ஆழி சூழ் நித்திலமே 13 (அ)

1596006291531

ஆழி சூழ் நித்திலமே 13 (அ)

13

புறக்கணிப்பு மிகக் கொடுமையானது. அதிலும் நாம் செய்த தவறுக்காய் நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் வெறுத்து ஒதுக்கிப் புறக்கணிப்பது வெகுவாய் மனதை நோகடிக்கும். எதைச் செய்தாவது அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிட மாட்டோமா என மனம் அலைபாயும்.

செல்வியும் அந்த நிலையில்தான் இருந்தாள். அவள் மேல் உயிரையே வைத்திருந்த தேவா அண்ணன் அடியோடு பேசுவதை நிறுத்தி விட்டான்.

அதுமட்டுமில்லாமல் தாயிடம்,

“யம்மோவ், அவ ஸ்கோலுக்குப் போ வேணாம். இங்கியே வூட்ல குந்திக்கினு கெடக்கட்டும் இன்னும் ஒரு வருசத்துல கட்டிக் குடுத்திடலாம்” என்றிருந்தான்.

ராணியோ, “அய்யே… இன்னும் ஒரு வருஷம் இன்னாத்துக்கு வூட்ல வச்சிக்கினு. நீ ஜரூரா மாப்ள பாரு. நாம கட்டிக் குடுத்திடலாம். இவள வூட்ல வச்சிக்கினு அடுத்து இன்னா பேஜார் பண்ணுவாளோன்னு நோட்டம் வுட்டுக்கினுருக்க என்னியால ஆவாது.”
ராணியும் தேவாவும் பேசும் பேச்சில் நொந்தே போனாள்.

“யம்மா, எனக்கு கண்ணாலம்லாம் வேணாம் யம்மா. நானு ஸ்கோலுக்குப் போறே யம்மா.” அழுகையில் கரைந்தவளை…

“இன்னாத்துக்குடி அழுவுற? நீ பண்ணி வச்சினுக்கிற வேலைக்கும் உன்னிய பத்துமாசம் சொமந்து லோல்பட்டு பெத்துக்கினதுக்கும் நாதான் அழுவனும். ஸ்கோலுக்குப் போவாம டபாய்க்கத்தான அம்மாந் தெனாவட்டா வாத்தியாரு மேல பழி போட்டுக்கின? இப்ப இன்னாவோ அழுது மாய்மாலம் பண்ணினுக்கற?”

“ண்ணா… சாரிண்ணா…”

ஏக்கமாய் அண்ணன் முகத்தைப் பார்க்க, முகத்தைத் திருப்பிக் கொண்டான் தேவா.

“மன்னிப்பு கேட்டுக்கினா அல்லாம் செரியாப் பூடுமாடி?” அவளிடம் எகிறிய ராணி,

“இவள இனியும் நானு நம்பறதா இல்ல தேவா. நீ எதனா மாப்ள பாரு. தாராத்து வுட்ரலாம்.”

 

அன்னையின் பேச்சுக்குத் தலையாட்டிச் சென்ற தேவா அவளை நிமிர்ந்துகூட பார்க்க மறுத்தான். செல்வியின் கண்ணீர்கூட நடிப்பாய்தான் தெரிந்தது அவர்களுக்கு.

சில நாட்களுக்கு முன்புவரை தங்கை என்ன கேட்டாலும் என்ன சொன்னாலும் அதற்கு மறுப்பே சொல்லாதவன் அவன். இன்றோ அவள் முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குப் பிடிக்கவில்லை.
தன்மீது உயிராய் இருந்த அண்ணனின் பாராமுகம் வெகுவாய் பாதித்தது செல்வியை.

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து அண்ணன் அன்னையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு, தன் ஃபோனுக்காக தன்னைச் சுற்றிவரும் சிறுவர்களோடு விளையாடி பொழுதைக் கழிக்க ஆசைப்பட்டாளே ஒழிய, வீட்டில் இருந்தால் இப்படி திருமணம் செய்ய யோசிப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை அவள்.

எதைச் சொன்னால் மறுபேச்சு பேசாமல் தன்னை பள்ளியை விட்டு நிறுத்துவார்கள் என்று யோசித்தாளே ஒழிய, அதன் பின்விளைவுகளை யோசிக்கத் தோன்றவில்லை.

அதைவிட அன்று தன்னை பாரி பார்த்த பார்வையை மறக்கவே முடியவில்லை அவளால். உன்மேல் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டாயே என்ற வேதனையோடு பார்த்தவன் அதன்பிறகு அவளோடு பேசவே இல்லை.

தன் தகாத செயலால் ஒரு உயிர் போனதும், ஒரே நாளில் தன்மீது பிரியமாயிருந்த அத்தனை பேரின் மதிப்பிலிருந்தும் கீழிறங்கியதும் தாள முடியவில்லை அவளால்.

அதிலும் செல்வியின் மீது அவ்வளவு பிரியமாயிருந்த கயல் சுத்தமாய் ஒதுக்கிவிட்டாள்.

தானாய் வலியச் சென்று பேசிய போதும் பேச மறுத்த கயலிடம் அழுகையோடு மன்னிப்பு கேட்டுவிட்டுத் திரும்பியிருந்தாள்.

இன்றோ காலையிலேயே கயல் வந்து என்னோடு வா என்று கூப்பிட்டதும் மறுபேச்சு பேசாமல் செல்வி கிளம்ப, ராணியிடம் செல்வியின் வாத்தியார் வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டே அழைத்து வந்திருந்தாள் கயல்.

அழைப்பு மணியடித்ததும் வந்து கதவைத் திறந்த பாக்கியலஷ்மிக்கு இருவரையும் யாரென்று தெரியாததால் வெளியே வைத்தே யாரென்று வினவ, பரசுராமனின் மாணவி என்று செல்வியை அறிமுகப்படுத்தியதில் இருவரையும் உள்ளே அழைத்து அமர வைத்தார் பாக்கியலஷ்மி.

என்ன விஷயமாக இருவரும் வந்திருக்கின்றனர் என்று விசாரித்தவரிடம், மெல்லிய குரலில் நடந்தவை அனைத்தையும் கயல் கூற, வெகுவாய் நொந்து போனார் பாக்கியலஷ்மி.

நித்திலாவும் நிகிலேஷூம் அதிர்ச்சியோடு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதெல்லாம் நடக்குமா? இப்படியும்கூட பிள்ளைகள் செய்யுமா? தன் ஆசிரியரைப் பார்த்து சொல்லும் பழியா இது? அதிலும் தங்கள் தந்தையின் வயதென்ன… இந்தப் பிள்ளையின் வயதென்ன மனதே ஆறவில்லை அவர்களுக்கு.

சற்று நேரத்திற்கு முன்புதான், காவல் நிலையத்தில் இருந்து அவர்களுக்கு உதவிசெய்த முதிய காவலர் வந்து வழக்கு வாபஸ் பெற்றதற்கான அத்தாட்சியையும், பரசுராமனின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை நகலையும் கொடுத்துவிட்டு நாதனைப்பற்றியும் வெகுவாய் எச்சரித்துவிட்டு சென்றார்.

பரசுராமனுக்கு ஏற்கனவே இருதய பாதிப்பு இருந்துள்ளது என்ற செய்தியே பாக்கியலஷ்மிக்கு பெரிதும் அதிர்ச்சியாய் இருந்தது.

நித்திலாவும் நாதன் அன்று கூறியவற்றையெல்லாம் தன் அன்னையிடம் கூறியிருந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நகல் அதை உறுதி செய்ததில் மனதே பாரமாய் இருந்தது அவர்களுக்கு.

தங்கள் தந்தையின் உடல்நலனில் இன்னும் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்று மருகியபடி இருந்தவர்களுக்கு, தற்போது கயல் கூறிய விபரங்கள் வெகுவாய் நோகடித்தது. அவர்மீது துளி தவறு இல்லாத போதும் வீண்பழி சுமத்தி அவரது இறப்புக்குக் காரணமாய் போன செல்வியைக் கண்டு பெரும் கோபம்தான் வந்தது.

“செய்யறதெல்லாம் செஞ்சிட்டு இப்ப பாவ மன்னிப்பு கேட்டு வந்திருக்கீங்களா?” தாள முடியாமல் வெடித்தாள் நித்திலா.

“நெசமா மன்னிப்புக் கேட்டு வரலக்கா. மன்னிச்சி வுடறாப்ல தப்பா நாங்க பண்ணிக்கிறோம்? ஆனா இன்னா நடந்துச்சின்னு உங்களாண்ட சொல்லிப்புடனும்மின்னுதான் வந்தேன்க்கா.” அவர்களின் வேதனையைப் பார்த்து கயலின் முகமும் வெகுவாய் கசங்கியிருந்தது.
செல்வியோ விடாமல் தேம்பியபடி இருந்தாள்.

 

“என்ன தெரிஞ்சு இனி என்னங்க? எங்கப்பா எங்களுக்குத் திரும்பி வருவாரா? உங்க வீட்டு பொண்ணு சொன்னத நம்புனீங்க சரி. எதிராளிகிட்ட ஒரு வார்த்தை விசாரிக்கனும்னு கூடவா தோனல. ஒரு பெரிய மனுஷன பேசக்கூடாததெல்லாம் பேசி அவரக் கொன்னுட்டீங்களே…”

நிகிலேஷ் வார்த்தைகளை சாட்டையாய் சுழற்ற பதில் இல்லை கயலிடம்.

என்ன சொல்லுவாள்? பாரி செய்தது தவறு என்றுதான் பட்டவர்த்தனமாய் தெரிகிறதே. இதில் தான் எது பேசினாலும் அது சப்பைக்கட்டு கட்டுவதாய்தான் இருக்கும்.

ஆனால் தெரிந்தே வேண்டுமென்றே செய்த தவறில்லை அது. ரெண்டும் கெட்டான் பெண்ணின் பேச்சை நம்பிக்கொண்டு, அறியாமல் செய்த தவறு அது. அதற்காக பாரி மனம் வருந்தி குற்றவுணர்ச்சியில் குறுகிப் போய் இருப்பதும் நிஜம். அதை மட்டுமாவது அவர்களுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்பதே அவளது நோக்கம்.

“எல்லாத் தப்பையும் நான்தான் செஞ்சேன்க்கா. நெசமா இப்புடியாவும்னு நானு நெனைக்கலக்கா… எம் பேச்சைக் கேட்டுக்கினுத்தான் பாரியண்ணே சாராண்ட சண்டை வலிச்சுது. என்னைய மன்னிச்சிருக்கா.” செல்வி அழுகையில் கரைய,

“இப்ப அழுது என்ன புண்ணியம்? நீ செஞ்ச தப்பால நாங்க இப்படி எங்கப்பா இல்லாம அநாதையா நிக்கறோமே. எங்க வேதனை எப்படி குறையும் சொல்லு.” நித்திலாவின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.

“உங்க வேதனை எனக்குப் புரியுதுங்க. என்னாத்த அழுதாலும் பொரண்டாலும் எம்மாம் ஆறுதலாப் பேசினாலும் அந்த வேதனை குறையாதுங்கறதும் எம்மனசுக்கு நல்லா புரியுது.

ஆனா, நீங்க எம்மாம் வெசனப் படறீங்களோ அத்தேமாறி தாங்க தப்பை பண்ணிப்புட்டு எம்மாமனும் வெசனப்பட்டுனுக்கிது. தன்னால ஒரு உசுரு போச்சேங்கற குற்றவுணர்ச்சில அது நெதமும் வெந்துகினு கிடக்குது. இது நா கும்புடற சாமி மேல சத்தியம்.

அதுலயும் நேத்து போலீஸ் ஸ்டேஷன்ல நடந்தது அது மனச ரொம்பவே நோவடிக்குதுங்க. நடந்த அல்லாத்துக்கும் தான்தான காரணம்னு நெனைச்சி நெனைச்சி மருவினுக்குது.

மெய்யாலுமே எம்மாமா இன்னிவரைக்கும் யாருக்கும் எந்தக் கெடுதலுமே செஞ்சதில்லங்க. அல்லாத்துக்கும் நல்லதுதான் செஞ்சிக்குது…

நீங்க அது செஞ்ச தப்பை மன்னிக்கக்கூட வேணாம். ஆனா அது வேணும்னே செய்யலன்றதக் காண்டி புரிஞ்சுக்கினாப் போதும்ங்க.”

கயலின் பேச்சைக் கேட்டு மேலும் கோபமாகப் பேச வாயெடுத்த நித்திலாவையும் நிகிலேஷையும் அமைதிப்படுத்தினார் பாக்கியலஷ்மி.

“நிக்கி நித்தி, அமைதியா இருங்க. அவங்க மாமாவுக்காக பேச வந்திருக்கு இந்த பொண்ணு. இதை வருத்தி கோவமாப் பேசி என்ன ஆகப்போகுது?

நடந்தது நடந்ததுதான். நம்ப அப்பா போனவர் போனவர்தான். என்ன பேசினாலும் யாரை நொந்துகிட்டாலும் அவர் இனி திரும்பப் போறதில்ல. இவங்க மேல குற்றத்தைச் சொல்லி பேசிமட்டும் என்ன ஆகப் போகுது.

எந்தப் பிரச்சினையும் வளர்க்க அம்மாவுக்குத் தெம்பில்லடா. தயவு செஞ்சி ரெண்டு பேரும் அமைதியா இருங்க.”

கோபத்தோடு கயலையும் செல்வியையும் முறைத்த நித்திலா பாக்கியலஷ்மியின் பேச்சையடுத்து அமைதியாய் அறைக்குள் சென்றுவிட்டாள். நிகிலேஷூம் நகர்ந்துவிட…

“உம் பேரு என்னம்மா?”

“கயல்விழிங்க.”

“இங்கப் பாரு கயல்விழி. எங்க கோபத்தையெல்லாம் உங்க மேல காட்ற நிலைமைலலாம் நாங்க இல்லம்மா. அவரில்லாம தடுமாறி தவிச்சு தத்தளிச்சுதான் நிக்கறோம்.

என் பிள்ளைங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சாலே போதும். யாரையும் பகைச்சிக்கிட்டு கோவிச்சுக்கிட்டு என்ன செய்ய போறோம்?

உம் மாமா மேல எந்த கோபமும் எங்களுக்கு இல்லம்மா. அப்படியே இருந்தாலும் அதை காட்ற மாதிரியான நிலைமையிலயும் நாங்க இல்ல.
நேத்து ஸ்டேஷன்ல நடந்தது உனக்குத் தெரியும்ல. அதுலயே நான் ஒடுங்கி போயிட்டேன்.

ஏற்கனவே அவரில்லாம பிள்ளைகளை தனியா எப்படி கரைசேர்க்கப் போறேனோன்னு மருகிகிட்டு இருந்தவளுக்கு நேத்து எம்பொண்ணுக்கு நடக்க இருந்த அநியாயம் இன்னும் பயத்தைதான் குடுத்திருக்கு.
நேத்து உன் மாமா மட்டும் வரலன்னா நாங்க என்ன செய்திருப்போம், மானம் மரியாதையோட வீட்டுக்கு வந்திருப்போமான்னுகூட தெரியல. அந்தவகையில அவருக்கு நாங்க நன்றிகடன் பட்டிருக்கோம்.

இனியும் எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்தாலே போதும். எம் பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன். எங்க சொந்த ஊரோட போயிடலாம்னும் முடிவு பண்ணியிருக்கோம்.”

பாக்கியலஷ்மி பேசிக்கொண்டே போக நித்திலாவுக்குத் திருமணம் செய்யப் போகிறோம் என்ற வார்த்தையில் சற்று அதிர்ந்துதான் போனாள் கயல்விழி.

இரவெல்லாம் விடாது புலம்பிய பாரியின் புலம்பல் முழுக்க நித்திலாதான். தன் மனதில் அவள் எவ்வளவு நிறைந்திருக்கிறாள் என்பதில் தொடங்கி அவள் மனதில் தான் எவ்வாறு கீழிறங்கிப் பதிந்து போனேன் என்பதுவரை புலம்பியிருந்தான்.

பாரியின் புலம்பல் கயலுக்குமே அதிர்ச்சியான அதிர்ச்சிதான். அடிபட்ட பறவையாய் மனம் கதறியதுதான். ஆனால் இவ்வளவு நாட்களாக மனதில் பூட்டி வைத்திருந்த நேசத்தை தன்னையறியாமல் உளறிக்கொட்டும் மாமனைக் கண்டும் பாவமாய் இருந்தது. இத்தனை நாட்களாக திருமணத்தை அவன் மறுத்ததற்கான காரணமும் விளங்கியது.

கயல்விழி சிறுபெண்தான், தன் மாமனின் மீது ஆசையும் நேசமும் அளவில்லாமல் இருக்கிறதுதான். அதைவிட அவன்மீது பல மடங்கு பாசமிருக்கிறது. அவன் நலனில் அக்கறை இருக்கிறது.
சிறுவயதிலிருந்து தனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் மாமனின் மனதில் இருக்கும் ஆசை நிறைவேற வேண்டும் என்று மனதார நினைத்தாள்.

ஆனால், அவன் ஆசை நிறைவேறுவது கடினம் என்பதை நித்திலாவின் கோபத்தைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டாள். இவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் மாமனின்மீது வைத்திருக்கும் இந்தப் பெண் எப்படி அவன் நேசத்தை உணரப் போகிறாள் என்றே அவள் மனம் மருகிக் கிடந்தது.

தன்னால் முடிந்தவரை அந்த வெறுப்பைக் குறைக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில், தற்போது அவளுடைய திருமண செய்தியும் கயலை மிரட்டியது.
தன்னிச்சையாக இதழ்கள் முனகின,

“கண்ணாலமா?”

“ம்ம்… ஆமாம்மா. இன்னும் கொஞ்ச நாள்ல படிப்ப முடிக்கப் போறா. முடிஞ்சதும் கல்யாணத்தை முடிச்சிட்டு நாங்க எங்க ஊருக்கே போயிடுவோம்.” பாக்கியலஷ்மி தனது முடிவைக் கூற… கயல் திகைத்தாள்.

காலம் நித்திலாவின் கோபத்தை சிறிது ஆற்றலாம், மாமனின் மனதில் இருக்கும் நேசத்தைப் புரிந்து கொள்ள ஏதாவது வாய்ப்பும் கிடைக்கலாம் என்று இருந்த சிறு நம்பிக்கையும் விட்டுப் போனது கயலுக்கு.

அதற்குமேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை.

சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று கயல் எழும்பும் நேரம் பதட்டத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவின் கையில் இருந்த அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!