இது என்ன மாயம் 29

இது என்ன மாயம் 29

 

பகுதி 29

நின்னிதழ்கள் என்னிடம் சண்டையிட்டாலும்

என்னிதழ்கள் மீது இன்னும் நேசமாய் தானிருக்கின்றன…

நின்னிதயம் என் மீது வெறுப்பை சுமந்தாலும்

இக்கணத்தில் ஒன்றை கூற விளைகிறேன்

நின்னிதயம் வெறுப்பாய் மண்டியிருந்தாலும்

அதிலும் நானே நிரம்பி வழிகிறேன் என்று…….

கண்கள் கூட கவிதைப் பேசும் என்று கேள்வி பட்டிருக்கிறான் சஞ்சீவ். ஆனால் முதன் முதலில் கண்கள் நன்றியும் தெரிவிக்கும் என்பதை மனைவியின் கண்கள் மூலம் இன்று அறிந்தான்.

பிரஜி, அவனைப் பார்த்து கண்ணீர் வழியும் கண்களை இறுக மூடி, அவனைப் பார்த்து திறந்து அவனுக்கு நன்றி தெரிவித்தாள். தன் மாமனார் குனிந்து, தன் மடியில் முகம் புதைத்த மகளைப் பார்த்திருக்க, சரஸும் உள்ளே சென்றிருக்கும் தைரியத்தில், சஞ்சீவ் பதிலுக்கு, கண்ணைச் சிமிட்டி சிரித்தான். ஆனால் அவள் இருந்த நிலையில், அதைப் பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை.

பின்னர், ராம் தன் மகளிடம் “மாப்பிள்ள சொன்னார் மா விஷயத்த, ரொம்ப சந்தோஷம் மா” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வணக்கம் அண்ணா, நல்லா இருக்கீங்களா?” எனத் தண்ணீர் நிறைந்த சொம்பை நீட்டினார் சரஸ்.

ராமும் “வணக்கம் மா, நல்லா இருக்கேன் மா, நீங்க நல்லா இருக்கீங்களா” எனச் சொம்பை வாங்கி, தண்ணீர் பருகினார். பின் “பிரஜி… நீ உட்கார்ந்திட்டு இருக்க, அத்தத் தண்ணீர் கொண்டு வர்றாங்க பார். எந்திரி, போ… போய் அப்பாக்கு டீ போட்டு கொண்டு வா” என அவள் கண்ணீரைத் தடை செய்யும் பொருட்டு சொன்னாலும், பெரியவர்களை வேலை வாங்கக் கூடாது என்று மறைமுகமாக கூறி, அவளை எழுப்பி விட்டார்.

“இருக்கட்டும், பிள்ளைத்தாச்சி பொண்ணு தான, நான் போய் போட்டு எடுத்திட்டு வர்றேன்” என்று சரஸ் சொன்னதிலேயே, தன் மகள் நன்றாக தான் இருக்கிறாள் என்று உணர்ந்து விட்டார். எனினும், கூட மாட உதவி செய்ய, பிரஜி சரஸின் பின்னே செல்ல தான் செய்தாள்.

ராம், தன் மகள் நல்ல குடும்பத்தில், நல்ல மனிதர்களோடு தான் வாழ்கிறாள் என்பதை உணர்ந்ததற்கு இரண்டு காரணம். தற்பொழுது சரஸ் பேசிய பேச்சும், அன்பான உறவு முறை அழைப்பும் ஒரு காரணம் என்றால், தான் சென்னையில் இருக்கும் போது, சஞ்சீவ் அவன் நண்பன் மூலம், ராமை பார்த்து அவரைப் பற்றி தெரிந்துக் கொண்டு, அவன் மூலமே தான் பேச விரும்புவதாகவும், அதனால் அவரின் ஒப்புதலோடு, அவரின் அலைப்பேசியின் எண்ணை வாங்கி தந்தான்.

பின் வழக்கம் போல, எல்லா காதலர்களும் சொல்லும் “எங்களை மன்னித்து விடுங்கள், ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திருமணம் செய்துக் கொண்டோம்” என்ற வசனத்தையே சொல்லி அவரைச் சமாதானம் செய்தான்.

மேலும் பிரஜி தாய்மை அடைந்திருப்பதாகவும், அதனால் தயவு செய்து அவளைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தான். தானே சென்னைக்கு வந்து அழைத்து வந்து விடுவேன், ஆனால் இந்த மாதிரியான நேரத்தில், பிரஜீயை தனியே விட்டு வருவது உசிதம் இல்லை என்று சொல்லவும், ராம் “இருக்கட்டும் மாப்பிள்ள, நானே கிளம்பி வந்திர்றேன், வீட்ல சூழ்நிலைய பார்த்திட்டு, என்னிக்கு வரேன்னு உங்களுக்கு சொல்றேன்” என்றார்.

சஞ்சீவும் “மாமா… அத்த… அவங்களையும்…” என அவன் முடிக்கு முன்னே “சொல்றேன் மாப்பிள்ள, அவங்க அம்மாக்கிட்டேயும், ஆனா உடனே சொல்ல முடியாது. நான் வேலைக்கு போறவன், நாலு பேர பார்க்கிறேன், பேசுகிறேன், இதே மாதிரி சில வீட்லையும் நடந்திருக்கு, அவங்களையும் சில பேர், பிள்ளைங்க சந்தோஷம் முக்கியம்னு ஏற்றுக்கிறதையும் பார்த்து, உலகம் மாறுதுன்னு புரிஞ்சுக்கிறேன்.

ஆனா அவ வீட்டுக்குள்ளயே, நாலு சுவத்துக்குள்ளேயே, நானும் பிள்ளைங்களும் தான் உலகம்னு வாழ்ந்தவ, இப்பவும் அப்படி தான் வாழுறா, அதுனால தன்னோட உலகத்துல இருந்த குட்டிச் சொர்க்கம், தன்ன தூக்கி எறிஞ்சிட்டு போனத நினைச்சு வருத்தப்படுறா, வேதனைப்படுறா. அவ வருத்தம் குறையட்டும், அன்பு பெருகட்டும் மாப்பிள்ள, தானா உங்கள தேடி வருவா” என்று தன் மனைவியின் நிலையில் இருந்து பார்த்தால், அவள் மீது குற்றம் இல்லை என்பதை மருமகனுக்கு எடுத்துரைத்தார்.

“சரி மாமா, அத்தையோட வேதனை தீர்ந்து, சீக்கிரம் எங்கள ஏற்றுக்கனும்ன்னு, கடவுள வேண்டிக்கிறேன். நீங்க என்னிக்கு வர்றீங்கன்னு மறக்காம சொல்லுங்க மாமா” என்று வைத்து விட்டான்.

அதன் பின் தன் மாமனார் வருவதற்கு பயணச் சீட்டு முதற் கொண்டு, முன் கூட்டியே இவனே வாங்கி, எல்லா ஏற்பாடும் சஞ்சீவே பார்த்துக் கொண்டான். அதனால் இதுவும் ஒரு காரணமாயிற்று. தன் மகள் நல்ல பையனை தான் தேர்ந்து எடுத்திருக்கிறாள் என்று நிம்மதி அடைந்தார்.

இரவு சாப்ப்பாடு, மகிழ்ச்சிக்கரமாக எல்லோரும் உண்டனர். முதலில் பிரஜி, மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒன்றாக பரிமாறினாள். பின் பிரஜீயும் சரஸும் உண்டனர். சாப்பிட்டு முடித்த பிரஜி, ஏதோ நெடு நாள் பழக்கம் போல, தன் தந்தையிடம் தன் கணவன் பேசுவதைப் பார்த்து வியப்படைந்தாள்.

எனினும் தன் தந்தை நல்லவர், வாய்க்கு வாய் மாப்பிள்ள மாப்பிள்ள என்று இவனைப் போய் அழைத்தால், அதான் இவன் பேசுகிறான் என்று குதர்க்கமாய் எண்ணும் நேரம், சரஸ் “என்னமா… அப்படிப் பார்க்கிற?” எனக் கேட்க, அவளோ தடுமாறி “இம்… ஒன்னும் இல்ல மா” எனக் கூறினாள்.

“எனக்கு புரியுது மா, உன் ஆச்சரியம். எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு, நம்ம சஞ்சீவ இப்படி அருமையா பேசுறான்னு. அவனுக்கு எதுக்கெடுத்தாலும் முன் கோபம் தான் வரும், பொறுமை ரொம்ப கம்மி, அவங்க அப்பா இவன கோபமா பேசுறதால, இவன் அவங்கப்பா வயசுல இருக்க யார்கிட்டயும் ஒழுங்கா பேசவே மாட்டான்.

ஆனா இப்ப, இது எல்லாமே, நீ வந்ததுக்கப்புறம் வந்த மாற்றம் தான்மா. ம்ஹும்… இதே மாதிரி அவங்கப்பாக்கும், அவனுக்கும் எல்லாம் சரியாகி, இதே மாதிரி அவன் பேசுனா, இன்னும் சந்தோஷமா இருக்கும் பிரஜி எனக்கு.” என்று கணவன் பக்கமும் சாய முடியாமல், மகன் பக்கமும் சாய முடியாமல் ஊசலாடும் தவிப்போடு பேசியவருக்கு, அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதிக் காத்தாள்.

பின் அவளைப் பார்த்து “எனக்காக இத மட்டும் செய்வியா பிரஜி, அவன அவங்கப்பாவோடும் பேச வைப்பியா?” என வெகுளியாய் கேட்டுக் கொண்டார்.

பிரஜீயோ ‘நானே அவன்ட்ட பேசக் கூடாதுன்னு முடிவோடு இருக்கேன், இதுல அவன, மாமாகிட்ட வேற பேச வைக்கணுமா? இம்ஹும்’ என பெருமூச்சு விட்டாலும், தன் அத்தை தன் மேல் கொண்ட அன்புக்காக “சரிமா, செய்யுறேன்” என்று வாக்கு கொடுத்தாள்.

பின் பிரஜீயின் தந்தை மறுநாள், மதிய சாப்பாட்டிற்கு பின், மாலை ரயிலில் கிளம்ப ஆயத்தமானார். பிரஜி, தன்னை விட்டு வேலை விசயமாக, ஊருக்கு செல்லும் தந்தையின் பின்னேயே, நூல் பிடித்துக் கொண்டு திரியும் சிறு குழந்தை போல, ராமின் பின்னேயே சென்றுக் கொண்டிருந்தாள்.

கணவன், மாமியாரின் எதிரே, பிரஜி இன்னும் சிறு குழந்தையாய், இப்படிச் செய்வதைப் பார்த்து ராமிற்கே சங்கடமாயிருந்தது. ஒரு கட்டத்தில், முகம் கழுவி தலை வார அறைக்குள் சென்றவர் பின்னேயே வந்தவளிடம், “பிரஜி மா… என்னடா இது? இன்னும் சின்ன குழந்தையாட்டம், அவங்க என்ன நினைப்பாங்க? மாப்பிள்ள என்ன நினைப்பார்?” என்று கடிந்துக் கொண்டாலும், பதிலுக்கு அவள் “ஹூம் போங்க பா… இன்னும் ஒரு நாள் இருந்திட்டு போங்கன்னா கேட்க மாட்டேங்கறீங்க” எனச் சிணுங்கிய மகளிடம், “சாரி டா, அப்பாக்கு வேல இருக்கு, அங்க உங்கம்மாக்கு வேற சந்தேகம் வந்திடும், இப்பவே எங்க இருக்கீங்க? வேல முடிஞ்சிடுச்சா? எப்போ வர்றீங்க ன்னு கேட்டுட்டே இருக்கா, நீயும் கேட்டுட்டு தான இருந்த, அப்புறம் என்ன டா?” என்றார்.

பிரஜி அவரிடம் தன் தாய், அண்ணனைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டாள். மேலும் அவளின் ஏக்கத்தை புரிந்து, தன் மனைவி கோதை அலைப்பேசியில் பேசும் போதெல்லாம், தன் அன்னையின் குரலையாவது பிரஜி கேட்கட்டும் என்று ஒலி பெருக்கியை இயக்கி, பிரஜீயின் அருகில் இருந்து பேசினார்.

இந்த விதத்திலாவது, பிரஜீக்கு தாயின் ஏக்கம் தீரட்டும் என்று எண்ணினார் போலும். பிரஜி இருந்த மனநிலைக்கு, சரஸ் மற்றும் அவள் தந்தையின் வரவு, அவள் மனதிற்கு சிறிது இதமாக இருந்தது. தன் மனதை அரிக்கும் கவலைகளை சிறிது மறந்திருந்தாலும், கணவனின் மீது கொண்ட கோபத்தை அவள் மறக்க வில்லை.

தன் பதிலைக் கேட்டு, முகத்தை தூக்கி கொண்ட பிரஜீயைக் கண்டவர், அவள் அருகில் வந்து “பிரஜீமா… உனக்கு என்னடா வேணும் கேளு, அப்பா வாங்கி தரேன்” என்று கேட்டார்.

ஒன்றும் வேணாம் பா என சொல்ல நினைத்து, அவள் வாயை திறந்த சமயம், “மாமா கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்த கணவனைக் காணவும், அவள் எண்ணம் மாறியது.

அவனைப் பார்த்துக் கொண்டே, அவர் கையைப் பிடித்து தோளில் தலை சாய்த்துக் கொண்டு, “அப்பா… எனக்கு ஒரு கட்டில் வேணும் பா” என்றாள்.

ராம் அவளைப் பார்த்து புருவத்தைச் சுருக்கி, “ஏன் டா, இங்க தான் ஒரு கட்டில் இருக்கே?” எனக் கேள்வியை வினவியவரிடம், முகம் சுருங்கிய தன் கணவனைக் கண்டு திருப்தியுற்றவள், அவரிடம் நிமர்ந்து, “அது வந்து… இங்க இருக்கு பா… ஆனா இன்னொன்னு இருந்தா நல்லா இருக்கும், ஹான்… இது மாதிரி நீங்க வந்தாலோ, இல்ல வேற யாரும் வந்தாலோ படுக்க வேணும் பா. அம்மாவால, அதான் பா எங்க அத்த, அவங்களுக்கு இடுப்பு வலி, கீழ படுக்க முடியாது பா. அவங்க என் கூட இப்ப, இந்த கட்டில்ல படுக்கிறதுக்கே சங்கடப்பட்டுக்கிட்டு படுக்கிறாங்க. அதான் பா கேட்டேன்” என்று பெரியவர்கள் இருவரும் சந்தேகப்பட முடியாமல், நன்கு பொருந்துமாறு விளக்கமளித்தாள்.

அதன் பின், மேலும் “இம்ச்சு… என்ன பா இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? எனக்கு வாங்கி தர மாட்டீங்களா?” எனச் செல்லம் கொஞ்சினாள். அவளின் பொருத்தமான பதிலைக் கேட்ட சஞ்சீவ், “அதெல்லாம் வேணாம் மாமா, வேணுங்கிற போது நானே வாங்கிக்கிறேன் மாமா” என்று தடுத்து பார்த்தான்.

ஆனால் ராமோ தன் மகள், திருமணம் முடிந்து முதன் முதலில் கேட்கிறாள். மேலும் தான் அவர்களுக்கு எதுவும் செய்ய வில்லை என, சஞ்சீவ் மறுத்தும் கேளாமல், உடனே தனக்கு தெரிந்த கடை முதலாளிக்கு அங்கேயே, தன் மகளின் விருப்பத்தைக் கேட்டு, அலைப்பேசியிலேயே ஆர்டர் கொடுத்து விட்டார். அவர் அலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே “பார்த்தாயா” என்பது போல ஒரு பார்வையை, தன் கணவன் மீது வீசினாள் பிரஜி.

பின் ராம் “அவங்களுக்கு இங்கேயும் ஒரு கிளை இருக்காம் மாப்பிள்ள, நாளைக்கே வந்திருமாம் மாப்பிள்ள, உங்க போன் நம்பர் சொல்லிருக்கேன். அட்ரஸ் மட்டும் கேப்பாங்க சொல்லிடுங்க, கிளம்பலாமா மாப்பிள்ள?” எனக் கடையின் பெயரைச் சொல்லி விட்டு சென்றார்.

பிரஜி தங்கள் வீட்டிற்கு கீழே, வீதி வரை சென்று தன் தந்தைக்கு விடைக் கொடுத்து அனுப்பினாள். கட்டில் வேண்டும் என்று கேட்டவள், அதன் பின்னே தனக்கு வர போகும் பிரச்சனையை அவள் ஆராயவில்லை.

அவள் தந்தை சொன்னது போல மறுநாளே கட்டில், மெத்தை, தலையணை என்று வந்திறங்க, அதை வரவேற்பறையில் ஒரு ஓரமாய் போட்டனர். அன்று இரவு உணவுக்கு பின், சரஸ் “நான் வேணா, இங்கே வெளிய படுத்துக்கிறேன்… நீங்க வேணா உள்ள படுத்துகோங்க. அதான் கட்டில் வந்திருச்சே” என்று அந்தக் கட்டிலில் அமர்ந்துக் கொண்டே, தன் பிள்ளைக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க விரும்பி, அவர் சொல்ல, இதை எதிர்பாராது, திகைத்து போய் நின்று விட்டாள் பிரஜி.

திகைத்து நின்றவளை, தண்ணீர் குடிக்க சமையலறையின் உள்ளே சென்றவன், அங்கே உள்ளேயே நின்றுக் கொண்டு, அவளைப் பார்த்து, புருவத்தை உயர்த்தி, வெற்றி புன்னகைப் பூத்தான்.

‘சே! இவன் முகத்த பார்க்கவே பிடிக்கல, இந்த அழகுல இவன் கூட… ரூம்லையா? சே… இதான் யானை தனக்கு தானே தலைல மண்ணள்ளி போட்டுக்கிறதோ’ என்று மனதின் உள்ளே எண்ணியவள், அவனைப் பார்த்து வாயை ஒரு பக்கமாய் கோணிக் கொண்டு, தன் அத்தையைப் பார்த்தாள்.

பின் படக்கென்று அவர் கையைப் பற்றிக் கொண்டு, “நீங்க வாங்க மா, இன்னும் இரண்டு நாளுல என்ன விட்டுட்டு ஊருக்கு போய்டுவீங்க. அதுனால நான் உங்க கூட தான் படுப்பேன். நீங்க ஊருக்கு போயிட்டா, நாங்க இரண்டு பேர் தான, அதுனால நீங்க வாங்க மா, வந்து நேற்று விட்டீங்கள, மாமாக்கு கோபம் வந்திருச்சுன்னு, அப்புறம் என்ன பண்ணீங்க சொல்லுங்க, வாங்க வாங்க” என அவர் கையைப் பிடித்து இழுக்காத குறையை இழுத்துக் கொண்டு போனாள்.

அவரும், கதைச் சொல்ல அம்மாவை இழுத்துக் கொண்டு செல்லும் குழந்தை போல, இன்னும் குழந்தை தனம் மாறாமல், ஆனால் தனக்காக தன் தந்தையிடம் இன்னொரு கட்டில் வாங்க சொல்லி, தன் மீது பாசம் கொட்டிய மருமகளின் செய்கையில் உள்ளம் குளிர்ந்து தான் போனார்.

அதனால் அவருக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால் சஞ்சீவுக்கு “நீங்க ஊருக்கு போயிட்டா, நாங்க ரெண்டு பேர் தான” என்று அவள் சொல்லிய விதத்திலும், “நாங்க ரெண்டு பேர் தான தூங்க போறோம்” என்று அவள் சொல்லாத விதத்தில் ஒன்றை உணர்ந்தான்.

இனி தன் அன்னையும் ஊருக்கு சென்று விட்டால், அவள் தன் தந்தை வாங்கி தந்த கட்டிலில் தான் படுப்பாள் என்று வேதனையோடு தெரிந்துக் கொண்டான்.

சஞ்சீவ் எண்ணியதைப் போலவே, சரஸ் ஊருக்கு செல்லவும், அன்றைய இரவில் தன் தந்தை வாங்கிய கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

அன்று மதன் தன் அன்னையை அழைத்து செல்ல வந்திருக்க, மாலை ரயிலில் அவர்கள் கிளம்புவதால், இவர்கள் இருவரும் என எல்லோரும் ரயில் நிலையத்திற்கு சென்று, அவர்கள் இருவரையும் ரயில் ஏற்றி விட்டார்கள்.

சரஸ் பிரஜீக்கு ஆயிரம் அறிவுரைகள் கூறி விட்டு சென்றார். பிரஜி சரஸிடம் பிரிய முடியாமல், பிரியா விடைக் கொடுத்து அனுப்பினாள். அதைக் கண்ட மதன் கூட, தம்பி நல்ல பெண்ணை தான் தேர்வு செய்திருக்கிறான் என்று மனதில் சஞ்சீவை மெச்சிக் கொண்டு, தன் அன்னையிடம் பிரஜீயைப் புகழ்ந்தான்.

அப்படியே அவர்களை அனுப்பி விட்டு, இருவரும் வெளியேவே உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினர். பிரஜி அலைந்த அசதியில், வந்து முகம் கழுவி விட்டு வரவேற்பறையில் இருந்த கட்டிலில் படுக்க ஆயத்தமானாள்.

சஞ்சீவ் சமயலறையில் பாலைச் சுட வைத்து, அவளுக்கு ஒரு டம்ளரில் நிரப்பி, கட்டிலில் அமர்ந்து ஜென்னலை திறந்துக் கொண்டிருந்தவளிடம், கொண்டு வந்து நீட்டினான். அவளோ அதை வாங்கி கொண்டே “அதான் அப்பாவும், உங்க அம்மாவும் ஊருக்கு போய்ட்டாங்கள, இன்னும் யாருக்காக நாடகம் ஆடுறீங்க?” என்றாள் வெறுப்பாய்.

“ஏன் பிரஜி? இப்படி…” என அவன் முடிக்க கூட இல்லை, உடனே அவள் “ஓ… இப்படியெல்லாம் செஞ்சு, என்மேல பாசம் இருக்க மாதிரி நடிக்கிறீங்களோ? இதெல்லாம் நம்பி ஏமாறுறதுக்கு நான் ஒன்னும் பழைய பிரஜி இல்ல” எனச் சொல்லிக் கொண்டே பாலை குடித்து முடித்தாள்.

அதைக் கண்டு அவன் முகம் மலரவும், அவளோ “இப்படிக் கோபமா பேசிட்டு, நீங்க கொடுக்குறத குடிக்கிறேன்னு பார்க்குறீங்களா? ஏன் ஒரு சமையற்காரன் கொடுத்தா வாங்கி குடிக்க மாட்டேன்னா?” என மெத்தனமாய் அவனிடம் கேள்வி கேட்டாள்.

தன்னை ஒரு சமையற்காரன் என்று சொல்லாமல் சொல்கிறாள் என்று அவனுக்கே புரிந்தது. மேலும் “நீங்க எனக்கு பண்ண கொடுமைக்கு, கொஞ்சமாவது அனுபவிக்க வேணாம். அதான்…” என்று தெளிவாய் சொல்லி விட்டு, அவனிடம் குடித்து முடித்த டம்ளரை நீட்டினாள்.

எப்படியோ அவள் சாப்பிட்டாளே என்று, கனத்த தன் மனதை, இவ்வாறு நினைத்துக் கொண்டு லேசாக்கினான். பின் எல்லா விளக்கையும் அணைத்துக் கொண்டு, இரவு விடிவிளக்கை போட்டு விட்டு, அவள் அருகே சென்று படுத்துக் கொண்டான்.

அதை உணர்ந்தவளோ “ஹேய் எந்திரி…” என எழுந்து அமர்ந்தாள். ஆனால் அவனோ அவளைப் பார்த்த வண்ணம், சொகுசாய் ஒருக்களித்து படுத்துக் கொண்டு, “ஏன்… நைட்டானா எல்லோரும் படுக்க தான சொல்வாங்க, நீ என்ன எந்திரிக்க சொல்ற?” என்று கண்ணடித்தான்.

“சீ… இது எங்கப்பா வாங்கி தந்த கட்டில், முத நீ இறங்கு” என்று சிறு குழந்தையாய் சொன்னவளிடம், “ஆமா, யார் இல்லேன்னு சொன்னா, இது எங்க மாமா வாங்கி தந்த கட்டில் தான்”

உங்கப்பா என்று சொல்ல மனமில்லாமல், “உள்ள… அந்த கட்டில்ல போய் படுங்க… போங்க” என்று சொன்னாள்.

ஆனால் அவனோ “என் இஷ்டம், நான் எங்க வேணா படுப்பேன். நீ வேணும்னா படு, இல்ல இப்படியே உட்கார்ந்திரு” என்று சொல்லி விட்டு, உறங்க தயாராவது போல் கண்ணை மூடிக் கொண்டான்.

கட்டிலைச் சுவரோரமாய் போட்டதால், அந்த பக்கம் இறங்கவும் வழியில்லாமல், இந்தப் பக்கம் இவனை தாண்டி தான் இறங்க வேண்டும் என்பதால், பேசாமல் கடுப்புடன் படுத்துக் கொண்டாள். அவள் படுத்ததை உணர்ந்தவன், கண் திறந்து, தொட்டா சிணுங்கி போல சுவரோரமாய் ஒடுங்கி படுத்திருந்தவளைப் பார்த்து புன்னகைத்தான்.

ஆனால் மறு நாள், அவன் படுப்பதற்கு வரும் முன்னே, கட்டிலில் கோணல் கோடாய் இடத்தை அடைத்துக் கொண்டு, தலை ஒரு புறமும், அதற்கு எதிர்புறம் காலை நீட்டியிருந்தாள். படுக்க வந்தவனோ அவள் படுத்திருந்த விதத்தை பார்த்து, “பிரஜி… என்ன இப்படி படுத்திருக்க? தள்ளி படு” என்று கால்பக்கம் அமர்ந்தவாறு சொன்னான்.

அவளோ “முடியாது, எங்கப்பா வாங்கி கொடுத்த கட்டில், நான் எப்படி வேணா படுப்பேன்” என்றாள்.

ஆனால் அவனோ “வேணாம்… அப்புறம் கை படுது, கால் படுதுன்னு என்ன குற்றம் சொல்லக் கூடாது” என்று மிரட்ட, அவளோ வாயை ஒரு பக்கமாய், அசட்டையாய் கோணிக் கொண்டாள்.

திடீரென்று குழந்தையை தூக்குவது போல, இரு கைகளை அவள் கைகளுக்கு அடியில் விட்டு, அள்ளிக் கொண்டு, நகர்த்தி சுவரோரமாய் போட, எதிர்பாராத இந்த தாக்குதலில் திடுக்கிட்டவள், தன் மேல் விழ வந்தவனைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.

உட்கார்ந்தவாறே அவளைக் கைகளில் அள்ளி நகர்த்தவும், பிடிமானம் இல்லாமல் தடுமாறி அவள் மீதே விழ இருந்தவன், எங்கே அவள் மீது விழுந்து விடுவோமோ என்று அவள் தாய்மையின் நிலை உணர்ந்து சட்டென்று சுதாரித்து, கைகளை ஊன்ற போக, முடியாமல் கைகள் மடங்க, அவள் மீது சிறிய இடைவெளியோடு விழுந்தான்.

ஆனால் இந்த அதிர்ச்சியில் கண்களை மூடி உதடு துடிக்க இருந்தவளின் நிலைக் கண்டு சற்றே என்ன… நிறையவே தடுமாறினான். தன் தடுமாற்றத்தைத் தவிர்க்க முடியாமல், அவள் இதழில் கவிதைப் புனைய, ஏதோ நினைவில் அதற்கு அவளும் இடம் கொடுத்தாள்.

பின் மூச்சு திணற, கண் திறந்தவள், வரவேற்பறையில் இருப்பதை உணர்ந்து, அவன் மீது உள்ள கோபம் சட்டென்று நினைவு வர, அவனைத் தள்ளி விட்டாள்.

“சை… வெட்காம இல்ல உங்களுக்கு?” என்று வெறுப்பை உமிழ, அவனோ புறங்கையால் தன் வாயை துடைத்துக் கொண்டே “ஏன்… நான் ஏன் வெட்கப்படனும்? நீ என் பொண்டாட்டி தான?” என்றான் கூலாய்.

அவளோ கோபத்தோடு “இம்… பொண்டாட்டி தான். ஆனா உங்கள பிடிக்காத பொண்டாட்டி. இனி ஒரு தரம் உங்க கை என்மேல பட்டுச்சு… பார்த்துக்கோங்க” என்று தன் ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டி விட்டு, அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

சஞ்சீவ், படுத்திருந்தவளையே வெறித்து பார்த்துக் கொண்டே வெகு நேரமாய் அமர்ந்திருந்தான்.

 

மாயம் தொடரும்…………..

error: Content is protected !!