பகுதி 23
தள்ளாடி தள்ளாடி நீ நடந்தாலும்
அல்லாடுகிறது எந்தன் மனம்
கோபத்தினால் அல்ல; உன் மீது
கொண்ட காதலினால் தான்
அப்படி என்ன காதல்? உன் மீது
என்று கேட்கிறார்கள் எல்லோரும்
அப்படி என்ன தான் காதல்! உன் மீது
என்று எனக்கும் தான் தெரியவில்லை????
தள்ளாடியப்படியே அவள் மீது விழுந்தவன், “பிரஜி பிரஜி” என்று விடாது சொல்லியவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றவன், மேலும் தன் பிரஜி புலம்பலை விடாமல், தள்ளாடியபடி நேரே சென்று, குளியலறைக் கதவை திறந்து விட, “ஐயோ… என்ன….. ரூமு… இப்படி இருக்கு… பிரசி…. என்ன பக்கெட் எல்லா இருக்கு… ஓ… இதா டாய்லெட்டா…” என யூகித்து, இந்தப் பக்கம் திரும்பி, அங்கு இருந்த படுக்கை அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
பிரஜீயோ வரவேற்பறையில், அவன் விட்டு சென்ற நிலையிலேயே நின்றவள், இறுக்கமாய் நின்றாள். முதன் முறையாய் தன் வாழ்க்கையை எண்ணி பயந்தாள். ‘ஆனாலும் இவ்வளவு தூரம் ஆன பின், இனி பயந்து என்ன செய்ய? இது நானாக தேடிக் கொண்ட வாழ்க்கை, நான் தான் சரி செய்ய வேண்டும். என்ன செய்ய?….’ என்று யோசித்தாள்.
இந்த நிலையிலும், அவன் மீது கொண்ட காதல், அவளை அவன் பக்கமே யோசிக்க வைத்தது. ‘அவன் என்ன தான் தவறு செய்தாலும், அவனை திருத்தி விடலாம். ஆனால் இந்த தப்பு…. மதுவை நாடியவன் மனது ஒரு நாளும் நிலையாக இருக்காதே….. அதுவும் தினம் பழக்கமாகி விட்டால், அது அவன் மண்டைக்குள் எதையும் யோசிக்க விடாதே, நல்லனவற்றை சிந்திக்க விடாதே’ என்று பயந்தாலும்,
‘இவனுக்கு, என்ன குறையாம்…? இம்… குடித்து விட்டு வந்திருக்கிறான்’ என்று அவனை நொடித்துக் கொண்டாள். அப்படி நொடித்த சமயம், மனது ‘ஏன் என்ன குறை என்று உனக்கு தெரியாதா? சற்று நேரத்திற்கு முன் தான். வந்து கேட்டானே உன்னிடம்…..’ என்று உண்மையை எடுத்துரைத்தது.
மேலும் ‘இந்த பழக்கமே தொடர்கதையாகி விட்டால்?????? அதனால் பாதிக்கப் போவது இருவரும் தான்… யோசித்துக் கொள்.’ என்று அதுவும் பயமுறுத்தியது.
அதன் பின் என்ன நினைத்தாளோ? படுக்கையறையை நோக்கி சென்றாள். அங்கு முழங்கால்கள் கீழே தொங்க, மீதி உடல் மெத்தையில் இருக்க, ஒரு பக்கமாக படுக்காமல், அப்படியே மூலவிட்டமாய் படுத்திருந்தான்.
ஆனால் அவன் வாய் மட்டும், “பிரஜி… சாரி பிரஜி….எனக்கு தெரியும் பிரஜி….. நீ நல்லவ ன்னு என் மனசு அடிக்கடி சொல்லும் பிரஜி ….. எனக்கு தெரியும் நீ நல்லவ தா பிரஜி… எனக்கு நீ வேணும் பிரஜூ… ஐ லவ் யூ பிரஜூ… லவ் யூ பிரஜூ… பிரஜூ… பிரஜூ… எனக்கு தெரியும்….” என பழையபடி சொன்னதையே திரும்ப திரும்ப, கேள்வி பதிலை மனப்பாடம் செய்யும் பள்ளி மாணவன் போல சொல்ல ஆரம்பித்தான்.
இதைக் கேட்ட பிரஜீயோ, ‘காதலிக்கும் போது, தன்னை எவ்வாறெல்லாம் ஆராதித்தான், தான் இல்லாமல் அவன் இல்லை என்றெல்லாம் உருகினானே, அந்தக் காதல் எல்லாம் உண்மை என்றால், அவன் மனதில் அந்தக் காதல் இருந்ததற்கு, கண்டிப்பாக இது சாட்சி தானே’ என எண்ணினாள்.
மெல்ல மெத்தை மீது ஏறி, இறுக்கமாகவே அவனருகே சென்றவள், அவன் சட்டைப் பட்டன்களை அவிழ்க்க ஆரம்பிக்க, “ஹே… ஏய்… யாருடா… டேய்… விடுறா…” என வேறு யாரோ தன் சட்டையை கழற்றுகிறார்கள் என தன் கையால் சட்டையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்.
பிரஜி “என்னங்க… நான் தான்…” என அமைதியாக சொன்னவள், அவன் பான்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்து மேஜையில் வைத்தாள். ஆனால் அவனோ அதற்கும் “டேய்… டேய்… பர்ஸ்ஸ… கொடுங்கடா” என பாதி போதையில், அப்படியே கைகளை அந்தரத்தில் வைத்து துழாவினான்.
பின் அவன் கைகளைப் பற்றி, தன் தோளில் வைத்து கைத்தாங்கலாக, அவனுடன் சேர்ந்து தள்ளாடிக் கொண்டே, அவனைக் குளியலறையில் சேர்ப்பித்தாள். நல்ல வேளை, குளியலறை பக்கத்தில், படுக்கையறை வாசலின் அருகே இருந்தது, இல்லை பத்தடி தள்ளி இருந்திருந்தால்… அவ்வளவு தான், அவனைக் குளியலறைக்கு நகர்த்தி செல்லவே விடிந்திருக்கும்.
குளியலறைச் சென்று அவனை அமரவைத்து, ஒரு வாலி தண்ணீரையும், ஒரு ஒரு குவளையாய் அவன் தலை மேல் ஊற்றினாள். முதலில் “ஏய்… ஏய்… வேணாம்…” என்று குளறியவன், பின் மெல்ல மெல்ல மௌனமானான்.
அதன் பின் இன்னொரு வாலி தண்ணீர் பிடித்து வைத்து, அவன் தெளிந்துவிட்டான் என்பதை, அவன் பிடித்து வைத்த பிள்ளையாராட்டம், மௌனமாய் அமர்ந்திருந்தக் கோலத்திலேயே புரிய, அவன் கைகளில் சோப்பை கொடுத்து குளிக்குமாறு சொல்லி விட்டு வெளியேறினாள்.
அவனுக்கு துடைக்க துண்டும், உடையும், அதே கையோடு வாஷ்பேஷின் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த சிறு பிளாஸ்டிக் பொட்டியில் சொருகப்பட்டிருந்த அவன் பல் துலக்கியில், பற்பசையை வைத்து, எடுத்து சென்றாள். குளியலறைக் கதவைத் தட்டி விட்டு, எட்டிப் பார்த்தவனிடம், மூன்றையும் தந்தாள். அவனும் அதை வாங்கிக் கொண்டு, குளியலறைக்குள் மறைந்தான்.
சிறிது நேரம் கழித்து, வெளியே இரவு உடையில் வந்தவன், படுக்கையறையில் அமர்ந்து தலையை துவட்டிக் கொண்டிருந்தான். பிரஜி அவனுக்கு சூடான பாலை எடுத்துக் கொண்டு சென்றாள். அதை மேஜையில் வைத்து விட்டு, அவனருகே வந்தவள், அவன் துவட்டிக் கொண்டிருந்த துண்டின் மீது கை வைத்து, அவள் அவனுக்குத் துவட்ட ஆரம்பித்தாள். சஞ்சீவ், அவள் அருகே வரவும், ஏற்கனவே குற்ற உணர்வோடு இருந்தவன், மேலும் குனிந்துக் கொண்டு, தரையைப் பார்த்த வண்ணம் தலையை துவட்டிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளின் இந்தச் செய்கையினால் அதிர்ந்து, தன் கையை அப்படியே வைத்திருந்தவன், பின் கையை எடுத்துக் கொண்டான். அவள் வந்து கத்துவாள் அல்லது அழுதுக் கொண்டே சண்டையிடுவாள் என்று எதிர்பார்த்தவன், அவள் அவற்றையெல்லாம் செய்யாமல், அதற்கு நேர்மாறாய், இப்படி தனக்கு அன்பாய் துவட்டி விடுவாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அப்படியென்றால்… அவள்… தன்னை மன்னித்து, தன் காதலைப் புரிந்துக் கொண்டாளா? என்ற நிம்மதியில், தனக்கு துவட்டி விடுபவளின் இடையை, இரு கரங்களாலும் பற்றி கட்டிப்பிடித்து, அவள் வயிற்றில், ஒரு பக்கமாய் திரும்பி முகம் புதைத்தான்.
அவனின் இந்த திடீர் செய்கையில், பிரஜி திடுக்கிட்டாலும், அவனை விலக்காமல், அவள் வேலையைச் செய்தாள். அவளின் இந்த அன்பு செய்கையில் கரைந்தவன் கண்ணில், கண்ணீரும் கரை கடந்து அவள் சேலையையும் கடந்து, அவள் மேனியில் தடம் பதித்தது.
அதை உணர்ந்தவள், தன் செயலை நிறுத்த, அவன் மேலும், அவளை இறுக்கி அவள் வயிற்றில் முகம் புதைத்து, கண்ணீரோடு “சாரி பிரஜி…” என்றான். அவன் மனதில் அவள் தப்ப்பானவள் என்று பதிந்தாலும், ஆனால் அவனின் ஆழ்மனம் அதை மறுக்க, அதற்கு சான்றாக அவளின் அன்பு செய்கைகளும், நடத்தைகளும் அமைய, அவனின் மனதிலும் அவ்வப்போது அவள் நல்லவள் தானோ? என்ற சந்தேகமும், தான், தான் எங்கோ புரிந்துக் கொள்ள தவற விட்டோமோ என எண்ண ஆரம்பித்தான்.
ஆனால் இந்த குழப்பங்களோடு நடமாடியவன், அன்றையக் காதலின் சங்கமத்திற்கு பின், அவன் மனது காற்றில் ஆடும் கொடி, ஒரு நிலையில் அது சார்ந்திருந்த மரத்திலேயே சாய்வது போல், அவளின் மீதே நம்பிக்கை கொள்ள செய்தது.
அவள் நல்லவள் தான் என்று உறுதியாய் நம்பினான். ‘நாம் தான் ஏதோ தவறாய் புரிந்துக் கொண்டோம் போல, இப்போது இதை தெளிவுப்படுத்த, ஒன்று அவன் நண்பன் இருக்க வேண்டும், ஆனால் அவன் தான் இல்லையே. ஆனால் பிரஜீயிடம் கேட்கலாம் தான்… அப்படி கேட்டால், தான் ஏன் அவளைக் காதலித்து ஏமாற்ற முனைந்தேன் என்று அவளுக்கு உண்மை தெரிந்து விட வாய்ப்பு உண்டு. அதன் பின் என்னைப் புழு போல் பார்ப்பாள். சே…’ எனத் தலையை உலுக்கியவன், ‘வேண்டாம்… அவளிடம் கேட்க வேண்டாம், நான் உறுதியாய் என் பிரஜீயை நம்புகிறேன். அவள் யாருக்கும் தீங்கு செய்திருக்கவே முடியாது’ என்று இரண்டு நாட்களாக சிந்தித்து முடிவுக்கு வந்த பின் தான், அவன் ஒரு இயல்பான காதல் கணவனாய் அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதனின் வெளிப்பாடு தான், சற்று முன் அவளை அணுகியதும், தன்னை அவள் புறக்கணித்ததும், அதை தாங்க முடியாமலோ அல்லது கோபம் கொண்டதாலோ? ஏதோ ஒரு வேகத்தில் வெளியே சென்றவன், கண்ணில் மதுபானக் கடை பட்டுவிட்டது. முன்பு நண்பர்களோடு எப்போதேனும், அரிதாக பழகிய பழக்கம், தன்னை பிரஜி புறக்கணித்ததும், அந்த ஆற்றாமையில் உள்ளே சென்று விட்டான். அந்த நிலையிலும், அவளின் அன்பான செயல், அவளின் காதலை அவனுக்கு உணர்த்தி விட, நெகிழ்ந்து கண்ணீர் விட்டான்.
தன் மேல் சாய்ந்து அழுதவனின் முகத்தை, இரு கைகளாலும் பற்றி நிமிர்த்தினாள் பிரஜி. அவன் தாடை அவள் வயிற்றிக்கு மேல் இருக்க, குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். பின் அவன் கண்களை துடைத்தவள், “இனிமே… இப்படி குடித்து விட்டு வராதீங்க, சஞ்சீவ்… ப்ளீஸ்…” எனக் கெஞ்சினாள்.
அவன் அதே நிலையில், சிறு குழந்தையாய் சரியென தலையாட்டினான். திரும்பவும் அவன் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு, அவனின் கைகளை விலக்கி, தன்னை விடுவித்து கொண்டவள், அவனுக்கு பால் டம்ளரை தந்து விட்டு, துண்டை பால்கனி கொடியில் காய வைத்து விட்டு, பால்கனி கதவைச் சாற்றினாள்.
பின் குளியலறையில், நனைந்த அவன் துணிகளை, நாளை துவைப்பதற்காக, குளியலறை கம்பியில் தொங்க விட்டு விட்டு, அவன் குடித்து முடித்த டம்ளரை வாங்கியவள், அவனைப் படுக்க வைத்தாள். சமயலறைக்கு சென்று, டம்ளரை சிங்க்கில் போட்டு விட்டு, அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, படுக்கையறைக்குள் நுழைந்து கதவை சாற்றி விட்டு மெத்தையில் வந்து படுத்தாள். வலக்கையை நெற்றியில் வைத்து, இடக்கையை வயிற்றில் வைத்து, கண் மூடி படுத்திருந்தவன் அருகில் நெருங்கி, அவனருகே படுத்தவள் புரண்டு அவன் நெஞ்சத்தில் தன் முகத்தை புதைத்தாள்.
சஞ்சீவ் மறுபடியும் இதை எதிர்பாராத சந்தோஷத்தில் “பிரஜி…..” என மயக்கும் குரலில் அழைக்க, அவள் வெட்கத்தால், மேலும் அவன் நெஞ்சத்திலேயே புதைய, தன் இடக்கையால் அவளைத் தோளோடு அணைத்து, புதைந்திருந்தவளின் தலையில் மென்மையாய் முத்தமிட்டான்.
பின்னர், வலக்கரத்தால், தன்னுள் புதைந்தவளின் முகத்தை நிமிர்த்த, அவளோ வெட்கத்தாலும், தன் கணவனின் காதலை உணர்ந்த சந்தோஷத்தாலும், அவனைப் பாராமல், நாணம் மேலிட இமைகளைத் தாழ்த்தினாள். அதில் கவரப்பட்ட சஞ்சீவ், அவள் புறம் திரும்பி, நாணத்தால் ஜொலித்த அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.
குனிந்தவனை வரவேற்கும் விதமாக, இதழ்களில் புன்னகையைத் தேக்கி, அவன் கண்களை ஊடுருவி பார்த்து, அவனை அழைக்கும் விதமாக கண்களை மூடினாள். இது போதாதா சஞ்சீவுக்கு? தன் கணவனின் காதலை உணர்ந்து, தன் சம்மதத்தை இவ்வளவு கவிதையாய் சொன்னவளின் இதழில் கலைநயமாய் கவிதையை எழுதி, மீண்டும் ஒரு காதல் அரங்கேற்றத்திற்கு முன்னுரை வரைய ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் விடியலில், கண் விழித்த சஞ்சீவ், தன் மேல் அமைதியாய் துயில் கொண்டவளைப் பார்த்து, சந்தோஷத்தோடு அவளை இறுக்கி, அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அதில் கலைந்தவள், அவனைப் பார்த்து சோம்பலாக புன்னகைத்தாள். அதில் மயங்கியவன், அவளைப் படுக்க வைத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவள் இடையில் கையையும், அவள் காலின் மேல் தன் கால்களைப் போட்டு, மொத்தமாய் அவளைச் சிறைப்படுத்தி, மீண்டும் காதலாய் துயில் கொள்ள ஆரம்பித்தான்.
தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து உறங்கும், தன் கணவனை, தன் தலையால் இடித்து, “சஞ்சீவ்…”
“இம்….”
“ஏங்க… ஆபீஸ்க்கு போகலையா? … டைம் ஆச்சு”
“இம்…” என மேலும் அவள் கழுத்து வளைவில் புதைத்து துயில் கொள்ள,
“எந்திரிங்க”
“இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்…..” எனக் கெஞ்சினான். அவள் மீண்டும் எந்திரிக்கச் சொல்ல, அவன் மீண்டும் கொஞ்ச நேரம் என்று சொல்லி சொல்லி ப்ளீஸ் போட, “அப்போ இன்னிக்கு ஆபீஸுக்கு லீவ்வா?” என்று அவன் புறம் திரும்பிக் கேட்க,
“லீவ்வா… இம்… போடலாம் தான்… அச்சோஓ…..” என்று திடீரென கத்தி எழுந்தான்.
பிரஜீயோ புரியாமல் விழிக்க, “என்னங்க…. என்னாச்சு?”
“பிரஜி… டைம் என்ன ஆச்சு ?…. எட்டா… ஐயோ இன்னிக்கு ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமே… முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, மறந்து போச்சு” என அவனே கேள்வி கேட்டு, அவனே பதிலும் சொல்லி எழுந்து அவசரவசரமாகக் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.
அவளும் புன்னகைத்துக் கொண்டே, தன்னைச் சீர்ப்படுத்திக் கொண்டு, போர்வையை மடித்து வைத்து, மெத்தை விரிப்பையும் சரிப்படுத்தினாள். பின் இரண்டு நிமிடத்தில் வெளியே வந்தவனிடம், “என்னங்க, நானும் குளிச்சிட்டு வந்திர்றேன் அஞ்சு நிமிஷத்துல, பால்ல மட்டும் அடுப்புல வச்சிருங்களேன்… ப்ளீஸ்…” என அவன் நாடியைப் பிடித்து, கண்களை சுருக்கி கெஞ்சி விட்டு, அவன் பதில் அளிக்கும் முன், மாற்றுடையோடு தயாராய் நின்றவள், குளியலறைக்குள் புகுந்தாள்.
அவன் இடுப்பில் கட்டிய துண்டோடு போய், வெளியே இருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்து, பால் குக்கரில் ஊற்றி, எவ்வளவு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று, குளித்துக் கொண்டிருந்த பிரஜீயிடம் கத்திக் கேட்டு, அவள் சொன்னதைச் செய்து, அடுப்பில் குக்கரை வைத்து விட்டு, உடை உடுத்த சென்றான்.
சரியாய் அவன் உடை உடுத்தி, கண்ணாடி முன் தலை வார ஆரம்பிக்கும் போது, பிரஜி சுடிதார் அணிந்து, தலைக்கு குளித்து, துண்டை தலையில் சுற்றி கொண்டையிட்டு வெளியே வந்தாள். அவளைப் பார்த்தவன் கண் சிமிட்ட, நாணத்தோடு அவன் அருகே சென்று அவனை இடித்து பின்னே தள்ளி விட்டு, அவனுக்கு முன் நின்று கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் பொட்டிட்டு, தலை வகிட்டில் குங்குமம் வைத்தாள்.
சஞ்சீவ் அவ்வளவு நேரமும் மெய்மறந்து அவளையே பார்த்தவன், அவள் தன்னை இடித்து முன் செல்லவும், அதையும் மெய் மறந்த நிலையிலேயே நகர்ந்து, அவள் பின்னே நின்று கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான். குங்குமத்தை வைத்து விட்டு நிமிர்ந்தவள், தன்னையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்து அவளும் கண் சிமிட்ட, அதில் கலைந்து சுய நினைவு அடைந்தவன், அவளை அப்படியே இடையோடு கட்டி அணைத்தான்.
மேலும் கண்ணாடியில் அவளைப் பார்த்துக் கொண்டே, அவள் கழுத்து வளைவில் குனிந்து, அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, அவள் அழகாய் வெட்கப்பட்டாள். பின் இடது கழுத்து வளைவிற்கு மாறி, அந்த கன்னத்திலும் முத்தம் கொடுக்க, அவளும் மயங்கி கண் மூட, அவன் “ஹே… இதுக் கூட நல்லா இருக்கே” என்று கூற, கண் மூடியவள், மெல்ல கண் திறந்து, நெற்றி சுருக்கி, கண்ணாடியிலேயே அவனைப் பார்த்து “எது?” என்றாள்.
“அங்க பாரேன்…” என்று கண்ணாடியைக் காட்டி, “நீ எவ்ளோ அழகா வெட்கப்படுறன்னு இந்த கண்ணாடி அழகா காட்டுது. நேருக்கு நேரா பார்த்தா கூட, தல குனிஞ்சு உன் முகத்த மறச்சிக்குற, ஆனா இங்க தல குனிஞ்சாலும் நல்லா தெரியுது” என்று கண்ணடித்து விட்டு, மீண்டும் குனிய, அவள் கண்ணாடியைப் பார்க்காமல் வெட்கத்தால் தலைக் குனிந்து, அவன் பக்கம் திரும்ப, அவனோ “ஹே… அத விட, இது இன்னும் வசதியா போச்சு எனக்கு” என்று அவள் இதழ் நோக்கி குனிய, அதே சமயம் குக்கரின் விசில் சத்தம் அடிக்க, திடுக்கிட்டான்.
அதிர்ந்தவனைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, அவனை விட்டு விலகி, சமயலறைக்கு ஓடி விட்டாள். பின் கிளம்பிக் கொண்டிருந்தவனிடம், ஒரு பெரிய டம்ளர் நிறைய பாலோடு வந்து நின்றாள். அவனோ “எனக்கு டீ மட்டும் போதும் பிரஜி, டைம் ஆச்சு” என சொல்லிக் கொண்டே சட்டையை டக் இன் செய்ய, அவளோ “தெரியும் உங்களுக்கு டைம் ஆச்சுன்னு, சோ டிபனுக்கு பதிலா, இந்தாங்க…” என ஒரு தட்டு நிறைய பிஸ்கட்டை வைத்துக் கொடுக்க,
சஞ்சீவ் “என்ன இது?”
“சிம்பிளான ஹெல்தியான டிபன்” எனச் சொல்லிக் கொண்டே, கிளம்பிக் கொண்டிருந்தவன் வாயில், பிஸ்கட்டை பாலில் முக்கி வைத்தாள். இப்படியே அவன் டை கட்டும் போதும், பெல்ட் போடும் போதும், கண்ணாடியில் அவன் தன்னை சரிபார்க்கும் போதும், பிரஜி அவன் பின்னையே சென்று முன்னர் போல பிஸ்கட்டை ஊட்டி விட்டாள். இப்படியே ஏழெட்டு பிஸ்கட்களை உள்ளே தள்ளியவன், மீதி பாலையும் குடித்து விட்டு, “தேங்க்ஸ் பிரஜி” என்றான். ஏதோ தற்சமயம் பாதி வயிறு நிரம்பியிருந்தது.
மீட்டிங் என்னவோ இரண்டு மணிநேரம் தான், அதற்கு மேல் செல்லாது என்று சஞ்சீவ் விவரம் சொன்னதால், இப்படி பாலும் பிஸ்கட்டும் சாப்பிட்டால், கொஞ்சம் பசி தாங்கும் என்றெண்ணி தான் கொடுத்தாள். ஏனென்றால், இவள் கல்லூரி படிக்கும் போது, கல்லூரிக்கு எழுந்து செல்ல நேரமாகி விட்டால், இப்படி தான் பிஸ்கட்டும் பாலும் சாப்பிட்டு விட்டு, லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு ஓடி விடுவாள்.
தான் பெண் தனக்கு போதும், ஆனால் அவன் ஆண், அதுவும் வேலைக்கு செல்பவன், தற்சமயம் பசி தாங்கும் தான், ஆனால் அப்புறமாக சாப்பாடு உட்கொண்டால் சரியாகி விடும் என்றெண்ணி, அவனிடம் பிரஜி “என்னங்க, இது மீட்டிங் வரைக்கும் தாங்கும், அப்புறமா டிபனோ, சாப்பாடோ வாங்கி சாப்பிட்ருங்க” என அக்கறையாய் சொல்ல,
அவனும் “சரி பிரஜி… நீயும் டிபன் செஞ்சு சாப்பிடு, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்திர்றேன்” என்று அவளை இறுக்கி அணைத்து, நெற்றியில் இதழ் பதித்து, சிரிப்போடு விடைப்பெற்றான்.
அவளும் சிரித்துக் கொண்டே “பார்த்து போயிட்டு வாங்க” என்று விடைக் கொடுத்தாலும், அவள் மனதிற்குள் ஏனோ பயம் சூழ்ந்தது. ஒரு வேலை, சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அவசரவசரமாய் சஞ்சீவ் கிளம்பியதால், வேகமாய் வண்டியில் செல்வானோ என்ற கலக்கமோ?????????
மாயம் தொடரும்……