இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் 10

“ண்ணா நில்லு” கீர்த்தனா வீட்டில் இருந்து தாத்தாவை அழைத்து வந்து அவர் அறையில் விட்டு, தன் அறைக்குக் கிளம்பியவனைத் தடுத்தாள் ஷிவானி.

“என்ன?”

“உக்காரு நான் உன்கிட்ட பேசணும்?”

“நீ வர வர ரொம்பப் பெரிய மனுஷியா பேசுறியே?” வைஷ்ணவி அருகில் இல்லாதலால் கொஞ்சம் தெளிவாக யோசித்துப் பேச,

“நீ உக்காரு ஃபஸ்ட்” அவனைக் கையைப் பிடித்து அருகில் அமர வைத்தாள் ஷிவானி.

“என்ன சொல்லு?”

“ஒன்னு கேட்பேன் கரெக்ட்டா பதில் சொல்லணும்”

‘இவ என்ன கேட்க போறா?’ யோசனையுடன் அவளைப் பார்க்க,

“நீ அண்… சாரி… கீர்த்தனா கூடப் பேசினியா?”

“இல்ல… நான் அவகிட்ட பேசல”

“ஏன்… ஏன்… பேசல?”

“பேச தோணல பேசல”

“அதுதான் கேட்குறேன் ஏன் தோணல?”

“இப்படி எல்லாம் கேட்டா எப்படி ஷிவானி”

“சரி அந்தப் பொண்ணுக்கு ஏன் சரின்னு சொன்ன?”

“தோணிச்சு சரின்னு சொன்னுனேன். இப்போ நீ என்ன சொல்ல வார?”

“இல்ல நீ அவங்ககிட்ட பேசிருந்தா அவங்க உன்கிட்ட எல்லாம் சொல்லிருப்பாங்க தானே. இப்போ பாரு நமக்கு எவ்வளவு மன கஷ்டம்” மன கஷ்டம் என்பதை அவனைப் பார்த்து அழுத்தி கூறினாள் அவள்.

அவளது பேச்சு தொனி அறிந்தவன் முகத்தைச் சுருக்கி, தலையைக் குனிந்து கொண்டான்.

‘என்னடா இவன் அந்தப் பிள்ளையை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுறானே’ என்பதாய் இவள் யோசிதிருக்க,

அவளிடம் சத்தம் இல்லாமல் போக, அவளை ஏறிட்டு பார்க்க, அவளது யோசனையான முகத்தைக் கண்டவன் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

தன்னை அவள் கண்டு கொண்டாள் என்பதை அறிந்து கொண்டான் ஸ்ரீ.

“என்ன ஷிவானி என்ன யோசனை?”

“ஒன்னும் இல்லண்ணா, நீ அவங்க கிட்ட பேசிருந்தா முன்னாடியே நாமளே கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். இனி எல்லாரும் எப்படிச் சொல்லுவாங்க ஸ்ரீக்கு பார்த்த பொண்ணு எவன் கூடவோ ஓடிப்போச்சாம் சொல்லுவாங்க இதுல உன்னைதான் நிறையப் பேசுவாங்க” என,

டக்கென்று கோபம் வர, “நீங்க தானே பார்த்தீங்க, நீங்க தானே பேசுனீங்க, இப்படி என்னைச் சொன்னா என்ன அர்த்தம்? நான் பார்த்தேன் புடிச்சிருந்திச்சி ஓகே சொன்னேன்.

நான் ஓகே சொன்னா நீங்க அப்படியே வந்துடுவீங்களா? அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க மாட்டீங்களா?” கோபத்துடன் வெடிக்க,

“ஏன் ஸ்ரீ, அவ மேல கோபப்படுற?” அறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்ரீ கரண்.

“நீங்க நல்லா விசாரிக்கலியா தாத்தா?”

“விசாரிச்சேன் ஸ்ரீ… நல்ல பெரிய இடம் அதுதான் ரொம்ப விசாரிக்கல. என்னை மன்னிசுடுப்பா ஸ்ரீ”

“என்ன தாத்தா இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுட்டு விடுங்க… இதை அப்படியே விட்டுடுங்க” என்றவன் அறைக்கு என்றான்.

“ஏன் ஷிவானி அவன் ரொம்பக் கோபபட்டுட்டானா?”

“அவன் மனசுல என்னமோ ஓடுது தாத்தா? ஆனா என்னன்னுதான் தெரியல”

“என்ன ஷிவானி?”

“தெரியல தாத்தா… அவன் மனசுல ஏதோ வச்சிட்டுதான் பேசுறான்”

“என்னம்மா, அந்தப் பொண்ணை அவனுக்கு ரொம்பப் பிடிச்சதா, உன்கிட்ட சொன்னானா?”

“அப்படிலாம் சொல்லல தாத்தா, ஆனா பிடிச்ச மாதிரியும் நடந்துகிறான். பிடிக்காத மாதிரியும் நடந்துகிறான். ஒண்ணும் புரியல”

“சரி… விடு இனி நல்லா விசாரிச்சு பொண்ணு பார்போம்” கூறி அறைக்குச் செல்ல,

‘இவன் வேற பொண்ணு பார்க்க விடுவானா’ யோசனையாக அமர்ந்திருந்தாள் ஷிவானி.

“நீ என்ன நினைச்சுட்டு இருக்க ஸ்ரீ, ஷிவானி கவனிக்கிற அளவுக்கு நடந்துகிட்டு இருக்க நீ?

“என்ன வைஷ்ணவி இப்படிதான் என்னை உன் கொலுசில் பிடிச்சு வச்சிருப்பியா? உன்னைப் பார்த்தான் நான் நானாவே இருக்க மாட்டேங்கிறேன்.

எப்போ உன்னைப் பார்த்தேனோ அந்த நொடியில் இருந்து நான் என்னையே மறந்து உன்னை ரசிக்கிறேன்.

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு அந்தக் கீர்த்தனாவை பார்த்த பிறகுதான் மண்டையில் அடிக்குற போல ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்னு’ உண்மை புரியுது.

அப்போகூட எப்படி உன் மேல எனக்குக் காதல் வரலாம்னு நான் நினைச்சுட்டு இருந்தா, மறுபடியும் அதே கீர்த்தனா வந்து சொல்லுறா காதலுக்கு என்னடா தகுதி மடையான்னு.

என்னதான் பெரிய இவனா இருந்தாலும், காதல்ன்னு வந்துட்டா எல்லாரும் மடையன்னு உரக்க சொல்ல யாராவது வாறாங்க,

எனக்குக் கீர்த்தனா வந்த மாதிரி, எல்லாருக்கும் யாராவது ஒருத்தர் வந்து சொல்லவேண்டி இருக்கு.

நான் உன்னை அளவுக்கு அதிகமா விரும்பியும், தகுதி அது இதுன்னு சப்பை காரணம் காட்டி உன்னை இழக்க நினைச்சேன்.

ஆனா, நீ எனக்குதான்னு எனக்குப் புரிய வைக்கத்தான், கீர்த்தனாவை வீட்டைவிட்டு போகவைத்தானா அந்த இறைவன்” என்பதாய் வைஷ்ணவியின் போட்டோவை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

அந்த நேரம் சிவா வீட்டுக்கு வந்திருக்க,

“என்ன சிவா?” ஷிவானி அவனைக் கேட்க,

“ஸ்ரீ இல்லையா?”

“இருக்கானே மேல ரூம்ல? கூப்டவா”

“சரி” என்றவன் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டான்.

ஸ்ரீயை அழைக்க ஷிவானி அவன் அறைக்கு வர, அவன் யாரிடமோ பேசுவது போலத் தெரிய கூர்ந்து கவனிக்க, கீர்த்தனா பேர் வர அவளிடம் பேசுகிறானா? என்பதாய் யோசித்துக் கொண்டிருக்க,

காதல் என்ற வார்த்தை வரவும் மேலும் கூர்ந்து கவனிக்க, மீண்டும் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

“ண்ணா” என்றபடியே படாரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய,

“என்ன ஷிவானி?” ஃபோனை போர்வைக்குப் பின்னே மறைத்தான் ஸ்ரீ.

“உன்னைச் சிவா கூப்டுறான், வெளிய இருக்கான் போ”

“சரி” என்றவன் அப்படியே எழுந்து செல்ல,

அவன் நகரவும் டக்கென்று அவன் ஃபோன் எடுத்து பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து, பின் சிரித்தாள்.

குழப்பம் எல்லாம் நொடியில் விலக, வேகமாய் அவனின் பின் சென்று ஹால் ஷோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

***

காலையில் பெரும் யோசனையுடன் ஸ்ரீ வீட்டுக்கு வந்தாள் வைஷ்ணவி. திருமணம் நின்ற சோகத்தில் இருப்பார்கள் அந்தச் சோகத்தில் போய் நானும் வேலைப் பார்க்க வேண்டுமா? என்பது போன்ற யோசனையுடன் உள்ளே வர,

“குட் மார்னிங் வைஷு” பளிச்சென்று அவளைப் பார்த்துக் கூறினான் ஸ்ரீ.

‘திருமணம் நின்று போன சோகத்தில் இவன் இருப்பான்’ என எதிர்பார்த்திருக்க, அவனுடைய இந்தப் பரிமாணத்தை எதிர்பார்க்கவில்லை அவள்.

அன்று இவருவருக்கும் நடந்த பிரச்சனைக்குப் பிறகு இன்றுதான் ஒழுங்காகப் பேசுகிறான் ஸ்ரீ. மற்ற நேரம் எல்லாம் அவளைப் பார்த்து வேலை சொல்வதோடு நிறுத்திக் கொள்வான்.

இவளும் அவனைக் கண்டு கொள்ளமாட்டாள். நாம நல்லா பேசுனா இவனுக்கு எளக்காரம்தான் வரும் என்றபடியான யோசனையுடன் அவளும் விலகியே செல்வாள்.

இன்று பளிச்சென்று காலை வணக்கம் கூறவும் திருப்பி இவனுக்குச் சொல்லனுமா? வேண்டாமா? என இவள் யோசித்துக் கொண்டிருக்க,

“என்ன வைஷு வெளியவே நிக்குற, உள்ளே வரலாமா இல்லை அப்படியே போயிடலாமான்னு யோசிக்கிறியா? இனி நீயே போறதா நினைச்சாலும் நான் உன்னை விடமாட்டேன்” ஸ்ரீயை பார்த்தப்படியே கூற,

இடத்தை விட்டு நகர்ந்தான் ஸ்ரீ. கொஞ்ச நேரத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல,

ஷிவானி ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார் ஸ்ரீ கரண்.

ஸ்ரீக்கு ஜாதகம் இல்லாததால் அவளுடையதை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவளுக்குத் திருமணம் எப்பொழுது நடக்கும், இவளுக்கு முன்னே வீட்டில் ஏதாவது சுபகாரியம் நடக்குமா? என்பதைக் கேட்க எண்ணி அவர் கிளம்பிவிட்டார்.

ஸ்ரீக்கு சீக்கிரமே திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக மனதில் எழுந்தது.

***

பதினோரு மணிக்கு போல் வீட்டுக்கு வந்த ஸ்ரீக்கு தலை வலிப்பது போல் இருக்க,

“ஷிவானி தலை வலிக்கிது, ஒரு காஃபி எடுத்திட்டு வாயேன்” ஹால் ஷோபாவில் கண்களை மூடி அமர்ந்தபடி கூறினான் ஸ்ரீ.

வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் வைஷ்ணவி. அவனைப் பார்க்க மிகவும் தலை வலிப்பது போல் இருக்கத் தானே அவனுக்குக் காஃபி போடலாம் என எண்ணி வெளியே வந்தாள்.

அவன் அமர்ந்திருந்த ஷோபாவை கடந்து செல்ல,

எப்பொழுதும் அவனை இம்சிக்கும் ஜல்… ஜல்… ஓசை அவன் காதில் இசைக்க, டக்கென்று கண்களைத் திறந்தவன் முன்னே தாவணி தரையை உரச நடந்து சென்றாள் வைஷ்ணவி.

பதினோரு மணிக்கு போல் அவன் சாப்ட வருவதும் அவளுக்குத் தெரியுமாதலால் அவளே அவனுக்குத் தோசை வார்க்க நினைத்தாள்.

சமையலை சீக்கிரமே முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார் சமையல்காரம்மா. ஏதோ விசேஷமாம். மதியம் உணவும் சமைத்து வைத்துவிட்டார். இனி இரவுக்கு வந்துவிடுவதாகக் கூறி சென்றார் அவர்.

பின்னாடியே அவனும் எழுந்து சென்றான்.

‘நிறைய நாள் யோசித்திருக்கிறான், அவள் தனக்குச் சரி வருவாளா என்று?’ இன்று அவனது வீட்டு சமையல் அறையில் அவளைப் பார்க்க,

‘இவளை விட உனக்கு யாருடா சரிவருவா?’ அவன் மனம் எப்பொழுதும் போல அவனிடம் கேள்வி எழுப்ப, அவளையே பார்த்திருந்தான்.

தாவணி பாவடையைத் தூக்கி இடுப்பில் சொருக்கியிருந்தாள். இடுப்பு வேறு அவனுக்குப் பளிச்சென்று காட்சியளிக்க டக்கென்று கண்களை மேலே தூக்கினான்.

கூந்தலை பின்னலிட்டிருக்க, முதுகில் வேர்வைத் துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொண்டிருந்தது.

இந்தத் தோற்றம் இவனுக்கு மிகவும் பிடித்திருக்க அப்படியே பார்த்திருந்தான்.

கொஞ்சம் நகர்ந்து அங்கிருந்த கிளாஸ் ஒன்றை வைஷு கையில் எடுக்க, ஜல் என்ற ஓசை மிக மிக மென்மையாய் ஒலிக்க,

அவனது கண்கள் அவனையும் அறியாமல் அவளது கொலுசில் நிலைத்தது.

பல வருடங்களாய் காண நினைத்த ஓசை. இன்று கண்ணுக்குப் புலப்பட்டது!

சின்னச் சின்ன முத்து வைத்த கொலுசுதான் அணிந்திருந்தாள். அதன் கூடவே இன்னொன்று பல வண்ண கலரில் மின்ன கூர்ந்துப் பார்த்தான் ஸ்ரீ.

வெள்ளி மாதிரியான பாசி மணி பல வண்ணங்களில் ஜொலித்தது, அந்த ஓரத்தில் வித்தியாசமான ஓசையை எழுப்பும் சின்ன மணி முத்து.

வெள்ளி கொலுசுடன், இந்த ஒற்றை மணி முத்தும் சேர்ந்து வித்தியாசமான ஜல் ஜல் ஓசையை ஏற்படுத்தியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

இவன் நின்று இவளையே பார்த்திருப்பதை அவள் கவனிக்கவேயில்லை.

காஃபியை டம்ளரில் ஊற்றியவள், தோசையை எடுத்து வைக்கத் தட்ட எடுக்க நகர,

அவளின் கவனத்தைத் திருப்ப, “க்கும்” மெதுவாகச் சத்தம் கொடுக்க,

பதறி திரும்பி தடுமாறி விழ போனவளை கைநீட்டி அவளது கையைப் பிடித்து நேராக நிற்க வைக்க, அவள் கையில் இருந்த தட்டு நங்கென்று டடுமாறி கீழே விழுந்தது.

சற்று முன் அவன் பார்த்தும் பார்க்காமல் விலகிய அவளது இடை ‘என்னைக் கொஞ்சம் பாரேன்’ என்பதாய் பளிச்சென்று தெரிய,

கண்களை வலுக்கட்டாயமாக அவளது முகத்தை நோக்கி திருப்பினான்.

முகத்தில் வழிந்த வேர்வை ‘என்னைக் கொஞ்சம் துடைத்துதான் விடேன்’ என்பதாய் அவனை நோக்க,

கடினபட்டு முகத்தைச் சாதாரணமாய் வைத்து அவளை நோக்க,

தட்டு தடுமாறி நேராக நின்றவள் அவனை எதிர்பார்க்காததால், டக்கென்று தூக்கி வைத்திருந்த தாவணியை நேராக எடுத்து விட,

“இங்க என்ன பண்ணுற என்றான்” இப்பொழுதான் வந்தது போல்.

“அதுவந்து ஷிவானி தலைவலிக்குதுன்னு சொல்லி இப்போதான் போய்ப் படுத்தா, நீங்க வேற தலை வலிக்குதுன்னு சொன்னீங்கதானே அதுதான் காஃபி போடலாம்னு வந்தேன்” என்றாள் மெதுவாக மென்னு விழுங்கி.

“குட் மார்னிங் சொன்னா திருப்பிச் சொல்லமாட்டியா?” என்றான் அவளிடம் மேலும் பேச எண்ணி.

“…” வைஷ்ணவி அமைதியாய் நிற்க,

“வேற யாரு குட் மார்னிங் சொன்னாலும் திரும்பி சொல்லுறதும் சொல்லாததும் உன் இஷ்டம். ஆனா நான் சொன்னா திருப்பிச் சொல்லணும் சரியா?”

‘சரி’ என்பதாய் தலையாட்ட,

“என்ன சரியா?” என்றான் மீண்டும்.

“சரிங்க பாஸ்” என்றாள் வேகமாய்.

மனம் கொஞ்சமாய் இலகுவாகியது ஸ்ரீக்கு.

‘பொண்ணு ஓடி போனதுல இவனுக்கு ஏதாவது ஆகிட்டா?’ என்ற யோசனையுடன் அவனையே பார்த்து நிற்க,

“என்னாச்சு?”

‘ஒன்னும் இல்லை’ என்பதாய் அவள் தலையாட்ட,

“என்னாச்சு” என்றான் மீண்டும்,

“ஒன்னும் இல்லை பாஸ். இந்தாங்க காஃபி” அவனிடம் நீட்ட,

“ஏதாவது கேட்டா வாயை திறந்து பேசு” என்றபடி காஃபியை கையில் வாங்க,

‘பொண்ணு ஓடி போனதுல இவனுக்கு என்னமோ ஆச்சு’ முடிவே செய்து கொண்டாள் வைஷு.

‘பேசாமல் இவளையே திருமணம் செய்து கொள்ளலாமா?’ இவளையே பார்த்தபடியே அவன் யோசித்திருக்க,

“ண்ணா” என்றபடி ஷிவானி வந்தாள்.

தட்டு விழுந்த சத்ததில் எழுந்து வந்துவிட்டாள் ஷிவானி. சமையல் அறையில் இருவரையும் பார்க்க அங்கையே நின்றுக் கொண்டாள்.

இவரும் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க, இவன் காஃபி குடிக்க, அவள் தோசை வார்பதைக் கண்டவள் வேகமாய் வந்திருந்தாள்.

“சாரி… வைஷு என்னைக் கூப்ட்டிருக்கலாம் தானே… நீ போ… நான் பார்த்துகிறேன்” என்றவள் அவளை அனுப்பித் தோசையைத் தானே சுட,

செல்லும் வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

வைஷ்ணவியைப் பார்த்திருந்த ஸ்ரீயையே இவள் பார்த்திருக்க,

‘என்னைக் கொஞ்சம் பாருங்களேன்’ என்பதைப் போலக் கல்லில் தோசை தீஞ்சுக் கொண்டிருந்தது.

‘டீவி சீரியல் பார்த்தாதாண்டா தோசையைத் தீய விடுறீங்க… சைட் அடிக்கிறதை பார்த்தா கூடவா தீய விடுவீங்க?’ தோசை புலம்பி காய்ந்து கருவாடாய் சுருண்டுப் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!