ஆழி சூழ் நித்திலமே

ஆழி சூழ் நித்திலமே… !

 

முத்து 1

 

இருள் பிரியாத அதிகாலை… பெரும்பாலோர் உறக்கத்தின் பிடியில் இருக்கும்  வைகறைப்பொழுது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்…  கடலை ஒட்டிய துறைமுகப் பகுதியில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகளும், துடுப்புப் படகுகளும் முண்டியடித்து நின்றிருக்க, மின் விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜோதியாய் இருந்தது அவ்விடம். 

காற்றில் வீசும் உப்பு வாசம். அதோடு புத்தம் புதிதாய் பிடிக்கப்பட்ட மீன்களின் வாசம். கூடவே நூற்றுக்கணக்கான சிறு குறு வியாபாரிகளின் ஏலச் சத்தம் என அந்த பகுதி முழுக்க நிறைந்து வழிந்தது. 

அப்பொழுதுதான் வந்து இறங்கியிருந்த  விசைப் படகில் இருந்து மீன்கள் கூடை கூடையாய் இறக்கி வைக்கப் பட,  வியாபாரிகள் சூழ்ந்து கொண்டு மீன்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டினர். 

கடல் காற்று குளுமையாய் இருந்த போதும்,  உழைப்பின் களைப்பில் வழிந்த நெற்றி வியர்வையை வழித்து விட்டபடி,  ஒரு அழுக்கேறிய லுங்கியும் கை வைத்த பனியனும் அணிந்து கொண்டு,  கைகளில் நல்ல வாளிப்பான பெரிய சைஸ் வஞ்சிரம் மீன்கள் நான்கைத் தொங்க விட்டபடி வியாபாரிகளிடம் ஏலம் விட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். 

நெடு நெடுவென்ற உயரமும் உழைத்து உழைத்து உரமேறிய உடலும்,  உப்புக்காற்றில் மினுமினுத்த தோலும், எதிராளியின் மனதை ஊடுருவும் வகையிலான கூர்மையான பார்வையும், மழை வெயிலென்று பாராமல் உழைத்ததால் உண்டான கருத்த நிறமுமாக நின்றிருந்தான்.  அவன் பாரி… பாரி வேந்தன். 

இருபத்தேழு வயது இளைஞன். வயதில்தான் சிறியவன், ஆனால் எட்டு வயதிலிருந்து கடலுக்குள் செல்வதால் வியாபாரத்தில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவன். 

விசைப் படகு மீனவர்கள் சங்கத் தலைவனும் கூட. நியாயமாக அவன் சொல்லும் விலைக்கு மீறி ஒருவரும் அதிகமாய் வைத்து விற்க முடியாது அங்கு. 

ஏப்ரல் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடலுக்குள் செல்ல அனுமதி இல்லை.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக கடலுக்குள் சென்று திரும்புவதால் நிறைய மீன்கள் கிடைத்ததோடு வியாபாரமும் நன்றாயிருந்தது. 

படகில் ஏற்றி வந்த மீன்கள் அனைத்தையும் உடனடியாக விற்று விடும் முனைப்போடு ஜரூராக ஏலத்தில் ஈடுபட்டிருந்தான். 

“ரெண்டாயிரம்… ரெண்டாயிரம்…”

“ரெண்டாயிரத்து ஐநூறு.”

“ரெண்டாயிரத்து ஐநூறு… ரெண்டாயிரத்து ஐநூறு…”

“ரெண்டாயிரத்து எழுநூறு.”

“இந்தா… பத்து கிலோக்கு கூட வஞ்சிரம் மீனு, நாலு மீனு. ஒவ்வொன்னியும் சைசப் பாத்தல்ல. இன்னா நீ நூறு நூறா ஏத்திக்கினு இருக்கே. வழக்கமான யாவாரின்னு பார்க்கறேன். இல்லேன்னா இதுக்கு வெளி மார்க்கெட்டு வெல என்னான்னு தெரியுமா உனக்கு?”

“கோச்சுக்காத பாரி. ஒரே வெல மூவாயிரத்து ஐநூறு. என்னா சொல்ற?”

“ம்கூம். இது ஆவறதில்ல. டேய் மணி இதை எடுத்து உள்ள வை நீ. நாம அலேக்கா  ஹோட்டலாண்ட குடுத்துக்கலாம். அவன் வெல நல்லா போட்டுத் தருவான்.”

“அட… இரு பாரி. செரி… நீதான் சொல்லு வெலைய. கோச்சிட்டு உள்ற எடுத்து வச்சா என்னா அர்த்தம்?”

“நீ சொல்ற வெல கட்டாதுன்னு அர்த்தம். ஒரே வெல ஐயாயிரம். இஷ்டம்னா குடு. இல்லாங்காட்டி இடத்த காலி பண்ணு. அப்பால போ போ…  போயிக்கினே இரு.”

“ஐயாயிரமா…” வாயைப் பிளந்தாலும் அந்த வகை மீன்கள் கண்டிப்பாக உடனடியாக நல்ல விலைக்கு விற்றுவிடும் என்பதால் சுணங்கிக் கொண்டே ஏலத்தில் எடுத்தான் அந்த வியாபாரி. 

“செரி… செரி… குடு. இந்த இறால் கூடையவாச்சும் கொஞ்சம் பார்த்து வெலையச் சொல்லு.”

“தோடா… ஏன்… வஞ்சிரத்துல விட்டத இறால்ல புடிக்கவா? பேஜார் பண்ணாதே கூடைக்கு நானுறு. ஒரே வெலைதான். எத்தினி கூடை உனக்கு ஏத்தனும் அதை மட்டும் சொல்லு.”

“அஞ்சு கூடை ஏத்து பாரி.” ஒருவழியாக வியாபாரம் படிந்ததில் பணத்தைக் கொடுத்து மீன்களை வண்டியில் ஏற்றியதும் அவர் நகர,  அடுத்த வியாபாரியிடம் ஏலத்தில் இறங்கினான் பாரி. 

“வா அண்ணாத்த… வஞ்சிரம், வவ்வா, பாரை, சுறா, கடம்பா, கவளா, கடவரா, சங்கரா, காரப்பொடி,  முழியன், சீலா, நெத்திலி, சூரை எல்லா மீனும் இருக்கு உனக்கு என்னா வேணும்?”அடுத்து நின்றிருந்த வியாபாரி வேண்டிய மீன் வகைகளைச் சொல்ல விலை பேசி படிந்ததும் கூடைகள் ஏற்றப்பட்டது. 

 அன்று பெருமளவில் மீன் வரத்து இருந்தது. பெரிய வகை மீன்களை தனித்தனியாக பிரித்து எடுத்து நல்ல விலைக்கு ஏலம் விட்டவன், சிறிய வகை மீன்களை வகை பிரிக்கப்படாமல் கூடை கூடையாக மொத்த விலைக்கு ஏலம் விட்டான். 

அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய கேன்களில் பிடிக்கப்பட்டிருந்த இறால், நண்டு, கணவாய் மீன் வகைகள் பெரிய ஹோட்டல்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் ஏல முறையில் விற்கப்பட்டது. 

கிட்டத்தட்ட அன்றைய வருமானம் நான்கரை லட்சத்தைத் தொட்டது. நான்கு நாள் உழைப்பு அது. பாரியின் மீன்பிடி படகு ஓரளவு நடுத்தர அளவுடைய விசைப்படகு. ஒரு முறை படகு எடுத்துக் கொண்டு கடலுக்குச் செல்ல இரண்டரையிலிருந்து மூன்று லட்சம் வரை செலவு பிடிக்கும். 

டீசல் மட்டுமே மூவாயிரம் முதல் நான்காயிரம் லிட்டர்கள் தேவைப்படும். கடலுக்குள் செல்வதிலிருந்து திரும்பும் வரை இன்ஜினை நிறுத்த முடியாது. ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஆகவே டீசல் செலவு அவர்களுக்கு அதிகம்தான். 

அதோடு உடன் வருபவர்களுக்கான சம்பளம்,  சாப்பாட்டு செலவு, அனைத்தும் போக, வரும் வருமானத்தில் படகு சேதமடைந்தாலோ வலை சேதமடைந்தாலோ செப்பனிட வேண்டும். 

இரண்டு படகுகள் கூடுதலாக வைத்து வாடகைக்கு விடுவதால் கிடைக்கும் உபரி வருமானமும், கரையோரத்தில் பார்ட்னருடன் சேர்ந்து வைத்திருக்கும் ஐஸ் உடைக்கும் கம்பெனியும் அவனுக்கு கூடுதல் வருமானத்தைத் தருகிறது. 

காசி மேடு… சென்னையின் மிக முக்கியமான மீன்பிடித் துறைமுகம். பெருமளவிலான படகுகள் காசிமேட்டில் இருந்துதான் கடலுக்குள் சென்று மீன் பிடித்துத் திரும்பும். 

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் புலர்ந்து விடும் இவர்களது பொழுதுகள் சூரியன் பளீரென்று வரும் பொழுதுகளில் ஓரளவு அனைத்து மீன்களையும் சிறு வியாபாரிகளிடத்தில் விற்று முடித்து ஓய்வுக்குச் செல்லும் நேரமாகிவிடும். 

நான்கைந்து நாட்களானாலும் கரைக்குத் திரும்பாமல் விசைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்துத் திரும்பும் இவர்கள் ஓரிரு நாட்களில் வலையைச் செப்பனிட்டு மீண்டும் கடலுக்குச் செல்லத் தயாராகி விடுவர். 

இடைப்பட்ட ஒன்றிரண்டு நாட்களே ஓய்வு இவர்களுக்கு. பணத்தை எண்ணி டிரவுசர் பாக்கெட்டுக்குள் திணித்தவன், அங்கே வலையை இழுத்து மடித்தபடி இருந்த இருவரை நெருங்கினான். 

“மணி, தேவா… இந்தாங்கடா புடிங்க.” என்றபடி சில நூறு ரூபாய் நோட்டுகளை அவர்களது கரங்களில் திணித்தவன் திரும்பிப் பார்க்காமல் நடக்க, 

“ண்ணா… அண்ணா… என்னா ண்ணா இது.” என்றபடி இருவரும் பின்னே ஓடி வந்தனர். சம வயதினராய் இருந்தாலும் படியளக்கும் முதலாளி ஆகையால் அண்ணனாகிப் போயிருந்தான். 

“என்னாங்கடா?  துட்டு இது. அதுக் கூடவா தெரியல. கண்ண முழிச்சிப் பாரு நல்லா.” அவன் பதிலில் கடுப்பானார்கள் இருவரும். 

“அதுத் தெரியுது. இம்மாந்தான் இருக்கு. நாலு நாளு உன்கூட ஜோடி போட்டுக்கினு கடலுக்கு வந்துக்கறோம். இம்மாங் கம்மியாகீது.”  ஆதங்கமிருந்தது மணியினது குரலில். 

“போதும் போதும்,  துட்டைக் கொடுத்ததும் டாஸ்மாக் வாசலாண்ட போய் மட்டையாக் கெடக்கறதுக்கு இம்மாங் குடுத்தா போதும். மீதிய ஜீவாக்கா அதுங்கையில கொண்டாந்து குடுக்க சொல்லுச்சி. தேவா உன்னோட துட்டும் உங்கம்மா கையில குடுத்துடுவேன்.”

“ண்ணா… என்னா ண்ணா.” அவன் பதிலைக் கேட்டுத் தலையைச் சொறிந்தவர்களை ஏறிட்டவன், 

“இதக் கூட உங்க கையில குடுக்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா நாலு நாளா ராவுன்னும் பகலுன்னும் பாக்காம உழைச்ச உடம்புக்கு வேணுமே பழகிட்டீங்களேன்னுதான் தர்றேன்.”

இந்த விஷயத்தில் வெகு கறாராக இருப்பான் பாரி. அவனைப் பொருத்தவரை கடலன்னை சோறு போடும் தாய். அவள் மடிக்குப் போகும் போது ஒழுக்கக் கேடான எந்த விஷயத்தையும் அனுமதிப்பதில்லை அவன். 

கரையிலிருக்கும் போது செலவுக்காக இரண்டு நாட்களுக்கு தேவையான பணத்தை மட்டும் அவர்களது கைக்கு கொடுத்தவன் மீதியை அவர்கள் வீட்டுப் பெண்களிடம் சேர்த்து விடுவான். 

மொத்தமாக இவர்களது கையில் கொடுத்தால் குடித்து அழிப்பது மட்டுமில்லாமல் சூது ரேஸ் என்று செலவழித்தது போக சொற்ப அளவிலான பணமே அவர்கள் குடும்பத்துக்குப் போகும். 

அதைக் கருத்தில் கொண்டே பாரி இவர்கள் கையில் முழுத் தொகையையும் தருவதில்லை. பாரியின் எண்ணம் மணிக்கும் தேவாவுக்கும் புரியும். அதனால் அவர்களும் பெரிதாக எதிர்ப்பு எதுவுமே தெரிவிப்பதில்லை. ஆனால், இம்முறை வழக்கத்தை விடவே தொகை குறைவாக இருக்கவும் அவனிடம் கேட்டு ஓடி வந்தனர். 

“போன தபா இதை விடக் கூட குடுத்தல்ல ண்ணா நீ.”

நடந்து கொண்டே வாகனங்கள் நிறுத்துமிடத்தை அடைந்திருந்தான். “ஆமா, இல்லேங்கல. அடுத்த தபா இதைவிடக் கம்மியாதான் தருவேன்.”

“ஏன் ண்ணா?” ஏக கடுப்பிருந்தது அவர்களது குரலில். 

“மொத்தமா வுடச் சொன்னா முடியாது பழகிப் போச்சுங்கறீங்க. கொஞ்சம் கொஞ்சமா அந்தக் கருமத்தை வுட்டுத் தொலைங்கடா. அதுக்குதான் ஒவ்வொருவாட்டியும் உங்களுக்கு குடுக்கற துட்டுக் குறையுது.”

அவர்கள் இருவரும் வாயடைத்து நிற்கும் போதே தனது புல்லட்டில் ஏறியவன், “வலையை மடிச்சு வச்சிட்டு ஒழுங்கு மருவாதையா சீக்கிரம் வூடு வந்து சேருங்க.”

தடதடவென்ற சப்தத்தோடு அவன் புல்லட் புறப்பட்டதும், அவனை எதிர்த்துப் பேச வழியின்றி மௌனமானவர்கள் வலையை அழகாக மடித்து வைத்துவிட்டு  நான்கு நாட்களாக செல்லாத டாஸ்மாக் நோக்கிச் சென்றனர். 

பிரத்யேகமாக தனித்து அவனுடையது என்று அடையாளப் படுத்தும்படி சிலபல மாறுதல்கள் செய்யப்பட்ட புல்லட். அதை இயக்கிச் சென்றவனின் அடங்காத கேசம் அலை மோதிய காற்றில் பின்னுக்குப் பறக்க, முகம் முழுவதும் மண்டிய தாடியும் மீசையும் அவனைச் சற்று முரடனாகவேக் காட்டியது. 

வாகனத்தை இயக்கியவனின் முறுக்கேறிய கைகளில் ஏதேதோ மந்திரித்த கறுப்புக் கயிறுகளும், புஜத்தில் இறுகக் கட்டப்பட்டிருந்த தாயத்தும் அவனை பக்திமானாக காட்ட முயன்றாலும் அது உண்மையில்லை. அவன் முரட்டுத் தனத்தை அடக்கவும், அவனுக்கு திருஷ்டி கழிப்பதாகவும் சொல்லி அவன் ஆயா அவ்வப்போது கட்டி விடும் தாயத்துகள் அவை. 

மாரியம்மாவோ மேரியம்மாவோ அவனுக்கு அனைத்தும் ஒன்றுதான். அகமதுவாகட்டும் அந்தோணியாகட்டும் அவன் பழகும் முறை ஒன்றுதான். 

தனது குப்பத்தில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவாகட்டும், மாதா கோவில் கொடியேற்றமாகட்டும்,  பள்ளி வாசலில் ரம்ஜான் நோன்பாகட்டும் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்வான். ஆனால் எதையும் வேண்டியபடி கோவிலுக்குச் சென்றதில்லை. 

அவனைப் பொருத்தவரை கடல்தான் அவனுக்கு தெய்வம். அதன் பிறகு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ளும் தூரத்து உறவான ஆயாதான் தெய்வம். 

பதினோரு வயது சிறுவனாய் இருக்கும் போது ஆழி ஆடிய சுனாமி என்னும் கோர தாண்டவத்தில், தன் குடும்பம் முழுவதையும் இழந்து அநாதையாய் நின்றவனை அரவணைத்துக் கொண்டவர் அவர்தான். 

அவருமே சுனாமியில் தனது மகன் மகளை குடும்பத்தோடு இழந்துவிட்டு இரண்டு வயது பேத்தியோடு தனித்து நின்ற போது ஒருவருக்கொருவர் ஆதரவாகிப் போயினர். 

தன் தந்தை இருக்கும் போதே எட்டு வயதிலிருந்து கடலுக்குள் செல்பவன் அவன். அதனால் கடல் அவனுக்கு புதிதில்லை. ஆனால் அதன் கோர தாண்டவம் அவனுக்கு மட்டுமல்ல மீனவ மக்கள் அனைவருக்குமே புதிது. 

 பெற்றோரை உற்றோரை உடைமைகளை இழந்து அநாதரவாய் நின்ற நிலையிலும் கடலை வெறுக்கத் தோன்றவில்லை அவர்களுக்கு. படியளக்கும் அன்னையின் கோபமாகவே அதைப் பார்த்து இன்று வரை சுனாமி நாளன்று கடலன்னைக்கு சாந்தி செய்து பாலூற்றி வழிபடும் வழக்கம் இப்பொழுதும் உள்ளது அவர்களிடத்தே. 

அவனது தந்தையின் படகுகள் சுனாமியின் போது பலத்த சேதமடைந்து இருந்தது. நிறைய மீனவர்களின் படகுகளைத் தேடிக் கண்டுபிடிக்கவே அவர்களுக்குச் சிரமமாய் இருந்தது. 

அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவன் அதோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, வயிற்றுப் பாட்டுக்காக தன் தந்தையோடு வழக்கமாக கடலுக்குச் செல்லும் மீனவர்களோடு எடுபிடி வேலைக்குச் செல்லத் துவங்கினான். 

அரசு கொடுத்த சுனாமி நிவாரண நிதியைக் கொண்டு படகுகளை செப்பனிட்டுக் கொண்டவன் அதனை சக மீனவர்களுக்கு வாடகைக்கு விட,  தனியொருவனுக்கு அந்த வயதில் வந்த வருமானம் வெகு அதிகமே. 

அவனது தந்தையின் நண்பரும் தமிழ்நாடு மீனவர் சங்கத் தலைவருமான மகேந்திரன் அனைத்துக்கும் அவனுக்கு உதவியாய் இருக்க, சிறு வயதில் உழைப்பை சேமிப்பாய் மாற்ற இன்று ஓரளவுக்கு நல்ல வசதியோடு இருக்கிறான். 

இப்பொழுதும் தனது மகேந்திரன் ஐயா சொல் வாக்குதான் அவனுக்கு வேதம். மகேந்திரனின் வாரிசுகள் ஞானவேல் வெற்றிவேல் இருவர்தான் அவனது ஐஸ்கட்டி கம்பெனியின் பார்ட்னர்களும் கூட. 

அவனைவிட சற்று வயதில் மூத்தவர் ஞானவேல். வெற்றிவேல் சம வயதினன். மீன்பிடி தொழில்தான் அவர்களது என்றாலும் சற்று பெரிய அளவில் செய்பவர்கள். குடும்பம் குழந்தையென்று ஞானவேல் செட்டிலாகிவிட, தனித்திருக்கும் இவனுக்கும் வெற்றிவேலுக்கும்  பெண் பார்த்து திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற  எண்ணம் அவர்களுக்கு உண்டு. 

தூத்துக்குடி தருவை குளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இவர்கள். பாரி அப்பாவின் இளமைக் காலத்திலேயே பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்கள். வந்த இடத்தில் சொந்த உழைப்பில் காலூன்றியவர்கள். வீடு வாசல் என்று முன்னேறி, மீன்பிடி சார்ந்த மற்ற தொழில்களிலும் காலூன்றி வருபவர்கள். 

ஞானவேலின் மனைவி ரதிமீனாள் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண். அவர்கள் சொந்தத்திலேயே இருவருக்கும் பெண் பார்க்கிறேன் என்று கிடுக்கிப்பிடி போட, கழுவும் மீனில் நழுவும் மீனாக இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை இவனும் வெற்றியும். 

புல்லட் அவனது வீட்டை அடைந்திருந்தது. கூப்பிடு தூரத்தில் கடலன்னை குதூகலமாக தன் அலைகளை பெரிதும் சிறிதுமாய் அனுப்பி விளையாடிக் கொண்டிருந்தாள். இயற்கையாய் வீசிய கடல்காற்று அள்ளிக்கொண்டு போனது. சிறிதும் பெரிதுமாய் நூறு நூற்றிஐம்பது வீடுகள் கொண்ட சிறிய குப்பம் அது. 

ஓரளவு நடுத்தர அளவுள்ள வீடுதான் அவனது. பெரிதாக ஆடம்பரமாக வீடு கட்டும் எண்ணமெல்லாம் அவனுக்கு இதுவரை வந்ததில்லை. மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஓர் இடம் அவ்வளவே.  அந்த குப்பத்தில் மற்றவர் வீட்டோடு ஒப்பிடுகையில் இவனது சற்று நல்லவீடு. 

வீட்டின் முன்புறம் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டு அங்கு இட்லி வியாபாரம் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது. 

ஒற்றைப் பேத்தி கயல்விழியோடு தனித்து நின்ற போது வயிறு வாடாமல் இருக்க கை கொடுத்த தொழில் ஆகையால் இன்று வரை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஆயா. 

வயதான நேரத்தில் எதற்கு சிரமப் படுகிறாய் நான் சம்பாதிப்பது போதாதா என்றால், 

“எனக்கென்ன குறை ராசா, இந்தா என் பேத்திய கரையேத்தற வரைக்கும்தான் இதச் செய்வேன். அப்புறம் உன் நிழல்ல நான்பாட்டுக்கும் செவனேன்னு கிடப்பேன். உழைச்ச உடம்பு சும்மா கிடந்தா துறு பிடிச்சிப் போகுமய்யா.” என்று அவன் வாயை அடைத்து விடுவார். 

வீட்டு வாசலில் புல்லட் வந்து நின்றதும் அவனை எதிர்க் கொண்டாள் கயல்விழி. 

“கயலு, இந்தா புடி புள்ள.” என்றபடி அன்றைய வருமானத்தை முழுவதும் அவளது கைகளில் கொடுத்தவன்,  கூடவே சிறு வலைப் பையில் இருந்த மீன்களையும் நீட்டினான். 

“காரப்பொடி” என்று விழிகளை விரித்தவளைப் பார்த்துச் சிரித்தவன்,

 “காரப்பொடி வந்ததும் சுருக்க எல்லாமே வித்துப் போச்சு. உனக்குப் பிடிக்குமேன்னு கொஞ்சமா எடுத்து வச்சேன். நாலு நாளா உன் கையால சாப்பாடு சாப்பிடாம நாக்கே செத்துப் போச்சு கயலு. இதை நல்லா உரசி கழுவி மொளகு போட்டு காரசாரமா குழம்பு வை. குளிச்சிட்டு வரேன்.”

“நிமிஷத்துல ரெடி பண்ணுறேன். நீ குளிச்சிட்டு வா மாமா.” என்றபடி மீனை உரச அவள் அமர்ந்துவிட, குளித்து விட்டு வீட்டுக்குள் வந்தவனின் பார்வையில், பெரிய சைஸ் இட்லி கொப்பரையை தூக்க முடியாமல் தூக்கி வந்த ஆயா பட, ஓடிச் சென்று அதை வாங்கியவன் கடிந்து கொண்டான். 

“உனக்கென்ன துள்ளுற வயசுன்னு நினைப்பா கிழவி. உன் வயசுக்குத் தூக்கற பொருளா இது. நம்ப மூனு பேருக்கு நான் சம்பாதிக்கறது போதாதா?  தேவையில்லாம இந்த வேலைய இழுத்துப் போட்டுக்கற நீ.”

கழுத்தில் வடிந்த வேர்வையை சேலையால் துடைத்தபடி சுவரோரம் சாய்ந்து அமர்ந்தவர், “நீயும் சொல்லிக்கினேதான் இருக்கப் போற. நானும் செஞ்சுக்கினேதான் இருக்கப்போறேன். அப்புறம் ஏன் அதச்சும்மா பேசிக்கினு. அதை விடு,  நம்ப கயலுக்கு இந்த ஆவணி வந்தா பதினெட்டு ஆகிடும். எதனா நல்ல காரியம் பண்ணலாமா ராசா.”

கண்களில் ஏக்கத்தைத் தேக்கிக் கேட்டவரைப் பார்த்தவன், “அதுக்குள்ள என்னா அவசரம் ஆயா. அது சின்ன புள்ளதான. படிச்சிருந்தா இன்னேரம் அழகா காலேசுக்குப் போயிகினு வந்துகினு இருக்கும். படிக்கவே போ மாட்டேன்னுடுச்சி.”

கயல்விழியைப் படிக்க வைக்க தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்தான். அவனால் அது முடியவே இல்லை. தன்னால்தான் படிக்க முடியாமல் போய்விட்டது. அவளையாவது படிக்க வைக்க வேண்டும் என்று அவனுக்கு பெரும் ஆசை. 

அவனுக்கு மட்டும் ஆசை இருந்து என்ன புண்ணியம். படிக்கவே மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று விட்டவளை எதுவும் செய்ய முடியவில்லை அவனால். தட்டுத்தடுமாறி பத்தாவது வரை படித்தவள், பத்தாவது ஃபெயில் ஆனதும் அதோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டாள். 

“ம்க்கும், அவ படிச்ச லட்சணம்தான் நமக்குத் தெரியுமே. இப்ப ஏன் அதைப் பேசிக்கிட்டு. குடும்பம் நடத்தத் தேவையானதை படிச்சிருக்கா அது போதாதா. நான் கண்ண மூடுறதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்லது நடத்திப்புடனும்னு எனக்கு ஆசை.”

ஆயா எதைப் பற்றி பேசுகிறார் என்பது புரிந்ததும் கவனமாக பேச்சை மாற்றினான். 

“நாலு நாளா கண்ணு முழிச்சது ஒரே கண்ணு எரிச்சலா இருக்கு ஆயா. நான் கொஞ்சம் படுக்கறேன்.”

“முன்னயே சொல்லிருந்தா தலைக்கு எண்ணெய் முழுகச் சொல்லிருப்பேன்ல. கண்ணு முழிச்சது உடம்பு சூடாயிருக்கும். செத்த இருய்யா குழம்பு ரெடியானதும் சாப்ட்டு படு.”  

சமையல் தயாராகிவிட்டதா என்று பார்க்க எழுந்து உள்ளே சென்றார். தான் திருமணம் பற்றி பேசவும் பேச்சை மாற்றியவனின் செயல் அவருக்குமே புரிந்ததுதான். ஆனால் அவனை வற்புறுத்த முடிவதில்லை. 

அதே நேரத்தில் ஒற்றை பேத்தியின் ஆசையையும் புறம் தள்ள முடியவில்லை. அவனைத்தான் கணவனாக எண்ணி கற்பனையை வளர்த்துக் கொண்டிருக்கும் பேத்தியையும் தவறு சொல்ல முடியவில்லை. 

பாரியைப் போல அருமையான வரன் அவளுக்குத் தேடினாலும் கிடைக்காது. அதனால் அவனுக்கு பேத்தியைத் திருமணம் செய்து வைக்க அவருக்குமே ஆசைதான். 

ஆனால் பிடி கொடுக்காமல் பேசுபவனை என்ன செய்ய? கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முடியுமா? அவன் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அது சாத்தியமா? 

ஆனால் தன்னை மீறி வேறு எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையும் ஆயாவுக்கு உண்டு. எப்படியாவது பேசி இருவருக்கும் திருமணம் முடித்துவிட்டால் நிம்மதியாக கண்மூடலாம், கயல்விழியைக் கண்ணுக்குள் வைத்துத் தாங்கிக் கொள்வான் பாரி. மனதுக்குள் நினைத்தபடி சமையலறைக்குள் சென்றவர், 

“கயலு, சோறாக்கிட்டியா? தூங்கப் போறேங்குறான் உன் மாமன்.”

இந்தா ஆச்சு… இன்னாத்துக்கு அதுங்கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசன கிழவி. அதான் அதுக்குத் தூக்கம் வந்துடுச்சி.” நடந்தது எனக்கும் தெரியும் என்று கயல் பேச, 

“என்னத்தை பண்ண? நானும் எப்படி எப்படியோ பேசிப் பார்க்குறேன் விலாங்கு மீனாட்டம் பய பிடிபட மாட்டேங்குறானே.”

 “பிடிபடும்… பிடிபடும்… பிடிபடாம எங்க போயிடும். என் மாமா எனக்குதான். அதும் பிடியும் என்கிட்டதான். அது என் வயசுக்குதான் யோசிக்குது கிழவி. இன்னும் கொஞ்ச நாள் போனா அதுவே கல்யாணம் பேசும்.” மலையளவு நம்பிக்கையும் ஆசையும் இருந்தது அவளின் குரலில். 

“அந்த நம்பிக்கை உனக்கிருந்தா சரிதான் புள்ள. போய் சோத்தைப் போடு உன் மாமனுக்கு.”

கயல்விழியின் கைப்பக்குவத்தில் மணத்த குழம்பை ஊற்றி, எப்பொழுதும் சாப்பிடுவதை விட சற்று கூடுதலாகவே சாப்பிட்டவன், அவளது சமையலைப் புகழவும் தவறவில்லை. 

“ஆயிரம் சொல்லு, உன் கைபக்குவம் யாருக்கும் வராது கயலு.”

சப்புக் கொட்டி உண்டவனை மனநிறைவோடு பார்த்தவள், மென் சிரிப்போடு அவனுக்கு உறங்கத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு,  அவன் குளித்துவிட்டு களைந்து போட்டிருந்த உடைகளை துவைக்கத் துவங்கினாள். மனதில் மாமனைப் பற்றிய நினைவுகள் சுகமாய்… 

நினைவு தெரிந்த நாளிலிருந்து மனதில் வரித்துக் கொண்டது. விளையாட்டாய் உன் மாமன் உனக்குதான் என்று ஊரார் பேச, சின்னஞ்சிறு வயதிலிருந்து பசுமரத்தாணியாய் உள்ளே பதிந்து போனவன் பாரி. 

வயது வந்து கன்னியாய் நின்றபோது தனக்கென ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் மாமன் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்து போனான். 

அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவள் கையால் செய்தால்தான் அவளுக்குத் திருப்தி. கரைக்குத் திரும்பும் நாட்களில் அவனுக்கு சிறு வசதிக்குறைவுகூட இல்லாமல் பார்த்துப் பார்த்து பணிவிடைகள் செய்வாள். 

உண்ட களைப்போடு கண் அயர்ந்தவன் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும் முன்னே,  சக மீனவன் ஒருவனின் குரலில் வாறிச் சுருட்டி எழுந்தான். 

“பாரிண்ணா,  நம்ப டேவிட்டப் போட்டு அடிக்கிறாங்கண்ணா.”

“இன்னாத்துக்குடா. இன்னா பண்ணான் அவன். எதுக்கு அடிக்கிறாங்க? யார் அடிக்கிறா?”

“அந்த சூசைதான்ண்ணா. ஆளுங்களை இட்டாந்து டேவிட்டு வீட்ல இருக்கற ஜாமான எல்லாம்  வண்டியில ஏத்திகினு இருக்கான்.”

பரபரவென்று எழுந்து வெளியேறியவனை, “இந்தா, பாரி உனக்கு ஏன் ஊர் வம்பு? அந்த சூசையெல்லாம் மோசமான பய. நீ எங்கயும் போகாத இங்கயே குந்து.” தடுத்த ஆயாவை முறைத்தவன். 

“சும்மா இரு ஆயா. நம்மள்ல ஒருத்தனுக்குப் பிரச்சனை நான் போய் கேட்கக் கூடாதா? நம்ப சங்கத்து ஆளு டேவிட்டு. சூசை எப்படி அவம்மேல கை வைக்கலாம்?” ஆயாவை அடக்கிவிட்டு சண்டை நடக்கும் டேவிட்டின் வீடு நோக்கிச் சென்றான். 

இதுதான் பாரி. கண்ணெதிரே நடக்கும் எந்த அநியாயத்தைக் கண்டும் ஒதுங்கிப் போக அவனால் முடியாது. எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவான்.  இதனால் எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் தைரியமும் திறமையும் அவனுக்கு உண்டு. 

ஆனால்,  நாம் செய்யும் செயல்கள் நன்மையோ தீமையோ அதனால் விளையும் பின்விளைவுகள் நம்மையே சாரும். தீமையை நினைத்து செய்யும் செயல்கள் சிலருக்கு நன்மையாய் கூட மாறுவதுண்டு. 

அது போல பிறருக்கு நன்மை என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் யாரோ ஒருவருக்கு தீமையாய் முடிவதும் உண்டு. 

விதியின் போக்கில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனின் திருவிளையாடல்தான் என்றாலும், நல்ல மனம் கொண்ட ஒருவன் தான் எதிர் பாராமல் செய்த செயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும்போது மனம் துடிக்கத்தான் செய்யும். குற்றவுணர்வில் குறுகவும் வைக்கும். 

பின் விளைவுகள் யோசிக்காத பாரியின் செயல்கள் அவனுக்கு நன்மைகளை அளிக்குமா? தீமைகளை அளிக்குமா? வரும் அத்தியாயங்களில் காண்போம். 

—ஆழி சூழும்.