நிலவொன்று கண்டேனே 15
“வாங்க ஐயா.” அந்தக் குரல் அவரை வரவேற்க ஒருவித சங்கடத்துடனேயே அந்த வீட்டிற்குள் நுழைந்தார் சத்தியமூர்த்தி.
“உக்காருங்க.” அன்பரசுவின் குரல் அவரை மரியாதையாக உபசரித்தது. எப்போதும் மாமனாரை ‘ஐயா’ என்று அழைப்பது தான் அன்பரசுவின் வழக்கம்.
வானதியைக் கைப்பிடிப்பதற்கு முன்பிருந்தே இருவருக்குள்ளும் ஒரு நல்ல அறிமுகம் இருந்தது. அன்பரசுவை ‘தம்பி’ என்றழைத்துத் தான் சத்தியமூர்த்திக்கும் பழக்கம்.
“ம்… எப்படி இருக்கீங்க தம்பி?” சோஃபாவில் அமர்ந்தபடியே ஒரு தயக்கத்துடன் கேட்டார் சத்தியமூர்த்தி.
“ம்… இருக்கேன்.” முகம் சோர்வாக இருந்தாலும் குரலில் மிடுக்கிருந்தது.
அன்பரசு தான் சத்தியமூர்த்தியை ஃபோனில் அழைத்து அவரோடு பேச வேண்டும் என்று சொல்லி இருந்தார். எங்கே மகளுக்கும் பேரனுக்கும் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடுமோ என்று பயந்து யாருக்கும் சொல்லாமல் கிளம்பி வந்திருந்தார் மனிதர்.
“என்ன சொல்லுறா உங்க பொண்ணு?” மருமகனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை பெரியவருக்கு.
“அவதான் பொறுப்பில்லாம அங்க வந்து உக்காந்திருக்கான்னா நீங்களும் என்ன, ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?”
அப்போதும் சட்டென்று பதில் சொல்லவில்லை சத்தியமூர்த்தி. பெண்ணைப் பெற்றவர் என்பதால் கொஞ்சம் நிதானித்தார்.
“தம்பி… எம் பொண்ணு நீங்க நகை நட்டு வாங்கிக் குடுக்கலை, காஸ்ட்லியா பட்டுப் புடவை வாங்கிக் குடுக்கலைன்னு உங்க மேல குறைப் பட்டுக்கிட்டு என் வீட்டுல வந்து உக்காந்தா நீங்க சொல்லுறது சரி.” மேலே பேசாமல் அமைதியாகி விட்டார் சத்தியமூர்த்தி.
மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் எப்போதுமே ஒரு சுமுகமான உறவு இருந்தது. ஆசைப்பட்டுத்தான் வானதியைப் பெண் கேட்டார் அன்பரசு. அரசியலில் ஈடுபாடோடு அவர் இருந்த போதும் அவரது நல்ல குணத்துக்காகவே தன் மகள் வானதியை அவருக்குக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.
அதற்கு எந்தப் பங்கமும் வராமல் தான் இன்று வரை நடந்து கொண்டார் மனிதர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக இருந்தது.
“உங்க பொண்ணு எதுக்கு வீட்டை விட்டுப் போனா?”
“இது நீங்க அவளைக் கேக்க வேண்டிய கேள்வி தம்பி. எங்கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும்?”
“எப்படிப் பேசுறது? கால் பண்ணினா எடுக்க மாட்டேங்கிறா? பேசவே முரண்டு பிடிக்கிறவளை எப்படி வந்து பார்க்கிறது?”
உண்மையிலேயே அன்பரசுக்கு வானதியைச் சென்று பார்ப்பதற்கு அத்தனை தைரியம் இருக்கவில்லை. வெளியே மீசையை முறுக்கிக் கொண்டாலும் மனிதர் வானதியின் ஒரு முறைப்பைத் தாங்க மாட்டார். வீட்டுக்காரியின் மேல் பாசம் கொஞ்சம் அதிகம்தான். அது வானதிக்கே தெரியும்.
இத்தனை வருடத் தாம்பத்தியத்தில் வானதிக்கு அவர் ஒரு நல்ல காதல்க் கணவன் தான். வீட்டில் அதிகம் தங்கா விட்டாலும், அந்த வீடு அவர் கண் பார்வையில் தான் இருந்தது.
வீட்டில் பெண் பிள்ளைகள் தான் அப்பாவோடு அதிக பாசமாக இருப்பார்கள் என்பதை உடைத்துக் காட்டியவர் அன்பரசு. அம்மா மேல் பாசம் இருந்தாலும், அதிகம் வீடு தங்காத அப்பா என்றால் யுகேந்திரனுக்குமே கொஞ்சம் விசேஷம் தான்.
மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் சத்தியமூர்த்தி மௌனமாக இருந்தார். 
“தப்புத் தான் ஐயா! நான் பண்ணினது பெரிய தப்புத்தான். ஏதோ… என்னோட கெட்ட நேரம். கேக்கக் கூடாததைக் கேட்டுப் பண்ணித் தொலைச்சிட்டேன்.”
தலையைக் குனிந்த படி அன்பரசு பேசிய போது சத்தியமூர்த்திக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எந்த மனிதனுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
“ஒத்தைப் புள்ளை ஐயா… அவன் மேல உயிரையே நான் வச்சிருந்தேன். அவனோட கல்யாணத்தை என்னைப் பார்க்க விடாமப் பண்ணிட்டாளே உங்க பொண்ணு…” 
வீராப்பாகப் பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று கண் கலங்கவும் பெரியவருக்கே ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு தகப்பனாக அன்பரசுவை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
எத்தனை பெரிய குற்றவாளியாக இருந்த போதும் ஒரு நல்ல தகப்பனான அன்பரசுவிற்குத் தன் மகள் கொடுத்தது மிகப் பெரிய தண்டனை தான்.
“தம்பி… வானதி கிட்ட என்னால எதுவும் பேச முடியலை. ப்ரஷர் ஏறிடுச்சு… ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். அந்த நேரத்துல கல்யாணப் பேச்சை எடுக்கிறா. என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க?”
“ம்…” மீசையைத் தடவிய படி ஒரு உறுமல் தான் பதிலாக வந்தது.
“எல்லாம் அந்தப் பொண்ணால வந்தது. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…” கோபத்தில் கர்ஜித்த அன்பரசுவின் கை முஷ்டி பலமாக இறுகியது.
“தம்பி! ஆத்திரப்பட்டுத் திரும்பத் திரும்பத் தவறைப் பண்ணிடாதீங்க. அம்மாவும் மகனும் அந்தப் பொண்ணு மேல உயிரையே வச்சிருக்காங்க. அநியாயம் சொல்லக் கூடாது. அந்தப் பொண்ணும் அந்த அன்புக்குத் தகுதியானவ தான்.”
பதட்டமாகச் சொன்னார் சத்தியமூர்த்தி. நித்திலாவிற்கு அன்பரசுவினால் ஒன்றென்றால் மனைவியையும் மகனையும் இனி அவர் நினைத்தும் பார்க்க முடியாதே.
“நான் வானதிக்கிட்ட பேசுறேன். நீங்க அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க தம்பி. பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலாக்கிடாதீங்க, நான் கிளம்புறேன்.” சொல்லி விட்டுக் கிளம்பினார் சத்தியமூர்த்தி.
இங்கே வரும்போது அன்பரசு மேல் லேசான வருத்தம் இருந்தது பெரியவருக்கு. ‘உயிராக மதிக்கும் மகனின் இடத்தில் எதற்குக் கை வைத்தாய்?’ என்று சத்தம் போட வேண்டும் போல் தான் தோன்றியது.
ஆனால், அந்த முகத்தைப் பார்த்த போது அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அத்தோடு தன் மகள் அவள் கணவனுக்குக் கொடுத்திருப்பது சாதாரண தண்டனை இல்லையே!
சத்தியமூர்த்தி வீட்டுக்குப் போன போது யுகேந்திரன் அப்போது தான் வானதியைப் பார்க்க வந்திருந்தான்.
“வாப்பா யுகேந்திரா… நித்திலா வரலையா?” கேட்ட படியே உள்ளே நுழைந்தார் சத்தியமூர்த்தி.
“இல்லை தாத்தா. இந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகமா இருக்கும் போல. வீட்டுக்கு வரும் போதே ரொம்ப டயர்டாத்தான் வர்றா. என்னால அதுக்கு மேல எங்கேயும் கூப்பிட முடியலை.”
“ஓ… பாவம் தான் பா.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காஃபி ட்ரேயோடு அங்கே வந்தார் வானதி.
“இருந்தாலும் பரவாயில்லை யுகேந்திரா. இந்த வாரக் கடைசியில கூட்டிட்டு வாப்பா. எனக்கே நித்திலாவைப் பார்க்கணும் போல இருக்கு.”
“சரிம்மா… நான் கூட்டிட்டு வர்றேன். நீங்களும் அங்க வந்து போகலாமே? ஏன் வரமாட்டேங்குறீங்க?”
“இல்லைப்பா… அது அவ்வளவு நல்லா இருக்காது. நம்ம குடும்பம்…” வானதியின் பேச்சைக் கலைத்தது யுகேந்திரனின் ஃபோன். நித்திலா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
காஃபி டேபிளில் கிடந்த யுகேந்திரனின் ஃபோனின் திரையில் நித்திலாவின் பெயரைக் காணவும் வானதியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“ஆயுசு நூறு எம் மருமகளுக்கு. பேசும் போதே கூப்பிடுறா பாரேன்.” அம்மாவின் பேச்சில் புன்னகைத்த யுகேந்திரன் ஃபோனை காதுக்குக் கொடுத்தான்.
“நித்திலா.”
“கவிஞரே! எங்க இருக்கீங்க?”
“அம்மாவைப் பார்க்கலாம்னு வந்தேன்டா. நீ ஏன் டல்லா பேசுறே?”
“கொஞ்சம் ஃபீவர் மாதிரி இருக்கு. முடியலை… அதான் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.”
“ஓ… என்ன பண்ணுது நித்திலா?”
“யுகி… நாளைக்கு நாம ரெண்டு பேரும் அத்தையைப் போய்ப் பார்க்கலாம். இப்போ கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றீங்களா ப்ளீஸ்…” அவள் பேச்சிலேயே சோர்வை உணர்ந்தவன் பேசிய படியே எழுந்து விட்டான்.
“இதோ கிளம்பிட்டேன் நித்திலா. பத்து நிமிஷத்துல வந்திர்றேன். பங்கஜம் அம்மா எங்க? அவங்களைக் கூப்பிடு.”
“இப்போதான் அவங்களைக் கிளம்பச் சொன்னேன் யுகி.”
“சரி சரி, நான் வந்தர்றேன்.” சொல்லியபடியே ஃபோனை டிஸ்கனெக்ட் பண்ணியவன் கேள்வியாகப் பார்த்த வானதிக்குத் தகவல் சொன்னான்.
“நானும் வரட்டுமாப்பா.”
“தேவையில்லைம்மா… தேவைப்பட்டா கண்டிப்பாக் கூப்பிடுறேன்.” பேசிக் கொண்டே காரைக் கிளப்பியவன் அடுத்த பத்தாவது நிமிஷம் வீட்டில் இருந்தான்.
கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தாள் நித்திலா. உடலின் சோர்வு முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவள் பக்கத்தில் அமர்ந்து தலையை லேசாகத் தடவிக் கொடுத்தான் யுகேந்திரன்.
“கண்ணம்மா… என்ன பண்ணுது? டாக்டர் ஆன்ட்டிக்குக் கால் பண்ணட்டுமா?” அந்த ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் நித்திலா.
“இப்போ வேணாம் யுகி. நாளைக்குப் போகலாம்.” அவள் பக்கத்தில் கால் நீட்டி அமர்ந்தவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் நித்திலா. அவள் உடம்பின் சூட்டை அவனால் உணர முடிந்தது.
“டெம்பரேச்சர் கூடவா இருக்கும் போல தெரியுதேம்மா.”
“ம்… யுகி…”
“சொல்லுடா…”
“இன்னைக்கு… ஆயர்பாடியில நந்தகோபன் இல்லத்துல பிறந்தவனைப் பத்திக் கொஞ்சம் படிச்சேன்பா.” சம்பந்தமே இல்லாமல் அவள் பேசவும் யுகேந்திரனின் நெற்றி சுருங்கியது.
“என்ன படிச்சே?” தான் படித்த இலக்கியத்தைத் தன்னிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறாள் மனைவி என்று புரிந்தது கணவனுக்கு.
“அடேங்கப்பா… இந்தக் கிருஷ்ணன் யசோதாவை என்ன பாடு படுத்தி இருக்கான்னு தெரியுமா? பிறந்த உடனேயே எல்லாரையும் மயக்கிட்டானாம். அத்தனை அழகாம் அந்த பாலகிருஷ்ணன்.”
“ம்… படிச்சிருக்கேன் கண்ணம்மா. அந்தப் பிஞ்சுப் பாதங்கள் தான் கொள்ளை அழகாம். மாணிக்கம் கட்டி, அதன் இடையில் வைரத்தினை இழைத்து, மாற்றுக் குறையாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறு தொட்டில்னு வர்ணிப்பாங்க.”
“ம்…”
“அந்தத் தொட்டில்ல படுத்துக்கிட்டு அந்தப் பாதத்தைச் சின்னக் கண்ணன் வாயில வைக்குற அழகை அவ்வளவு தூரம் வர்ணிச்சிருப்பாங்க தெரியுமா?”
“ம்… அந்த ஏரியாவில இருக்கிற அத்தனை பேருக்கும் இவன் செல்லப் பிள்ளையாம். எல்லாருக்கும் இவனுக்கு அலங்காரம் பண்ணுறது தான் வேலையாம். யசோதாக்கு பயமே வந்திருமாம். என் பிள்ளை இத்தனை அழகா இருக்கானே, கண் பட்டிருமேன்னு திருஷ்டி சுத்துவாங்களாம்.”
“என்னடா… திடீர்னு கிருஷ்ணன் மேல காதல்?” ஒரு புன்னகையோடு தன் மார்பில் சாய்ந்த படி கதை பேசியவளைப் பார்த்துக் கேட்டான் யுகேந்திரன். அவனை அண்ணாந்து பார்த்தாள் நித்திலா.
“அந்தச் சின்னக் கண்ணன் மேல காதல் வருது கவிஞரே!”
“அதான் ஏன்?”
“கவிஞரே! நீங்க மட்டும் தான் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி இலக்கியம் பேசுவீங்களா? நாங்க பேசமாட்டோமா?”
“ஐயையோ! நான் அப்படிச் சொல்லலை கண்ணம்…” அவன் வார்த்தைகள் பாதியில் நின்றன.
“என்ன… என்ன… சந்தர்ப்பம்…” யுகேந்திரனின் வாய் தந்தி அடித்தது. அவனையே பார்த்திருந்த நித்திலாவின் பார்வை ஏதேதோ கதைகள் சொன்னது கவிஞனுக்கு.
“நித்திலா… என்ன சொல்றே?”
“டாக்டர் ஆன்ட்டிக்கிட்ட நல்லாக் கேட்டுக்கோங்க. இப்போ ஒன்னுன்னா அடுத்தது இன்னும் எத்தனை வருஷ காப்ல ன்னு.”
“கண்ணம்மா…” யுகேந்திரனுக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. பேசா மடந்தையாகச் சமைந்து போய் உட்கார்ந்திருந்தான். நித்திலா மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்.
“கவிஞரே! கண்ணம்மாவின் பரிசு உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” சொன்னவளின் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் அந்தப் பட்டிதழ்களில் மிக மிக மென்மையாக முத்தமிட்டான். தன்னை மறந்து வெடித்துச் சிரித்தான். கண்ணீர் வடித்தான்.
“உன் பரிசில் என்னைப் பித்தாக்கி விட்டாய் கண்ணம்மா.” சொன்னவனின் இதழ்களில் அவன் கொடுத்ததையே திருப்பிக் கொடுத்தாள் நித்திலா. யுகேந்திரனின் ஃபோன் சிணுங்கியது.
“ஹலோ.”
“யுகி… நித்திலாக்கு இப்போ எப்படி இருக்கு?”
“அம்மா… உம் மருமகள் என்னென்னமோ சொல்லுறா. நீயே என்னன்னு கேளு.” சொல்லி விட்டு அவள் கையில் தொலை பேசியைக் கொடுத்தவன் தோட்டத்திற்கு வந்து விட்டான்.
மனம் ஆனந்தக் கூத்தாடியது. மல்லிகைக் கொடிக்குப் பக்கத்தில் வந்து கண்மூடி அமர்ந்து கொண்டான். சம்பந்தமே இல்லாமல் அப்பாவின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.
‘இப்படித்தான் மகிழ்ந்து போயிருப்பாரா? வானத்தைத் தொட்டு விட்டது போல் ஒரு பூரிப்பு உடலெங்கும் பரவுகிறதே! நான் உருவான சேதி கேட்ட போது கூட இப்படித்தான் அவரும் பூரித்துப் போயிருப்பாரா?’
அவன் சிந்தனையைக் கலைத்தது அவள் ஸ்பரிசம். கண் திறந்தான் யுகேந்திரன். அவனையே வைத்த கண் வாங்காமல் எதிரே நின்றபடி பார்த்திருந்தாள் நித்திலா.
அவள் கரம்பிடித்து தன்னருகே அழைத்துக் கொண்டவன் அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.
“யுகி…”
“என் உலகத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் இந்த வயிற்றில் தான் இப்போது இருக்கிறது கண்ணம்மா.” அவன் பேச்சில் சிரித்தாள் நித்திலா.
“சந்தோஷத்தின் உச்சக்கட்டமோ?”
“சொல்லத் தெரியவில்லை. நீ, எனக்கு எத்தனை பெரிய கவுரவம் சேர்த்திருக்கிறாய் தெரியுமா?” 
“ம்ஹூம்…”
“நான் சிறகில்லாமல் பறக்கிறேன், என்பதன் பொருளை முழுதாக எனக்கு உணர்த்தி இருக்கிறாய்.”
“ஓஹோ! அப்போ… இந்தக் கண்ணம்மா இனித் தேவையில்லையோ?” அவள் முகம் பார்த்தவன், பற்கள் தெரியச் சிரித்தான்.
“தேவையில்லை.”
“அடப்பாவி! இனி நான் தேவையில்லையா? கொழுப்புத்தானே?” அவளிடமிருந்து நான்கைந்து அடிகளை வாங்கியவன் மெதுவாக நழுவி ஓட, அவனைத் துரத்தினாள் மனைவி.
கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்த காரின் சத்தத்தில் இருவரும் சுதாகரித்துக் கொண்டார்கள். வானதி தான் வந்து கொண்டிருந்தார். கூடவே பெரியவரும்.
“நித்திலா…” அழைத்தபடியே காரிலிருந்து இறங்கியவர் நித்திலாவைக் கட்டிக் கொண்டார். முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தெரிந்தது.
“நீ சொன்னதும் கையும் ஓடலை காலும் ஓடலை. அதான் கிளம்பி வந்திட்டேன்.” சொன்னபடியே யுகேந்திரனைப் பார்த்தவர் அவனைக் கை நீட்டி அழைத்தார்.
அருகே வந்த மகனின் நெற்றியில் முத்தம் வைத்தார் அம்மா. கண்கள் கலங்கிப் போயின.
மகனின் திருமணம் முடிந்த இந்த இரண்டு மாத காலத்தில் இந்த வீட்டிற்கு ஒன்றிரண்டு முறைதான் வந்திருப்பார் வானதி. 
ஏனோ அதை அத்தனை தூரம் அவர் விரும்பவில்லை. வருந்தி அழைத்தாலும் வராதவர் அன்று பத்து மணியாகும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
பங்கஜம் அம்மா சமைத்து வைத்து விட்டுப் போயிருந்தாலும் தன் கையால் மருமகளுக்கு புளிப்பான ஆதாரங்கள் பண்ணிக் கொடுத்தார். 
சாப்பிட மல்லுக்கட்டியவளை அதட்டி உருட்டி சாப்பிட வைத்திருந்தார். எல்லாவற்றையும் ஒரு மன நிறைவோடு பார்த்திருந்தார் சத்தியமூர்த்தி.
“இங்கப்பாரு நித்திலா. உனக்கு வேலை ஜாஸ்தின்னு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோம்மா. ரொம்ப கஷ்டப்படுத்திக்காதே என்ன?”
“சரிங்கத்தை.”
“சந்தோஷமா இருக்கணும்மா. என்ன வேணும்னாலும் அத்தையைக் கேளு. நான் பண்ணித் தரேன், சரியா?”
“ம்… என்ன பண்ணிக் கேட்டாலும் குடுப்பீங்களா அத்தை?” அந்தக் கேள்வியில் யுகேந்திரன் நித்திலாவைக் கூர்மையாகப் பார்த்தான். சத்தியமூர்த்தியின் அதரங்களில் ஒரு புன்னகை தோன்றியது.
“என்ன வேணும்னாலும் கேளுடா. கண்டிப்பா பண்ணித் தரேன்.”
“சாப்பாடு மட்டுந்தானா… இல்லை… என்ன கேட்டாலும் கிடைக்குமா?” இப்போது வானதி வாய்விட்டுச் சிரித்தார்.
“உனக்கு என்ன வேணுமோ கேளும்மா. எங்கிட்ட இருக்கிற நகை எல்லாத்தையும் உனக்குக் குடுக்கட்டுமா? அது வேண்டாம்னா… எம்பேர்ல ஒரு வீடு இருக்கு. அதை உம்பேருக்கு மாத்திக் குடுக்கட்டுமா?” அனாயாசமாகக் கேட்டார் வானதி.
“எனக்கு அந்த வீடு வேணாம் அத்தை. ஆனா… அந்த வீட்டுல இருக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த வீட்டுக்கு நாம போகலாமா அத்தை?” மருமகளின் கேள்வியில் சட்டென்று அமைதியானார் வானதி.
நித்திலாவின் குணம் வானதிக்குத் தெரியும். இந்த நகை நட்டுக்கெல்லாம் ஆசைப்படும் பெண் அவளல்ல. அந்தத் தைரியத்தில் தான் அத்தனை சுலபமாக பட்டியல் போட்டிருந்தார்.
அன்பரசு கட்டிய வீடு வானதியின் பெயரில் தான் இருந்தது. நித்திலா எதையாவது ஆசைப்படுகிளாள் என்றால் அது அன்பு, பாசம் இவையாகத்தான் இருக்கும். 
வீட்டை மருமகள் எங்கே கேட்கப் போகிறாள் என்று கணக்குப் போட்ட வானதி, அதே வீட்டில் குடியிருக்க அவள் ஆசைப்படுவாள் என்று எண்ணிப் பார்க்கவில்லை.
அந்த இடமே அமைதியாக இருந்தது. யுகேந்திரன் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தான். அன்பரசைப் பார்த்த நாளிலிருந்து அவர் பற்றிய பேச்சுக்கள் அந்த வீட்டில் அடிக்கடி அடிபட்டது.
அவரைப் பற்றி அதிகம் அவளுக்குத் தெரியாததால் வேண்டுமென்றே யுகேந்திரனிடம் பேச்சுக் கொடுப்பாள். சுருங்கச் சொன்னால் அவரை ஞாபகப் படுத்திய படியே இருந்தாள்.
இன்று இருந்த நெகிழ்வான மனநிலையில் யுகேந்திரனுக்கும் அப்பாவை வெறுத்துப் பேச முடியவில்லை. மௌனமாகவே அமர்ந்திருந்தான்.
“அதான் உன்னோட மருமகள் கேக்குறால்ல… பதில் சொல்லு வானதி.” அப்பாவின் குரலில் சங்கடமாக அவரைப் பார்த்தார் வானதி.
“மன்னிப்பை விட மிகப் பெரிய தண்டனை உலகத்துலேயே வேற எதுவும் கிடையாது வானதி.” கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னார் சத்தியமூர்த்தி.
“அத்தை… நான் மாமாவை நியாயப் படுத்தலை. அவங்க பண்ணினது பெரிய தப்புத் தான், இல்லேங்கலை. அந்தத் தப்புக்குத் தண்டனை குடுக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா… கூடவே இருந்து குடுங்க. இப்படி உறவே இல்லைன்னு வெட்டி விடாதீங்க. அது பாவம் அத்தை.”
வானதி எதுவும் பேசவில்லை. மௌனமாகத் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார். நித்திலா கொஞ்ச நேரம் அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள். 
காத்திருப்பு நீடித்ததே ஒழிய வானதி அசைந்து கொடுக்கவில்லை. பெருமூச்சு ஒன்று மட்டுமே நித்திலாவிடம் இருந்து வந்தது.
கூடியிருந்த மற்ற மூவரும் பேச மறந்தாலும் நடந்தது அனைத்தையும் அன்பரசுவிடம் எத்தி வைக்க சத்தியமூர்த்தி மறக்கவில்லை.

error: Content is protected !!