இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 14

இரவு 9 மணி, பிரபல திருமண மஹால், மதுரை.

வைஷ்ணவியை நேருக்கு நேராக முகம் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. அவளையும், அவள் கொலுசின் ஓசையையும் கேட்காமல் ஸ்ரீ மிகவும் தவித்துப் போனான் என்றுக் கூறலாம்.

அதென்னவோ அவனாக சென்று அவளிடம் பேச மனம் வரவில்லை. மனம் வரவில்லை என்று சொல்வதை விட பயம் என்றுக் கூறினால் சரியாக இருக்கும்.  

ஆம், பயம்தான்! அவளைக் கண்டு மிகவும் பயமாக இருந்தது. ஒருவேளை திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டால் அவனால் தாங்கமுடியுமா? முடியவே முடியாது.

 அவள் கோவிலுக்காவது வருகிறாளா என்றுப் பார்க்க, அவள் வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை. இவனாக அவளை போனில் அழைத்து பேசவும் பயம்.

ஷிவானியுடன் சிரிக்க சிரிக்க பேசுபவள் இவனுக்கு ஒரு போன் அழைப்பு கூட இல்லை.

இன்று மாலை நிச்சயவிழாவில் கூட அவன் முகம் ஏறிட்டுப் பார்க்கவில்லை. எல்லாரையும் பார்க்கிறாள். சிரிக்கிறாள். இவன் முகம் காணவில்லை.

அவன் ஏதாவது பேச முயற்சி செய்தாலும் அவனை வெளிப்படையாக தவிர்க்க, மேற்கொண்டு பேச அவனும் முயற்சிக்கவில்லை.

‘என்னடா வாழ்க்கை… காதலை சொல்ல ஒரு தைரியம் வேணும். அது உனக்கு கொஞ்சம் இல்லை ஸ்ரீ, நீ காதலிக்க தகுதியே இல்லை’ தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

இப்பொழுதும் கூட அந்த பனிவிழும் இரவில் பால்கனியில்  நின்றிருந்து அவளைத்தான் எண்ணிக் கொண்டிருந்தான்.

எப்பொழுதும் அவள் நினைவுதான் அவனுக்கு. ‘தகுதி, தகுதின்னு குதிச்சதானே, அதுதான் இப்போ தனியா நின்னு புலம்பிகிட்டு இருக்க’ அவன் மனம் ஒரு புறம் சாடிக் கொண்டிருந்தது.

இந்த நொடி… இந்த நிமிடம் மிகவும் தனிமையை உணர்ந்தான்!

 ‘யாராவது ஒருவர் தன் அருகில் வரமாட்டார்களா?’ என அந்த நொடி ஏங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

ஏனோ வாழ்க்கையை அந்த நொடி வெறுத்தான். காதலித்த பெண்ணின் நிராகரிப்பு பலமாக தாக்கியது அவனை.

அதிலும் அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசாத பொழுதே இப்படி என்றால், பேசி, பழகி பின் அவள், அவனை தவிர்த்திருந்தால் உயிரையே விட்டிருப்பான் போல, தான் அவள் மேல் வைத்துள்ள காதலின் ஆழம் அதிகம் என உணர்ந்தான்.

அவளை தவிர்த்து வேறு பெண்ணை பார்க்க சென்ற தன் மடத்தனத்தை இந்த நொடி எண்ணித் தவித்தான். தனிமையில் இருக்கும் மனம் பலதையும் எண்ணி தவித்தது.   

காலையில் முகூர்த்தம் என்பதால் எல்லாரும் அவரவர் அறையில் மண்டபத்திலேயே தங்கிக் கொள்ள இவன் உறக்கம் வராமல் அவனது அறையின் பால்கனியை தஞ்சம் அடைந்திருந்தான். அதுதான் தனிமை என்னும் சாத்தான் அவனிடம் புகுந்துக் கொண்டது.

***

“வைஷு மணி ஒன்பது தாண்டிட்டு இன்னும் சாப்டாம என்ன பண்ணிட்டு இருக்க?” ஷிவானிதான் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இல்ல வேண்டாம் ஷிவானி” படுத்திருந்தபடியே கூறினாள் வைஷு.

“என்னாச்சு உனக்கு? எல்லாரும் சாப்டாச்சு, நீ மட்டும்தான் சாப்டல”

“நீ படுத்துக்கோ ஷிவானி, பசிச்சா சாப்டுறேன்” என்றவள் எப்பொழுதும் போல் டவலை கண்களில் கட்டி படுத்துவிட்டிருந்தாள்.

இவர்கள் அறையில் சத்தம் கேட்கவும், அறையை மெதுவாக தட்டினார் ஸ்ரீ கரண்.

“யாரு?” என்றபடி ஷிவானி திறக்க,

“ஸ்ரீ இன்னும் சாப்டல ஷிவானி, கொஞ்சம் அவனை சாப்ட சொல்லு” அவளிடம் கூறியவரின் கண்கள் வைஷுவையே பார்த்திருந்தது.

திருமணம் உறுதி செய்த பிறகு நேரடியாக ஸ்ரீ கரண் இவளிடம் பேசவில்லை. எல்லாம் மாறன் வழியாக மட்டுமே. அவருக்கு இதில் விருப்பம் இருக்கோ? இல்லையோ? ஆனால் அவனுக்காக செய்தார்.

வைஷ்ணவியை, அவனுக்கு பேசிமுடித்த பிறகு அவனாக எல்லா கணக்கையும் பார்க்க ஆரம்பித்தான். அவளை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதில் இருந்து அவனே எல்லாம் பார்த்துக் கொண்டான்.

அதில் ஸ்ரீ கரணுக்கு பரம திருப்தி. அவன் வாழ்க்கை… அவன் ஆசை என்று விட்டார்.

இப்பொழுது அவன் சாப்டாமல், உறங்காமல் இருக்க, இவள் சாப்பிட்டு உறங்கிக் கொண்டிருக்கிறாள் என அவருக்கு சிறு கோபம் கூட வந்தது. அதை அவளிடம் நேரடியாக கூறாமல் கொஞ்சம் சத்தமாகத்தான் ஷிவானியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேச்சில் கண்களில் கட்டியிருந்த டவலை எடுத்தவள் எழுந்து அமர, அவளை ஒரு பார்வைப் பார்த்தவர்  பேசாமல் சென்று விட்டார்.

“அக்கா மாமா சாப்பிடலயாம், நீ போய் கூட்டிட்டு வர்றியா?” இவர் வரவும் அங்கு படுத்திருந்த வைஷாலி எழுந்து அவளிடம் கூற,

”ஆமா வைஷு, கொஞ்சம் அவனை பார்த்துட்டு வாயேன், சாயங்காலமே அவன் முகம் சரியில்ல”

அவன் பேசாததால், இவளும் அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணவில்லை. அதிலும் அன்று, ஷிவானியிடம் அவன்  சரிவராது என்றுக் கூறியது ஏனோ அவள் மனதை உறுத்தியது. அதனாலேயே அவன் பேசினால் பேசிக் கொள்ளலாம் என இவள் எண்ணியிருக்க, அவன் பேசவேயில்லை. 

அந்த கோபத்தில்தான் இன்று மாலை நடந்த நிச்சயவிழாவில் அவனை வேண்டும் என்றே தவிர்த்தாள்.  இப்பொழுது குற்ற உணர்ச்சியாய் இருக்க அவனிடம் பேசிப் பார்க்கலாமோ? என்று தோன்றியது. ஆனாலும் மிகவும் தயக்கமாக இருந்தது.

“நான் மட்டும் எப்படி தனியா?” இவள் தயங்க,

“நாங்களும் வாரோம், நாங்க வெளிய நிக்குறோம் நீ அண்ணனை சாப்ட மட்டும் சொல்லு போதும்”

“ஆமாக்கா, வா நாம எல்லாரும் போவோம்”

“யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க வைஷு” அவள் தயங்க,

“யாரும் பாக்காத மாதிரி நான் உன்னை கூட்டிட்டு போறேன் வா” கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் ஷிவானி. அவளை வாலாக தொடர்ந்து சென்றாள் வைஷாலி .

‘மணமகன்’ என்று பொறிக்கப்பட்ட அறையின் வாசலில் நின்று, “உள்ளதான் இருக்கான் போ வைஷு” மெதுவாக ஷிவானி உரைக்க,

மிகவும் தயங்கினாள் வைஷ்ணவி. அவன் இருக்கும் தனியறையில் தான் எப்படி?

“போ வைஷு, தாத்தாக்கு வீணா கோபம் வர வைக்காதே” ஷிவானி உரைக்க,

மெதுவாக அவன் அறைக் கதவை தட்டினாள் வைஷு.

“நீ இப்படி கதவை தட்டினா மாமாக்கு கேட்காதுக்கா, கொஞ்சம் வேகமாதான் தட்டேன்” வைஷாலி கடுப்பாக உரைக்க,

அவளை முறைத்தவள், வேகமாய் கதவை தட்ட கதவு கொஞ்சமாய் திறக்க, தலையை உள்ளே விட்டு எட்டிப் பார்த்தாள் வைஷு.

அவன் இல்லாமல் போகவே மெதுவாக ஒற்றை காலை உள்ளே வைத்து அறை முழுவதும் எட்டிப் பார்க்க இப்பொழுதும் அவன் இல்லாமல் போக,

மெதுவாக அடுத்த காலையும் உள்ளே வைத்து கதவை  நன்றாக திறந்து உள்ளே செல்ல, அவன் இருந்த அறையின் இன்னொரு கதவு திறந்திருப்பதைக் கண்டு மெதுவாக அங்கே சென்றாள்.

அவளைப் போலவே அவளது கொலுசும் மிகவும் தயக்கமாக மெல்லிய ஓசையை வெளியிட்டது.

அவன் அறையில் திறந்திருந்த கதவின் அருகில் மிக மிக மெதுவாக சென்று வெளியே எட்டிப் பார்க்க, கைகளை கட்டிக் கொண்டு வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஸ்ரீ.

அந்த தோற்றம் ஏதோ ஒரு வகையில் அவளில் தாக்கத்தை ஏற்படுத்த, தயக்கத்தை விட்டு கொஞ்சம் வேக நடை எடுத்து அவனை நோக்கி செல்ல, அவளது கொலுசும் அவள்  நடைக்கு ஏற்ற ஓசையை வெளியிட்டது.

அவனது இதயம் எப்பொழுதும் அறியும் ஓசை இப்பொழுது மிக அருகில் கேட்க, நின்ற நிலையிலையே அப்படியே மெதுவாக திரும்பிப் பார்த்தான் ஸ்ரீ.

நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சட்டென அவளைப் பார்த்து திரும்பினான் ஸ்ரீ.

அவன் கண்களில் வழிந்த ஆச்சரியத்தையும், நிம்மதியையும், அவன் விழிகள் சொல்ல துடிக்கும்  வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாமல் அவள் முழிக்க, அவளைப் பார்த்து பற்கள் தெரிய சிரித்தான் ஸ்ரீ.

அவனின் சிரிப்புக்கு பதில் தான் சிரிக்க வேண்டும் என்பதையும் மறந்து அவனையே, அவனின் சிரிப்பையே பார்த்திருந்தாள் வைஷு. அவன் சிரித்து இப்பொழுதுதான் பார்க்கிறாள் போல,

“தேங்க்ஸ்” சற்று தொண்டை அடைக்க மெதுவாக உரைத்தான்.

அவன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் அவளிடம் எதுவோ சொல்ல துடிப்பதை போல் உணர்ந்த வைஷு, கொஞ்சம் சுதாரித்து “உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க?” கோபமாக வினவ,

‘உன்னைத்தான் நினைச்சுட்டு இருந்தேன்’ சொல்ல வாயெடுத்தவன் அவளின் கோபமுகம் கண்டு, “ஐ ஃபீல் அலோன் வைஷு. யூ நோ” அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கூறினான்.

அவனிடம் அடுத்த வார்த்தை பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக் கொண்டன. தன் வாழ்நாளிலேயே உணர்ந்திராத ஒரு உணர்வு அவளை வெகுவாகத் தாக்க, ‘நான் இருக்கிறேன் உனக்கு’ அவனை இறுக்க அணைக்க தூண்டிய மனத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி திண்டாடிப் போனாள்.

தொண்டை அடைக்கும் உணர்வு வைஷுக்கு. ஒரு நிமிடம் அங்கு வார்த்தைகளற்ற மௌனம் நிலவியது.

“தேங்க்ஸ்” என்றான் மீண்டும் ஸ்ரீ.

அவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று சுத்தமாக அவளுக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது. மிகவும் யோசித்திருக்கிறான் என்று.

அவன், அவளையே பார்த்திருப்பதை உணர்ந்தவள், தொண்டையை செருமிக் கொண்டு, “எனக்கு பசிக்குது, நான் சாப்பிட போறேன், நீயும் சாப்பிட வா?” கூறியவள் திரும்பி ஒரு எட்டு எடுத்து வைக்க,

அவளின் நடையைப் போலவே கொலுசின் ஓசையும் வெளிவந்தது!

நடப்பவை ஒன்றையும் ஸ்ரீயால் நம்பமுடியவில்லை. ‘தன்னை கொஞ்சமும் பிடிக்காத, ஒரு வார்த்தையும் பேச விரும்பாத அவளை மணந்து என்ன செய்யப்போகிறோம்’  என இத்தனை நேரம் மனம் குழம்பி நின்றான்.

அதுவும் நேரம் கடக்க, கடக்க அவனுள் பல எண்ணம், ‘தனக்கு எழுதப்பட்டிருக்கும் விதியே இதுதானா?’ மனம் வெறுக்க வானத்தையே பார்த்திருந்தான்.

ஆனால் இப்பொழுது நடப்பதோ அவனை அப்படியே வானில் பறக்க வைத்திருந்தது. நொடியும் யோசிக்காமல் டக்கென்று அவளின் கையை எட்டிப் பிடித்திருந்தான்.

நொடியில் உள்ளுக்குள் பரவும் உணர்வின் காரணம் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என்னோடான கல்யாணத்துக்கு உன்னை வீட்டுல ஃபோர்ஸ் பண்ணுனாங்களா வைஷு?” என்றான்.

அப்பொழுதும் கூட ‘உனக்கு என்னை பிடிக்குமா?’ என்ற கேள்வி கேட்க பயமாக இருந்தது ஒருவேளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது.

அவளில் பரவிய உணர்வு அவனில் இல்லை என்பதை, அவனது கேள்வியில் உணர்ந்தவள், “பசிக்குது, சாப்ட போகலாம்” என,

அவனின் கேள்விக்கு இது பதில் இல்லை என்றாலும்,  அவனுக்கு இதுவே போதும் என்று இருந்தது.

“வா போகலாம்” என்றவன் அவளின் கையை பிடித்தே அழைத்து வந்தான்.

ஷிவானியும், வைஷாலியும் வெளியே நிற்கிறார்கள் என்ற உணர்வு வர, அவனிடம் இருந்து கையை உருவப் பார்க்க அவன் விட்டால்தானே.

  வெளியே இருவரும் இல்லாமல் போகவே, அவளது அறைக்கு வர, அருகில் இருந்த அறையில் இருந்து ஸ்ரீ கரண் இவர்களையே பார்த்திருந்தார்.

இருவரும் கை கோர்த்து வருவது அவருக்கு மனதில் ஒரு நிம்மதியை தர, தன் அறைக்குள் புகுந்துக் கொண்டார்.

அறைக்குள் வரவும் இருவருக்கும் உணவு எடுத்து வைத்து காத்திருந்தனர் இருவரும். அவர்களைப் பார்த்ததும் வைஷு வேகமாக கையை உருவிக் கொண்டாள்.

இருவரும் உண்ண அமரவும், தங்கைகள் இருவரும் வேகமாய் பரிமாற ஸ்ரீ வேகமாய் உணவை உண்டான்.

அவனையே பார்த்திருந்தாள் வைஷு, ‘இவ்ளோ பசியோட இருந்திருக்கான் நேரமே சாப்டவேண்டியது தானே’ தன்னைப் போல் மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள் .

இருவரும் அமைதியாய் உண்டு முடிக்க, அது வரை அங்கு நின்றிருந்த இருவரும் உணவு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, பின்னோடு வைஷுவும், ஸ்ரீயும் எழுந்துக் கொண்டனர்.

அறை வாசலில் வைஷு நிற்க, அவன் அறைக்கு செல்லும் வழியில் நின்றவன் “தேங்க்ஸ் அண்ட் குட் நைட்” நெகிழ்வாய் உரைக்க,

அவனையேப் பார்த்திருந்தாள் வைஷு.

 ‘தேங்க்ஸ் ஏன் சொன்னான்’ என்ற யோசனையில் இவள் ஆழ்ந்திருக்க,

“குட் நைட் சொன்னா திருப்பி சொல்ல மாட்டியா?” என்றான் அன்று போல்.   

  “கு…. குட் நைட்” தயக்கமாக இவள் உரைக்க,

தலையை ஆட்டி சிறு புன்னகையுடன் தன் அறைக்கு திரும்பினான் ஸ்ரீ.

படுக்கையில் விழுந்த இருவருக்கும் மனம் ஏதோ ஒரு வகையில் மகிழ்ந்திருந்தது!

Leave a Reply

error: Content is protected !!