ஆழி சூழ் நித்திலமே (ஆ)

1596006291531

ஆழி சூழ் நித்திலமே (ஆ)

அதற்குமேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை. சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று கயல் எழும்பும் நேரம் பதட்டத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவின் கையில் இருந்த அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது.

“ம்மா, அந்த இன்ஸ்பெக்டர் கால் பண்றான்ம்மா.”

அவளது பதட்டம் பாக்கியலஷ்மிக்கும் தொற்றிக்கொள்ள, “ஃபோனை எடுக்காத நித்தி. உன் நம்பர் அவனுக்கு எப்படி கிடைச்சுது?”

“கேஸ் குடுக்கும்போது எழுதிக் குடுத்திருந்தேன்ம்மா.”

“கடவுளே! நீ முதல்ல அந்த ஃபோனை அணைச்சு தலையச் சுத்தி தூக்கி கிடாசு. நாம வேற நம்பர்கூட வாங்கிக்கலாம். இனி இந்த நம்பர் வேணாம் உனக்கு.”

சட்டென்று ஃபோனை அணைத்தவள் சிம்மையும் உறுவியிருந்தாள். ஏற்கனவே நாதன் அன்று அவளது வீடியோக்களைப் பற்றி கேவலமான நோக்கத்தோடு பேசிய பேச்சுக்களில் அரண்டிருந்தவள் முதல் வேலையாக அவ்வளவு வீடியோக்களையும் அழித்திருந்தாள்.

டிக்டாக்கிலும் இன்ஸ்ட்டாவிலும் தனது கணக்கையும் முடக்கியிருந்தாள்.

இப்பொழுது இந்த போனே வேண்டாம் என்று தோன்றியதும் அணைத்து டீபாயின் மேல் போட்டாள்.

அடுத்த சில நொடிகளில் நிகிலேஷின் அலைபேசி அடிக்க, அது ஹாலில் இருக்கவும் எடுத்துப் பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

“ம்மா… இதுவும் அவன்தான்ம்மா. நிக்கி நம்பர்ல கூப்பிடறான்.”

என்ன செய்வது என்றே புரியாமல் நித்திலாவும் பாக்கியலஷ்மியும் அதைப் பார்த்திருக்க, கயலுக்கும் செல்விக்கும் நடப்பது அதிர்ச்சியாயிருந்தது.

தனது அலைபேசியை எடுக்க வந்த நிகிலேஷையும் தடுத்திருந்தார் பாக்கியலஷ்மி. அந்த அழைப்பு அடித்து ஓய்ந்ததும் வீட்டில் இருந்த தரைவழி தொலைபேசி அலறியது.

“அம்மா… அவனாதான் இருக்கனும்.” நடுங்கிய குரலில் நித்திலா கூற,

ஃபோனை எடுக்கப் போன நிகிலேஷைத் தடுத்து தான் எடுத்திருந்தார் பாக்கியலஷ்மி.

ரிசீவரை காதில் வைத்ததும் ஆர்ப்பாட்டமான நாதனின் சிரிப்பு சத்தமே கேட்டது.

“ஹாஹாஹா. ..ஹாஹா…”

“ஹ… ஹலோ…”

“என்ன லஷ்மிம்மா பசங்களை ஃபோன் எடுக்க வேணாம்னு சொல்லிட்டீங்களோ. பரவாயில்ல ஒரு நம்பர் இல்லைன்னா இன்னோன்னு. ஒரு போலீஸ்காரனுக்கு உங்க வீட்டு நம்பர்லாம் கண்டுபிடிக்கறது பெரிய விஷயமா என்ன?”

“எ… எதுக்கு ஃபோன் பண்ண?”

“ஓ… மரியாதை குடுக்க மாட்டீங்களோ? அப்ப நானும் எதுக்கு மரியாதையா பேசிக்கிட்டு.
ஃபோனை உன் பொண்ணுகிட்ட குடு.”

“அதெல்லாம் அவ பேச மாட்டா. இங்க பாரு நாங்க எந்த தொந்தரவும் வேணாம்னு ஒதுங்கியிருக்கோம். வீணா பிரச்சனை பண்ணாத.”

“அது எப்படி விடமுடியும்? உம்பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே. அந்தப் பரதேசி மட்டும் வந்திருக்கலன்னா நேத்தே பேசி உம்பொண்ண சரிகட்டியிருப்பேன். அந்த ராஸ்கலுக்கு நான் தனியா கட்டம் கட்டிக்கிறேன்.

நீ என்ன பண்ற உம்பொண்ணுக்கு புத்தி சொல்லி அவ மனச மாத்தற. கல்யாணம் பண்ணனும்னாலும் எனக்கு ஓகேதான். நாலோட அஞ்சா அவளையும் கட்டிக்கிறேன்.” அவ்வளவு எகத்தாளமிருந்தது அவன் குரலில்.

“அதுக்கு வேற ஆளப் பாரு. இனியும் ஏதாவது தொந்தரவு குடுத்த சும்மாயிருக்க மாட்டோம். உனக்கும் மேல இருக்கற அதிகாரிகிட்ட புகார் பண்ணுவோம்.”

“அடேங்கப்பா! பயந்துட்டேன் போ. என்னைக்கு என் கண்ணுல உன் பொண்ணு விழுந்தாளோ அன்னைக்கே நீங்க என் வட்டத்துக்குள்ள வந்துட்டீங்க. என்னை மீறிதான் எதையும் செய்ய முடியும் உங்களால.

என்னை எதிர்த்து உங்களால ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது… ஆனா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?

உன் பொண்ணோட வீடியோவ அசிங்கமா மார்ஃபிங் பண்ணி நெட்ல சுத்த விடுவேன். உங்க வீட்டு ஃபோன் நம்பரைப் போட்டு பலான பொண்ணுங்க ஃபோட்டோவோட நெட்ல போடுவேன். வர்ற ஃபோன் காலுங்களுக்கு பதில் சொல்லி முடியாது உங்களுக்கு.

நாலைஞ்சு ரௌடிங்கள வீட்டுக்கு அனுப்பி வைப்பேன். அவனுங்க வந்து எதுவும் செய்யலாம் வேணாம். சும்மா வந்து வந்து போனாலே ஏரியால பேர் கெட்டுப் போகாது.

அப்புறம் ஒத்த பையனை வச்சிருக்கீங்க போல… ஆம்பளத்துணையா அவனும் இல்லன்னா என்ன பண்ணுவீங்க?”

அவன் பேசப் பேச பயமும் பதட்டமும் பெருக, வியர்வையில் குளித்து வெடவெடத்து நின்றிருந்தார் பாக்கியலஷ்மி.

“உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ள உன் பொண்ணுகிட்ட பேசி நல்ல முடிவ சொல்ற. இல்லைன்னா நான் சொல்றதெல்லாம் ஒவ்வொன்னா நடக்கும்.

நான் எதையும் பண்ண மாட்டேன். பண்ண வேண்டிய ஆளுங்க பண்ணுவாங்க. எம்பேர்ல புகார் குடுத்தாலும் எதையும் புடுங்க முடியாது புரியுதா? புத்திசாலியா நடந்துக்கோ.”

நாதன் அலைபேசியை வைத்ததும் தளர்ந்து அமர்ந்தவர் கைகளால் முகத்தை மூடிக் கதறத் துவங்கினார்.

நித்திலாவும் நிகிலேஷூம் பதறிப்போக, கயல்விழியுமே அவரது அழுகையில் கலங்கிப் போயிருந்தாள். செல்வியோ நடப்பது புரிந்தும் புரியாத நிலையில் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.

பரசுராமன் இருந்தவரை தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், அவர் போனபிறகு அடுக்கடுக்காய் வந்த இந்த சோதனைகளைத் தாங்க முடியவில்லை பாக்கியலஷ்மியால்.

இன்னும் என்னென்ன கொடுமைகளைத் தான் தாங்க வேண்டியிருக்குமோ என்று பயந்து அரண்டவர் தன் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டு கதறினார்.

நடந்ததை பிள்ளைகளிடம் சொன்னவர், உடனே ஊரை விட்டுப் போய்விடலாம் என்றார்.

“அம்மா, அப்படிலாம் எதுவும் யாரும் பண்ணிட முடியாதும்மா. அந்த ராஸ்கலுக்கு பயந்து நாம ஊரைவிட்டு ஓடனுமா?” வெகுவாய் கொந்தளித்த நிகிலேஷைப் பார்த்தவர்,

“வேணாம் நிக்கி. அவன் பேசறதைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு. அம்மா சொல்றதைக் கேளு.” வெகுவாய் அழுதவரை சமாதானப்படுத்தவே முடியவில்லை இருவராலும்.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கும் மிகுந்த வருத்தமாயிருந்தது.

இவ்வளவுக்கும் தான்தான் காரணம் என்பது செல்வியை வெகுவாய் மிரட்டியிருந்தது. அரண்டு போய் நின்றிருந்தாள்.

மற்ற அனைத்தையும்விட நித்திலாவின் பாதுகாப்புதான் முதலில் முக்கியம் என்று புரிந்ததும், தனது மாமனுக்கு தன் அலைபேசியில் இருந்து அழைத்த கயல், சுருக்கமாக நித்திலா வீட்டுக்கு வந்ததையும் நாதன் அலைபேசியில் மிரட்டியதையும் மெல்லிய குரலில் தெரிவித்தாள்.

“மாமா, நீ இன்னாப் பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இனிமேங்காட்டியும் இவுங்களுக்கு எந்த கஸ்டமும் வரக்கூடாது. இவுங்கள உஷாரா பாத்துக்கறது உம்பொறுப்புதான்.

அந்த இன்ஸ்பெக்டர் பேமானி நாஸ்தியாவனும். அதுக்கு இன்னா பண்ணனுமோ அத்தப் பண்ணு மாமா.” என்றபடி அலைபேசியை வைத்திருந்தாள்.

அழுது சோர்ந்து அமர்ந்திருந்த பாக்கியலஷ்மியின் அருகே சென்றவள், “பயமே வேணா. எங்க மாமாவாண்ட பேசிக்கீறேன். உங்க குடும்பத்த உஷாரா பாத்துக்கறது இனி எங்க பொறுப்பு. எங்க குப்பத்து ஆளுங்களை மீறி எவன் வந்து மேல கை வச்சிக்குவான்னு பார்க்கலாம். தெம்பா இருங்கம்மா.”

வெகுவாய் பேசி பாக்கியலஷ்மியை சமாதானப்படுத்திவிட்டு வெளியேறியிருந்தாள் கயல்.

 

தானும் அந்தப் பொண்ணும் வேறில்லை என்று சொன்ன பாரியையே இமைக்காமல் பார்த்திருந்தான் வெற்றி. வெற்றியின் பார்வையில் சற்று சுதாரித்த பாரி,

“என்னியால பாதிக்கப்பட்ட குடும்பம், அந்த வூட்டுப் பொண்ணுக்கு வர்ற பிரச்சனை எனக்கு வர்ற பிரச்சனை மாதிரிதான. அதைதான் அப்படி சொன்னேன்.

நம்மால முடியாததுன்னு இன்னாக்குது ஐயா? நாதனை மாதிரி ஆளுங்கள இந்த பூமில இருக்க வுடறதே தப்பு. நாமளே வுட்டாக்கா இத்த யாருதான் செய்யறது?”

பாரியின் பேச்சு அங்கிருந்தவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததில் அமைதியானவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கினர்.

நடப்பதை மௌனமாய் பார்த்திருந்தான் வெற்றி. அவனுக்குமே பாரியின் மனநிலைதான். எதுவந்தாலும் சமாளித்து அந்தப் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டான்.

மற்ற எதைப் பற்றியும் யோசிக்கத் தோன்றவில்லை வெற்றிக்கு. பாரி தன்னை மீறிப் போகமாட்டான் என்ற நம்பிக்கை நிறைய இருந்தது. தன் நண்பனால் ஒரு குடும்பம் அழிந்தது என்றிருக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான் வெற்றி.

அந்த நேரத்தில் சரியாய் கயல் ஃபோன் செய்து நித்திலா வீட்டில் நடந்தவற்றை தெரிவிக்க, அதை அனைவரிடமும் தெரிவித்த பாரிக்கு கோபம் எல்லை மீறியிருந்தது.

“அந்த நாதாரியெல்லாம் சும்மா வுடக்கூடாதுங்கய்யா. நானே அவனைக் கைமா பண்ணி கசாப்புக் கடையில போடறேன். அதால ஜெயிலுக்குப் போனாக்கூட பரவால்ல.” வெகுவாய் கொதித்தவனை அடக்கிய மகேந்திரன்,

“ஏன்டா எங்களைப் பத்திலாம் யோசிக்கவே மாட்டியா? நீ ஜெயிலுக்குப் போறதுக்காடா நாங்க இவ்வளவு தூரம் பேசிக்கிட்டு இருக்கோம்?
வீரத்தை காட்ட வேண்டிய இடத்துல வீரத்தைக் காட்டனும். விவேகமா இருக்கவேண்டிய இடத்துல விவேகமா இருக்கனும் பாரி.

வெட்டவும் குத்தவும் எனக்குத் தெரியாமலா நான் பேசிக்கிட்டு இருக்கேன். காதும்காதும் வச்ச மாதிரி ஆள் ஏற்பாடு பண்ணி அந்த நாதனப் போட்டுத்தள்ளத் தெரியாது எனக்கு?

உங்கள்ல யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. அதே சமயத்துல அந்த நாதனும் ஒழியனும். அதுக்கு என்ன பண்ணனுமோ அதைதான் நான் யோசிக்கறேன்.

இப்ப முதல்ல அந்தப் பொண்ண பாதுகாக்கனும். அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிப்போம்.”

“அப்பா, அவங்களை குடும்பத்தோட வேற எதாவது ஊர்ல பாதுகாப்பா இருக்கச் சொல்லிடலாமா. நாதன்கிட்டயும் எம்எல்ஏவ விட்டுப் பேசச் சொல்லலாம். அந்தப் பொண்ணுக்கு எந்தப் பிரச்சினையும் குடுக்க வேணாம்னு.” ஞானவேலு யோசனையாய் பேச,

“அது சரிவராதுண்ணா, அவுங்க குடியிருக்கறது சொந்த வூடு. அவங்க அப்பாவையும் இழந்துட்டுக்கற இந்த நேரத்துல எந்த ஊருக்குப் போவாங்கண்ணா?

அதுமில்லாம அந்தப் புள்ளைங்க ரெண்டு பேரும் இங்கதான் படிக்கிதுங்க. படிப்ப வுட்டுட்டு எப்படி ஊரைவிட்டு போகச் சொல்ல முடியும்?

அதுவுமில்லாம இந்த நாதன் பேச்சு வார்த்தைக்குலாம் அடங்கற ஆளாத் தெரியல.” பாரி சொல்லவும், அதை ஆமோதித்தான் வெற்றி.

“அப்ப வேற என்னதான் பண்றது? தினம் தினம் அந்தப் பொண்ணு போற இடமெல்லாம் பாதுகாப்புக் குடுக்க முடியுமா? இல்ல கூடவேதான் போக முடியுமா?” ஞானவேலு கேட்க,

“அதைத்தான் செஞ்சாகனும். வேற வழியில்ல” வெற்றி பதில் சொல்ல…

‘இந்த நிமிடத்திலிருந்து என்னை மீறிதான் இனி எதுவாய் இருந்தாலும் அவர்களை நெருங்கும்’ உறுதியாய் மனதில் எண்ணிக் கொண்டான் பாரி.

“என்னடாப் பேசற நீ? எத்தனை நாளைக்குப் போக முடியும்? தொழில விட்டுட்டு அந்தப் பொண்ணு பின்னாடி அலைய முடியுமா?” இது சாத்தியமா என்ற பார்வையோடு ஞானவேலு கேட்க,

“ண்ணா, அது அசால்ட்டுண்ணா. நம்ம குப்பத்து ஆளுங்ககிட்ட சொன்னாக்க ஷிப்ட்டு போட்டு காவலிருப்பானுங்க. நானும் பாரியண்ணனும் அந்தப் பொண்ணு வெளிய போகச் சொல்ல பின்னாடி போய் பார்த்துக்குவோம்.”

அவ்வளவு நேரமும் நடப்பதை அமைதியாய் பார்த்திருந்த தேவா சொல்லவும் சற்று நம்பிக்கை வந்தது ஞானவேலுவுக்கு.

“அதுவுமே நாதன் பிரச்சனைய நாம முடிக்கிற வரைதான்.” மகேந்திரன் கூற அனைவருக்கும் அது சரியாய் பட்டது.

“ஞானம், ஆறு மாசத்துக்கு முன்ன சென்னைக்கு ஏசிபியா மாற்றல்ல வந்திருக்க ஸ்ரீதர் ரொம்பவே நேர்மையானவர்னு கேள்விப் பட்டிருக்கேன். இப்ப சென்னைக்கும் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியா பதவி உயர்வுல வந்திருக்காரு.

கடலூர்ல இவர் போஸ்டிங்ல இருந்தப்ப கட்சிப் பாகுபாடு இல்லாம, நேர்மையா நடவடிக்கை எடுத்து கடத்தல் கும்பலை கைது பண்ணவர். அதுமட்டுமில்ல இவர் இதுவரை இருந்த எல்லா இடத்திலும் இவருடைய ரெக்கார்ட்ஸ் பக்கா. நாம இவரைப் பார்த்து உதவி கேட்கலாம்னு தோனுது.” வெற்றி கூற…

“ம்ம், சரிதான் வெற்றி. நான்கூட அவரைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இந்தப் பிரச்சனைக்கு சரியான ஆளுதான்.” ஞானமும் ஆமோதிக்க, மகேந்திரனுக்கும் அது சரியாய் பட்டது.

“அவர் கடலூர் எம்பி ராகவனுக்கு வேண்டப்பட்டவர்னு கேள்விப்பட்டிருக்கேன் வெற்றி. ராகவனும் ரொம்ப நேர்மையான ஆளு. கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு நிறைய நல்லது பண்ணியிருக்கார். எனக்கும் அவர் நல்ல பழக்கம்தான்.
நான் அவர்கிட்ட பேசி தனிப்பட்ட முறையில அந்த அதிகாரிய சந்திக்க அப்பாயிண்மென்ட் வாங்கறேன். நாம போய் அவரைப் பார்த்து இந்த பிரச்சனைய சொல்லுவோம்.”

மகேந்திரன் சூட்டோடு சூடாய் ராகவனைத் தொடர்பு கொண்டு பேசி ஸ்ரீதரிடம் நேரடியாக பிரச்சனையைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கித் தந்தார்.

மறுநாள் பாரியும் வெற்றியும் சென்று ஏசிபி ஸ்ரீதரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுவதாய் முடிவானது. போலீஸ் துறையிலும் யாரையும் நம்ப முடியாது என்பதால் வீட்டில் சென்று பேச அனுமதி வாங்கியிருந்தார் மகேந்திரன்.

நாதனைக் கூண்டோடு ஒழிக்க இவர்கள் ஒரு திட்டத்தைப் போட, ஊரைவிட்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தோடு பாக்கியலஷ்மி இருக்க, தன் திட்டத்தை நடத்திவிடும் முனைப்போடு தஞ்சாவூரில் இருந்து நித்திலாவின் வீட்டுக்கு வந்து இறங்கினாள் பரசுராமனின் தங்கை வசந்தா.

—-ஆழி சூழும்.

 

Leave a Reply

error: Content is protected !!