இது என்ன மாயம் 20

இது என்ன மாயம் 20

பகுதி 20

ஆசை கணவனாய்

நீ இருப்பாய் என்ற

ஆசை… கனவாய் போகும்

முன் வந்து விடு

உன் மனதை தந்து விடு…..

 

காதல் இல்லை என்று புத்தி நினைத்தாலும், மனம் தன்னவள், வேறு ஒருவனைச் சாதரணமாக பார்த்தால் கூட, தாங்க முடியாமல், கோபம் வருகிறதே, அதற்கு பெயர் என்ன என்று புத்தியை ஆராய விடாமல், கோபத்தை மட்டும் பிரதானாமாய் வைத்து புறப்பட்டான் சஞ்சீவ். சிறிது யோசித்திருந்தால், அவள் மீது தான் கொண்டது கோபம் அல்ல காதல் என்று புரிந்திருக்கும்.

மேலும் அவள் தன்னிடம் மட்டுமே சிரித்து பேச வேண்டும் என்ற “பொசஸிவ்நெஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதனால் விளைந்த கோபம் என்று, அவன் ஆராய்ந்திருந்தால் புரிந்திருக்கும். ஆனால் அவன் எதுவும் செய்யாமல் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல விரைந்து சென்றான்.

பிரஜி அருகில் வந்த சஞ்சீவ், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அவளுக்கும், சசிக்கும் ஆளுக்கு ஒரு கப்ஐஸ் தந்தான். அதற்குள் சந்தோஷி சஞ்சீவிடம், இருந்து இறங்கி, அங்கு கல் இருக்கையில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமிடம் சென்று, இவளும் அமர்ந்து, “உனக்கு வினுமா…” என ஐஸ்சை புகட்ட முயல, “தம்பிக்கு கொடுக்கக் கூடாது” என்று சசி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே, கப் ஐஸ்சை சுவைத்தான்.

ஐஸ்சை பிரித்துப் பார்த்த பிரஜி, சஞ்சீவிடம் “எனக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்காது… வேணாம் நீங்களே சாப்பிடுங்க” என்று சொல்ல, ஏற்கனவே அவள் மீது கடுப்போடு இருந்தவன், அவள் அவ்வாறு சொல்லவும், சந்தோஷிக்கும் பிரஜீக்கும் நடுவில் சென்று அமர்ந்தவன், அவள் அவனுக்காக இடம் விட்டு நகரும் வேளையில், அவள் காதருகே குனிந்து, “ஏன் மத்தவன் வாங்கிக் கொடுத்தா பிடிக்கும், நான் வாங்கி கொடுத்தா பிடிக்காதோ?” என்று உக்கிரமாய் கேட்க,

அதில் அதிர்ந்தவள், அப்படியே சிலையென இருக்க, மீண்டும் அவனே “தள்ளி உட்காரு” என்றதில் கலைந்தவள், அவனை முறைத்து “நீங்க பார்த்தீங்களா….. வாங்கி தந்தத?”

“பார்க்காததால தான, தைரியமா என்ட்ட பேசுற”

அவள் பதில் பேசாமல் அவனையே கூர்ந்து பார்க்க, “என்ன பார்க்குற?…. சாப்பிடணும்னா சாப்பிடு இல்ல குப்பைல போடு” என்று திமிராய் பதில் கூறினான். அவன் சொன்னதைச் செய்ய தான் நினைத்தாள்.

ஆனால், அதற்குள் எதற்கோ கோபித்து எழுந்த சந்தோஷி, “போ… போ… னா வரல… இனக்கு வினும்….” என்று எழுந்து அவர்களைப் பார்த்துக் கொண்டே, அப்படியே பின்னயே நகர்ந்தாள்.

பின் இருவரும் தங்கள் வாக்குவாதத்தில் கலைந்து, சின்னவளைப் பார்க்க, அவளோ உதட்டைப் பிதுக்கி அழுவதற்கு தயாராக இருந்தாள். சசியோ “சந்துக் குட்டி நல்ல பொண்ணுல…. வா…. நாம சாப்பிட போலாம், அத்த மாமா தேடப் போறாங்க, வா…” என்று அழைத்துப் பார்த்தான்.

“போ…. இனக்கு விணாம்…. இனக்கு ஐஸ் டா விணும்….” என்று சசி சாப்பிட்டு முடித்த ஐஸ்சைக் கேட்டாள். அவனோ “இப்படி நெறைய ஐஸ் சாப்பிட்டா, அத்த அடிக்கப் போறா… உன்ன… ஒழுங்கா வந்திரு, இல்ல உங்க அத்தக் கிட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்ட, அவள் “போ” என்பது போல் தலையை வெட்டினாள்.

பின் சசியிடம் அவள் பிடிவாதத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்த சஞ்சீவ், அழுக ஆரம்பித்த அவளைப் பார்த்தான். அதற்குள் பிரஜி “இந்தா டா குட்டி மா, அத்த தரேன்” என்று தன்னிடம் இருந்த ஐஸ்சை நீட்ட, அவளோ “இனக்கு இது விணாம்…. அதா விணும்” என்று சசி சாப்பிட்டதையே கேட்டாள்.

சின்னக் குழந்தை அல்லவா, அவளுக்கு இரண்டு ஐஸ்ஸும் ஸ்ட்ராபெர்ரி தான் என்று தெரியவில்லை, எடுத்து சொன்னாலும் அவள் கேட்கவில்லை.

பின்னர் பிரஜி தான், “சரி… போ… உனக்கு வேணாம்னா… நான் ஸ்ரீ குட்டிக்கு தரேன்” என்று ஒரு கையை இருக்கையில் வைத்து, மறு கையால் வெறும் மர ஸ்பூனை, சஞ்சீவை கடந்து, அமர்ந்திருந்த ஸ்ரீயின் வாயருகே கொண்டு செல்ல, அவர்கள் இருவரையும் யோசனையாய் சந்தோஷி பார்த்தாள்.

ஆனால் சஞ்சீவோ, தன் நெஞ்சத்தின் அருகே குனிந்து ஸ்ரீயை பிடித்திருந்தவளின், கூந்தலில் சூடிய மல்லிகை பூவின் மனம், குப்பென அவன் நாசியில் நுழைந்து அவன் மனதுள் நிரம்ப, அவன் கோபம் மறந்து, ஏதோ ஒரு உணர்வு அவனை ஆட்கொண்டது. சில மணித்துளிகள் அவஸ்த்தையாய் உணர்ந்தவன், சட்டென்று அவன் கைகளால் அவள் தோளைப் பற்றி நிமர்த்தி, “இந்தா நீ ஸ்ரீக்கே… கொடு… சந்தோஷி வேணாம்” என்று பிரஜீயிடம் சொல்லிக் கொண்டே அருகில் இருந்த ஸ்ரீயையும் தூக்கினான்.

சசியும் “ஆமா… சந்தோஷி…. வேணாம்” என்று சொல்ல, எல்லோரும் தன்னை ஒதுக்கவும், நிஜமாகவே அழுக ஆரம்பித்தாள். கண்களை தன் பிஞ்சு கையால் தேய்த்து”அவ்வ்வா…. ஆஆ….. அவ்வ்வா….ஆஆ…….” என அழுகஆரம்பிக்க, அவளின் அழுகையைக் காண பொறுக்க முடியாமல், அவளருகே சென்று அவள் உயரத்திற்கு குனிந்து, ஒரு காலால் முட்டியிட்டு அமர்ந்து, தன் முந்தானையால் அவள் முகத்தை துடைத்து விட்டு, அவளைக் கொஞ்சிக் கொண்டே தூக்கினாள்.

சந்தோஷியும் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு, தோளில் முகத்தைப் புதைத்து தேம்பினாள். பிரஜீக்கு குழந்தையின் ஸ்பரிசம் சிலிர்க்க, அது அவளின் மனதை அவளுக்கே தெரியாமல் ஆறுதல் செய்ய, “அழக்கூடாது டா… குட்டிமா…. இங்க பாரு, சந்தோஷி சமத்து பாப்பால… உனக்கு ஐஸ் வேணுமா? வேணாமா?” என்று வினவிக் கொண்டே சஞ்சீவை நோக்கி சென்றாள்.

சந்தோஷி தேம்பிக் கொண்டே “விணும்…ம்ம்ம்…” எனத் தலையாட்டினாள். “அப்போ… அழக் கூடாது… அழுதிட்டே ஐஸ் சாப்பிட்டா, சளி பிடிச்சுக்கும் பாப்பாக்கு” எனச் சொல்ல, அவளும் அழுகையை நிறுத்தி, சஞ்சீவ் தந்த ஐஸ் கப்பை வாங்கிக் கொண்டாள்.

சசி “வேண்டாம் சஞ்சீவ், நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லியும், “குழந்த தான விடுங்க சசி, அவ சாப்பிடட்டும்” என்று பதில் தந்தான் சஞ்சீவ். பின் அனைவரும் மதிய உணவு உண்ண அங்கேயே ஒரு மர நிழலை தேர்வு செய்து, போர்வையை விரித்து அமர்ந்தனர். அதற்குள் சசி, அலைபேசியில் “டேய்… காதல் மன்னா… வா டா வேகமா, இங்க எங்களுக்கு பசி உயிர் போகுது”

“வரேன் டா” என்று அந்தப் பக்கம் ஜெய் சொல்ல,

“டேய் இத தான் டா, அரைமணி நேரமா சொல்லிட்டு இருக்க, அஞ்சு நிமிசத்துல வந்தா உனக்கு சாப்பாடு கிடைக்கும்… இல்லேன்னா கிடைக்காது” என்று கறாராய் பேசி வைத்து விட்டு, சஞ்சீவ், பிரஜி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றான்.

அந்தப் பக்கம், ஆள் அரவமற்ற ஒரு மர நிழலில் தன் மனைவியின் மடியில் படுத்திருந்த ஜெய் “போலாம், போலாம்… டியர்” எனக் கிளம்ப சொன்ன மனைவியிடம் கூற, பசி வயிற்றைக் கிள்ளிய நிலையில், பொறுமையிழந்த சங்கீ, ஜெய்யின் மண்டையில் ஒரு கொட்டுக் கொட்டி, அவனை எழுப்பினாள். “ஆஆஆ… ஏய் நான் கொஞ்சமா தான் நல்லவன்ங்கிறத மறந்துட்டு… இப்படிலாம் பண்ற…” என்று அவன் மிரட்ட,

“ஸ்….ஸோ…… இந்த டயலாக் கேட்டு கேட்டு, காது புளிச்சு போச்சு… டயலாக்க மாற்றுங்க, இல்ல இதுக்கும் ஒரு கொட்டு விழும்” என்று எழுந்து நடந்தே விட்டாள். வேறு வழியில்லாமல், ஜெய் அவள் பின்னே சென்றான்.

அங்கு போர்வையில், ஸ்ரீயை ஒரு குட்டி பெட்டில் படுக்க வைத்து, அவனுக்கு தண்ணீர் பாட்டிலை தர, அவன் சமத்தாய் தன் இரு கையால் பிடித்து குடித்துக் கொண்டிருந்தான்.

மேலும் “என்ன இது? சந்துக் குட்டி சமர்த்தா உட்கார்ந்திருக்கே” எனச் சொல்லி, அவளருகே அமர, சந்தோஷி தன் அத்தையைக் கண்டதும், அவள் கழுத்தில் கையைக் கோர்த்து, கட்டிப்பிடித்து, இருவரும் மாறி மாறிக் கொஞ்சிக் கொண்டிருக்க, “இம்… இரண்டு ஐஸ் உள்ள போனா, யார் தான் சமர்த்தா இருக்க மாட்டாங்க?” என சசி போட்டுக் கொடுத்தான்.

அதை கேட்ட சங்கீ, சந்தோஷியை தன்னிடம் இருந்து பிரித்து, “ஏய் ஐஸ் சாப்பிட்டியா…..” என மிரட்ட, சின்னவளோ “ரிண்டே ரிண்டு டா த்த…” என மீண்டும் அவளைக் கட்டிப்பிடித்து அவள் கன்னமெங்கும் முத்தம் கொடுத்தாள்.

அதைப் பார்த்து அனைவரும் சிரிக்க, “ஹே… போதும் போதும்பா… பசிக்குது சாப்பாடு போடுங்க” என அவள் அருகே இருந்த ஜெய் குரல் கொடுக்க, சங்கீ “பொறுக்காதே… உங்களுக்கு, இவ்ளோ நேரம் நீங்க மட்டும் கொஞ்சுனீங்க, ஹும்…..” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிக் கொண்டே, நடுவில் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு பையிலிருந்த, தட்டு, கரண்டிகளை எடுத்தாள். பிரஜீயும் அவளுக்கு உதவினாள்.

சந்தோஷி தன் அத்தையை ஊட்டச் சொல்ல, அதனால் பிரஜி தான் பரிமாறுவதாகவும், பின் நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சங்கீயிடம் சொன்னாள். சங்கீயும் சரி என ஒத்துக் கொள்ள, பிரஜி மற்றவர்களுக்கு பரிமாற போனாலோ, சஞ்சீவ் அவன் தட்டையும் தூக்கி காண்பித்து, முதலில் தனக்கு வைத்து விட்ட பின்னே, பிறருக்கு வைக்க விட்டான்.

ஒரு வழியாய் அனைவரும் சாப்பிட்டு முடித்து விட, இனி எங்கு செல்லலாம் என்று அனைவரும் மாறி, மாறி கருத்து சொல்லி, கடைசியில் ஒரு வழியாய், அங்கிருக்கும் மால் ஒன்றுக்கு செல்லலாம் என முடிவு செய்தனர்.

இப்போது மாலில் சங்கீதாவை இரு குழந்தையோடு விட்டுவிட்டு, “நீ இங்க பார்த்திட்டு இரு, நாங்க வந்திர்றோம்” என ஜெய் தன் மனைவியிடம் கூறி விட்டு, அண்ணனும், தம்பியும், தோளில் கைப் போட்டுக் கொண்டு, ஒன்றாக சுற்றி பார்க்கச் சென்று விட்டனர்.

சங்கீதா இரு குழந்தைகளுடன், ஒன்று சஞ்சீவ் பிரஜீக்கு முன்னேவோ, அல்லது பின் தங்கியோ செல்வாள். பாவம் புதிதாக திருமணமானவர்கள், தான் எதற்கு இடையூறு என்றெண்ணி தான், அவ்வாறு சென்றாள். ஆனாலும் இது அவர்களுக்கு புரியவில்லை, பிரஜி சந்தோஷியுடன், பேசிக் கொண்டே சங்கீதாவுடன் நடந்து சென்றாள். சங்கீதா ‘நான் தான் பெண், வேறு வழியில்லாமல் இவர்களுடன் செல்கிறேன், காலையில் இந்த சசியாவது, இவர்களை தனியே விட்டிருக்கக் கூடாதா? ஐயோ பாவம், காலையும், மதியமும், மாறி மாறி முறை வைத்து(ஷிப்ட் போட்டு) அவர்களின் தனிமையைக் கெடுக்கிறோமே” என்று சங்கடப்பட்டுக் கவலைப்பட்டாள்.

ஆனால் ஜோடியாக செல்ல வேண்டிய சஞ்சீவ், பிரஜீயோ அதைப் பற்றி, சிறு துளிக் கூட கவலைக் கொள்ளாமல், அவளுடன் வந்தனர். பின் ஒரு வழியாய் சுற்றி முடித்து, அங்கு ஒரு தளத்தில், ஒரு இடத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்து சிறிது ஓய்வெடுத்தனர். பின் பெண்கள் இருவரும், ஸ்ரீயை சஞ்சீவிடம் கொடுத்து விட்டு, சந்தோஷியோடு ரெஸ்ட் ரூம் சென்று, சிறிது முகம் கழுவி ரெப்ரெஷ் செய்துக் கொண்டனர். பின் ஜெய்யும், சசியும் வர அனைவரும் கிளம்பினர்.

பின்னர், வழியில், ரோட்டில் பூக்கடையில் வண்டியை சங்கீ நிறுத்த சொன்னாள். பூ வாங்கி பெண்கள் சூட்டிக் கொண்டனர். சஞ்சீவ் காசு தருவதற்குள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த சசி தந்து விட, சஞ்சீவுக்கு சிறிது முகம் சுருங்கி விட்டது. இந்த முறை நடுவில், சங்கீயும் ஜெய்யும் தங்கள் மகன் ஸ்ரீயோடு இருக்க, கடைசி இருக்கையில் பிரஜீயையும் சஞ்சீவையும் சங்கீ தான் சாக்கு போக்கு சொல்லி அமர வைத்தாள்.

காணாததற்கு, தூங்கியிருந்த சந்தோஷியையும், அவர்கள் இருக்கையில் படுக்க வைத்தாள். சின்னவள், பிரஜீயின் மடியில் தலை வைத்து, கால் நீட்டி படுத்ததனால், அவள் சிறிது சஞ்சீவை ஒட்டி தான் அமர்ந்தாள். மேலும் உறக்கம் பிரஜீயையும் தழுவியதால், அப்படியே கண்ணயர்ந்து, சஞ்சீவின் தோளில் சாய்ந்து விட்டாள்.

சஞ்சீவ் என்ன தான் பட்டாசு போல, பட் பட்டென்று கோபப்பட்டாலும், அவள் அருகில் நெருக்கமாய் அமர்ந்தாலோ, அல்லது தன்னை உரசினாலோ, ஏதோ ஒரு இதமான உணர்வு, மனதை ஆட்கொள்வதை, அவனால் தவிர்க்க இயலவில்லை. இதோ இப்பொழுது கூட, அவளிடம் இருந்து ஏதோ ஒரு வித மனம், அவள் கூந்தலில் சூடிய மல்லிகையின் வாசத்தோடு கலந்து, ஒரு வித நறுமணமா? அல்லது அவளுக்கே உரிய பிரத்தேயக மணமா தெரியவில்லை, ஆனால் அது அவனிடம் வந்து, அவன் மனதை நிறைத்தது.

தன் தோளில் சாய்ந்தவளை, தன் கரத்தை அவள் தோள்களில் போட்டு அணைத்தார் போல பிடித்துக் கொண்டான். மற்றொரு கரத்தால், அவள் மடியில் படுத்திருந்த சந்தோஷியை அணைத்திருந்த, அவளின் கைகளின் மீது வைத்து பற்றிக் கொண்டான். எல்லாம் வீடு சென்று சேரும் வரை தான், இந்த கரிசனம் என்று தெரியாமல், உறக்கத்திலேயே பிரஜி அவனின் ஸ்பரிசத்தையும், நெருக்கத்தையும் உணர்ந்தாளோ? என்னவோ அவளின் செந்நிற இதழ்கள், மெல்ல சிறிதாக மலர்ந்தது.

பின் இரவு உணவையும் முடித்துக் கொண்டு வீடு சென்று சேர்ந்தனர். இறங்கி வீட்டை திறக்கும் போதே, சசி, பிரஜீயிடம் “பிரஜி, இந்தா மா, என்னோட சின்ன கிப்ட்” என ஒரு பையை நீட்டினான்.

அவள் புரியாமல் விழிக்க, “சங்கீதா போல நீயும் எனக்கு ஒரு தங்கச்சி மாதிரி தான், அதான் உனக்கும், அவளுக்கும் சேர்த்து ஒரு கிப்ட் வாங்கினேன்” என்று சொல்ல, சங்கீ “ஹே…. எனக்குமா? எங்க காமி” என்று கேட்க, அவளுக்கும் ஒன்றை நீட்டினான்.

பிரஜி சஞ்சீவைப் பார்த்தாலும், இவ்வளவு தூரம் அன்பாய், சசி தந்த பரிசு பொருளை வாங்கிக் கொண்டாள். அதற்குள் சங்கீ, அவளுக்கு கொடுத்த பையை திறந்து பார்த்தாள். அவளுக்கு சிவப்பு நிறத்தில் தங்க பூக்கள் போட்ட சுடிதார் இருக்க, “வாவ்… சசி சூப்பர்… போ… உன் செலக்ஷன் அருமை” என்று அவனைப் பாராட்டியதோடு நிற்காமல், “ஹே… பிரஜி… எங்க உன்னோடத காமி” என்று ஆர்வ மிகுதியில் கேட்டாள்.

பிரஜீக்கும் அதே போல, அதே வர்ணத்தில், அதே வேலைப்பாட்டோடு தான் வாங்கியிருந்தான். பிரஜி சசியிடம் “தேங்க்ஸ் அண்ணா” என்று கூற, சங்கீ “ஹே… பிரஜி, நாம இரண்டு பேரும் இத ஒரு நாள் சேர்ந்து ஒன்னா போடலாம்” என அதற்குள் திட்டம் போட்டு விட்டே தன் வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

பிரஜி சிறிது கலக்கத்துடனே ‘இவன் என்ன சொல்லப் போகிறானோ? எப்படி எல்லாம் சாமி ஆடப் போகிறானோ?’ என்றெண்ணிக் கொண்டே நுழைய, ஆனால் சஞ்சீவ் ரெப்ரெஷ் செய்துக் கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டான். பிரஜீயும் படுக்க வந்தவள், தன் படுக்கையை கீழே விரிக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

அவள் குனிந்து நிமிர்ந்து, போர்வை விரித்ததில், கூந்தலும் கூந்தலில் சூடிய பூவும் முன்னே விழ, அதைக் கண்ட சஞ்சீவ், ‘நான் ஒன்னு சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டு, கீழே படுத்திருக்கா, மன்னிப்பு கேட்டும், எவ்வளவு வீம்பு இருந்தால், இன்னும் கீழேயே படுப்பா’ என சம்பந்தமில்லாமல் முடிந்து போன அத்தியாயத்தின் கோபத்தைக் கொணர்ந்தான்.

இந்தக் கோபத்தின் மூலக் காரணம், பிரஜீயின் கூந்தலில் சூடிய பூ, அவனை… சசியை நினைக்க வைத்தது. ஏனென்றால், அவன் தானே பூவிற்கு காசு கொடுத்தான். அப்படியே அவன் சிந்தனை அவன் வாங்கி தந்ததாய் நினைத்த கல் வளையலில் வந்து நின்று, அவன் மனதுள் ஒரு பொறாமை உணர்வை உண்டு பண்ணி, “ஏய்… யார் என்ன வாங்கி தந்தாலும், வச்சுக்குவியா?” என எதையேனும் ஆரம்பிக்க வேண்டும் என மொட்டையாக ஆரம்பித்தான்.

பிரஜீயோ ‘ஆரம்பிச்சுட்டான்’ என எண்ணி, “எத சொல்றீங்க?” எனப் புரியாமல் கேட்க,

“இம்ம்… அவன் வாங்கி தந்தான்னு, நீயும் பூவ வாங்கி தலைல வச்சுகிட்டேயே” எனக் குற்றம் சுமத்த, “சங்கீதா தான தந்தாங்க, நீங்களும் பார்த்துட்டு தான இருந்தீங்க?” என அவள் பதில் தர,

“ஆனா யாரு காசு தந்தா?” என இவன் விதண்டாவாதம் புரிய, அவளோ ஏற்கனவே அலைச்சலில் களைத்து போனவள், இப்போது இவன் பேச்சினால், மேலும் களைத்து போனாலும் “ஏன் அவ்வளவு ரோஷம் பார்க்கிறவரு, நீங்க இறங்கி போய் பொண்டாட்டிக்கு வாங்கி தர வேண்டியது தான?” என நெற்றியடியாய் பதில் தர,

தன்னைக் குற்றம் சுமத்தி விட்டாளே, என்று ரோஷம் வர, அவளைக் காயப்படுத்த எண்ணி “அப்ப, நான் வாங்கி தரலேன்னா… எனக்கு பதில் யார் வாங்கி தந்தாலும் வாங்கிக்குவியா?” என அவன் ஒரு மார்க்கமாய் கேட்க,

பிரஜீயோ ‘என்ன வார்த்தை சொல்லி விட்டாய்’ என்ற கோபம் வந்தாலும், அவனுக்கு புத்தி சொல்லும் விதமாக “சஞ்சீவ், ஏன் இப்படியெல்லாம், பேசி உங்கள நீங்களே தரம் தாழ்த்திக்கிறீங்க? என்ன மட்டம் தட்டி பேசுனாலும், அது உங்களையே நீங்க மட்டமா பேசுற மாதிரி தான். ஏன்னா நான் உங்க மனைவி, நீங்க என் கணவன்கிறத மறந்திராதீங்க” என்று ‘நீயும் நானும் ஒன்று, இதில் நீ என்னை கேவலப்படுத்தினால், அது உன்னையே நீ கேவலப்படுத்துவதற்கு சமம்’ என்ற அர்தத்தில் சொல்லிவிட்டு, மன தாங்கலோடு படுத்துக் கொண்டாள்.

ஆனால் சஞ்சீவோ, அவமானப் பட்ட உணர்வோடு, அமர்ந்திருந்தான். அவளைக் காயப்படுத்தும் என்றெண்ணி சொன்ன வார்த்தைகளை வைத்தே, சுவற்றில் எரியும் பந்தைப் போல, தனக்கு திருப்பி விட்டாளே என்ற எரிச்சல் உருவானது. மேலும், அதே எரிச்சலோடு ‘மனைவியாம்… மனைவி, எந்த வீட்டிலாவது புருஷனை தனியே விட்டு, கீழே படுப்பாளா மனைவி? பேச வந்துவிட்டாள் பதிவிரதையாட்டம்’ என்று எதையாவது அவளுக்கு எதிராய் எண்ண வேண்டும் என்று யோசித்து யோசித்து சிந்திக்கலானான். அப்படியே உறங்கியும் விட்டான்.

பிரஜீயோ ‘முன்பு தான் ஏதோ சிறு தவறு செய்திருப்பேன் போல, தன்னிடம் சொல்லாமல், அதையே நினைத்துக் கொண்டு, தன்னையும் காரணக் காரியமின்றி மட்டம் தட்டுகிறான் என்று எண்ணினேன். ஆனால், மனைவி என்பவள் கணவனின் பாதி, ஏன் அவள் என்றாலே அது அவனும் சேர்ந்து தானே அர்த்தம், அது போல அவன் என்றாலும் தானும் தானே அவனுள் அடக்கம். ஏன் இப்படி ஒரு பாட்டே இருக்கிறதே. “நான் என்றால்… அது அவளும் நானும்… அவள் என்றால்… அது நானும் அவளும்…” இது புரியாமல் ஏன் இப்படிப் பேசுகிறான்.

இதற்கு மேலும் எனக்கு பொறுமை இல்லை சஞ்சீவ், அது தான் இன்று உங்களுக்கு, ‘நான்’ நீங்கள் தான் என்றும், ‘நீங்கள்’ நான் தான் என்றும் உணர்த்தி விட்டேன். இனி நீங்கள் என்னை திரும்ப தவறாக பேச மாட்டீர்கள் தானே?’ என இவ்வாறாக எண்ணி, மன தாங்கல் இருந்தாலும், தான் அவனுக்கு தன் எண்ணத்தை உணர்த்தி விட்ட நிம்மதியில் உறங்கிப் போனாள்.

ஆனால் ஒன்றை மறந்து விட்டாள், அந்த பாடல் இடம் பெற்ற சூரியகாந்தி திரைப்படத்தின் நாயகி போல தான், தன் நிலையும் என்பதை அவள் உணரவில்லை.

 

மாயம் தொடரும்…….

error: Content is protected !!