இது என்ன மாயம் 40

இது என்ன மாயம் 40

 

பகுதி 40

மழை மேகமாய் என் மனதில்

உன் நினைவுத் தூறலை

ஏன் சிந்திப் போனாய்…

என்னைச் சிதைப்பதற்கா இல்லை

உந்தன் நினைவுகளாலே

என்னைச் சிறைப்பிடிப்பதற்கா ?????

பிரஜி, யாரோ தன் கையை அழுத்தி பிடிப்பது போல் உணர்ந்தவள், சோம்பலாய் கண்களைத் திறந்தாள். ரதி தான், அவள் கையின் மணிக்கட்டைப் பிடித்து, நாடிப் பார்த்து கொண்டிருந்தாள். அவள் கண் திறந்ததை உணர்ந்த ரதி, “என்ன பிரஜி… நல்ல தூக்கமா?” என வினவ, பிரஜி புன்னகைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவாறே, ஒரு கொட்டாவியை நாசூக்காய் விட்டு, “ஹும்… ஆமா ரதி. ஏன் கைப் பிடிச்ச?…ஓ… பல்ஸ் செக் பண்ணியா?”

ரதியோ “அத ஏன் கேட்குறீங்க பிரஜி, கல்யாணத்துக்கு வந்து என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தா, இங்கயும் வந்து டாக்டர் வேலையப் பார்க்கச் சொல்றாங்க” என அவள் நொடிக்கவும், பிரஜி சிரித்துக் கொண்டே “யாரு?” எனக் கேட்க, அப்போது சஞ்சீவ் உள்ளே வர, “ம்ஹும்… இதோ உங்க புருஷனும், உங்க மாமியார்களும் தான்” என சொல்லும் போதே, “எந்திரிச்சுட்டியா பிரஜி, என்னாச்சு? எதாவது பண்ணுதா?” என அக்கறையாய் கேட்டுக் கொண்டே பிரஜி அருகே அமர்ந்தான்.

“ஒன்னும் இல்ல…” என்று அவள் குழப்பமாய் பதில் தருகையிலேயே… ‘ஏன் இவ்ளோ கவனிப்பு நமக்கு?’ என மனதில் எண்ணும் போதே, ரதி அவள் மனதைப் படித்தது போல், “ரொம்ப குழப்பிக்காதீங்க பிரஜி… அது ஒன்னும் இல்ல… நேற்று கல்யாணமான புது பொண்ணே ஆறு மணிக்கு எந்திரிச்சிருச்சு. ஆனா நீங்க இன்னும் எந்திரிக்கவே இல்லையா… அதான் உங்க மாமிகளுக்கும், இதோ உங்க ஹஸ்பன்டுக்கும் பயமாகிப் போச்சு”  என அவளே பதிலைத் தந்தாள்.

அதைக் கேட்டு பதறிய பிரஜி, “அய்யய்யோ… மணி என்னாச்சு?” என்று கேட்கும் போதே, சஞ்சீவ், ரதியை “வாயாடி….” எனத் துண்டை வைத்து பொய்யாக அடிக்க, “மணியா… அவ்ளோ ஒன்னும் லேட் ஆகல, எல்லோரும் மதியச் சாப்பாடே சாப்பிட்டுட்டோம்னா பார்த்துக்கோங்க…” எனப் பிரஜீயிடம் சொல்லி விட்டு, “என்ன அண்ணா… உங்க வைஃப் முழிச்ச உடனே… என்ன பத்தி விடுறீங்களா?… ஓகே, ஓகே…” என ஒரு மார்க்கமாய் சொல்லிவிட்டு கதவடைத்து சென்று விட்டாள்.

சஞ்சீவ் சிரித்துக் கொண்டே திரும்பும் போது, பிரஜி எழப் போக, திடீரென பதறி எழவும் தலைச் சுற்ற, சற்று தள்ளமாடினாள். “ஹே… பார்த்து” எனச் சஞ்சீவ் தாங்கினான்.

அவன் தோள்களைப் பற்றியவாறே “ஏங்க… என்ன எழுப்பல? ஐயோ… அம்மா என்ன நினைப்பாங்க… அத விட புஷ்பா, வந்திருக்கிறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? போச்சு…” எனத் தன் போக்கில் உளறியவளை, சஞ்சீவ் அவள் தாடையைத் தன் கையால் பற்றி, சுவற்றுப் பக்கம், அவள் முகத்தைத் திருப்பி, “அங்க பார்” என சுவற்றின் மீது மாட்டியிருந்த கடிகாரத்தைக் காண்பித்தான்.

அதில் மணி காலை எட்டு முப்பது என தான் காட்டியது. சஞ்சீவ் “அவ சும்மா உன்ன பயமுறுத்த, விளையாட்டுக்கு சொல்லிட்டு போயிருக்கா டா. நீ ரொம்ப அசந்து தூங்குனியா, அதான் எழுப்பல. ஆனாலும் நீ ஏழுக்குலாம் எந்திரிச்சுருவியா, ஆனா இன்னிக்கு நீ எந்திரிக்கலன்ன உடனே அம்மா பயந்து ரதிய பார்க்க சொன்னாங்க” என விளக்கமளித்தான்.

மேலும் “சரி, வா… டீ குடிக்கலாம்” என அவள் இடையோடு அணைத்து அழைத்தான்.

அப்போது தான் அவன் கைகளில் இருப்பதை உணர்ந்தவள், விலகி தன்னைக் கண்ணாடியில் பார்க்க, நைட்டியோடு தான் இருக்கவும், “நீங்க போங்க, நான் டிரஸ் மாட்டிட்டு வர்றேன்” என்று சொல்ல, சரியென அவன் கதவடைத்து சென்ற பின் தான், அவளுக்கு நேற்றைய இரவு நினைவு வந்தது.

‘ஆமாம்… நாம் நேற்று இரவு நைட்டி போடவில்லையே… அறைக்குள் வந்தோம்… தோடைக் கழற்றினோம்… அதன் பின்… இம்… தோடை படுக்கையில் வைத்தோமே… அச்சோ, படுக்கையில் வைத்து உடைந்து விட்டதா?…” என எண்ணி, படுக்கையைப் பார்த்தாள். ஆனால் அங்கு எதுவும் இல்லை. அப்படியே தன்னை ஆராய்ந்தாள், அவள் அணிந்த கல் வளையல், நெக்லஸ் என கல் நகைகள் எதுவும் அவள் மீது இல்லை. அப்படியே மேஜையைப் பார்த்தவள், அங்கு ஒரு சிறிய நகைப் பெட்டி இருந்தது. அதன் பக்கத்திலேயே நேற்று அவள் வரவேற்பில் அணிந்த சேலையும் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.

‘யார் செய்திருப்பார்கள்?’ என மூளை யோசிக்கையிலேயே, ‘இம்ம்ம்… உன் புருஷன் தான் பண்ணிருப்பான்’ என மனது இடித்துரைக்க, ‘அப்போ… நைட்டியும் அவன் தான் போட்டு விட்டானா??? சே… அது கூட தெரியாம, நான் தூங்கிருக்கேனே…’ எனத் தன்னை நொந்துக் கொண்டாலும்,

‘எல்லாம் அவனால தான்…’ எனச் சஞ்சீவைக் குற்றம் சுமத்தி, மேலும் ‘இப்படித் திரும்ப கல்யாணம் பண்ணி… ஹோமப் புகைல உட்கார வச்சு… வரவேற்புல நிக்க வச்சு… இப்படி பாடாப் படுத்துனா… நான் என்ன செய்வேன்? அவனவாது சொல்ல வேண்டாமா… பொண்டாட்டிக்கு இந்த மாதிரி நேரத்துல சிரமமா இருக்கும்ன்னு… திரும்ப கல்யாணம்னு சொன்னவுடனே… ஈ…ன்னு இளிச்சுக்கிட்டு சரின்னு சொல்லிருப்பான்… அதான சந்தர்ப்பம் எப்ப கிடைக்கும்? உரசிக்கிட்டு கொஞ்சி குலவலாம்னு நினச்சிருப்பான்’ என்று எண்ணி, அதே எரிச்சலோடே ஒரு சாதாரண புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே சென்றாள். சஞ்சீவைப் பார்த்து முறைக்கவும் மறக்கவில்லை.

மதிய உணவுக்கு பின்னர், மதனையும் புஷ்பாவையும் மறுவீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடானது. பிரஜீயால் திரும்பவும் அலைய முடியாது என்பதால், அவள் உடல் நிலைக் கருதி, மேலும் நான்காம் மாதம் தான் நடக்கிறது என்பதால் பெண்கள் துணை வேண்டாம், இரண்டு நாளில் திரும்பி விடுவதால், சற்று தைரியமாகவே பெரியவர்கள், பிரஜீ சஞ்சீவை மட்டும் விட்டுச் சென்றனர்.

ஆம், லதா புதிதாய் வந்த தன் அண்ணியின் உறவை, அவர் தங்கைக் குடும்பத்தையும் விருந்துக்கு அழைத்து சென்றனர். மேலும் மணமக்களோடு, மாப்பிள்ளை வீட்டின் சார்பாய் மணப்பெண்ணின் நாத்தனாரையும், அவர்கள் குடும்பத்தையும் அழைத்து செல்ல வேண்டும், ஆனால் இங்கு யாரும் அப்படி இல்லாததால்… ரதி இருந்தாலும், அவள் மணமுடித்த பெண் இல்லையென்பதாலும்… இது தான் சமயம் என்று சரஸையும், சாரங்கனையும் கட்டாயப்படுத்தி, அழைத்து சென்று விட்டனர்.

ஆனால் இவர்கள் எல்லோரும் கிளம்புவதற்கு முன்… அறைக்குள் சென்று, ஊருக்கு செல்ல தேவையான உடைகளை எடுத்து வைத்த புஷ்பாவிடம், மதன் தன் உடைகளையும் நீட்டினான். அவளும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டதைப் பார்த்தவன், கடுப்பாய் “மறுவீடு… ஒன்னு தான் குறைச்சல்…” எனச் சத்தமாய் முனுமுனுத்து விட்டு சென்றான்.

அதைக் கேட்டவளோ, தலைக் குனிந்துக் கொண்டே, பைகளில் உடையை அடுக்க, அதனோடு அவளின் இரண்டு சொட்டுக் கண்ணீரும் சேர்ந்து அடுக்கப்பட்டு, பூட்டப்பட்டு பயணப்பட்டன.

இந்தப் பக்கம், பூஜாவோ அந்த வீட்டிற்கு சென்று தன் பைகளை எடுத்து வர சென்றாள். ஏற்கனவே அங்கு அமர்ந்து, மடிக்கணினியை நொண்டிக் கொண்டிருந்த சுதன், பூஜாவைக் காணவும், கேலியாய் சிரித்துக் கொண்டே, “என்ன பூஜா… நேற்று நல்லா தூங்குனியா?” எனத் தன் தங்கை, அவளை உதைத்தே தூங்க விடாமல் பண்ணியிருப்பாள் என்ற அர்த்தத்தில், எதார்த்தமாய் வினவ… நேற்று இரவும், இதனால் தான், தன் தங்கையோடு படுக்க சென்றவளுக்கு அவ்வாறு கூறினான். ஆனால் பூஜாவோ???

அங்கு அவர்கள் இருவர் மட்டும் தனித்து இருப்பதை உணர்ந்த பயத்திலும், இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் பூஜா “இனியொரு தரம், இந்த மாதிரி கேள்வி கேட்டீங்க… அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்… ரதியக்காவோட அண்ணனாச்சேன்னு பார்க்கிறேன்… இல்ல… நான்… நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… ஜாக்கிரதை” என பயத்தினால் விளைந்த பதட்டத்திலும் கூட… ஆள் காட்டி விரலை ஆட்டி, அவனை மிரட்டி விட்டு தான், அறைக்கு சென்றாள்.

அவளின் மிரட்டலில், சற்றே அதிர்ச்சி அடைந்த சுதனுக்கு… பாவம் ஒன்றும் புரியவில்லை. ‘நான் என்ன அவ்ளோ தஃவ்வாவ (tough) கேள்வி கேட்டேன். நல்லா இல்லன்னு சொல்லிட்டு போகுது… காணாததுக்கு… ரதியோட அண்ணன்னு விடுறாளாம்… ஐயோ எங்க போய் முட்டிக்கன்னு தெரியலையே… இதுல என்ன பண்ணுவான்னு அவளுக்கே தெரியாதாம்… கொடுமைடா சாமி’ என்று குழப்பமான மனநிலையிலும் தன்னை நொந்துக் கொண்டான்.

‘நேற்றே… பின்னாடியே வந்தப்பவே மிரட்டிருக்கணும்… அப்போவே மிரட்டிருந்தா, இப்படி கேள்வி கேட்கமாட்டாப்ல… எப்படியெல்லாம் சொல்றாப்ல… தூக்கம் வர்றதுக்கு ஆல் தி பெஸ்ட்டாம்… ஆமா, இவுக பெரிய மன்மதேன், பார்த்த உடனே மயங்கி, நாங்க தூக்கம் வராம தவிக்க’ என நேற்று முழுவதும் அவனின் வார்த்தையால் தூங்காமல், குழம்பி தவித்தவளுக்கு, ரதி உதைத்தது கூட உறைக்கவில்லை. இப்படி தவறாய் எண்ணிக் கொண்டே, தன் பையை எடுத்து கொண்டு, அவனைக் கடந்தாள்.

ஆனால் சுதனோ ‘நம்ம தங்கச்சிக் கூட சேருறது எல்லாம் அது மாதிரியே இருக்குங்கப்பா… சரியான அர லூசு போல…’ என எண்ணிக் கொண்டே, அவள் தன்னைக் கடந்து போவதை உணர்ந்து, தன் வேலையைத் தொடர்ந்தான்.

அவன் அமைதியாய் இருப்பதைப் பார்த்து சென்றவள், ‘இம்… இத நேற்றே பண்ணிருக்கலாம் போல… பரவாயில்ல இப்பவாது சமாளிச்சோமே’ எனத் தன்னை தானே மெச்சிக் கொண்டாள்.

பாவம் பூஜாவும் தான் என்ன செய்வாள்? இந்த சுதன் செய்த வேலைக்கு… ஆம், கல்யாண மணடபத்தில் எப்பொழுது பார்த்தாலும், இவள் பின்னேயே செல்வது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேச முயல்வது என அவள் பின்னேயே சுற்றினான்.

அவளும் தனக்கு அவன் சொந்தம் என்பதால் அமைதி காத்தும், அவன் அவளுக்கு எவ்வாறு உறவு முறையாவன் என உணர்ந்த பயத்தோடும் இருந்தாள். ஆம், பயம் தான், தன் அக்கா மேற்கொண்டு படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு இருந்தவளை, தாயும், தாய்மாமனும் பேசி, பேசி மனதைக் கரைத்து… இதோ திருமணமும் முடித்து விட்டனர்.

தானும் அவனிடம் சண்டையிட்டு பேசினால், தன் அக்காவைப் போல், தனக்கும் திருமணம் முடித்து விடுவார்களோ? என்ற பயத்தில் இருந்தது அந்த பேதை மனம். பாவம் அவளின் எண்ணம் அவள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே தெரிவித்தது. ஆனால் அவள் வயதிற்கு அவளின் பயம் சரியாகவே தோன்றியிருக்கிறது எனலாம்.

ஆனால் இதை அறியாத சுதனோ, அவள் பின்னேயே சென்றான். காரணம், உறவு பெண் என்பதாலும், தன் வயதுக்கு ஒத்த ஒரு ஜோடி கிடைத்த சந்தோஷத்திலும், தன்னை விட சிறியவளான பூஜாவை ஜோடி சேர்த்து கொண்டு அலைந்தாள் ரதி. சுதனோ, பல சமயம் நாத்தனார் என்ற முறையில் சில சடங்கு செய்ய அய்யர் அழைக்க, அவளைத் தேடி செல்ல, சில சமயம், எங்கே இங்கேயும் அவளின் பஞ்சயாத்தை கூட்டி விடுவாளோ என்று அவளைக் கண்காணித்ததன் விளைவு, பூஜா அவனைத் தவறாக எண்ணி விட்டாள்.

சொந்தபந்தங்கள் இல்லாமல் வளர்ந்த அண்ணனும் தங்கையும், என்ன தான் கேலி பேசி முட்டிக் கொண்டாலும், இருவருக்கும் மற்றவர்களே உற்ற தோழனும், தோழியுமாய் இருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரியுமா?

லஷ்மி கூட “ரெண்டும் பெரிய பசங்களாகி, கல்யாணத்துக்கப்புறம் எப்படி பிரிஞ்சு இருக்க போகுதுங்களோ?” எனத் தன் கணவனிடம், அவளைப் பற்றி கவலைப்படுவார். அதனால் அவர்கள் குடும்பமே, ரதிக்கு உள்ளுரிலேயே, பக்கத்திலேயே மாப்பிள்ளை பார்த்து தான், கட்டிக்கொடுக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தனர்.

பின் ஒரு வழியாய், மாலை லதா சேகர் தம்பதிகளின் ஊரான, மதுரை அருகே உள்ள ராஜபாளையத்திற்கு சென்றனர். முதலில் மதுரை வரை ரயில் பயணத்திலும், பின் அங்கிருந்து ராஜபாளையத்திற்கு காரிலும் செல்ல முடிவு செய்யப்பட்டு செயலும் படுத்தினர். இங்கோ சஞ்சீவ், பிரஜீக்கு இரவுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று இட்லி வாங்கி வந்தான். பின்னர், நேற்றைய சோர்வு மீதம் இருக்க, உறங்கி விட்டாள் பிரஜி. செல்லும் போது சரஸ், அவர்களிடம் பத்திரமாக இருக்கும் படியும், அவளைப் பார்த்து கொள்ளும் படி சஞ்சீவிடம் நூறு முறை சொல்லி விட்டு தான் சென்றார்.

சஞ்சீவோ உறக்கம் வராமல், திருமண நாளன்று நடந்ததை அசைப்போட்டுக் கொண்டு, தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். பின் தன் தந்தை தன்னிடம் பேசியதை நெகிழ்வோடு எண்ணிக் கொண்டு, அவர் ஏன் அவ்வாறு இருந்தார் என்பதை, தனக்கு தெரிந்த மட்டும், அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். அதன் பின் ஒரு தீர்மானத்தை மனதில் எடுத்துக் கொண்டு, அப்படியே அங்கேயே வரவேற்பறையிலேயே உறங்கி விட்டான்.

காலை எழுந்த பிரஜி, சஞ்சீவ் வரவேற்பறையில் கையைத் தலைக்கு அடியில் வைத்து படுத்திருப்பதைப் பார்த்து, அவன் தலைக்கு ஒரு தலையணையை வைத்து விட்டு, சமயலறைக்கு சென்றாள். சிறிது நேரத்திலேயே விழித்தவன், குளியலறை சென்று பல் துலக்கி விட்டு வர, அவனுக்கு டீயை நீட்டினாள்.

அவன் அதை வாங்கி உணவு மேஜையில் வைத்தவன், சமயலறைக்கு திரும்பியவளின் கைப் பற்றி, அவளையும் அங்கு நாற்காலியில் அமரச் செய்தான். அவளோ புருவத்தை உயர்த்தி “என்ன?” எனச் செய்கை செய்ய, “என்னடி ஆச்சு? நேற்று காலைல எந்திரிக்கும் போது நல்லா தான இருந்த… அப்புறம் என்னாச்சு?” என்று வினவினான்.

அதற்கு அவளோ வாயை சுளித்து, “இம்… பேய் பிடிச்சுக்கிச்சு” என்று சொல்ல, “அதான… நல்லா இருக்கும் போதே, உனக்கு ஏதாவது வந்திருமே” என அவனும் ஆமோதிக்க…

“வேணாம்… காலங்காத்தல கடுப்ப கிளப்பாம இருங்க…” என்று இத்தனை நாள் அவனுடனே இருந்த நெருக்க்கத்தில் சகஜமாய், அவன் மீது எரிச்சல் பட்டாள்.

“ஹே… என்னன்னு சொன்னா தான தெரியும்?” என அவன் பக்குவமாய் கேட்க,

“இம்… ஒன்னும் தெரியாத பாப்பா… இவரு… செய்றது எல்லாம் செஞ்சிட்டு…” என முடிக்காமல் விட்டாள். அவன் தன்னிடம் கல்யாண ஏற்பாடுகளை சொல்லாமல் அவமதித்திருக்கிறான் என்ற கோபத்தில் இருந்தாள்.

அவனோ அதைப் புரிந்து கொள்ளாமல், “ஏய்… நான் எல்லாம் தெரிஞ்ச பாப்பா தான்…” எனக் கண்ணடித்து “என்ன செஞ்சேன் சொல்லுடி…” என்றான் கொஞ்சலாய்.

“என்ட்ட எப்படி நீங்க கல்யாண ஏற்பாட சொல்லாம இருக்கலாம்? இம்… பொண்டாட்டின்னு நினைச்சிருந்தா தான சொல்லியிருப்பீங்க..” எனத் தன் சண்டையை ஆரம்பிக்க, உணவு மேஜை அருகே கூண்டில் இருந்த லவ் பர்ட்ஸ், இவர்கள் சண்டையை பார்க்க ஆர்வமாய், கம்பியில் வரிசையாய் சமர்த்தாய் அமர்ந்து, வேடிக்கைப் பார்க்க தொடங்கியிருந்தன. ஆம், என்றுமே இந்த காதல் பறவைகள் தான், இந்த காதல் ஜோடியின் சண்டைக்கு பார்வையாளர்கள்.

சஞ்சீவ், பிரஜீக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று, அவளின் அன்னை தந்தையை சமாதானம் செய்து, அவர்கள் வரவிருப்பதை சொல்லாமல் இருக்க, ஆனால் அவனின் தாய் தந்தையோ, அவனுக்கே தெரியாமல், மீண்டும் அவனுக்கும் பிரஜீக்கும் திருமண ஏற்பாடு செய்து, அவனுக்கே ஒரு இன்ப அதிர்ச்சியை தந்து விட்டனர். இதை அவளிடம் சொல்லி புரிய வைக்க முயன்றான்.

“ஏய்… எனக்கே தெரியாது… பிறகெப்படி உன்ட்ட சொல்லுவேன்” என அவன் பதில் சொல்ல, “பொய்… இப்ப எல்லாம் நீங்க என்ன மதிக்கிறதே இல்ல, என் நினைப்பு இருந்தா தான… உங்களுக்கு என்ட்ட சொல்லணும் தோணும்” என இத்தனை நாளும் அவனின் பாராமுகத்தை தாங்க முடியாத அவளின் மனது, தக்க சமயத்தில் அவளை, அதை வார்த்தைகளாய் வெளியிட செய்தது.

அவனோ “ஹே… அப்படி எல்லாம் இல்ல மா” அவளோ “எப்படியெல்லாம் இல்ல…?” என விடாமல் அவள் வாதம் புரிய, அன்றைய நாள் முழுவதும் இப்படி வாக்கு வாதத்திலேயே செல்ல, பிரஜி சிறுப் பிள்ளையாய் முறுக்கிக் கொள்ள, அதை உணர்ந்த சஞ்சீவ், சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று அவளைக் கிண்டலோடு சமாதானம் செய்ய… என அந்த நாள் இருவருக்கும் ஆனந்த விளையாட்டாய் சென்றது. பிரஜீயும், வெளியில் தான் கோபமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

இரவு, அவர்கள் அறையில் படுத்திருந்த சஞ்சீவ், அவர்கள் இருவரின் படுக்கைக்கும் நடுவில் அலைப்பேசியை வைத்து, அதன் மூலம் வானொலியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ… போ… போ…

போ… போ………..” என ஸ்ரீநிவாஸ் குரலில் ஒலித்த பழையப் பாடலை கேட்டுக் கொண்டே, அறைக்குள் வந்தவளைப் பார்த்து கண்ணடித்தவனை, முறைத்து கொண்டே வந்தவள், அலைப்பேசியை எடுத்து, வேறு அலைவரிசையை மாற்றினாள். அதிலோ

“என்னோடு வா வா… என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்” என வர, அவன் சத்தமிட்டே சிரிக்க, அவள் அதையும் மாற்றப் போக, ஆனால் அதற்குள், படுத்திருந்த சஞ்சீவ் அலைப்பேசியைப் பிடுங்கி விட்டான்.

ஆனால் அவளும் விடாமல், அவன் பறித்துக் கொண்ட அலைபேசியை வாங்க முற்பட, அவனும் தராமல், தன் வலக்கையில் இருந்த அலைப்பேசியை, படுத்தவாறே தன் வலப்பக்கம் நீட்டி அவளுக்கு போக்கு காட்ட… அவளும் முட்டி போட்டு, அவனை நோக்கி குனிந்து, அவன் வலக்கையை இடக்கையால் பற்றினாள்.

சஞ்சீவும் அவனின் இடது கையால் அவள் முயற்சித்த கையைத் தடுக்க, பிரஜீயும் தன் வலக்கையால் அவன் இடக்கையைத் தடுத்தாள். ஒரு மல்யுத்த போர் போல இருவரும் கைகளாலேயே அலைப்பேசிக்கு சண்டையிட்டனர்.

அவர்களின் இந்த அக்கப்போரில், அலைப்பேசி தானாய் அடுத்த அலைவரிசைக்கு மாறி, மீண்டும் வேறு ஒரு பாடலை ஒலிப்பரப்பியது. “ஆருயிரே மன்னிப்பாய மன்னிப்பாய… சொல் நீ… என் சகியே….” என வர, அதே சமயம் மின்சாரமும் துண்டிக்கப் பட…..

சரியாய் அந்த பாடலின் இந்த வரி வந்தது. “நீயில்லாத ராத்திரியோ… காற்றில்லாத இரவாய் ஆகாதோ…” மின்சாரம் துண்டிக்கப் படவும், இருவரின் கவனமும் நின்றது.

அமைதியோடு அந்தப் பாடல் வரியும் சேர… அதில் இருவரின் கண்களும் நேராய் சந்திக்க, அவனை நோக்கி குனிந்திருந்த பிரஜி, ஜென்னல் வழியே வந்த பௌர்ணமி நிலவின் ஒலியில் சஞ்சீவைப் பார்க்க…..

கன்னத்தில் குழி விழுக சிரிக்கும் அழகு முகம்…

தன் கை மீது கை வைத்து அழுத்தி “ஐ அம் டீப்லி இன் லவ் வித் யூ” என்று உருகிய காதல் முகம்…..

தன்னை முதன் முதலில் சேலையில் பார்த்து, காதலாகி அணைத்து, புன்னகைத்த முகம்…

“ஏன் உங்கம்மா அப்பா தேட மாட்டாங்களா?” என ஆழ்ந்து நோக்கிய முகம்…

“ஏய்… நான் ஆம்பிள்ள டி…” என கர்வமாய் கர்ஜித்து, கம்பீரத்தை பிரதிபலித்த முகம்…

எல்லாவற்றுக்கும் மேலாய், கடைசியாய் அவள் நினைவில் “ஹே… ஒரே ஒரு கிஸ் டி…” என ஹஸ்கியான குரலில் மென்மையாய், காதலாய் குலாவி ஒன்றிய முகம்… அன்று கேட்ட சஞ்சீவுக்கு… பிரஜி… இன்று பதில் தந்தாள்.

அவளின் இடக்கை, தண்டவாளத்தில் கவனமாய் செல்லும் புகைவண்டி போல, நீண்டிருந்த அவன் வலக்கையில் ஊர்ந்து சென்று அவன் முகம் எனும் நிலையத்தை அடைந்தது.

தன் வலக்கையையும் அவனிடம் இருந்து விடுவித்து, அவன் முகத்தை பற்றியவள், மெய்மறந்த நிலையில் குனிய… சஞ்சீவும் தன் வலக்கையில் இருந்த அலைபேசியை அநாதையாக்கி, தன்னவளை அணைக்க, அவளின் வலக்கையை விடுவித்த அவன் இடக்கையும், அவள் முதுகுக்கு இடம் பெயர… ஏதோ ஒரு மாய லோகத்தில் பிரவேசித்த பிரஜி, அவனின் இதழில் மாயம் செய்ய தொடங்கினாள்.

எதிர்பாரா இந்த இன்ப தாக்குதலில், முதலில் சஞ்சீவ் தத்தளித்தாலும்… மெல்ல மெல்ல அவளின் பணியை, அவன் தனதாக்கி கொண்ட சமயம்… அவள் முழுவதுமாய் அவன் மீது படரவும்… அவள் வயிற்றின் ஸ்பரிசத்தை தன் மீது உணர்ந்த சஞ்சீவ், அவள் நிலை உணர்ந்து… அவள் முகத்தில் இருந்து விலகி, அவள் காதில் “ஹே… குழந்த… குழந்தை இருக்கு பிரஜு… வயித்துல…” என அவன் கூற,

அவளோ “இம்…” எனக் கண் மூடி மோன நிலையில் இருந்து மீளாமல் இருக்க… “ஹேய்… வயிறு… இடிக்குது டி…” என எடுத்து சொல்லியும், மீண்டும் அவள் இம்மை விட்டு நகரவில்லை.

முடிவு செய்தவனாய், சஞ்சீவ் அவளை அணைத்த நிலையிலேயே புரண்டு, அவளை மென்மையாய் கவனமாய் படுக்கையில் கிடத்தினான்.

 

மாயம் தொடரும்……….

error: Content is protected !!