ஈஸ்வரனின் ஈஸ்வரி 10
ஈஸ்வரனின் ஈஸ்வரி 10
அத்தியாயம் – 10
அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள சௌண்ட்ப்ரூப் அறை கொண்ட ஒரு அலுவலகத்தில், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் ஈஸ்வர். இந்த கேசை அவன் கையில் எடுத்தது முதல், அவனுக்கு மிரட்டல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு வந்து கொண்டு இருந்தன.
அதை எல்லாம் தூசி போல் தட்டியவன், இன்று அந்த தொழிலதிபர் பாண்டியன் இறந்த செய்தி, அவனுக்கு எங்கோ தவற விட்டது போல் ஒரு பிம்பம் அவனுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
“என்னடா இது? கிணறு வெட்ட வெட்ட, பூதம் கிளம்பும் மாதிரி இருக்கு இந்த கேஸ். அவரை மீட் பண்ணி, சில விஷயம் தெரிஞ்சிக்கலாம் போனா, இப்படி ஒரு நியூஸ் ஓட திரும்பி வருவோம்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை டா” என்று சலித்தான் விஷ்வா.
“ஆனா, நான் எதிர்பார்த்தேன். அதனால தான் அவசரமா, உன்னை கூட்டிட்டு போனேன் அங்க. பட், ஏதோ நாம அங்க மிஸ் பண்ணிட்டோம் அது என்னனு எனக்கு இப்போ சரியா தெரியல”.
“அதை தான் ரொம்ப நேரமா யோசிக்கிறேன், எனக்கு சிக்கவே மாட்டேங்குது” என்று கண்ணை மூடிக் கொண்டே சோபாவில் சாய்ந்து கொண்டு, கூறிக் கொண்டு இருந்தான் ஈஸ்வர்.
அவனின் சிந்தனையை கலைக்காமல், அங்கு இருந்த காபி மேக்கரில் இருவருக்கும் காபி போட சென்றான் விஷ்வா. காபியின் நறுமணத்தில் கண் விழித்த ஈஸ்வர், நண்பனை பார்த்து புன்னகைத்தான்.
காபியை அருந்திக் கொண்டே யோசித்தவனுக்கு, அப்பொழுது தான் விட்ட க்ளு என்னவென்று புரிந்தது. உடனே அவன் விஷ்வாவிடம், ஹாக்கர் தெரிந்த நம்பிக்கையான ஆட்களை வர சொல்லுமாறு கூறினான்.
நண்பனின் எண்ணம் புரிந்தவன், உடனே அவனுக்கு தெரிந்த இரண்டு பேரை போனில் அழைத்து விஷயத்தை கூறி உடனே வர சொன்னான். அடுத்த அரை மணி நேரத்தில் வந்தவனை பார்த்து, ஈஸ்வர் புருவம் உயர்த்தி அவனை துளைக்கும் பார்வை பார்த்தான். அங்கே ஈஸ்வரை சற்றும் எதிர்பார்க்காதவன், ஈஸ்வர் கேட்கும் முன் அவனே தனியாக பேச வேண்டும் என்று கெஞ்சினான் பீட்டர்.
அவனின் கெஞ்சலில் அவனுடன் வந்த இன்னொருவனுக்கு, செய்ய வேண்டிய வேலையை சொல்லிவிட்டு ஈஸ்வர் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே மற்றொரு அறைக்கு சென்றான்.
“இங்க வேலை கிடைச்சதும், நீ ஏன் உன் தங்கச்சிக்கு சொல்லல. அங்கேயே வந்து எங்க கூட இருந்துக்கலாம் தானே, அப்புறம் நீ M.B.A தானே முடிச்ச அப்புறம் எப்படி இது?” என்று கேட்டான் ஈஸ்வர்.
“மாம்ஸ்! எனக்கு ஹாக்கிங் அவ்வளவு பிடிக்கும். ஆல் கிரெடிட்ஸ் டூ ஹாலிவுட் சினிமா, நல்லவங்களுக்கு இப்படியும் உதவி செய்யலாம் அப்படின்னு முடிவு பண்ணி தான் இதை எடுத்து படிச்சேன் மாம்ஸ்”.
“ஈஸ், பத்தி உங்களுக்கு தெரியாதா மாம்ஸ்? கண்டிப்பா உங்க கூட தான் தங்க சொல்லுவா, ஆனா நான் வேலை பார்க்கிற ப்ரோபஷன் அவளுக்கு ஆபத்து ஏற்படுத்தினா என்ன செய்றது? அதான் சொல்லல” என்றவனை பார்த்து சிரித்தான் ஈஸ்வர்.
“அது சரி! அவளை விட்டா ஊரையே வித்துருவா அப்படின்னு சொன்ன பெரிய மனுஷன் நீங்க தான” என்று அவன் சொன்னதை அவனுக்கே, அதை திருப்பி விட்டான் ஈஸ்வர்.
“நான் சொன்னேன் தான், ஆனா நாளைக்கே இதால என் தங்கச்சிக்கு பிரச்சனை வந்தா?” என்று பதில் தெரிந்து கொண்டே கேட்டவனை பார்த்து இப்பொழுது பலமாக சிரித்தான்.
“நான் இருக்கும் பொழுது, அவளுக்கு எந்த ஆபத்தும் அவ கிட்ட கூட வர முடியாது. அது உனக்கே தெரியும், இருந்தாலும் என் வாயால கேட்க இப்படி திரும்ப திரும்ப கேட்கிற சரியா?” என்று கேட்டவனை இப்பொழுது மலைத்து போய் பார்த்தான்.
“சரண்டர் மாம்ஸ்! இவர் நம்ம ஊர் தான், எனக்கு இதுல இண்டரெஸ்ட் இருக்கிறதை தெரிஞ்சு இவர் தான் அவரோட அசிஸ்டெண்ட்டா கூப்பிட்டுகிட்டார்”.
“ட்ரைன் கிளம்பின அடுத்த நிமிஷம், அவர் கிட்ட இருந்து கால் வந்துச்சு. அப்போவே அப்பாகிட்டையும், அம்மாகிட்டயும் சொல்லிட்டு அடுத்த ஸ்டேஷன் ல இறங்கிட்டேன்”.
“பிரண்டு கூட இங்க பக்கத்துல ஒரு ரூம் ல, தான் தங்கிகிட்டேன் மாம்ஸ். என்ன பாட்டி தான் வீட்டுக்கு போயிட்டு அப்புறம் போன்னு சொன்னாங்க, ஆனா எனக்கு உடனே இறங்க சொல்லி என் மனசு சொல்லிகிட்டே இருந்தது அதான் அவங்களை சமாதானப்படுத்திட்டு உடனே இறங்கிட்டேன்” என்று கூறிய பீட்டரை பார்த்து சிரித்தான்.
“சரி! இப்போ வேலையை முடிச்சிட்டு நேரா உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு என் கூட வீட்டுக்கு வா. உன் தங்கச்சிக்கு அப்போ இந்நேரம் நியூஸ் போய் இருக்கும், எதுக்கும் தயாரா இருந்துக்கோ” என்றவனை பார்த்து புன்னகை புரிந்தான்.
தங்கை இப்பொழுது அவனின் செல்ல பிள்ளை இல்லை, அவள் இப்பொழுது திருமதி அதுவும் ஈஸ்வரனின் மனைவி ஆயிற்றே. அவ்வளவு எளிதில் அவனை விட்டுவிடுவாளா? அவளிடம் இனி அவனின் சமாதானம் அவ்வளவு எளிதில் எடுபடுமா என்ன?
பீட்டர் அவருக்கு உதவி புரிய, அடுத்த ஒரு மணி நேரத்தில் தொழிலதிபர் பாண்டியன் அவரின் வீட்டின் அணைத்து cctv கேமராவும், இவர்கள் பேச்சை கேட்கும் அளவிற்கு மாற்றி இருந்தார்கள்.
“இருந்த இடத்தில இருந்து எப்படி டா இப்படி ஹாக் பண்ணுறீங்க?” என்று விஷ்வா அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான்.
“அது எல்லாம் கோடிங் தான் சார், ரஷியாவில் ஒரு சின்ன பையன் அவனுக்கு ஒரு பதிமூணு வயசு தான் இருக்கும். அவங்க அப்பா ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குற அளவுக்கு நம்ம கிட்ட அவ்வளவு பணம் இல்லை, அதனால இப்போதைக்கு வோக்ச்வோகன் கார் யூஸ் பண்ணலாம்ன்னு புது கார் வாங்கி இருக்கார்”.
“அந்த பையனுக்கு புரிந்தது, பணம் அவ்வளவு இல்லை அப்படின்னு மட்டும் தான், உடனே பெரிய பேங்க் ஒண்ணுல பணத்தை இன்வெஸ்ட் பண்ணி இருக்கிற பணக்காரர்கள் டேடாபேஸ் எடுத்து வச்சிட்டு, ஒவ்வொருத்தர்கிட்டையும் எவ்வளவு எடுக்கனும்னு கால்குலேட் பண்ணி துட்டை அவங்க அப்பா அக்கௌன்ட்க்கு மாத்திட்டு இப்போ வாங்குங்க அப்படினான்”.
“அந்த டேடாபேஸ் கூட அவனுக்கு எப்படி கிடைச்சதுன்னு நினைக்குறீங்க? எல்லாம் இன்டர்நெட் சார். நாம கொடுக்கிற ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு இடத்திலும் சேவ் ஆகிடும்”.
“அதை இப்படி ஹாக் பண்ணி எடுத்து, அவங்களையே மிரட்ட கூட அங்க அங்க ஹாக்கர்ஸ் இருக்காங்க. அதனால தான சைபர் கிரைம் ஒன்னு உள்ள வந்ததே, இப்போ ஹாக்கிங் உலகத்தில் டாப்பா இருக்கிறது துபாயை சேர்ந்த ஒரு பதினாறு வயசு பையன்”.
“அவனை பத்தி யாரும் அவ்வளவா நியூஸ் வெளியே சொல்லிகிறது இல்லை, அவனை துபாய் கவெர்மென்ட் அவங்களோட சீக்ரெட் ஆளா மாத்தி வச்சு இருக்காங்க” என்று பீட்டர் கூறியதை கேட்ட விஷ்வா வாயை பிளந்தான்.
“இது எல்லாம் எனக்கு தெரிஞ்சு, தெரியாத ஆட்கள் தான் இந்த ஹாக்கிங் உலகத்தில் நிறைய. நாம அதனால எதையும் ஜாக்கிரதையா ஹான்டில் பண்ணனும். நம்ம ஸ்மார்ட்போன் கூட நமக்கு பாதுகாப்பு கிடையாதுன்னு சொல்லுவேன், என்ன செக்யூரிட்டி போட்டு வச்சு இருந்தாலும் கில்லாடிக்கு கில்லாடி இந்த உலகத்தில் இருப்பான்” என்று அவன் கூறவும், இப்பொழுது மேலும் அதிர்ந்தான் விஷ்வா.
அவனுக்கு திருடனை, கொலைகாரனை பிடித்து அவ்வப்பொழுது அடிதடி செய்து தான் பழக்கமே தவிர, இப்படி இதை தவிர்த்து இன்னொரு உலகம் இருப்பது அவனுக்கு பயத்தை ஏற்ப்படுத்தியது.
“சார்! உங்களுக்கு எந்த டைமில் உள்ள வீடியோ வேணும்ன்னு தெரிஞ்சிக்கலமா?” என்று பீட்டருடன் வந்த அந்த இன்னொரு ஹாக்கர் மணி கேட்டார்.
“நேத்து சாயிந்திரம் ல இருந்தே எனக்கு எல்லா வீடியோசும் வேண்டும், முக்கியமா இவினிங் ஒரு சிக்ஸ்க்கு மேல அங்க என்ன நடந்ததுன்னு தெரியனும். விஷ்வா! முதல இதை எல்லாம் ரெகார்ட் பண்ணனும், அதுக்கு முன்னாடி அங்க இப்போ எந்த ஸ்டேஷன் கண்ட்ரோலில், இவரோட ஏரியா இருக்குன்னு எனக்கு தெரியனும்” என்று அடுத்து அடுத்து அவனுக்கு வேலைகளை கொடுத்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வர்.
அப்பொழுது ஆரம்பித்த வேலை, மாலை ஆறு மணி வரை நீடித்து விட்டது. நடுவில் இருந்த மீட்டிங் கூட அவன் கான்செல் செய்துவிட்டு, அதற்கு வேறு தனியாக உயரதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது எல்லாம் தனி கதை.
“சரி டா விஷ்வா! நான் கிளம்புறேன் வீட்டுக்கு. பீட்டர்! நீயும் கிளம்பு என் கூட” என்று அழைத்தான் ஈஸ்வர்.
“இல்லை மாம்ஸ், நான் நாளைக்கு காலையில் வந்திடுறேன் அங்க. இப்போ போய் பிரண்டு கிட்ட சொல்லிட்டு, கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு நாளைக்கு வரேன்” என்று கூறிவிட்டு அவன் ஒரு பக்கம் கிளம்பி சென்று விட்டான்.
ஆயிரெதெட்டு யோசனைகள் இந்த கேஸ் பற்றி மனதில் வலம் வந்தாலும், எதிலும் இப்பொழுது மனம் செல்லவில்லை. காரணம் அங்கே அவனின் மனையாள் என்ன செய்து கொண்டு இருக்கிறாளோ? என்ற எண்ணம் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது அவன் மூளைக்குள்.
ஒரு வழியாக அந்த சென்னை ட்ரபிகில் நீந்தி, வீடு வந்து சேர இரவு எட்டானது. கதவை தட்டிவிட்டு அவன் வெளியே காத்து இருக்க, உள்ளே அவனின் மனையாள் ஈஸ்வரி லென்ஸ் வழியாக அவன் வருகை புரிந்ததை கண்டு சந்தோஷமாக கதவை திறந்து அவனை வரவேற்றாள்.
இப்படி ஒரு வரவேற்ப்பை எதிர்பார்க்காதவன், அவளின் அந்த சந்தோஷத்தில் அவனும் மகிழ்ச்சி அடைந்தான்.
“வாங்க வாங்க! இன்னைக்கு நைட் டின்னர் ஸ்பெஷல். நீங்க சொன்ன மாதிரி you tube பார்த்து செய்தேன்“.
” டன்டன் சில்லி சப்பாத்தி வித் பன்னீர் டிக்கா” என்றாள்.
“அட ஆண்டவா! காலையில் தான் சொல்லிட்டு போனேன், உடனே இப்படி சோதனை எலி அன்னைக்கே என்னை ஆக்கிடுவானு நான் என்ன கனவா கண்டேன்“.
“பார்க்க நல்லா தான் இருக்கு, எதுக்கும் அவளை முதல சாப்பிட சொல்லுவோம்” என்று எண்ணிக் கொண்டே, ஈஸ்வர் அவளை முதலில் சாப்பிட கூறினான்.
அவளோ பிடிவாதமாக முதலில் அவன் தான் சாப்பிட வேண்டும் என்று கூறி விட்டாள். அவனும் சரி என்று கூறிவிட்டு, உண்ண தொடங்கினான்.
உண்டவுடன் அவனுக்கு சுரீரென்று காரம் நாக்கில் தென்பட்டு, மக்கில் இருந்த தண்ணீரை எடுத்து வாயில் சரித்துக் கொண்டான்.
அவன் வாழ்நாளில் இப்படி ஒரு காரத்தை, சாப்பிட்டதாக சரித்திரம் இல்லை. இன்று இப்படி ஒரு காரம் அவன் எதிர்பார்க்கவில்லை.
“என்னங்க! என்ன ஆச்சு?” என்று பதறி போய் கேட்டாள்.
“சாப்பாடு நல்லா தான் இருக்கு, ஆனா காரம் தூக்கலா இருக்கு” என்றுவிட்டு இனி அவளையே சாப்பிட்டு பார்த்துவிட்டு பின் தான் தனக்கு பரிமாற வேண்டும் என்று கூறிவிட்டு சென்றான்.
அவளோ, செல்லும் அவனையே பாவமாக பார்த்து வைத்தாள். அவள் அடுத்து செய்த வேலை அன்றைய இரவில் அவள் அன்னையை தூங்க விடாது, சமையலில் அவளின் சந்தேகத்தை கேட்டு அவரை ஒரு வழி செய்து விட்டு தான் அவரை படுக்க அனுப்பினாள்.
பின்னர் காலையில் அவன் முன் சுட சுட வெண்பொங்கல் சாம்பார் சட்னி என்று வகை தொகையாக அவள் அடுக்கி வைத்து இருப்பதை பார்த்து அவன் அசந்து விட்டான்.
அடுத்த சோதனையா என்று அவன் மனம் அலறியது. ஆனால் அடுத்த நிமிடம், கிச்சனில் இருந்து வெளியே வந்த பீட்டரை பார்த்து மனம் சற்று ஆசுவாசமானது.
“எப்படா பீட்டர் வந்த? காலிங் பெல் அடிச்ச சத்தம் கூட கேட்கல” என்று அவன் கேட்கவும், பீட்டர் புன்னகைத்தான்.
“எல்லாம் என் தங்கச்சி பண்ண வேலை மாம்ஸ், அங்க இவ உங்க அத்தையை தூங்க விடாம சமையல் டிப்ஸ் கேட்டுகிட்டு உயிரை வாங்கிட்டா. உடனே அவங்க எனக்கு போன் அடிச்சிட்டாங்க, உன் தங்கச்சி வீட்டுக்கு போடான்னு காலையிலே நாலு மணிக்கு எல்லாம் துரத்தி விட்டாங்க”.
“இங்க வந்து மணி அடிக்கலாம் பார்த்தா, என் தங்கச்சி வீட்டை திறந்து வச்சுட்டு, என்னை முறைச்சி பார்த்துகிட்டு உட்கார்ந்து இருந்தா” என்று கூறியவனை பார்த்து இப்பொழுது சிரித்தான் ஈஸ்வர்.
அதை கற்பனை பண்ணி பார்த்தவனுக்கு, உள்ளுக்குள் பெரிய குத்தாட்டம் போட வேண்டும் போல் இருந்தது. இங்கு அவன் ஒரு பக்கம் சிரிக்க, அவனின் சரிபாதி ஈஸ்வரியும் மறுபக்கம் சிரித்துக் கொண்டு இருந்தாள்.
பீட்டரோ, காலையில் தங்கையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை நினைவு கூர்ந்தான்.
“வாங்க பீட்டர் அண்ணா! என்ன இந்த பக்கம்?” என்று கேட்டவளை பார்த்து எச்சில் விழுங்கினான்.
அவளின் அந்த தோரணையும், அந்த அழைப்புமே அவளின் கோபத்தின் அளவைக் காட்டிக் கொடுத்தது. அவளிடம் விஷயத்தை எப்படி கூறுவது என்று, சற்று திண்டாடித் தான் போனான்.
“அது வந்து குட்டிமா!!! திடிர்னு வேலை வந்திடுச்சு டா, உன் கிட்ட சொல்லனும்ன்னு ஆசை தான், ஆனா என் வேலையாள உனக்கு ஆபத்து ஏதும் வந்துட்டா?”.
“அதனால தான் உன் கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியாம, அப்ப கொஞ்சம் யோசிச்சேனே தவிர உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் நினைக்கல” என்றவனை பார்த்து சிரித்தாள்.
“சரி! சரி! ஓவரா பிலிம் காட்டாம உள்ள வா டா பீட்டரு” என்று சிரித்துக் கொண்டே வரவேற்று விட்டு, அவனுக்கு அடுத்த குண்டை விட்டெறிந்தாள்.
“சமையலுக்கும், எனக்கும் ஒத்தே போக மாட்டேங்குது போல டா. அதனால இனி நீயே செப்பா இரு இந்த வீட்டுக்கு, உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன் என்ன”.
“முதல போய் குளிச்சிட்டு வா, உனக்கு இன்னைக்கு மெனு சொல்லுறேன். அப்புறம் இனி என் கூட தான் ஷாப்பிங் எல்லாம் வரணும், சண்டே உனக்கு லீவ் தான” என்று அவளே முடிவு எடுத்துவிட்டு உள்ளே அவர்களின் அறைக்கு சென்று மறைந்து கொண்டாள்.
“என்னது? செப்பா!!”
“இப்படி சொல்லாததுக்கு, வந்த முதல் நாளே என்னை இப்படி வேலை வாங்க ஆரம்பிச்சிட்டாளே” என்று நொந்துக் கொண்டே, அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று பெட்டிகளை வைத்துவிட்டு, முதலில் குளிக்க சென்றான்.
குளித்து விட்டு வெளியே வந்தவனை வரவேற்ற ஈஸ்வரியை பார்த்து, மேலும் திகிலடைந்தான். ஏனெனில் அவள் கொடுத்த அட்டவணை, அவனை அப்படி திகிலடைய வைத்து இருந்தது.
அவன் குளித்துவிட்டு வருவதற்குள், எல்லா நாட்களிலும் அவன் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் குறிப்பிட்டு ஒரு பெரிய அட்டவணையே போட்டு இருந்தாள்.
“இதுக்கு என்னை நாலு திட்டு திட்டி இருக்கலாம். என்னமா! இப்படி பண்ணுறீங்களே மா!!” என்னும் ரியாக்ஷன் தான் அவனிடம்.
அவளோ, அவனை அப்படி எல்லாம் விடுவதாக இல்லை. இதை நீ செய்தாக வேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டு, சென்று விட்டாள். சரி முதலில் என்ன செய்ய வேண்டும் இப்பொழுது என்று பார்த்தவன், அங்கே சமையல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எழுதி இருந்தது.
“என்னது!! நான் சமையல் கத்துக் கொடுக்கனுமா! ஆரம்பமே டைம் பாம் வச்ச பீலிங்கா இருக்கே, என்ன செய்றது?” என்று நொந்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவன், அங்கே அதன் நிலமையை பார்த்து அதிர்ந்து விட்டான்.
“என்னடி இது? இப்படி போட்டு வச்சு இருக்க?” என்று அவளை பார்த்து கேட்டான் பீட்டர்.
“பின்ன எது எது எப்படி செய்யணும்ன்னு தெரியல, அதனால எல்லாத்தையும் வெளியே எடுத்து யூ ட்யுப் பார்த்து செய்தேன். அப்படியும் சரியா வரல, அதான் அம்மாவுக்கு போன் அடிச்சு கேட்டேன்”.
“அப்போ தான் இப்படி எல்லாத்தையும் எடுத்து வெளியே வச்சு, ஆராய்ச்சி செய்துக்கிட்டு இருந்தேன். நீ வரன்னு சொன்னாங்களா அம்மா, அதான் இதுல இருந்தே உனக்கான பனிஷ்மென்ட் ஸ்டார்ட் பன்னுவோம்ன்னு அப்படியே போட்டு வச்சுட்டேன்”.
“எப்புடி???” என்று சுடிதாரில் இருந்த காலரை தூக்கி விட்டு, லுக் கொடுத்தவளை பார்த்து முறைத்தான்.
அதன் பின் வேகமாக எல்லாவற்றையும், அவள் துணை கொண்டே அடுக்கி வைத்துவிட்டு, அவள் ஈஸ்வருக்கு செய்து கொடுத்த வகையறாவை எல்லாம் சொல்லி அவனை மேலும் பீதி அடைய செய்தாள்.
“ஆத்தா! முதல சிம்பிள் கூக்கிங்ல இருந்தே நாம ஆரம்பிப்போம். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு நான் சமைக்கிறதை பார்த்து படி, அப்புறம் நீயே இன்சார்ஜ் எடுத்துக்க புரியுதா?” என்றான்.
“ம்ம்.. கண்டிப்பா இல்லைனா எங்க மம்மி கிளம்பி இங்க வந்து மொத்திட்டா, அதுக்காகவே இந்த ஈஸ்வரி சூப்பரா சமையல் கத்துகிட்டு சூப்பர் செப் ஆகிடுவா” என்று சபதம் போட்டவளை பார்த்து, தூ என்றான்.
“அரிசிக்கும், பருப்புக்கும் வித்யாசம் தெரியல இதுல சூப்பர் செப்பாம். முதல சுடு தண்ணீர் வைக்க தெரியுமா?” என்று கேட்டவனை பார்த்து முறைத்துவிட்டு, இன்ஸ்டன்ட் சுடு தண்ணீர் கெட்டிலில் ரெடி செய்து, அவன் மீது ஊற்ற போனவளை பார்த்து கை எடுத்து கும்பிட்டான்.
அதன் பின் உடனே இருவரும் முடிவு செய்து, வெண்பொங்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து உடனே அதை அவன் செய்ய தொடங்கினான். பக்கத்தில் அவளையும் வைத்துக் கொண்டு, வேலை வாங்கினான்.
“என்ன மாம்ஸ், என் சமையல் எப்படி இருக்கு?” என்று கேட்டான் பீட்டர்.
“ம்ம். நல்லா இருக்கு, ஆமா எப்ப டா கத்துகிட்ட?” என்று கேட்டான் ஈஸ்வர்.
“அம்மாவுக்கு அப்போ ரொம்ப முடியல மாம்ஸ், காலேஜ் முதல் வருஷம் அப்போ, அப்பாவுக்கு வேலைக்கு போயிட்டு அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக தான் நேரம் இருக்கும்”.
“ஈஸ் அம்மா தான் எங்களுக்கு அப்போ எல்லாம் உதவி பண்ணாங்க, அப்பா அப்போ அவங்களை ரொம்ப தொந்தரவு பண்ணாம நாமளே கொஞ்சம் சமாளிக்கலாம் அப்படின்னு சொன்னார்”.
“உடனே இதை நான் சாந்தாமா கிட்ட சொல்ல, அவங்களே எனக்கு ஈசியான ரெசிபீஸ் சொல்லிக் கொடுத்தாங்க. அப்போ எனக்கு சமைக்க பிடிச்சு கத்துகிட்டது தான் எல்லாம், இவளையும் படிக்க சொன்னாங்க, மேடம் அதுக்கு சாப்பிட மட்டும் தான் செய்வேன், தேவை வரும்பொழுது படிப்பேன் சொல்லிட்டா” என்றான்.
“எனக்கு ஒரு டவுட்? ஆமா எங்க அம்மா கூட இருபத்தி நாலு மணி நேரமும் ஊர்ல கிட்சென்ல பலி கிடந்தியே, அப்போ கூட படிக்க தோணலையா?” என்று ஈஸ்வரியிடம் கேட்டான் ஈஸ்வர்.
“அப்போ எல்லாம் எனக்கு எக்ஸாம் டைம், உங்க சித்தி, அத்தை கிட்ட இருந்து என் அத்தையை காப்பாத்தவே சரியா இருக்கும். இப்படி காய் வெட்டிக் கொடுக்கிறது, தேங்காய் துருவ இப்படி தான் அப்போ ஹெல்ப் செய்தேன்”.
“மைன்ட் எல்லாம் அப்போ எக்ஸாம்ல பாஸ் பண்ணனும் அப்படின்னு தான் இருந்தது, இப்போ தான் சமைக்கனும்ன்னு ஆசை எட்டி பார்த்து இருக்கு. சரியா எலி சோதனையா, ரெண்டு பேர் மாட்டும் பொழுது, எனக்கு சும்மா ஜிவ்ன்னு இருக்கு” என்று கண்களில் பளபளப்பு மின்ன கூறியவளை பார்த்து அதிர்ந்தனர் இரு ஆண்களும்.
அப்பொழுது தான் அவளிடம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் நியாபகம் வரவும், அதை பற்றி கேட்க தொடங்கினான் ஈஸ்வர்.
“சரி, நீ மேற்கொண்டு படிக்க ஆசைபடுறியா? இல்லை வேற ஜாப் போகலாம் அப்படின்னு யோசிச்சு வச்சு இருக்கியா?” என்று கேட்டான்.
“நானே சொல்லணும் நினைச்சேன், நீங்க கேட்டுடீங்க. சின்ன பிள்ளைங்க பர்த்டேஸ் ஆர்கனைஸ் பண்ணுற ஈவென்ட் மானேஜ்மென்ட் தான், நான் ஸ்டார்ட் பண்ணனும் நினைக்கிறேன்”.
“இது சம்மந்தமா ஏற்கனவே நான் கோர்ஸ் முடிச்சு இருக்கேன், அங்க எங்க ஊர்லயும் நிறைய பார்டீஸ் நடத்தி இருக்கேன். சோ அதை இங்கேயே கொஞ்சம் பெரிய லெவல்ல ஸ்டார்ட் பண்ணலாம் நினைக்கிறேன்” என்றவளை பார்த்து இப்பொழுது வியந்தான் ஈஸ்வர்.
“மாம்ஸ்! எனக்கு டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன். பாய் ஈஸ்! மதியத்திற்கு பருப்பும், கிழங்கும் வச்சு இருக்கேன் உன் பேவரைட், சாபிட்டுட்டு எல்லாம் கிளீன் பண்ணிடு சரியா” என்று விட்டு சென்றான்.
“பாவி பயலே! பிடிச்சதை செஞ்சு வச்சிட்டு, அப்படியே நீ கிளீன் பண்ணிடுன்னு சொல்லிட்டு போய்ட்டான் எருமை” என்று மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தாள்.
அவள் என்ன நினைக்கிறாள் என்று அறியாதவனா, அவளின் சரிபாதி உடனே டேக் டைவெர்ஷன் போர்டு அவளின் எண்ணத்தில் மாட்டிவிட முடிவு செய்தான்.
“இங்க பெரிய லெவல்ல ஆரம்பிக்கிறது எல்லாம் சரி, ஆனா அதுக்கு எவ்வளவு செலவாகும்? உன் எஸ்டிமேஷன் என்ன? எதுவும் யோசிச்சு வச்சு இருக்கியா? எங்க ஆரம்பிக்க என்ன ஏதுன்னு” என்று கேட்டான்.
அவளின் கனவு அல்லவா, ஆகையால் மடமடவென்று எல்லாவற்றையும் சொல்ல தொடங்கினாள். சொல்லியது மட்டும் அல்லாமல், அவள் பிளானிங் செய்த விஷயங்கள் எல்லாம், எழுதி வைத்து இருந்ததை எடுத்துக் கொண்டு வந்து காட்டினாள் அவனிடம்.
அவன் இப்பொழுது பிரமித்து தான் போனான், இவள் விளையாட்டுத்தனம் நிறைந்தவள் இல்ல என்று இப்பொழுது புரிந்தது அவனுக்கு. அவளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உறுதி அளித்துவிட்டு சென்றான் விஷ்வாவின் இடத்திற்கு.
அங்கே அவன் அடுத்து கேட்ட செய்தியில், அந்த கடத்தல்காரனை கண்டம் துண்டமாக வெட்டி போடும் வெறியே வந்தது அவனுக்கு, இதுவரை இல்லாத வகையில்.
தொடரும்..