Yyir Vangum Rojave–EPI 30

ROSE-3a1c4a22

அத்தியாயம் 30

வீட்டுல உள்ளவங்க ஊர்க்காரங்கன்னு எல்லாரோட எதிர்ப்பார்புங்குற பிரெசர் குக்கர்ல தான் நீங்க வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. பிரெசர் அதிகமாகும் போது விசிலடிக்கும். ஊப், டப். காத்து(உயிர்) போயிரும்.

ஆர்யா — பெங்களூர் நாட்கள்

 

 

“வேய்ட் டேன்! ஓடாதே!” என தன் இரட்டை சகோதரனைத் துரத்தியபடி ஓடினாள் ஐந்து வயது தேவி. தங்கையிடம் மாட்டாமல் அவளது பந்தை எடுத்துக் கொண்டு மின்னலென வீட்டிற்குள் நுழைந்தான் டேன்.

“மாம், மாம்!” என கூக்குரலிட்டவாறே இருவரும் ஹால் சோபாவில் கட்டிப் பிடித்து உருண்டனர். எப்பொழுதும் இப்படி சண்டை ஆரம்பிக்கும் பொழுதே ரெப்ரி வேலை பார்க்க உடனே ஆஜராகும் அவர்களின் அம்மாவை பத்து நிமிடங்கள் ஆகியும் காணாததால் இருவரும் சண்டையை நிறுத்தி விட்டு கிச்சனுக்கு விரைந்தனர். அங்கே கண்ட காட்சியில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டு பயத்துடன் நின்றிருந்தனர்.

மேரி அழுது கொண்டிருக்க அவர் முன்னே ஒரு ஆண் அமர்ந்திருந்தார். மெல்ல தங்கள் அம்மாவின் இரு பக்கத்திலும் சென்று நின்ற பிள்ளைகள் அந்த ஆடவரை ஏறிட்டுப் பார்த்தனர். பிள்ளைகள் வரவை கண்டு கண்களை துடைத்த மேரி அந்த ஆடவரை நோக்கி,

“வன், மீட் அவர் சில்ட்ரன் ரோசாலியா தேவி, டேனியல் ராஜ்” என ராகவனிடம் குழந்தைகளை அறிமுகப் படுத்தினார். பின் பிள்ளைகளை பார்த்து,

“ரோஸ், டேன் திஸ் இஸ் யுவர் டேட்” என சொன்னார்.

இருவரையும் நோக்கிய ராகவனின் விழிகள் டேனியல் மீது நிலைக்குத்தி நின்றது. அவன் அப்படியே அவர் அப்பா நடராஜனை உரித்து வைத்திருந்தான். கலர் மட்டும் கொஞ்சம் வித்தியாசம். அவர் கண்கள் கலங்கி விட்டது மகனைப் பார்த்து.

“அப்பா” என அவனை இறுக அணைத்துக் கொண்டார்.

மிரண்ட டேனியல், பயத்துடன் அம்மாவை நோக்கினான். கண்களை மூடித் திறந்து மகனுக்கு தைரியம் சொன்னார் அவர். மேரியை உரித்து வைத்திருந்த தேவியின் பக்கம் அவர் பார்வையைக் கூட திருப்பவில்லை ராகவன். அவர் கவனம் எல்லாம் மகனை அங்குலம் அங்குலமாக ஆராய்வதிலே இருந்தது. முதன் முதலாக பார்க்கும் தந்தை தன்னை அறவே கண்டு கொள்ளாதது ஏமாற்றமாக இருந்தது தேவிக்கு. எப்பொழுதும் அவள் தான் அப்பா யார், எப்படி இருப்பார் என மேரியை போட்டு குடைந்து எடுப்பாள். தான் ஆசையாக மனதில் வைத்திருக்கும் அப்பா பிம்பம், தன்னை ஏறெடுத்தும் பார்க்காதது கோபத்தைத் தர விடுவிடுவென தன் ரூமுக்கு சென்று விட்டாள்.

‘கார்த்திக் மட்டும் இல்ல இவனும் என் அப்பாவ உரிச்சி வச்சிருக்கானே. அவரு தான் இவனா பொறந்து வந்துருக்காறோ? இவன மட்டும் எப்படி இங்கிருந்து கூட்டிட்டு போறது?’ யோசிக்க ஆரம்பித்தார் ராகவன்.

மேரியை பல வருடங்களுக்கு முன்பு கடற்கரையில் தவிக்க விட்டுச் சென்றவர் இப்பொழுது தான் திரும்ப வந்திருந்தார். விதி அவரை வரவைத்தது. இவ்வளவு நாள் கண்ஸ்ட்ரக்சன் பிஸ்னஸ் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. நண்பர்கள் பேச்சைக் கேட்டு இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என வட்டிக்கு பணம் எடுத்து பினாமி பேரில் ஹை கிளாஸ் பப், டிஸ்கோதே என சிட்டியில் பல இடங்களில் தொடங்கினார். முதலில் அள்ளி கொடுத்த பிஸ்னஸ் போக போக காலை வாரி விட்டு விட்டது. அடிக்கடி ரெய்ட், மேனேஜ்மெண்ட் குளறுபடியினால் பண திருட்டு, பாரின் சரக்கு காணமல் போவது, அடிதடியினால் பொருள் நஸ்டம் இப்படி பல பிரச்சனைகள். நிறைய பண இழப்பு. அவர் அம்மா செய்து வைத்த ஏற்பாட்டினால், அவரால் எந்த சொத்தையும் விற்க முடியவில்லை. எல்லாம் கார்த்திக் பெயரில் இருந்தது. வட்டி முதலாளி கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு நிலமை மோசமானது. நண்பர்கள் எல்லோரும் கை விரிக்க, சாந்தியிடம் போய் நின்றார்.

சாந்தியிடம் அசையா சொத்துக்கள் மட்டுமே இருந்தது. மற்றதை எல்லாம் உடைக்க முடியாத பிக்சில் போட்டு கார்த்திக்கின் பெயரை எழுதி வைத்திருந்தார் அவர். மாமியாரை பார்த்துக் கற்றுக் கொண்ட பாடம். இதுவரை எட்டிக் கூட பார்க்காத கணவர் திடீரென பணத்துக்கு மட்டும் வரவும், மனம் உடைந்தாலும் லாக்கரில் இருந்த எல்லா நகையையும் எடுத்துக் கொடுத்தார். அதுவும் போதாததால் தான் மேரியை தேடி வந்தார் ராகவன்.

மேரியின் அப்பா பெரும் பணக்காரர், அதோடு தாய் வழி பாட்டியின் சொத்தும் மேரிக்கு இருக்கிறது என்பது ஏற்கனவே அவருக்கு தெரியும். இருந்தாலும், நம்மூர் பெண் மாதிரி இவர்கள் இருக்க மாட்டார்களே. இந்நேரம் தூசியைப் போல் தன்னை மறந்து நினைவுகளை ஊதி தள்ளி இருப்பாள் என நினைத்தார். நூறில் ஒரு சதவிதமாக தன்னை நினைவிருந்தால், முயற்சித்துப் பார்க்கலாம் என் தோன்றியது. வேறு வழியில்லாமல் பிரைவட் டிடேக்டிவ் வைத்து அவளை பற்றி டீடேய்ல்ஸ் கலேக்ட் செய்தார் ராகவன். அதில் கிடைத்த செய்தியில் புல்லரித்துவிட்டது அவருக்கு.

மேரி தாங்கள் சந்தித்த தீவிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாகவும், இரட்டை குழந்தைகள் இருப்பதாகவும், தகப்பனார் அவளுக்கு சொத்தை எழுதி தலை முழுகி விட்டதாகவும் அறிந்த அவர் குதூகலித்தார். கணக்கு போட்டுப் பார்தவருக்கு குழந்தைகள் தனது தான் எனப் புரிந்தது. உடனே மீண்டும் தூண்டில் போட கிளம்பி வந்திருந்தார்.

மகனை உள்ளே அனுப்பிய மேரி, ராகவனுக்கு டீ கொடுத்து உபசரித்தார்.

“எப்படி இருக்க மேரி? என்னை மன்னிச்சிரு. உன்னை அப்படி விட்டுட்டுப் போக வேண்டிய நிலை வந்துருச்சு. என்ன ஆச்சுனா” என சொல்ல வந்தவரை நிறுத்திய மேரி,

“சாந்தி எப்படி இருக்காங்க?” எனக் கேட்டார்.

ராகவனின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

“உனக்கு எப்படி தெரியும்?” குரல் நடுங்கியது அவருக்கு.

“என்னை அவ்வளவு முட்டாள்னு நினைச்சிட்டீங்களா வன்? காதல் என் மனச மழுங்கடிச்சிருக்கலாம், என் மூளைய இல்ல” விரக்தியாக முறுவலித்தாள் மேரி. அவளது நினைவுகள் ராகவன் அவளை விட்டுச் சென்ற நாளுக்கு சென்றன.

அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் ஹோட்டல் அறைக்கு சென்றாள் மேரி. அங்கே ரிஷப்சனில் விசாரித்தாள் ராகவனை பற்றி. அவர் செக் அவுட் செய்து சென்றிருந்தது தெரிந்தது. என்ன செய்வது என புரியவில்லை. அவளது சகோதரியும் திரும்ப வந்திருந்தாள். அழுது அழது கரைந்த மேரியை தேற்றுவதற்குள் அவளுக்கு போதும் போதுமேன ஆகி விட்டது. அவனை மறந்து ஊரூக்கு திரும்பலாம் என சகோதரி அழைத்தும் , அவர் திரும்பி வந்தால் தான் இங்கே இருக்க வேண்டும் என போக மறுத்து விட்டாள்.

சோகத்தில் அப்படியே ஒரு மாதத்தை ஓட்டியவளுக்கு வாந்தி மயக்கத்தில் தான் தான் கருத்தரித்திருந்தது தெரிந்தது. டாக்டரை பார்க்க சென்றவள்,

“டாக்டர், நான் கர்ப்பத்தடை மருந்து சாப்பிட்டேனே. அப்புறம் இது எப்படி சாத்தியம்?” என தன் சந்தேகத்தைக் கேட்டாள். அதற்கு அவளிடம் சில கேள்விகளை கேட்டு தெளிவு படுத்திக் கொண்ட டாக்டர்,

“இந்த மருந்த கரெக்டான நேரத்துல விடாம எடுக்கனும். நீ விளையாட்டுத்தனமா சில தடவை ஸ்கிப் பண்ணியிருக்க. அதனால தான் பேபி பார்ம் ஆயிருச்சு. ரொம்ப சின்ன வயசா இருக்கியே, அபார்ட் பண்ணிறலாமா?” எனக் கேட்டார்.

முடியவே முடியாது என மறுத்துவிட்டாள் மேரி.

‘வன் என்னை ஏமாற்றி இருக்கலாம். ஆனால் இது எனது காதல் சின்னம். ஐ ட்ருலி லவ்ட் ஹிம். இனி என்னோட வாழ்க்கையின் ஆதாரம்’ என எண்ணிக் கொண்டார். தந்தையிடம் இருந்து மறுப்பு வரும் என அவரிடமும், சகோதரியிடமும் மறைத்தார். அதோடு மசக்கைப் பாடாய் படுத்தியது. மூன்று மாதங்களில் சற்று தெம்பானவுடன் தான், அவருக்கு தெரிந்தது வயிற்றில் வளர்வது இரட்டை என. இந்த விஷயத்தை ராகவனிடம் தெரிவித்து அவரோடு சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும் என விரும்பினார். அவரை எப்படி அவ்வளவு பெரிய இந்தியாவில் கண்டுபிடிப்பது என மலைத்தார் மேரி.

செக் அப்பிலிருந்து நடந்து வந்தவர் கண்களில் அந்த பொத்திக் பட்டது. உற்சாகமானவர் அங்கே சென்று தாங்கள் வந்த தேதி, டைம் சொல்லி அன்று ராகவன் பயன்படுத்திய கம்பேனி கிரேடிட் கார்ட் டிடேய்லை கண்டுப்பிடித்தார். பின் ஆள் வைத்து அதன் முகவரியைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு கிளம்பினாள்.

வயிற்றை தள்ளிக் கொண்டு தன் முதலாளியை விசாரித்த வெள்ளைக்கார பெண்ணை சந்தேகமாக நோக்கினார் ராகவனின் பி,ஏ. ராகவன் மும்பாய்க்கு சென்றிருந்தார் அந்த நேரத்தில். சாந்தியின் விசுவாசியான அவர் உடனே போன் செய்து அவரிடம் சொல்லிவிட்டார். சாந்தி சொன்னபடி மேரியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் போனார் பி.ஏ.

மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்த சாந்தி,

“வாம்மா. உட்காரு.” என தன் பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.

ராகவனை எதிர்பார்த்து வந்திருந்த மேரி, யார் இந்தப் பெண் என்பது போல பார்த்தார்.

மெல்ல புன்னகைத்த சாந்தி,

“என் பேரு சாந்தி. நீ தேடி வந்துருக்கற ராகவனோட வைப்” என ஆங்கிலத்தில் தெளிவாக சொன்னார்.

சாந்தி எனும் பேரைக் கேட்டவுடன், தள்ளாடியபடி நாற்காலியில் அமர்ந்தாள் மேரி. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

“நீங்க இறந்துட்டீங்கன்னு வன் சொன்னாறே” தேம்பியபடியே கேட்டாள் அந்த குழந்தைப் பெண்.

“இன்னும் சாகலம்மா. இனிமே தான்”

“அப்படிலாம் சொல்லாதீங்க” என அவரது வாயைப் பொத்தினாள் மேரி.

அவளது கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தவர்,

“சொல்லும்மா என்ன விஷயம்?” எனக் கேட்டார். மேரி பிஏ வைப் பார்பதைப் பார்த்து அவரை வெளியே அனுப்பினார் சாந்தி.

எல்லாவற்றையும் சொன்ன மேரி,

“நான் தெரிஞ்சே உங்க வாழ்க்கையில வரல. என்னை மன்னிச்சுருங்க.” என அழுதாள்.

கசந்த முறுவல் வெளிப்பட்டது சாந்தியிடம்.

‘என்ன மனுசன் இவன்! இந்த சின்னக் குருத்தக் கூட விட்டு வைக்கலியே. என்னை மாதிரியே காதல் வலையில விழுந்து இப்படி வாயும் வயிறுமா நிக்கறாளே. இந்த விஷயத்துல நான் ரொம்ப கவனம்டினு சொல்லிக் கிட்டு திரிஞ்ச மவராசன் எப்படி இப்படி தவறிட்டான்? இவள பார்த்தா ஏமாத்துக்காரி மாதிரி தெரியலையே’ மேரியின் முகத்தைப் பார்த்தவுடன் அவருக்கு புரிந்தது அவளது அப்பாவித்தனம். மனம் கணத்துப் போனது அவருக்கு.

“அழாதே மேரி. நான் அவருக்கு டைவர்ஸ் கொடுத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என அவளைத் தேற்றினார்.

சட்டென எழுந்த மேரி,

“என்னை மன்னிச்சிருங்க. என்னால அது முடியாது. அவர நான் விரும்பனது உண்மைதான். எப்பவும் விரும்புவேன். அதுக்காக உங்க வாழ்க்கைய பணயம் வச்சு , என் சந்தோசத்தை தேடிக்க மாட்டேன். நான் போறேன். எனக்கு என் பிள்ளைங்க இருக்காங்க. அது போதும்.” கதவை நோக்கித் திரும்பியவர், கதவைத் திறந்து கொண்டு கவர்னசோடு வந்த கார்த்திக்கை விழி விரித்துப் பார்த்தாள்.

“என்ன பார்க்குற மேரி? நம்ம மகன் கார்த்திக். லீவுக்கு என்னைப் பார்க்க கூட்டி வந்துருக்காங்க” என அறிமுகப் படுத்தினார்.

அவனை தூக்கி உச்சி முகர்ந்த மேரி,

“காட் ப்ளெஸ் யூ மை சைல்ட்” என் முத்தமிட்டார்.

“ஹாய், அன்ட்டி . யூ லுக் பியூட்டிபுல்” என கன்னங்குழிய சிரித்தான் குட்டி கார்த்திக்.

“அன்ட்டி இல்லப்பா கார்த்தி. மம்மின்னு சொல்லு.” என திருத்தினார் சாந்தி. பெண்கள் இருவர் கண்களும் நீரில் நனைந்தன.

மேரியின் வயிற்றைப் பார்த்து,அதிசயித்த கார்த்திக் அவளின் வயிற்றில் கை வைத்தான். சாந்தி உள்ளே பேபி இருக்கிறது எனவும், வயிற்றில் முத்தமிட்டு ஹாய் சொன்னான் தன் உடன் பிறப்புக்களுக்கு.

சாந்தி வற்புறுத்தியும் மேரி சில நாட்களில் இத்தாலிக்கு கிளம்பிவிட்டாள். தான் வந்தது ராகவனுக்கு தெரிய கூடாது என்று விட்டாள். அன்று முதல் சாந்தி அழைத்தாலும், சிம பல நலம் விசாரிப்புக்களோடு விட்டுவிடுவாள். உறவை ஒட்ட வைத்துக் கொள்ளவில்லை. தன்னால் சாந்தியின் வாழ்க்கையில் எந்த இன்னலும் வரக் கூடாது என ஒதுங்கியே இருந்துவிட்டாள்.

“மேரி!” என சத்தமாக கூப்பிட்டார் ராகவன்.

பழைய நினைவிலிருந்து மீண்ட மேரி,

“சொல்லுங்க. என் கிட்ட என்ன காரியம் நடக்கனும்?” அழுத்தமாக கேட்டார்.

பணம் மட்டுமே குறியாக வந்திருந்த ராகவனுக்கு இப்பொழுது மகனும் தேவைப்பட்டான்.

“நான் உன் கூட வாழ ஆசைப்படறேன் மேரி. என்னால இத்தனை வருஷம் ஆகியும் உன்னை மறக்க முடியல.” எழுந்து அவள் அருகில் வந்தவர், அவள் தலையை தன் வயிற்றில் வைத்து அணைத்துக் கொண்டார். உடல் நடுங்க அவர் அணைப்பில் கண்ணீர் விட்ட மேரி, மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டார். பசிக்கிறது என கீழே வந்த தேவி, தன் அன்னையின் கண்ணீரை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் அடிக்கடி தனிமையில் அழுவது அவளுக்குத் தெரியும். ஆனால் என்ன காரணம் என புரியாமல் இருந்தது. ஆனால் அந்த சின்ன மனம் இந்த அப்பாத்தான் அதற்கு காரணம் என இப்பொழுது புரிந்து கொண்டது. சத்தம் செய்யாமல் அங்கேயே நின்று ஒட்டுக் கேட்டாள் குட்டி தேவி.

“ஸ்டாப் யுவர் அக்டிங் வன்! பீ பிராங்க். வாட் டூ யூ வாண்ட் நவ்?” என கூர்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“எனக்கு ராஜ் வேணும். அப்படியே பணமும்.” அதிராமல் குண்டை தூக்கிப் போட்டார்.

“வாட்!!!” கத்தினார் மேரி.

“யூ ஹேர்ட் மீ ரைட்.”

“என்ன விளையாடுறீங்களா? இத்தனை நாள் இல்லாத பிள்ளை பாசம், திடீருனு எங்க பொத்துக் கிட்டு வருது?”

“அது என் தப்பு இல்ல. நம்ம உறவுக்கு முன்னயே நீ மருந்து சாப்புடறாயான்னு நான் கேட்டேன். நீயும் ஆமாம்னு சொல்லி என்னை ஏமாத்திட்ட. அதோட பிள்ளைங்க உள்ளத நீ என்கிட்ட மறைச்சுட்ட. பொம்பள புள்ளைய நீ வச்சிக்க. அது எனக்கு வேணாம். என் மகன என் கிட்ட குடுத்துரு. கார்த்திக் கிட்ட பாசத்தையே காட்ட முடியாத அளவுக்கு பிரிச்சிட்டாங்க. இன்னொரு மகனையும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன்.” அவர் தான் அட்ரஸ் கூட கொடுக்காமல் ஓடி போனதை மறந்து பேசினார் ராகவன்.

“அவன் என்னோட சன். நான் உங்க கூட அனுப்ப மாட்டேன்.” அழுகை வரப் பார்த்தது மேரிக்கு.

“எனக்கும் சன் தான். டி.என்.ஏ டெஸ்ட் செய்யட்டுமா அவன் என் மகன் தான்னு நிரூபிக்க. அவன் முகமே சொல்லுதே என் ரத்தம்னு. பையன் எனக்கு வேணும். முடியலைன்னா கோர்ட்ல பார்த்துக்கலாம். லீகல நீ என் வைப் இல்லை, ஆனா என்னை ஏமாற்றி பிள்ளைய பெத்துக்கிட்ட அப்படின்னு கோர்டுல சொல்லுவேன். அதோட பிள்ளை பிறந்த கொஞ்ச நாளுல நீ டிப்ரெசன்கு (postpartum depression) மருந்து எடுத்த புருப் எல்லாம் என் கிட்ட இருக்கு. உனக்கு மனநிலை சரி இல்லைன்னு சொல்லி கேஸ் போட்டு பையன வாங்குவேன்.உன் அரும மகள காப்பகத்துல தள்ளுவேன்” மூச்சுக்கு முன்னூறு பையன் போட்டார், மகள் யாருக்கோ பிறந்தது போல நடந்து கொண்டார். வெறுத்து போனது மேரிக்கு. கேட்டுக் கொண்டிருந்த தேவிக்கு அளவு கடந்த வெறுப்பு மண்டியது மனதில்.

நம் நாட்டில் இந்த போஸ்ட்பார்ட்டம் டிப்ரசன் குறைவு. இங்கே தான் தாயையும் பிள்ளையையும், அம்மா வீட்டில் வைத்து நன்றாக கவனித்து அனுப்புகிறார்களே. அந்த மூன்று நான்கு மாதங்களில் பிரசவித்த பெண்ணின் உடலையும், மனதையும் பேணி அனுப்புகிறார்கள். ஆனால் மேலை நாடுகளில் கணவனும் மனைவியுமே எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். இதில் தூக்கம் பற்றாமல், பிள்ளையை கவனிப்பது எப்படி என்று தெரியாமல், தனக்கென நேரம் இல்லாமல் அல்லாடும் பெண்கள் சில சமயம் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். மேரியும் தனியாக, இரு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லாடினார். தந்தையின் கட்டுப்பாடால் சகோதரி கூட உறவை முறித்துக் கொண்டாள். ஏற்கனவே அம்மாவின் உதவி கிடைக்காது. இந்த சூழ்நிலையில் எப்படி போய் அவரிடம் நிற்பார். கோபம், அழுகை, சோர்வு என வாட்டி எடுத்தது. ஒரு கட்டத்தில் ஓயாமல் அழுத மகளை தூக்கி ஜன்னலில் இருந்து வீச முற்பட்டவர், திடீரென சுதாகரித்துக் கொண்டார். மகளை கட்டிக் கொண்டு அந்த இரவெல்லாம் கண்ணீர் வடித்தார். தன் நிலை கண்டு பயந்தவர் மனநிலை மருத்துவரை நாடி சிகிச்சை பெற்றுக் கொண்டார்.இன்னும் மருந்து சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார். அதை பற்றி ராகவன் பேசவும் மேரிக்கு சர்வமும் நடுங்கியது. அவள் நடுங்குவதை உள்ளுக்குள் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர், அவளை அணைத்த வாக்கிலே அறைக்கு அழைத்து சென்றார்.

மறுநாள் ராகவன் கிளம்பி செல்லும் போது, இவர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான பணம் மட்டும் வங்கியில் இருக்க, மீதமெல்லாம் அவர் கைக்கு சென்றிருந்தது.

அழுதழுது விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்த தாயைக் காண தேவிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.

“மாம்! ஏன் அழறீங்க? அவர் தான் போய்ட்டாரே. அப்புறம் என்ன அழுகை? வாங்க சாப்பிடலாம்” என தன் அம்மாவுக்கு தன் கையாலேயே சீரியல் தயாரித்துக் கொடுத்தாள் தேவி.

“ரோஸ்!”

“யெஸ் மாம்”

“நான் இல்லைன்னாலும் நீ தைரியமான பொண்ணா இருக்கனும். யாருக்கும் பயப்படாம, உலகத்தை எதிர்த்து நிக்கனும். செய்வியா?”

ஐந்து வயதில் இருந்தாலும், தாய் கேட்பதற்கு சரி என்றால் அவர் சந்தோசப் படுவார் என புரிந்து கொண்ட தேவி,

“அப்கோர்ஸ் ஐ வில் மாம். நீங்க பயப்படாதீங்க. ஐ வில் டேக் கேர் அப் மைசெல்ப்”

“உனக்கு ஒரு அண்ணா இருக்காங்க. பேரு கார்த்திக். என் உள்ளுணர்வு சொல்வது சரினா, ஒரு நாள் அவங்க உன்ன தேடி வருவாங்க. அப்ப நீ அவங்க கூட போகனும். போவியா?”

“போவேன் மாம்”

நிம்மதி பெருமூச்சு விட்ட மேரி, தன் வேலையை எப்பொழுதும் போல் பார்க்கலானார். பார்க்க நோர்மலாக இருந்தாலும், அவர் அடிக்கடி தன் மகன் டேனை கைப்பிடிக்குள்ளே வைத்திருந்தார் யாரிடமோ இருந்து காப்பதை போல.

ராகவன் வந்து போன மூன்றாவது தினம் வழக்கம் போலவே விடிந்தது தேவிக்கு. துள்ளலாக எழுந்தவள், தன் பக்கத்தில் இருக்கும் டேனை காணாமல் அம்மாவின் ரூமுக்கு சென்றாள் தேட. மேரியின் அறை திறந்தே இருந்தது. உள்ளே யாரையும் காணவில்லை. பாத்ரூம் கதவு லேசாக திறந்திருந்தது.

“மாம், டேன்!” என கூப்பிட்டுக் கொண்டே பாத்ரூம் கதவை முழுதாக திறந்தாள் தேவி. அங்கே அவள் கண்ட காட்சியில், வீல் என அலறினாள் குழந்தை.

பாத்டப்பில் டேன் உயிரில்லாமல் உப்பி போய் மிதக்க, தரை எல்லாம் ரத்தம் உறைந்து போய் மேரி தரையில் விழுந்து கிடந்தார்.

“மாம் ! டேன்! மாம்! “ கதறிய மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் வேந்தன். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கத்தி கதறிய மனைவியின் வாயில் தன் கையை வைத்தான் கடிப்பதற்கு. அவள் ஆத்திரம் தீரும் மட்டும், கடிப்பதை நிறுத்தவில்லை. வேந்தனின் கண்களிலும் கண்ணீர் இறங்கியது, வலியால் அல்ல. தன் துணை படும் நரக வேதனையால்.

“மாம், டேன்!” என மீண்டும் மீண்டும் சொல்லியபடியே அவன் மேல் மயங்கி சரிந்தாள் தேவி.