இது என்ன மாயம் 33

இது என்ன மாயம் 33

 

பகுதி 33

நான் சுவாசிக்கும் காற்று கூட

உந்தன் வாசத்தை தருகிறதே…

நான் உடுத்தும் உடையும் கூட

நீ அணைத்த அணைப்பை சொல்கிறதே…

நான் பார்க்கும் கண்ணாடி கூட

உன் பிம்பத்தை என்னருகே காட்டுகிறதே…

மொத்தத்தில் என் உலகம்

உந்தன் நினைவுகளால் சூழ்ந்துள்ளது…

தன் கணவனைக் கீழ் கண்ணால் முறைத்து கொண்டே, சரஸ் அவனுக்கு கொடுக்க சொன்ன டீயை தந்து விட்டு, தனக்கான டீயை எடுத்துக் கொண்டாள். சஞ்சீவும் டீயைக் குடித்து விட்டு, வெளியே சென்றவன், இரவு உணவுக்கு தான் வந்தான்.

அங்கு பெங்களூரில் அவள், சராசரியாக ஒரு மனைவியாய் அவனுக்கென்று எந்த பணிவிடையும் செய்யமாட்டாள். ஆனால் இங்கு வந்த பின், மதியம், இரவு எனச் சஞ்சீவுக்கு, பிரஜி தான் சாப்பாடு பரிமாறினாள். அப்படியே அவனுக்கு பரிமாறும் போது, அவளையும் உண்ண சொல்லி விட்டார் சரஸ்.

இரவு உணவுக்கு பின், சரஸ் அவர்களை அங்கிருந்த ஒற்றை படுக்கை அறையில் படுக்கச் சொன்னார். பிரஜீயும் எதுவும் சொல்லாமல், அங்கு தரையில் விரித்திருந்த மெத்தையில் படுத்துக் கொண்டாள். பின்னேயே வந்த சஞ்சீவ், படுக்காமல் சிறிது நேரம் கணினியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். அவள் தூங்கும் வரை, அவன் காத்திருக்கிறானாம்…

ஏனென்றால், அந்த அறையே சிறியது, அதில் மெத்தையே முக்கால் பாகத்தை அடைத்துக் கொள்ள, நடைப்பாதை போக, மீதி இடத்தில் மேஜை இடம் பிடித்துக் கொண்டது. அதனால் இங்கு தனி தனியே, தள்ளி படுக்க என்று இடமே இல்லை, அவள் படுத்திருந்த மெத்தையில் தான் அவனும் படுக்க வேண்டும்.

அவளுடனே சென்று படுத்திருந்தால், தெரியாமல் கையோ, காலோ, பட்டால் கூட, தன்னை அசிங்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சத்தம் போட்டு… அது வெளியே கேட்டு… பெரிய பிரச்சனையாகி விட்டால், என்ன செய்வது?… இதெல்லாம் தேவையா? என்று தான், அவள் தூங்கும் வரைக் காத்திருந்தான்.

ஆனால் பிரஜீயோ, இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல், பயணக் களைப்பும், உடல் சோர்வும் சேர,  மயக்கம் வந்தவள் போல, நன்றாக உறங்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கழித்து, கணினியை அணைத்து விட்டு, அவளருகே வந்தவன், ‘நல்ல வேளை, அவங்கப்பா வாங்கி தந்த கட்டிலில் படுத்தது போல, கைக் காலை பரப்பி படுக்காமல் விட்டிருக்கிறாள். இல்லையென்றால் நான் நாற்காலியிலேயே அமர்ந்து சிவராத்திரி கொண்டாட வேண்டியது தான்’ என்று அன்று வேண்டுமென்றே அவள் படுத்ததை எண்ணி பார்த்து, இப்பொழுது கொடுமையிலும் ஒரு நன்மை எனப் புருவத்தை உயர்த்தி, “உப்…” என அவளருகே படுத்தான்.

சரியாக அவன், அவளருகே படுத்த சமயம், பிரஜியும் தூக்கத்தில் புரண்டு, அவனைப் பார்ப்பது போல திரும்பி படுக்க, பயந்தே போனான் சஞ்சீவ். ஆனால் நல்ல வேளை அவள் விழிக்கவில்லை, என எண்ணிக் கொண்டு, அவளைப் பார்த்தவண்ணம் இவனும் படுக்க, ஏதோ வித்தியாசமாய் தெரிய, நன்றாக ஊன்றி அவளைக் கவனித்தான்.

இன்று தன் மாமனாரின் வீட்டிற்கு செல்வதால், பிரஜி தன் அத்தை விரும்புவது போல், சிவப்பு நிற சேலை அணிந்து வந்திருந்தாள். மேலும் தூக்கம் கண்களைச் சுழற்றவும், மாற்றுடை கூட மாற்றாமல் படுத்துக் கொண்டாள்.

சஞ்சீவ் அவள் கால்களில் இருந்து பார்க்க ஆரம்பிக்க, அவளின் சேலையின் நிறத்தோடு அவள் பூ போன்ற பாதங்கள் போட்டி போட, அப்படியே அவன் பார்வை மேலேற, கலைந்த சேலையில் அழகோவியமாய் இருந்ததவளின் வயிற்றில் வந்து நின்றது அவனது பார்வை.

ஆம், அவள் வயிறு லேசாக மேடிட ஆரம்பித்திருந்தது, அதனால் வெளியே தெரிந்தது. அதைக் கண்டுக் கொண்ட சஞ்சீவுக்கு, அவர்களிடையே இருந்த பிளவுகளெல்லாம் பின்னே போக, அவன் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

தன் குழந்தை… தனக்கு ஒரு குழந்தைப் பிறக்க போகிறது என்ற நினைவே அவனைச் சந்தோசப்படுத்தியது. எனவே அதே சந்தோஷத்தோடு, இயல்பாய் அவன் கைகள், தன் குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி சென்றது. “ஹே… குட்டி செல்லம், நீங்க வளர்ந்துட்டே வர்றீங்களா? எனக்கு உங்கள எப்படா பார்ப்போம்ன்னு இருக்கு…” என முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அவள் வயிற்றில் கை வைத்து கூறியவன், மேலும் அவன் ஏதோ பேச போக, அவள் உசும்பவும், அதைக் கண்டு, அவன் தன் கையை சட்டென்று எடுத்து விட்டான்.

பின் அவள் வயிற்றைப் பார்த்து “உங்கம்மா முழிச்சிட்டானா, அவ்ளோ தான், அப்பாவ டின் கட்டிருவா” எனச் சொல்லி, அவள் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு, அவள் வயிற்றிடம் புன்னகையோடு “உங்கம்மா தான் கொஞ்சம் அரவேக்காட இருக்காடா, அதுனால நீ தான் பத்திரமா அம்மாவ பார்த்துக்கணும், என்ன? அப்பா நாளைக்கு ஊருக்கு போய்டுவேன். அப்புறம் உங்க ரெண்டு பேரையும், பத்திரமா எங்கம்மா பார்த்துக்குவாங்க. அதுனால அப்பா கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்” என்று மெல்லிய குரலில், அவள் வயிற்றின் அருகே குறுகிப் படுத்து, குனிந்து கூறினான். மேலும் ஏதேதோ பேசிக் கொண்டே தன்னையறியாமல் உறங்கியும் விட்டான்.

காலையில் விடிந்ததும், விழித்தவள், தன்னருகே வெற்றிடமாக, தலையணை மட்டும் இருக்கவும், ‘ஓ… இங்கயும் வழக்கம் போல சீக்கிரம் எந்தரிச்சிட்டானோ? இல்லையே ஞாயிற்றுக் கிழமைன்னா லேட்டா தான எந்தரிப்பான்?’ என எண்ணி, மணி பார்க்க, தனக்கு நேராக இருந்த சுவர் பக்கம் திரும்பி பார்க்க, அப்போது தான் சஞ்சீவ் அவள் வயிற்றின் அருகே தலை வைத்து, படுத்திருப்பது தெரிந்தது.

அதைப் பார்த்தவள், எழுந்து அமர, அவனோ நன்றாக உறக்கத்தின் பிடியில் இருந்தான். காதல் கொண்ட மனமோ, ‘பாவம் இரவு முழுவதும் இப்படியேவா படுத்திருந்தான்?’ என இரக்கம் கொள்ள, காதல் அவளை ஆட்சி செய்ய, கலைந்திருந்த அவன் தலை முடியை ஒதுக்க எண்ணி, கையை அவன் தலை அருகே கொண்டு போனாள்.

ஆனால் ஏழு மணிக்கு அடித்த கடிகாரத்தின் ஓசையில், நினைவுலகிற்கு திரும்பியவள், கொண்டு போன கையை நிறுத்தி, பின்னே இழுத்துக் கொண்டாள். பின் இங்கயே அமர்ந்து, இவன் முகத்தை பார்த்தால், ஏதாவதாகி விடும் எனப் பயந்து எழுந்து விட்டாள். ஆம் பயம் தான், எங்கே தன் கோபம் கரைந்து, அவன் கரத்தில் சேர்ந்து விடுவோமா என்ற பயம் தான்.

பின்னர் காலையில், உணவுக்கு பின் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவிடம், சரஸ் “நைட் சாப்பிட்டு போறியா டா… ஊருக்கு?” என்று வினவினார்.

“இல்லமா, சாயங்காலம் ஒரு நாலு மணி போல கிளம்பிடுவேன். நைட் அங்க போய் சாப்பிட்டுக்குறேன்” என்று சஞ்சீவ் பதில் அளிக்க, மேலும் அவர்கள் சம்பாஷனைத் தொடர, அதிலிருந்து அவன் மாலை பெங்களூர் கிளம்புகிறான் என்ற தகவல் கிடைக்க, சமையற்கட்டில் இருந்த பிரஜி கோபமானாள்.

மதிய உணவுக்கு பின், அறைக்குள் தன் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தவன் அருகே சென்றாள் பிரஜி. அவளோ “ஏன் என்கிட்ட சொல்லல?” எனப் புதிர் போல கேட்க, அவனோ புரியாமல் “எத சொல்லல?” என்றான் கேள்வியாய்.

‘திமிர், உடம்பெல்லாம் திமிர்… இவகிட்டலாம் ஏன் சொல்லனும்னு நினைப்பு. ஊருக்கு வர்றதையும் சொல்லல, இப்ப விட்டுட்டு இவன் மட்டும் பெங்களூர் போறதையும் சொல்லல. நல்ல வேள, அம்மா என்ட்ட கேக்கல, என்ட்ட கேட்டிருந்தா, நான் ஏதாவது உளறியிருந்தா? எவ்ளோ அசிங்கம் எனக்கு?’ என மனதின் உள்ளே இப்படி மதியம் முழுவதும் எண்ணி, இப்போது அவனை ஒரு கைப் பார்க்க வந்திருந்தாள்.

“இம்… நீங்க ஊருக்கு போறத…” என்று பொறுமையை இழுத்து பிடித்து கூறினாள்.

“நீ தான் என்ட்ட கேட்கவே இல்லையே” என்று தோள்களைக் குலுக்கி, அவன் அசால்டாய் பதில் சொல்ல, அவளுக்கு வந்தது ஆத்திரம், “என்ன நினச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? ஊருக்கு வர்றதையும் சொல்லல, இப்ப என்ன மட்டும் விட்டுட்டுப் போறதையும் சொல்லல, திரும்பி எப்போ வருவீங்கன்னும் சொல்லல. என்னை என்ன உங்க பொண்டாட்டின்னு நினைச்சீங்களா? இல்ல…..” என நிறுத்தினாள்.

கத்தினால் எங்கே ரங்கன் வந்துவிடுவாரோ என்ற பயம் நெஞ்சினுள்ளே இருக்க, பற்களைக் கடித்து அமைதியாய் ஆனால் கடுப்பாய் தான் கேட்டாள்.

“ஏன் டி… பாதியிலேயே விடுற, முழுசா சொல்லு…” என அவனாய் ஏதோ தவறாய் யூகம் பண்ணி, வெறுமையாய் கேட்க,

அவளோ உதட்டை இறுக்கமாக வைத்து “இல்ல… உங்க வீட்டு வேலக்காரின்னு நினச்சீங்களா?” என்று முடிக்க,

அவனோ “வேலக்காரின்னு சொல்லாத டி… அவ கூட மூனு வேளை சமைச்சு போட்டு, பரிமாறுவா, ஆனா நீ… இந்த ஒரு மாசமா… என்ன புருஷன் மாதிரியா நடத்துன?” என அவன் புருவத்தை நெரித்து வினயமாய் கேட்க,

அதற்கு அவளோ “இம்… புருஷன்… புருஷன் மாதிரி நடந்துகிட்டா, செய்யலாம்” என்று, அன்று சொன்ன அவனின் வாக்கியங்களை அவள் திருப்பி கொடுக்க…

ஆனால் அவனோ கோபப்படாமல், கேலியோடு “ஏன் டி… அப்படி நான் நடந்துக்காமலா நமக்கு குழந்தை வந்துச்சு” என்று அவன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி, நிதானமாய், அவளை நோக்கி நடந்துக் கொண்டே கூறி, முடிக்கும் போது அவளைப் பார்த்து கண் சிமிட்ட, அவளோ அவனின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே நகர்ந்து, மெத்தையில் இடித்து தடுமாறி விழப் போனாள்.

ஆனால் விழ போகும் நேரத்தில், அனிச்சை செயலாய் அவள் கை உயர்ந்து, அவன் தோள்களுக்கு கீழே, அவன் முழங்கையைப் பற்றிக் கொள்ள, அவனும் அவள் விழாமலிருக்க, அவள் தோளில் ஒரு கையும், அவள் இடையில் ஒரு கையும் கொடுத்து “பார்த்து…” என அவளை நிறுத்தினான்.

“கைய எடுங்க…” என அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவள் கூற, அவனோ தன் கைகளை எடுத்துக் கொண்டு, அனிச்சையாய் இன்னும் பற்றியிருந்த அவள் கையை கண்களால் பார்த்து “நீ தான் என் கைய பிடிச்சிருக்க… நான் இல்ல பா…” எனத் தோள்களை உயர்த்தினான். அவளோ தன் கையை எடுத்து விட்டு, “ச்ச…” என மெத்தையின் மீது ஏறி, அவனைக் கடந்து வெளியே சென்றாள்.

பின் மாலை ஊருக்கு செல்லும் போது, அவளிடம் “போய் வருகிறேன்” என்று தலையை அசைத்து கூறிவிட்டு, தன் அன்னையிடம் “அம்மா… அவளப் பத்திரமா பார்த்துக்கோ மா…” என்று கூறி விடைப்பெற்றான். இரவு, தான் பெங்களூருக்கு நல்லப் படியாய் சென்று சேர்ந்து விட்டதாக அலைப்பேசியில் அவளிடம் கூறியவன் தான்.

அதன் பின் இவளும் அவனிடம் பேசவில்லை, அவனும் இவளுக்கு அழைக்கவில்லை. தன் அன்னையிடம் மட்டும் அவ்வப்போது பேசிக் கொள்வான், அப்படியே பிரஜி பற்றி கேட்டு விட்டு, அவரைப் பார்த்துக் கொள்ள சொல்வான்.

பின் அடுத்து வந்த இரண்டு நாட்களில் ரங்கன், சரஸிடம் பேசியதை கேட்டவள், அவர்கள் ஏதோ வீடு, பேங்க் எனப் பேசவும் உன்னிப்பாக கேட்டாள். ரங்கன் “அவன் என் நண்பன் தான், வீடு எல்லாம் நல்ல நிலைமைல தான் இருக்கு. இப்போ பெரியவனுக்கு கல்யாணத்த வேற வச்சிருக்கோம். அத வச்சுகிட்டு எப்படி வீட வாங்குறது?”

சரஸும் “ஆமாங்க, முத நாம ஒத்திக்கு போவோம், அப்புறம் நல்லா இருந்து, பிடிச்சதுனா நாமளே வாங்கிக்கலாம்ங்க” என யோசனை சொல்ல,

ரங்கன் “வாங்கிக்கலாம்னா எப்படி வாங்குறதுன்னு தான் யோசிக்கிறேன். பெரியவன் கல்யாண செலவ பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான். சின்னவன் எதுவும் பணம் சேர்த்து வச்சிருக்கேன்னு சொன்னானா?”

சரஸ் “தெரியலங்க… அவன்ட்ட கேட்குறேங்க. சரி நல்ல நாள் பாருங்க, முத நாம அங்க போவோம்” எனச் சொல்ல, மேலும் அவர்கள் பேச்சு நீண்டது.

பின் இதை மனதில் குறித்துக் கொண்டவள், ரங்கன் இல்லாத போது, சரஸிடம் இதைப் பற்றி விசாரித்தாள். “என்னமா புது வீடு… வாங்கணும்ன்னு… ஏதோ மாமாட்ட பேசிட்டு இருந்தீங்க போல?” என வினவினாள்.

“அது ஒன்னும் இல்லமா, இப்ப நாம புது வீட்டுக்கு ஒத்திக்கு போறோம்ல, அது மாமாவோட பிரண்டு வீடு தான். அவர் இப்ப பெரிய வீடு கட்டிப் போயிட்டார். அதான் இந்த வீடு ஒத்திக்கு விடுறார். அவர் உங்க மாமாக்கு நல்ல பழக்கமாம், அதான் வேணும்னா சொந்தமா கூட வாங்கிக்கோங்கன்னு சொல்லிருக்கார்” என்று அவர் விளக்க, பிரஜி கொஞ்சம் விழித்தாள்.

அதைப் பார்த்த சரஸ், “என்னமா சஞ்சீவ் உன்ட்ட எதுவும் சொல்லலைய? வீடு வேற மாத்துறோம், கல்யாண வேல வேற இருக்கு, அதான் எனக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு உன்ன வந்து விட்டுட்டு போறேன்னு சொன்னான். ஏன் உனக்கு தெரியாதா?” என அவர் கேட்க, அவளோ புன்னகைத்து “தெரியும் மா… சொன்னாரு… ஆனா நீங்க சொந்தமா வாங்கணும்ன்னு சொன்னீங்களா… அதான்…” எனச் சமாளித்து “அதான் கேட்டேன் மா” என்று முடித்தாள்.

“ஆமாம் மா, வீடு விடுறவர் தெரிஞ்சவர்னால, கொஞ்சம் நியாயமா விலை சொல்றார். வீட்டுக்கு வந்துட்டு கூட, ஒரு வருஷத்துக்குள்ள பணம் தந்தா கூட போதும்னு சொல்றாராம். அதான் மாமா வாங்கலாமா? வேணாமா? யோசனையா இருக்கார்.” என்றார்.

மேலும் அவரே “நான், முத போவோம் நமக்கு ராசியா இருந்துச்சுன்னா, பணத்த புரட்டி வாங்குவோம்னு சொன்னேன். என்ன பிரஜி? நான் சொல்றது சரி தான?” எனக் கேட்டார்.

“இம்… சரி தான் மா” எனச் சொல்லியவள், தன் அத்தைக் கூறியதைக் கூட அவன் தன்னிடம் சொல்லவில்லை, என அவன் மீது கோபம் கொண்டாலும் “சரி மா, என்னிக்கு பால் காய்ச்ச போறோம்? பொருட்கள் எதுவும் எடுத்து வைக்கணுமா மா?” எனக் கேட்டாள்.

பிரஜீ இதுவரை, விவரம் தெரிந்த நாள் முதல் சொந்த வீட்டிலேயே இருந்ததால், வீட்டைக் காலி செய்து புது வீட்டிற்கு எப்படி பொருட்கள் கட்டி செல்வார்கள் என்று அவ்வளவாக தெரியாது. மேலும் இவர்கள் வீட்டில் வெள்ளை அடிக்கும் போது, பொருட்களை ஒதுக்குவார்கள். அதிலும் முக்கால் வாசி நாட்கள், இவளும், அவள் அண்ணனும் பள்ளியோ, கல்லூரியோ செல்லும் சமயம் செய்வதால், பிரஜீக்கு அவ்வளவாக இந்த வேலைகள் தெரியாது. எனினும் அக்கம் பக்கம் பார்த்திருப்பதால், அப்படி கேட்டாள்.

ஆனால் சரஸோ “இம்… அதெல்லாம் ஒன்னும் செய்ய வேணாமாம் மா, சின்னவன், அதான் உன் வீட்டுக்காரர், அவரு பொண்டாட்டி மாசமா இருக்காலாம், அதுனால வேல வாங்கக் கூடாதுன்னு, ஏதோ சாமான் தூங்குறவங்க இருக்காங்களாம், வர சொல்லிடுறேன் சொன்னான் மா” என்று அவளைக் கேலி செய்து சொல்ல, “போங்க மா…” எனச் சிணுங்கி, “ஓ… அவங்க பேர் பேக்கர்ஸ் மா. ஆனாலும் நம்ம டிரஸ் எல்லாம் சூட்கேஸ், இல்ல அட்டைப்பெட்டில, பேக் பண்ணி வைக்கணும் மா, பணம் நகைலாம் பேக் பண்ணி நாம போகும் போது கொண்டு போயிடனும் மா…” என்று விவரம் சொல்ல,

“ஆமாம் மா… சஞ்சீவ் கூட அப்படி தான் சொன்னான். நாம பணம் நகை வேற முக்கியமான பொருள, பைல வச்சு கையோடு கொண்டு போயிடுவோம். பழைய சேலைய, விரிச்சு டிரஸ் எல்லாம் அடுக்கி, மூட்ட கட்டி வச்சிடுவோம், அவங்க எடுத்திட்டு வந்திருவாங்க” என அவரும் தனக்கு தெரிந்த யோசனைச் சொல்ல, பின் மாமியாரும் மருமகளும் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை செய்து, வேலைகளைத் தொடங்கினர்.

பின் அந்த வார வெள்ளிக் கிழமையன்று பால் காய்ச்சி புது வீட்டிற்கு குடி சென்றனர். அத்தியாவசியமான சமையல் பொருட்களை கொஞ்சம், கையோடு கொண்டு வந்து, பால் காய்ச்சி சாமி கும்பிட்டனர்.

பின் காலை உணவுக்கு உப்புமாவை சமைத்து சாப்பிட்டு விட்டு, அவர்கள் அமர, பேக்கர்ஸ் வந்து விட்டதாக தகவல் வர, ரங்கனும், சாரஸும், அவளை இங்கு பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு பழைய வீட்டிற்கு சென்றனர்.

முன்பு இருந்த வீட்டை விட இது கொஞ்சம் பெரிதாக இருந்தது. ஒரு வரவேற்பறை, ஒன்று சிறிதும், ஒன்று பெரிதுமாக என இரு படுக்கை அறைகள், ஒரு சமையலறை என சிறிதாக அழகாக இருந்தது. முன்பு கம்பௌண்ட் வீட்டில் மாடியில் இருந்தனர், இப்போது கீழேயே தனி வீடாக இருந்தது.

மேலே மொட்டை மாடியும், பின்புறம் சிறிது இடம் இவர்கள் புழக்கத்திற்கு தான் இருந்தன. மதியம் சாப்பாடு வெளியே வாங்கிக் கொள்ளலாம், என்று சரஸ் சொல்லி விட்டு சென்றும், தன் அத்தைக்கும் மாமாக்கும் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது என்று தெரிந்து, பிரஜி ‘நாம் சும்மா தானே இருக்கிறோம், மூன்று பேருக்கு எதற்கு ஹோட்டலில் வாங்க வேண்டும் எளிமையாக ஏதாவது செய்யலாம்’ என சாமி படத்தின் முன் வைத்திருந்த தட்டில் இருந்த பருப்பை எடுத்து ஊற வைத்தாள்.

சமையல் செய்யும் போது, பிரஜீக்கு தன் கணவனின் நினைவு வந்தது. ஏனென்றால், அவர்கள் வீட்டு சமையலறையும் இதே போன்ற அமைப்பு தான். ஒரு நாள் ஞாயிறன்று பிரஜி சமைத்துக் கொண்டிருக்கும் போது, அதாவது சண்டை வருவதற்கு முன், பிரஜி அவன் மீது ஏதோ செல்ல கோபமாய் இருந்த சமயம். எங்கேயோ வெளியே சென்று விட்டு வந்தவன், சத்தமில்லாமல் பூனை போல் வந்து, அவளைப் பின்னே இருந்து அணைத்து, அவள் தோள் வளைவில் நாடியை பதித்து “ஹே பொண்டாட்டி என்னடி பண்ற?” எனக் கேட்க,

அவளோ பதறி, பின் தன் கணவன் என தெரிந்து “இம்ச்… விடுங்க” என்றாள். ஆனால் அவனோ சும்மா இருக்காமல், சேலை கட்டியவளின் வெற்று இடையில் கை வைத்து, நகர்த்தி, நிறுத்தி என மாயம் செய்ய, அவளோ அதை ரசித்தாலும், வெளியே பொய் கோபமாய் “இப்போ சும்மா இருக்கீங்களா இல்லையா?” எனக் கண்டிக்க, அவனோ அதைச் சட்டை செய்யவில்லை.

அவள் திரும்பி, அவனிடம் “காலைல கோவிச்சுக்கிட்டு போ தெரிஞ்சுச்சு, இப்போ எந்த மூச்சிய வச்சுக்கிட்டு கொஞ்சுறீங்க? ஏன் வேற எவகிட்டையாவது போய் கொஞ்ச வேண்டியது தான?” எனப் பொரிந்து முகம் திருப்பினாள்.

ஆனால் அவனோ அவளை இன்னும் இறுக இடையோடு அணைத்து, “அதுக்காக முகமூடியா போட முடியும், சின்னப்பிள்ளத் தனமா இல்ல? இம்ச்… வேற யாரும் கிடைக்கமாட்டேங்கிறாளே. நீ எதவாது ஐடியா சொல்லேன்” எனக் கண்ணடிக்க, அவளோ “ஓ… அவ்ளோ தூரம் ஆகிடுச்சா?” என மீண்டும் சண்டையை ஆரம்பிக்க, “ஹே… இவ்ளோ கிட்ட இருக்கேன்… நீ என்ன அவ்ளோ தூரம் சொல்ற, இன்னும் கிட்ட வரவா” எனக் கொஞ்ச… அவளோ மிஞ்ச… கடைசியில் அவன் அவளை தூக்கி செல்ல…

அவளோ “வேணாம்ங்க, விடுங்க… நான் சமைக்கணும்” என அவன் தோளில் தன் கையை மாலையாக போட்டுக் கொண்டே சொல்ல, “நீ தான் கோபமா இருக்கியே… உன்ன கூல் பண்ண வேணாமா” என்று அவன் கண்ணடிக்க “ஒன்னும் வேணாம்” எனப் பிகு செய்து, முகத்தை அவன் தோள்பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அடுத்து அவன் செய்ய போகும் லீலையை எண்ணி, அவன் கைகளில் தொங்கிக் கொண்டு அவள் லயித்து போயிருக்க, ஆனால் அவனோ அவளை குளியலறை கொண்டு சென்று இறக்கி விட்டு, ஷவரை திருக்கி விட்டு, சிரித்து கொண்டு நின்றான்.

பிரஜீயோ “யூ……..” என கத்தி அவன் மீது வாலியிலிருந்த நீரை கப்பில் எடுத்து ஊற்றினாள். பின் வீடு முழுவதும் ஓடிப்பிடித்து விளையாடினார்கள் என்று சொல்லவா வேண்டும்.

இப்போது பிரஜி அதை அசைப்போட்டு கண்ணில் நீர் மல்க, மெய் மறந்து நின்றிருந்தாள். இதே போல பல பல சுகமான நினைவுகள் ஆனால் இன்று சுமையாய் நெஞ்சை அடைத்தது. சனி, ஞாயிறு விடுமுறை என்றால், அவளோடேயே திரிவான். அவள் கூடவே சமைக்க, சிரிக்க, சண்டை போட, விளையாட என மகிழ்வாய் இருந்தன நாட்கள்.

இந்த நான்கு நாட்களிலேயே பிரஜி தவித்து போனாள். கண்ணாடி பார்த்தால், அவன் தன் பின்னே நின்று இழைந்த ஞாபகம். சேலை கட்டினால், அவன் தன் வெற்றிடையை, மயக்குகிறது என்று மாயம் செய்த ஞாபகம்.

எங்கும் எதிலும் அவனே நிறைந்திருப்பது போல் தெரிய, அவளுக்கு தலையே சுற்றிற்று. சின்கில் நீரை பிடித்து முகம் கழுவலாம் என எண்ணி, தடுமாறி திரும்பியவள் திகைத்தாள். எதிரே சஞ்சீவ் இருக்க, அதற்கு மேல் முடியாது என்பது போல், எக்கி அவனைக் கழுத்தோடு இறுக்கி கட்டிக் கொண்டாள்.

 

மாயம் தொடரும்…………..

error: Content is protected !!