ஆழி சூழ் நித்திலமே 14

14

குழப்பத்தின் பிடியில் இருந்தாலும் நாத்தனாருக்கு குறைவில்லாத உபசரிப்புகளை செய்து கொண்டிருந்தார் பாக்கியலஷ்மி. யாருமில்லாமல் தன்னந்தனியாக காலையிலேயே வந்திறங்கிய வசந்தாவைப் பார்த்து திகைப்புதான் அவருக்கு.

ஆனாலும் கணவரை இழந்து தவிக்கும் தனக்கு ஆறுதலுக்காக வந்திருக்கக்கூடும் என்றெண்ணிக் கொண்டவர், வசந்தாவுக்கு காலை டிபன், காபி என்று பார்த்துப் பார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

நாதன் கொடுத்த மனவுளைச்சலில் இரவெல்லாம் உறங்காமல் உழன்று கிடந்த உள்ளத்துக்கு நாத்தனாரின் வருகை சற்று பலத்தைக் கொடுத்தது என்னவோ நிஜம்தான்.

தஞ்சாவூருக்கே சென்று செட்டிலாவதைப் பற்றி வசந்தாவுடன் பேச வேண்டும் என்றெண்ணிக் கொண்டவரை, நன்கு உண்டு முடித்து ஏப்பம் விட்டபிறகு ஒப்பாரியை ஆரம்பித்த வசந்தாவின் செய்கை குழப்பியது.

“என்தம்பி இருந்திருந்தா எனக்கு இப்படியொரு கஷ்டம் வந்திருக்குமா? உனக்குத்துணையா நானிருப்பேன்னு சொன்னானே… இப்படி பாதியில போயிட்டானே… எங்கஷ்டத்தை யாருகிட்ட சொல்லியழ?”

“…”

“வாரம் ஒரு நாளு
வள்ளியம்மை திருநாளு
வள்ளியம்மை திருநாளில்
வரிசையிட ஒருவரில்ல…
மாசம் ஒரு நாளு
மாரியம்மன் திருநாளு
மாரியம்மன் திருநாளில்
மனை நிறைக்க ஒருவரில்ல…

தம்பி, நீயில்லாம நாதியத்துப் போனேனே…”

செய்முறையைக் குறைவில்லாமல் செய்யும் உறவு இல்லாமல் போனதே, என்ற அர்த்தத்தில் வரும் பாடலைப் பாடி ஒப்பாரி வைத்து மூக்கைச் சிந்திய அத்தையை, விநோதமாகப் பார்த்திருந்தனர் நித்திலாவும் நிகிலேஷூம்.

ஏற்கனவே பரசுராமனின் இழப்பில் மனம் நொந்திருந்த பாக்கியலஷ்மி,

வசந்தா அழுததும் தானும் அழுதவாறு,

“என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க. உங்க தம்பியில்லைன்னா என்ன, நானும் பிள்ளைங்களும் இல்லையா? உங்களுக்கு என்ன கஷ்டம்?”

“ஆயிரமிருந்தாலும் என்தம்பி மாதிரி வருமா? அவன்கிட்ட உரிமையா கேட்டேனே, உனக்குச் செய்யாம யாருக்கு செய்யப் போறேன்க்கான்னு வாக்கு குடுத்தானே! அதேமாதிரி உன்கிட்ட கேக்க முடியுமா? அவனே போனப்புறம் அவன் வாக்குதான் நிக்குமா?”

வசந்தாவையே குழப்பமாய் பார்த்திருந்தனர் மூவரும். “என்ன விஷயம் அண்ணி? எனக்கு நிஜமாப் புரியல. என்ன வாக்கு குடுத்தார் அவர்?”

“பரசு தஞ்சாவூர் கல்யாணத்துக்கு வந்தப்ப, எம்மகனுக்கு நித்திலாவ கல்யாணம் பண்ணித் தரேன்னு வாக்கு குடுத்தான். எந்தம்பி பேச்சு காத்துல கரைஞ்சு போகமுன்ன அவனே காத்தோட கரைஞ்சு போயிட்டானே… இதை இனி யாருகிட்ட கேப்பேன்.” விடாமல் வசந்தா அழுகையைத் தொடர…

“ராஜசேகருக்கா…?”

அதிர்ச்சியாயிருந்தது பாக்கியலஷ்மிக்கு. வசந்தாவின் மகன் ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதே, திரும்ப என்ன இவர் பெண் கேட்கிறார்? என்ற குழப்பத்தோடு வினவினார்.

“ஆமாம் லஷ்மி. எம்மகனுக்குதான்.”

“ராஜசேகருக்குதான் கல்யாணமாகி குழந்தை இருக்கே அண்ணி.”

நாத்தனார் குடும்ப விபரங்கள் ஏதும் பாக்கியலஷ்மிக்குத் தெரியவில்லை. நடந்த எதையும் பெரிதாக பரசுராமனும் சொல்லியதில்லை. ஊருக்குச் சென்றும் பலவருடங்கள் கழிந்திருக்க ஊர் நிலவரமும் தெரியவில்லை.

“என்னத்த கல்யாணம் பண்ணி என்னத்த வாழ்ந்தான் எம்புள்ள. வந்தவ அரக்கியா இருந்தா ஆம்பள என்ன செய்வான்? புள்ளைய தூக்கிட்டு அவ அம்மா வீட்டோட போயிட்டா.

பஞ்சாயத்துல எங்களை நிக்க வச்சி சந்தி சிரிக்க வச்சிட்டா. எம்புள்ளகூடவும் வாழ வரமாட்டேன்னுட்டா.

ஒத்தையா மருகி நிக்கிற எம்மகனைப் பார்த்து பரசு ரொம்ப மனசு வருத்தப்பட்டு போயிட்டான். அவனேதான் நித்திலாவ எம்புள்ளைக்குக் கட்டிக் குடுக்கறதா சொல்லியிருந்தான். ஏன், உன் புருஷன் எதையுமே உன்கிட்ட சொல்லலையா?”

பிட்டு பிட்டாய் வசந்தா பேசிய எதுவுமே பாக்கியலஷ்மிக்குப் புரியவில்லை. தன் கணவர் இதைப் பற்றியெல்லாம் எதுவுமே தன்னிடம் சொல்லவில்லையே, என்று எண்ணியபடி இருந்தவருக்கு பரசுராமன் நித்திலாவை இரண்டாம்தாரமாய் திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தது அதிர்ச்சியாய்தான் இருந்தது.

ஆனால் வசந்தாவோ, தான் பேசுகையில் குழப்பம் சூழ பார்த்திருந்த பாக்கியலஷ்மியின் முகத்தைக் கண்டதுமே, தன் தம்பி எந்த விபரத்தையும் லஷ்மியிடம் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், பரசுராமன்தான் திருமண விஷயத்தைப் பேசி உறுதி செய்தது போல மேலும் மேலும் பேசி வைத்தாள்.

நித்திலாவுக்கும் நிகிலேஷூக்கும் அத்தையின் பேச்சுக்கள் பெரும் அதிர்ச்சியாயிருந்தது. தங்கள் தந்தை அப்படிக் கூறியிருக்க வாய்ப்பேயில்லை என்பது புத்திக்குப் புரிந்தாலும், கண்முன்னே அமர்ந்து அழும் அத்தையின் வார்த்தைகளையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.

அதைவிட பாக்கியலஷ்மிக்கு தன் கணவரின் வாக்குறுதி என்ற பேச்சிலேயே மனம் நின்றுவிட்டது. மற்ற எதையும் யோசிக்க முடியவில்லை. பரசுவே ஒத்துக்கொண்டார் என்றால் அது சரியாகத்தானே இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு.

கணவரைத் தாண்டி எதையுமே சிந்தித்திராத அந்த பெண்மணிக்கு, வேறு யோசிக்கத் தோன்றவில்லை. இரண்டாம்தாரமா என்ற ஒரு தயக்கம் மட்டுமே இருந்தது அவருக்கு. அதையும் விடாமல் பேசிப் பேசிக் களைந்திருந்தாள் வசந்தா.

தன் பிள்ளை உத்தமசிகாமணி, ஊர் போற்றும் யோக்கியன், அவனைப் போல மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவள் பேசிய பேச்சுக்களில் இந்த திருமணத்தை நடத்தலாமா என்று யோசிக்கத் துவங்கியிருந்தார் பாக்கியலஷ்மி.

இந்த திருமணத்தின் சாதக பாதகங்களை அலசியது மனது. தானும் தஞ்சாவூருக்கே மாறிச் சென்றுவிடலாம். மகள் சொந்த ஊரில் தன் கண்பார்வையில் வாழ்வாள். சொந்த அத்தையின் மகன், ஆகவே அவளது வாழ்க்கையும் சிறப்பாய் இருக்கும்.

நாதன் போன்றவர்களை இனி சொந்தங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாய் இருந்து கொண்டு எதிர்கொள்ளலாம். வேறு எங்காவது மாப்பிள்ளை பார்த்தாலும் மாப்பிள்ளை பற்றி விசாரிக்கக்கூட தனக்கு யாருமில்லை, வருபவன் எப்படியிருப்பானோ?

அதைவிட ராஜசேகர் பரசுராமனின் சொந்த அக்காள் மகன், நல்லவனாய்தான் இருப்பான் என்று உறுதியாக நம்பினார். இரண்டாம்தாரம் என்ற ஒன்றைத்தவிர வேறு எந்த பாதகமும் இருப்பதாய் தோன்றவில்லை.

வெகுநேரம் யோசித்தவருக்கு இந்த திருமணத்தால் நன்மைகளே அதிகம் என்பது போலத் தோன்றவும் ஆவலோடு பிள்ளைகள் முகத்தைப் பார்த்தார். நித்திலாவுக்கு சம்மதம் என்றால் வசந்தாவிடம் ஒப்புக்கொள்ளலாம் என்று எண்ணியபடி நித்திலாவைப் பார்க்க, அவள் முகமோ கலக்கமாய் இருந்தது.

தந்தை இறந்ததிலிருந்து அடுக்கடுக்காய் நிகழ்ந்த சம்பவங்களின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு சிந்திக்கவே வாய்ப்பு தராமல், இந்தத் திருமணத்தை எப்படியாவது நடத்திவிடும் முனைப்போடு பேசும் அத்தையைப் பார்த்து பயமாய் இருந்தது அவளுக்கு.

இவர் சொல்வதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? தன் தந்தை அப்படித் தனக்கு இரண்டாம் தாரமாக மாப்பிள்ளை பார்ப்பாரா என்றெல்லாம் குழப்பம் இருக்க, தாயை மூளைச்சலவை செய்யும் அத்தையையே பார்த்திருந்தாள். வசந்தா நடிக்கிறாள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது அவளுக்கு.

கிட்டத்தட்ட நிகிலேஷின் மனநிலையும் அதுவே.

அவனுக்கு சுத்தமாய் தன் அக்காவை இப்படி இரண்டாம்தாரமாய் திருமணம் செய்து கொடுக்க விருப்பமேயில்லை. வெளிப்படையாக முகத்தில் விருப்பமின்மையை காட்டியபடி அமர்ந்திருந்தான்.

“நித்திம்மா நீ என்னடா சொல்ற?” பாக்கியலஷ்மி சற்று ஆவலோடு நித்திலாவைக் கேட்க,

“சின்னப்புள்ளைக்கு என்ன தெரியும்? நீ முடிவெடுத்தா சரிதான் லஷ்மி. நீ சம்மதம் சொன்னா பரசுக்கு முப்பதாம்நாள் சாமி கும்பிடவும் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சிடலாம். துக்கம் நடந்த வீட்ல உடனடியா சுபகாரியம் பண்றது நல்லதுதான” என்று வசந்தா கூற…

 

திருமணத்தை உடனடியாக நடத்திவிட்டால் நாதன் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட்டுவிடலாமே, இதை எப்படி நாத்தனாரிடம் பேசுவது என்றெண்ணியவருக்கு வசந்தாவின் பேச்சு பெரும் நிம்மதியளித்தது.

உடனே நித்திலாவைக்கூடக் கேட்காமல், “அப்ப சரி அண்ணி. எனக்குமே மனசுல இருக்கற பாரமெல்லாம் இறங்குனாப்ல இருக்கு. எம்புருஷனே உங்க ரூபத்துல வந்து துணையா இருக்கறமாதிரி இருக்கு எனக்கு. நாம உடனடியா கல்யாணத்தை முடிச்சிடலாம் அண்ணி.”
கண்களில் நீர் கசியப் பேசிய அன்னையை அதிர்ச்சியோடு பார்த்திருந்தனர் நித்திலாவும் நிகிலேஷூம்.

எவ்வளவு மனவுளைச்சலில் இருந்திருந்தால் தன் அன்னை வேறெதையும் யோசிக்காமல் இத்திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பார் என்று வேதனையோடு எண்ணிய நித்திலா, தாயை எதிர்த்துப் பேச வாயெடுத்த தம்பியை பார்வையாலே அடக்கினாள்.

அப்படியும், “நித்திம்மா, உனக்கு சம்மதம்தானடா?” என்று ஆவலாய் முகம் பார்த்த தாயிடம்,

“அம்மா, எதுக்கும்மா அவசரப்படறீங்க? கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம்மா”

என்று நிகிலேஷ் வார்த்தையைவிட… சட்டென்று பாக்கியலஷ்மியின் முகம் வாடியது. உடனே அவனை அடக்கிய நித்திலா,

“நிக்கி, நீ சும்மாயிரு. அம்மா நம்ம நல்லதுக்குதான் எதுவும் செய்வாங்க.”

அதட்டியவள், தாயிடம் திரும்பி, “உங்க விருப்பப்படி செய்ங்கம்மா. எனக்கு சம்மதம்.” என்றபடி எழுந்து அறைக்குள் சென்றிருந்தாள்.

நிகிலேஷூம் வேறு எதையும் பேச முடியாமல் நகர்ந்திருந்தான்
அறைக்குள் வந்தவளுக்கு, ஏனோ அழவேண்டும் போலத் தோன்றியது.

தலையணையில் முகம் புதைத்து வெகுநேரம் அழுதவள் எழும்போது உள்ளம் தெளிவாயிருந்தது. அம்மாவுக்கு நிம்மதியளிக்குமானால் எதையும் செய்யலாம் என்றெண்ணிக் கொண்டவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

பாக்கியலஷ்மியை சம்மதிக்க வைத்ததில் வசந்தாவுக்கு வாயெல்லாம் பல்லானது.

பரசுராமனுக்கு அரசாங்கப் பணம் எவ்வளவு வரும் என்பதில் துவங்கி குடியிருக்கும் வீட்டின் மதிப்புவரை விசாரிக்க பாக்கியலஷ்மியும் வெள்ளந்தியாய் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்படியே நாதனின் பிரச்சனையையும் தன் நாத்தனாரிடம் மெதுவாகக் கூறினார்.

எப்படி இவ்வளவு சீக்கிரம் பாக்கியலஷ்மி திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார் என்று உள்ளூர குழப்பத்தோடு இருந்த வசந்தாவுக்கு தற்போது விஷயம் விளங்கியதில், நித்திலாவையும் பாக்கியலஷ்மியையும் தங்கள் பேச்சைக் கேட்காமல் போலீசுக்கு சென்றதற்காக வசைபாட ஆரம்பித்தார்.

“அன்னைக்கே நாங்க சொன்னோம். தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விட்டுக்கறீங்கன்னு. கேக்காம நியாயம் கேட்டுப் போனீங்க… இப்ப என்னாச்சி? எவனோ ஒருத்தன் பொட்டப்புள்ள கைய புடிச்சி இழுக்கற அளவுக்கு போயிருக்கு.

இனியும் இந்த ஊர்ல நீ இருக்க வேணாம் லஷ்மி. எல்லாத்தையும் வித்து எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்துடு. எங்க வீட்லயே கூட நீ இருந்துக்கலாம். உன் பொண்ணயும் பக்கத்துல இருந்து பார்த்துக்குவ, பணத்தை என்கிட்ட குடுத்தீன்னா வட்டிக்கு விட்டு வட்டிப்பணம் உனக்குக் குடுத்துடுவேன். நீ நிம்மதியா இருக்கலாம் லஷ்மி.”

“ஊரோட வந்துடலாம்னு நானும் முடிவுலதான் இருக்கேன் அண்ணி. ஆனா பொண்ணு குடுத்த வீட்ல எப்படி இருக்க முடியும். அது சரிவராது. ஊர்லயே ஏதாவது வீடு விலைக்கு வந்தா வாங்கிக்கிட்டு நான் அங்க இருந்துப்பேன் அண்ணி.”

“சரி சரி… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல கல்யாணத்தை முடிப்போம்.”

“நம்ம ஊர்லயே கல்யாணம் வச்சிக்கலாம் அண்ணி. இங்கன்னா அந்த போலீஸ்காரன் எதுவும் தொல்லை தரப்போறான்.”

‘ஐயோ… கல்யாணத்துக்கு முன்ன இவங்களை ஊருக்குக் கூட்டிப் போனால் நம்ம குட்டு உடைஞ்சி போகுமே. அப்புறம் கல்யாணமே நடக்காதே’ என ஒருநொடி ஜெர்க்கான வசந்தா,

“அதெல்லாம் என்னையும் என் மகனையும் மீறி எவன் வரான்னு நான் பாக்கறேன். நாம இங்கயே கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல வச்சி முடிச்சிடலாம்.
சொந்தபந்தங்களைக்கூட நிறைய கூப்பிட வேணாம். தேவையில்லாத பேச்செல்லாம் வரும். சிம்பிளா நமக்குள்ள முடிச்சிடலாம் லஷ்மி.”

ஒற்றை மகளின் திருமணத்தை எப்படியெப்படியோ நடத்த ஆசையிருந்தும், இப்படி நடத்த வேண்டியதாயிருக்கிறதே என்ற வருத்தம் உள்ளூர இருந்தபோதும், வேறுவழியின்றி வசந்தா கூறிய அனைத்துக்கும் தலையாட்டினார் பாக்கியலஷ்மி.

வசந்தாவுக்கும், இவர்களுக்கு தன் மகனைப் பற்றி தெரியாதவரைதான் இந்த திருமணத்தை நடத்த முடியும் என்பது புரிந்தது. தன் மருமகளின் வீட்டினர் முன்பு மகனுக்கு வேறு திருமணத்தை முடித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் வசந்தா.

ராஜசேகரின் குணலட்சணத்தைப் பற்றி தெரிந்து கொண்ட அவன் மனைவியின் பெற்றோர் மகளை வசந்தாவிடம் சண்டையிட்டு அழைத்துச் சென்றிருந்தனர். பஞ்சாயத்து வைத்து பேசியதில் வசந்தாவையும் ராஜசேகரையும் பஞ்சாயத்தார் கடுமையாக எச்சரித்திருந்தனர்.

கட்டிய மனைவியை வைத்து ஒழுங்காக வாழும்படி கூறியிருந்தனர். ராஜசேகரனின் மனைவியோ தனது ஊருக்கு ராஜசேகர் வந்தால் மட்டுமே உடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறிவிட, அவர்களையே பேசி முடிவெடுக்கச் சொல்லியிருந்தனர் பஞ்சாயத்தில்.

எங்கே மகனை பிரித்துக்கொண்டு சென்றுவிடுவாளோ என்று எண்ணிய வசந்தா மகனை விடாமல் பிடித்து வைத்ததோடு அல்லாமல், அவனுக்கு வேறு திருமணமும் செய்ய யோசித்தாள்.

ராஜசேகரும் தாய்க்கு தப்பாத மகன். சதா குட்டியும் புட்டியும் வேண்டும் அவனுக்கு. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனைவியை கழட்டிவிடும் முடிவில்தான் இருந்தான்.

அத்தனை பேரின் முன்னே தன்னை பஞ்சாயத்தில் நிற்க வைத்த மருமகளையும் அவளது பெற்றோரையும் பழிவாங்க, அப்பாவியான தம்பி குடும்பத்தை பலி கொடுக்கத் துணிந்தாள் வசந்தா.

தனது உடன் பிறந்த அக்காள்களுக்கே இந்த விஷயம் தெரிந்தாலும் பரசுராமனின் மேல் உள்ள பாசத்தில் திருமணத்தை கலைத்துவிடக்கூடும் என்ற பயத்தில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறிவைத்தாள்.

பெரிதாக பெற்றோரை எதிர்த்துப் பேசியிராத பிள்ளைகளும் மறுப்பைத் தெரிவிக்க இயலாமல் மருகி நிற்க, நாதன் கொடுக்கும் குடைச்சலில் இருந்து தங்களை மீட்க வந்த தெய்வமாகவே வசந்தாவை பாக்கியலஷ்மி எண்ணியிருக்க, திருமணத்தைப் பேசி தேதியும் குறித்திருந்தாள் வசந்தா.

 

*******

 

ஸ்ரீதரன் ஐபிஎஸ்… அசிஸ்டெண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் என்ற பெயர் பலகையைத் தாங்கியிருந்த வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தி இறங்கினான் பாரி. பின்னிருந்த வெற்றியும் இறங்கியிருக்க, அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருந்தனர்.

சற்று அமைதியான ஏரியாவாக இருந்தது அது. சுற்றியிருந்த வீடுகள் அனைத்துமே நல்ல வசதியானவர்கள் குடியிருக்கும் பங்களா டைப் வீடுகளாய் இருந்தது.

அழைப்பு மணியின் ஓசையில் கேட்டைத் திறந்த செக்யூரிட்டியிடம் தங்களது விபரத்தைத் தெரிவித்துவிட்டு காத்திருக்க, சில நிமிடங்களில் உள்ளே அழைக்கப்பட்டனர்.

நல்ல ஆகிருதியான தோற்றத்தோடு, காதோர நரையும் கம்பீரத்தைக் கூட்டிக்காட்ட, முறுக்கிய மீசையோடு சேர்ந்த புன்னகையுடன் வரவேற்றார் ஏசிபி ஸ்ரீதரன்.

“ஹலோ வெற்றிவேல், பாரிவேந்தன்! வாங்க, உங்களுக்காகதான் வெயிட் பண்றேன். ராகவன் சார் சொன்னார் நீங்க வருவீங்கன்னு. இதுல வெற்றி…?” லேசாய் இழுக்க…

“நான்தான் சார்.” என்றவாறு முன்னே வந்து நீட்டிய அவரது கையைப் பற்றி குலுக்கினான் வெற்றி.

“உங்கப்பா மகேந்திரனை எனக்கு நல்லாத் தெரியும். உங்களை இப்பதான் மீட் பண்றேன்.” என்றபடி வெற்றிக்கு கைகொடுக்க…

“கிளாட் டு மீட் யூ சார். இவன் பாரி வேந்தன். என்னுடைய நண்பன்.”

“நைஸ் டூ மீட் யூ பாரி.” பாரியின் கைகளைப் பற்றி குலுக்கிய ஸ்ரீதரன் இருவரையும் அமரச் சொன்னார்.

ஸ்ரீதரனின் மனைவி மஞ்சுவும் அவர்களை வரவேற்று டீ கொடுத்து உபசரிக்க, தொழில் தொடர்பான சில பொதுவான பேச்சுக்களுக்குப் பிறகு,

“சொல்லுங்க வெற்றி என்ன விஷயமா என்னைப் பார்க்கனும்னு சொன்னீங்க.”

சில நிமிடங்கள் செலவழித்து நடந்த அத்தனை விபரங்களையும் ஸ்ரீதரனிடம் தெரிவித்த வெற்றி, தற்போது நாதன் நித்திலாவுக்குத் தரும் தொல்லைகளையும் தெரிவித்தான். கூடவே நாதனின் மிரட்டல்களையும் தெரிவித்தான்.

“நாதனுக்கு பேக்கிரௌண்டுல பெரிய அரசியல்வாதிகளும் இருக்கறதால இந்த பிரச்சனைய எப்படி சமாளிக்கலாம்னு அப்பா உங்ககிட்ட பேசச் சொன்னாங்க சார்.”

“ம்ம்… இந்த நாதனை மாதிரியான ஆளுங்க எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்கறதாலதான் ஒட்டு மொத்த போலீஸ்துறைக்கும் கெட்ட பேரு.” அலுத்துக்கொண்ட ஸ்ரீதர்,

“பொதுவா நான் எங்க டிபார்ட்மெண்ட் சீக்ரெட்ஸ் வெளிய சொல்லக்கூடாது. சில விஷயங்கள் மட்டும் சொல்றேன்.

எதிரியை அடக்குவதைவிட ஆடவிட்டு அமைதியாக வேடிக்கை பார்…
தவறுக்கு மேல் தவறிழைத்து தானாகவே மாட்டிக்கொள்வான்னு சொல்லுவாங்க…
நாதன் விஷயத்துல நாங்க அதைதான் செய்துகிட்டு இருக்கோம்.

எங்களோட பார்வை நாதன்மேல விழுந்து ஆறு மாசமாகுது. அவனோட இல்லீகல் ஆக்டிவிடீஸ் ஒவ்வொன்னையும் நோட் பண்ணிக்கிட்டுதான் இருக்கோம்.

நீங்க நினைக்கறதை விடவே நாதன் டேஞ்சரானவன்தான். அவனுக்கு நிறைய வெளிநாட்டு தீவிரவாதிகளோட தொடர்பு இருக்கும்னு நாங்க சந்தேகப்படறோம்.

இங்க இருக்கற சில அரசியல்வாதிகளுக்கும் அந்த தீவிரவாதிகளுக்கும் இடையில ஒரு ஏஜென்ட் மாதிரி நாதன் செயல்படறதா நாங்க சந்தேகப்படறோம்.

அது சம்பந்தமான தகவல்களையும் திரட்டிக்கிட்டு இருக்கோம். மொத்தமா கூண்டோட பிடிக்கனும்ங்கறதால பொறுமையா வலைய விரிச்சி வச்சிட்டு காத்திருக்கோம்.
கூடிய சீக்கிரம் சிக்கிடுவான்.

நாதன் மட்டும்தான் உங்க பிரச்சனைன்னா, நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தாலே போதும். டிபார்ட்மெண்டே அவனைப் பார்த்துக்கும்.

அந்தப் பொண்ணோட பாதுகாப்புக்கு அவங்க அஃபீஷியலா புகார் குடுத்தா நான் என்ன செய்யலாம்னு பார்க்கறேன்.”

ஸ்ரீதரின் பேச்சைக் கேட்டதும் உள்ளத்தில் பெரிதாய் குடைந்த குடைச்சல் விலகியது போல இருந்தது பாரிக்கும் வெற்றிக்கும். இருவரின் மலர்ந்த முகமே அதைக் காட்டியது. வந்த விஷயம் இவ்வளவு எளிதாக முடியும் என்பதே அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நித்திலாவின் குடும்பத்தில் யார் வந்து புகார் கொடுப்பர். இனி போலீஸை நம்புவார்களா அவர்கள்? குழப்பமாயிருந்தது பாரிக்கு.

“ஆனா, அந்த பொண்ணு குடும்பத்துல வந்து புகார் கொடுக்கறது கஷ்டம் சார்.” பாரி சொல்ல,

“புகார் தரலன்னா அஃபீஷியலா எதுவும் செய்ய முடியாது பாரி. வேணும்னா யாராவது செக்யூரிட்டி பிரைவேட்டா ஏற்பாடு பண்ணலாம்.”

“செக்யூரிட்டிலாம் வேணாம் சார். அந்தப் பொண்ணைப் பாதுகாக்கறது என்னோட பொறுப்பு சார். நான் பார்த்துக்குவேன்.” அவசரமாய் பாரி உறுதி கொடுக்க,

‘வெளிய வா உன்னை கவனிச்சிக்கிறேன்’ என்பது போல பாரியை முறைத்த வெற்றி,

“நித்திலா சோஷியல் மீடியால போட்ருந்த வீடியோலாம் அந்த நாதன் தவறா யூஸ் பண்ணுவேன்னு மிரட்றான் சார்” என்றான்.

“அந்த மாதிரி அவன் எதுவும் செய்தாலும், அதை உடனடியா பார்த்து அழிக்க நம்மால முடியும் வெற்றி. நான் கேக்கற டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக் குடுங்க. இதை நான் பார்த்துக்கறேன்.

அதுமட்டுமில்லாம அந்தப் பொண்ணுக்கு ரொம்பத் தொந்தரவு தராதபடிக்கு அவனை டிபார்ட்மெண்ட் ரீதியா பிசியா வச்சிருக்க என்னால முடியும். மாற்றி மாற்றி அவனுக்குப் பொறுப்புகள் தரும் பட்சத்துல அவனோட கவனம் சிதறும். அதையும் நான் பார்த்துக்கறேன்.

தென், அவனோட ஆக்டிவிடீஸ், ஃபோன்கால்ஸ் எல்லாமே பதிவு செய்யப்படுது. இனி இந்தப் பொண்ணு விவகாரத்திலும் அவனோட செயல்களை கண்காணிக்கச் சொல்றேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் சார். நிஜமா இந்த நாதனை என்ன பண்றதுன்னு புரியாம இருந்தோம் சார். எங்க பிரச்சனைய இவ்வளவு ஈசியா சால்வ் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல சார்.”

“தேங்க்ஸ்லாம் எதுக்கு வெற்றி. பொதுமக்களுக்கு பாதுகாப்பா இருக்கறது எங்க கடமை. நாதன் மாதிரி சில புல்லுருவிகளாலதான் எங்க எல்லாருக்குமே கெட்ட பேரு.

இவனை மாதிரி ஆட்களை டிபார்ட்மெண்ட்ல இருந்து அடிக்கடி களையெடுக்கறதும் எங்க கடமைதான் வெற்றி. வேற எந்த உதவி, எப்ப வேணும்னாலும் என்னைக் கான்டாக்ட் பண்ணலாம் நீங்க. என்னால முடிஞ்ச உதவிய செய்வேன்.”

“ரொம்பவே நன்றி சார். உங்களை மாதிரியான அதிகாரிகளைப் பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. போலீஸ் டிபார்ட்மெண்ட் மேலயும் நம்பிக்கை வருது. அப்ப நாங்க கிளம்புறோம் சார்.”

“ஓகே கைஸ்…” இருவருக்கும் கைகுலுக்கி ஸ்ரீதர் விடைகொடுக்க, வெளியே வந்து பாரி வண்டியை எடுத்ததும் பின்னே அமர்ந்த வெற்றி,

“என்னா பாரி…? அந்தப் பொண்ண, நான் பார்த்துக்குவேன் நான் பார்த்துக்குவேன்னு ரொம்பத் துள்ளுற? என்னா வண்டி டிராக் ஏதும் மாறுதா? நேத்தும் கவனிச்சேன் நான் வேற அவ வேற இல்லங்குற, நான் முறைச்சதும் பேச்சை மாத்துற, என்னா சங்கதி?”

“டேய் ஏன்டா? அந்தப் பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணப் போறாங்களாம். கயலு நேத்து சொன்னுச்சி. அது கண்ணாலமாகிப் போறவரைக்கும் அத்த பத்திரமாப் பாத்துக்கினாப் போதும்.”

“…”

“அந்தப் பொண்ணு வாழ்க்க நல்லாயிருக்கனும் வெற்றி. என்னால ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சி. இனியாச்சும் நல்லாயிருக்கனும்டா.
ஒரு தபா சொன்னா சொன்னதுதான். எப்பயும் நானு உன்ன மீறிப் போவமாட்டேன்டா.”

நண்பனின் குரல் பேதமே அவனது மனநிலையை வெற்றிக்குத் தெளிவாய் எடுத்துரைக்க, ஆதரவாய் பாரியின் தோள்மீது தட்டியவன்,

“அதெல்லாம் அந்தப் பொண்ணும் நல்லாயிருக்கும், நீயும் நல்லாயிருக்கனும். உன்னோட வாழ்க்கையும் எதிர்காலமும் எனக்கு ரொம்ப முக்கியம்.”

“…”

“சரி, கயலு எதுக்குடா நித்திலாவப் போய் பார்த்துச்சி?”

“அட அத்த ஏன் கேக்கற? முந்தாநாளு நைட்டு மனசே சரியில்லன்னு கடலாண்ட படுத்துக் கிடந்தனா, இந்த தேவா சரக்க குடுத்து, ஊத்திக்கோண்ணா ஜோராத் தூக்கம் வரும்ன்னான்.

எனக்கும் அல்லாத்தையும் மறந்தாத் தேவலைன்னு அத்த வாங்கி குடிச்சிப்புட்டேன். நான் குடிச்சிட்டு வந்துட்டேன்னு இந்தக் கயலுபுள்ள ராவெல்லாம் அழுதுக்குது.

காலம்பர எழுந்ததும் என்கிட்ட இனி குடிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கினு, செல்விய இஸ்த்துக்கினு அவுங்க வூட்டுக்கும் போயி எம்மாமன் மேலத் தப்பில்லன்னு பேசிக்கினு வந்துக்குது. என்னாதான் கயலு எம்மேல இருக்கற பாசத்துல பேசினாலும், விசாரிக்காம சண்டை வலிச்சது எந்தப்புதான?”

“…”

“அந்தப் புள்ளயும் ஒத்தே அழுவையாம். எம்மேல கொலக் காண்டுலக்குதாம். ம்ப்ச், இது தெரிஞ்ச சங்கதிதான். அவுங்கப்பா செத்ததுக்கு காரணமே நானுன்னு நெனைக்கிற புள்ள காண்டாவாம இன்னாப் பண்ணும் சொல்லு.”

“…”

“இதுல கயலுக்கு ரொம்ப வருத்தம். அந்தப்புள்ள உன்னப்பத்தி புரிஞ்சுக்கவே இல்ல மாமான்னு புலம்புச்சி. நானும் கயல திட்டிப் புட்டேன். நீ எதுக்கு கயலு அங்கலாம் போனன்னு.”

“…”

“அவுங்க வூட்டாண்ட போனாக்கண்டிதான இந்த பரதேசி நாதன் பண்ற காலித்தனம் தெரிஞ்சிச்சின்னு என் வாய அடைச்சிருச்சி. அவுங்கம்மாதான் லேசா சமாதானமா பேசிக்கினாங்க போல. ஆனா அல்லாருமே நாதனுக்கு ரொம்ப பயந்து போயி இருக்குறாங்க.

கொஞ்சநாள்ல அந்த பொண்ணுக்கு படிப்பு முடியுதாம் வெற்றி. அப்பாலிக்கா கண்ணாலத்தை முடிச்சிட்டு அவுங்க ஊராண்ட போவப் போறாங்களாம்.”

எவ்வளவுதான் முயன்று சாதாரணமாகப் பேசினாலும் நண்பனின் குரலில் இழையோடும் சோகமும் ஏக்கமும் வெற்றிக்குப் புரியாமலில்லை.

‘ஆனால், இதைத்தவிர வேறுவழியுமில்லை. ஏற்கனவே சிக்கலாய் இருந்ததை இடியாப்பச் சிக்கலாய் மாற்றி வைத்திருக்கிறான் இவன். அந்தப் பெண் நல்லபடியாகத் திருமணம் முடித்துச் செல்வதுதான் எல்லோருக்கும் நல்லது. நாளடைவில் பாரியின் மனமும் மாறிவிடும்’

தனக்குத்தானே எண்ணிக் கொண்டவன், ஒன்றை மறந்து போனான். தன்னால் கயலை எப்படி மறக்க முடியாதோ, அவளைத் தவிர வேறு பெண்ணை மனதால்கூட நினைக்க முடியாதோ, அதுபோலத்தானே பாரியும் என்பதை ஏனோ யோசிக்கத் தவறினான்.

நினைவில் நிறைந்தவர்கள் வாழ்க்கையில் சேர முடியாமல் போனாலும், நம் இறுதி மூச்சு உள்ளவரை அவர்தம் நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலுவதில்லை என்பது நிஜம்தானே… இது வெற்றிக்கு மட்டுமா? பாரிக்கும் பொருந்தும்தானே?

நேற்றும் இன்றும் எப்படி நம்கையில் இல்லையோ அதுபோல நாளையும் நம்கையில் இல்லை. இதை வெற்றி விரைவில் புரிந்து கொள்வான்.

நூல் கொண்டு அவன் ஆடும் ஆட்டத்தில் நாம் யாரும் அவன் கை பொம்மைகளே! அப்படியிருக்க, வருங்கால நிகழ்வுகளை அவனன்றி யாரறிவார்…!

—ஆழி சூழும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!