இது என்ன மாயம் 30

இது என்ன மாயம் 30

 

பகுதி 30

வானவில் வேண்டுமா?

அதன் வர்ணங்கள் வேண்டுமா?

இல்லை மழை மேகம் தான் வேண்டுமா?

எது வேண்டுமோ சொல் அன்பே…

உன் சந்தோஷத்திற்க்காக எதையும் தர

வல்லமையோடும் வலியோடும் காத்திருக்கிறேன் அன்பே

என் உயிரையும் தருவேன் உன் சிறு புன்னகைக்காக…

பிரஜி “ஹே… ரௌடி என்ன இன்னிக்கு ரௌடித்தனம் பண்ணாம அமைதியா இருக்க?… இம்…” எனக் கேட்டுக் கொண்டே மேலும், “ஓ… உங்க லவ்வர் பக்கத்துல இருக்காங்களாக்கும், அதான் நல்ல பிள்ளையா இருக்கியோ?” என்று கூண்டில் சொருகப்பட்டிருந்த ஒரு கம்பியில் அமர்ந்திருந்த, மஞ்சளில் குளித்து எழுந்தது போல் இருக்கும் ஒரு குட்டி பறவையிடம் தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆம், பிரஜி அவர்கள் வீட்டு பால்கனியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்த லவ் பர்ட்ஸிடம் தான் பேசிக் கொண்டிருந்தாள்.

அன்றைய இரவு, அந்த நிகழ்வுக்கு பின், பிரஜீயும் அவனோடு எதுவும் பேசுவதில்லை, அவனாகப் பேசினால் கூட, செய்கையிலோ, அல்லது சைகையிலோ தான் பதில் கூறுவாள்.

சஞ்சீவும் அவளின் உடல் நிலையை மனதில் கொண்டு, இந்த மாதிரி நேரத்தில், பெண்கள் சந்தோசமாகவும், நிம்மதியான மனநிலையில் இருக்க வேண்டும் என்று எப்போதோ செவி வழியே கேட்டது நினைவு வர, அவனும் அவளைத் தொல்லை செய்யாமல் இருந்தான்.

ஆனால் பிரஜி இரவில் வரவேற்பறையில் உள்ள கட்டிலில் தான் உறங்கினாள். ஆனால், அவன் உறங்குவதற்கு இடத்தை ஒதுக்கி விட்டு, சுவரோரமாய் தான் உறங்கினாள்.

இப்படியே தாமரை இலை தண்ணீர் போல, ஒட்டி ஒட்டாமல் தான் அவர்களுக்கு நாட்கள் கழிந்தன. மறு மாதம் செக் அப்பிற்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. சஞ்சீவ் அவளை அழைத்து சென்றான். குழந்தை நன்றாக இருப்பதாகவும், மேலும் பிரஜீக்கு மாத்திரை மருந்து எழுதிக் கொடுத்தார்.

பிரஜி இன்னும் வாந்தி எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். சஞ்சீவ் அவள் சமையல் செய்யும் போது, கூட மாட தானும் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னால் கேட்க மாட்டாள். மேலும் சமையலின் நெடி, அவளுக்கு வாந்தியை உண்டு பண்ண, சமையல் செய்யும் போதே வாந்தி எடுத்து விட்டு வந்து மீண்டும் சமையல் செய்வாள்.

தான் கஷ்ட்டப்பட்டால், அவனுக்கு வலிக்கிறது என்று தெரிந்துக் கொண்டே, வேண்டும் என்றே, அவன் கண் முன் எல்லா வேலைகளையும் செய்வாள்.

அவள் வாந்தி எடுக்க சென்றால், இவன் பின்னேயே சென்று தலையைப் பிடித்து கொள்வான். அவள் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, பாசமாய் தன்னைப் பிடித்திருக்கும் அவன் கரங்களை, வெடுக்கென விலக்கி விட்டு செல்வாள். சஞ்சீவும், பொறுமையாய் பிரஜி மாறுவாள் என்று நம்பினான், அவள் மாறவில்லை என்றாலும், தன் குழந்தை வந்து தங்களை ஒன்று சேர்க்கும் என எண்ணினான்.

அவள் கோபம் கொண்டாலும், அவள் மீது அவன் அக்கறையாய் தான் இருந்தான். அவள் சமைக்கும் பொழுதே, இவன் அவளுக்காக பழங்களை நறுக்கி பழசாறு செய்து எடுத்து வைத்து விட்டு, தான் செல்வான். மேலும், ரசம், மோர், இல்லையென்றால் பருப்பு சாதம் போதும், வேறு வகை வகையாய் சமைக்க வேண்டாம் என்று சொல்லி விடுவான்.

இவளும் தோள்களைக் குலுக்கி கொண்டு, நமக்கு வேலை மிச்சம் என்று நினைத்தாள். மீதி நேரத்தில் அவன் செய்த கொடுமையை எண்ணி தன்னை தானே வேதனைப் படுத்திக் கொண்டு அவன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆனாலும் காதல் கொண்ட கணவனாய், மருத்துவர் ரதி தேவியிடம் “டாக்டர், இவ ரொம்ப வாந்தி எடுக்குறா, அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா டாக்டர்?”

இதைக் கேட்ட ரதி புன்னகைத்தாலும், “இப்போதைக்கு, மூணு மாசம் அப்படி தான் இருக்கும் சஞ்சீவ், அதுக்கு மேலேயும் கண்டினியு ஆனா, அப்போ பார்த்துக்கலாம். என்ன பிரஜி? ரொம்ப வாமிட் வருதா?” என்று கேட்டாள்.

அவளோ “அதெல்லாம் இல்லை டாக்டர், நாங்க வர்றோம்” என்று எழப் போனாள்.

ஆனால் மேலும் சஞ்சீவ், தன் மனைவி என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். சும்மாவே பிரஜீக்கு, வந்ததிலிருந்து ரதி சஞ்சீவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தது பிடிக்கவில்லை.

மேலும், ரதியின் பேச்சு அவளிடம் இருந்தாலும், பார்வை சஞ்சீவ் மேல் இருந்தது. இது போதாது என்று, மாத்திரை மருந்து எழுதிக் கொடுத்த பின்னும், எழுந்து வராமல், சஞ்சீவ் அவளிடம் பேசிக் கொண்டிருக்கவும், பிரஜீக்கு முகம் கடுகடுத்தது. தன் உடல் நலத்திற்காக தான், ஆரோக்கியமான உணவு வகைகளை கேட்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

ரதி “ஓகே சஞ்சீவ், வேற எதுவும் டவுட் இருக்கா?”

அவன் “இல்லை டாக்டர்” என்று சொன்னதும், “இருந்தாலும், தாராளமா போன் பண்ணி கேளுங்க சஞ்சீவ்” என்று புன்னகைத்தாள்.

‘ஆமா, இங்க பேசுனது பத்தலையோ இவளுக்கு, போன்ல வேற பேசப்போறளாக்கும. பேசுறது பாரு, சஞ்சீவ், சஞ்சீவ் ன்னு, என்னமோ இவ தான் பேர் வச்சா மாதிரி’ என்று மனதுள் அவளை அர்ச்சித்தவாறே, அவளைப் பார்த்து இளித்து விட்டு, வெளியே வந்து, “இரு பிரஜி நான் மாத்திரை வாங்கிட்டு வரேன்” என்று சஞ்சீவ் சொன்னதைக் கூட கேளாமல், விறு விறுவென்று சென்று விட்டாள்.

வெளியே அவன் பைக்கின் அருகே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாத்திரை வாங்கி வந்தவன், “அப்படி என்ன அவசரம்? சொல்றதுக் கூட கேட்காம இங்க வந்து நிக்கிற?” என்று எரிச்சல் பட்டான்.

ஆனால் அவளோ பதில் சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்து உம்மென்று இருக்கவும், சஞ்சீவ், அவளுக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ என எண்ணி, “என்னடா, வாந்தி வந்திருச்சா?” என்று அவள் தோளில் கை வைத்து அன்பாக விசாரித்தான்.

அவளோ, தன் தோளை இறக்கி, அவன் கையைத் தட்டி விட்டு, “வீட்டுக்கு போலாம்” என்று நிறுத்திக் கொண்டாள்.

அவனும் பெருமூச்சு விட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தான். பின் இரண்டு நாளில், பிரஜீயின் பிறந்த நாள் வந்தது. அன்று காலையில் கண் விழித்தவன், இன்னும் உறங்கும் தன் மனைவியைப் பார்த்து, ஒரு கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்து, ஒருக்களித்து படுத்து, மனைவியை ரசித்தவன், குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளை விழிக்க செய்தான்.

அவள் உசும்பவும், மீண்டும் அவள் கன்னத்தில் இதழ் பதித்து, அவள் காதருகில் “ஹாப்பி பர்த்டே, மை டியர் ஸ்வீட் ஹார்ட்” என்றான். அவளோ தூக்கம் கலைந்து, நெற்றி சுருக்கி அவனைப் பார்த்தாள். பின் சோம்பல் முறித்து, கண்களைக் கசக்கினாள்.

அப்பொழுது அவனோ, “என்ன குட்டிமா, தேங்க் யு கிடையாதா?” எனக் கேட்கவும், அவளோ தலையை மறுப்பாக ஆட்டி கிடையாது என்று உணர்த்தினாள்.

“கே, நீ தேங்க் யு சொல்லலேன்னா, நான் கிப்ட் கொடுத்திட்டே இருப்பேன்” என்று சஞ்சீவ் சொல்லவும், இவன் என்ன சொல்கிறான் என்று யோசிப்பதற்குள், அவள் கன்னத்தில் தொடர்ந்து “ம்ச் ம்ச் ம்ச்” என்று முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க, “ஏய்… ச்சீ… எச்சி” என்று தன் கன்னத்தை கையால் துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

ஆனால் அவனோ உருண்டு, அவள் மடியில் படுத்துக் கொண்டு, அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு “இம்… ம்ஹும்… தேங் பண்ணா தான் விடுவேன்” என்று அடம் பண்ணினான்.

அவளுக்கே ஆச்சரியம் கலந்த குழப்பம் ஆயிற்று. ‘என்னடா இது? இன்று எனக்கு தானே பிறந்த நாள். என்னமோ இவனுக்கு பிறந்தநாள் போல நம்மிடம், படுத்து, செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கிறான்’ என்று எண்ணினாள்.

ஆனாலும் அவனின் வாழ்த்தும், செய்கையும் அவளை நெகிழ்த்த, என்ன இருந்தாலும் அவனைக் காதல் செய்த மனது அல்லவா! இன்று அவனிடம் கடுமையாய் பேச வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் அதற்காக, உடனே பேசிவிட வேண்டும் என்றும் அவள் எண்ணவில்லை.

அதனால் அவனிடம் இருந்து தப்ப, “ஓஓ…க் “ என வாந்தி வருவது போல ஓங்கரிக்க, அவனும் “என்னமா ஆச்சு” என்று பதறி எழவும், இவள் வேகமாய் இறங்கி, அவனைப் பார்த்து வாயைச் சுழித்து, பழிப்பு காட்டி விட்டு, புன்னகையோடு குறும்பாக ஓடி விட்டாள்.

அவனோ மனதில் ‘அடிப்பாவி… ஏமாற்றிட்டாளே’ என்று எண்ணி, எழுந்து தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். பின் குளித்து வந்தவன், அவளுக்கு மில்க் ஸ்வீட் பிடிக்கும் என்று, நேற்று இரவு மில்க் ஸ்வீட் வாங்கி வந்து, குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை, எடுத்து வந்து சமையல் செய்து கொண்டிருந்தவளிடம் சென்றான்.

அவள் பின்னே நின்றவன், “பிரஜி” என அழைக்க, அவள் திரும்பவும், அவன் “ஆ… சொல்லு” எனச் சொல்ல, அவளோ “ஏன்…” எனக் கேட்க, அந்த இடைவெளியில், அவள் வாயில் ஒரு மில்க் ஸ்வீட்டை வைத்து, ஊட்டி “ஹாப்பி பர்த்டே பிரஜிமா” என்று சொல்லி, அவளை மென்மையாய் அணைக்க, இப்பொழுது பிரஜீக்கு நிஜமாவே வாந்தி வர, அவள் ஓங்கரித்தாள்.

தன் அணைப்பைப் பிடிக்காமல், அவள் வேண்டுமென்றே காலையில் செய்தது போல விளையாட்டுக்கு செய்கிறாள் என்றெண்ணி, தன்னை தள்ள முயன்றவளை, தன் இறுகிய அணைப்பால் தடுத்தான். அவள் வேறு வழியில்லாமல், அவள் சாய்ந்திருந்த அவன் மார்ப்பிலயே வாந்தி எடுத்து விட்டாள்.

வாந்தி எடுக்கவும் தன்னை விலக்கியவன், திட்டப் போகிறான் என்று பயந்து போய் பார்த்தாள். நீட்டாய் உடுத்தி அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தவன் சட்டை மீது வாந்தி எடுத்தால், திட்டாமல் என்ன செய்வான் என்றெண்ணி “சா…. ரி…” எனப் பாவம் போல சொன்னாள்.

அவனோ புன்னகைத்து, “நான் தான் சாரி சொல்லணும் பிரஜி, நான் கூட காலைல என்ன ஏமாத்துன மாதிரி தான், இப்பவும் ஏமாற்ற போற போலன்னு தான்…..” என்று தயங்கி விட்டு, “சரி நீ போய் சமையல்ல கவனி, நான் கிளீன் பண்ணிக்கிறேன்” என்று தன் சட்டையைக் கழற்றவும், தன் சட்டையை தான் சுத்தம் செய்ய போகிறான் என்று அவள் எண்ணி, தரையைச் சுத்தம் செய்வதற்கு தண்ணீரைப் பிடித்தாள்.

ஆனால் அதற்குள் அவனே பழைய துணியால் தண்ணீர் விட்டு அவன் கழுவ போக, “ஐயோ… வேணாம்ங்க, நான்…. நான் பண்ணிக்கிறேன்” என்று அவன் கைப் பிடித்து தடுத்தாள்.

“இருக்கட்டும் பிரஜி, என்னால தான இப்படி ஆச்சு, நானே கிளீன் பண்ணிக்கிறேன், நீ போய் சமையல்ல கவனி” என்று அவளை அனுப்பி விட்டு, தரையைச் சுத்தம் செய்ய, அடுப்பின் பக்கம் திரும்பி உருளைகிழங்கை வறுத்தவளுக்கு, ஏனோ கண்களில் இருந்து, இரண்டு சொட்டு கண்ணீர் உருண்டு சமையல் மேடையில் சிந்தியது.

அது கணவனின் அன்பான செய்கையால் மனம் நெகிழ்ந்து கசிந்ததா, அல்லது அவன் மீது தான் கொண்ட வெறுப்பும், தன் மீது அவன் கொண்ட காதலும் சரிசமமாய் போட்டி போட்டுக் கொண்டு, மோதி கொண்டதன் விழைவால் வந்ததா என்று அவளுக்கு தெரியவில்லை.

ஆனால் ஒன்று புரிந்தது. அவனின் காதலை அவளால் மறுக்கவும் முடியவில்லை, அவன் மீது கொண்ட கோபத்தை அவளால் மறக்கவும் முடியவில்லை.

பிரஜி தன் பிறந்தநாள் என்று சொல்லி, சங்கீக்கு தான் செய்த கேசரியைக் கொடுத்து விட்டு வந்தாள். பின் தன் அத்தைக்கு அலைப்பேசியில் அழைத்து, தன் பிறந்த நாள் என்று தெரிவித்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். சிறிது நேரத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய தந்தையிடம் பேசினாள்.

பின் சங்கீ வந்து அவளுக்கு ஒரு டெடியை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தாள். அவள் “நான் என்ன சின்ன குழந்தையா சங்கீ, இருக்கட்டும் சங்கீ” என்று அவள் மறுத்தும், சங்கீ அவள் கையில் திணித்து, “ஐயோ அத “அம்மா வேணும்” னு அழுத கைக் குழந்த சொல்லுது பா” என்று கண்ணைப் போலியாய் கசக்கி, அவளைக் கேலி செய்ய “சீஈ… போ” என்று முகம் சுருக்கி வெட்கப்பட்டுப் பிரஜி சொல்ல,

“ஹேய்… இதெல்லாம், நீ அண்ணன்ட்ட தான் சொல்லணும், என்ட்ட சொல்லக் கூடாது மா” என்றாள் சங்கீ.

அதற்கும் அவள் “சீ… உன்ன…” என்று டெடியை வைத்து அடிப்பது போல அவள் கை உயர்த்த, “ஐயோ… அம்மாடி” எனச் சங்கீ வெளியே ஓட, அப்பொழுது சரியாய் ஜெய் வர, அவன் மீது மோதி நின்றாள்.

அவனோ அவளைத் தாங்கிக் கொண்டே “ஹே… என்ன டியர், அதிசயமா இருக்கு, உன்னோட மிஸ்டர் மேல இவ்ளோ ஆசையா? சொல்லவே இல்ல” எனக் கண்ணில் காதலோடு, அவள் காதருகில் குனிந்து சொல்ல, அவளோ வெட்கப்பட்டுக் கொண்டே “அய்யோ… விடுங்க… பிரஜி இருக்கா” என்று பல்லைக் கடித்து கூறிக் கொண்டே, தன்னை விடுவித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஓடி விட்டாள்.

பின் அவன், பிரஜீயைப் பார்த்து சங்கடப்பட்டு, ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு உள்ளே சென்று மறைந்தான்.

பிரஜீக்கு அவர்கள் இருவரின் அன்னியோனியத்தைப் பார்க்கவும், ஏக்கம் மேலிட்டது. தானும் சஞ்சீவோடு இரண்டு மாதங்கள் முன்பு, இப்படி தானே அன்னியோனியமான தம்பதிகளாய் சிறகடித்து, சந்தோசமாய் பறந்தோம். யார் கண் பட்டதோ, இப்போது… இப்படி… என அதற்கு மேல் அவளால் நினைக்க முடியாமல் தொண்டை அடைத்தது.

அவள் அப்படி எண்ணிக் கொண்டே படுக்கையில் சுருண்டிருந்த வேளையில், “பிரஜி… பிரஜீமா….” என அழைத்துக் கொண்டு சஞ்சீவ் அவள் முன் நின்றான்.

அப்பொழுது தான் நிறைய நாட்களுக்கு பின் அவனை முழுமையாய் ஊன்றி பார்த்தாள். இளம் நீல நிற சட்டையும், அதற்கு பொருத்தமாய் சந்தன நிற கால்சட்டையும், அணிந்து கம்பீரமாய், கச்சிதமாய் இருந்தான். கன்னத்தில் குழி விழுக புன்னகைத்துக் கொண்டே, “பிரஜி… ப்ளீஸ், நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டப் போறேன். அதனால உன் கண்ணப் பொத்தி கூட்டிட்டு போறேன். ப்ளீஸ்……” எனக் குழந்தை போல கண்ணைச் சுருக்கி, கெஞ்சினான்.

அவள் உடலும், மனமும் சோர்ந்திருந்ததால், அவனிடம் முறுக்கிக் கொள்ளாமல் “இம்…” எனத் தலையாட்டி சம்மதித்தாள். அவன், தன் கரங்களால் அவள் கண்ணை மூடி, அவளை வரவேற்பறை வெளியே, வாசலின் அருகே கூட்டி சென்று, தன் கரத்தை விலக்கினான்.

அங்கே ஒரு சிறிய கூண்டில், இரு ஜோடி லவ் பர்ட்ஸ் இருந்தது. அவர்களைப் பார்த்து “கீச் கீச் “ எனச் சத்தமிட்டன.

 

மாயம் தொடரும்……….

error: Content is protected !!