இது என்ன மாயம் 25

இது என்ன மாயம் 25

 

பகுதி 25

உன் மீதான என் காதலை

நான் உணர்ந்து

மகிழும் வேளையில்

என் மீதான உன் காதலை

பிரிக்க எண்ணுகிறாயே… என்னுயிரே….

 

கடவுளுக்கு ஒரு நொடி என்பது ஒரு ஆண்டாம், அது போல தான் காதல் வந்த காதலர்களுக்கும், மாதங்களும், வருடங்களும் ஒரு நொடி போல தான் செல்கிறது. அது தான் காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்கிறார்களோ!

காதல் வந்தால் அதுவும் காதல் செய்யும் இருவரும் அருகருகே இருந்தால், ஒரு நாள்… முழு பொழுதும், ஒரே ஒரு நொடியைப் போல பஞ்சாய் பறந்து விடும். அது போல தான் சஞ்சீவுக்கும் என்னவோ இப்பொழுது தான் ஞாயிற்றுக்கிழமை விடிந்தது போல் இருந்தது, அதற்குள் புதன் கிழமை விடிந்து விட்டதே எனப் புலம்பிய படி அலுவலகம் கிளம்பினான்.

மேலும் பிரஜீயிடம் “ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாத, சிம்பிள்ளா ஏதாவது பண்ணுனா… கேக்குறதே இல்ல, புருஷன் பேச்ச கேட்போம்னு… கொஞ்சமாவது கீழ்படிதல் இருக்கா… ராஸ்கல்” எனச் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.

ஆனால் பிரஜீயோ புன்னகைத்துக் கொண்டே அவனைச் சமாளித்தாள். இன்று பிரஜி அவனுக்காக, அவனுக்கு பிடித்த சாம்பார், சோயா பருப்பு கூட்டு, பீன்ஸ் பொரியல் என விதவிதமாய் சமைத்துக் கொடுத்து அனுப்பினாள். அது தான் அவன் அவளைச் செல்லமாய் சலித்துக் கொண்டிருந்தான்.

பின் “சரி சரி… உடம்ப பார்த்துக்கோ பிரஜி… இனி ரெஸ்ட் எடு, நான் சாயந்திரம் சீக்கிரம் வந்திடுறேன்… இம்…” எனச் சொல்லி அவளை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு விட்டு கிளம்பி சென்றான்.

இப்படியே ஒரு மாதமும் காற்றாய் கரைந்துப் போக, காதல் புறாக்களாய் சிறகில்லாமலே பறக்கும் மனநிலையில், இருவரும் மகிழ்ந்து இருந்தனர்.

அன்று மாதத்தில் முதல் வாரம் என்பதால், எப்பொழுதும் போல், சஞ்சீவும் பிரஜீயும், அந்த மாதத்திற்கான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க அருகே இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு செல்ல முடிவு செய்தனர். சஞ்சீவ் அன்று பெர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரம் வருவதாக சொல்லி சென்றான்.

முன்பும், இது போல இருவரும், சென்று தான் வாங்குவார்கள். அப்பொழுதெல்லாம், பிரஜி வீட்டிற்கும், தனக்கும் தேவையானதை, அவள் தனியே ஒரு தள்ளுக் கூடையிலும், சஞ்சீவ் தனக்கு வேண்டியதை, அவன் ஒரு தனி தள்ளுக் கூடையிலும், தனிதனியே சென்று வாங்கி, ஆனால் இரண்டுக்கும் சேர்த்து, ஒன்றாக பில் போட்டு பணம் செலுத்தி வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் போன மாதத்தில் இருந்து, இருவரும் ஒன்றாகவே சென்று, ஒன்றாகவே வீட்டிற்கும் அவர்களுக்கும் தேவையானதை வாங்கிக் கொண்டு வந்தனர். பிரஜி ஆஃபர் பார்த்து வாங்கினாலும், நல்ல நல்ல பொருட்களாய் தேடி தேடி குறைந்த விலையில் தரமாய் வாங்கி, அவர்களின் வரவு செலவுக்குள் வாங்குவதை பார்த்து சஞ்சீவே மெச்சிக் கொண்டான்.

எப்படி இவளுக்கு இதெல்லாம் தெரியும்? என ஆச்சரியப்பட்டு அவளிடமே கேட்க, அவளோ “இதெல்லாம் யாராவது சொல்லியா தருவார்கள்? நாம்மா கற்றுக்கொள்வது தாங்க” என்று சமாளித்தாள். பின்னே ‘நீங்கள் இவ்வளவு தானே சம்பாதிக்கிறீர்கள், அதற்குள் வாழ பழகிக் கொண்டேன்’ என்று சொன்னால், அவன் மனம் வருந்தும் என்று அவளுக்கு தெரியும். மேலும் என்னமோ அவள் பணத்திலே வளர்ந்தவள் மாதிரியும், அவனிடம் வந்து கஷ்டப்படுவது போல அவன் நினைப்பான் என்று சரியாக யூகித்தாள்.

அதே போல தான், அவனும் நினைத்தான், நினைத்தது மட்டுமல்ல, அவளிடமே “ஏன் பிரஜி, கஷ்டமா இருக்கா? இப்படிப் பார்த்து பார்த்து செலவழிக்கிறது?” என்று கேட்டே விட்டான்.

 

“அச்சோ… சஞ்சீவ், நான் என்ன ராஜா வம்சத்துல பிறந்து வளர்ந்த மாதிரி பேசுறீங்க? எனக்கும் பணத்தோட அருமை தெரியும். நாங்க சின்னப் பிள்ளையா இருக்கும் போது, இப்படி தான் இருந்தோம். அப்புறம் தான், அப்பா நல்லா சம்பாதிச்சு, சொந்த வீடு கட்டி, கொஞ்சம் வசதியா ஆனோம். ஓகே வா? சோ… எனக்கு இப்ப எந்த பிரச்சனையும் இல்லங்க. அம் சோ… ஹாப்பி. போதுமா… இல்ல … வேற எதுவும் வேணுமா?” என அவனை பார்த்து கண்ணடித்து, அவன் கவனத்தை திசைத் திருப்பினாள்.

அவனும் “ஹே… பொது இடம்னு பார்க்கிறேன்… இல்ல நீ முடிக்கிறதுக்கு முன்னாடியே உனக்கு இந்நேரம் பதில் கொடுத்திருப்பேன்” என அவளைப் பார்த்து காதலாய் மிரட்டினான்.

மேலும் “நீ ராஜ வம்சம் இல்லடி, தேவதை வம்சத்துல பிறந்து, எனக்காக வளர்ந்தவ டி…” என்று அவளை ஆழமாய் பார்த்து சொன்னான். அதில் வெட்கம் மேலிட, கன்னம் சிவந்தாள் பிரஜி.

பணத்தால் வரும் மகிழ்ச்சியை விட, தன் கணவனால், அவன் தனக்காக செய்யும் சிறு சிறு செயலாலும், உதவிகளாலும், அவள் நினைப்பதை அவன் நடத்திக் காட்டும் சாமர்த்தியத்தாலும், அவளைப் புரிந்துக் கொண்டு செயல்படும் பாங்கில் வரும் மனநிறைவே, ஒரு பெண்ணிற்கு, நிறைய சந்தோஷத்தை தரும் என்பதை பிரஜி மூலம் சஞ்சீவ் உணர்ந்திருந்தான்.

அன்று மாலையும் வந்தது, சஞ்சீவும் டான் என்று சொன்னது போல நான்கிற்கே வந்து நின்றான். அப்போது தான் மதிய தூக்கத்தில் இருந்து விடுப்பட்டவள், அப்படியே முழிப்போடு கண்ணை மட்டும் மூடி, ஓய்வாய் படுத்திருந்தாள். கட்டிலில் படுத்திருந்தவளைப் பார்த்தவன், அவள் அருகே படுத்து, அவளை இடையோடு அணைத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவள் காதில் “ஹே… பொண்டாட்டி இன்னும் எந்தரிக்கலையா?” என்று கேட்டான்.

ஏனோ அன்று அவளுக்கு தூக்கம் தூக்கமாய் வந்தது. அதனால் சிறிது எரிச்சலாகவே “ம்ச்சு… விடுங்க… தூக்கமா வருது” என்று சிணுங்கினாள்.

ஆனால் அவனோ “இதே டயலாக் தான் இப்பவும் சொல்ற, நைட்டும் சொல்ற” என்று அவன் குறும்பாய் சொன்னதில், “சீ… உங்கள…” என அவனைத் தள்ளி விட, அந்தக் கரத்தை பற்றிக் கொண்டே, தானும் எழுந்து, அவளையும் எழுப்பி விட்டான்.

பின் அவளைச் சீண்டிக் கொண்டே, இருவரும் கடைக்கு கிளம்பினார்கள். பிரஜி, அவன் தனக்கு முதன் முதலில், பெங்களூர் வந்த பின் வாங்கி தந்த, அழகிய மயில் கழுத்து வர்ணத்தில் அங்கங்கே ஆரஞ்சு நிற பூக்களை தெளித்தார் போல் இருந்த சேலையை அணிந்தாள். அவளைப் பார்த்தவன், மேலும் ஒரு பத்து நிமிடம், அவளுடன் செலவழித்து, தாமதித்து பின் கிளம்பினான்.

இருவரும் கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி பில் செலுத்தும் கவுன்டர்க்கு வர, அப்பொழுது தான் சஞ்சீவ் தனக்கு ஷேவிங் கிரீம் வாங்க மறந்து விட்டது தெரிய, தன்னருகே நின்ற பிரஜீயிடம் “பிரஜி ஷேவிங் கிரீம் எடுக்க மறந்துட்டேன், நீ இந்த லைன்ல நில்லு, நான் போய் எடுத்திட்டு வந்திர்றேன். இல்லேன்னா கூட்டம் வந்திரும்” என்று அவளை அங்கே நிறுத்தி விட்டு, மீண்டும் உள்ளே சென்றான்.

ஆண்களுக்கான பொருட்களை விற்கும் பகுதிக்குள் நுழைந்து தேடும் பொழுது, சஞ்சீவ் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே ஒருவன் மீது இடித்து விட, இருவரும் “சாரி” என சொல்லி ஒருவருக்கொருவர் முகம் பார்க்க,

“ஹே… அரவிந்த்… எப்படி டா இருக்க?” எனச் சந்தோஷமாக மற்றவனிடம் வினவினான் சஞ்சீவ்.

அரவிந்த் என்ற அவனும் “ஹே… சஞ்சீவ்… வாட் எ சர்ப்ரைஸ்? இம்… நல்லா இருக்கேன் டா, நீ எப்படி இருக்க?” என்றான்.

“இம்… நல்லா இருக்கேன் டா, இங்க தான் வேல பார்க்கிறேன்… நீ?”

“நான் இங்க ஒரு ப்ராஜெக்ட் விஷயமா வந்தேன் டா. நான் ஹைதராபாத்ல வேல பார்க்கிறேன். எங்க??? வேலைக்கு போனதுக்கப்புறம் உங்கள எல்லாம் பார்க்கவே முடியல. அப்புறம்…” எனச் சந்தோஷமாக ஆரம்பித்து பேசியவன், அப்புறம் என சிறிது தயங்கினான்.

ஆனாலும் “அப்புறம்… உனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு…. வருண் சொன்னான் டா” எனத் தயக்கமாய் சொன்னான். ஏனென்றால் சஞ்சீவின் திருமணம் நடந்த விதத்தைக் கேள்விப்பட்டவர்கள், இப்படி தான் தயக்கமாய் விசாரிப்பார்கள்.

மேலும் அந்த வருண் என்ற நண்பனுக்கு சஞ்சீவின் காதல் பற்றியும், அவன் பிரஜீயைக் காதலித்த நோக்கமும் தெரியும். இவன் தான் பிரஜீக்கு உதவியவனும் கூட, சஞ்சீவ் பிரஜீயைத் திருமணம் புரிந்ததில் நிம்மதி அடைந்த நல்லவனும் கூட என்றும் சொல்லலாம்.

இந்த அரவிந்தன் என்பவனைப் பற்றி நாம் தெரிந்துக் கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால், இவன் தான் சஞ்சீவின் வாழ்க்கையில் முன்பும் சரி, இப்பொழுதும் சரி, திருப்பு முனையாக அமைகிறான். இவர்கள் வாழ்கையில் பார்த்த குமார், இந்த அரவிந்தன், வருண், சஞ்சீவ், மேலும் இருவர் என எல்லோரும் நண்பர்களாக இருந்தவர்கள்.

குமார் பிரஜீயை காதலித்த விஷயம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும், அரவிந்தனுக்கு, கூடுதலாக குமார் தான் அவளைக் காதலிக்கிறான், ஆனால் அவள் இவனைக் காதலிக்கவில்லை என்று தெரியும். ஏனென்றால் ஒன்றிரண்டு சமயம் குமார், பிரஜீதாவைப் பார்க்க, குமாரோடு அவனும் சென்றிருக்கிறான்.

அன்று குமாரை, பிரஜீதா ஏதோ ஒரு படபடப்பில் திட்டி தீர்த்த பின், அவன் சோகமே வடிவாக வீட்டிற்கு சென்றான். ஆனாலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு தான் இருந்தான். அந்தச் சமயம் தான் அரவிந்தன் அவனைச் சந்தித்தான். அப்பொழுது குமார் தன் மனதை அழுத்திய, தன் காதல் பிரச்சனையைச் சொல்ல ஆரம்பித்தான்.

அதைக் கேட்டு முடித்த அரவிந்தனும் “என்னடா இவ்வளவு தூரம், அந்தப் பொண்ணு சொல்லியும், நீ இவ்வளவு பிடிவாதமா இருக்க” என்றான்.

“என் காதல் உனக்கும் புரியலையா டா” எனக் குமார் வினவ, அவனைப் பார்க்கவும் பாவமாக இருக்க, உடனே அரவிந்தன் யோசித்து ஒரு யோசனையைச் சொன்னான்.

“இம்… உன்ன பார்த்தாலும் பாவமா தான் இருக்கு… சரி, இப்படி பண்ணு, ஏதாவது ப்ளாக் மைல் மாதிரி, அதாவது நீ இல்லேன்னா என்னால வாழ முடியாதுன்னு. உன் காதலின் அளவ அவளுக்கு உணர்த்தி காட்டேன். எத்தன படம் பார்த்திருக்கோம், ஹீரோயின் லவ் பண்ணலேன்னா, ஹீரோ மேல இருந்து விழுந்திருவேன் மிரட்டுவான்ல, அது மாதிரி நீ ஏதாவது சும்மா பண்ணு, அவ கண்டிப்பா உன்ன தேடி வருவா டா” என்றான்.

குமாரும் யோசித்தான், தன் நண்பன் சொன்னதை ஆராய்ந்தவன், அவனும் அதே போல செய்ய ஆயத்தமானான். ஆனால் சும்மா எதற்கு செய்ய வேண்டும், நிஜமாகவே தன் காதலை நிரூபிக்க, உண்மையாகவே தன் காதலின் ஆழத்தை உணர்த்தினால் என்ன? என்று தன் அன்னை சாப்பிடும் தூக்க மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

மாத்திரையை சாப்பிட்டு விட்டு, கடிதம் எதுவும் அவன் எழுத வில்லை, எப்படியும் இங்கிருக்கும் தோழி மூலம் பிரஜீதாவுக்கு தகவல் சென்று சேர்ந்து விடும். எப்படியும் தான் மருத்துவமனையில் இருக்கும் போது வந்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு இருந்தான். ஆனால் பாவம் குமார் என்ன முன்னபின்ன தற்கொலைக்கு முயன்று பார்த்தவனா? அதனால் அவன் தூக்க மாத்திரைகளைக் கூடுதலாக எடுத்து விட்டான். இது தான் இளங்கன்று பயமறியாது என்று சொல்வதா?

பின் அவனின் மயக்க நிலையைப் பார்த்து, அவன் தந்தையும் தாயும் மருத்துவமனையில் சேர்க்க, ஆனால் நேரம் கடந்து விட்டதால், மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் அந்தச் சமயம் பிரஜீயின் தோழி, அவன் தற்கொலைக்கு முயன்ற அன்று தான் ஊருக்கு சென்றிருந்தாள். ஒரு வாரத்திற்கு பின் தான், அவளும் விஷயம் கேள்விப்பட்டு, பிரஜீயிடம் இதைச் சொல்ல பிரஜி மிகவும் வருத்தமடைந்தாள்.

அவன் ஒரு மாதமாய் வரவில்லை என்று அவனைப் பற்றி, நேற்று தான் எண்ணியிருந்ததற்கு, இன்று அவன் இறந்து ஒரு வாரமாயிற்று என்று இவள் சொல்கிறாளே, ஒரு வேளை தன்னால் தான் இப்படியாயிற்றா? என்று எண்ணி ரொம்பவும் வருத்தமடைந்தாள். எதிலும் அவளால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை, பின் தோழிகள் தான் அவளைத் தேற்றினார்கள்.

“ஏய் பிரஜி… அவன் ஏன் அப்படி செய்தான்னே யாருக்கும் தெரியல பா, நீ ஏன் உன்னால தான் நினைக்கிற, மே பீ அவங்க குடும்பத்துல கூட ப்ராப்ளம் இருக்கலாம்ல பா” என்று சமாதானப்படுத்தி, அவளைத் தேற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். அவளும் நாட்கள் செல்ல செல்ல, அதை மறந்து விட்டாள்.

அதன் பின், நண்பனின் சாவுக்கு தானே வழி வகுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வில், அரவிந்தன், குமார் இறந்த பின், அவன் அந்த பக்கம் செல்வதும் இல்லை, அவன் நண்பர்களை சந்திக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு வளாக நேர்முக தேர்வில், வேறு ஊரில் வேலை கிடைத்து விட, சென்றும் விட்டான். அரவிந்தன் சும்மா பொய்யாக நடிக்கச் சொன்னதற்கு, ஆனால் அவன் இப்படி உண்மையாகவே செய்வான் என்று அவன் எதிர்ப்பார்க்க வில்லை.

பின் ரொம்ப நாள் கழித்து, சந்தித்த தன் நண்பன் வருணிடம், இதைப் பற்றி கூறி தன் குற்ற உணர்வில் இருந்து விடுப்பட்டு, மனபாரத்தைக் குறைத்தான். அப்போது தான் வருணும் சஞ்சீவின் திருமணத்தையும், அவன் தவறாய் புரிந்துக் கொண்டு, பிரஜீயை திருமணம் புரிந்த விதத்தையும் கூறியிருந்தான். மேலும் “டேய்… இத முதலேயே சொல்லிருக்கலாம்ல டா, சஞ்சீவ் இப்படிப் பண்ணிருக்க மாட்டான்” என்று அவன் மீது வருண் கோபமும் பட்டான்.

 

அதை மனதில் வைத்து தான், அவனுக்கு “கல்யாணமாகி விட்டது போல” எனப் பொருள் பட வினவினான். சஞ்சீவோ “இம்… ஆமா டா”

மேலும் அரவிந்தன் நடந்தவற்றை விவரித்து, “பிரஜீதா சிஸ்டர்க்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல டா, நீ உன்னோட லைப்ப எந்த கன்ப்யூஷன்னும் இல்லாம லீட் பண்ணு டா” எனச் சொல்லி முடித்தான்.

“எனக்கு தெரியும் டா, பிரஜீக்கு இதுல எந்தச் சம்பந்தமும் இல்லன்னு, சரி விடு, நடந்தது நடந்திருச்சு, நீயும் இத நினச்சு கவலைப்படாத டா, முடிஞ்சா குமாரோட பெற்றோர்களைப் போய் பாரு டா” எனக் கூறி விட்டு, “சரி டா, எனக்கு டைம் ஆச்சு, நான் கிளம்பறேன்” என்று கிளம்பி, பிரஜீயைத் தேடி சென்றான்.

ஆனால் பிரஜீயோ ஷேவிங் கிரீம் எடுக்கப் போனவனை இன்னும் காணோமே என்று, கவுன்ட்டர் அருகே நின்ற கடைக்காரப் பெண்ணிடம், தன் தள்ளுக் கூடையைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு, அவனைத் தேடி சென்றாள். தூரத்திலேயே அவன் யாருடனோ பேசுவதைப் பார்க்கவும், சற்று தாமதித்து, ‘போகலாமா? வேண்டாமா?’ என்று யோசித்து அங்கேயே நின்று விட்டாள்.

பின் சஞ்சீவோடு பேசிக் கொண்டிருந்த அரவிந்தனைப் பார்த்தவள், எங்கேயோ இவரை பார்த்தது போல உள்ளதே என எண்ணி, மேலும் அந்த வரிசையில் இருந்த தடுப்பின் ஒரு முனையில் நின்றிருந்தவர்களின் அருகில் செல்லப் போக, ஆனால் அந்த தடுப்பின் மறுமுனையிலேயே நின்று விட்டாள்.

“குமார்” என்ற பெயரை கேட்கவும், அவளுக்கு அரவிந்தனை குமாரோடு பார்த்த ஞாபகம் மூளைக்குள் வந்து விட, அங்கேயே தனிச்சையாய் நின்று விட்டாள். மேலும் அவர்கள் பேசிய உரையாடல்கள், தானாய் அவள் காதில் விழ, விழ அவள் இதயத்தினுள் ஏதோ செய்தது.

கடைசியாய் அரவிந்தனின் “நீ உன்னோட லைப்ப எந்த கன்ப்யூஷன்னும் இல்லாம லீட் பண்ணு டா” என்ற வாக்கியத்தைக் கேட்டவுடன், அவள் கண்ணில் இருந்து கண்ணீர் பெருக தயாராய் இருக்கவும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். சஞ்சீவின் பதிலைக் கேட்காமலே சென்று விட்டாள். இது தான் விதி என்பார்கள் போல?

கவுன்டரில் சஞ்சீவ் அவளுடன் சேர்ந்து, பில் கட்டும் போதும் சரி, வீட்டிற்கு செல்லும் போதும் சரி, குனிந்த தலையை அவள் நிமிர்த்தவே இல்லை. இதை கவனிக்கும் நிலையில் சஞ்சீவும் இல்லை. இருவருமே அமைதியாய் அவரவர் சிந்தனையில் வீட்டை அடைந்தார்கள்.

 

மாயம் தொடரும்…..

error: Content is protected !!