அலைகடல்-31

IMG-20201101-WA0016-c335e961

அலைகடல்-31

காய்ச்சல் சென்றாலும் உடல் அயர்வு மிச்சமிருக்க, மறுநாள் எழ மனதின்றி படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவளுக்கு கதவைத் திறக்கும் சத்தம் கவனத்தை ஈர்த்து திரும்பி பார்க்க வைத்தது.

மீண்டும் ஆரவ்வோ என்று திடுக்கிட்டவள், உள்ளே நுழைந்த பூவேந்தனை கண்டு நிம்மதி பெருமூச்சை வெளியேற்ற,

அவனோ வந்ததும் வராததுமாக, “உடம்பு சரியில்லைன்னா சொல்றதில்லையா? நான் வந்து பார்க்கலன்னா என்னாகிருக்கும்… நேத்து உன் உடம்பு எவ்ளோ ஹீட் அடிச்சது தெரியுமா?” என்று அதட்டலாக வினவினான்.

அடித்ததால் உண்டான கோபம் அவனிற்கு பின்னால் சென்று தமக்கையின் உடல்நிலை முன்னால் வந்திருந்தது.

அதை உணர்ந்தவள், “கோபம் எல்லாம் போயிருச்சு போல” என்று சோபையாகச் சிரிக்க முயன்று கேட்க,

“அது… அது முழுசா போகல. ஏதோ கூட பிறந்தவ முடியாம இருக்காளேன்னு அதை மன்னிச்சு விடுறேன்” என்றான் உர்ரென.

அவன் கூற்றில் நெற்றி சுருங்க, “அப்போ உன்கூட பிறந்தவளா நான் இல்லைன்னா மன்னிக்க மாட்டியா?” என்றாள் ஒருவித வலியுடன்.

அவனுடன் பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் அந்நேரம் மறந்தே போயிருந்தது.

“என்ன! உனக்கு காய்ச்சல்ல மூளை எங்காவது பிசகிருச்சா பூமா” என்று அவள் கேட்க வருவது புரியாததால் வெடுவெடுக்க,

அதில் சுதாரித்து தன் உளறலை நிறுத்தி அவன் முகம் பார்த்தவளுக்கு, அவனின் கோபத்தில் தானாய் புன்னகை விரிந்தது.

கூடவே, “சாரி…” என்றாள் அதே முகபாவனையில்.

“உலகத்துல யாரும் ஈன்னு சாரி கேட்டிருக்க மாட்டாங்க… நானும் சாரி ஈஈஈ இனி டி போட்டு கூப்பிட மாட்டேன் ஈஈஈ” என்றான் பற்கள் அனைத்தையும் காட்டி வெறுப்பேத்தும் குரலில்.

இளையவனின் பேச்சில் மனம் லேசாக, “போடா டேய்” என்றவாறு மெதுவே எழுந்து குளியலறை செல்ல,

“பூமா… நில்லு… ஹீட்டர் போட போறாங்களாம் இந்த பாத்ரூம்ல அதுவரை வேற பாத்ரூம் யூஸ் பண்ணிக்க சொன்னாங்க அண்ணா” என

வீம்புக்கு மறுத்து போன காய்ச்சலை மீண்டும் இழுத்துவிட வேண்டாம் என்ற எண்ணத்தில் முதன்முதலாக ஆரவ் கூறியதற்கு மறுத்து பேசாமல் ஒத்துக்கொண்டிருந்தாள் அவள்.

அன்று மெக்கானிக் கூறிய வாக்குமூலத்தை வைத்து விசாரித்ததில் மற்றொருவன் சிக்க, அவனை ஆரவ்வின் தனிப்பட்ட பங்களாவில் அடைத்து வைத்திருந்தனர் அவன் ஆட்கள்.

இம்மாதிரியான ரகசிய வேலைகளுக்கு என்றே ஒரு பங்களாவை சென்னை புறநகர் பகுதியில் கட்டியிருந்தான் ஆரவ்.

ரித்தேஷ் அவனிடம் விசாரித்து முடிக்கவும் ஆரவ் அங்கு வரவும் சரியாக இருந்தது. இப்போதும் மாறுவேடத்தில்தான் வந்திருந்தான். புறநகரில் அவனது கண்காணிப்பு ஆட்கள் அவ்வளவாக இல்லையென்றாலும் எதிரிகள் தன்னை பின்தொடர்ந்தால் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு மாறுவேடத்தில் எங்கேயும் செல்வது.

“மெக்கானிக்கிடம் பாம் கொடுத்தது இவன்தான். யார் என்று அவனிற்கே தெரியலை. பணம் மட்டும் இவன் அக்கவுண்ட்ல போட்டு விட்டிருக்காங்க. சோ நாங்க அதை வைத்து கண்டுபிடிக்கப் பார்த்தோம். ஒடிசால இருந்து பணம் அனுப்பிருக்காங்க. அதேமாதிரி போன்ல பேசுன ஆளோட சிம் கடைசியா ஒடிசாலதான் ஆக்டிவ்வா இருந்திருக்கு” என்று கூறி முடிக்க,

“அப்போ எதிரி ஒடிசாவா?” என்றுவிட்டு யோசனையுடன் ஒட்டு தாடியை வருடினான் ஆரவ். ஒன்றா இரண்டா நாடு முழுதும் எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பவனுக்கு யார் எவர் என்று யோசிக்க அவகாசம் வேண்டாமா!

“ஹ்ம்ம் எஸ்… அந்த பேங்க் அக்கவுண்ட் பத்தி விசாரிச்சதுல ஒடிசால இருக்குற பிரபல ரவுடியோட அடியாள் அக்கவுண்ட் வருது. பொதுவா அவன் அந்த ரவுடியோட அடியாள்ன்னு வெளியே தெரியாது. ஏற்கனவே இவனை குறித்து வேற கேஸ்ல தனிப்பட்டு விசாரிச்சதுல எனக்கு தெரிஞ்சது” என்று ரித்தேஷ் கூறி முடிக்க,

“வெல் டன் ரித்தேஷ்…” என்று கைகுலுக்கி அவனை பாராட்டியவன், “சோ… அவன் மூலமா என்னை கொல்ல பிளான் அப்படின்னா அவனுக்கு பின்னாடி இருக்குற ஆள் ஓடிசால இருக்க வாய்ப்பிருக்கு”

அருகிலிருந்த வினோத், “சார் நல்லா யோசிங்க சார் கண்டிப்பா ஓடிசால யாரையாவது ஒடச்சிருப்பீங்க” என்றான் அவசரமாய்.

அவனை முறைத்த ஆரவ், “என்ன… உன்கிட்ட கண்டுபிடிக்க சொல்லிருவேன்னு பயந்து என்னையே யோசிக்க சொல்றியா மேன். மொத்த தகவலும் நீதான் ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சு கொடுக்குற” என்றுவிட்டு கிளம்ப,

“அவங்களுக்கே நியாபகம் இல்லாததை நான் எங்கே போய் கண்டுபிடிப்பேன்… ஒரு இடம் விடாம எல்லார் கூடவும் உரண்டை இழுத்து வச்சிருப்பாங்களே… நான் எப்படி எங்கிருந்து தேடுவேன்? ரித்தேஷ் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்” என்றவனின் புலம்பலைக் கேட்க அங்கு யாரும் இருக்கவில்லை.

வீடு வந்தவன் தான் கண்ட காட்சியில் அடுத்த அடி எடுத்து வைக்க மறந்து சிலையாக சமைந்தேவிட்டான்.

வேந்தன் ஹால் சோபாவில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்க, அவன் மடியில் தலை வைத்து கால்களை நீட்டி கண்மூடி படுத்திருந்தாள் பூங்குழலி. வேந்தனின் கை அவளது நெற்றியை பதமாகப் பிடித்து விட்டுக்கொண்டிருந்தது.

அநேகமாய் தலை வலிக்கிறது என்று அவள் கூறியிருக்க வேண்டும். இவர்களின் இந்த திடீர் மாற்றத்தில் இவனிற்குதான் இப்போது தலைவலி வரும்போல் இருந்தது.

‘இவர்கள் எப்பொழுது சேர்ந்தார்கள்!’ சந்தோஷமா அல்ல அவர்களின் உலகத்தில் தன்னால் நுழைய முடியவில்லையே என்ற ஏமாற்றமா தெரியவில்லை அப்படியே நின்று பார்த்துக்கொண்டிருக்க, வேந்தன் பக்கவாட்டில் தெரிந்த அரவத்தில் ஆரவ்வை கண்டுவிட்டான்.

முகம் மலர, “வாங்க அண்ணா… ஏன் அங்கேயே நிக்குறீங்க?” என நெற்றி மசாஜை விடுத்து உற்சாகமாய் வரவேற்க,

அதில் கண்ணைத் திறந்து தன் எதிரில் நிற்கும் அவனை பார்த்தவள், மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தடைபட்ட மசாஜை அமைதியாக வேந்தனின் கைபிடித்து நெற்றியில் வைத்து தொடரச் சொல்ல, வேந்தனிற்கு எப்படியோ ஆனால் பார்த்த ஆரவ்விற்குதான் கடுப்பாக வந்தது.

“என்ன மசாஜ் எல்லாம் பலமா நடக்குது… இப்படிலாம் செஞ்சா சரி ஆகாது வேந்தா. நல்ல உருட்டுகட்டை எடுத்து தாறேன் ஒரே அடிதான் செமையா கேட்கும்” என்றான் கிண்டலாக.

அதில் மலர துடித்த இதழை அடக்கிய பூங்குழலி, “ஒஹ் அதான் உங்கண்ணன் மூளை இவ்ளோ அழகா வேலை செய்யுதா! அடுத்த முறை உங்கண்ணனுக்கு உருட்டுகட்டை மசாஜ் செஞ்சா சொல்லு குட்டா. நானே சிறப்பா செஞ்சிறேன்” என்றாள் கண்களை திறவாமல்.

குளுக் என்று வேந்தன் சிரிக்க, அவளின் பதில் கேலியை எதிர்பார்க்காத ஆரவ்வோ ஆவலுடன் தன் விழிகளால் அவளின் முகத்தை ஆக்கிரமித்தான் காதலாய். வழக்கம் போல் கைகள் செல்பேசியில் அவளை நிழல் படமாய் எடுக்க ஆயத்தமானது.

ஆனால் உள்ளுணர்வு உந்த பட்டென்று அவனை பார்த்த பூங்குழலியின் பார்வையில் அவன் பார்வையும் செல்பேசியும் பட்டுவிட, அவனை முறைக்க ஆரம்பித்தாள் அவள்.

விழிகளை திறப்பாள் என்று எதிர்பார்க்காததால் செல்பேசியை காண்பது போல் அதில் தலையை நுழைத்து சமாளிக்க, அங்கிருந்து அமைதியாக அகன்றாள் பூங்குழலி.

மனைவி எப்போதும் முறைப்பும் சண்டையுமாக இருந்தாலும் இன்றைய மாறுபட்ட முறைப்பும் அமைதியும் ஆரவ்வை குழம்ப வைத்தது என்னவோ உண்மை.

அதை ஒதுக்கி வைத்து வேந்தனுடன் பேசி அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்று அறிந்தவனுக்கு, பூங்குழலி மன்னிப்பு கேட்டாள் என்பது நிம்மதியை விதைத்தாலும் அன்று அவள் பேசிய பேச்சையும் நினைத்தவன், எது உண்மையான பூங்குழலி என்று புரிந்துக்கொள்ள முடியாமல் தடுமாறத் தொடங்கினான்.

அடுத்த இரு நாட்கள் பெரிதான ரசாபாசமின்றி கழிய, வீட்டிற்குள்ளே அடைந்திருந்து சலிப்படைந்தாள் பூங்குழலி.

பொழுதுக்கும் வேலை செய்து பழக்கப்பட்டவள், வந்த புதிதில் ஆரவ்வுடன் சண்டையிட்டு அதை நினைத்தே பொழுதை கழிக்க பெரிதாக எதுவும் தெரியவில்லை. இப்பொழுது ஆரவ் குறித்த எதையும் யோசிக்க பிடிக்காமல், கொக்கிற்கு ஒன்றே மதி போல கேஸ் விசயத்தை மட்டுமே மூளையை சுற்றி வர, அவளால் அந்த சூழ்நிலையில் அவ்வளவு பெரிய வீட்டில் தனியாளாக இருக்க முடியவில்லை.

அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் போல் இருந்தது. வேந்தன் வரட்டும் அவனுடன் சென்று ஒருநாள் தங்கிவிட்டு வரலாம் என்றெண்ணிக்கொண்டாள்.

அலுவலகத்தில் ஆரவ்விடம் வினோத் தான் கண்டுபிடித்ததைக் கூறிக்கொண்டிருந்தான், “சார்… ஒடிசால இருந்து மூணு வருஷம் முன்னாடி சென்ட்ரல் கவர்ன்மெண்ட் அனுமதியோட தமிழ்நாட்டுல மீத்தேன் எடுக்குறோம்ன்னு வந்த மூணு கூட்டு கம்பெனிகள் நியாபகம் இருக்கா சார். அதுல ஒன்னு ஒடிசால இருக்கு அண்ட் இன்னொன்று அர்ஜுன் மாமனார்க்கு சொந்தமா இருக்குற பெங்களூர் கம்பெனி சார்” என்று கூற,

குற்றவாளியை நெருங்கிய எண்ணத்தில் பளிச்சிட்டது ஆரவ்வின் விழிகள்.

“அர்ஜுன் நேரடியா இறங்காமல் மாமனார் பின்னாடி இறங்கிருக்கான் என்று நினைக்குறேன். இனி ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்ன நடந்ததுன்னு அவனே உண்மையைச் சொல்லுவான் நீ நான் சொல்றதை கச்சிதமா செய் வினோத்” என்றவாறு செய்ய வேண்டியதைக் கூறியவனின் மனம் வஞ்சத்தில் கொதித்துக்கிடந்தது.

மறுநாள் மதியம் அர்ஜுனின் ஐந்து வயது மகன் அபிமன்யு தாயுடன் ஷாப்பிங் மால் செல்கையில் அவர்களின் பாதுகாவலரையும் மீறி கடத்தப்பட்டான்.

யாருக்கும் எப்படி எங்கே என்று தெரியவில்லை. மாலில் உள்ள சிசிடிவியைப் புரட்டி போட்டு பதட்டத்துடன் தேட, குழந்தை விளையாடிக் கொண்டிருக்கையில் பின்னிருந்து ஒருவன் கர்சீப்பால் மயக்க மருந்து கொடுத்து மயக்கி அழைத்துச் சென்றது தெரிந்தது.

இத்தனைக்கும் காரணமானவனோ தனக்கும் அதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதுபோல் கூலாக அலுவலகத்தில் கோடை காலத்தில் சமாளிக்க வேண்டிய நீர் பற்றாக்குறையைக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தான்.

மாலை தொலைக்காட்சியை காணும் பழக்கம் கொண்ட பூங்குழலியின் கண்களையும் கருத்தையும் அன்றைய நாளில் முக்கியச் செய்தியான அர்ஜுனின் மகன் கடத்தப்பட்ட செய்தி ஓட, அதில் கள்ளமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்த குழந்தையைக் கண்டு பதறிப்போனாள் அவள்.

என்னதான் அர்ஜுனின் மகன் என்றாலும், சரி தவறு ஏதும் புரியாத குழந்தையல்லவா… ஏற்கனவே அனுபவித்தவளுக்கு தெரியாதா அந்த வலி எப்படி இருக்குமென்று. திரையில் நர்மதா குழந்தையைத் தொலைத்த துக்கத்தில் அழுதுக்கொண்டிருக்க, அதைக் காண முடியாமல் தொலைக்காட்சியை அணைத்தாள் பூங்குழலி.

கூடவே, “எங்க வழியில் நாங்க கண்டுபிடிக்குறோம் நீ இதில் தலையிடாத பூங்குழலி” என்ற ஆரவ்வின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதில் உலா வர, நெற்றி சுருங்க யோசித்தவளுக்கு இதற்கு பின்னே கண்டிப்பாக அமுதன் இருக்கிறான் என்று அடித்துக்கூறியது மூளை.

அவன் காட்டிய கரிசனையில் சிறிது நனைந்திருந்தவளின் மனம் அதன் ஈரத்தை ஆவியாக்கி காய்ந்து போய்விட, உடனடியாக அவனை அழைத்து எங்கிருந்தாலும் வீட்டிற்கு வரும்படி கூறி அவனிற்காகக் காத்திருந்தாள் பூங்குழலி.

முதலில் அவள் தானாக அழைத்ததிலே ஆச்சரியம் கொண்ட ஆரவ், தன்னை உடனடியாக வீட்டிற்கும் வரச்சொல்லவும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று அழகாய் கணக்கிட்டுக்கொண்டான்.

இருந்தும் ஏதும் அறியாதவன் போல் அவளின் முன் நின்று, “சும்மா போனை போட்டு வான்னா அப்படியே வரதுக்கு என்னை என்ன உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சியா?” என்றவாறே அவள் அமர்ந்திருக்கும் எதிர் சோபாவில் அமர்ந்தான்.

இதை போனில் கேட்டிருக்க வேண்டும் நேரில் வந்து கேட்கக்கூடாது என்று அவனிற்கு தோன்றவில்லை. நல்லதிற்கோ கெட்டதிற்கோ முதன்முதலில் ஒருத்தி உரிமையாய் அழைக்கவும் கிளம்பி வந்துவிட்டான்.

‘இப்போது அப்படிதானே வந்து நிற்கிறாய்?’ என்று கேட்க பூங்குழலிக்கும் தோன்றவில்லை. மனமெல்லாம் அந்த ஐந்து வயது குழந்தை மீது இருக்க,

“குழந்தை எங்கே?” என கேட்டுவிட்டாள்.

அவளின் புத்தி கூர்மையை உள்ளுக்குள் வியந்து மெச்சினாலும் வெளியே, “என்ன குழந்தை யார் குழந்தை?” என்று புரியாததுபோல் வினவ,

“நீங்க எத்தனை குழந்தையை அப்போ கடத்தி வச்சிருக்கீங்க மிஸ்டர் ஆரவமுதன்” என்றாள் நறுக்கென.

அதில் கோபம் வர, “இப்படி புரியாம பேசதான் கூப்பிட்ட என்றால் ஐ யம் சாரி… எனக்கு டையர்ட்டா இருக்கு கொஞ்சம் ப்ரெஷ் ஆகி வரேன்” என்று எழுந்து நின்றான்.

அவனை செல்லவிடாமல் வழிமறித்து, “அர்ஜுன் பையன் அபிமன்யு எங்கே?” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

“ஒஹ் அவனா… அதை என்னிடம் ஏன் கேட்குற பூங்குழலி. விட்டா நான்தான் கடத்தினேன் என்று சொல்வ போல” அவளை நேர் கொண்டு நோக்காமல் எங்கோ பார்த்துப்பேச,

“நீதான் எனக்கு நல்லா தெரியும்… ஒழுங்கா குழந்தையைத் திருப்பி அவங்ககிட்ட குடுத்துரு அமுதன். உன்னோட லாபத்துக்கு குழந்தைங்க விஷயத்துல விளையாடாத… உனக்கு அர்ஜுன் மேல பகைன்னா நேரா அவன்கிட்ட மோது” என்றாள் கட்டளையிடும் தொனியில்.

தன் வேலையில் தலையிடுவதும் இல்லாமல் தனக்கே கட்டளையிடும் அவளைக் கண்டு எரிச்சல் அபரிதமாய் எழ, “ரப்பிஷ்…” என்று தொடங்கவும் அவனது செல்பேசி சிணுங்கி கவனத்தை தன்னிடம் திருப்பியது.

வினோத்தின் அழைப்பைக் கண்டு பூங்குழலியை ஒரு பார்வை பார்த்தவன், அவளைத் தாண்டி அலுவலக அறைக்குள் நுழைந்து அழைப்பை எடுக்க,
அந்த பக்கம் வினோத், “சார்… குழந்தை மயக்கம் தெளிஞ்ச பிறகு ரொம்ப அழுது அடம்பிடிக்குறதா…” எனும்போதே அவனது செல்பேசியை பிடுங்கிய பூங்குழலி அதைத் தன் காதில் பொருத்த, “நம்ம பசங்க சொல்றாங்க… மறுபடியும் மயக்க மருந்து கொடுத்தா குழந்தைக்கு ஏதாவது சைட் எபக்ட்ஸ் வர வாய்ப்பிருக்கு என்று டாக்டர் சொல்றாங்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே லைன் கட்டாகவும்

“என்ன பேசிட்டு இருக்கும்போதே சார் கட் பண்ணிட்டாரு… இப்போ நான் என்ன பண்ணனும்?” என்று தனக்குள் கேட்டவாறு விழித்தான் வினோத்.

இங்கே அவளிடம் இருந்து செல்பேசியை பிடுங்கி அணைத்த ஆரவ்வோ, “இதுக்கு அப்புறம் என்ன கதை சொல்ல போற அமுதன்?” என்ற மனைவியின் கேள்வியில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த மேசையை அடித்து அதன் மீதே ஏறி அமர்ந்துகொண்டான்.

ஒரு கால் கீழ தரையில் ஊன்றி இருக்க, மறு காலை நாற்காலியின் மேல் வைத்தவன், தன் முன் இருந்த நாற்காலியில் பார்வையை பதித்தவாறு, “இங்கிருந்து போ பூங்குழலி” என்றான். கைகள் ஒன்றை ஒன்று கோர்த்து நெறித்துக்கொண்டிருந்தது.

வேறு யாரேனும் என்றால் அவன் சொல்லும் முன்பே இந்த கோலத்தையும் குரலையும் கண்டு ஓடியிருப்பர்.
இவளோ, “முடியாது… குழந்தையை திரும்ப அவங்க அம்மாகிட்டயே அனுப்புங்க” என்று பிடிவாதமாய் நிற்க,

“முடியாது…” என்றான் அவளிற்கு சற்றும் குறையாமல் அழுத்தமாய் அவளை பார்த்துக்கொண்டு.

“அப்போ நான் போலீஸ் கிட்ட சொல்றேன்… இதுக்குமேல உன்கிட்ட சொல்றது வேஸ்ட்” என்றவாறு கிளம்ப,

அவளின் கையைப் பற்றி இழுத்தவன், தன் மேல் வந்து விழுந்தவளின் தோளைப் பற்றி, “என் பொறுமையை ரொம்ப சோதிக்குற நீ… வீட்டை விட்டு வெளியே கால் வைத்துப்பாரு அப்புறம் தெரியும்…” என

அதற்கும் அசையா அவளின் பார்வையில் தன் கோபத்தைக் குறைத்தவன், “குழந்தையை திரும்ப பத்திரமா அனுப்பிருவேன்” என்று பொறுமையாகவே சொல்ல,

“எப்படி… வேந்தனை என்கிட்ட அனுப்புன மாதிரியா?” என்றாள் கண்கள் கலங்க.

அவளின் கண்ணீரை இரண்டாம் முறையாகக் காண்கிறான்.

தனக்குள் அடிவாங்கிய ஆரவ், அதைக் காட்டிக்கொள்ளாமல் நெற்றியை அழுத்தமாய் தேய்த்து, “சரி இன்றைக்கே எல்லா வேலையையும் முடிச்சி அனுப்பிறேன்” என்றான் அவளைப் பார்த்தவாறு.

அவன் கண்கள் லேசாக சிவந்திருக்க அவன் கோபத்தையும் வலியையும் உணர்ந்தவள் போல, “குழந்தைங்களை உங்க விஷயத்துல இனி இழுக்காதீங்க அமுதன்… அவங்க ஒரு பாவமும் அறியாதவங்க” என்றாள் குரல் அடைக்க.

அதற்கு அவன் சரியென்றும் சொல்லவில்லை முடியாதென்றும் சொல்லவில்லை அப்படியே அவளை… அவளின் முகத்தை… அதில் தெரிந்த பாவத்தை மொத்தமாய் விழிகள் மூலமாக மனதினுள் உள்வாங்கிக்கொண்டிருக்க, அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் பூங்குழலி.

எது அவளை அவ்வளவு பிடிவாதமாக, கட்டளையாக என்னிடம் பேச வைத்தது என்று ஆரவ் சிந்திக்க, விசித்திர உணர்வாக அவள் பேசும்போது வந்த கோபம் எரிச்சல் எல்லாம் மறைந்து இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அடி மனதில் தேனாய்த் தித்தித்தது.

பூங்குழலிக்கு அதற்கு நேர்மாறாக சண்டையிடும் போது வராத படபடப்பு, பயமெல்லாம் இப்பொழுது வந்து ஒட்டிக்கொள்ள, தன் நடத்தையைக் குறித்து தானே ஆராய்ந்தாள் அவள்.

இதே அவனின் காதல் தெரிவதற்கு முன்பென்றால் அவளின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தும் அவளாலே அதனை ஊகிக்க முடியவில்லை.

ஆனால் இன்று தான் அவனிடமே பிடிவாதமாய் நின்று சாதித்ததற்கு பின்னால் அவன் தன் மீது கொண்டுள்ள காதல் மீது வைத்த நம்பிக்கை என்றால் பொய்யில்லை.

காதலிக்காமலே அவன் காதல் மீதுள்ள நம்பிக்கையில் அவனை தன் இஷ்டத்திற்கு வளைக்க ஆரம்பித்தாள் பூங்குழலி.

அதைத் தெரிந்தே தான் கொண்ட காதலால் அவளுக்கு வாகாக வளைந்துக் கொடுக்கத் தொடங்கினான் ஆரவ்… பூங்குழலிக்கு மட்டுமேயான அமுதன்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!