imk-19

குலதெய்வம்

“என்ன தமிழச்சி?” என்று கேட்டுக் கொண்டே ஆதி அவள் தோள்களைத் தொடவும் அவள் விக்ரமின் நினைப்பில் இருந்து மீண்டு வந்தாள். ஆனால் அவள் விழிகள் அப்பட்டமாய் அவன் இல்லாதத் தவிப்பைப் பிரதிபலித்தது.

ஆதி ஏதோ கேட்க வாயெடுக்க, “நாங்க கிளம்பறோம் ஆதிம்மா!” என்றபடி தமிழச்சி இவானைப் பார்க்க அவனும் தயாராய் இருப்பதாய் தலையசைத்தான். அதற்கு மேல் ஆதி எதுவும் கேட்காமல் அவர்களை வழி அனுப்பிவிட்டார்.

விஷ்வா பின்னோடு வந்து, “எப்படியோ புருஷன் பொண்டாட்டி பிரச்சனை ஓரளவுக்கு செட்டில் ஆயிடும்னு நினைக்கிறேன்” என்றார்.

ஆதியும் தன் இமைகளை மூடி அவர் சொன்னதை ஏற்றவர், “ஆனா உங்க பையன் இப்போ முறுக்கிக்கிட்டு போற மாதிரி இருக்கு” என்று கேட்க அவர் புன்னகையோடு மனைவியிடம், “என் பிள்ளையாச்சே! அப்புறம் இவ்வளவு கூட இல்லைன்னா எப்படி?” என்றார்.

“அதானே!” என்று ஆதியும் கணவனைப் பார்த்து முறுவலிக்க, மூன்று நான்கு மாதங்களாய் தமிழச்சி விக்ரம்  பற்றிய அவர்களின் மனதைப் பீடித்திருந்த கவலை ஒருவாறு நீங்கி நிம்மதி உண்டாகியிருந்தது.

ஆனால் தமிழச்சியின் மனநிலை இப்போது அத்தகைய நிம்மதியை இழந்திருந்தது. விக்ரம் அப்படி முகம் பார்க்காமல் அந்தளவுக்குத் தன்னைத்  தவிர்ப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது எப்படி அவனால் முடிந்தது?

அத்தகைய நிராகரிப்பை அவள் அவனுக்கு செய்ததுதான். எனினும் அதையே அவன் திருப்பிச் செய்யும் போது அதிகமாய் வலித்தது. இந்த எண்ணத்தில் சிக்குண்டவளுக்கு இவான் அருகிலிருப்பதும் மறந்து போனது. அவள் பாட்டுக்கு விக்ரமைப் பற்றிய நினைப்பில் காரை இயக்கிக் கொண்டு வர, இவான் அவளின் அந்தப் புதுவிதமான உடையலங்காரங்களில்  தன்னிலை மறந்திருந்தான்.

தவறு என்று தெரிந்தாலும் மனித உணர்வுகளுக்கு எல்லைக் கோடுகள் இல்லையே! கண்டங்கள்  தாண்டி அவன் மனம் அவள் மீதுதான்  முதல்முறையாய் காதல் கொண்டுவிட்டது. அதுவும் அவளைப் பார்த்த ஒரு பார்வையிலேயே!

இவானின் ஆழ்ந்த பார்வை தமிழச்சியின் பெண்மையை விழித்துக் கொள்ளச் செய்ய அவள் துணுக்குற்றுத் திரும்பும் போது இவானின் போலீஸ் மூளையும் சுதாரித்துக் கொண்டுவிட்டது. பட்டெனத் தன் பார்வையைக் காரின் ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டான்.

அவள் சந்தேகத்தோடு, “இவான்!” என்று அழைக்கும் போதே, “யா” என்று அப்போதுதான் அவளைத் திரும்பிப் பார்ப்பவன் போல பாவனை செய்ய அவள் தம் விழிகள் விரித்து நம்பாமல் அவனை மேலும் கீழும் பார்த்தாள். ஆனால் அவன் எந்தவித உணர்ச்சியும் காட்டிக் கொள்ளமால் முறுவலித்தபடி, “இந்த காஸ்ட்யூம் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு தமிழச்சி… யு ஆர் லுக்கிங் பியூட்டிஃபுல்!” என்றான்.

அவள் உடனே, “விக்ரம் செலெக்ஷன்… அதான்” என்று சொல்ல இவானின் முகம் லேசாய் ஏமாற்ற உணர்வைத் தொட்டு மீண்டது.

அதனை அவள் கவனித்தாளோ என்னவோ! அவன் மறுநொடியே தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு, “நாம கேஸைப் பத்தி பேசுவோமா?” என்று பேச்சை மாற்ற… அவளும் இப்போது போலீஸ் மனநிலைக்கு வந்தாள்.

“நானே கேட்கணும்னுதான் இருந்தேன்… அண்ணாவை உங்களுக்கு எப்படித் தெரியும் இவான்? அப்புறம் கமலக்கண்ணன் மர்டருக்கும் உங்களுக்கும்” என்றவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே இடைநிறுத்தியவன், “நான் இந்த கேஸ் என் கைக்கு வந்ததுல இருந்து சொல்றேன்… அப்பத்தான் க்ளியரா எல்லாம் புரியும்” என்றான்.

காரை இயக்கியபடி அவன் சொல்லப் போகும் விஷயங்களைக் கேட்க ஆர்வமாய் காத்திருந்தாள். சீரான வேகத்தில் அவர்கள் கார் சென்று கொண்டிருக்க இவான் தான் சொல்ல வந்த விஷயங்களைத் தெளிவாக அவன் மொழியில் விவரித்தான்.

********

சர்வேதச கலைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்கா தலைமையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் உலகம் முழுக்க உள்ள பொக்கிஷங்களைக் கடத்தும் நெட்வொர்கை ட்ராப் செய்வது.  இந்தக் கடத்தல் கும்பல்  இந்தியப் பொக்கிஷங்களை மட்டும் குறிவைத்து செயல்படவில்லை. இத்தாலி, பாகிஸ்தான், ஈராக், கம்போடியா போன்ற நாடுகளிலும் தங்களுடைய கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தது.

அத்தகைய உலகளாவிய கலைப் பொக்கிஷங்களைத் திருடும் அந்தக் கடத்தல் கும்பலை வேரோடு கருவறுக்க, அமெரிக்கா தங்கள் சார்பில் பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதிலும் முக்கியமாய் இரண்டு மாதம் முன்னதாக எஃப். பி. ஐயால் ஒரு ரகசிய குழு உருவாக்கப்பட்ட து. அந்தக் குழுவில் தகவல்களை சேகரிக்க பொறுப்பேற்றவன்தான் இவான் ஸ்மித்!

இந்த வழக்கை அவன் கையிலெடுத்ததும் அவன் நினைவு கூர்ந்தது மூன்று மாதம் முன்பு பாண்டிச்சேரியில் இருந்து அமெரிக்கா வந்த ஒரு ஷிப்பிங் கன்டெயினரில் பல கோடிகள் மதிப்பிலான புராதன சிலைகள் கிடைத்த வழக்கு. அந்த வழக்கிலிருந்து தன் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியதாக இவான் கூறவும் அவள் முகம் மலர்ந்தது. அவளும் அங்கிருந்துதான் தன் விசாரணையைத் தொடங்கி இருந்தாள்.

அன்று அந்தக் கன்டெயினர் எந்த நிறுவனத்திற்காக  வந்ததோ அந்த நபர் அதனைக் கைகழுவிவிட, மேலே அந்த வழக்குப் பெரியளவில் விசாரிக்கபடாமலே கைவிடப்பட்டது. ஆனால் இவான் ஸ்மித் அதனை மீண்டும் உயிர்பித்தான். அந்தக்  கன்டெயினர்  வந்த எஸ்.பி என்ற நிறுவனத்தை ரகசியமாய் தன் கண்காணிப்பில் கொண்டு வந்திருந்தான்.

சில நாட்களாக அந்த நிறுவனத்திற்கு வரும் பொருட்கள் வெகுவாய் குறைந்திருந்தது. அங்கே தன்னுடைய சந்தேகம் அதிகரித்ததாக இவான் அவளிடம் சொல்லித் தன் விசாரணை வழிமுறைகளை விவரிக்க, அவள் வியப்பாக அவன் சொல்லவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரே மாதத்தில் அவன் அந்த வழக்கை முன்னெடுத்து சென்ற விதம் அவளுக்குக் கேட்கக் கேட்க அத்தனை சுவாரஸ்யமாய் இருந்தது. ஒரு போலீஸாக அவன் செயல்பாடுகளை ரசித்த அதேநேரம் அவன் மீது அதிக மதிப்பும் மரியாதையும் உண்டாகியிருந்தது.

இறுதியாக இவான் தன் தீவிர விசாரணையின் மூலம் கண்டறிந்த முக்கியத் தகவலை உரைத்தான். அந்தக் கடத்தல் கும்பலின் முக்கியக் குற்றவாளி இன்றளவில் கலைப்பொருள் வியாபாரத்தில் பெரிய ஜாம்பவான்!

அவன் பெயர்தான் சைதன்யா பட்டேல்!

இந்தப் பெயரைக் கேட்ட நொடி தமிழச்சியின் வியப்புக் குறி அகன்று அவள்  அதிர்ச்சியானாள். காரை ஓரமாய் நிறுத்திவிட்டு மீண்டும் அந்தப் பெயரை உச்சரிக்க சொல்லி இவானிடம் கேட்க, “சைதன்யா பட்டேல்!” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.

அவளுக்கு அந்த நொடி உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. டெல்லியில் பணிபுரியும் போது ஒருமுறை அவனை நேருக்கு நேராய் பார்த்திருக்கிறாள். அத்தகைய சர்வேதேச குற்றவாளிக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவளே அவள்தானே! இப்போது அதை எண்ணும் போது எப்படியிருக்கும் அவளுக்கு!

அவள் நினைவுகள் அன்றைய சூழ்நிலைக்குள் புகுந்து கொள்ள இவான் அடுத்தடுத்து பட்டேல் குறித்து தான் கண்டறிந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவள் அவன் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் நினைப்பெல்லாம் சைதன்யா பட்டேல் குறித்து அவள் கேட்டறிந்த அதிர்ச்சிகரமான விஷயங்கள் பற்றி நினைவு கூர்ந்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவள் அருகில் இவான் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவன் புறம் தன் கவனத்தைத் திருப்ப, அப்போது அவன் சிம்மபூபதியை முதல்முதலில் பார்த்த நாளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.

சைதன்யாவிற்கு சொந்தமான நியூயார்க்கில் உள்ள பெரிய ஆர்ட் கேலரி அது. நிறைய பழங்கால பொக்கிஷங்கள் அங்கே அணிவகுத்திருக்க, அங்கே வந்திருந்த எல்லோரும் ரசனையாய் அந்த கேலரியில் உள்ள பொருட்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவற்றை எல்லாம்  பலரும் நுணுக்கமாய் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சிலர் அந்தப் பொருட்களோடு வைக்கப்படிருந்த அதனுடைய பழமையான வரலாற்றுத் தகவல்களை ஆர்வமாய் படித்துத் தெரிந்து கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் சற்றே வித்தியாசமாய் சிம்மபூபதி தென்பட்டதாகத் தெரிவித்தான் இவான். அவனுடன் அமெரிக்காவை சேர்ந்த பெண்மணிகள் சிலரும் வந்திருந்தனர். அவர்களில் ஒருத்தி மட்டும் அவன் மொழியிலேயே பேச, மற்ற பெண்கள் ஆங்கிலத்தில் அவனிடம் உரையாடினர்.

இதனைக் கேட்ட நொடி தமிழச்சிக்கு அந்தத் தமிழ் பேசும் பெண் அவன் நண்பன் நந்தக்குமாரின் மனைவி ஜெஸிக்கா என்பது புரிந்தது. அவளுடன் வந்த மற்ற பெண்கள் ஒருவேளை அவள் தோழியாக அல்லது அவள் உறவினர்களாக இருக்கலாம் என்று யூகித்துக் கொண்டாள்.

முதல் பார்வையிலேயே சிம்மபூபதியின் நுணுக்கமான தேர்ந்த வரலாற்று அறிவு இவானை வெகுவாய் ஈர்த்தது. அதுவும் அவன் தன்னுடன் வந்தப் பெண்களிடம் அங்கிருந்த சிலைகள் பொக்கிஷங்கள் குறித்து அவன் ஆங்கிலத்தில் சொன்னத் தகவல்கள் இவானை வியப்புக்குள்ளாக்கியது.

அதுவும் அங்கிருந்த சிலைகளின் காலங்கள் மற்றும் அது அங்கே கொண்டு வரப்பட்டிருக்கும் கதைகளைக் கூறினான்.

இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் தமிழகத்தின் வைஸ்ராய்களாய் இருந்தவர்கள் அங்கிருந்த  கிராம மக்களை ஏமாற்றி வெற்றிலைக்கும்  சில தானியங்களுக்காகவும் பழைமை வாய்ந்த அரிய வேலைப்பாடுடைய சிலைகளைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தான்.

அந்தத் தகவல் இவானுக்குக் கூடப் பேரதிர்ச்சிதான். இப்படி மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு இந்தியப் பொக்கிஷங்களைப் பிரிட்டிஷ்காரர்கள் போர்ச்சுகியர்கள், டச்சுக்காரர்கள் எடுத்து வந்துவிட்டதாகவும்,  இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் அவையெல்லாம் உரிமை கோராமல் விட்டுவிட்டதால் வேற்று நாட்டு அருங்காட்சியங்களில் தங்கள் நாட்டுக் கடவுளர்கள் அழகுப் பொருட்களாய் அலங்கரிக்கப்படுகின்றன என்று மிகுந்த வலியோடு அவன் அந்தப் பெண்களிடம் சொல்ல, அங்கேதான் இவானுக்கு சிம்மபூபதி தான் விசாரிக்கும் வழக்கில உதவிகரமாய் இருப்பான் என்று தோன்றியது.

தமிழச்சி இடைப்புகுந்து, “அப்போ அந்த ஆர்ட் கேலரில நீங்க சிம்மாகிட்ட பேசுனீங்களா?” என்று ஆவலாய் கேட்க, “இல்ல… பேசணும்னு நினைச்சேன்… ஆனா பேசல” என்றான் இவான்.

“ஒ! அப்புறம் வேற எங்க மீட் பண்ணீங்க?”  என்று தமிழச்சி கேட்க,

“பிரன்ஸ்ல… இட்ஸ் அன் ஆக்சிடெண்ட்டல் மீட்” என்றதும் அவள் முகம் குழப்பமாய் மாறி, “பிரான்ஸ்லயா?” என்று கேட்டாள்.

“இந்த வழக்கோட விசாரணைக்காக நான் அங்க போன போதுதான்” என்று இவான் சொல்லும் போது அவளுக்கு பிரான்ஸ் நாட்டில் தற்போது மீட்கப்பட்ட கற்சிலைகள் பற்றிய நினைவு வந்தது.

அவள் அந்த சிந்தனையில் தேங்கி நிற்க கார் சிம்மவாசல் கிராமத்திற்குள் நுழைந்தது. அந்தப் பெயர்பலகையில் இருந்த ஆங்கில வாக்கியத்தைப் படித்த இவான் ஆச்சரியத்தோடு, “சிம்மவாசல் மென்ட்(அர்த்தம்)” என்று அவளிடம் அர்த்தம் கேட்டான். அது சிம்மபூபதியின் ஒரு பாதிப் பெயரைக் குறிப்பதாகத் தோன்றவுமே அவன் வியப்படைந்து அவளிடம் கேட்டான்.

“இட்ஸ் அவர் நேட்டிவ்” என்றவள் மேலும் சிம்மவாசல் ஊரின் வரலாற்று சிறப்புகளை உரைத்துக் கொண்டிருந்தாள். அது ராஜசிம்மன் காலத்தில் பெரிய துறைமுக நகரம் என்றும் வணிகம் செய்யப் பல தேச மக்கள் அங்கே குவிந்திருந்தனர் என்று சொல்ல அவனுக்கு ஆச்சரியம் மிகுந்தது.

இப்போது வெறிச்சோடி இருக்கும் அந்தக் கடற்கரை நூற்றுக்கணக்கான கப்பல்களால் நிறைந்திருந்தது என்று அவள் சொல்ல அதனைக் கேட்ட இவானின் வியப்பு அதிகரித்துக் கொண்டே போனது.

அதோடு அவள் தத்ரூபமாய் விவரித்தவற்றை எண்ணிப் பார்த்த இவானுக்கு  அந்த இடத்தில் கப்பல்கள் பல தேங்கி நிற்க… அல்லும்பகலும் விழித்திருந்த சிம்மவாசல் என்ற பெரும் வணிகநகரம் காட்சிகளாய் அவன் மனக்கண் முன் தோன்றி பிரமிப்பில் மூழ்கடித்தது.

அந்த கற்பனையில் கார் நின்றுவிட்டதை கூட அவன் கவனிக்கவில்லை. அப்போது தமிழச்சியின் அழைப்பு அவனை உயிர்பெற செய்ய, நிமிர்ந்துப் பார்த்தவனுக்கு ராஜராஜேஸ்வரி கோவில் கோபுரம் கம்பீரமாய் காட்சியளித்தது.

அதனை வியப்போடு அவன் ரசித்துக் கொண்டே காரிலிருந்து இறங்க, தமிழச்சி அவனிடம் அந்தக் கோவில் மீண்டும் எழும்பிய வரலாறையும் அந்தக் கோவில் கருவறை சிலைக் கடலில் கிடைத்த அதிசயத்தையும் சொல்லி அவனை மேலும் வியப்புறச் செய்தாள்.

இருவரும் அப்போது ஒன்றாய் அந்தக் கோவில் கோபுர வாசலைத் தாண்டி உள்ளே செல்ல,  அந்தக் கோவில் தற்போது கட்டப்பட்டாலும் அதன் பழங்கால கட்டமைப்பு அதன் தொன்மையான வரலாற்றுக்குப் புத்துயிர் கொடுத்திருந்தது.

அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே தமிழச்சி கோவிலுக்குள் நுழைய அவனும் பின்னோடு நுழைந்தான். அதோடு அவன் கோவில் கட்டமைப்பை நுணுக்கமாய் பார்த்து தம் பார்வையால் அளந்து கொண்டு வந்தான்.

கருவறையில் விளக்கின் பிரகாசத்தில் ராஜராஜேஸ்வரி கண்கொள்ளா காட்சியாக கம்பீரமாய் வீற்றிருக்க, இப்போது தமிழச்சியின் மனநிலை தன் அம்மாவை நினைவுக் கூர்ந்தது. அந்த சிலையைப் பற்றி அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் காதுகளில் ஒலித்தது.

பல ஆபத்துகளில் இருந்துத் தங்கள் குலதெய்வமான ராஜராஜேஸ்வரிதான் தன்னைக் காத்து நின்றவள் என்று செந்தமிழ் கூறி எப்போதும் பெருமிதப்படுவார். அதுவும் வாய் ஓயாமல் நம் வம்சாவழியின் குலதெய்வம் என்று மார்தட்டிக் கொள்வார்.

அந்தக் குலதெய்வம் என்ன இப்போது கல்லாய் போனதோ? தன் தாய் ஆணித்தரமாய் கொண்ட நம்பிக்கைப் பொய்யாய் போனதோ? என்று எண்ணியவளுக்கு வழிபடத் தோன்றவில்லை. மாறாய் சிலையென நின்றவளை  நிந்திக்கத் தோன்றியது.

‘உனக்காக இவ்வளவு பெரிய கோவிலை எழுப்பி உன்னைக் கம்பீரமாய் உட்கார வைச்சதுக்கு இதுதான் நீ எங்க அம்மாவுக்கு செஞ்ச பதில்உபகாரமா?’ என்று அவள் ராஜராஜேஸ்வரியிடம் வேதனையோடு சேர்த்து சீற்றமும் கொண்டாள்.

இவான் அருகில் இருப்பதையும் மறந்து மனதிற்குள் தன் நிந்தனையை அவள் நிறுத்தாமல் தொடர, அந்த வாரத்தைகள் ராஜராஜேஸ்வரியை உலுக்கிவிட்டதோ தெரியாது?

கடவுளின் செயலோ அல்லது தற்செயலோ?

படுத்தப்படுக்கையாய் நினைவுகளைத் தொலைத்திருந்த செந்தமிழின் உடற்பாகங்கள் மெல்ல அசைந்தன. அப்போது அவர் அருகாமையில் இருந்த நர்ஸ் இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைப்புற்றாள். அவள் உடனே ஓடிச் சென்று இந்தத் தகவலை வீரிடம் கூற, அவர் அளவில்லா சந்தோஷத்தில் தன் மனைவியின் அறைக்கு விரைந்தார் .

அந்த நர்ஸின் வார்த்தைகள் உண்மை. செந்தமிழின் விரல்கள் அசைய இமைக்குள் இருந்த கருவிழிகள் அசைந்தன.

“தமிழச்சி!” என்று வீர் தன் மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டு  தொடரச்சியாய் அழைக்க அந்தக் குரல் சில நிமிட இடைவெளிக்குப் பிறகு  தமிழின் காதில் எட்டியது.

“வீ…ர்” என்று மெல்ல அவர் உதடுகளைப் பிரித்து சொல்லி விழிகளைத் திறக்க முயன்று கொண்டிருக்க,  இத்தனை நாளையப் பிரிவுக்குப் பின் கேட்ட மனைவியின் குரலில் அவர் நெகிழ்ந்தார். தாரை தாரையாய் அவர் விழிகளில் கண்ணீர் பெருக இறுக அழுத்தமாய் பற்றியிருந்த தன்னவளின் கரத்தைக் கண்ணீரால் நனைத்துக் கொண்டே முத்தங்கள் பதித்தார்.

(தோராயமாய் அறநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாஸ்கோடகாமா- கடல் வழியே இந்தியாவினை வந்தடைந்த முதல் ஐரோப்பியன் என்ற நம் வரலாற்றுப் புத்தகங்கள் கூவிக் கொண்டிருக்க, ஆயிரம் வருடங்கள் முன்பாகவே தமிழன் கடல்வாணிபத்தில் சிறந்து விளங்கினான் என்ற வரலாறு எதனால் பதியப்படாமல் போனது. ஆயிரம் வருடம் முன்பு கட்டப்பட்ட தஞ்சை கோபுரத்தில் ஓரு சீனனின் உருவச் சிலையும் ஓர் ஐரோப்பியனின் உருவச் சிலையும் இருக்கிறது. அப்படியெனில்  யார் யாருக்கான முன்னோடி? இப்படி வரலாற்றை எல்லாம் திரித்துவிடுவார்கள் என்று அறிந்தே எம் சரித்திர நாயகன் ராஜராஜசோழன் சரித்திரத்தை செதுக்கிவைத்து விட்டுப் போயிருக்கிறான்.)