக் குரலைக் கேட்டதுமே, குரங்குமனம் குத்தாட்டம் போடத் துவங்கியிருந்தது. வேந்தனைப் பற்றிய மனக்குறைகள் அனைத்தும் ஆழிக்காற்றில் அடித்துச் சென்றார்போல சட்டென மறைந்திருந்தது.

“ம்” தலையை அசைத்தவள், “நீங்க!” என ஒப்புக்கு கேட்டு வைத்தாள்.

இன்னும் ‘தன்னெதிரில் வேந்தன் மாமூ!’ நிதர்சனத்தை நம்ப முடியவில்லை வாணிக்கு.

பெண் விழித்ததைக் கண்டவன், தன்னைக் கண்ட அதிர்ச்சியில் வாணி விழிப்பதாக எண்ணி சுற்றிலும் பார்வையை விட்டபடியே, “ரிலாக்ஸ் வாணீ” என்றபடியே அமர ஏதுவான இடத்தை பார்வையால் தேடியவாறு, “உங்கூட பேசணுமே வாணீ” பெண் தனது எதிர்பார்ப்பிற்கு என்ன கூறுவாளோ என்கிற தயக்கம் அதில் தொனித்தது.

மீராவையும், தனது தாயாரையும் கண்டு கொள்ளாமல், தனது பிடிவாதத்தில் ஜெயித்தவளாயிற்றே.  அதுதான் அந்தத் தயக்கத்திற்கான மூலம்.

பெண் எதுவும் கூறாது, விரிந்த இதழ்கள் சுருங்கிட அமைதி காத்தாள்.

நெரிசல் இல்லாதபோதும், தங்களுக்கிடையில் நெருக்கமும், தனியுரிமையும்(Privacy) குறைந்து போகும் எனக் கருதி, “கார் வெளிய பார்க் பண்ணிருக்கேன். வெளிய எங்கேயாவது போயிட்டே பேசலாம்!” வேந்தனது குரலில் தயக்கம்.

“இல்ல… இங்கேயே பேசலாம்!” பூங்காவை கை காட்டி பூவை கூறினாள்.

“இங்க ஃபீரியா பேச முடியாது! வெளிய போயிரலாம்!” எதிர்பார்ப்பில்லை, வேண்டல் இருந்தது.

அவ்வளவுதான் பெண்ணது திடம்.  வேந்தனை சந்தித்தவுடனேயே சிந்திக்க மறந்து போயிருந்தவள், தற்போது அவனது சொல்லிற்கு ஆடும் பொம்மையாக மாறியிருந்தாள்.

தலையை அசைத்து ஆமோதித்தவள், கையை மெதுவாக வேந்தனிடமிருந்து உருவிக் கொண்டாள்.

உணர்ச்சிக் குவியலாய் உருமாறியிருந்தவள், அதன்பின் சாதாரண நிலைக்கு வந்ததாக உணர்ந்தாள்.

வேந்தன் முன்னே நடக்க, அவனோடு நடந்தபடியே “இங்க எப்ப வந்தீங்க?”, மெல்லிய குரலில் வினவ

“எங்க போனேன்!” தோளைத் தூக்கிக் கேட்டான்.

“புரியலை!”

“இங்கதான நானும் இருக்கேன்!”

“…” தொட்டால்தான் சிலிர்த்தது என எண்ணி இருந்தவளுக்குள், உள்ளமெங்கும் ஊடுருவிய உணர்வு சொன்னது, வேந்தனின் குரலுக்கும் அதே வல்லமை உண்டென்பதை!

பெண்ணது மேனி சிலிர்த்து.

பேதை மனதின் ஆசை, ‘எனக்காகவா இங்க!’  பெருமிதம் கொண்டது.

அதையே முடிவாய் எண்ண முடியாது, ஏக்கமும் பெருமூச்சாய் வெளிவந்தது.

இது பெண்ணுக்கு புதிய செய்தி. ‘இங்கேயும் பிஸினெஸ் இருக்கும்போல!’ அறிவு சொன்னது.

மெதுவாக உடன் நடந்தபடி, வேந்தனை ஆராய்ந்தவாறு வந்தவளுக்குள், ‘கல்யாணத்தை நிறுத்தனும்னு எதுவும் ஐடியால என்னைத் தேடீ வந்திருக்காங்களோ’ நினைத்ததுமே, ‘அப்டி மட்டும் கேக்கட்டும்  இன்னிக்கு இங்க நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்ல’ என மனம் சொன்னாலும், நெஞ்சாங்குழியில் உண்டான பதைபதை மட்டும் குறையவே இல்லை.

‘அப்டியெல்லாம் கேட்டு, பிஞ்சு சிதறிக் கிடக்கிற மனசை இன்னும் நோகடிச்சிரக்கூடாது கடவுளே!’ எனும் வேண்டுதலும் மனதின் ஓரமாய் வாணிக்குள் இருந்தது.

வேந்தனுக்கு தன்னை திருமணம் செய்யும் உத்தேசம் இன்றுவரையில்லை என்பதான எண்ணம்தான் வாணிக்கு,

உபயம்! வேந்தனது பேச்சு மற்றும் செயல்கள். 

வாணி சென்னையைவிட்டுக் கிளம்பும்வரை அப்படித்தானே வேந்தனும் நடந்து கொண்டிருந்தான் பெண்ணிடத்தில்.

“இங்க வயிட் பண்ணு வாணீ!  வண்டிய பார்க்கிங்ல இருந்து எடுத்துட்டு வந்திரேன்!”

தலையை அசைத்து ஆமோதித்தவள் காத்திருக்க, ஐந்து நிமிடங்களுக்குள் வாணியின் அருகே வந்து வண்டியை நிறுத்தினான்.

வாணிக்கு முன்பக்கமாக அமர்வதா, பின்பக்கம் சென்று அமர்வதா எனக் குழப்பம்.

வேந்தனே, “முன்னாடியே வா!  திரும்பித் திரும்பி உங்கிட்ட பேச முடியாது!” காரணம் கூற

வண்டியில் ஏறி அமர்ந்ததும், “எங்க போகலாம்?”

“நீங்கதான் பேசணும்னு கூப்டீங்க!  எங்கனாலும் போகலாம்! ஆனா சிக்ஸ்கெல்லாம் ஷார்ப்பா ஹாஸ்டல்ல இருக்கணும்” முடிவை திடமாய்க் கூறினாள்.

அந்த இடத்திலிருந்து வண்டி நகரத் துவங்கி, ஐநூறு மீட்டரைக் கடந்த நிலையில், “என்னாச்சு வாணீ!”

“என்ன! என்னாச்சு” திருப்பிக் கேட்டாள். (வடிவேலுவின், என்னதா வேணும் பாணியில் படிக்கவும்)

“எதனால இப்டித் திடீர் முடிவு?” சாலையில் பார்வையைப் பதித்தபடியே கேட்டான்.

“புரியலை!” நடிப்பு

“எதனால திடீர்னு வீட்டைவிட்டுக் கிளம்பி வந்த?”

“அதான் மெசேஜ் பண்ணேனே!”

“அத மத்தவங்க நம்புவாங்க!  ஆனாஆஅஅ நானும் எப்டி நம்புவேன்னு.. இல்ல நம்பனும்னு எதிர்பாக்கற!”

“..” பேரழகிடமிருந்து பேரமைதி!

“நான் அன்னிக்கு அப்டிப் பேசினது தப்புதான்! நீ கீழ குனிஞ்சிட்டே சிரிச்சிட்டே சொன்னதும், உனக்கு திருவோட கல்யாணம் செய்யறதுல பிரியம்னு நினைச்சு அப்டிப் பேசிட்டேன்.  சாரிமா!” சரண்டர்.

வேந்தனது சரணடைந்த பதிலை எதிர்பார்த்திராதவள் திடுமென மாறிய மனதால் உண்மையைக் கூற விழைந்தாள்.

“உங்கள நேருல பாக்க ஷையா இருந்தது…” அந்த நாளின் நினைவு தற்போதும் வந்து அனுமதியின்றி ஆட்கொள்ள, தற்போதும் எழுந்த நாணத்தின் காரணமாக, தடுமாற்றம் வந்தது வாணிக்கு.

வண்டியை இயக்கியபடியே, பெண்ணது கையைப் பிடித்து அழுத்தி, வாணியின் நாணமேந்தி சிவந்து காணப்பட்ட ஒரு பக்க வதனத்தை ரசித்தபடியே, தன்னை நோக்கியவளை இளநகையோடு மேலே சொல் என செய்கை செய்தான்.

“….திரு அத்தான் அப்டிச் சொன்னது பொய்யின்னு தெரியும்.  அத நினைச்சு, சிரிப்பு வேற, இரண்டும் ஒரே நேரத்தில வர, அப்டிக் கீழ குனிஞ்சிட்டே சொன்னேன்” இலேசான வருத்தமும் இருந்ததோ.

ஊருடுவும் பார்வை பார்த்தவன், பெண்ணது வலக்கையை தனது இடக்கையால் பிடித்தபடியே, “….அதெல்லாம் சரி! அப்டி என்னோட சொல்லைத் தாங்க முடியாதவ மூனு நாளு அங்கதான் இருந்த!  ஆனா மூனு நாளுக்குப்பின்ன நீ கிளம்பினதுக்கும், என்னோட வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லங்கறதுதான் என்னோட அபிப்ராயம்.  வேற ஏதோ உன் மனசுக்கு பிடிக்காம அன்னிக்கு நடந்திருக்கு!  இதை சாக்கா வச்சிட்டு கிளம்பிட்ட!”

இதுவரை தன் மனதில் இருந்ததை யாரிடமும் கூறாதவன், தன்னவள் தனியாக இருந்ததால் மனம் திறந்திருந்தான்.

‘எப்டி இதையெல்லாம் கெஸ் பண்ணிக் கேக்கறாங்க’ பரிதவிப்பு மேலிட, பேச்சை மாற்ற எண்ணினாள் வாணி.

“இங்கயும் வேந்தன் க்ரூப்ஸ் ரன் ஆகுதா!”

“இல்ல!” என்றதோடு, “இப்ப ஏன் பேச்சை மாத்தற வாணீ!  நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு”

“இதக் கேக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?”

“நிறைய உங்கிட்ட கேக்க, சொல்ல, பேசனு இருக்கு!”

“இதை விட்டுட்டு, வேற என்ன பேச வந்தீங்கன்னு சொல்லுங்க” கட்டளைபோல வந்தது.

“மீரா, அப்புறம் அம்மா வந்து கூப்பிட்டப்போ ஏன் வரமாட்டேன்னு சொன்ன?”

“எப்டி வரது?”

“ஏன் இவ்ளோ நாள் அங்கதான இருந்த?”

“இனியும் அங்க இருக்க வேணானுதான கிளம்பி வந்தேன்.  திரும்பவும் எப்டி வரது?”

“திடீர்னு என்னாச்சு! உடமைக்காரி, உரிமைக்காரினு எல்லாம் ஏதோ மீராக்கிட்ட சொன்னியாமே! உடமைக்காரியா மாறத்தான கல்யாணம்னு டிசைட் பண்ணிருக்கோம்.  மீரா கூப்பிட்டப்ப வரலை சரி! அம்மா அவ்ளோதூரம் வந்து சொன்னப்பவும் நீ வரலைனு ஏன் சொன்ன?” தர்க்கங்கள் இருவரிடமும் சரிபாதியாக இருக்க, விவாதித்தே முடிவிற்கு வர முனைந்தனர்.

“பாட்டீமா சொன்னத நம்பித்தான ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தேன்.  ஆனா நீங்க மாறலையே! அப்புறம் எப்டி வரது!” குற்றச்சாட்டாக வந்தது.

அசட்டுச் சிரிப்போடு அமைதியாய் “…………” இப்போது வேந்தன்.

‘இன்னும் எப்டி மாற? ஏற்கனவே ஃபிரண்ட்ஸ், ஃபேமிலி சர்க்கிள்ல எல்லாம் கிண்டல் பண்றாங்க.  இவளுக்கு மட்டும் இன்னும் என்னைத் தெரியலை!’ தன்னை அவளுக்குப் புரியவில்லையே என்கிற ஆதங்கம், அமைதியாகியிருந்தான்.

“உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல உண்மையிலேயே விருப்பமா?”

“ஏன் இப்டிக் கேக்கற? விருப்பம் இல்லாமலா இவ்ளோ தூரம் உன்னைத் தேடி வந்து பேசிட்டுருக்கேன்!”

“வேணானு முன்ன சொன்னப்போ, இதவிட என்னை நல்லாவே கேர் பண்ணத்தானே செஞ்சீங்க!” தடாலடியான தயக்கமற்ற கேள்வி.

“அதுக்குத்தான் ரீசன் சொன்னேன்ல!”

“இப்ப எல்லாம் மாறிருச்சா!”

“மாறலை..! ஆனா நான் மனசை மாத்திக்கிட்டேன்”

“நம்ப முடியலையே!”

“அம்மா சொல்லலையா, நம்ம மேரேஜ் பத்தி!”

“சொன்னாங்க…! ஆனா உங்களைத்தான் இன்னும் என்னால நம்ப முடியமாட்டீங்குது!”

“ஏன்?”

“ஏன்னா? என்ன சொல்வேன்!”

“….”

“….ஒரு நாளாவது என்னை நீங்க ஆசையா பாத்திருக்கணும்! இல்லை அடிக்கடி எதாவது சாக்கு வச்சிட்டு வந்து, விசயமே இல்லன்னாலும் என்னைத்தையாவது எங்கிட்டப் பேசியிருக்கணும்! அதாவது கடலை…” சிரித்தவள், “இல்லை ஓரக் கண்ணாலயாவது பாத்து திருட்டுத்தனமா சைட் அடிச்சிருக்கணும்! என்னைச் சுத்தி சுத்தி வந்திருக்கணும். இப்ப நான் சொன்னதுல எதுவும் நடக்கலையே!”

“….”இகழ்ச்சியாகக் கூறியவளையே பார்த்தபடி, நகைப்போடு காரோட்டியவனின் வலதுகை ஸ்டீரியங்கைப் பிடித்தபடி இருக்க, இடக்கையால் பெண்ணது வலக்கையைப் பிடித்திருந்தவன் அதை எடுத்து தனது வலிமையான தொடையின் மீது வைத்துக் கொண்டான்.

அவனுக்கு வாணியின் அருகாமை, அவளது இலகுவான குத்தல் பேச்சு, எதையும் நம்ப முடியாத நிலை. “ஆளுதான் சிறுசு. ஆனா பேச்செல்லாம்… ம்ஹ்ஹூம்.. சான்சே இல்ல’ அதை தனக்குள் நம்ப வைக்கும் முயற்சியில் வேந்தன்.

வாணிக்குமே ஆச்சர்யம்!

வேந்தனது திடீர் செயலினால் உண்டான தடுமாற்றத்தோடு வாணியும் தொடர்ந்தாள்.

“……..நானா வந்து கேட்டப்பவும், வேணானு முகத்தில அடிச்சமாதிரி சொல்லியாச்சு! அத்தோட விட்டீங்களா! கொண்டு போயி ஹாஸ்டல்ல தள்ளிட்டு, விட்டது தொல்லைனு வெளியூறுக்கு, இல்லல்ல… வெளிநாட்டுக்கேஏஏ, கிளம்பிப் போயாச்சு!” மனக்குமுறல் ஒவ்வொன்றாக வெளி வந்தது.

“….”

“…அன்னைக்கு திரு அத்தான் வந்தத உங்ககிட்ட எதுக்கு வந்து சொன்னேன்னு நினைச்சீங்க! ம்ஹ்ம்”

“….”

“…அவரைக் கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இருந்தா, அத எதுக்கு உங்ககிட்டு வந்து சொல்லணும்!  சொல்லுங்க! என்னைப் பத்தி நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு வந்து சொன்னா… மண்டக்கசாயம் கணக்கா மண்டையக் காய வச்சாச்சு!”

பெண் பேசுவதைக் கேட்க கேட்க, வேந்தனின் இளநகை மேலும் விரிந்து கூடியதே அன்றி குறையவே இல்லை.

……………………..

சமரசம்!

ஒருவரின் கோபத்தில்

பதிலாகக் குரலுயர்த்தாது,

நியாயத்தில்

குளிர் காய்ந்து,

பேச்சினைக்

குறித்துக் கொண்டு,

மௌனத்தை

மனனம் செய்து,

இதயத்தை இலகுவாய்

இயங்கச் செய்து,

இதழில் புன்னகையோடு

எதிரெதிரே

எதுவுமே நடவாததுபோல

கடந்திட்டு,

வாய்ப்பு கிட்டும் நேரம்

வாகாய் பயன்படுத்தி

நோகாமல் எடுத்துரைத்து

நோக்கம் நிறைவேறிட

நோவில்லை…!

நொந்தாலும் அறிவின்நிலை

புரிந்து கொண்டு,

விட்டுத் தந்திடும்

வல்லமையை

வளர்த்துக் கொண்டால்

சம்சாரியின்

சாமார்த்தியம்,

சத்தியமாய்

சாதித்திடும்.

சமரசம்

சாத்தியமே!

………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!