YNM-8

YNM-8

8

முதல் இரவு

விமலனும் சுசீந்திரனும் சௌந்தர்யாவை எங்கு தேடியும் கிடைக்காத கடுப்பில் வீட்டிற்கு வர, அங்கேயோ இப்படி ஒரு சண்டை. இருவருக்குமே அதனை பார்த்து எரிச்சல் தாங்கவில்லை.

மனைவி மீது கோபமான சுசீந்திரன் அவரை தனியாக இழுத்து சென்று, “இப்போ எதுக்கு நீ சண்டை போட்டுட்டு இருக்கவ… பொண்ணை அனுப்பி வைன்னா அனுப்பி வைக்க வேண்டியதுதானே” என்று கூற,

“என்ன இப்படி சொல்றீங்க?கருவேப்பிலை கொத்து மாறி நமக்கு இருக்கிறது ஒன்னே ஒண்னுதென்… அவளுக்கு செய்ய வேண்டியதெல்லாம் திருப்தியா செஞ்சி அனுப்ப வேண்டாமா? அவளுக்கும் செஞ்சி பார்க்கலன்னா அப்புறம் வேறு யாருக்கு?” என்று வசந்தா அழுதபடி தன் கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டார்.

“இப்போ போய்ட்டு இருக்க பிரச்சனையில இதெல்லாம் ரொம்ப தேவையாக்கும்? இந்த அழுகுற வேலையெல்லாம் வேண்டாம்… ஒழுங்கா புள்ளையை அனுப்பிவிடு” என்று அவர் திட்டவட்டமாக சொல்ல,

“உனக்குதான் அந்த புள்ளைய பெத்தனாயா நானு” என்று பட்டென்று கணவனை கேட்டுவிட்டார் வசந்தா.

“ஏய்!” என்று சுசி எகிறி கொண்டு வர, “பின்ன… ஒரே ஒரு பொண்ணு கொஞ்சமாச்சும் கட்டி கொடுத்து அனுப்புறோமேன்னு கவலை இருக்கா உனக்கு… ஹ்ம்ம்… உனக்கு ஏன் இருக்க போகுது? உனக்கு உன் அண்ணன் பசங்க இருந்தா போதும்… அதான் ஒருத்தி உங்க மூஞ்சில எல்லாம் நல்லா கரியை பூசிட்டு போயிட்டாளே!” என்று வசந்தா சொல்லி முடிக்கும் சுசீந்திரன் மனைவியை எல்லோர் முன்னிலையிலும் அடித்துவிட்டார் ஊரே அப்படிதானே இவர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தது. அவர்களிடம் காண்பிக்க முடியாத கோபத்தை மனைவியிடம் காட்டிவிட்டார்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஸ்தம்பித்து சுசீந்திரனை பார்க்க, நடந்தவற்றை அனைத்தையும் பின்னிருந்து அமைதியாக பார்த்து கொண்டிருந்த மகிழினி, “அம்மா” என்று பதறி கொண்டு ஓடி வந்தாள்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் அந்த காட்சியை பார்த்து மிரட்சியோடு  நின்றுவிட சுசீந்திரன் மனைவியிடம், “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன கொன்னுடுவேன் பார்த்துக்கோ” என்று கத்திவிட்டு கலிவரதன் புறம் திரும்பி,

“நீங்க புள்ளையையும் பொண்ணையும் அழைச்சிட்டு போங்க மச்சான்” என்றார்.

கலிவரதனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. சில நொடிகள் யோசனையோடு நின்றவர் பின் மனைவியிடம் கண்ணசைத்து புறப்பட தயாராக சொன்னார்.

பரிக்கும் ஒருவகையில் அது நல்லதென்றேபட்டது. இங்கிருந்து தப்பித்தால் போதுமென்று தன் பெட்டியை அவன் அடுக்க, இன்னொருபுறம் வசந்தா அழுது கொண்டே மகளுக்கு தேவையான பொருட்கள் துணிமணிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.

“எனக்காக ஏன் ம்மா நீங்க அப்பாகிட்ட சண்டை போட்டீங்க… அவர் கோபத்தை பத்தி உங்களுக்கு தெரியாதா?” என்று அவளும் அழுது தேம்பி கொண்டே கேட்க,

“என் பொண்ணுக்கு கண்ணுக்கு நிறைஞ்ச மாறி எல்லாம் செய்யணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?” என்று சொல்லி வேதனையோடு மகளை அணைத்து கொண்டார். அவர் விழியில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.

“இதுக்குதான் இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேன்” என்று மகிழினி சொல்ல,

“அடி போடி… இன்னைக்கு இல்லன்னாலும் என்னைகாச்சும் அது நடக்கதானே போகுது… அதுவும் எனக்கு மாப்பிள்ளை பார்த்தா நல்ல மாதிரி தோணுது மகிம்மா” என்று அவர் மகளின் கண்ணீரை துடைக்க,

‘நல்ல மாதிரி… நொள்ள மாதிரி… புளுகு மூட்டை… பொய்… பிராட்’ என்று பரி பற்றி மகிழினி வாயிற்குள் முனகி கொண்டிருந்தாள். ஆனால்  வசந்தா மகளின் மனநிலையை கவனியாமல் அவள் மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று அறிவுரை வழங்கி கொண்டிருந்தார்.

கலிவரதன் தம் குடும்பத்தோடு கிளம்ப தயாராக இருக்க மகிழினியை கண்ணீரோடு வசந்தா வழியனுப்ப தாமரை அவரிடம், “நீங்க ஒன்னும் கவலை படாதீங்க மதனி… மகிகயை நான் என் பொண்ணு போல பார்த்துக்குவேன்” என்று பரிவாக சொல்ல நாத்தனாரின் கரத்தை பற்றி கொண்டு அழுதார் வசந்தா!

“பார்த்துக்கோ தாமரை… ரொம்ப சின்ன பொண்ணு” என்றவர் சொல்ல,

“நான் பார்த்துக்கிறேன் மதனி” என்று மீண்டும் தாமரை அவருக்கு தைரியம் சொல்ல கலிவரதன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, “தாமரை!” என்று கத்தினார்.

தாமரை எல்லோரிடமும் சொல்லிவிட்டு கலிவரதனின் காரில் ஏற,  மகிழினி “போயிட்டு வரேன் அப்பா” என்று கண்ணீரோடு தந்தையின் முகம் பார்த்தாள்.

“ம்… சரி ம்மா” என்று மகளின் தலையை வருடி கொடுத்தார். அப்பாவின் தோளில் சாய்ந்து அழ வேண்டுமென்று அவளுக்குள் இருந்தாலும் சுசீந்திரனின் இறுக்கமான பார்வை எப்போதுமே அவளை நெருங்கவிட்டதில்லை. இப்போதும் அதே நிலைமைதான். ஏக்கத்தோடு தந்தையை பார்த்தவள் பின் ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்லிவிட்டு திரும்பினாள்.

அவளின் பெரியம்மா மஞ்சுளாவிடம் சொல்ல, “மம்ம்ம்ம் சரி சரி” என்று முகத்தை தொங்கபோட்டு கடுப்பாக உரைத்தார். மகள் வாழ வேண்டிய வாழ்க்கையாயிற்றே!

அதை எண்ணி அவர் உள்ளுர பொருமி கொண்டிருக்க மகிழினி மீண்டும் தன் தாய் முகத்தை பார்த்தாள். போ என்றவர் சமிஞ்ஞை செய்ய, அவள் மனமோ அவள் ஆசையாக வளர்க்கும் முயல் குட்டிகளை பார்க்க ஏங்கியது. ஆனால் பார்க்க அனுமதிப்பார்களா?

மனதிற்குள் அந்த வாயில்லாத ஜீவனை எண்ணி அவள் மருகி கொண்டே செல்ல,  பரியும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டான். முக்கியமாக அவன் சுசீந்திரனை பார்த்து, “போயிட்டு வரேன் மாமா!” என்று விளிக்க, அவர் யோசனையாக அவனை பார்த்து தலையாட்டினார்.

முன்னமே அவன் இப்படி ஒருமுறை சொன்னதை எண்ணி அதனை ஒப்பிட்டு பார்த்தவருக்கு பரியின் நடவடிக்கையிலான சந்தேகம் மனதை துளையிட்டு கொண்டிருந்தது.

அதற்கு பிறகு கலிவரதன் தன் காரில் முன்னே செல்ல, பரி மகிழினியோடு பின்னே தன் டஸ்டர் காரில் புறப்பட்டான். மகிழினி முன்னிருக்கையில் அமரவும், தன்னவளுடன் செல்ல போவதில் வானமே வசமான உணர்வு அவனுக்கு. ஊருக்கு புறப்பட்டு வரும் போது கூட இப்படி ஒரு பெண்ணின் மீது காதல் கொள்வோம் என்றெல்லாம் அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அதுவும் அவளிடம் காதலை தாண்டி ஒரு புதுவிதமான போதையும் ஈர்ப்பையும் உணர்ந்தான். திகட்ட திகட்ட அவளை ரசித்து பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அதுவும் அவன் கேட்டகாமலே அது நடந்த விட்ட சந்தோஷத்தில் அவனுக்கு தலை கால் புரியவில்லை.

தேவதையாக அவள் சிவப்பு நிற பட்டுடுத்தி கொண்டு அமர்ந்திருக்க அவனின் மனமெல்லாம் அவளிடமே! ஆனால் மகிழினியின் பார்வை அவனை திரும்பி கூட பார்க்காமல் எங்கோ வெறிக்க, அவளிடம் எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தில் பேசிவிட வேண்டுமென்ற என்ற எண்ணத்தோடு,

“மகி” என்று காரை இயக்கி கொண்டே அவள் புறம் திரும்பி அழைத்தான். அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை. வேண்டுமென்றே அவனை அவள் நிராகரிக்க, “மகி… கொஞ்சம் பேசணும்” என்றான்.

அப்போதும் அவன் புறம் அவள் திரும்பவில்லை. எதுவும் பேசவுமில்லை.

“மகி” என்றவன் மீண்டும் சத்தமாக அழைக்க,

“எனக்கு உங்ககிட்ட எதுவும் பேச வேண்டாம்” என்றவள் திரும்பி கொண்டே அழுத்தமாக பதிலுரைத்தாள்.

“வாழ்க்கை பூரா என் கூட பேசாமலே இருந்திருவியா டி நீ” என்றவனும்  கோபத்தோடு குரலயுயர்த்தினான். அந்த நொடி அவள் அவன் புறம் திரும்ப, காரின் பின்னிருந்து ஏதோ சத்தம் கேட்க அவள் பின்னோடு திரும்பி நோக்கினாள்.

“அங்க என்ன பார்க்கிற… இங்க என் முகத்தை பாரு” என்றவன் சொல்லி கொண்டிருக்கும் போது கார் வேகத்தடையில் மோதி ஏறி இறங்க, மகிழினியின் காலில் ஏதோ தட்டுப்பட்ட உணர்வு!

அதை அவள் குனிந்து எடுக்க, அது ஒரு காலி பியர் பாட்டில். பரியின் முகம் இருளடர்ந்துபோனது. அவள் அதனை கையிலேந்தி கொண்டு அவனை  கோபமாக முறைக்க, ‘அறிவு கெட்டவனுங்க… பாட்டிலை கூட தூக்கி போடாம வைச்சிருக்கானுங்க’ என்று முனகி கொண்டே,

“பிரெண்ட்ஸுங்க கூட வரும் போது…” என்று இழுத்துவிட்டு, “அதை என்கிட்ட கொடு மகி… போற வழில தூக்கி போட்டிரலாம்” என்று  அதனை அவள் கரத்திலிருந்து பெற்று கொண்டான்.

அதோடு அவன் தன் மனதிற்குள், ‘பரி உனக்கு டைமே சரியில்ல… பேசாம சைலண்ட்டா வந்திரு வீட்டுக்கு போய் பேசிக்கலாம்’ என்று எண்ணி கொண்டு காரை செலுத்துவதில் மும்முரமாக இருக்க, மகிழினி காரின் சீட்டில் சாய்ந்து கொண்டு அப்படியே உறங்கி போனாள்.

உரிமையிருந்தும் நெருங்க முடியாமல் பரியின் மனம் மகிழினியை பார்த்து பார்த்து ஏங்கி கொண்டிருக்க,  இருள் சூழுந்த சமயத்தில் அவர்கள் கார் சென்னைக்குள் பிரவேசித்தது. பிரமாண்டமான அந்த வாயில் கதவை தாண்டி கார் உள்ளே நுழைய சில நொடிகளில் தாமரை உறங்கி கொண்டிருந்த மருமகளிடம், “மகி குட்டி” என்று அவளை தட்டி எழுப்பினார்.

அவள் விழிகளை திறந்து மலங்க மலங்க விழித்தாள். அவளை இன்னும் சிறுபிள்ளையாகத்தான் பார்க்க தோன்றியது தாமரைக்கு! ஆதலால் தாமரை அவளை அப்படித்தான் செல்லமாக விளிப்பார்.

“வீடு வந்திருச்சுடா… இறங்கு” என்று தாமரைசொல்ல, அவள் திரும்பி ஓட்டுனர் இருக்கையில் பார்த்தால் பரி அங்கு இல்லை. இறங்கி வந்தவள் அந்த பங்களாவை மேலும் கீழுமாக பார்த்தாள். பெரிய வீடுதான் என்றாலும் அவர்கள் வீடு போன்ற சுற்றிலும் தோட்டமெல்லாம் இல்லையென்று தோன்றியது.

அவற்றை பார்த்து கொண்டே மகிழினி நடந்து வர ஆரத்தி தட்டை கையில் வைத்து கொண்டு தாமரை, “இரும்மா” என்று அவளை நிறுத்தி வைத்துவிட்டு,

“பரி எங்கே போனான்?… பரி பரி” என்றவர் குரல் கொடுக்க, “தோ வந்துட்டேன் ம்மா” என்று பின்புறம் இருந்து வந்தான்.

“அதுக்குள்ள ஏன் கண்ணா உள்ளே போன” என்று அவர் மகனிடம் கேட்க,

“உள்ளே போல… இங்க பின்னாடி… நீங்க இப்ப சுத்துங்க” என்று அவன் வேண்டுமென்றே மகிழினியை இடித்து கொண்டு அவள் அருகில் நின்றான்.

அத்தை முன்னிலையில் முறைக்க கூட முடியாமல் அவள் விலகி நிற்க பார்க்க அவன் அவள் கரத்தை அழுந்த பற்றி கொண்டான். தாமரை திருஷ்டி கழித்து மூன்று சுற்று முடித்து மகனுக்கும் மருமகளுக்கும் பொட்டு வைத்துவிட்டு,

“வலது காலை வைச்சு உள்ளே போங்க” என்று சொல்லிவிட்டு சென்றார்.

மகிழினி ரொம்பவும் ஆராய்ச்சி செய்து வலது காலை உயர்த்த பரி அவளை அலேக்காக கையில் தூக்கி கொண்டான்.

“என்ன பண்றீங்க?என்னை இறக்கி விடுங்க” என்றவள் படபடக்க,

“முடியாது… என்னை கார்ல வரும் போது எவ்வளவு கடுப்பேத்தின” என்று சொல்லி கொண்டே அவளை வீட்டிக்குள் தூக்கிவர, “இறக்கி விடுங்க” என்று தத்தளித்து கொண்டிருந்தாள் மகிழினி!

“மாட்டேன்” என்று சொல்லி உள்ளே சுழன்று மேலே சென்ற படிகெட்டில் அவளை தூக்கி சென்று தன் அறைக்குள் நுழைய பார்க்க,

“என்னை விடுங்க” என்று அவசரமாக அவன் கரத்திலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ஒரே ஓட்டமாக கீழே இறங்கி வந்துவிட்டாள்.

இதயமெல்லாம் படபடக்க அவள் மூச்சு வாங்க நிற்க, “என்னம்மா மகி?” என்று உள்ளே வந்த தாமரை கேட்க,

“ஒன்னும் இல்ல… அத்தை” என்று மறுப்பாக தலையசைத்தாள். மேலே பரி அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

“ச்சே” என்று முகத்தை சுளுக்கி கொண்டு அவள் முகப்பறையில் வந்து நிற்க, கலிவரதன் எதை பற்றியும் கொஞ்சமும் அக்கறையில்லாமல் தொலைக்காட்சி பெட்டிக்குள் மூழ்கியிருந்தார்.

தாமரை அப்போது மருமகள் தோள் மீது கை வைத்து, “உன் பெட்டி எல்லாம் இந்த ரூமுக்குள்ள வைக்க சொல்லி இருக்கேன்… நீ போய் குளிச்சிட்டு பெட் மேல ஒரு புடவை எடுத்து வைச்சிருக்கேன்… அதை கட்டிட்டு வா” என்றார்.

மகிழினி அந்த அறையை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் தன் அத்தையின் புறம் திரும்பி, “அத்தை” என்றவள் அழைக்க, “சொல்லுடா” என்றார்.

“அது… இந்த பர்ஸ்ட் நைட்டெல்லாம் இன்னைக்கே வைப்பீங்களா?” என்றவள் தயங்கி தயங்கி கேட்க, தாமரை கொல்லென்று சிரித்துவிட்டார்.

“இன்னைக்கு வைக்காம” என்றவர் முகம் மலர சொல்ல, “அது இல்ல அத்தை” என்றவள் இழுக்க,

“நீ முதல போய் டிரஸ் மாத்திட்டு வாம்மா” என்றார்.

அவளும் வேறு வழியின்றி அந்த அறைக்குள் சென்று குளித்து முடித்து அவர் எடுத்து வைத்திருந்த மஞ்சள் நிற புடவைக்கு மாறியிருந்தாள். மெலிதான பட்டு ரகம். அவள் நிறத்திற்கு உடல் வாகிற்கு அந்த புடவை பாந்தமாகவும் எடுப்பாகவும் இருந்தது.

தாமரை வேலையாட்கள் மூலமாக பரியின் அறையை தயார்  செய்து அனைத்து ஏற்பாடுகளையும் முன்னே நின்று செய்து முடிக்க, கலிவரதன் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

“சொந்த காரங்க எல்லாம் கூட்டி செய்யணும்… எல்லா இந்த மனுஷனால” என்று தாமரை புலம்பி கொண்டே அவர்கள் முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு,

“புள்ளைங்கள் ஆசீர்வாதம் செய்யணும்” என்று கணவனைஅழைக்க கடமைக்கென்று அவரும் வந்து நின்று ஆசிர்வாதம் செய்தார்.  இருவரையும் கடவுளை வணங்க வைத்து அறைக்குள் தாமரை அனுப்ப, மகிழினி முகம் வாடி போனது.

அவள் என்ன சொன்னாலும் அது உபயோகமில்லை. மௌனமாக தன் அத்தை சொன்னவற்றை உள்வாங்கி கொண்டாள். இருப்பினும் மகிழினிக்கு பரியின் எண்ணமே உள்ளுர குளிரெடுத்தது. போதா குறைக்கு சரியாக அந்த நேரம் பார்த்து ஊரிலிருந்து ஃபோன் செய்து வசந்தா, “பார்த்து நடந்துக்கோ மகி” என்று அறிவுரை வழங்க அவளால் எதுவும் பேச முடியவில்லை.

அவள் எந்த அறைக்குள் செல்லாமல் தலைதெறிக்க ஓடி வந்தாலோ இப்போது அந்த அறைக்குள் தனியாக நுழைய அஞ்சி கொண்டு அவள் மெதுவாகவே உள்ளே வர, அந்த அறையின் அலங்காரங்கள் எல்லாம் அவளின் அச்சத்தை மேலும் கூட்டியது.

பரி தன் படுக்கையின் மீது ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தான். அவள் அந்த அறையின் சுவற்றில சாய்ந்தபடி ஒரு ஓரமாக நின்று கொள்ள,

“மாமா கிட்ட வரமாட்டியா மகி” என்றவன் புன்னகை முகமாக கேட்டான்.

“யார் மாமா?” என்றவள் அவனை பல்லை கடித்து கொண்டு முறைக்க,

“நான் உங்க அக்காவை கட்டிலனாலும்… உனக்கு நான் அத்தை பையன்டி…எப்படி பார்த்தாலும் இந்த பரி உனக்கு மாமன்தான்” என்றான்.

“மூஞ்சி… சரியான பிராடு புளுகு மூட்டை… ஏமாத்துகாரன்” என்றவள் சொல்ல அவன் சத்தமாக சிரித்துவிட்டு, “இன்னும் எதாச்சும் மிச்சம் இருக்கா?”” என்று கேட்டு அவன் எழுந்துவர,

“வேண்டாம்… என் கிட்ட மட்டும் வராதீங்க” என்றவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல பரியும் அவளை விடுவதாக இல்லை.

“மகி அங்கேயே நில்லு” என்றவன் அழைப்பதை காதில் வாங்காமல் அவள் அந்த அறையை சுற்ற ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அவள் பரியின் கரங்களில் சிக்கி கொண்டாள். அவளை இடையோடு வளைத்து தன்னருகில் அவன் இழுத்து அணைத்து கொள்ள, “என்னை விடுங்க” என்று அவள் கத்த,

“சரியான லவுட் ஸ்பீக்கர்… வாயை மூடுறி” என்று மிரட்டினான்.

“நீங்க என்னை விடுங்க” என்றவள் தவிக்க அவளை படுக்கையில் இழுத்து தள்ளியவன் அவள் அருகில் நெருக்கமாக படுத்து கொள்ள அவள் பயத்தில் இறுக்கமாக தன் கண்களை மூடி கொண்டாள்.

ஆனால் அவன் அந்த எல்லையை கடக்காமல் அவளை மௌனமாக பார்த்து கொண்டிருக்க, அவள் மிரட்சியோடு மெல்ல விழிகளை திறந்து அவன் முகத்தை ஏறிட்டாள்.

மீண்டும் அவள், “என்னை விடுங்க” என்று அவன் கரத்தை விலக்க போராட,

“மாட்டேன்… யு ஆர் மை க்யூட் டால்… நீ இப்படியே என் பக்கத்தில இருக்கணும்” என்றவன் சொல்ல, அவனை குழப்பமாக பார்த்து கொண்டிருந்தாள்.

அவளை கட்டியணைத்து கொண்டிருந்தானே ஒழிய அவன் அவளிடம் அத்து மீறவில்லை. அவன் பார்வை அவளையே பார்த்து கொண்டிருக்க, “நீ கம்னு தூங்கு… நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்” என்க,

அவள் அவனை சந்தேகமாக பார்க்க, “ப்ராமிஸ் பேபி” என்று சொல்ல அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீங்க இப்படியிருந்தா எப்படி எனக்கு தூக்கம் வருமாம்” என்றவள் கேட்க,

“அதெல்லாம் எனக்கு தெரியாது… இனிமே இப்படிதான்… பழகிக்கோ” என்றவன் அழுத்தமாகசொல்ல, “அதெல்லாம் முடியாது… என்னை விடுங்க” என்று அவளும் பிடிவாதமாக அவனிடமிருந்து பிரிந்து செல்ல முயன்றாள்.

அவன் இன்னும் இறுக்கமாக இழுத்து அணைத்து கொண்டு, “சேட்டை பண்ண… நான் அப்புறம் என் லிமிட்டை க்ராஸ் பண்ணிடுவேன்” என்று எச்சரிக்கை செய்ய, அவள் அவனை முறைத்து பார்த்துவிட்டு அவனிடம் எந்த எதிர்வினையும் காட்டாமல் மௌனமாக இருந்துவிட்டாள்.

“அப்படி” என்றவன் சொல்ல,

“எனக்கு உங்களை பிடிக்கல” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

“பிடிக்கலன்னா… நேத்தே உங்க அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே” என்றவன் கேட்க,

“நிறுத்தியிருப்பேன்… நிறுத்தலாம்னுதான் பார்த்தேன்… ஆனா அண்ணனுங்க அப்பா பேசிட்டு இருந்ததை கேட்டதும் எனக்கு பயம் வந்திருச்சு… நான் எதையாச்சும் சொல்ல போக… அவங்க உங்க மூலமா அக்காவை கண்டுபிடிச்சு எதாச்சும் பண்ணிட்டா… பண்ணிட்டா என்ன…. பண்ணிடுவாங்க

சாகிற வரைக்கும் அப்புறம் நான் நிம்மதியா இருக்க முடியுமா… அதான் சொல்லல” என்று சொல்லி குழந்தை போல் அவள் அழ, “மகி” என்று அவன் அவள் கண்ணீரை துடைக்க வரவும்,

“எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்… நீங்க ஒன்னும் என் கண்ணை துடைக்க வேண்டாம்” என்று அவளே அவள் கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“மகி… நான் நடந்ததை உன்கிட்டசொல்லணும்” என்றவன் ஆரம்பிக்க,

“நீங்க என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது சரின்னு ஆகாது” என்றாள்.

“சரியா தப்பான்னு நான் சொன்ன பிறகு முடிவெடு மகி” என்றவன் சொல்ல அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு அழுகை அழுகையா வருது… என்னை தூங்க விடுங்க… இப்ப நான் எதையும் கேட்கிற மனநிலையில இல்ல” என்றாள்.

“சரி தூங்கு” என்றவன் எட்டி அந்த அறை விளக்கை அணைத்துவிட அவள் விலகி செல்ல பார்த்தாள். அவன் விடாமல் அவளை இழுத்து தன்னருகில் படுக்க வைத்து கொண்டு, “இந்த டபாய்க்கிற வேலையெல்லாம் வேண்டாம்… நீ இப்படிதான் என் பக்கத்தில் இருக்கணும்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு விழிகளை மூடி கொண்டான்.

அவன் கரதிற்குள் இருப்பதால் அவள் அவதியுற்று கொண்டிருக்க, அவளுக்கு உறக்கமே வரவில்லை. அவன் உறங்கிவிட்டனா என்று அவன் மூச்சை சோதித்து பார்த்துவிட்டு அவள் கரத்தை அவள் விலக்க எண்ண ரொம்பவும் பிரயத்தனப்பட்டாள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மாறாக இன்னும் இறுக்கமாக அவன் அவளை அணைத்து கொண்டதுதான் மிச்சம்.

“ச்சே” என்று கடுப்பானவள் அதற்கு மேல போராட முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல அவளும் தம் விழிகளை மூடி உறங்கிவிட்டாள். விடிந்து அவள் கண் விழிக்க பரியின் கரம் அவள் மீது இல்லை. அவளின் கரம்தான் அவன் மீதிருந்தது.

பதறி கொண்டு தன் கரத்தை எடுத்துவிட்டு எழுந்தமர்ந்தவள் பரியை எரிச்சலோடு பார்த்தாலும் அவன் மீது இம்முறை ஏனோ கோபம் வரவில்லை.

எழுந்து குளித்துவிட்டு தன் அத்தையை தேடி கொண்டு போக தாமரை சமையலறையில் இருந்தார். “அத்தை” என்றவள் குரல் கொடுக்க,

“எழுந்திட்டியா மகிகுட்டி” என்று சிரித்த முகமாக அவளை வரவேற்று, “இரு கண்ணு… டீ போடறேன்” என்றார். “நான் போட்டுக்கிறேன் அத்தை” என்று அவள் சொல்ல, “அதெல்லாம் முடியாது” என்று மறுத்தார் தாமரை. அவர்களுக்கு இடையில் இப்படி சம்பாஷனை நடந்து கொண்டிருக்க, “தாமரை!” என்று அப்போது அலறினார் கலிவரதன்!

“மாமா ஏன் இப்படி கத்திராரு?” என்று மகி பதட்டம் கொள்ள, “அவருக்கு வேற என்ன வேலை?” என்று சொன்ன தாமரை,

“என்னங்க” என்று கேட்டு கொண்டு அவர் அழைத்து இடத்திற்கு ஓடினார் தாமரை.

“இது என்னது டி? இங்க இதுஎப்படி வந்துது” என்று அவர் ஆக்ரோஷமாக மனைவியிடம் எகிறி கொண்டிருந்தார்.

மகிழினியும் பின்புற வாயிலை கடந்து என்னது என்று எட்டி பார்த்தாள். முதலில் என்னவென்று புரியாமல் பார்த்தவள் பின் அதனை கண்டு, “ஐ! என் முயல் குட்டி” என்று முகம் மலர்ந்தாள்.

கலிவரதன் மனைவியை புரியாமல் பார்க்க, “மகிக்கு முயல்ன்னா ரொம்ப இஷ்டம்… அதான் அவங்க வீட்டில இருந்து பரி எடுத்துட்டு வந்திருப்பான் போல” என்று சொல்ல,

“ரொம்ப முக்கியம்… வரட்டும் அவனுக்கு இருக்கு” என்று அவர் வெறுப்பாக சொல்லிவிட்டு அகன்றார். தன் அத்தை சொன்னதை காதில் வாங்கி கொண்ட மகிழினியின் விழிகள் ஆச்சரயத்தில் விரிய, இதை எப்போது அவன் எடுத்து வந்திருப்பான் என்று யோசித்து கொண்டிருந்தாள்.

காரில் வரும் போது கேட்ட சத்தத்தை நினைவுப்படுத்தி கொண்டு, “நீங்கதானா அது… என் கூடவே நீங்களும் வந்துட்டீங்களா?” என்று அந்த முயல்களிடம் ஆசையாக பேசினாள்.

பரி அப்போது அவள் பின்னோடு வந்து காதோரம், “அவங்களா ஒன்னும் வரல… என் டாலுக்காக நான்தான் அவங்கள கூட்டிட்டு வந்தேன்…இங்க எந்த காட்டு பூனையும் வராது… உன் முயலுங்க  சேஃபா இருக்கலாம்” என்று சொல்லஅவள் அவனை வியப்பாக நோக்கினாள்.

“என் டாலுக்கு ஹப்பியா?” என்றவன் கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள்.

“இந்த மாமாவுக்கு ஒரு தேங்க்ஸ் கூட கிடையாதா?” என்றவன் ஏக்கமாக கேட்க சில நொடிகள் யோசித்துவிட்டு பின் அவன் புறம் திரும்பி போனால் போகிறது என்று, “தேங்க்ஸ்” என்றாள். அப்போதும் அவன் முகத்தை பார்க்காமல் எங்கோ வெறித்து கொண்டு!

“தேங்க்ஸ் மாமான்னு சொன்ன குறைஞ்சா போயிடுவ” என்றவன் கேட்க, அவனை முறைத்து பார்த்துவிட்டு வீம்பாக நின்றாள்.

அப்போது, “பரி” என்று அவன் தந்தையின் அழைப்பு கேட்டு, “வரேன் பா” என்றவன் உள்ளே ஓட அவள் தன் இறுக்கம் தளர்ந்து அவள் முயல்களை பார்த்து மெல்ல இதழ்களை விரித்தாள். அத்தனை நேரம் மனதிலிருந்த சோர்வும் வேதனையும் களைந்து புத்துணர்ச்சி உண்டானது.

அவனோ மீண்டும் திரும்பி வந்து, “என் க்யூட் டால் டி நீ… உன் ஸ்மைல் அதை விட க்யூட்” என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் மின்னல் வேகத்தில் மறைந்தான் .

அவன் சென்றதும் அவசரமாக அவள் கன்னத்தை தேய்த்து கொண்டாலும் அவள் முகம் செவ்வானமாக சிவிந்து அவள் மனநிலையை அப்பட்டமாக காட்டி கொடுத்துவிட்டது. எந்த மாதிரி உணர்வு என்று புரியாமல் அவனின் செய்கையில் அவள் உள்ளம் தடுமாறி நின்றாள்.

error: Content is protected !!