SSKN — epi 10

அத்தியாயம் 10

 

பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்

வானத்தில் அது பறக்கும்

காத்திருந்தால் தான் இருவருக்கும்

காதல் அதிகரிக்கும்

 

அந்த பொன் மாலை பொழுதை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்தார் வெங்கி. மணி வெளியே சென்றிருக்க, கவிலயா தலையைப் பிடித்துக் கொண்டு வெங்கியின் ரூமில் அமர்ந்திருந்தாள்.

“இந்த கோட் நல்லா இருக்கா ஹனி?”

“நல்லா இருக்குப்பா. இதுக்கு முன்ன நீங்க கழட்டிப் போட்ட சாம்பல் கலர் கோட் கூட நல்லாத்தான் இருந்துச்சு. அதுக்கும் முன்ன கழட்டிப் போட்ட நீல கோட் கூட மிக நல்லாவே இருந்துச்சு” என நீட்டி முழக்கினாள்.

உள்ளே லைட் ஊதா கலரில் ஷேர்ட் போட்டு அதன் மேலே கருப்பு நிற கோட் போட்டிருந்தார். கோட்டுக்கு ஏற்ற நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். இன்னும் டை அணிவதுதான் பாக்கி.

“நெஜமா நல்லா இருக்காம்மா?”

“மிஸ்டர் வெங்கி, நீங்க எது போட்டாலும் நல்லாத்தான் இருக்கும். நல்ல கலரா இருக்கீங்க, ரிம்லெஸ் கண்ணாடி வேற, லேசா நறைச்சிருந்தாலும் சின்ன சொட்டை கூட இல்லாத தலைமுடி, சின்னதா ப்ரென்ச் தாடின்னு எங்கப்பா எப்பவுமே ஹேண்ட்ஷம்தான். சோ நோ நீட் டூ வோரி. ஆனா டேட்டிங்க்கு போறதுக்கு இந்த மாதிரி பார்மல் ட்ரெஸ்சிங் தான் ஒரு மாதிரியா இருக்குப்பா”

“இல்லம்மா, அவ இம்ப்ரெஸ் ஆக வேணாமா?”

“ஐயோ அப்பா! அவங்க உங்கள லுங்கியோட கூட பார்த்துருக்காங்க. ஏன் சில சமயம் வெளிய நீங்க கார்டெனிங் செய்யறப்போ டீ சர்ட் இல்லாம கூட பார்த்துருப்பாங்க. இப்போ போய் இம்ப்ரேஸ் ஆகனும்னு இப்படி நீங்க அலம்பல் பண்ணறது நல்லா இல்ல சொல்லிட்டேன்.”

“என்னை டீ ஷர்ட் இல்லாம பாத்துருக்காளா உன் மீராம்மா? என் சிக்ஸ் பேக்க பாத்து கூடவா என் ப்ரோபோசல ரிஜேக்ட் பண்ணுறா?”

கட்டிலில் விழுந்து புரண்டு சிரித்தாள் கவி.

“நினைப்புத்தான்பா உங்களுக்கு. சிக்ஸ் பேக்கா? சிக்ஸ் கேக்குன்னு வேணும்னா சொல்லலாம். ஆறு கேக்க ஒன்னா அடிச்சு விட்டா வயிறு உப்பிக்குமே அப்படி வயித்த வச்சிக்கிட்டு சிக்ஸ் பேக்காம்!”

“இதெல்லாம் நல்லா இல்லை கவிம்மா. உன் ஆளு வரிக்குதிரை மாதிரி வயித்துல கோடு கோடா வச்சிருக்கான்னு, பெத்த அப்பாவையே நீ கலாய்க்கக் கூடாது” மகளைப் பார்த்து சிரித்தப்படியே சொன்னார் வெங்கி.

கவி கிண்டல் செய்த மாதிரி அவர் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. ஐம்பதை நெருங்கினாலும் இன்னும் உடம்பை கட்டுக் கோப்பாகத்தான் வைத்திருந்தார். இந்த மாதிரி வெளி மாநிலங்களுக்கு செமினார் அல்லது கான்பரண்ஸ் போகும் போது, கிடைத்ததை சாப்பிடுவதால் திரும்பி வரும் போது குட்டி தொப்பையோடு வருவார். இங்கு வந்து மீரா வைத்து தரும் கொள்ளு ரசம், விடாத உடற்பயிற்சி என பாடுபட்டு ஏறிய எடையைக் குறைப்பார். நேற்றுதான் சிக்காகோவில் இருந்து வந்திருந்தார் குட்டி தொந்தியோடு. அதைத்தான் கிண்டல் அடித்தாள் கவி.

“எப்படிம்மா மீரா என் கூட டேட்டிங் வர ஒத்துக்கிட்டா?”

“அவங்க எங்க ஒத்துக்கிட்டாங்க! முடியாதுன்னு ஒரே புலம்பல். கண்ணுல தண்ணி வேற வச்சிக்கிட்டாங்க. நான் தான் ஓன் டைம் போங்க. பிடிக்கலனா இனிமே நான் போர்ஸ் பண்ண மாட்டேன் அப்படின்னு சமாதானப்ப படுத்திருக்கேன்” என்றவள் தன் அப்பாவைக் கூர்ந்துப் பார்த்து,

“பிடிக்கலனா போர்ஸ் பண்ண மாட்டீங்கதானேப்பா? என்னை நம்பி மட்டும் தான் வராங்க. என் மேல உள்ள பாசத்துல வராங்க. அவங்க உங்கள ரிஜேக்ட் பண்ணிட்டா, விட்டறனும். விட்டுருவீங்கத்தானேப்பா?” என கேட்டாள்.

“கண்டிப்பாமா! பிடிக்காதவங்கள போர்ஸ் பண்ண உன் அப்பா என்ன ரோட் சைட் ரோமியோவா!” என மகளின் முகம் பார்க்காமல் சொன்னார் வெங்கி.

ஆனால் மனதில்,

‘அப்படியே விட்டுற அவ என்ன வெறும் வீட்டு வேலைக்காரியா? என்னோட வாலிபத்த வாழ வைக்க வந்த சாகசக்காரி! இப்போ பிடிக்கலைனா போகுது, போக போக பிடிக்க வைப்பேன். அது சரி, நான் இன்னும் வாலிபனா? ஜஸ்ட் நாற்பத்தி ஒன்பது தானே இப்போ, கன்சிடர் வாலிபன் தான். அப்படியே மனசுல நினைப்போம். மனசு நினக்கறத தான் உடம்பும் நம்பும். இது இளமை கொஞ்சும் வயசுடா’ என நினைத்தவாறே பாடிஷோப் பெர்பியுமை அடித்துக் கொண்டார். அதில் வந்த இதமான பூ வாசம் ரூமை நிறைத்தது.

தன் அப்பாவையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் கவி. அவர் முகத்தில் பூத்திருந்த அழகிய புன்னகை என்றும் வாடாமல் இருக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டாள்.

“போம்மா, போய் மீரா ரெடி ஆகிட்டாங்களான்னு பாத்துட்டு வா”

மீராவின் ரூமுக்கு சென்றவள், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

“மீராம்மா”

“என்ன கவிம்மா?”

“இன்னும் கிளம்பலையா?”

“கிளம்பிட்டேனே! ஏன் நல்லா இல்லையா?” என அவளையே சந்தேகம் கேட்டார் அவர்.

அவரை மேலிருந்து கீழ் வரை பார்த்த கவிக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. தன்னுடன் வரும் போதாவது மேக்கப் போட்டு லட்சணமாக வருபவர், இப்பொழுது வெறும் முகம் மட்டும் கழுவி சின்னதாகப் பொட்டிட்டிருந்தார். நீல ஜீன்ஸ் அணிந்து, அடுப்பு துடைக்கும் துணியாவது நல்ல கலரில் இருக்கும் என சொல்லும் அளவுக்கு கருப்போ, கருநீலமோ, சாம்பலோ எஅன் பிரித்தறிய முடியாத கலரில் ஒரு ப்ளவுஸ் போட்டிருந்தார். காதில் தோடு இல்லை. முடியை அலட்சியமாக ஒரு கோடாலி கொண்டைப் போட்டிருந்தார்.

அங்கு வெங்கி செய்த அலப்பறையைப் பார்த்திருந்தவளுக்கு இங்கு இவர் நின்றிருந்த கோலம் மனதைப் பிசைந்தது. அவர் அருகில் சென்று மீராவைக் கட்டிக் கொண்டாள் கவி. சற்று நேரம் கவியின் அணைப்பில் இதமாக நின்றிருந்தார் மீரா. அணைப்பிலிருந்து அவரை விடுவித்தவள், கைப்பிடித்து கட்டிலில் அமர வைத்தாள். தானும் சப்பளங்காலிட்டு அவர் அருகில் அமர்ந்தாள் கவி.

“மீராம்மா! எனக்காத்தான் அப்பா கூட வெளிய போக ஒத்துக்கிட்டீங்கன்னு எனக்குப் புரியுது. அதுக்காக இப்படி உடுத்திட்டு நின்னு உங்க ஆட்சேபணையக் காட்ட வேணாம் சரியா. நான் அப்பாவ சமாதானப் படுத்திக்கறேன். நீங்க இதையெல்லாம் மாத்திட்டு ரெஸ்ட் எடுங்க. வெளிய போக வேணாம்.”அவரின் கையை மென்மையாக வருடியவாறே சொன்னாள் கவி.

அவர் அமைதியாக இருக்கவும்,

“அப்பா ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுறாரு. டீப் இன்சைட் நீங்களும் அப்படித்தான் ஃபீல் பண்ணுறீங்கன்னு எனக்குத் தெரியும். அதுக்குத்தான் உங்க ரெண்டு பேரையும் டேட்டிங்கு போக சொல்லி கோர்த்து விட்டேன். ஆனா எனக்கு அப்பா மட்டும் இல்ல, நீங்களும் முக்கியம் மீராம்மா. நீங்க வந்த இந்த ஒரு வருஷத்துல தான் நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கோம். நான் இல்லாதப்போ அப்பாவ வயிறு வாடாம நீங்க பாத்துக்குவீங்கன்னும், அப்பா இல்லாதப்போ என்னை நீங்க நல்லா பாத்துக்குவீங்கன்னும் ரெண்டு பேரும் கவலையற்று இருந்தோம். இந்த டேட்டிங் இஷ்யூனால வீட்டுல நிம்மதி காணாம போகறதுல எனக்கு இஷ்டம் இல்ல. அப்பா ஆவலா அங்க கிளம்பி நிக்கறாரு. என்ன உடுத்திக்கறதுன்னு ரூமையே பொரட்டிப் போட்டுட்டாரு. ஆனாலும் போகுது விடுங்க. சொன்னா புரிஞ்சுப்பாரு” என கட்டிலில் இருந்து எழுந்தாள் கவி.

“நான் போய் நீங்க ரொம்ப எதிர்பார்த்த டேட்டிங் கான்சல்னு சொல்லிட்டு வரேன். நீங்க ரெஸ்ட் எடுங்க மீராம்மா” என இனிமையாக சொன்னாள் கவி.

கதவருகே போனவளை மீராம்மாவின் குரல் தடுத்தது.

“உடுத்தனது நல்லா இல்லைன்னு சொன்னா மாத்திக்கப் போறேன். அதுக்கு ஏன் டேட்டிங்க கான்சம் பண்ணனும்! சார் கிட்ட இன்னும் அஞ்சு நிமிஷம் வேய்ட் பண்ண சொல்லு கவிம்மா. கிளம்பி வரேன். உன் குரல்ல லேசா சோகம் தெரியுது. அதுக்குத்தான் ஒத்துக்கறேன். சாருக்காக இல்ல” என சொல்லியபடியே அலமாரியைத் திறந்தார் வேறு உடை தேட.

“யெஸ்” என சத்தமிடாமல் வெற்றிக் குறி காட்டி மைக்கல் ஜாக்சன் போல் மூன்வால்க் செய்தபடியே நடந்துப் போனாள் கவி.

“என்னம்மா ரெடியா?”

“இன்னும் ஃபைவ் மினிட்பா”

“சரி விடு. நான் போய் வீட்டு வெளிய நிக்கறேன்”

“எதுக்குப்பா?”

“வெளிய இருந்து தான்மா வந்து தான்மா, பூக்குடுத்து, கைப்பிடிச்சு கூட்டிட்டுப் போகனும்”

“பூக்குடுக்கறது சரிதான், இந்த கைப்பிடிக்கறதுதான் கொஞ்சம் இடிக்குது”

“அதெல்லாம் ஒன்னும் இடிக்காது.”

‘அந்த சாமு மவன் மட்டும் போக்கோ குடுத்து கைப்பிடிச்சு கூட்டிட்டுப் போனான். நான் மட்டும் அவனுக்கு எந்த வகையில கொறஞ்சிப் போய்ட்டேன். தலை ஃபுல்லா இன்னும் முடி வேற இருக்கு எனக்கு’

“என்ன பூ வாங்கி வச்சிருக்கீங்க?”

“அன்னிக்கு சாமு குடுத்த ரோஜாவ ஹேரி கிட்ட குடுத்துட்டா. ரோஜா பிடிக்கலப் போல. இந்தியன் ஸ்டோருக்குப் போனா மல்லிகைதானே வாங்கிட்டு வர சொல்லுவா. சோ அத தான் வாங்கி வச்சிருக்கேன்.”

‘குண்டு மல்லி ஃபோர் மை குண்டு மீரா.’ மனதுக்குள் மத்தாப்பூ பூக்க சிரித்துக் கொண்டார்.

அப்பொழுதுதான் உள்ளே வந்த மணி,

“அங்கிள் மல்லி மட்டும் தான் வாங்கனீங்களா? அல்வா வாங்கல? நான் வேணா திடீர் அல்வா கிண்டிக் குடுக்கவா? மல்லியும் அல்வாவும் செம்ம காம்பினேஷன்னு நம்ம கவுண்டமணி கூட அடிச்சு சொல்லியிருக்காரு” என கிண்டலடித்தான்.

“ஓய், என்ன எங்கப்பாவ கலாய்ச்சிப் பார்க்கறியா? முதல்ல உன் பொண்டாட்டிக்கு உனக்கு அல்வா குடுக்காமப் பாத்துக்கோ” என சிலிர்த்துக் கொண்டாள் கவி.

வெங்கி பூவை எடுக்க ப்ரிட்ஜிக்கு சென்றிருக்க, கவியின் அருகே வந்தவன் மெல்லிய குரலில்,

“விட்டா சத்யராஜ் மாதிரி நீ எனக்கு நல்லாவே அல்வா குடுப்பேன்னு தெரியும். ஆனா யார் விடப்போறாங்க! நம்ம பர்ஸ்ட் நைட்ல கூட பாயாசத்த வச்சாலும் வைப்பேனே தவிர அல்வாவுக்கு பிக் தடா” என சொல்லி புன்னகைத்தான்.

“நீயும் உன் பாயாசமும். எந்த கூமுட்டையாச்சும் பர்ஸ்ட் நைட்ல பாயாசம் வைப்பானா?”

“இந்த கூமுட்டை வைப்பான்டி. மத்த பலகாரத்தலாம் கடிச்சு மென்னு சாப்பிட டைம்மாகும். பாயாசம்னா அப்படியே மடக்குன்னு வாயில ஊத்தி படக்குன்னு முழுங்கிறலாம். பர்ஸ்ட் நைட்டுல டைம் மேனேஜ்மேண்ட் ரொம்ப முக்கியம் லயனஸ். ஒவ்வொரு செகண்டும் முக்கியம்.” கண்ணடித்து சொன்னான் மணி.

“கர்மம் புடிச்சவண்டா நீ! ஆனா முத்தா கேட்டா மட்டும் மேன் ஆப் பிரின்சிப்பல்னு பீலா விட்டுட்டு திரி”

“என் பிரின்சிப்பல்க்கு இப்ப என்ன பங்கம் வந்துருச்சு. ரெண்டடி தள்ளி நின்னுத்தான் பேசறேன் லயனஸ்”

சுற்றும் முற்றும் பார்த்தவள், வெங்கி கிச்சனுக்குள் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு அவரசமாக அவன் உதட்டில் முத்தம் ஒன்றை பதித்து விலகினாள்.

“ஐயோ அங்கிள், உங்க பொண்ணு எப்ப பாரு பொசுக்கு பொசுக்குன்னு என்னை…” சொல்ல வந்தவன் வாயை தன் கைக் கொண்டு இறுக மூடினாள்.

“ஸ்கூல் பையனாடா நீ! மிஸ் மிஸ் இவ அடிச்சிட்டான்னு சொல்ல! எங்கப்பா உனக்கு கைடு தான் வாத்தி இல்ல. அவர் கிட்ட புகார் வாசிச்ச, கொன்னுருவேன் ராஸ்கல்” என மிரட்டினாள்.

“கைய எடுடி ரௌடி!” என சிரித்தான் மணி. அவள் கையை எடுக்கவும், தள்ளி நின்றுக் கொண்டவன்,

“அங்கிள், உங்க பொண்ணு” என மீண்டும் ஆரம்பித்தான். அவள் துரத்தி வர வீட்டை சுற்றி ஓடினார்கள் இருவரும்.

காலிங் பெல் விடாமல் அடிக்க, அவசரமாக கைப்பையை எடுத்துக் கொண்டு அணிந்திருந்த மெருன் சுடிதாரின் துப்பட்டாவை தோளில் போட்டுக் கொண்டே ரூமில் இருந்து வந்தார் மீரா.

‘எங்கடா யாரையும் காணோம்’ என எண்ணியவாறே கதவைத் திறந்தார். அங்கே வெங்கி சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்.

“ஹாய் மீரா! ஐம் வெங்கி. நான் இத சொல்லியே ஆகனும். நீ அவ்வளவு அழகு! இங்க எவரும் இவ்வளவு அழகா ஒரு இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டாங்க. அண்ட் ஐம் இன் லவ் வித் யூ” என புன்னகைத்தப்படியே சொல்லியவர், கைக்குலுக்க கை நீட்டினார்.

ஏற்கனவே படபடப்பில் இருந்த மீரா, அவர் சினிமா வசனம் பேசவும் தன்னை மறந்து புன்னகைத்தார். கைத் தானாக அவர் முன் நீண்டது. நீண்ட மீராவின் கையில் ஒரு பந்து தொடுத்த மல்லிகைச் சரத்தை வைத்தார் வெங்கி.

“பூ வச்சுக்கிட்டு வா மீரா. கிளம்பலாம்.”

சரியென தலையாட்டிய மீரா, லேசாக தயங்கினார்.

“என்ன மீரா? எதாச்சும் சொல்லனுமா?”

“வந்து சார்..”

“சொல்லு மீரா”

“நீங்க ஜீன்ஸ் போட்டுக்குங்க. அதோட ஒரு கோடு போட்ட பச்சை டீ சர்ட் போடுவீங்களே, அதையும் போட்டுக்குங்க. அது தான் எனக்குப் பிடிக்கும்” என மடமடவென சொல்லி விட்டு உள்ளேப் போய் விட்டார்.

இவர் திகைத்துப் போய் நின்றுவிட்டார்.

“ஜீன்ஸ் பிடிக்குமாம் மணி”

“கோடு போட்ட பச்சை டீ சர்ட் பிடிக்குமாம் கவி” என கதவருகே மறைந்து நின்று இங்கே நடப்பதைப் பார்த்திருந்த சிறிய ஜோடி வெங்கியை ஏகமாக கலாய்த்தார்கள்.

வெட்க சிரிப்புடன், உடை மாற்றப் போனார் வெங்கி.

அவர்கள் இருவருக்கும் டின்னர் சாப்பிட ஒரு இந்திய உணவகத்தில் இடம் ரிசர்வ் செய்திருந்தார் வெங்கி. அரை மணி நேர கார் பயணம். பயணம் முழுக்க விஜய் ஆண்டனியே ஆட்சி செய்தார். வெங்கி ஓரக்கண்ணால் மீராவைப் பார்த்தப்படியே கார் ஓட்ட, மீராவோ வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தார்.

காரைப் பார்க் செய்து விட்டு ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றனர். வெய்ட்டர் வந்து இவர்களை ரிசர்வ் செய்திருந்த மேசைக்கு அழைத்துப் போனான்.

கண்ணாடி கிளாசை நிமிர்த்தி அதில் தண்ணீரை நிரப்பியவன், மெனுவை அவர்களிடம் கொடுத்து விட்டுப் போனான்.

தன் எதிரில் அமர்ந்திருந்த மீராவை பார்த்த வெங்கி,

“என்ன சாப்பிடற மீரா?” என மென்மையாக கேட்டார்.

கவியுடன் எற்கனவே இங்கே வந்திருந்ததால் அவருக்கு எதை ஆர்டர் செய்வது என குழப்பமாக இல்லை.

“எனக்கு பட்டர் நான் போதும். தொட்டுக்க காலிப்ளவர் மசாலா.”

“எனக்கு பூரி மசாலா வேணும். தொட்டுக்க..” என மீராவையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தார் வெங்கி.

‘தொட்டுக்க நீ வேணும்!’

“என்ன வேணும் தொட்டுக்க?” என கேட்டார் மீரா.

ஒரு பெருமூச்சுடன்,

“செட்டிநாடு சிக்கன் எடுத்துக்கறேன்” என்றார்.

“சார்..” இழுத்தார் மீரா.

“சொல்லு மீரா”

“எனக்கு குலாப் ஜமூன் வேணும்.”

‘ஜீராவுல ஊறுன மாதிரி வாய வச்சிக்கிட்டு, இன்னும் இனிப்பா குலாப் ஜமூன் கேக்குதா உனக்கு.’ அன்று முத்தமிட்ட கணங்களை நினைத்துக் கொண்டார் வெங்கி. எவ்வளவு அடக்கியும் பார்வை மீராவின் உதட்டை வட்டமிட்டது.

“சார்”

“ஹ்ம்ம்”

“என்ன யோசிக்கறீங்க? கவி மேடம் கேட்டவுடனே வாங்கி தந்தாங்களே! ரொம்ப செலவு வைக்கறனா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. கண்டிப்பா ஆர்டர் செஞ்சு தரேன்.”

உணவை ஆர்டர் செய்து விட்டு, சாதாரணமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஆகாஉஅத்தைப் பற்றி இவர் பேசவில்லை, அடுப்பங்கறையைப் பற்றி மீரா பேசவில்லை. வானிலை, சினிமா, கவி, மணி, பிடித்தப் பாடல் என பொதுவான விஷயங்களையே தேடி தேடிப் பேசினர். வெங்கியின் கலகலப்பான பேச்சில் மீராவும் தன் கூட்டில் இருந்து மெல்ல வெளியே வந்து சகஜமாகப் பேச ஆரம்பித்தார். உணவு வரவும் அதையும் பகிர்ந்துக் கொண்டு இருவரும் உண்டு முடித்தனர்.

ஊருக்கெல்லாம் இனிக்கும் குலாப் ஜாமுன் தான் நம் வெங்கியின் டேட்டிங்கில் கசப்பை அள்ளித் தெளித்தது. கடைசியாக வந்த குலாப் ஜாமுனை மீரா ஆசையாக சாப்பிடுவதை கண் கொட்டாமல் பார்த்திருந்தார் வெங்கி. அவர் மனதில் ஜீரா ஜீரா மீரா மீரா என ஓடிக் கொண்டே இருந்தது. கைத்தவறுவது போல தன் கரண்டியைக் கீழே தள்ளி விட்டார் வெங்கி.

“மீரா, கரண்டிய எடுத்து குடுக்கறியா? குனிய முடியல”

மீராவும் எதார்த்தமாக கீழே குனிய இவர் பதார்த்தமாக மீரா சாப்பிட்டுக் கொண்டிருந்த குலாப் ஜமூனை கொஞ்சமாக அதே கரண்டியால் சுவைப் பார்த்தார். அவசரமாக கரண்டியை வைப்பதற்குள், மீரா நிமிர்ந்து விட்டார்.

வெங்கி திரு திருவென முழிக்க, மீரா கண்ணகியாய் முறைக்க அந்த இடமே ரணகளமாக காட்சியளித்தது.

“யோவ் வெங்கி! நீ திருந்தவே மாட்டய்யா! உன்னை நம்பி நான் வெளிய வந்தேன் பாரு. என் புத்திய..” ஆத்திரமாகப் பேசியவர் எழுந்து வெளியே நடந்தார்.

“மீரா, ஜாமுன்?”

“அதை நீயே கொட்டிக்க”

தன் மீரா வாய் பட்டதை விடுவாரா அவர். லபக்கென அள்ளி வாயில் போட்டுக் கொண்டு மீரா பின்னால் ஓடினார்.

அவரோடு சேர்ந்து மனதில் கவிதையும் ஓடியது.

“ஜீரா இனிப்பா

மீரா இனிப்பா

பட்டிமன்றம் வைத்தேன்

வென்றது என் மீரா தான்!!!”

 

(கொட்டும்)