IV4

IV4

இதய ♥ வேட்கை 4

நாட்கள் அதன் வேகத்தில் ஒரு வாரத்தைக் கடந்திருந்தது.

அன்று கோபத்தோடு அறையிலிருந்து கிளம்பியவன், விடியும்வரை இணையத்திலிருந்து இரவல் வாங்கிய அவனறியாத செய்திகளில், பாதி புரிந்தும் மீதி புரியாமலும், விடியலுக்கு முன்னே வீட்டிலிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பியிருந்தான்.

அன்றைய தினம் தூத்துக்குடியில் பணி முடிந்ததும், செங்கோட்டை வருவதாக இருந்த பயணத்தை மாற்றி சென்னைக்கு போயிருந்தான்.

தினசரி குறும்போடு கூடிய குறுஞ்செய்தி பரிமாறல்கள், சீண்டல்கள் தற்காலிகமாக நின்றிருந்தது.

மனைவியிடம் வற்புறுத்தி அவ்வப்போது புகைப்படங்களை அனுப்பிக் கேட்பதும் முற்றிலும் விட்டுப் போயிருந்தது.

வியாபார பேச்சு, நேரம் போக மற்ற நேரம் முழுவதும் மிதிலாவின் நினைவில் இருந்தவனுக்கு, யாரிடமும் யாசகம் பெற எண்ணாமல் வாழ்ந்த தனது நிலையை மாற்ற வந்தவளாகவே மிதிலா தோன்றினாள்.

யாசகமாக வேண்டினாலும் மறுப்பவளை எங்ஙனம் தனது எண்ணத்திற்கேற்ப மாற்றுவது என்ற புரியாமல் இருந்தான்.

விஷ்வாவிற்கு மனைவியைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள இயலாதபோதும், அவளுக்காகவே நிறைய தனது நடவடிக்கைகளை, செயல்களை அவனறியாமலேயே மாற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தான்.

விஷ்வாவின் மாற்றம் மற்றவர்களுக்கு வியப்பளித்தது. மாற்றம் புரியாமல், தன்னைத் தெரியாதவனாகவே, மிதிலா விசயத்தில் விஷ்வா இருந்தான்.

நவீன இணைய வசதி உதவியோடு, பெண்களின் மாதவிடாய் கால அவஸ்தைகளைப் பற்றி முதன் முறையாக பிரவுசர் உதவியோடு தேடித் தெரிந்து கொண்டவனுக்கு, பெண்ணை எதிர்கொள்ளத் தயக்கம் உண்டாகியிருந்தது.

‘என்ன நினைச்சா என்ன? என்னை நினைச்சான்னா அதுவே எனக்குப் போதும்,  அது நல்லதா கெட்டாதாங்கறதைப் பத்தி எனக்கொன்னுமில்ல’ என்பதாக இருந்தது மிதிலாவைப் பற்றிய அவனது எண்ணம்.

ஆனாலும், இணையத்தில் கண்ணுற்றதை, படித்ததைப் பற்றிய சந்தேகங்கள் மனதில் எழுந்த வண்ணம் இருக்கவே, மிதிலாவிடம் மனைவி என்கிற உரிமையில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றினாலும், இருவருக்கிடையேயன புரிதல் இல்லாததால் ஏதோ அசௌகரியமாக உணர்ந்தான் விஷ்வா.

அத்தோடு, தூத்துக்குடியில் வேலையிருக்கவே அதைச் சாக்கிட்டு விடியலுக்கு முன்னே கிளம்பியிருந்தான்.

செங்கோட்டைக்கு சென்று அங்கேயே தங்கத் துவங்கிய பெண், என்றுமே விஷ்வாவிற்கு தன் தேவையின் நிமித்தமாக அழைத்துப் பேசியதில்லை.

நிர்வாக காரணங்களுக்காக வேண்டி அழைக்கும்போது காத்திருக்க வைக்காமல் உடனே அழைப்பை எடுத்துவிடுவான்.

முக்கிய அலுவல்களில் இருந்தாலும் எடுத்து, “வேலையா இருக்கேண்டா… நானே அப்புறம் கூப்பிடறேன்”, என்று வைத்துவிடுவான்.

மனைவியை செங்கோட்டையில் விட்டு வந்தபின், அவளிடம் இன்றைய நவீன அலைபேசி எதுவும் கையில் இல்லாததை அறிந்துகொண்டிருந்தான்.

அடுத்துச் சென்ற செங்கோட்டை பயணத்தின்போது, புதிய ஆண்ட்ராய்ட் அலைபேசியை வாங்கிக் கொடுத்திருந்தான்.

மிதிலாவிற்கு வரக்கூடிய, பேசக்கூடிய அழைப்புகள் யாரிடமிருந்து, எவ்வளவு நேரம், என்ன பேசுகிறார்கள் என்பதனைத்தும், விஷ்வா விரும்பும் பட்சத்தில் தெரிந்து கொள்ளும் வகையினதாக உரிய மாற்றங்களை அலைபேசியில் செய்துவிட்டே அதைப் பெண்ணிடம் கொடுத்திருந்தான்.

அதற்குள்ளாகவே பெண் தனது சந்தேகங்களையும், கணவனது மருத்துவ அறிக்கை சார்ந்த விசயங்களையும் நேரில் சந்தித்து கேட்டறிந்திருந்தாள்.

கணவனது அறிக்கை என்பதனையும் யாரிடமும் கூறாமல் கையில் இருந்த மூலத்தில் உள்ள பெயரை மட்டும் மறைத்துவிட்டு நகலை எடுத்திருந்தாள்.

புதிய அலைபேசியை வாங்கிக் கொடுத்தவனிடம்,

“எங்கிட்ட பழைய நோக்கியா மாடல் போன் இருக்கு. அது நல்லா இருக்கும்போது  இதெல்லாம் வேணாம்”, என்று மறுக்கவே

“இருந்தா என்ன? எதாவது வாட்சப்ல வான்னா வர மாட்டிங்கறன்னு வாங்கித்தந்தா.. வேணாங்கறே… இதை வாங்கிக்கலைன்னா நீ இங்க இருக்க வேணாம்.  என்னோடயே நீயும் சென்னைக்கு வந்திரு… கிளம்பு”, என அழைக்கவும், அதற்குமேல் தர்க்கம் எதுவுமின்றி அலைபேசியை வாங்கி கொண்டிருந்தாள் பெண்.

கணவனின் நோக்கம் அறியாதவளாகவே அலைபேசியை முதலில் பெற்றுக் கொண்டாள் மிதிலா.

முதலில் ஆண்ட்ராய்ட் அலைபேசியை இலகுவாக பயன்படுத்த இயலாமல் திண்டாடியவளை, அதை அனுப்பு இதை அனுப்பு என்று நிர்வாகம் சார்ந்த விசயங்களில் ஆரம்பித்தவனை சமாளிக்க இயலாது திணறியிருந்தாள் பெண்.

திணறலோடு பயன்படுத்தியவள், நாள் செல்லவே இலகுவாக பயன்படுத்தத் துவங்கியிருந்தாள்.

பெண்ணின் மீதான சந்தேகம் எதுவுமில்லாதபோதும், தான் எத்தனை முறை உரிய காரணத்தை அறியக் கேட்டும் கூறாதவள், தோழியரிடமாவது தனது திருமணம் பற்றிய, தனது விவாகரத்து பற்றிய விசயத்தைப் பகிர்ந்து கொண்டால் அதைக் கொண்டு சரி செய்துவிடும் எண்ணத்தில்தான் அவ்வாறு செய்திருந்தான் விஷ்வா.

இன்றுவரை அவசியம், அத்தியாவசியம் தவிர கூடுதலாக எதையும், யாரிடமும் பேசியறியாதவளாக மனைவி இருக்க, விஷ்வாவின் முதல் முயற்சியும் தோல்வியைத் தழுவியிருந்தது.

இந்த பயணத்தில் உண்டான அனுபவ யோசனைகளோடு சென்னை திரும்பியவன், மிதிலாவை சந்தித்த அன்று இரவு அவள் உறங்கிக் கொண்டிருந்தபோது எடுத்த, தனது அலைபேசியில் பத்திரப்படுத்திய படத்தைப் பார்த்துப் பார்த்து, தனிமையில் பேசி புரிய வைக்க முயல்கிறான்.

நேரில் மறுத்துப் பேசி விவாதம் செய்பவள், சயன கோலத்தில் அமைதியாக கேட்டுக் கொண்டாள் அவ்வளவே.

தனது வியாபாரங்களில் காலுன்றுவதற்கு முன்புகூட இத்தனை இடறுகளை தான் எதிர்கொள்ளவில்லை என அவ்வப்போது விஷ்வாவின் மனதில் தோன்றியது என்னவோ உண்மை.

தனக்கும், மிதிலாவிற்குமான இடைவெளியினை சரிசெய்து சாமான்யனைப்போல வாழ, என்ன செய்யலாம் என்கிற சிந்தனை மனமுழுக்க ஆக்ரமிக்கத் துவங்கியிருந்தது.

தாய் மறையும் முன்பு இருந்த இதமான சூழல் திருமணமாக பெண் வீட்டோடு வந்தபோது இருந்ததாக விஷ்வா நம்புகிறான்.

மூன்று மாதங்கழித்து மிதிலா சென்றபோது உண்டான மாற்றத்தைக் கவனித்தே, பெண் வீட்டில் இருக்கும்போது நிறைவு கிட்டுவதாகவே அவனின் மனம் நம்பத் துவங்கியிருந்தது.

அத்தோடு, அந்த இதமான நிலை எப்போதும் கிட்ட, மிதிலா தனது வாழ்நாள் முழுமைக்கும் தன்னோடு இருந்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்தையும் எடுத்ததோடு, அவனது மனம் அதை ஆணித்தரமாக ஆமோதித்தது.

தனது மாற்றங்கள், நடைமுறைகளை தானறியாமலேயே மாற்றிக் கொள்ளத் துவங்கிய தனது செயல்களை அவ்வப்போது கண்ணுற்று சற்றே ஆச்சர்யமும் சமீப காலத்தில் விஷ்வாவிற்கு வருகிறது.

மனஅழுத்தத்தோடு இருப்பவனுக்கு, அலைச்சல் மற்றும் உணவில் கவனமின்மை இரண்டும் அதிகம் சேர்ந்து, அதீத சோர்வு வந்த உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருக்கவே, அன்று உடல் ஒத்துழைக்காமல் வீட்டில் தேங்கி இருந்தான்.

நாகம்மாள், என்றும் வீட்டில் சோம்பியிராதவன் அன்று இருப்பதைக் கண்டு பதறியிருந்தார்.

“என்னய்யா, என்ன செய்யுது?”, நாகம்மாள்

“ஒன்னுமில்லை பாட்டி”, என்றவன்

‘பசியில்லை’ என்று ஆகாரத்தை வேண்டாமென்றிருந்தான்.

நாகம்மாள் வேண்டாத தெய்வமில்லை.

மனமுழுக்க விஷ்வாவிற்காக வேண்டுதலோடு, கர்ம சிரத்தையோடு எதாவது குறைந்தபட்ச ஆகாரத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டார் நாகம்மாள்.

நேரம் செல்லச் செல்ல அந்த வெயில் காலத்திலும் குளிரை உணரத் துவங்கினான் விஷ்வா.

அதற்குமேல் தாமதிக்காமல் தனது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொண்டு பேசினான்.

மருத்துவரின் நேர ஒதுக்கீட்டின்படி நேரில் சென்று தனது உடல் அயர்ச்சி மற்றும் சுர உணர்வைப் பற்றிக் கூறினான்.

“என்ன விஷ்வா? நல்லா இருக்கும்போது வீட்டுப்பக்கம் வா வானு கூப்பிட்டா வர மாட்டிங்கற. எங்க உன் வீட்டம்மா… அவங்களையும் கூட்டிட்டு ஒரு நாளைக்கு வரலாம்ல…”, என்றவர்

“…  இப்டிதான் உங்க அப்பாவும் இருந்தாரு… பிஸினெஸ் பிஸினெஸ்னு”, என சத்யநாதனைப்போல வியாபாரத்தில் மட்டுமே விஷ்வாவும் கவனத்தைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

“இந்த மாத்திரையை யூஸ் பண்ணு விஷ்வா.  ரெண்டொரு நாள்ல க்யூர் ஆகலைன்னா பிளட் டெஸ்ட் செய்துக்கோ”, என விஷ்வாவை ஓரலாக பரிசோதித்து மருந்து மாத்திரைகளைத் தந்திருந்தார்.

அத்தோடு, “உன் வயிஃப் நல்லாயிருக்காங்களா?”, மருத்துவர்

“இருக்கா டாக்டர்”, என்றவன் அவர் கேட்ட வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக பதிலளித்துவிட்டு கிளம்பியிருந்தான்.

அடுத்த இரண்டு நாள்களும் சாதரணமாகச் சென்றிருக்க, உடல் அயர்ச்சி இன்னும் மிச்சமிருந்தது.

சுரத்தால் வந்த உணர்வை பொருட்படுத்தாது அன்றைய பணிகளைக் கவனிக்க தனது ஃபர்னிச்சர் ஷோரூம் சென்றிருந்தான் விஷ்வா.

எதிலும் கவனம் செலுத்த இயலாத உணர்வு.

மதியம் வரை தொடர இயலாமல், மீண்டும் மருத்துவரைத் தொடர்பு கொண்டிருந்தான்.

////////////

பெண்ணிற்கும் கணவனை மிகவும் அலைக்கழிக்கிறோமோ என்கிற கழிவிரக்கம் வந்திருந்தது.

‘இவரும் இவரோடு பிடிவாதமும், ஆக்டிவிட்டிஸ்ஸூம் பிடிக்காம… வேணானுதானே மொத்தமா விலகிக்கறேங்கறேன்.  அது புரியாம… போறேங்கறவளை விடாமப் பிடிச்சு வச்சு, வியாபாரம், குடும்பம், அது இதுன்னு அடுக்கடுக்கா அவரா ஆசைய வளத்திட்டு, அதை வந்து எம்மேல திணிச்சா… நான் என்ன செய்ய?  போறவளை நல்லபடியா போன்னு விட்டுட்டு, ஆசைப்படற மாதிரி வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிட்டு, ஜம்முன்னு வாழ வேண்டியதுதான?’ , என்பது மிதிலாவின் வாதமாக இருந்தது.

கணவனிடம், அவன் செங்கோட்டை வரும்போதெல்லாம் இதைப் பற்றிப் பேசியிருக்கிறாள் மிதிலா. 

இதுவரை பெண்ணின் பேச்சிற்கு பிடிகொடுக்காதவன் இனிமேல் பிடி கொடுப்பான் என்பதற்கான நம்பிக்கையும் மிதிலாவிற்கு போயிருக்க, ‘இந்தக் குடும்பம், கோத்திரம்  எல்லாம் எதுவும் வேணானுதான் கமல் கிட்ட சொன்னேன்.  கேக்காம கோத்துவிட்டுட்டு, ஹாயா எஸ்கேப்பு ஆகிட்டாங்க’, என்று மரித்த தன் தாயைக் கடிந்து கொள்ள மட்டுமே பெண்ணால் முடிந்தது.

பெண்ணிற்கு இயல்பான திருமண ஆசைகள் இருந்தது உண்மைதான்.

தான் எதிர்பார்த்ததைவிட அம்சமான, ஆஸ்திகளையும் பெற்றவன் மணமகனாக  வரப்போகிறான் என்பது நிச்சயமானபோது, பெண்ணால் நம்ப இயலவில்லை.

ஆனாலும் மலையளவு சந்தோசம் மனதோடு நிச்சயமாக இருந்தது.

கனவுகள் இல்லாதபோதும், கசப்புகள் எதுவுமில்லாமல் சந்தோசமாகவே திருமணத்தை எதிர்கொண்டிருந்தாள் மிதிலா.

தாயைப் பற்றிய கலக்கமும் மனமுழுக்க இருக்க, தனது சந்தோசத்தைக் கொண்டாட இயலாத நிலையில் திருமண நிகழ்வை கடந்திருந்தாள்.

ஒவ்வொரு நிகழ்விலும், தங்களது குடும்பத்தை அனுசரித்து, பார்த்துப் பார்த்துச் செய்தவனை மெச்சிக் கொள்ள மனம் துடித்தாலும், தாயை எண்ணி சோர்ந்திருந்தாள்.

முரண்பட்ட மனதோடு திருமண பந்தத்தை எதிர்கொண்டவளுக்கு, திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தாயின் இறுதிப் பயணம் என்பதைத் தாங்கிக் கொள்ளவே இயலாத நிலை.

இக்கட்டான நிலைகளில் தன் தோள் தாங்கியவனை நன்றியோடு எதிர்கொள்ளவே, தனது இறுக்கத்திலிருந்து வெளிவந்தாள் மிதிலா.

தாயின் அறிவுரைகள் வேறு மனதில் எதிரொலிக்க, தனது கடமையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தும், துக்கத்திலிருந்து மீளவும் வழி தேடி விஷ்வாவின் வீட்டில் ஒவ்வொரு நிலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாள்.

அனைவரும் மிதிலாவை, மிகவும் நன்மதிப்போடும், அன்போடும், அரவணைப்போடும் நடத்தவே, தனது துக்கம் குறைந்தாற்போல உணர்ந்து, மனம் இலேசாக உணர்ந்தாள் பெண்.

பெரும்பாலும் விஷ்வா காலையில் வெளியே சென்றால், இரவு பதினோரு மணிக்குக் குறைந்து வீட்டிற்கு திரும்பினானில்லை.

தன்னை பொருட்டாகக் கருதாமல், அவன் வழமைபோல அவனது பணிகளில் இருப்பதைக் கண்டு, குற்றவுணர்வு மேலோங்க காலை ஆகாரத்தின்போது அவனுக்கு வேண்டியவற்றை பரிமாறுவது, அவனது கேள்விகளுக்கு பதில் கூறுவது என்று பொழுதுகள் ஆரம்பத்தில் சென்றது.

தனது தாயின் இழப்பினை எண்ணி, தன்னைத் தொந்திரவு செய்யாமல் இருக்கிறான் என்று அவளாகவே எண்ணி, கணவனைப் பற்றிய தனது மதிப்பீட்டை நூறாகத் தீர்மானித்து, வீட்டிலும் தனது பங்கை நிலைநிறுத்த வேண்டி, பணிகளைத் துவங்கினாள்.

பணியாளர்கள் மட்டுமன்றி விஷ்வாவும் பெண்ணின் எந்த முயற்சியையும், தீர்மானத்தையும் எதற்கு ஏன் என்று கேட்காமல், ஒத்துழைப்பு நல்கினர்.

பெண்ணிற்கு அதுவே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

திருமணமான புதிய மணமகனுக்குரிய எந்த இயல்பும் இல்லாமல் இருந்தவனை ஆச்சர்யமாகவே எதிர்கொண்டாள்.

விஷ்வா வீட்டில் இருக்கும் வேலைகளில்கூட, அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அவளின் பொழுதுகள் சுதந்திரமாகவே சென்றது.

தனித்திருந்த வேளைகளில் திருமணமான பெண்ணுக்குரிய இயல்பான எதிர்பார்ப்புகள் தோன்றத் துவங்கிய நிலையில், கனவுகளோடு தனது இல்வாழ்க்கையைத் துவங்கக் காத்திருந்தாள் மிதிலா.

ஆகர்சிக்கும் கணவனது செயல்களில் பெண் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஈர்க்கப்பட்டிருந்தாள்.

முதல் கூடல்வரை இதமாகச் சென்ற பெண்ணின் எதிர்பார்ப்புகள், அதன்பின் வேதனை, பயம், வெறுப்பு என மாறியிருந்தது.

கணவனின் மேலான அதிருப்தியல்ல அது.

தாம்பத்யத்தின் மீதான புரிதலற்ற அதிருப்தி.

அதன்பின் வந்த நாள்களில் நேரங்காலம் முழுமையும், தனிமையில் அதைப்பற்றியே யோசித்து, தான் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியற்றவள் என்ற முடிவுக்கு பெண் வந்திருந்தாள்.

அதன்பின் கணவனை எதிர்கொள்வதைக் குறைத்துக் கொண்டாள். 

அதே சமயம் விஜயதசமிக்கான கொண்டாட்டம் வரவே, வீட்டினை ஒழுங்குபடுத்தும் மேற்பார்வையில் விஷ்வாவின் சுயகோப்பு எதேச்சையாக பெண்ணின் கையில் கிடைக்கப்பெற்றது.

அதில்… சில மாதங்களுக்கு முந்தைய தேதியில் இருந்த விஷ்வாவின் மருத்துவ அறிக்கையை காணும்படி நேர்ந்தது.

கணவனைப் பற்றி அறியும் ஆர்வத்தில் முதலில் பார்த்திருந்தவளுக்கு, இறுதியில் கண்ட அறிக்கை, இதயத்தில் வலியைத் தந்திருந்தது.

அறிக்கையைப் பற்றிய தெளிவில்லாத தனது ஞானத்தால், அதனை எடுத்து பத்திரப்படுத்தியவள், செங்கோட்டைக்குச் செல்லும் தனது எண்ணத்தை கணவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

தனது பள்ளித்தோழி தற்போது நர்ஸாக மருத்துமனையில் பணிபுரிவதால், அவளின் உதவியோடு மருத்துவர் மூலம், அந்த அறிக்கையில் உள்ள விடயத்தைப் பற்றி அறிய விழைந்தாள்.

செங்கோட்டை வீட்டில் மிதிலாவை விட்டுச் சென்றவன் திரும்பி வருவதற்குள், விஷ்வாவைப் பற்றிய அறிக்கையைப் பற்றி, நம்பகமான மருத்துவர் மூலமாகக் கேட்டறிந்தவளுக்கு, கணவனோடு பழையபடி மனம் ஒட்ட மறுத்தது.

வெட்டவா, ஒட்டவா எனும் முதல் கூடலுக்குப் பிறகான போராட்டத்தில் இருந்த மனம், மருத்துவ அறிக்கையின் உண்மை நிலை தெரிந்தவுடன் வெட்டிக் கொள் என பெண்ணுக்கு சாதகமாகவே தீர்மானித்திருந்தது.

ஆம்… பெண்ணுக்கு விஷ்வாவுடன் இணைந்து வாழும் எண்ணம் முற்றிலும் மறைந்திருந்தது.

அறியாதவரை அதிசயமாகத் தெரிந்தவனின் உறவு, அதன்பின் அருவருக்கத் தக்கதாக மனதில் மாறியிருந்தது.

‘சம்பந்தப்பட்டவங்க தவறான செயல்ல ஈடுபட்டாதான், இந்த பிரச்சனை வந்திருக்கனும்னு அவசியமில்லை. பிரச்சனை இருக்கறவங்களுக்கு யூஸ் பண்ண பிளட்டை டெஸ்ட் பண்ணாம அவசரத்துக்கு பயன்படுத்தியிருந்தாலோ, ஸ்டெர்லைஸ் பண்ணாத எக்யூப்மென்ட்ஸ்ஸை யூஸ் பண்ணாலும் வர வாய்ப்பிருக்கு’, என்ற மருத்துவரின் வாக்குமூலம் கேட்டவள், கணவனின் மீதான சொற்பமான நம்பிக்கையில்  தனது எண்ணத்தை தெளிவுபடுத்தாது, விவாகரத்துக்குரிய முடிவை எடுக்குமாறு கணவன் வரும்போதெல்லாம் கூறுகிறாள்.

விஷ்வாவோ, தனது நிலையில் மாறாமல் விளக்கம் கேட்கவே, பெண்ணுக்கு அறிக்கையைக் காட்டி கணவனைப் பற்றிக் கேட்கவும், பேசவும் தயக்கமாக இருந்தது.

‘நீ எத்தனை சதவீதம் எனக்கு உண்மையானவன் என்பதைக் கூறு’, என்று நேரில் கேட்க அந்தப் பெண்ணால் இயலவில்லை.

மேலும், விஷ்வாவோடு வாழும் எண்ணமில்லாது இருந்தவள், பூட்டிய அறைக்குள் வந்தவனை எதிர்கொள்ள அன்று ஒரு சாக்கு கிடைத்தாற்போல என்றும் வாய்ப்பு கிட்டும் என்று தன்னால் உறுதியாக நம்ப முடியாத நிலையில், தனது வீட்டிலிருந்தவாறே விஷ்வாவின் வீடு, நிறுவனங்களை மேற்பார்வையிடத் துவங்கியிருந்தாள் பெண்.

கணவன் பேசும்போது, இதைப் பற்றிக் கூறிக் கொள்ளலாம் என்ற முடிவோடு தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தாள் மிதிலா.

//////////////////

வழமைபோல எழுந்து கிளம்பியவள், தனது வீட்டிலிருந்து புகுந்த வீடு சென்று மேற்பார்வையிட்ட பிறகு, அலுவலகம் கிளம்பியவளை அலைபேசி ஒலி அழைத்தது.

நிதானமாகச் சென்று ‘இந்நேரம் யாரு?’ என யோசித்தபடியே சென்று எடுத்தவள் எதிரில் கண்ணன் என திரையில் தோன்றிய எண்ணைக் கண்டு ‘இந்த அண்ணே எதுக்கு காலையிலயே கால் பண்றாரு’ என எண்ணியவாறே எடுக்க,

“ஹலோ, திலா… நான் கண்ணன். இம்போர்ட்டர்ஸ்ல வந்திருக்கிற தேக்கு, வேங்கை மட்டும் இழைப்பு மில்லுக்கு அனுப்பிட்டு, நாலு நாள்ல சென்னைக்கு லோடு வர்ற மாதிரி பண்ணிரு”, என தனக்கிட்ட பணியினைச் செய்தான் கண்ணன்.

இதுவரை விஷ்வா மட்டுமே தன்னிடம் இதுபற்றிக் கூறுவான்.  இன்று என்ன ஆனது? என்ற யோசனையோடு கண்ணன் கூறுவதைக் கேட்டவள்,

“அவரு இப்ப வெளிய எங்கேயும் போயிட்டாரா?”, என விஷ்வாவைப் பற்றி அறிந்து கொள்ளும் எண்ணத்தில் பெண் கேட்க

“வீட்லதான் ரெஸ்ட் எடுக்கறார்.  ஏன் உனக்குத் தெரியாதா?”, துருவினான் கண்ணன்

வியாபார, நிர்வாகம் சார்ந்து விஷ்வாவின் முன் மிதிலாவிடம் மேடம் என மரியாதையாக பேசுபவன், மற்ற நேரங்களில் மிதிலாவிடம் தனிமையில் ஒருமையாகவே பேசுவான்.

“என்ன செய்யுது?”, மனம் பதற கேட்டாள்.

“பீவரா இருக்குனு சொன்னார்”, என்றவன், “லோடு  சொன்ன தேதியில அனுப்பனாத்தான் இங்க ஃபர்னிச்சர் ஆர்டர் பண்ணத சொன்ன தேதியில டெலிவரி பண்ண முடியும் திலா.  டிலே பண்ணிறாத”, என்றுவிட்டு

“ஏன் திலா, பாஸ் உங்கிட்ட அவரு ஹெல்த் பத்தி ஒன்னுஞ்  சொல்லலையா?”, என்று வினவ

சுதாரித்தவள், “நேத்து ஏதோ டாக்டரைப் பாக்க போறேன்னு சொன்னார்.  ஆனா அதுக்கப்புறம் கால் பண்ணலை, நானும் வேலையா இருந்ததுல கேக்க மறந்துட்டேன்”, என்று பூசி மொழுகியவள்

“சரி நான் அவருகிட்ட பேசிக்கறேன்.  இப்ப வேலையிருக்கு வைக்குறேன்”, என்று வைத்துவிட்டாள் பெண்.

கண்ணன் கூறிய வேலைகளை இரு நிறுவனங்களிலும் அழைப்பு மூலம் பகிர்ந்ததோடு, பணிகளைத் துரிதமாக்கிவிட்டு, விஷ்வாவிற்கு அழைத்தாள்.

ஒரு வாரமாக எந்த பேச்சு வார்த்தையோ, குறுஞ்செய்திப் பரிமாறலோ இல்லாத பொழுதுகள் பாலைவனமாக வறண்டிருந்தது.

வறட்சி தீர வழியில்லாதபோதும், வேறு வழியில்லை என்று தன்னை சமாதானம் சொல்லி தேற்றுகிறாள் மிதிலா.

மேலும் தற்போது கணவனது உடல் நலனில் பிரச்சனை என்றவுடன் பெண் உண்மையிலேயே பதறியிருந்தாள்.

இரக்கம் வந்து கதவைத் தட்டும்போது, காதல் கூடாரத்தையே கைப்பற்றிவிடும் என்பதை அறியாத பேதையவள்.

இடைப்பட்ட நேரத்தில் ‘எதுனால பீவரு.  இந்த ஒரு வருசத்தில எப்பவும் முடியலன்னு சொன்னதில்லையே? என்ற யோசனையோடு இருந்தவள், அவனுக்கு வந்தால் நமக்கென்ன? என்று இருக்க முடியாத மனநிலையில் இரண்டு மூன்று முறை அடுத்தடுத்து அழைத்திருந்தாள்.

முதல் முறை மட்டுமல்லாது அனைத்து அழைப்பின் போதும், அழைப்பு முழுமையும் சென்றும் விஷ்வா எடுக்கவில்லை.

முதல் ரிங்கில் தனது அழைப்பை எடுப்பவனுக்கு இன்று அந்தளவிற்கா முடியவில்லை என்று மனம் பதறியது.

சைலண்டில் போட்டுவிட்டு மருந்தின் வீரியத்தில் உறங்கியவனுக்கு மனைவியின் அழைப்பு அறியாமலே போயிருந்தது.

அடுத்தடுத்து அழைத்து ஓய்ந்தவள், எதாவது அவசரத்திற்கு என்று கணவனிடம் வாங்கி வைத்திருந்த நாகம்மாளின் எண்ணுக்கு துணிந்து அழைத்துவிட்டாள்.

நாகம்மாள் சாதாரண விசயத்தையே பெரிதாகப் பேசக்கூடியவர்.  விஷ்வா எனும்போது சற்று அதிகமாகவே மிகைப்படுத்திக் கூறியிருந்தார்.

“ஏம்மா… நம்ம சின்னய்யா கண்ணு முழிக்காம படுத்திருக்காக… என்ன கோவன்னாலும் பேசித் தீக்கலாம்.  ஏன் இப்டி ஆளுக்கொரு பக்கமா இருக்கனும்.  குடும்பம்னா நாலு நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.  ஐயா எப்பவும் முடியலைன்னு படுக்கமாட்டாங்க.  நாலு நாளாவே நானே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் தாயி”, என்று விஷ்வாவின் உடல்நிலை பற்றிக் கூற

அதன்பின் பெண்ணால் அங்கிருக்க முடியாத நிலை.

நோயாளியாக இருந்த தாயிக்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்து பொறுமையோடு செய்தவளுக்கு, நோயாளியின் கஷ்ட, நஷ்டங்கள் கண் முன்னே தெரிய… அதற்குமேல் அங்கிருந்த காரை டிரைவரைக் கொண்டு எடுக்கச் சொல்லி அப்போதே சென்னைக்கு கிளம்பியிருந்தாள் மிதிலா.

இது எதையும் அறியாதவனோ உறக்கமும், விழிப்புமாக புதியதாக வந்திருந்த நோயோடு செல்கள் போராட களைப்பாக உறக்கத்தில் இருந்தான்.

சாலைகளின் நேர்த்தியாலும், பெண்ணின் அவசரப்படுத்தலுக்கும் ஆறு மணி நேரப் பயணத்தில் சென்னையை அடைந்திருந்தார் ஓட்டுநர்.

வீட்டை அடைந்தவள், வேறு எதையும் கவனிக்காமல் கணவனின் அறையை நோக்கிச் சென்றாள்.

வரும் வழி நெடுக, விஷ்வா வீட்டில் இருப்பதால் மிகுந்த கவனத்தோடு அவரவர் பணிகளில் கவனம் செலுத்தியதைக் கண்டவள், தேங்காது கணவனின் அறையை அடைந்தாள்.

தயக்கமாக அறையைக் கடப்பவள், தயக்கமின்றி தாதியாக அறைக்குள் நுழைந்திருந்தாள்.

உறக்கத்தில் இருந்தவனுக்கு வந்தவளின் சுவடு தெரியவில்லை.

களைந்திருந்த படுக்கையில் களையிழந்து கிடந்த காளையின் தோற்றம் கண்டு மனம் சுணங்கியது.

படுக்கையில் தலைமுடி களைந்து உறக்கத்தில் இருப்பவனைக் கண்டே, விஷ்வாவின் வேதனை எத்தகையது என்பதைக் கணித்தவள், சிதறி, ஒழுங்கற்றுக் கிடந்தவற்றை எடுத்து ஒழுங்குபடுத்தியவாறே கணவனையே பார்த்திருந்தாள்.

அரை மணித்தியாலம் ஆகியும் அறையில் இருந்து வராதவளைப் பற்றி மிதிலாவின் வருகையை அறிந்த ராசாத்தி  நாகம்மாளிடம் பகிர…

ராசாத்தியின் பேச்சில் நம்பிக்கையற்று வந்து எட்டிப்பார்த்தவரைக் கண்டு அறையில் இருந்து வெளிவந்தவள், “என்ன பாட்டீ… நல்லாருக்கீங்களா?”, என்று பொதுவான விசாரிப்பை மேற்கொள்ள

“ராசாத்தி சொல்லுச்சு… நான் நம்பலை… அதான் வந்து எட்டிப் பாத்தேன்”, என நாகம்மாள் நம்ப மறுத்து, இது கனவா என்று தனது பஞ்சடைத்த கண்களை கசக்கி விட்டு நோக்க, “நாந்தான் பாட்டி.  அவங்களுக்கு முடியல்லைன்னு சொன்னீங்கள்ல! அதான் உடனே கிளம்பி வந்தேன்”, என்று விளக்கம் கூற

பெண்ணை கண்ணேறு கழித்தவர், “அம்மாடி… வாங்க, வாங்க… இனி சின்னய்யாவுக்கு எல்லாம் சரியாகிரும்” என்று கூறியவாறே

அவசர அவசரமாக தேநீரைத் தயாரித்து கையில் தந்து, “வந்த அசதில தெரியறீங்க… இந்த டீயைக் குடிங்க… ராவுக்கு என்ன செய்யனு சொல்லுங்க”, என்று மிதிலாவைப் பார்த்த சந்தோசத்தில் துரிதமாக இயங்கத் துவங்கினார் அந்தப் பாசக்கார பாட்டி.

////////////

ஒரு மணித் தியாலத்திற்கு பிறகு எழுந்தவன், சற்றே அறைக்குள் நடக்க…

கணவனைக் காண வந்தவள் அவனின் செயலைக் கண்டு நிதானித்து, “சாப்பிட எதாவது எடுத்துட்டு வரவா?”, என்ற பெண்ணின் பேச்சில் திரும்பியவனுக்கு மிதிலாவைக் கண்டு மின்னலளவு அதிர்ச்சி வாங்கினான்.

எதுவும் பேசாமல் யோசனையோடு பெண்ணைப் பார்த்தவாறு இருந்தவன், ‘எப்போ, எப்டி வந்தா…?’ என்கிற கேள்வியோடு

“எப்ப வந்த?”, எனும் வினாவோடு நோக்க

“நான் நம்ம டிரைவரை வண்டி எடுக்கச் சொல்லி இங்க ஒரு மணி நேரத்துக்கு முன்ன வந்தேன்”, என்றவள்

“எதுவுமே சாப்பிடலைன்னு நாகம்மா சொன்னாங்க… என்ன செய்யுது”, என்று கேட்டவளை

“முட்டாள்… உன்னை யாரு இப்டி தனியா கிளம்பி வரச் சொன்னது.  எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்றதுக்கென்ன?”, என்ற விஷ்வாவின் கடுமையான பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்தாள் மிதிலா.

“போன் பண்ணேன்.  நீங்க  எடுக்கவேயில்லை.  அதான்… நீங்க போனை ஏன் எடுக்கலைன்னு பாத்துட்டு போகலாம்னு கிளம்பி வந்தேன்”, என்று பட்டென்று பதிலுரைத்தவள்.

அடுத்து சமாதானமாகி, “என்ன செய்யுது?”, என்று வினவ

“வந்து என்ன செய்யப்போற…! மொத்தமா விட்டுட்டுப் போறேன் போறேன்னு நிக்கறவகிட்ட என்னத்தைச் சொல்ல நான்!”, என்று விஷ்வா தனது வாயிக்குள் முனகினாலும் பெண்ணுக்கு நன்றாக கேட்கவே செய்தது.

‘இப்போ எதுக்கு இந்தப் பேச்சு’, மிதிலா

பெண்ணை நோக்கித் திரும்பியவன், “டிராவல் பண்ணி இப்பதான வந்திருக்க… நீ போயி ரெஸ்ட் எடு,  நாகம்மா பாட்டி பாத்துப்பாங்க”, என்று மிதிலாவை அப்புறப்படுத்தும் விதமாகக் கூறியவன்

“பாட்டீஈஈஈஈ…”, என்று அழைத்த சத்தத்தில் நாகம்மாள் என்னவோ ஏதோ என்று பதறியிருந்தார்.

அவசரமாக அறை வாயிலில் வந்து நின்றவரைப் பார்த்து, “அவளைப் போயி ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க… எனக்கு லைட்டா கஞ்சி மாதிரி எதாவது தாங்க… வேற எதுவும் வேணாம்”, என்க

“இதோ எடுத்தாரேன்யா”, என்றவர் அத்தோடு தனது பணியை மேற்கொள்ளச் செல்ல

“அப்ப என்ன செய்யுதுனு எங்கிட்ட சொல்ல மாட்டீங்களா?”, என்று தனது வினாவிற்கான விடையை வேண்டி நிற்க

“சொன்னா என்ன செய்வ?”, என்று விதண்டாவாத வினாவை வைத்தான் விஷ்வா.

“…”, அதற்குமேல் விஷ்வாவிடம் பேசும் துணிச்சலின்றி அமைதியாக நின்றவள், சட்டென தோன்றிய முடிவோடு…

“அப்போ நான் கிளம்பறேன்”, என்று அறையை விட்டு வெளியே செல்ல எத்தனிக்க

“எங்கடீ கிளம்பறே”, என்று குரலை  உயர்த்தியிருந்தான்.

“முடியலைன்னு கேட்டு பதறி அடிச்சு ஓடி வந்தா… எனக்கு அது இதுன்னு சொல்லக் கேட்டுருக்கோம்.  அதவிட்டுட்டு. எதுக்கு வந்தேன்னுதான கேட்டீங்க…? அப்ப எனக்கு இங்க வேலையில்லைல…! அதான் அங்க ஊருக்குப் போனா என் வேலையவாவது பாப்பேன்ல…! அதான் கிளம்பறேன்னேன்!”, என்று பழைய மாடுலேசனில் பேசியவளை புரியாமல் பார்த்தான்.

‘என்ன?’ என்ற பார்வை புரியாமல் பார்த்தவனை நோக்கி வீச

“எங்க கிளம்பு பாப்போம்”, உன்னை விட்டேனா பார் எனும் குரலில் விஷ்வா

“ஏன் வந்த மாதிரி கிளம்பறதுல என்ன கஷ்டம்”, நின்று நிதானமாக வினவியவளைப் பார்த்தவன்

“ஆமா உனக்கு ஒரு கஷ்டமுமில்ல…! டென்சனெல்லாம் எனக்குத்தான்!”, என்று தலையை தன்னை ஆசுவாசப்படுத்தும் நோக்கில் கோதிக் கொண்டான் விஷ்வா

“எதுக்கு டென்சன்.  நான் என்ன பண்ணேன்?”, க்ரீன் சாண்ட் மாடுலேசனில் பெண் கேட்க

“எதுவும் பண்ணலைங்கறதுதான் பிரச்சனையே”, என்று விஷ்வா கூறியதும் அதற்குமேல் நின்று பேசுவது வில்லங்கத்தில் முடியும் என்றுணர்ந்து

“ஏற்கனவே முடியாம இருக்கறதோட எதுவும் நாம பேச வேணாம்.  சரியாகட்டும்.  எல்லா விசயத்தையும் பேசித் தீத்திட்டே நான் கிளம்பறேன்.  இப்ப என் ரூமுக்கு போறேன் போதுமா?”, என்றவளை

“இனி இப்டி சொல்லாம கொள்ளாம தனியா கிளம்பி எங்கேயும் போறதை வரதை விடு ஸ்ட்ராபெர்ரி…”, என நிதானமான குரலில் விஷ்வா கூறியதை செவிமடுத்தமைக்கு தலையை மட்டும் அசைத்து ஒப்புதல் கூறியவள்,   அதற்குமேல் நிற்காமல் அவளது அறையை நோக்கிச் சென்றிருந்தாள்.

அறைக்குள் நின்று பேசினாலும், இருவருக்கிடையே ஏதோ வாக்குவாதம் என்பதுபோலத் தோன்றவே, நாகம்மாளுக்கு வந்த சந்தோசமும் போயிருந்தது.

‘இந்த ஐயாவை அனுசரிக்காது போல இந்த அம்மா’, என்கிற வருத்தம் வந்திருக்க

விஷ்வா கேட்டதை, கொண்டு வந்து தரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

அறையை விட்டுச் சென்றவளை புன்னகையோடு பார்த்திருந்தவன், ‘இப்பதான் பழைய ஃபார்முக்கு வர்றா’ என்று எண்ணினான்.

முன்பைவிட உடலில் ஏதோ ஆற்றல் ஊற்றெடுத்ததைப்போல உணர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் மருத்துவமனை செல்ல கிளம்புமுன், அலைபேசியில் பெண்ணை தொடர்பு கொண்டான்.

‘ஒரே வீட்டுக்குள்ள போனுல பேசுற நிலைமைலதான் இன்னும் இருக்கு’, என்று மனம் சுணங்கினாலும்

“கிளம்பியிரு.  வெளிய போகணும்”, என்றுவிட்டு பெண்ணின் பதிலுக்கு காத்திராமல் வைத்திருந்தான்.

“எங்க”, என்று கேட்டவள் அதற்குமுன் வைத்திருந்த எதிர்முனையைக் கண்டு…

“உடும்பு… வர வர ரொம்பப் பண்ணுது” என்று அலைபேசியைப் பார்த்து தனியாக பேசிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அழைத்தவன்

“எங்கனு சொன்னாதான் வருவியா?”, என்று வினவ

“சொன்ன அதுக்கேத்த மாதிரி கிளம்பி வருவேன். இல்லைனா எனக்குத் தோணுற மாதிரி கிளம்புவேன்”, என்க

“ஹாஸ்பிடல்தான்”, என்று அதற்குமேல் பேச்சை வளர்க்காது வைத்திருந்தான் விஷ்வா.

விடுதலை வேண்டி நாயகியும், இணைதலை யாசித்து நாயகனும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க, யார் மனதில் உள்ள வேட்கை நிறைவேறும் என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம்.

///////////////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!