இது என்ன மாயம் 41

இது என்ன மாயம் 41

 

பகுதி 41

வானத்து கருமேகங்களை, தன் செங்கதிர் கரங்களால், வர்ணம் பூசி, நீல மேகமாய் பகலவன் மாற்றி கொண்டிருந்த நேரம், நன்றாக உறங்கிய திருப்தியில் கண் விழித்தாள் பிரஜி. தன் தலை எதன் மீதோ படுத்திருக்க, வலக்கை தன் வயிற்றிலும், இடக்கை யாரையோ… என்ன? சஞ்சீவை, தான் அணைத்திருப்பதை உணர்ந்து, நன்றாக விழித்து பார்த்தாள்.

சஞ்சீவின் இடது கை அவளை முதுகோடு அணைத்திருக்க, பிரஜி ஒருக்களித்து, அந்த கை வளைவில் முகம் புதைத்திருந்தாள். சஞ்சீவின் மற்றொரு கை, அவனை அணைத்திருந்த, அவள் கை மீது சென்று, அவள் கையோடு அணைத்திருந்தபடி அவன் படுத்திருந்தான்.

அவனை விட்டு விலக எத்தனிக்க, “எப்பா… எவ்ளோ வாடை… சோப்பு போட்டு குளிப்பானா… இல்லையான்னு தெரியலையே” என அவனை மெதுவான குரலில் திட்டிக் கொண்டே விலக, அதற்கு முன்பே முழித்தவன், அவளின் சுருங்கிய மூக்கை பிடித்து ஆட்டி, “இம்… இப்படி நைட் ஃபுல்லா, இவ்ளோ வெயிட்ட, அசையாம சுமந்திட்டு இருந்தா, கை வேர்க்காம மணக்குமா? இதுல கரண்ட் வேற இல்ல, இப்ப தான் வந்துச்சு” என அவளை விடாமல், அணைப்பிலேயே வைத்து விளக்கமளித்தான்.

அவளும் விலகாமல், ஆனால் “நான்… எப்படி… இங்க… உங்க…” என திக்கி பாதியிலேயே நிறுத்தியவளின் மூளை நேற்றிரவு நடந்தவற்றை, அவள் மனதில் திரையிட முயன்றது.

அவளைப் படுக்கையில் படுக்க வைத்து விலகப் போனவனை, விடாமல்… அவன் முகத்தில் இருந்து, அவள் கைகள் இறங்கி, அவன் சட்டை காலரை பற்றிக் கொண்டு, விட மறுக்க… அவளோ அதே மோன நிலையில் “சஞ்சு…” என அழைத்தாள்.

அவனும் அந்த அழைப்பில் கிளர்ந்து, “பிரஜு…” என விட்ட இதழோற்றலைத் தொடர, பின் ஒரு கட்டத்தில் அவளின் உடல் நிலையைக் கருதி, தன்னைக் கட்டுப்படுத்தி, அவள் முகத்திலிருந்து விலகி, அவளை அணைத்த நிலையிலேயே படுத்து “பிரஜு… தூங்கு டா…” என அவளையும், தட்டிக் கொடுத்து, விசிறி விட்டு, உறங்க வைத்தான். பிரஜீயும்… அந்த மயக்க நிலையிலேயே… அவன் சொன்னதைச் செய்தாள்.

ஆனால் பிரஜீயின் மூளைக்கு தான், என்ன நடந்தது என்பது நினைவிலேயே இல்லை. ‘நான் இங்கு வரும் போது, இவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்… நான் அதை மாற்றினேன்… இவனும் அலைப்பேசியை பிடுங்கினான்… சண்டையிட்டோம்… பின்… என்ன நடந்தது? இவன் தான் ஏதாவது செய்திருப்பான்… நம்மை நெருங்கியிருப்பான்” என எண்ணிக் கொண்டே, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “நீங்க தான… இதெல்லாம் உங்க வேலை தான…” என அவள் சொல்ல,

“ஹே… நானா? அடிப்பாவி, நேற்று ஒரு அப்பாவிய ரேப் பண்ணதும் இல்லாம… பழிய என்மேல தூக்கிப் போடுறியா?” என அவன் கேட்க, அவன் முடிப்பதற்குள்ளேயே, அவள் “ரேப்” என்ற வார்த்தையில் பயந்து, அவளுக்கு நடந்தது பாதி நினைவு வர, “ஐயோ… மானம் போகுது” என முனுமுனுத்து, அவன் வாயைக் கையால் பொத்தினாள்.

அவனும் சிரிப்போடு, அவள் பொத்திய கையை, தன் கையால் பற்றி முத்தம் கொடுத்து விட்டு, விடாமல் பிடித்துக் கொண்டே “என்ன மேடம்… இப்பவாது ஞாபகம் வந்துச்சா?” எனப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

அவளோ நாணத்தோடு, அவன் அணைத்திருந்த நிலையிலேயே, ஒரு கை அவன் பிடியில் இருக்க… மற்றொரு கையால், தன் கண்ணைப் பொத்திக் கொண்டு, அவன் மீதே புதைந்தாள்.

அவனோ அவள் காதில் “ஏன்டி… நேற்று… எனக்கு தெரியாம எதுவும் சரக்கு கிரக்கு அடிச்சிட்டியோ?” என அவன் மேலும் கேலி செய்ய, அவளோ மேலும் நாணத்தோடு “சீஈஈ… அதெல்லாம் உங்க பழக்கம்” என்றாள்.

அந்த அழகில் மயங்கியவன், அவள் செவியோடு, தன் முகம் பதித்து, தன் முத்தத்தையும் பதித்து, அப்படியே படுத்திருந்தான். அவளும் விலகாமல் படுத்தே இருந்தாள்.

இருவருக்கும் மனதில் ஒரு நிம்மதி நிறைந்து வழிந்தது. சிறிது நேரம் கழித்து, பிரஜி விலகி எழப் போக, “ஹே… இரு நான் போய் டீ போட்டு கொண்டு வரேன் “ என சஞ்சீவ் எழுந்தான். பின் அவளும் எழுந்து, அவன் பின்னேயே செல்ல, இருவரும் பேசி, சிரித்தப்படியே எல்லா வேலைகளையும் செய்து முடித்தனர்.

காலை மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்க, சுதனோ வயல் வெளியில் இருக்கும் வரப்பில் நடந்து சென்று, அங்கிருந்த தென்னந்தோப்பை நோக்கிச் சென்றான்.

எங்கிருந்தோ திடீரென இடையில் பூஜா வந்து, அவன் நடந்துக் கொண்டிருந்த வரப்பில், முன்னே சென்றாள். வேக நடையில் சுதன் அவளை எட்டி விட, அப்போது தான் தன் பின்னே காலடி சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தவள், சுதனைப் பார்த்து புருவம் சுழித்தாள்.

அவன் அவள் பார்வையைப் பொருட்படுத்தாது, முன்னே வந்துக் கொண்டே இருக்க… அவர்கள் இடம் என்ற தைரியத்தில், பூஜா இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு “நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்வாங்க. உங்களுக்கு ஒரு தடவைச் சொன்னா புரியாது?” எனப் பொரிந்தாள்.

அவனோ “என்னையவா சொல்ற?” எனக் கேள்வியாய் நோக்கியப்படி கேட்க, அவளோ “பிறகு இங்க யார் இருக்கா? நீங்க தான… நானும் பார்த்துட்டு தான் இருக்கேன், எப்போ பாரு என் பின்னாடியே வர்றீங்க, இது சரியில்லை…” என்று கண்டிப்போடு கூறினாள்.

அதைக் கேட்டவனோ சிரித்து விட்டான். “யாரு?… நானா?… உன் பின்னாடி…” என மேலும் சிரிக்கும் போதே, அவள் முகம் சுருங்கி விட, அவளின் கோபத்தையும், அவனின் சிரிப்பையும் பார்த்து, வயலில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த ஒருவர், உடனே அவர்களிடம் வந்து “என்னமா… தம்பி யாரு? புதுசா இருக்கு… என்ன விஷயம் தம்பி?” என பூஜாவிடமும், அவனிடமும் கேட்கவும் தான், அவன் சிரிப்பை நிறுத்தினான்.

உடனே பூஜா “மாமா, இவரு எங்க மதன் மாமாவோட தம்பி தான்” எனச் சொல்ல, “ஓ… அப்படியா தாயி… என்ன தம்பி நல்லா இருக்கீகளா? தங்கச்சிய கூட்டி வந்திருக்கீகளா?” என அவர் வினவ,

இவனோ ரதியை தான் கேட்கிறார்கள் போல, என எண்ணி “ஆமாங்க” என வேகமாய் பதில் சொல்ல, “தங்கச்சிக்கு இப்ப எத்தனாவது மாசம் நடக்குதுங்க… மச்சான் சொன்னாப்ல” என அவர் சேகரைக் குறிப்பிட்டு, சஞ்சீவென நினைத்து, பிரஜீதாவைப் பற்றி அவனிடம் கேட்டார்.

வந்தவர், தோட்டத்தில் பணிகளை மேற்பார்வையிட்டு, பொறுப்பாய் சேகரின் வயக்காட்டைப் பார்த்துக் கொள்பவரும், சேகர் குடும்பத்தினரின் தூரத்துச் சொந்தமும் ஆவார். அதனால் தான், யாரோ தங்கள் வீட்டுப் பெண்ணிடம், வாலாட்டுகிறான் போல எனப் பார்க்க வந்தார்.

சுதனோ “என்ன எத்தன மாசமா?” என அதிர, பூஜா தான் உள்புகுந்து, “மாமா, அவுக மதன் மாமாவோட சித்தி பையன், நீங்க சொல்றவுக ஊர்ல இருக்காரு, அவுக வரல” என விளக்கம் அளிக்க, அவரோ “நான் மாப்பிள்ளையோட கண்ணாலம் முடிஞ்ச தம்பின்னுல நினைச்சுப்புட்டேன், மன்னிச்சுக்கோங்க தம்பி தெரியாம கேட்டுப்புட்டேன்.” எனச் சொல்ல,

அவனோ “சரிங்க” என அவரிடம் சொல்லிவிட்டு, அவளிடம் “ரதி எங்க?” எனக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு, அவர்களிடம் விடைப்பெற்று, அவள் காட்டியத் திசைப்பக்கம் சென்றான். அங்கோ நம் ரதி, தொட்டிக்குள் இறங்கி, பம்ப் செட் மூலம் வந்த நீரில், ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏய்… குட்டி பிசாசு… ஏன் என்ன இப்படி பழிவாங்குற?” எனக் கேள்வி கேட்டான். பின்னே, அவன் சசியோடு சிரித்து பேசியதைப் பார்த்து விட்டு, சும்மா இருப்பாளா நம் ரதி? அதில் இருந்து, ரதி சுதனுடன் பேசவும் இல்லை, அவன் வந்தாலே முகத்தைத் தூக்கி வைத்து விட்டு, ஆனால் மறக்காமல் அவனை எவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்த முடியுமோ, அதையெல்லாம் மறக்காமல் செய்து விட்டு தான் செல்வாள். உதாரணத்திற்கு, உட்காரும் போது குண்டூசிப் போடுவது, இங்கு வந்த பின் அட்டகாசம் மேலும் பலமானது.

இங்கு லதா வீடு கொஞ்சம் கிராமம் கலந்த ஊரில், வயக்காட்டை ஒட்டி இருப்பதால், கொல்லைப்புறம், வயல்வெளி, தோட்டம் எனப் பசுமை மாறாமல் ரம்மியாமாய் இருந்தது. இன்று காலை, கொல்லைப்புறத்தில், அவன் பல் விளக்க, வைத்திருந்த சொம்பு நீரில் கோமியத்தைக் கலந்து விட்டாள்.

அதனால் தான் சுதன், உடனடியாக சமாதான உடன்படிக்கை செய்ய வந்தான். அவளோ பதிலுக்கு எதுவும் பேசாததால், இவளைத் திட்டி எல்லாம் பிரயோஜனம் இல்லையென எண்ணி, “ஏய் செல்லக்கட்டி, அண்ணன்ன பார்த்தா பாவமா இல்லையா? எனக்கு இருக்கிற ஒரே சொந்தம்… ஒரே ஒரு தங்கச்சி நீ தான…” என எப்போதும் அவள் முறுக்கிக் கொண்டாள், அவளை உருக வைக்கும் வசனத்தை அவன் சொல்ல,

அவளோ “ஏய்… போடா… என்ன ஏமாற்றாத, அப்படி நீ நினைச்சிருந்தா அவன போய் சட்டைய பிடிச்சிருக்க வேணாம்… அத விட்டுட்டு சிரிச்சு பேசுனதும் இல்லாம, அவன் கூட சாப்பிட்டுட்டு வேற வந்திருக்க… தங்கச்சி எல்லாத்தையும் கொட்டிட்டாளே, அவ சாப்பிடலையேன்னு உனக்கு என் மேல அக்கறை இருந்துச்சா… இதுல உங்கம்மா வேற என்ன அர்ச்சன பண்ணிட்டே வந்தாங்க… யூ நோ…” என தண்ணீர் தொட்டிக்குள் நின்று முகத்தை சுளுக்கி, அவன் மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்க… கீழிருந்த சுதன் குழம்பிப் போனான்.

‘இவளுக்கு சசியோட சாப்பிட்டது பிரச்சனையா, இல்ல இவளுக்கு சாப்பாடு வாங்கி தரலேன்னு சொல்றாளா? இல்ல அம்மாட்ட திட்டு வாங்குனது தான் பிரச்சனையா?’ எனக் குழம்பி, “சரி… இனிமே அண்ணன் இப்படி பண்ணமாட்டேன். காட் ப்ராமிஸ் ரதி” எனப் பொதுவாய் சமாதானம் செய்ய, “ஒன்னும் வேணாம், இனிமே நீ எனக்கு அண்ணன் இல்லன்னு முடிவு பண்ணி இரண்டு நாளாச்சு” எனப் பிகு செய்து கொள்ள, அவனோ அவளுக்கு முதுகில் இரண்டு போட, அருகே செல்ல…

“ஏய் வேணாம்… வராத… கிணத்துல தள்ளி விட்ருவேன்” என அருகில் இருந்த கிணற்றைக் காண்பிக்க, அதே நேரம் பூஜா அங்கு வர, அவனோ பயப்படாமல் அவளை நோக்கி சென்று, தொட்டிக்குள் இறங்கினான்.

ரதியும் சொன்னது போலவே, அவனைக் கிணற்றுக்குள் தள்ளி விட, இதைப் பார்த்து பதறி, அதிர்ந்த பூஜா “ரதிக்கா… என்ன இப்படிப் பண்ணிட்டீங்க…” எனக் கத்தி, அவளும் நிமிடத்தில் கீழேயே ஓடி போய் கிணற்றுக்குள் குதித்தாள்.

இதைப் பார்த்த ரதியோ “ஆமா… இவ எதுக்கு இப்படிப் பதட்டப்பட்டு போய் குதிக்கிறா?” எனச் சவகாசமாய் யோசித்து, அங்கிருந்தப் படியே கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க… பூஜாவோ, தண்ணீருக்குள் இருந்து மயங்கிய சுதனின் முடியைப் பற்றி இழுத்து, நீந்தியப் படியே, கிணற்றின் படிக்கட்டு அருகே இட்டுச் செல்ல, பின் அவனை தண்ணீர் மேலே இருந்த, ஒரு படிக்கட்டில் அமர வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட ரதியோ “அடப்பாவி….. இரு…. உன்ன….” என முனுமுனுத்து கொண்டு, “பூஜா… அங்க பாரு, படிக்கட்டுல பா… பா… பச்ச பச்ச… பாம்பு” எனக் கத்தி சொல்ல, அதைப் பூஜா உணர்ந்தாளோ இல்லையோ… “அய்யயோ” என மீண்டும் தண்ணீருக்குள் குதித்து விட்டான் சுதன்.

பூஜா “அப்போ… உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என அவனைப் பார்த்து அதிசயிக்க, அவனோ “நான் எப்போ மா தெரியாதுன்னு சொன்னேன்” என்று சொல்லி முடிப்பதற்குள், மேலிருந்த ரதியோ “பூஜா… எங்க அண்ணன பத்திரமா காப்பாற்றி, கூட்டிட்டு வா மா… நான் போய் ஆம்புலன்ஸ்கு தகவல் சொல்றேன்” என அவ்விடம் விட்டு அகன்றாள்.

சுதன் “ஏன் பூஜா… என் உயிர் மேல அவ்ளோ ஆசையா உனக்கு?” என அவளிடம் கேட்க, அப்போது தான், தான் அவசரப்பட்டதையும், பதற்றப்பட்டதையும் நினைத்து… அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அதனால் உதட்டைக் கடித்து, தலையில் லேசாக அடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே “சரி… வாங்க போகலாம்” எனச் சொன்னாள். “ஹே… நான் கேட்டதுக்கு பதில காணோம்.” என அவன் நீந்திக் கொண்டே கேட்டான்.

“என்ன கேட்டீங்க?” என வெள்ளந்தியாக அவள் வினவவும், ‘நான் எதார்த்தமா கேட்டப்போலாம்… வில்லங்கமா நினச்சிட்டு, சரி, நாமளும் ட்ரை பண்ணலாமேன்னு நினச்சு கேட்டா… இப்ப மட்டும் சரியா புரியாத மாதிரி அப்பாவியா கேக்குறா பாரு… டேய் சுதன் உனக்கு அவ்ளோ தான் கொடுப்பினை போல’ என எண்ணிக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டு, “இஹும்… ஒன்னும் இல்ல… நீ போ நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று கூறி விட்டு, அவள் படிகளில் எழிலோவியமாய் ஏறிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அம்மாடி… இது தான் காதலா…

அட ராமா…. இது என்ன வேதமோ…

நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…

கண்ணு ரெண்டும் தான தாளம் போடுது…” எனப் பாடல் திடீரென மனதில் ஒலிக்க, அப்படியே மெய்மறந்து தண்ணீரிலேயே இருந்தான்.

மேலே வந்து, அதைக் கண்ட பூஜாவோ “சுதன் மாமா… நிஜமாவே பாம்பு உள்ள இருக்கும்… பார்த்து….” எனச் சொல்லி சிரித்து விட்டு சென்றாள்.

இரவு எல்லோரும் உணவு உண்டு முடித்த பின்னர், ஆண்கள் தோட்ட வீட்டிலும், பெண்கள் வரவேற்பறையிலும், ரதி கீழே இருந்த பூஜாவின் அறையிலும் படுத்துக் கொள்ள, மதனும் புஷ்பாவும், மாடியில் இருந்த அறையில் இருந்தனர்.

வெளியே வராந்தாவில், அந்த இரவு நேர வானத்தை ரசிக்காமல், ரசிப்பது போல் மேலே பார்த்தவாறு, நின்றுக் கொண்டிருந்தான் மதன். புஷ்பா அறைக்குள்ளே அமர்ந்து “நேற்று இரவு, நான் வருவதற்குள் உறங்கி விட்டார். இன்று எப்படியும் நம் நிலையைச் சொல்லி விட வேண்டும்” என எண்ணிக் கொண்டு, அவனிடம் எவ்வாறு பக்குவமாய் சொல்ல வேண்டும் என்று ஒத்திகைப் பார்த்து, அவன் வரவிற்காக காத்திருந்தாள்.

வெளியே இருக்கும் கரு வானம் கூட மதனுக்கு, அவன் இருக்கும் மன நிலையை பிரதிபலிப்பது போல் இருளாக இருப்பது போல் தோன்றியது. ஆம், அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது, தன்னைப் பிடிக்காதவள் எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனையாய் இருந்தது.

பின்னே ஆசையோடு முதலிரவு அறைக்குள் காத்திருக்க, உள்ளே நுழைந்த தன் மனைவியை காதலோடு கட்டிலுக்கு அழைத்து வர, அவளிடம் நெருங்க, அவளோ நடுங்கிக் கொண்டே, கண்ணில் நீர் வழிய, “ப்ளீஸ்… எனக்கு… பிடிக்கல…” என முகத்தில் அறைவது போல் சொன்னாள்.

ஆனாலும் மதன் அவள் பயப்படுகிறாள் என எண்ணி, அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு, அவளிடம் நெருங்கப் போக, “வேணாம்… வேணாம்…” எனப் பின்னேயே நகர்ந்து, அடைத்த கதவிலேயே சாய்ந்து, மடங்கி அமர்ந்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

அவனும் அவளாக, சமாதானம் ஆகட்டும் எனக் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான். நேரம் சென்றதே தவிர, அவள் கண்ணீர் நிற்கவில்லை, சரி நாம் போய் சமாதானம் செய்யலாம் என்று சென்றாலோ… அவன் காலடி சத்தத்தை வைத்தே “வேண்டாம்… ப்ளீஸ்…” என ஜபிக்க ஆரம்பித்தாள்.

எங்கே அவளின் சத்தம் வெளியே கேட்டு விடுமோ என அவன் நெருங்காமல், அவளுக்கு ஒரு தலையணையைக் கீழே எடுத்து வீசி விட்டு, கட்டிலில் படுத்து உறங்கி விட்டான்.

புஷ்பாவிற்கோ மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை, அதிலும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும், பின் நன்றாக படித்து வேலைக்கு செல்லும் பணியாளனைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கண் கொள்ளாக் கனவுகளைச் சுமந்து வலம் வந்தாள்.

ஆனால் சஞ்சீவின் திடீர் திருமணத்தால், ஏதோ ஒரு பட்டபடிப்பு முடித்து, சொந்தமாய் கார் வாங்கி, அதை ஒரு ட்ராவல்ஸுக்கு விட்டு, காரோட்டி சம்பாதிக்கும் மதனைக் கட்டாயக் கல்யாணம் என்று இல்லாவிட்டாலும், இக்கட்டான சூழ்நிலையில்… தாயின் வேண்டுக்கோளையும்… தாய்மாமனின் மனக்கஷ்டத்தையும் போக்க… அவரின் குடும்ப கௌரவத்தைத்தையும் காக்க வேண்டி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் தான் மதனை மணந்துக் கொள்ள ஒப்புக் கொண்டாள்.

அவள் தன் மாமனிடமே கேட்டிருக்கலாம், “மாமா, நான் மேற்கொண்டுப் படிக்க  வேண்டும்” என்று, சரி அவரிடம் சொல்லவில்லை, ஆனால் தனக்கு தாலி கட்டிய கணவனிடமாவது, தன் ஆசையைச் சொல்லியிருக்கலாம்.

ஆனால் எவரிடமும் வெளிப்படையாய், பேசிப் பழக்கப்படாமல், அடக்க ஒடுக்கமாய், கிரமாத்தில் வளர்ந்து, பக்கத்து ஊரில் கல்லூரி படிப்பு முடித்த புஷ்பாவிற்கு தன் மன எண்ணங்களை சொல்ல தெரியவில்லை என்பதை விட, எங்கே சொன்னால் எதுவும் பிரச்சனையாகி விடுமோ என்று பயம்.

மேலும் தோழிகள் வேறு “என்னடி படிக்கணும், வேலைக்கு போறவன தான் கட்டனும்னு சொன்ன, கடைசில இப்படி போய்… உங்க மாமா பையன கட்டுற” எனத் துக்கம் விசாரித்து, ஏற்கனவே குழம்பியவளின் மனதை மேலும் பள்ளமாக்கி விட்டு சென்றனர்.

அதனால் அந்தத் தாக்கத்திலேயே இருந்தவளுக்கு, அன்றைய இரவு, தன் வாழ்க்கை மீதே அவளுக்குப் பயம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் இந்த மூன்று நாட்களில், மதன் தன்னை எதுவும் பேசாமல், யாரிடமும் தங்கள் அந்தரங்கத்தை சொல்லாமல், முக்கியமாய் தன் பெற்றோரிடம் எதுவும் சொல்லி சண்டையிடாமல் இருந்ததைப் பார்த்து, அவளுக்கு  ஒரு தெளிவு வந்திருந்தது.

ஏனென்றால், இவர்கள் ஊரில் ஒரு சமயம், இப்படி தான், அவள் வயதையொத்த அவள் தோழியை, சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து, அவள் பயந்து போய் வாழ மறுக்க, அவள் கணவன் அதை பெரிய பிரச்சனையாக்கி, பஞ்சாயத்துச் செய்து, அந்தப் பெண்ணின் வாழ்க்கையை ஒரு வழியாக்கி, அவளை உயிரோடு சாகடித்து விட்டனர்.

அது அப்படியே அவள் மனதில் பதிந்து, இந்த சமயத்தில் அது வேறு அவள் மனதினுள் நிரம்பவும் மேலெழுந்தது. ஆனால் மதனின் செயலால், அவனும் நல்லவன் தான், தன்னைப் புரிந்துக் கொள்வான், தன் மனதை அவனிடம் திறக்கலாம் என்றெண்ணி, சிறிது தெம்பாய் இருந்தாள்.

மதன் தன் எண்ணத்திலேயே குழம்பியவன், நேரமானதை உணர்ந்து, அறையினுள் சென்றான். அவன் வரவிற்காக காத்திருந்தவளைப் பார்த்து, நெற்றி சுருக்கினான். அவனைப் பார்த்தவளோ, தன் சேலை முந்தானையை கொத்தாக பற்றி, இருகைகளினாலும் இறுக்கிக் கொண்டே, எழுந்து நின்றாள்.

அவன் ‘ஆமா… இந்த மரியாதைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என எண்ணிக் கொண்டே படுக்கையை கையால் தட்டி, படுக்கப் போக, புஷ்பாவோ, முதன் முதலில் மேடை பேச்சுக்கு செல்லும் மாணவி போல, உள்ளங்கை வேர்க்க, இன்னும் சேலையை இறுகப் பற்றிக் கொண்டே, தொண்டையைச் செருமி, தன்னைச் சரிபடுத்திக் கொண்டு “அத்தான்…” என அழைத்தாள்.

அவன் படுத்தவாறே திரும்பிப் பார்க்கவும், “நான்… உங்ககிட்ட… கொஞ்சம்… பேசணும்” என்றாள். அவனோ எந்த முக பாவமும் காட்டாமல் “என்ன?” என்றான்.

பேச வேண்டும் என்று சொல்லிய பின்னும், அவளை “இங்கே உட்கார்ந்து சொல்” என்று அவன் அழைக்கவும் இல்லை, அவளும் உட்காரவும் இல்லை. அதனால் கட்டில் கால் அருகே நின்றுக் கொண்டே “அது வந்து…. நீ… நீங்க… உங்களுக்கு… என்மேல கோபமா அத்தான்” எனத் தடுமாறி கேட்டாள்.

அவனோ புருவத்தைச் சுருக்கி, “இல்லையே… ஏன் அப்படி கேட்குற?” என்றான், அவளோ எப்படி சொல்வது என தயங்கி… ‘சை! இப்படியா ஆரம்பிப்பேன்’ என நொந்து, “இல்ல அத்தான்… அன்னிக்கு… ஏதோ பயத்துல… அப்படி… பண்ணிட்டேன்” எனத் திக்கினாள்.

அவனோ சிரித்து விட்டு, “அப்போ… இப்ப பயமில்லையா?” எனக் கேட்க, அவளோ அவன் பதிலில் முழித்து, பின் அவன் வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்து மறுப்பாய் தலையசைத்தாள்.

“இங்க வா புஷ்பா, இப்படி வந்து உட்கார்” எனத் தன்னருகே கட்டிலில் இருந்த இடத்தைக் காட்டிக் கூறினான். அவளும் வந்து அமர, “இப்ப சொல்லு, என்ன விஷயம்… எதுவானாலும் சொல்லுமா… அத்தான் கோபப்படமாட்டேன்” என்று தன்மையாய், அவளைத் தொடாமலும் கேட்கவும், அவள் தன் ஆசையை, அதாவது தான் மேற்கொண்டுப் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும், தன் தோழி வாழ்க்கையைப் பார்த்து, தான் பயந்த விதத்தையும் மெல்லத் திணறல்களோடு கூறி முடித்தாள்.

மதனோ அவளின் பயத்தைச் சரியாய் புரிந்துக் கொண்டு, “நீ பயப்படவே வேண்டாம் புஷ்பா… உன் ஆசைப்படி படி, எனக்கு தான் படிப்பு மேல பெருசா ஆசை இல்ல, ஏதோ வந்த வரைக்கும் படிச்சு, பெயருக்கு ஒரு டிகிரி வாங்கினேன். நீயாவது நல்லா படி, நான் பிரஜீதா கிட்ட எந்தக் கல்லூரி நல்லா இருக்கும்னு விசாரிச்சுக் கேட்டு, உன்ன சேர்த்து விடுறேன். சரியா?” எனச் சொல்லவும், அவள் சந்தோஷமாய், வேகமாய் சரியென தலையசைத்தாள்.

“சரி வா…தூங்கலாம்” என அவன் கூப்பிட, அவளோ மிரண்டுப் பார்க்க, “ஹே… பயப்படாத… கொஞ்ச நாள் ஆகட்டும்… உனக்கும் எல்லாம் புரியும்” என சொல்லிக், கண் சிமிட்டி விட்டு உறங்கி விட்டான்.

அவளோ ஒரு நொடி ஸ்தம்பிக்க, ஆனாலும் ‘கடவுளே, இப்படி ஒரு நல்லவனை, எனக்கு தந்ததற்கு மிகவும் நன்றி’ என மனமாற நினைத்து விட்டு, அவன் சிறுவயதில் தங்கள் வீட்டிற்கு, வந்து சென்ற பொழுதுகளையெல்லாம் அசைப்போட்டுக் கொண்டே, அப்படியே படுத்து உறங்கியும் விட்டாள்.

 

மாயம் தொடரும்……..

error: Content is protected !!