imk-30(1)

௩௧(31)

இருமுனைக் கத்தி

தமிழச்சியும் சிம்மாவும் விடிந்ததுமே விக்ரமைக் காண தங்கள் காரில் புறப்பட்டு இருந்தனர். அவளுக்கு விக்ரமைப் பார்த்து எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டுமென்கிற டென்ஷன். கூடவே விக்ரம் முகத்தை எப்படி எதிர்க்கொள்வது என்ற அச்சம் வேறு.

ஆனால் சிம்மா கேஸ் விஷயமாக இவானைப் பார்த்துப் பேசவே  அவளோடு சென்றான். அதோடு இல்லாமல் இவானுக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே அவன் டிபார்ட்மெண்டில் இருந்து அழைப்பு வந்துவிட்டதால் உடனே பயணச்சீட்டிற்கு ஏற்பாடு செய்து இரவு விமானத்தில் புறப்பட இருந்தான்.

 விக்ரம் வீட்டின் வாயிலில் இருவரும் இறங்கி உள்ளே நுழையும் போதே  தமிழச்சி தன் கணவனைத் தேடிக் கொண்டே வர, சிம்மாவைப் பார்த்த விஷ்வாவும் ஆதியும் அவனை ஆர்வமாய் உள்ளே அழைத்து உபசரித்தனர். அவனும் இயல்பாய் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க தமிழச்சியின் விழிகள் தன் கணவனின் தரிசனத்திற்காகவே காத்திருந்தது.

சிம்மா அப்போது விக்ரம் பற்றிக் கேட்க, அவன் விடியற் காலையிலேயே புறப்பட்டுவிட்டதாக விஷ்வா உரைத்தார்.

அவள் முகம் வருத்தமாய் மாற, அப்போது உடற்பயிற்சி முடித்துவந்த இவான் அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவன் இயல்பாய் சிம்மாவிடம் பேச ஆதியும் விஷ்வாவும் வியப்பாய் பார்த்து, “உனக்கு முன்னாடியே இவானைத் தெரியுமா?” என்று சிம்மாவைப் பார்த்து வியப்பாய் கேட்டார்.

“தெரியும்…  நான்தான் விக்ரம் கிட்ட சொல்லி இவானை இங்க தங்க வைக்க சொன்னேன்” என்றதும் இருவரும் அவனைக் குழப்பமாய் பார்த்தனர்.

 சிம்மா மேலும், “நான் உங்ககிட்ட நிறைய விஷயம் சொல்லணும்… எல்லாத்தையும் உங்களுக்கு அப்புறமா பொறுமையா விளக்கி சொல்றேன்” என்றான்.

அவர்கள் முகத்தில் இருந்த குழப்பம் மறையவில்லை, எனினும் சிம்மா சொன்னதற்கு அவர்கள் தலையசைத்தனர். சிம்மா பிறகு இவானிடம் பேச வேண்டும் என்று அவனோடு அறைக்குள் சென்று விட்டான்.

இவர்களின் எந்த உரையாடல்களையும் தமிழச்சி கவனிக்கவே இல்லை.  ‘இவ்வளவு காலைல அவனுக்கு அப்படி என்ன வேலை?’ என்று விக்ரமைத் திட்டிக் கொண்டே கோபமாய் நின்றிருந்தாள்.

“தமிழச்சி” என்று அப்போது ஆதி அவள் தோளைத் தொடவும் சிந்தனையில் இருந்து மீண்டவள் அவரிடம், “அப்படி என்ன காலையிலேயே வேலை அவனுக்கு?” என்று தன் மனதிலிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள்.  

“நாளைக்கு பிரச்சாரத்துக்காக பிஎம் சென்னை வராங்களாம்… அவங்க கட்சி சார்பா ஏற்பாடு எல்லாம் இவன்தான் பார்த்துக்கறான்” என்று அவர் உரைத்ததும், “ஆமா இல்ல” என்று தமிழச்சி அப்போதே அந்த விஷயத்தை நினைவு கூர்ந்தாள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்து கொண்டு இருந்தது. அவளுக்கும்  நன்றாகத் தெரியும். ஆனாலும் விக்ரமைப் பார்க்க முடியவில்லை என்ற ஏமாற்றம் மனதில் குத்திக் கொண்டுதான் இருந்தது.

“நைட் வருவாரா அங்கிள்?” என்றவள் மீண்டும் கேட்க விஷ்வாவிற்கும்  அருகில் நின்றிருந்த ஆதிக்கும் அவள் தவிப்பு ஒருவாறு புரிந்தது. ஆனால் அவன் தமிழச்சியைத் தவிர்க்க எண்ணுகிறான் என்று எப்படி சொல்வது என்ற தயக்கம். அதை சொன்னால் அவள் மனம் புண்படும் என்று அவர்கள் யோசித்துவிட்டு விஷ்வா அவளிடம், “வருவான்… ஆனா ரொம்ப லேட் ஆகும்மா” என்றார்.

“வருவான் இல்ல… அது போதும்… அவன் எவ்வளவு லேட்டா வந்தாலும் பரவாயில்ல… நான் வந்து அவன்கிட்டபேசிட்டுத்தான் போவேன்” என்று சொல்லிவிட்டு அவள் புறப்பட, ஆதிக்கும் விஷ்வாவிற்கு ரொம்பவும் சங்கடமாய் இருந்தது.

அவள் வெளியேறுவதற்கு முன்னதாக சிம்மாவிடமும்  இவானிடமும் சொல்லிவிட்டு செல்ல, அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள். இருவரும் அப்போது தீவிரமாய் அந்த நடராஜர் சிலையின் புகைப்படத்தைப் பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தனர்.

“எனக்கு டைம் ஆகுது… நான் கிளம்புறேன்” என்றவள் சொல்ல சிம்மா அவளிடம், “ஒரு டென் மினிட்ஸ் இரு… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைக் காண்பிக்கணும்” என்றான்.

அவள் என்னவென்று பார்க்க இவான் தன்னிடம் இருந்த நடராஜர் சிலை புகைப்படத்தைக் காண்பிக்க அவள் உடனே, “இது எதாச்சும் கடத்தப்பட்ட சிலையா?” என்று கேட்டாள்.

சிம்மா அப்போது நியூயார்க்கில் சைதன்யா அந்த நடராஜர் சிலையின் போட்டோவை வைத்து ஏலம் விட்ட கதையெல்லாம் அவளிடம் சொல்லி இறுதியாய், “அங்கே போட்டோ எடுக்க கூட அலோவ் பண்ணல தமிழச்சி… இவான்தான் நியூயார்க்ல இருக்க அவரோட நண்பர்கள் மூலமா இந்த சிலையோட போட்டோவை வரவழைச்சிருக்கார்” என்றார்.

“இந்த சிலை இந்தியாவை விட்டுப் போக விடக் கூடாது… அதுக்குள்ள இந்த சிலையை எந்தக் கோவிலோடது என்னன்னு நாம கண்டுப்பிடிக்கணும்” என்றான்.

 அவனை ஆழ்ந்து பார்த்தவள், “அதெப்படி… இந்த சிலையை இந்தியாவில  வைச்சுக்கிட்டு அங்க அவன் ஏலம் விட்டிருப்பான்… அது அவனுக்கு ரிஸ்க் இல்லையா?” என்று கேட்க,

“சிலை அவன்கிட்ட இருந்திருந்தா சிலையை வைச்சே அவன் ஏலம் விட்டிருக்கலாமே” என்றான் சிம்மா.

இவான் தமிழச்சியைப் பார்த்து, “சிம்மா சொல்ற லாஜிக் சரிதான்… அதேநேரம் அவன் அவ்வளவு அசால்டா ரிஸ்க் எடுத்திருக்க மாட்டான்… நிச்சயம் அந்த சிலை அவனுக்கு ரொம்ப நம்பிக்கை ஆனவங்க கிட்டதான் இருக்கணும்” என்றான்.

தமிழச்சி சிம்மாவைக் கேள்வியாகப் பார்த்து, “சைதன்யா ஒரு வேளை அந்த சிலைக்காகத்தான் வர்றானோ?” என்று கேட்க, “அப்போ சிலை” என்று மூவரும் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது இவான் அவர்களிடம், “ஒரு வேளை அந்த சிலை யு எஸ் வந்தா நிச்சயம் அது சைதன்யா கைக்குப் போக விடாம நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“அங்கே தான் சிக்கலே… அந்த சிலை யு எஸ் போனா பரவாயில்ல… ஆனா வேற எங்கயாச்சும் போனா… அவனுக்குத்தான் உலகம் பூராவும் நெட்வொர்க் இருக்கே” என்று சிம்மா கவலையாக சொல்ல தமிழச்சி தன் தமையனைப் பார்த்து, “சியர் அப்… இந்தத் தடவை அந்தக் கிரிமினல் இந்தியா உள்ளே வந்துட்டு வெளிய போகவே மாட்டான்” என்றவள் சொல்லி நம்பிக்கையோடு  புன்னகைக்க, சைதன்யாவைக் கைது செய்யப் போவதைதான் அவள் அப்படி சொல்கிறாள் என்பது இருவருக்கும் புரிந்தது . அதில் அவள் ரொம்பவும் தீவிரமாய் இருக்கிறாள்.

 “சொல்றதைக் கேளுங்க தமிழச்சி…  சைதன்யாவை அரெஸ்ட் பண்ற வேலையை எங்க டிபார்ட்மெண்ட் கிட்ட விட்றுங்க” என்றான் இவான்.

“நோ வே… அவன் தாய் நாட்டுக்கே துரோகம் செஞ்சிருக்கான்… ப்ளடி ராஸ்கல்… அவனை இங்கதான் அரெஸ்ட் பண்ணனும்…” என்றவள் சீற்றமாய் சொல்ல, சிம்மா இவானைக் கவலையோடுப் பார்த்தான். அவள் இந்தக் காரியத்தை செய்தால் அவளுக்கு எந்த எல்லைக்கும் பிரச்சனை வரலாம் என்ற எண்ணம் சிம்மாவின் மனதை நெருட,

இவானோ அவள் தைரியத்தைப் பார்த்து மெச்சிக் கொண்டான்.

“கோ அஹெட்… எங்க டிபார்ட்மென்ட் மூலமாக நான் இதுல உங்களுக்கு எல்லா விதத்திலயும் சப்போர்ட்டிவ்வா இருப்பேன்” என்றான்.

“தேங்க்ஸ்” என்று தமிழச்சி அவனைப் பார்த்து புன்னகைக்க அப்போது சிம்மா தங்கையிடம், “இருந்தாலும் நீ இந்த விஷயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா மூவ் பண்ணு” என்றான்.

“எஸ் எஸ்” என்று இவானும் அவன் வார்த்தைகளை ஆமோதிக்க,

அவர்கள் சொன்னதை தலையசைத்துக் கேட்டுக் கொண்டவள்  தன் கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “ஓகே ஒகே.. நான் கிளம்புறேன்… இந்த சிலையை நான் என் ஃபோன்ல போட்டோ எடுத்துக்கிறேன்” என்று அந்தப் புகைப்படத்தை தன் கைபேசிக்குள் படமாக்கிக் கொண்டவள், “வினோத்துக்கு இல்ல அந்த குமாருக்கு இந்த சிலையைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு… நான் விசாரிச்சுப் பார்த்துட்டு சொல்றேன்”என்றாள்.

அவள் சொன்னது போல் அவர்களுக்குத் தெரிந்தால் நலம். இல்லையெனில் அந்த சிலையைத் தேடுவது திக்கு தெரியாத காட்டில் சுற்றுவது போலத்தான் என்று சிம்மா எண்ணிக் கொண்டான்,

 அப்போது இவான் போக இருந்தவளை, “தமிழச்சி” என்று அழைத்து,

“ஐம் லீவிங் டுநைட்” என்று அவளிடம் ஏக்கம் நிரம்பிய பார்வையோடு சொல்லவும், “தெரியும்…  சிம்மா சொன்னான்… நான் கண்டிப்பா நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி வந்துடுறேன்” என்றாள்.

அந்த ஒரு பார்வையில் தமிழச்சியின் விஷயத்தில் இவானின் எண்ணவோட்டத்தைக் கணித்திருந்தான் சிம்மா. அப்படியெனில் விக்ரமின் கவலை சரிதானா என்று தோன்றியது. ஆனால் அர்த்தமில்லாமல் இவான் தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆசைக்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது.

********

தமிழச்சி அங்கிருந்து புறப்பட்டு நேராக குமாரும் வினோத்தும் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் அந்த சிலையைக் காண்பித்து விசாரணையை நடத்த, அவர்கள் இருவருக்குமே அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை.

அப்போது அவளுக்கு அந்த சிலை திருடர்கள் பற்றிய  நினைவு வந்தது. ஒரு வேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால் என்று எண்ணியவள் லாக் அப்பில் இருந்த திருடர்களிடம் அந்த சிலையின் போட்டோவைக் காண்பித்து விசாரிக்க, முதலில் தெரியாது என்று மறுத்தவர்கள் பின் அவள் விசாரணையின் தீவிரத்தில் அந்த சிலைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்த உண்மையை அவளிடம் உரைத்தனர்.

அதாவது கமலக்கண்ணன் சொன்னபடி அவர்கள் தஞ்சையில் இருந்த ஒரு தரகர் மூலமாக  அந்த சிலையைக் கொண்டுவந்து கமலக்கண்ணனிடம் சேர்ப்பித்ததாக சொல்ல அவளுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.

“அந்த தரகர் எங்கடா இருக்கான்?” என்று அவர்கள் இருவரையும் அவள் அறைந்து கேட்க, அவர்கள் அஞ்சிக் கொண்டு அவனைப் பற்றிய தகவல்களை உரைத்தனர். அந்த ஊர் காவல் நிலையத்திற்கு அழைத்து உடனடியாக அந்தத் தரகனை கைது செய்ய சொல்லி உத்தரவு பிறப்பித்தாள்.

அதேநேரம் அவளுக்கு சிலை விவகாரம் ஒரு வகையில் ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டு நாள் முன்பு இவான் கிரீடத்தை ஒப்படைக்கும் போதே கமலக்கண்ணனின் கடையில் உள்ள ரகசிய அறையைப் பற்றி உரைத்தான். அங்கிருந்த வேறு சில பழமையான பொக்கிஷங்களை மீட்ட கையோடு அவன் வீட்டை சுற்றிலும் தோண்டி அவன் புதைத்து வைத்திருந்தப் பழமையான சிலைகளயும் மீட்டெடுத்துவிட்டாகியது. ஏடிஜிபி தயாளனிடம் மட்டும் இந்தத் தகவலை உரைத்தாள்.

செய்திகளில் இந்த விஷயமெல்லாம் வராமல் எச்சரிக்கையாக இருந்தாள். சைதன்யாவை கைது செய்ய அரெஸ்ட் வாரன்ட் பெறும் வரை எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

ஆனால் அவள் கண்டெடுத்த சிலைகளில் இந்த நடராஜர் சிலையைப் பார்த்ததாக அவளுக்கு நினைவில்லை.  நிச்சயம் அந்த சிலை கமலக்கண்ணனிடம் இருந்தால் அவளிடம் அது  நிச்சயம் சிக்கியிருக்கும்.

அப்படியெனில் அந்தச் சிலை கமலக்கண்ணனிடம் இருந்து கைமாறி இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. கமலக்கண்ணன் இறந்துவிட்ட காரணத்தால் இப்போது அதைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் சிரமம் கூட.

அப்படியே அந்தத் தரகரை விசாரித்தாலும் அவன் எந்தக் கோவிலில் இருந்து அந்த சிலையை எடுத்திருக்கிறான் என்ற தகவல் மட்டுமே கிடைக்கும் என்று எண்ணி மனம் தளர்ந்தாள்.

******

இரவு… ஏடிஜிபி தயாளனின் அலுவலக அறை.

அவர் இருக்கைக்கு வலது புறத்தில் போலிஸுக்கே உண்டான மிடுக்கோடு தமிழச்சி நின்றிருந்ததாள்.  சிலைக் கடத்தல் வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டாள். அதுவும் அவள் கேட்ட ஒரு வாரக் கெடுவிற்கு முன்னதாக.

தயாளனுக்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இதற்காகவே அவளை இந்த வழக்கில் இருந்து விலக்கிவிட பலதரப்பட்ட முயற்சிகள் நடந்தன. பெரிய இடங்களில் இருந்து அவளைத் தூக்க சொல்லி அழுத்தங்கள் வந்த நிலையில் கமலக்கண்ணனின் கொலையைக் குற்றமாய் சுட்டிக்காட்டி அவளைத் தூக்கிவிடலாம் என்ற அவரின் யுக்தி பலிக்கவில்லை.

அவர் தீவிர ஆலோசனையோடு அவள் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டிருக்க, தமிழச்சிஅவற்றை எல்லாம் அவர் பார்த்து முடிக்கும் வரை மௌனம் காத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்த தயாளன் தொண்டையை செருமிக் கொண்டு ஏதோ சொல்ல வர, “சைதன்யாவை உடனே அரெஸ்ட் பண்ணனும் சார்… அவன் நேரடியா கமலக்கண்ணனோட டீல் பண்ணி இருக்கான்… அவன் மூலமா குமாரை அணுகி ராஜராஜேஸ்வரி கிரீடத்தைப் போலியா மாத்திக் கடத்த இருக்கான்… இதுல இன்ஸ்பெக்டர் வினோத்தும் உடந்தை… வினோத் என்னை ரவுடிங்கள வைச்சு கொலை பண்ணவும் ட்ரை பண்ணி இருக்காரு” என்று அவள் முந்திக் கொண்டு படபடவென தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“இன்ஸ்பெக்டர் வினோத் எங்கே தமிழச்சி?” என்று தயாளன் கேட்க,

“என்னோட கஸ்டடிலதான் இருக்கார்… யாருக்கும் தெரியாத எனக்கு நம்பகமான இடத்துல வைச்சிருக்கேன் சார்”

“அதெப்படி?” என்று அவர் ஏதோ கேட்க முனைய, “வினோத் அரெஸ்ட் பண்ண விஷயம் தெரிஞ்சா குற்றவாளிகள் அலர்ட் ஆயிடுவாங்க… அதனாலதான் இதுல அபிஷியலா எந்த ரெகார்டும் பண்ணாம பெர்சனலா எல்லாரையும் என்னோட நேரடி கண்ட்ரோல்ல வைச்சிருக்கேன்… தேவைப்படும் போது வினோத் உட்பட சம்பந்தப்பட்ட எல்லோரையும் கோர்ட்ல ஆஜர் படுத்திடுறேன்” என்றாள்.

 தயாளன் முகத்தில் இப்போது அதிர்ச்சியைத் தாண்டி அச்சம் தொற்றிக் கொண்டது. அவள் இந்தளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறாள் எனில் இந்த வழக்கை அவள் அடுத்த கட்ட விசாரணைக்குக் கொண்டு செல்லாமல் விடமாட்டாள். இது நிச்சயம் பெரிய விபரீதத்தில் முடியும் என்பது மட்டும் அவருக்கு நன்றாய் புரிந்தது. அவரின் வேலை கொடுத்த அனுபவும்  வயதின் முதிர்ச்சியாலும் தெளிவாய் யோசித்தவர், “அவசரப்பட்டு இதுல நான் எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று எச்சரிக்கையாக சொல்ல,

“ஏன் சார்… இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது சைதன்யாவிற்கு அரெஸ்ட் வாரன்ட் கொடுக்குறதுல  உங்களுக்கு என்ன பிரச்சனை? அதுவுமில்லாம இந்த ஆதாரம் எல்லாம் நம்ம கைக்கு கிடைச்சிருக்குன்னு சைதன்யா காதுக்குப் போறதுக்கு முன்னாடி நாம நடவடிக்கை எடுத்தாகணும்” என்றாள் பரபரப்போடு!

அவள்  முடிவாய் யோசித்துவிட்டுத்தான் பேசுகிறாள் என்பதை உணர்ந்தவர், “ஆதாரமெல்லாம் சரிதான் தமிழ்… ஆனா உனக்குத் தெரியாது… உங்க அப்பாவுக்குத் தெரியும்… கேட்டுப் பாரு… இதுவரைக்கும் எவ்வளவோ சிலைக் கடத்தல் குற்றவாளியை நாம பிடிச்சாலும் ஒன்னும் செய்ய முடியல…” என்றவர் நடப்பை வெளிப்படையாகவே உரைத்தார்.

“முடியும் சார்… இதான் ரைட் டைம்… எலெக்ஷன் டென்ஷன்ல இருக்காங்க… ஆளுங்கட்சியாவே இருந்தாலும் இந்த நேரத்துல அவங்க பவர் எடுபடாது” என்று அவள் தெளிவாய் உரைக்க அவர்  விழிகள் வியப்பில் அகன்றது.

சைதன்யாவின் ஆளுங்கட்சி பலத்தையும் அவள் தெரிந்து கொண்டுதான் பேசுகிறாள் என்பதில் அவருக்கு மேலும் அதிர்ச்சி. சில நொடிகள் யோசித்தவர், “தமிழச்சி… நல்லா யோசிச்சுக்கோ… திரும்பியும் எஸ்பி கட்சியே ஆட்சிக்கு வந்துட்டா அப்புறம் இந்த வழக்கு ஒன்னும் இல்லாம போயிடும்” என்றவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார்.

“இப்போ சைதன்யா மேல ஆக்ஷன் எடுக்கலைன்னா அப்புறம் எப்பவுமே  முடியாது… அவன் இன்னும் இரண்டு நாளில் டில்லிக்கு வரப் போறான்னு நியூஸ்… நான் இந்த வாய்ப்பை தவறவிட விரும்பல… நீங்க எனக்கு அவனைக் கைது பண்ண அரெஸ்ட் வாரன்ட் மட்டும் கொடுங்க… மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று அவள் முடிவாய் உரைத்துப் பிடிவாதமாய் நின்றாள். அவருக்கு அந்த நொடி வீரேந்திரனைப் பார்த்த உணர்வுதான்.

அனைத்துத் தடைகளையும் உடைத்து அவள் தான் நினைத்ததை சாதித்துக் காட்டிவிட்டாள். இறுதியாய் முடிவு எடுக்கும் சிக்கலான நிலையில் மாட்டிக் கொண்டார் தயாளன்.